ஆடரங்கு/இரண்டு
இரண்டு தோழர்கள்
இது வெறும் கதை என்றுதான் பலருக்கும் தோன்றும்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் கண்முன்னாலேயே நடந்தது. முழுவதும் உண்மை என்கிற உத்தரவாதத்துடன்தான் நான் கதையைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்களில் நானும் சில வாரங்களுக்கு முந்தி வரையில், நம்பிக்கையற்றவன்தான்! ஆனால் இப்போது நம்பத்தான் வேண்டியதாக இருக்கிறது—என்ன செய்வது?
நாலைந்து வருஷங்களாக என் வீட்டிலே இருந்துகொண்டு ஒரு பையன் படித்துக்கொண் டிருக்கிறான். அவன் பெயர் ராமு. இப்போது அவனுக்கு வயசு பதினாறாகிவிட்டது. எஸ். எஸ். எல். சி. பரீட்சையில் இவ்வருஷம் நல்ல மார்க்குகளுடன் தேறிவிட்டான். அவனுக்குப் பரீட்சை தேறிய கதைதான் இது. ஆனால் கதை என்றால் கதை அல்ல; உண்மை.
****
ராமு எனக்குத் தூர பந்து. அவன் பெற்றோர் மிகவும் ஏழைகள். பையன் எஸ். எஸ். எல். சி. என்கிற சொர்க்க வாசல் தாண்டி, குமாஸ்தா லோகம் என்கிற சொர்க்கத்தை-லட்சிய பூமியை அடைந்துவிட வேண்டுமென்பது அவனுடைய பெற்றோரின் விருப்பம். அவனுடைய படிப்பையும் நடத்தையையும் அவர்களுக்குத் திருப்திகரமாகக் கவனித்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் அவனை என்னிடம் விட்டு வைத்திருந்தார்கள்.
நடத்தையைப் பற்றிய வரையில் அவனிடம் பிசகு சொல்லவே முடியாது. வெகு நல்ல பையன்; பரம சாது. எதிர்த்து வாயாடுவது என்றால் என்ன என்றே அவனுக்குத் தெரியாது. கள்ளங் கபடமில்லாமல் பேசுவான். எது சொன்னாலும் மறு வார்த்தை பேசாமல் செய்வான். என்னைவிட என் மனைவி ராஜிக்கு அவனிடம் பிரியம் அதிகம். சொந்தத் தம்பியையும்விட அவனிடம் அதிகப் பரிவு காட்டுவாள். காலத்தில் அவன் வயிறு நிறையச் சோறு போட்டுவிடுவாள். இது ஒன்றுதான் அவனிடம் குறை என்று சொல்ல முடியும்; கொஞ்சம் சாப்பாட்டு ராமன். அதனால் என்ன?
படிப்பிலே அவனைச் சொல்லிப் பயனில்லை. அவன்மேல் வஞ்சம் கிடையாது. அகப்பட்ட நேரமெல்லாம் விழுந்து விழுந்துதான் படிப்பான். வீடு அதிரத் தவளை மாதிரி உரக்கப் பாடம் பாடமாகப் படிப்பான். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு, சில சமயம் பன்னிரண்டு மணி வரைக்குங்கூடப் படிப்பான். ஆனால் படித்ததொன்றும் அவனுடைய களிமண் மூளையில் ஏறாது! அவன் படித்துவிட்டு வருகிற பாடத்தில் அதே சமயம் கேள்வி கேட்டால்கூட அவனால் பதில் சொல்ல முடியாது. கவனம் அவ்வளவு! ஆறாவது பாரம் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் நான். எஸ். எஸ். எல். சி. பரீட்சைக்கு இரண்டு மாதம் இருக்கும் போது உட்கார்ந்து இரவு பகலாக அவனுக்கு எல்லாவற்றையும் கரைத்துப் புகட்டிவிடலாம் என்று எனக்கு எண்ணம்.
படிப்பு வரவில்லையே தவிர ராமுவை அசடு என்று சொல்லி விட முடியாது. கடை கண்ணிக்குப் போய் வருவதெல்லாம் என் வீட்டில் அவன் இருந்த வரையில் அவன்தான் செய்து வருவான். சாமர்த்தியமாகத்தான் செய்வான்—குற்றம் சொல்லும்படியாகவே இருக்காது.
