அவள் ஒரு மோகனம்/அன்று நடந்தது

5. அன்று நடந்தது!


தயம் ஏன் இப்படி படுவேகமாகத் துடிதுடிக்கிறது?

சொல்லி வைத்த மாதிரி கனகச்சிதமாக அந்தப் படுக்கை அருகில் வந்து நிற்கிறாள், டாக்டர் ரேவதி.

மருந்து நெடி.

கொத்துக் கொத்தாக மலர்ந்திட்ட மல்லிகைப் பூவாய்த் தோன்றினாள், நர்சு தமிழரசி.

“தலையின் முன் பகுதியிலே பலமாய் அடி. கட்டுப் போட்டு, மாத்திரை கொடுத்து, ஊசியும் போட்டுட்டேன்.”

ஞானசீலனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை.

நெஞ்சை அடைத்தது; ஒரு வாய் தண்ணீர் குடித்தாள்.

முந்தானை காற்றிலே பறந்தது. பறந்தால் பறக்கட்டும்!

‘ராயல் சாலஞ்ச்’ கண்ணடித்தது.

சே...!

ரேவதி கண்களை மூடிக் கொண்டாள்.

மனத்தின் மனம் புதுக்கோட்டைக்கும் சென்னைக்குமாக அலைந்து திரும்பியது, மீண்டும், ஆற்றாமை மேலிட்டது. நெடுமூச்சு வெளிப்பட்டது.

ரேவதி நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். இப்போது இதயத் துடிப்பு நிதானமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது! “நான் அவமானப் படுத்தப்பட்டு விட்டேனா?... ஏமாற்றப்பட்டு விட்டேனா நான்?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“மிஸ்டர்...மிஸ்டர் ஞானசீலன்! ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க...? என்னை ஏமாற்றவா, அவமானப் படுத்தவா...? சொல்லுங்க; சொல்லுங்களேன். ஞானசீலன்!”

பதில் சொல்ல ஞானசீலன் எங்கே இருக்கிறார்? அவர்தான் நினைவு வந்தவுடன் நோய்ப் படுக்கையை மறந்தும் துறந்தும், சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டாரே!

தொட்டதற்கெல்லாம் காரண காரியம் இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டுப் பேயாக ஆட்டம் போட்டுத் தீர்க்கற பழைய புத்தி இன்னுமா மாறித் தொலைக்கவில்லை?-சே...! என்ன மனிதரோ!

ழகின் சிரிப்பு, கொச்சைப் படுத்தப்படாமலும் கொச்சைப் படுத்தப்பட்டாலும் தார்மிக நெறிமுறையோடு விளையாடிக் கொண்டிருந்த இயற்கையின் இதமான பின்னணியில் அமைதி காத்துக் கிடந்தது, ரேவதி இல்லம்.

செங்கதிர்கள் அள்ளி அணைத்து வழங்கிய முத்தங்களின் சூட்டைத் தாங்க மாட்டாமல், காற்று சீறிக் கொண்டிருக்கிறது, இன்னமும்.

சிறை வைத்திருந்த அதிர்ச்சியிலிருந்து இப்போது சிறுகச் சிறுக விடுதலை அடைந்து கொண்டிருந்தாள், ரேவதி. உலகியல் நடைமுறையில், இப்படியும் ஒரு சித்திர விசித்திர விடுதலையா, என்ன? - “நான் ஒண்ணும் கொக்கு இல்லே... ஆமாம்!”-நிர்த்தாட்சண்யமாகவே பேசினாள்; சத்தம் கொடுத்துப் பேசினாள். யாரிடம்...? அவளது மனச்சாட்சியிடம் தானா?

புதுக்கோட்டையில் கீழ ராஜவீதியில் அந்த மாளிகையில் அன்று முழங்கிய கெட்டி மேளம் இன்றும் முழங்குகிறது. மனம் தடுமாறுகிறது. தடுமாற்றம் அரைக்கணம்தான் நீடித்தது. அவள் பொதுநலப் பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவள் இல்லையா? “பார்த்துக்குங்க, தமிழரசி. எனக்கு ஜி. எச். போக நேரமாயிட்டுது!” அவள் இப்போது டாக்டர் ரேவதி.

