அவள் ஒரு மோகனம்/தாவிக் குதிக்கும் மனக்குரங்கு

6. தாவிக் குதிக்கும் மனக்குரங்கு


சீகோ’ மணி பன்னிரண்டு!

ரேவதியின் கண்கள் திறக்கின்றன.

மேனியின் சிலிர்ப்பு இன்னமும் அடங்கவில்லை போலும்!

அன்றைக்குக் கோவிலில் ஞானசீலனின் அன்பைப் பொருட்படுத்தாமல் அவனிடமிருந்து பிரிந்து, அந்தி மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்த போது ஏற்பட்ட அதே மேனிச் சிலிர்ப்பை பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அனுபவிக்க நேர்ந்ததை உணர்ந்ததும், கால் பாவி நின்ற நிலம் பிளந்து விட்ட மாதிரி அவள் பதைத்து விட்டாள். நாற்புறமும் கலங்கிய விழிகளை மாறி மாறியும் மாற்றி மாற்றியும் சுழல விட்டாள். எல்லாக் கதவுகளும் தாழிடப்பட்டிருக்கின்றன.

அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்: “நான் யார்?... ஞானசீலன் யார்? - நான் டாக்டர் ரேவதி. ஆமாம்; நான் நான்தான்; நான் நானேதான்! என்னைப் பொறுத்த வரை எதுவும் யாரும் எனக்கு அப்புறம்தான்! அவர்... மிஸ்டர் மனச்சாட்சியாம்... அதுவும் என் மனச்சாட்சியாம்! சுத்தப் பேத்தல்!...” விதியை வம்புக்கு இழுக்கிற தோரணையில் அவள் பலமாகச் சிரித்தாள்.

மனம் என்றால் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும்; மனத்தின் யதார்த்தமான நிலை இது. இப்போது அவள் மனம் அந்த பழஞ்சோற்றை பதச் சோறாகப் படம் பிடித்து எடுத்துக் காட்டும் போது, அவள் மறுத்துத்தான் தீர வேண்டுமென்று எந்தப் புரட்சியும் இலக்கணம் வகுத்துக் காண்பிக்கவில்லைதான்!

ஊம்...

மற்றுமொரு மஞ்சள் வெயில் மாலை வேளையில், மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய கலை விழாவில் கலந்து கொண்டு விட்டு கால்நடையாக திரும்பிக் கொண்டிருந்தாள், ரேவதி. சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த குலோத்துங்கனும், யசோதாவும் காதலாகிக் கலியாணம் செய்து கொண்ட சுபமான பழைய நிகழ்ச்சியை நினைவூட்டுகிற மாதிரி, அவர்கள் இருவரையும் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்துப் பேசிய பின் அவள் நடையைத் தொடர்ந்த நேரத்தில், வானம் பொத்துக் கொண்டது. ஒதுங்க இடம் தேடிக் கொண்டு இருந்த அவளை உரசிக் கொண்டு ‘செவர்லே’ ரோஜா பூத்த மாதிரி வந்து நின்றதைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தாள். “ஓ.. நீங்களா!”

ஞானசீலன் புன்னகை பூத்தவாறு “நான் எப்பொழுதும் உங்கள் பணியாள்தான். ஏறிக் கொள்ளுங்கள்” என்று கூறி கதவைத் திறந்து விட்டான். அவளும் வேறு வழியில்லாமல் ஏறிக் கொண்டாள்.

அவனது மாளிகைக்குள் போய் கார் நின்றது. “மன்னித்துக் கொள்ளுங்கள் டாக்டர். ஒரு சிறு வேலை; முடித்து விட்டு வந்து விடுகிறேன். ஆட்சேபணை இல்லை என்றால் நீங்கள் கூட உள்ளே வந்து அமரலாம்.”

அவளுக்கு ஆட்சேபணை என்ன? அச்சம் என்ன? அவனும் திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகுமோ? மழையும் நின்றபாடாக இல்லை. ரேவதியும் இறங்கினாள்.

