அவள் ஒரு மோகனம்/விடை பெற்ற கண்ணீர்

15. விடை பெற்ற கண்ணீர்



கழுத்தில் காணோம் என்றதும் கடுகளவு நேரத்தில் கதிகலங்கிப் போனாள், ரேவதி.

மயில் பதக்கம் மட்டுமே அவளது விரல்களில் சிக்கியது. அவள் தேடியதைக் காணோம்.

திடீர் என்று நினைவு வர மேசையைப் பார்த்தாள்.

அவள் கழற்றிப் போட்ட திருமாங்கல்யம் பரிதாபமாகக் கிடந்தது.

மேசையை நோக்கி விரைந்தாள். கைகள் நடுங்க, மாங்கல்யத்தை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டே திரும்பி வந்தாள்.

“மிஸ்டர் ஞானசீலன், இனியாகிலும் என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்றுக்கிடுங்கள்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவன் உதாசீனமாக நின்றான்.

உணர்ச்சிவசப்பட்டவளாக ஞானசீலனின் கைகளைப்பற்றித் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டு, ஐயோ,தெய்வமே!’ என்று கூக்குரலிட்டு அழுதாள், அவள்!

தெய்வம் வெறும் கல்லாக, மரமாக, உலோகமாக இருப்பதுதானே இயற்கை!

ஞானசீலன் கைகளை உதறிக் கொண்டே நகர்ந்தார். சிரித்தார். ஞானசீலனுக்கு என்று இப்படி ஒரு மாயச்சிரிப்பா?

காதுகளைப் பொத்திக் கொண்டு, ஞானசீலனுக்கு நேர் எதிரிலே வந்து நிற்கிறாள் ரேவதி. இனியும் அப்படிச் சிரிக்காதீங்க, ஞானசீலன்’ என்று கத்தினாள்.

நான் எப்படிச் சிரிக்காமல் இருக்க முடியும், ரேவதி? இப்படி நீங்கள் அழுது கதறுவதைக் கேட்கவும் பார்க்கவும் தானே நான் இந்தப் பத்து ஆண்டு காலமாகத் தவம் கிடந்தேன்

உங்கள் தவத்தைப் பலிக்கச் செஞ்சிட்டேன்தானே, நான்?’’

‘சந்தேகம் என்ன?”

சிரிப்பு இன்னமும் கொட்டி முழக்கியது.

‘அப்படியானால் என் தவத்தைப் பலிதமடையச் செஞ்சிட வேண்டியது உங்கள் கடமை இல்லீங்களா, மிஸ்டர் ஞானசீலன்?’’


பிரமாதமா விவாதிக்கிறீங்க, டாக்டர் ரேவதி!’

‘நீங்கள் கிளியானால், மறுதரமும் படிச்சுக் கொடுக்கிறேன். இப்போது உங்கள்கிட்டே விவாதம் பண்றது டாக்டர் ரேவதி இல்லே... ரேவதி ஞானசீலன்!”

‘நீங்கள் உங்கள் பேரோட ஒட்டி உறவாட வச்சிருக்கிற அந்த ஞானசீலன்...”

“இதோ, என் கண் முன்னாலே நிதர்சனமா நிற்கிறார். ஞானசீலனுக்கு ஆயுசு நூறு!’ -

பாவமே, ஞானசீலன்! அவனுக்கு அற்ப ஆயுசு தான்... எமன் ஏமாந்தால் அவனுக்கு நீங்கள் கோட்டை கட்டுறாப்பிலே, ஒருவேளை நூறு வயசு எழுதிப் போடலாம்!”

“சூ, மந்திரகாளி!... மிஸ்டர் எமதர்மராஜா ஏமாறக்கடவது!...”

“சாபமா?”

“நீங்களே கொஞ்சம் முந்தி உங்களுக்குச் சாபம் போட்டுக்கிட்டீங்களே அதுக்கு விமோசனம் செஞ்சேன்.”

“உங்கள் பேச்சும் பிரமாதம்.”

“உங்கள் பாராட்டு ஆத்மார்த்தமாக வத்தால், என் மகிழ்ச்சி உங்களுக்கு உரித்தாகுக!”

‘உங்கள் மகிழ்ச்சி எனக்கு உரித்தாகிட்டுதுங்க!’

நாணம் சிலிர்க்க, முறுவல் பூத்தாள், ரேவதி. “நினைப்பு வர்றப்ப ஒரு சின்ன உண்மையை நினைப்பூட்ட வேண்டியது என் பொறுப்பு. நான் பிரமாதமாக விவாதம் பண்றதாகச் சொன்னீங்க . நான் வாதாடினது நியாயத்துக்காகத்தானுங்களே? உங்களை மாதிரி இல்லீங்களே?”

