சோதனை

னிதனை அவனுடைய சக்தியை மீறிக் கடவுள் சோதிப்பதே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு மனிதன் இவ்வளவுதான் தாங்குவான் என்பது கடவுளுக்குத் தெரிகிறது. ஆனால் மனிதனே மனிதனைச் சோதிக்கத் தொடங்கும்போது...

"அணுக்குண்டும் ஹைட்ரஜன் குண்டும் தோன்றிவிடுகின்றன" என்றார் நண்பர்.

"உண்மைதான். ஆனால் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு விவகாரங்களெல்லாம் ரொம்ப ரொம்பப் பெரியவர்கள், பிரதம மந்திரிகள், தேசத் தலைவர்கள் கூடித் தீர்க்கவேண்டிய இன்றைச் சில்லறை விஷயங்கள். நாம் எதற்காக அதில் ஈடுபட்டு மனசைக் கலக்கிக்கொள்ள வேண்டும்?" என்றேன்.

நண்பர் சொன்னார்: "நாம் மனசைக் கலக்கிக்கொள்ள மறுத்தாலுங்கூட அவை எல்லாம் காலைத் தினசரித் தாளில் தொடங்கி இரவு முதல் ஜாம சொப்பனாவஸ்தை வரையில் நம்மை விடாமல் துரத்துகின்றனவே, என்ன செய்வது? தப்பி எங்கே ஓடி ஒளிவது?"

இதற்கு நேரடியாக நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சோதனை என்று நான் சொன்னபோது 1942, 1943-இல் என் வீட்டில் நடந்த ஒரு போலீஸ் சோதனையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் சொன்னேன். அதைப்பற்றி அந்த நண்பருக்குத் தெரியாது.

"1942, 1943-இலா? நீங்கள் எப்போதுமே அரசியலில் ஈடுபடாதவராயிற்றே?" என்று கேட்டார் நண்பர்.

"பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதிகளான இந்தியப் போலீஸ் இலாகா அதற்காக என்னை விட்டுவிடுவார்களா?" என்றேன்.

"நீங்கள் போலீஸ் சோதனை என்ற பிறகு எனக்குக்கூட ஒரு போலீஸ் சோதனைக் கதை ஞாபகம் வருகிறது. முதலில் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள், பிறகு நானும் ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார்.

"நான் சொல்ல வந்தது கதை அல்ல; ஒரு சின்ன அநுபவம்."

"உம்......"

"சர்வதேசக் கதை மலர்கள் என்று நான் ஒரு வரிசை மொழிபெயர்ப்புக் கதைகள் வெளியிட்டிருக்கிறேன்."

"ஆமாம், நானும் பார்த்திருக்கிறேன்" என்றார் நண்பர்.

"அவற்றின் அட்டையில் காதற்கதை. இத்தாலி -காளி - ஜெர்மனி என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது."

"ஆமாம். எனக்கும் ஞாபகம் இருக்கிறது" என்றார் நண்பர்.

"1942 கடைசியில் ஒரு நண்பரின் உதவியால் நான் சர்க்காரின் கவனத்துக்கு இலக்கானேன். அச் சமயம் ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, வாடகை கொடுக்காத ஒரு 'வாடகை பஸ்'ஸில் ஒரு போலீஸ் கோஷ்டி என் வீட்டை அவசரச் சோதனை போட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே கவிழ்த்துவிடுவதற்கான மூலாதாரமான ஒரு திட்டம், ஒரு ஆயுதம், ஒரு... என்னவென்று சொல்வது...ஏதாவது என் வீட்டில் நானும் அறியாமலே வந்து புகுந்துகொண் டிருக்குமோ என்று எனக்கே அந்தப் போலீஸ் படையைப் பார்த்ததும் சந்தேகமாகப் போய்விட்டது. எனக்குத் தூக்கக் கலக்கம். வீட்டிலும் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நல்ல வேளையாகப் போலீஸ்காரர்கள் கையில் வேறு எதுவும் அகப்படவில்லை இந்தச் சர்வதேசக் கதைகளின் அட்டையில் போட்டிருந்த ஜெர்மனி, இத்தாலி என்கிற விஷயத்தை ஒரு போலீஸ் மேலதிகாரியும் ஒரு போலீஸ் சின்ன அதிகாரியும் தொண்ணூறு நிமிஷங்களுக்கு மேல் விவாதித்தார்கள், விவாதித்தார்கள், விவாதித்தார்கள்; இரவு இரண்டு மணி வரையில் விவாதித்தார்கள்.”