அவனது வீட்டுக்கு ரேவதி வந்து விட்டாள்! அவள் உடல் முழுக்க கம்பளிப் பூச்சி ஊர்ந்தது.

“வந்த காலோடு நிற்கப்படாதின்னு சொல்வாங்க; உட்கார்ந்து காபி சாப்பிடுங்க” வேண்டிக் கேட்டுக் கொண்டான் அவன்.

அவள் உட்கார்ந்து காபியை அருந்தினாள்.

கோப்பையை ‘டீபா’யில் வைத்தபடியே “நன்றி. உங்களுக்கு ஒரு நன்றி. உங்கள் காபிக்கு ஒரு நன்றி.” நயமான நாணத்துடனும் விநயமான புன்சிரிப்புடனும் அவள் நன்றி தெரிவித்தாள்.

மனம் கொள்ளாமல் சிரிப்பு வழியவே, வாய் கொள்ளாமல் சிரித்தான், ஞானசீலன். “உங்கள் நன்றி அறிவிப்பு பாணி ஏ. ஒன். மிஸ் ரேவதி!”

ரேவதி கருவக்களி துலங்கச் சிரித்தாள். “அதுதான் ரேவதி!... ஆமாங்க ஞானசீலன், நான் எப்போதும் எதிலும் ‘ஏ. ஒன்’ தான்! அதுதான் இந்த டாக்டர் ரேவதியின் தனிச் சிறப்பாகும்.”

ஞானசீலன் மீண்டும் சிரித்தான்.

“நான் புறப்பட்றேன்.”

“என்னை விட்டுட்டா?...”

சிமிக்கிகள் குலுங்கவும் மூக்குத்தி பளிச்சிடவும் தலையையும் மார்பையும் நிமிர்த்தி, ஞானசீலனை நேர் கொண்ட பார்வையைக் கொண்டு அளந்தாள். அந்தக் கேள்வியில் தொனித்த இனம் விளங்காத என்னவோ ஒரு சுகம் தனது மனதுக்கு ஆறுதலாக இருப்பது போலவும் அவள் உணர்ந்தாள்.

ஆறுதலில் பூத்த புன்னகை மலர் மணக்கத் தொடங்கி விட்டது. பழைய கோயில் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கவும் மறந்து விடவில்லை. அன்றைக்கு ஏற்பட்ட தவறுக்குப் பரிகாரம் கண்டு ஒரு சமரசம் ஏற்படுத்தவும் அவளது கன்னிப்பூ நெஞ்சம் இடம் தர மறுத்து விடவில்லைதான்!

“உங்களுக்கு மறுபடியும் தொந்தரவு தர வேண்டாமேன்னுதான், வீட்டுக்கு நடந்தே போயிடலாம்னு யோசிச்சேன்” என்று இங்கிதமாகப் பேசினாள். மழையில்லை.

“உங்களை உங்கள் வீட்டிலே கொண்டாந்து விட்டால்தான், எம் மனசுக்கு சமாதானம் ஏற்பட முடியும். இல்லா விட்டால், உங்களை நடு வழியில் விட்டு விட்டது போல வருந்துவேன்.”

“அப்படியா?”

“ஆமாம்.”

“அப்படின்னா, என்னோடு புறப்படுங்க” என்று பட்டென்று சொன்னாள் ரேவதி.

அவளது ஒப்புதலில் அவளையும் அறியாமல் ஒரு சுவாதீனமான உரிமை, குரல் கொடுத்ததை உணர்ந்ததும் அவள் ஆச்சரியப்பட நேர்ந்ததும் உண்மைதான்! அன்றொரு நாள் கோயிலில் ஞானசீலன் விடுத்த அன்பான அழைப்பை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட உறுத்தலுக்கு கழுவாயாக இன்று சமரசம் ஏற்படுத்திக் கொள்ள நேர்ந்தது அவளுக்கு ஆறுதலாகவே இருந்தது.

ரேவதியின் சிறிய வீட்டின் வாசலில் ஞானசீலனின் பெரிய கார் நின்றது.