“என்ன சொல்றீங்க, நீங்கள்?’’

“ஓர் அழகான பாசக் கனவு மாதிரி என் வயிற்றிலே வளர்ந்துக்கிணு இருந்த என் குழந்தையை - உங்கள் குழந்தையை - நம் குழந்தையை வெறும் கனவாக ஆக்கிய முதல் குற்றவாளியே நீங்கள்தான்! மோக வெறி உங்கள் கண்களை மறைக்க, வாயும் வயிறுமாக இருந்த, என்னை நெஞ்சிலே துளியத்தனை இரக்கம் இல்லாமல் எட்டித் தள்ளின. பாவத்துக்குக் கேவலம் வாய்ப் பரிகாரம் கூடத் தேடிக்கிடலையே நீங்கள்...” ஆறாத துயரத்தை. ரேவதியின் விழிகள் ஆற்ற முடியாமல் பேசின.

நீங்கள் மாத்திரம் என்னவாம்? மனிதாபிமானத்தைக்கூட மறந்தும் துறந்தும் என்னை-உங்களுக்கு ஒர் அமிர்தயோகம் வெள்ளிக்கிழமையிலே, நான் கொண்ட முதல் காதலின் பேராலே, நேசத்தோட மூணு முடிச்சுப்

போட்ட என்னை விவாகரத்து செஞ்சிட்ட பாவம் மகத்தான குற்றம் இல்லையா?”

“பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டு உங்களுக்கு எழுதி வச்ச கடிதம் எல்லாம், உங்கள் முகவரி தெரியாததாலே, இன்று வரையிலும் என்கூடவே தங்கிப் போச்சு. இந்தா பாருங்க!”

பழுப்பேறிய கடிதங்களை ஞானசீலனிடம் காட்டினாள்.

“எல்லாத்துக்கும் நிவர்த்தி செஞ்சிடத்தான், உங்கள் பாதாரவிந்தங்களிலே தன்னை மறுபடியும் காணிக்கை வச்சிட்டாளே உங்கள் ரேவதி.”

“என் ரேவதி...!”

“ஊம், உங்கள் ரேவதி என்ன ஆனாள்?... அவளைச் சாகடிக்கிற புண்ணியத்தையும் கட்டிக்கிடப் போறீங்களா? அப்படின்னா, நம்ம முதலிரவிலே என் கையிலே செஞ்சி தந்த சத்தியம் என்னாகிறதாம்? உங்கள் வாழ்நாள் பரியந்தம் இந்த ரேவதி ஒருத்தியே தான் கடைசி வரைக்கும் உங்கள் நெஞ்சுக் கோயிலிலே கொலு வீற்றிருப்பான்னு நீங்கள் சொன்னதெல்லாம் பொய்தானா?”

“என் சத்தியமும் பொய் இல்லே; என்னோட அந்த ரேவதியும் பொய் ஆகமாட்டாள்!... ஆனால், இந்த ரேவதிதான் பொய் ஆகிட்டாங்க! அதாலேதான், இந்த ரேவதி மறுமணம் செஞ்சிக்கிடத் துணிந்து ஒரு சுயம் வரத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க!”

“இந்தப் பழி ரொம்பவும் பாவமானதுங்க, ஞானசீலன்! என் அந்தரங்கமான மனசைப் பகிரங்கமாகச் சோதனை செஞ்சு பார்க்கிறதுக்காக என் மனசாட்சி நடத்தின அக்கினிப் பரீட்சைதான் இப்படிப்பட்ட ‘மணமகன் தேவை’ நாடகம்! அன்றைக்கு நீங்கள் ராசாங்கம் நடத்தின என் நெஞ்சிலே இன்றைக்கும் நீங்களேதான்

ஆட்சி பண்றீங்க... என்னோட மனச்சாட்சியே நீங்கள் தான்னு எனக்கு அடிக்கடி எச்சரிக்கை செஞ்சு அனாமதேயக் கடிதங்களை அனுப்பிக்கிட்டிருந்த நீங்கள், என் மனசாட்சியை சோதிச்சும் பார்க்கிறீங்களா?... உடலாலே நீங்கள் கேடு கெட்டுப் போயிருந்தாலும்கூட, உள்ளத்தாலே எனக்கு மாத்திரம் சொந்தமும் பந்தமும் உறவும் உரிமையும் கொண்ட நீங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு தெய்வமாக என் இதயத்தில் குடியிருக்காமல் போனாலும், கண்ணுக்குத் தெரிஞ்ச ஒரு மனிதனாகக் கொலு இருக்கிற என்னோட பழைய ஞானசீலனைப் பார்க்கிறீங்களா?... இப்பவே என் நெஞ்சைத் திறந்து காண்பிப்பேனுங்க, அத்தான்!” வைராக்கியமான ரோஷம் பீறிடச் சவால் விட்டாள் அவள்.