"வேடிக்கையாக இருக்கிறதே!" என்றார் நண்பர்.

"எனக்கு அப்போது அது வேடிக்கையாக இல்லை. அவர்கள் விவாதம் எப்படி முடியுமோ என்ற பீதியுடன் நான் காத்திருந்தேன். ஜெர்மனி, இத்தாலி என்கிற பெயர் போட்ட புஸ்தகங்களில் என்ன என்ன இருக்கலாம் என்று இரண்டு போலீஸ் அதிகாரிகளும் முடிவு கட்ட முயன்றபோது, நானே பயந்துபோனேன்......"

"அன்றிரவு உலகத்தில் சிறந்த இரண்டு கதைகளுக்கு வேறெவ்விதத்திலும் கிடைத்திருக்க முடியாத இரண்டு போலீஸ் வாசகர்கள் கிடைத்து விட்டார்கள்" என்றார் நண்பர்.

"மூன்று மணி சுமாருக்கு அந்தப் புஸ்தகங்களில் ரகசிய பாஷை, சங்கேதங்கள், விரோதி தேசங்களுக்குச் சாதகமான தகவல்கள், காங்கிரஸ் அநுதாப இலக்கியம்- எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.”

நண்பர் சொன்னார்: "போயும் போயும் நீங்களும் ஜெர்மனி, இத்தாலி என்று விரோத தேசக் கதைகளைத்தானே பார்த்து மொழி பெயர்த்தீர்கள்? நேச தேசக் கதைகளாகப் பார்த்து வெளியிட்டிருக்கக் கூடாதோ?"

"செய்திருக்கலாம், முந்திய யுத்தத்தில் ஏற்பட்ட இந்த அநுபவத்தின் காரணமாக அடுத்த யுத்தத்தில் நான் நேச தேசங்களின் கதைகளை மட்டுமே படிப்பது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது உலக யுத்தத்தில் விரோத தேசங்கள் எவை எவை, நேச தேசங்கள் எவை எவை என்று....." நான் வாக்கியத்தை முடிக்குமுன் நண்பர் குறுக்கிட்டார். "வேண்டாம். பேச்சு மறுபடியும் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு என்கிற விஷயத்துக்கே திரும்பிவிடும்போல் இருக்கிறதே! வேண்டாம், நான் சொல்ல வந்த போலீஸ் சோதனைக் கதையைச் சொல்லி விடுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார் நண்பர்.

****

துவும் கிட்டத்தட்ட நள்ளிரவு சமயத்தில் நடந்த ஒரு சோதனைக் கதைதான். உண்மையாகவே நடந்தது. ஏனென்றால் இதில் ஒரு பகுதியை நான் நேரில் பார்த்தேன். மற்றப் பகுதி பிறகு கேள்விப்பட்டதாகும். முதலில் நான் நேரில் கண்டதைச் சொல்லி விடுகிறேன்.

சாதாரணமாக நாங்கள் இரண்டு மூன்று பேர்வழிகள் தினம் இரவு பத்து மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் 'வாக்' போவோம்; 1942 சமயத்தில்தான் என்று ஞாபகம். தினம் இவர்கள் இரவு கூடி ஸ்டேஷன் பக்கம் போகிறார்களே என்று ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளும் பல நாள் எங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண் டிருந்தான் என்பது எங்களுக்குப் பின்னர் பல நாட்கள் வரையில் தெரியாது. ஆனால் இதற்கும் நான் சொல்ல வந்த கதைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

'வாக்'கென்று கிளம்புவோமே தவிர நாங்கள் மூவருமே உண்மையில் அகாலத்தில் காபி சாப்பிடுவதை விரும்பிப் போகிறவர்கள்தாம். ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில், சாயங்காலமாகத் திறக்கிற ஒரு சிறு ஹோட்டலில் அந்தக் காலத்தில் நல்ல காபியாகக் கிடைக்கும். இரவு அந்தக் காபியைக் குடித்துவிட்டுத்தான் தூங்குவது என்கிற காரியத்தை நாங்கள் நாள் தவறாமல் செய்துகொண் டிருந்தோம். இரவு அகாலத்தில் காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான். ஆனால் எங்களுடைய அநுபவம் இதற்கு நேர்மாறானது.