பட்டுச் சேலை தரையிலே பட்டுப் புரளாமல் கொய்து சீராக்கிக் கொண்டபடி, இறங்கிக் கொண்டாள் ரேவதி.

“நான் வரட்டுமா?” என்றான் ஞானசீலன். அவனது அகன்ற மார்பில் புரண்ட சங்கிலியின் நரிப் பல் பதக்கத்தை அழகு பார்த்த ரேவதி, தனது மயில் பதக்கத்தை உருட்டி விட்டவளாக, “வீடு வரை வந்தவங்க, உள்ளே வராமல் போனால், நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க; வாங்க” என்று அழைத்தாள்.

பூட்டுத் திறந்தது.

புதிதாகப் பிறந்த மகிழ்ச்சியில் அவனது அழகு கூடியிருந்தது. அவளைத் தொடர்ந்தான்.

எளிமையான முகப்புக் கூடத்தில் அவனுக்கு இடம் கொடுத்தாள், அவள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அடுப்பைப் பற்ற வைத்துக் காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் வெளியே போயிருக்கலாம் என்று நினைத்தான். அவனது மாளிகையிலும் அவனுடைய பெற்றோர் வெளியே போயிருந்தார்கள் அல்லவா?

ஞானசீலன் மெய்மறந்த நிலையில் காப்பியைக் குடித்து முடித்தான்.

அவசர அவசரமாக, “உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க, ஞானசீலன்” என்றாள் ரேவதி.

அவன் விவேகம் மாறாமல் சிரித்துக் கொண்டான். விடை பெற்றுப் புறப்பட்டான்.

கருங்குயில் ஒன்று ‘குக்கூ...கூ’ என்று. முழக்கமிட்டது.

டாக்டர் ரேவதி பதட்ட நிலையிலேயே, தன் நினைவை அடைய வேண்டியவள். ஆனாள். தொலைக் காட்சிப் பெட்டியை அழுத்திய பொழுது கெட்டி மேளம் கொட்டி முழங்கிக் கொண்டிருந்த மங்களமான இனிய ஓசையைக் கேட்டதும், இன்ப அதிர்ச்சி அடைந்தாள். “இப்ப எல்லாமே முடிஞ்சு போச்சு... ஆமா, முடிஞ்சுதான் போயிட்டுது!”

அடிமனம் பொங்கிக் கொண்டு வந்தது. திறந்த கண்களை மூடினாள். மூடின கண்களைத் திறந்தாள்!

விம்மினாள். விழிகளும் விம்மின.

விம்மல் வெடித்து நெஞ்செங்கும் பரவியதை உணர்ந்ததுதான் தாமதம்; அவளுக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது!

“நானா இப்ப விம்மினேன்? சே!... கேடு கெட்ட தாழ்வு மனப்பான்மை நோய் என்னையும் தொற்றிக்கிடுச்சா? இருக்காது; இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாதாக்கும்! நான் சாதாரண ரேவதியா? என்ன! நான் டாக்டர் ரேவதி இல்லையா?” அவள் இப்போது சிரிக்கிறாள்.

ராஜதந்திரத்தோடு விதிக்குச் சவால் விடும் ராஜரிகமான சிரிப்பு அது!

வானொலி பாடுகிறது.

என்னவோ ஒரு பாட்டு.

என்னவோ ஒரு ராகம்.

பாட்டும் ராகமும் நிறுத்தப்பட்டன.

ரேவதிக்கு இப்போது உண்மையான அமைதி வேண்டுமாம்!

“இந்த ஞானசீலன் அன்றைக்குத் தன்னை மறந்ததோட, என்னையும் மறந்து அப்படி ஒரு பாவத்தையும் அநியாயத்தையும் திமிரெடுத்துச் செய்யாமல் இருந்திருந்தால்... என்ன என்னவோ நடந்திடுச்சு! எல்லாமும் முடிஞ்சு போச்சு!... நான் தனி மரம் ஆனதுதான் கண்ட பலன்! ...

இன்று ஏன் மனக்குரங்கு இப்படித் தாவிக் குதிக்கிறது?