தன் வயதுப் பையன்களுடன் அதிகமாகச் சேரமாட்டான். ஆனால் அவன் வகுப்பில் அவன் வயதுப் பையன் ஒருவன்- அவன் பெயரும் ராமுதான். இருவரும் அத்தியந்த நண்பர்கள் - இணைபிரியாத தோழர்கள். அந்த ராமுவும் ஏழைதான்- ஆனால் அநாதை. மாமா வீட்டில் போட்ட சோற்றை நாய் மாதிரி தின்றுவிட்டு, பெற்றோர் அன்பை உணராமல் வளர்ந்து கொண்டிருந்தான். சமயம் நேருகிற போதெல்லாம் இரண்டு ராமுகளும் சேர்ந்துதான் இருப்பார்கள்.
குண விசேஷங்கள், உருவம், தோற்றம், நடை உடை பாவனை, வயசு, எல்லாவற்றிலுமே இரண்டு பேரும் ஒன்றுதான். ஆனால் இருவருக்கும் ஒரு விஷயத்தில் மட்டும் பெரிய வித்தியாசம் இருந்தது. எங்கள் வீட்டு ராமு படிப்பில் அந்த வகுப்பில் கடைசி என்று சொல்ல முடியாது - தேறக் கூடியவர்களில் கடைசி என்று சொல்லலாம். ஆனால் அந்த ராமு தான் வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதல். இத்தனைக்கும் அவன் மாமா வாசிப்பதற்குப் பாடபுஸ்தகங்கள் கூட வாங்கித் தரமாட்டார்.
இப்படி இரண்டாவது பாரத்திலிருந்து ஐந்தாவது பாரம் வரையில் இரண்டு ராமுகளும் நெருங்கிய தோழர்களாகப் படித்து வந்தார்கள். ஐந்தாவது பாரத்திலும் தேறி, ஆறாவது பாரத்திற்கும் இருவரும் வந்துவிட்டார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பல்லவா? இருவருமே பொறுப்புடன் படித்து வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படிப்பு, அந்த ராமுவின் விஷயத்தில் பலன் அளிக்கும்போல் இருந்தது. எங்கள் வீட்டு ராமுவின் விஷயத்தில் பலன் தராதுபோல் இருந்தது. அவ்வளவுதான். இருவரும் சில சமயம் சேர்ந்தும் படிப்பார்கள்.
2
கிறிஸ்துமஸ் லீவுக்குப் பிறகு அந்த ராமு ஏனோ தெரிய வில்லை - பள்ளிக்கூடத்துக்குத் திரும்பவில்லை. 'நாளை வருவான், நாளை வருவான்' என்று எங்கள் ராமு காத்திருந்தான். வரவில்லை. ஒரு வாரம் கழித்து ராமுவின் மாமா வீட்டிற்குப் போய் விசாரித்ததில்தான் விஷயம் தெரியவந்தது. லீவில் போன ராமு, எங்கேயோ காவேரியில் நீந்தப் போய் ஆற்றில் இறந்துவிட்டானாம்!
கை இழந்தவன்போல் ஆகி விட்டான் எங்கள் ராமு. படித்தாலும் புரிந்துகொள்ளாதவன்; இப்போது படிப்பதே அரிதாகி விட்டது. தன் புஸ்தகங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, மனம் எங்கெல்லாமோ ஓட, பிரமித்தவன். போல, பேயடித்தவன் போல, உட்கார்ந்திருப்பான். நான் அவன் மனத்தைத்திருப்பிப் படிப்பில் செலுத்த முயன்றதெல்லாங்கூடப் பயன்தரவில்லை. 'சரிதான்; இந்த வருஷம் போகட்டும்; அடுத்த வருஷம் தானாக மனம் தேறிவிடுவான்? என்று நான் ௮வனை அதிகமாக வற்புறுத்தாமல் இருக்துவிட்டேன்.
தினம் உத்ஸாகமில்லாமல் பள்ளிக்கூடம் மட்டும் போம் வந்துகொண் டிருந்தான். மற்றப்படி முன்போலெல்லாம் அவன் சாப்பிடுவதுகூட இல்லை. வீட்டு வேலைகளைக்கூட அவன் அதிகமாகக் கவனித்துக்கொள்வதில்லை. நானும் ராஜியும், “பாவம்! அன்பு நிறைந்த தோழனை இழந்து விட்டவனை அதிகமாக எதுவும் சொல்லக்கூடாது” என்று விட்டுவிட்டோம்.