“ரே...வ...தி!”

“இன்னுமா உங்களுக்கு நல்ல புத்தி திரும்பல்லே, அத்தான்?...ஆத்தாளே, கருமாரி! நீயே சொல்; நீயே சொல்லிக் கொடு!...அத்தான், நான் வெறும் ரேவதி இல்லேங்க. நான் ரேவதி ஞானசீலனுங்க, அத்தானே!... உங்கள் தீர்ப்பைத் திருத்தி எழுதி வாசிங்க, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக அங்கீகரிச்சு, உங்கள் வாயாலே என்னை ‘ரேவதி ஞானசீலன்’ அப்படின்னு ஒரு வாட்டி, ஒரேயொரு வாட்டியாச்சும் அழையுங்க, அத்தான்!”

கண்ணிர் வெள்ளம் கரை புரண்டது.

“பரிசுத்தமான என்னோட இதயத்திலே மாயத் தேவதையாட்டம் கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கிற அந்த ரேவதியைத்தான் என்னாலே ரேவதி ஞானசீலன்னு ஏற்றுக்கிடமுடியும்! ” சிரிப்பின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.

“அப்படின்னா, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்றுக்கிட முடியாதுங்களா?”

“முடியாது!”

“முடியாதா?”

“முடியாது! முடியாது!...”

“அப்படியா? மகிழ்ச்சி, ரொம்ப மகிழ்ச்சி! என்னை நீங்கள் ரேவதி ஞானசீலனாக அங்கீகாரம் செய்யத் தேவையில்லே...எனது தூய அந்தரங்கத்திலே நேசத்தோடவும் பாசத்தோடவும், அன்போடவும், கருணையோடவும் சிரிச்சுக் கூத்தாடிக்கிட்டு இருக்கிற என்னோட உண்மையான அத்தானாக பழைய ஞானசீலன் என்னை ரேவதி ஞானசீலனாக மனப்பூர்வமாக அங்கீகரிச்சு ஏற்றுக் கிட்டு பத்தாண்டு ஆகிடுச்சு! அது போதும் எனக்கு!” புயல் கடந்த அமைதியில் நிதானமாகவே பேசி நிறுத்தினாள், ரேவதி.

“நான் வர்றேன்...குட்பை !”

நகர்கிறார், ஞானசீலன்.

“மிஸ்டர் ஞானசீலன், ஒரு நிமிடம் நில்லுங்க!”

ஞானசீலன் நின்றார்.

மறுகணம்

அங்கே, ரேவதி துப்பாக்கியும் கையுமாகத் தோன்றினாள். “இப்பிறப்பிலே உங்களைக் கண்ணுக்குக் கண்ணாகத் திருப்பிச் சந்திக்கவே வாய்க்காதின்னு ஆத்திரப்பட்டு, புத்தம் புதிசான இந்தத் துப்பாக்கியாலே என் உயிரை நானே குடிச்சிடத் துடிதுடிச்ச நேரத்திலே தான், நீங்கள் என் முன் வந்து நின்னீங்க!...தெய்வாதீனமாய் என்னைத் தேடிவந்து சேர்ந்த நீங்களோ விதியாக என்னைச் சோதிச்சிட்டீங்க! என்னை நிராகரிச்சிட்டீங்க! அப்புறம் உங்களுக்கு இந்த உலகத்திலே என்ன வேலை? மிஸ்டர் ஞானசீலன்...நான் ரேவதி ஞானசீலன்...டாக்டர் ரேவதி ஞானசீலன் ஆணையிடுகிறேன்...எஸ்...அட்டென்ஷன் ப்ளீஸ் - ஒன்... டூ...!” என்று வீரகர்ச்சனை செய்தாள். ஊழிக் கூத்தாடிய எல்லை சக்தியா அவள்?

“ரேவதி ஞானசீலன்! ... டாக்டர் ரேவதி ஞானசீலன்!”