இப்படி ஒரு நாள் இரவு; அன்று வியாழக்கிழமை என்று ஞாபகம். அன்று வழக்கத்தை விடச் சற்று அதிக நேரமாகி விட்டது என்றும் ஞாபகம். சுமார் பதினொரு மணி யிருக்கலாம். ஆற்றுப் பாலம் தாண்டி இறக்கத்தில் இறங்குகிறபோது இடது கைப் பக்கம் இருந்த திடலில் இரண்டு காஸ் லைட்டுகள் தெரிந்தன. பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்களின் உருவங்களும் தெரிந்தன.

ரோடு ஓரத்தில் இரண்டொருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் திடலுக்குள் போய்விடாதபடி அங்கே ஒரு போலீஸ்காரன் காவல் நின்றான். 1942-ல் என்று சொன்னேன். இல்லையா? போலீஸ்காரனைப் பேச வைப்பது, அதுவும் என்னையும், என் நண்பர்களையும் போலக் கதர் அணிந்தவர்கள் பேசவைப்பது சிரமமாக இருந்தது.

ரோடு ஓரத்திலிருந்த மற்றவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. 'என்னவோ தேடுகிறார்கள்!' என்றான் ஒருவன். ஜப்பான் குண்டு விழுந்தது!' என்றான் வேறு ஒருவன். "பாரசூட்டில் இறங்கினான் ஒருவன்; நான் சாயங்காலமே பார்த்தேன்' என்றான் ஒருவன். காபியையும் மறந்து விட்டு அது என்னவாயிருக்கலாம் என்று யோசித்தவர்களாக நாங்கள் நின்றோம்.

அறுபது எழுபதடிக் கப்பால் நடந்ததெல்லாம் காஸ்லைட் வெளிச்சத்தில் சற்றுத் தெளிவாகவே தெரிந்தது. பத்தடி, இருபதடி நடந்து போலீஸ் கோஷ்டியினர் காஸ்லைட்டுகளை இறக்கி வைக்கச் சொல்வார்கள். பிறகு மண்வெட்டி எடுத்து ஓரிடத்தில் வெட்டுவார்கள். அதிகமாக வெட்டவும் மாட்டார்கள். கூட இருந்த ஓர் உருவத்தை - அது ஒரு பெண் உருவம் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை, நாங்கள் நின்ற இடத்திலிருந்து - ஏதோ அதட்டலாகக் கேட்பார்கள். ஏதாவது ஒரு கடுமையான போலீஸ் குரல் அவ்வளவு தூரத்துக்கப்பால் எங்கள் காதிலும் விழும். பிறகு காஸ்லைட்டுகளைத் தூக்கிக் கொண்டு இன்னும் பத்தடி நடப்பார்கள். மறுபடியும் மண் வெட்டி எடுத்து வெட்டுவார்கள்.

எங்களுக்குக் கால் கடுக்கத் தொடங்கியது. காபி ஞாபகமும் தலை தூக்கியது. 'போகலாம்' என்று கிளம்புகிற சமயம் காஸ்லைட்டுகளும் போலீஸ் கோஷ்டியினரும் அவர்களுடன் இருந்த ஸ்திரீயும் ரோட்டுப் பக்கம் வருவது போலத் தெரிந்தது. பார்க்கலாமே என்று நின்றோம்.

காவல் நின்ற போலீஸ்காரன் எங்களைப், "போங்களையா! போங்களையா!" என்று அங்கிருந்து விரட்டினான். அவன் சொன்னது காதில் விழாதமாதிரியே நாங்கள் நின்றோம்.