பரிட்சைக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது ஒருநாள் மாலை அவன் கையில் ஒரு கட்டுப் புஸ்தகங்கள், நோட்டுப் புஸ்தகங்களுடன் வந்தான்.
"ஏதடா ராமு, இதெல்லாம்?" என்று நான் கேட்டேன்.
"ராமுவினுடையது, வாங்கிண்டு வரணும்னு எனக்குத் தோன்றியது. வாங்கிண்டு வந்தேன் ”' என்றான் ராமு.
"....ம்... உங்கிட்ட இல்லையா, இந்தப் புஸ்தகங்களெல்லாம்?" என்று கேட்டேன் நான்.
சிறிது நேரம் தயங்கினான் எங்கள் ராமு. பிறகு சொன்னான்: “என்னவோ இதை எல்லாம் வாங்கிண்டு வரணும்னு: தோணித்து; வாங்கிண்டு வந்தேன்”. என்றான் மீண்டும்.
பாவம்! தன் சிநேகிதனின் ஞாபகார்த்தமாகத் தன்னிடம். அவனுடைய புஸ்தகங்களும் நோட்டுப் புஸ்தகங்களுமாவது இருக்கட்டும் என்று ஆசைப்படுகிறான் என்று எண்ணிக் கொண்டேன். இருந்துவிட்டுப் போகட்டுமே!
“ராமுவுடைய மாமாவுக்கு இதற்கெல்லாம் ஐந்து ரூபாய் வேண்டுமாம்" என்றான் ராமு.
'ஐந்து ரூபாயா? அவரிடமே திருப்பி எறிந்துவிடு!' என்று சொல்ல முதலில் எண்ணினேன். பிறகு ராமுவின் முகத்தைப் பார்த்தேன். “சரி, ஐந்து ரூபாயைக் கொண்டு போய்க் கொடுத்துவிடு; ராஜியைக் கேட்டு வாங்கிண்டு போ!” என்றேன். ராமு முகம் மலர உள்ளே போய்விட்டான்.
இந்தச் சம்பவத்துக்கு ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு தான் நான் கவனித்தேன். ராமு இப்போதெல்லாம் உரக்கப் படிப்பதே இல்லை; படித்தானானால்-அதுவே எனக்குச் சந்தேகமாகத்தான் இருந்தது. மனசிற்குள்தான் படித்துக் கொண்டான். நான் அவனுக்கு வருஷ ஆரம்பத்தில் வாங்கிக் கொடுத்த புஸ்தகங்களை அவன் தொடுவதே இல்லை, இறந்துபோன ராமுவின் புஸ்தகங்களையும் நோட்டுப் புஸ்தகங்களையும் பிரித்து வைத்துக்கொண்டு மணிக்கணக்காகப் பேயறைந்தவன் போல உட்கார்ந்துருப்பான். நான் கவனிப்பதைக் கவனித்தால் சில சமயம் திடுக்கிட்டு விழித்தெழுவான். நான் கவனிப்பதைக் கவனிக்காமலே இருந்துவிடுவான் பல தடவைகளில்,
பரீட்சை நெருங்கிக்கொண் டிருந்தது.
ஒரு நாள் இரவு எங்கள் ராமு படித்துக்கொண் டிருந்ததை வெகு நேரமாகக் கவனித்துக்கொண்டிருந்த ராஜி சொன்னாள்: “ராமு கையை வைக்காமலே, பக்கம் புரளுகிறதே!” என்றாள்.
“போடி அசடே!" என்றேன் நான்.
"அதென்னவோ, இதற்கு முன்பு கூட நான் நாலைந்து தடவை பார்த்துவிட்டேன். காற்று இல்லாதபோதுகூட ராமுவுக்கு முன்னால் இருக்கிற புஸ்தகத்தை, யாரோ கண்ணில் படாத ஒருவர் புரட்டுகிற மாதிரி இருக்கிறது. பக்கங்கள் தாமாகப் புரளுகின்றன!” என்றாள் ராஜி.