“மிஸ்டர்...மிஸ்டர் ஞானசீலன்! ஏன் இப்படி ஆயிட்டீங்க...? நாதியத்துப் போயிட்ட மாதிரி ஆகிட்டீங்க?”-தயங்கியவள், புறப்பட்டாள். போலித்தனமான மிடுக்குடன் புறப்பட்டாள்.

வெடித்த விம்மலை நாசுக்காகவும், நாகரிகமாகவும் கட்டுப்படுத்தியவாறு, தலையை நிமிர்த்தினாள், ரேவதி. சலனம் கண்ட உணர்வுகளைக் கண் காணாமல் சமனப்படுத்திக் கொண்டு நாடிக் குழலை எடுத்தாள்: இனம் புரிந்த தவிப்புடன் நோயாளியைப் பரிசோதனை செய்தாள். நெஞ்சம் தழதழக்கின்றது; என்னவோ பழைய ஞாபகத்தில், கழுத்துச் சங்கிலியை நெருடி விட்டாள்; நெஞ்சில் முடிச்சுப் போட்டிருந்த ‘நிரடல்’ அவிழாதோ?

தொலைபேசி கூட ஏழரைக் கட்டைச் சுருதியில் அலறியது.

தொண்டையை கனைத்துக் கொண்டே "அலோ...! டாக்டர் ரேவதி பேசுகிறேன்..." என்றாள்.

எதிர்முனையில், “அலோ...அலோ!” என்ற குரல் மாத்திரம்தான் கேட்டது; பேச்சு எதுவும் தொடரக் காணோம்.

நான்கைந்து வினாடிகள் நழுவின.

அவ்வளவு தான்.

அவள் பொறுமையை இழக்க வேண்டியவள் ஆனாள். ஆனாலும், ஒலி வாங்கிக் கருவியைப் பொறுமையோடு ஏந்தி நின்றாள். பிறகும் எதிர் தரப்பில் ஓசை எதுவும் கேட்காமல் போகவே, கருவியை ஓசையில்லாமல் வைத்தாள்.

அரைக்கணம் அப்படியே மலைத்து நின்றாள். “அலோ... அலோ...” என்று சுருதி பேதத்துடன் ஒலித்த அந்தக் குரல், திரும்பத் திரும்ப அவளது மன அடிவாரத்தில், இனம் காட்டி எதிரொலித்தது!

“வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சுப் போலே! அதுதான், இப்படியெல்லாம் நாடகம் ஆடுறார். எழுபத்தெட்டு ஜனவரியிலே பிடிச்ச கிறுக்கு இப்ப எண்பத்தெட்டு ஜனவரியிலே மறுபடி தொடங்கியிருக்கு போலிருக்கு. ஆனானப்பட்ட இந்த ரேவதிப் பொண்ணை இன்னமும் கூட கொக்குன்னு பழைய கொங்கணவா, நீ நினைச்சிருந்தால், அந்தத் தப்பிதத்துக்கு நானும் பொறுப்பாளி ஆக முடியாது; விதின்னு கதைக்கிற ஏதோ ஒரு மாய சக்தியும் பொறுப்பு ஆக மாட்டாது!” சிரித்தாள். டாக்டர் ரேவதி.

பட்டணத்தில் எம். பி. பி. எஸ். படித்துப் பட்டமும் பெற்ற பின், புதுக்கோட்டையில் ராணி மருத்துவமனையில் உதவியாளராகப் பொறுப்பேற்ற அன்று மாலை நேரத்தில் பல்லவன் குளப் பகுதியிலிருந்த சாந்தநாதர் ஆலயத்திற்குச் சென்றாள், ரேவதி. அர்ச்சனை செய்தாள். பெண்கள் வரிசையிலிருந்த சுவாமியைக் கும்பிட்டாள், அப்போது, எதிர்ப்புறத்தில் இருந்த ஆண்களின் கூட்டத்திலிருந்து ஞானசீலன், வழக்கம் போலவே - அப்போதும் “வணக்கம்” சொன்னதைக் கேட்டதும், கண்டதும், அவளும் வழக்கம் போலவே. பதில் வணக்கம் தெரிவித்துப் புன்னகை செய்தாள்.

தீபாராதனை நடந்தது; முடிந்தது.