காஸ்லைட்டுகளும் போலீஸ் கோஷ்டியும் அவர்களுடன் இருந்த ஸ்திரீயும் ரோடு ஓரத்துக்கு வந்துவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு வயசு இருபதுக்குள்தான் இருக்கும். அவளுடைய கண்கள் அழுதழுது சிவந்திருந்தன. முகம் விங்கியிருந்தது. கூலிவேலை செய்து பிழைக்கிற பெண்போலும் என்று எண்ணினோம்.

போலீஸ்காரர்களில் ஒருவன் சற்று சற்று அதட்டலாகவே சொன்னான். “இதோ பார்! அழுது அழுது ஏமாத்தி விடலாம்னு பாக்காதே! ஏமார்றவங்க நாங்க இல்லை! உன்னைப்போல மாய் மாலக்காரிங்க எத்தனையோ பேரை நாங்க பார்த்திருக்கோம்!" என்றான்.

வேறு ஒருவன் சொன்னான், "கழுத்தைத் திருகிப் புதைச்சதில் குறைச்சல் இல்லை. இப்போ ரோஷம் வரது; அழுகை வரதே!"

மூன்றாவது போலீஸ்காரன் சொன்னான்; "வழியாச் சொல்லிவிடு! குழந்தையைக் கழுத்தை முறிச்சுக் கையில் எடுத்துக்கிட்டு இங்கே வந்தே. இருட்டா இருந்தது; எந்தப் பக்கம் போனே? எத்தனை அடி நடந்தே? எங்கே குழி பறிச்சே?...... காட்டி விடு" என்று அதட்டினான்.

அவளைப் போலீஸ்காரர்கள் சொன்னதை இங்கே மனுஷாள் காதால் கேட்கும்படி மாற்றிச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

திருட்டுக் கர்ப்பக் கதை என்று எண்ணினேன். 'போகலாம்' என்று நான் கிளம்புகிற சமயம் இன்னொரு போலீஸ்காரன் சொன்னான், "என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரியோடே சண்டை என்றால் அவள் குழந்தையைக் கழுத்தைத் திருகிப் புதைத்துவிடறதா? வெறுமனே கேட்டால் சொல்லமாட்டாய் நீ!”

பக்கத்து வீட்டுக்காரியின் குழந்தையைக் கொலை செய்து விட்டாளா?

அடாடா! அவளைப் பார்த்தால் அப்படி ஒன்றும் கொலைகாரி மாதிரி தெரியவில்லையே என்று நாங்கள் எண்ணினோம்.

ஆனால் போலீஸ்காரர்களுக்கு அவள்தான் கொலைகாரி என்று நிச்சயமாகத் தெரியும்போலும்! குழந்தையைக் கழுத்தைத் திருகி அங்கே அந்தத் திடலில் எங்கேயோதான் புதைத்துவிட்டாள் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரியும் போலும்! மறுபடியும் காஸ்லைட்டுகளைக் தூக்கச் சொன்னார்கள். அந்தப் பெண்ணை முன்னால் விட்டார்கள். "எங்கே போனாய்? எந்தப் பக்கம் திரும்பினாய்? எத்தனை அடி நடந்தாய்; காட்டு!" என்று அதட்டினார்கள்.

அந்தப் பெண் நாலடி நகர்ந்தாள், நின்றாள், மறுபடியும் போலீஸ் அதட்டலின் பேரில் இன்னும் நாலடி நகர்ந்தாள்.

அது பார்க்கச் சகிக்காத காட்சியாகப்பட்டது எனக்கு. 'வாங்களையா போகலாம்' என்றேன். நண்பர்களும் பதில் சொல்லாமல் கிளம்பினார்கள். வழக்கத்தை விட எங்களுக்கு அப்போது காபித் தாகம் அதிகரிப்பதுபோல் இருந்தது.