“உனக்குப் பைத்தியந்தான் பீடித்துவிட்டது!” என்றேன் நான். பின்னால் நடந்ததை எல்லாம் கவனித்துச் சேர்த்துப் பார்க்கும்போதுதான் அவள் சொன்னதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
பரீட்சைக்கு முதல் நாளும் இப்படித்தான். “என்னடா படித்தாய், ராமு?” என்று நான் கேட்டபோது; “ஒன்றுமே படிக்கவில்லையே?” என்று அந்த நிமிஷம் வரை புஸ்தகத்தின் முன் உட்கார்ந்திருந்த ராமு பதில் அளித்தான். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. படிக்காமல் புஸ்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு என்னதான் செய்துகொண்டிருந்தானோ?
ராமுவாகவே சொன்னான். “ராமு மட்டும் இருந்தானானால்--எப்படிப் படிப்பான்! எனக்கும் சொல்லித் தருவானே!” என்றான்.
“அவனை நினைத்துக்கொண்டாவது நீ நன்றாகப் படித்துப் பாஸ் பண்ண வேண்டாமா? படித்திருக்கிறாயா? பாஸ் பண்ணிவிடுவாயா?” என்று கேட்டேன்.
“என்னவோ?” என்றான் ராமு.
3
எஸ். எஸ். எல். சி. பரீட்சைகள் முடிந்துவிட்டன. அன்றன்று கேள்வித்தாளை ராமுவிடமிருந்து கையில் வாங்கி அவனைப் பரீட்சித்துப் பார்த்தேன். கேள்வித் தாள்களில் இருந்த ஒரு கேள்விக்காவது அவனால் பதில் சொல்ல இயலவில்லை. "என்னடா எழுதியிருக்கறாய்?" என்று கேட்டால், “என்ன எழுதினேனோ, தெரியவில்லை!” என்றான்.
எனக்குப் புரியவில்லை. 'எப்படியாவது நடக்கட்டும்; யார்த்துக்கொள்ளலாம்' என்று விட்டுவிட்டேன்.
பரீட்சைகள் முடிந்து ராமு தன் ஊருக்குப் போன பிறகு ராமுவின் உபாத்தியாயர் கோபாலையரைத் தற்செயலாகச் சந்தித்தேன். அவர் ராமுவை விசாரித்தார். “ஊருக்குப் போய்விட்டானா? சரிதான் ; பரிட்சையில் குனிந்த தலை நிமிராமல் ரொம்பவும் நன்றாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கறான் என்று ஹாஸ்டல் சூபரிண்டாக இருந்த ராமசாமி. நாயுடு சொன்னார்” என்றார்.
“அப்படியா!” என்றேன் நான்.
பரீட்சை முடிவுகள் வந்தவுடன் ராமு தேறிவிட்டான் என்று தெரிந்தது. எஸ். எஸ். எல். சி. புஸ்தகங்கள் பள்ளிக் கூடத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது—எங்கள் ராமு நானூற்றைம்பது மார்க்குகளுக்கு மேல் வாங்க, அவன் பள்ளிக்கூடத்திலே முதல்வனாக, ராஜதானியிலே முதல் நூறு பேர்வழிகளுக்குள் இருந்தான்.
ராமு வந்திருந்தான். பரீட்சை முடிவுகளைப் பார்த்து அவனே ஆச்சரியத்தில் மூழ்கயிருந்தான்.
ராஜி சொன்னாள்: “பரிட்சை தேறி இத்தளை மார்க்குகள் வாங்க யிருப்பது நம்ப ராமு இல்லை!” என்றாள்.
“பின் யாராம்?” என்று கேட்டேன் நான்.
“அவன் தோழன் ராமுதான்! படித்தது, பரீட்சை எழுத யது, மார்க் வாங்கியது எல்லாம் அந்த ராமுதான். இந்த ராமு சாப்பாட்டைத் தவிர மற்றதிலெல்லாம் எவ்வளவு சோப்பளாங்கின்னு நமக்குத் தெரியாதா?” என்றாள் ராஜி.
“அந்த ராமு இருந்தால் இந்த மார்க்கும் வாங்கியிருப்பான், இன்னும் அதிக மார்க்கும் வாங்கியிருப்பான்!" என்றேன் நான்.
எங்கள் ராமுவின் கண்களில் ஜலம் துளித்திருந்தது.
ராமுவின் பெற்றோர், நான்தான் தங்கள் பிள்ளைக்குப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டேன் என்று என்னைப் போற்றுகிறார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் மனிதனுடைய சக்தியை மீறிய ஒரு சக்தியிலே இப்போது எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.