தீட்சிதர் நீட்டிய பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்ட ரேவதி, முழு ரூபாய்ப் பணத்தை நீட்டினாள்.

பணத்தை வாங்கிக் கொண்ட குருக்கள், மற்றொரு தேங்காய் மூடிப் பிரசாதத்தை ஞானசீலனிடம் நீட்டினார். அவனும் ஒரு ரூபாயை நீட்டவே, அவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல், “ஞானசீலன்! நீங்கள் எனக்குத் தர வேண்டிய அம்பது பைசாவை நம்ப ரேவதி கிட்டக் கொடுத்திருங்கோ; என்னோட கணக்கும் சரியாயிடும்; உங்கள் கணக்கும் தீர்ந்துடும்” என்றார். “என்னம்மா ரேவதி, சரிதானே?” என்று ரேவதியையும் கேட்டார்.

ஞானசீலனைப் போலவே, ரேவதியும் “ஊம்” கொட்டித் தலையை ஆட்டி வைத்தாள்.

அவள் பிராகாரம் சுற்றத் தொடங்கினாள்.

அவனும் தொடர்ந்தான்; பின்தொடர்ந்தான்.

மூன்று முறை பிராகாரம் சுற்றி முடிந்ததும், இருவரும் வெளி மண்டபத்திற்கு வந்து எதிரும் புதிருமாக வாய் மூடி ஊமைகளாக ஒரு வினாடி நின்றார்கள்.

“டாக்டர் ரேவதி, ஒரு நிமிடம் இருங்க. சில்லறை மாற்றிக்கிணு வந்திடறேன்” என்று தயவான குழைவோடு சொன்னான், ஞானசீலன்.

“ஆகட்டும்” என்கிற பாவனையில் வெகு அமர்த்தலாகத் தலையை லேசாக அசைத்தபடி நின்றாள், ரேவதி.

சில்லறைக் காசோடு திரும்பி வந்தான், ஞானசீலன்.

அந்தி மழையும் வந்தது.

“இந்தாங்க” என்று கூறி, ஐம்பது காசை நீட்டினான், அவன்.

அவள் தயக்கம் துளியுமின்றி வாங்கிக் கொண்டாள்.

அவனது களையான முகம் ஏனோ, அப்போது களை இழந்தது! “ஓர் இங்கிதம் கருதி, ஒப்புக்காகவேனும் துட்டு வேணாம்னு இந்த ரேவதிப் பொண்ணு சொல்லியிருக்கப்படாதா?” என்பதாக அவனது உள்மனம் ஆதங்கம் அடைந்திருக்க வேண்டும். மறு கணத்தில், அவன் பதறவும் நேர்ந்தது. மழை பெய்கிறது என்கிற நினைவு இல்லாமல் நடக்கிறாளே, இந்த குமரிப் பெண்? “ரேவதி!... மிஸ் ரேவதி!”-கூப்பாடு போட்டதுதான் மிச்சம். பலன்: சுழி!

கொட்டும் மழையிலே, வெகு துடுக்காகவும், மிடுக்காகவும் தன் வழியில்-தனி வழியில் நடந்தாள்.

ஏமாற்றம் அடைந்த அழகு வாலிபன் ஞானசீலன் ஏக்கம் அடையவும் தவறவில்லை! அப்பா தனக்கென்று தனியாக வாங்கித் தந்த புது செவர்லே வண்டியில் அவள் ஏறுவாள் என்றும் அப்பொழுது அவளிடம் தன் காதல் மனத்தை வெளிப்படுத்தி விடலாம் என்றும் கோட்டை கட்டியிருந்தான், பாவம்! “போனதுதான் போனாங்க; என்கிட்ட போயிட்டு வாரேன் அப்படின்னு சொல்லிக்கிட்டுப் போயிருக்கப்படாதா? ரேவதிக்கென்று ஒரு வேடிக்கையான ஆணவமா?”

அவளை முதல் முதலாகச் சந்தித்த பொன்னான சந்தர்ப்பம் இரவு முழுவதும் அவன் உள்ளத்தில் ஆல வட்டம் சுற்றிக் கொண்டேயிருந்தது! ரேவதி மனிதப் பெண்தானா? இல்லை, மாயத் தேவதையா?...