நாங்கள் தேடிப்போன ஹோட்டலின் முதலாளிக்கு ஊர் விவகாரங்கள் பூராவுமே தெரியும். நாங்கள் வரவேண்டும் என்று காத்திருந்தவர்போல ஆற்றுப் பாலத்து இறக்கத்தில் நடந்து கொண்டிருந்த போலீஸ் சோதனையைப்பற்றிப் பாடம் ஒப்பிக்கத் தொடங்கிவிட்டார். அவருக்குச் சந்தேகமில்லை- அந்தப் பெண்தான் குற்றவாளி என்பதைப்பற்றி. நாங்கள் ஏற்கனவே அறிந்துகொண் டிருந்ததையே அவர் சற்று விரிவாக அசுர பாவத்துடன் சொன்னார்.

அன்று அந்த ஹோட்டலில் காபி எங்களுக்கு ருசிக்கவில்லை.

நாங்கள் வீடு திரும்பும்போதும் ஆற்றுப்பால ஏற்றத்தில் அந்தச் சோதனை நடந்து கொண்டிருந்தது.

"உணவு உற்பத்தி அதிகரிக்க ஓர் இலாகா ஏற்பட்டிருக்கிறதே! அதன் சூழ்ச்சி இது ! அந்தத் திடல் பூராவும் இன்றிரவுக்குள் கொத்திவிடுவார்கள்" என்றார் நண்பர்களில் ஒருவர்.

ஆனால் அவரும் அதை ஹாஸ்யமாகச் சொல்லவில்லை; நாங்களும் அதை ஹாஸ்யமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

மறுநாள் நாங்கள் அதை மறந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவரும் அதுபற்றிப் பேசத் துணியவில்லை.

இது நடந்தது ஒரு வியாழக்கிழமை என்று சொன்னேனல்லவா?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்கள் காபி சாப்பிடப் போனபோது அந்த ஹோட்டல் முதலாளி தாமாகவே அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "இரண்டு மூன்று நாள் முந்தி பாலமான் ஏற்றத்தில் அந்தப் பெண்..."

காபி சுட்டுவிட்டது போலஅவசர அவசரமாக டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அந்தப் பெண்ணை விட்டு விட்டார்கள் " என்றார் ஹோட்டல் முதலாளி.

ஏன், என்ன ? என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை.

ஹோட்டல் முதலாளி தாமாகவே சொன்னார். "திடலில் அவள் கொன்று புதைத்து விட்டதாகத் தேடிய அந்தக் குழந்தை அகப்பட்டுவிட்டது, அது உயிருடனேயே இருந்தது."

"விரோதத்தால் ஏற்பட்ட பொய்ப் புகாரோ?" என்றார் நண்பர்.

நான் கீழே வைத்த காபி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டேன்.

ஹோட்டல் முதலாளியின் கவனத்தை அச்சமயம் வேறு ஏதோ கவர்ந்தது. அவர் அந்தக் கதையைப் பூராவும் சொல்லவில்லை. நாங்களும் மேலே விசாரிக்க ஆசைப்படவில்லை.

வீடு திரும்பும்போது அந்தச் சம்பவத்தைப் பற்றி எங்களுடைய மூன்று நாளைய மௌனம் கலைந்தது.

"அந்தப் பெண்ணின் உருவம் இன்னும் என் கண்முன் நிற்கிறது" என்றார் ஒரு நண்பர்.

"ஏதோ கிரேக்க சோசு நாடகங்களை எல்லாம் பற்றிக் கதைக்கிறார்களே; கொல்லாத ஒரு குழந்தையைக் கொன்றாய் என்று சொல்லி, எங்கே புதைத்தாய் காட்டு என்று...... அடாடா!” என்றார் இரண்டாவது நண்பர்.

"அந்தப் பெண் சம்பந்தப்படாத ஏதாவது ஒரு குழந்தை உடல் அன்று போலீஸ் சோதனையில் போலீஸார் கையில் அகப்பட்டிருந்தால்....!" என்றேன் நான்.

"அவ்வளவுதான்..." என்றார் என் நண்பர்.

நான் ஒன்றும் சொல்லாமல் இருந்ததைக் கண்டு, "எப்படி? என்றார் ஒரு நிமிஷம் கழித்து.

"என்ன சொல்வது என்றுதான் எனக்குத் தெரியவில்லை" என்றேன் நான்.

 

 
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/சோதனை&oldid=1526873" இலிருந்து மீள்விக்கப்பட்டது