வீரிட்டு அலறிக் கதறியவராகப் பொறி கலங்கிப் பாய்ந்து வந்த ஞானசீலன், அவளது கைகளை- அவளுடைய ரேவதியின் கைகளை கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்.

துப்பாக்கி தரையைச் சரண் அடைந்தது!

ஞானசீலன் கண்ணீரைப் பெருக்கி விம்மினார்.“என் அன்பான ரேவதி ஞானசீலன்!... உன் ஆசை அத்தானுக்கு நீ வாழ்த்தின மாதிரி நிச்சயமா நூறு வயசு தானாக்கும்! ”

மார்பகச் சேலை நழுவியதையும் உணராமல், வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறாள், ரேவதி! “ஆகா...நான் ரேவதி ஞானசீலன் ஆகிட்டேன்!...இந்த நல்ல நேரத்தைக் கொண்டாட, நான் உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேணாமா? அங்கே பாருங்களேன், அத்தான். உங்களுக்குப் பிடித்தமான ‘ராயல் சாலஞ்ச்’ உங்களைக் கண்சிமிட்டி வரவேற்குதுங்க...ஊம்; முதலிலே நீங்கள் ஆரம்பிங்க, ஒரு நொடியிலே நானும் வந்து உங்களுக்குக் கம்பெனி கொடுக்கிறேனுங்க!” என்று செருமினாள், ரேவதி ஞானசீலன். மண்ணிலே வானம் தெரிந்திருக்குமோ?

புதிய மலர்ச்சி கண்ட மோகத்தை உச்சிமோந்த ஞானசீலன், ‘ஒ கே’ சொல்லி, பூக்கோப்பையில் ஊற்றிய மதுவைப் பாதி சுவைத்து, மீதிப் பாதியைத் தர்ம நியதிப்படி ரேவதிக்கு வழங்க ரேவதியைத் தேடினார்.

ரேவதி ஞானசீலன் நேரமான நல்ல நேரத்திலே என்ன தேடுகிறாளாம்? ஆருயிர் ரேவதியைக் கைகளைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு நெஞ்சாகக் கட்டி அணைத்துக் கொண்டு எச்சில் மதுவை அவள் வாயில் சொட்டு சொட்டாக ஊற்றினார். ஆப்பிள் கன்னங்களிலும் கொவ்வைக் கனி உதடுகளிலும் மாறி மாறி--

மாற்றி மாற்றி முத்தங்களைப் பதித்தார். வெளிச்சத்தை இருட்டாக்கிட்டு, நாம இரண்டாவது முதலிரவைக் கொண்டாடினால்தான் நாம தொடங்கப்போற புது வாழ்க்கைக்குப் புதுமையான பொருள் கிடைக்கும். இல்லையா கண்ணே, கண்மணியே!”-- கெஞ்சியும் கொஞ்சியும் கண்ணடித்துக் கண்களைச் சிமிட்டினார், ரேவதியின் ஞானசீலன்,

“நீங்கள் பேசறது உண்மைதான், அத்தான். இனி மேல் நீங்கள் பொய் பேசமாட்டீங்க. ராயல் சாலஞ்சிலே சாத்திரத்துக்காகத் துளி மிச்சம் வச்சிட்டு பாக்கி எல்லாத்தையும் நீங்கள் முடிச்சிடுங்க, இந்தா ஒரு நொடியிலே நான் வந்திடறேன்” என்று சொல்லி, அன்பின் பிடியினின்றும் திமிறி விடுதலை பெற்றாள்.

அவளை அவ்வளவு இலகுவிலே விட்டு விடுவாரா? “இனிமேல் உன்னை விட்டுட்டு ஒரு கணம்கூட என்னாலே பிரிஞ்சிருக்க முடியாது”. முந்தானை தப்பி விட்டால் என்னவாம்? தாலி அகப்பட்டுக் கொண்டது. மறு வினாடியில், “ரேவதிப் பொண்னே! அழுதியா, என்ன?” என்று உடல் அதிர, உள்ளம் அதிரக் கேட்டார், ஞானசீலன்.

“இது ஆனந்தக் கண்ணீர்” என்று சமாதானம் படித்தபின் மீண்டும் விடுதலை அடைந்தாள்.

நகர்ந்தவள் நின்றாள். கண்ணீர் பெருகியது. கொண்டவரை-உயிர் கொண்டவரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். “இதோ, வந்திடறேன்” என்று விடைபெறுகிறாள். கண்ணீர் மாத்திரம் விடைபெறவில்லை!

ஞானசீலனின் அழகான கண்கள் மேலும் சிவந்தன.