ஆடரங்கு/பாத ஸரம்

 

பாத ஸரம்

ழக்கத்துக்கு மாறாக அன்று ரெயிலில் சிதம்பரத்திலேயே கூட்டமாகத்தான் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நானும் ராஜியையும் பாப்பாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன். இந்த வண்டிக்கு இப்படிக் கூட்டமாக இருக்குமென்று தெரிந்திருந்தால், நான் முந்திய வண்டிலேயே கிளம்பியிருப்பேன்; அல்லது அடுத்த மெயிலுக்கும் போயிருக்கலாம். எனக்கு எவ்விதமான அவசரமும் இல்லை.

ஆனால் கிளம்பியாகிவிட்டது. திரும்புவது சரியல்ல. வண்டியில் ஏறிக்கொண்டோம். அதிகக் கூட்டமில்லாத இரண்டாம் வகுப்பு வண்டியில் ஸீட்டுக்கு நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். யாரும் நகர்ந்து இடம் தருகிற மாதிரியும் முதலில் தோன்றவில்லை.

"இத்தனை கூட்டமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், மூன்றாம் வகுப்பு டிக்கட்டே வாங்கி யிருக்கலாமே!" என்றாள் ராஜி.

நான் அநாவசியமாக அதிகச் செலவு செய்கிறேன் என்பது என் மனைவியின் அபிப்பிராயம். அதற்கு மாற்றாக அவசியம் கிடைத்த போதெல்லாம் செட்டாகப் பேசிவிட வேண்டியது தன் கடமை என்று அவள் எண்ணி இப்படிப் பேசுவது வழக்கமாகிவிட்டது.

"கூட்டமாக இருந்தால்தான் என்ன ? ஒருமணி நேரம் தானே ! மாயவரத்தில் இறங்கி வேறு வண்டி மாற்றவேண்டும்" என்றேன் நான்.

கையிலிருந்த பையை ஆசனத்துக் கடியில் வைத்தேன்.

"இப்போதெல்லாம் கூட்டமில்லாமல், சௌகரியமாகப் போகவேணுமானால் முதல் வகுப்பில்தான் போகவேணும் என்றார் வண்டியில் சௌகரியமாக உட்கார்ந்திருந்த ஒருவர்.

"தாங்க்ஸ்" என்று சொல்லிக்கொண்டே, இந்தப் புத்திமதி கூறிய மனிதர் யார் என்று திரும்பிப் பார்த்தேன்.எங்கேயோ பார்த்த முகமாகத்தான் தோன்றியது. ஆனால் எங்கே என்றுதான் என்னால் நிச்சயிக்க முடியவில்லை.

அவர் ஓர் ஆசனத்தில் கிட்டத்தட்டப் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயசு நாற்பதுக்கும் அதிகமிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய நடை உடை பாவனைகள், அலங்காரங்கள் எல்லாம் பதினாறு வயசு தாண்டிய பையனுடைய மனோபாவத்தைக் காட்டியமாதிரியிருந்தன. அவருடைய சட்டை, கதர்ச் சட்டைதான். ஆனால் அதில் மாட்டியிருந்த பொத்தான்களெல்லாம் வைரப் பொத்தான்கள். வலது கையில் நவரத்தினங்கள் இழைத்த வீரச் சங்கிலி, இடது கையில் தங்கக் கைக்கடியாரம், தங்கச் சங்கிலியில் இணைத்துக் கட்டியிருந்தது; கை விரல்கள் பத்துக்குமாகப் பதினைந்து பதினாறு மோதிரங்கள். அவர் கையை அசைக்காமல் உட்கார்ந்திருக்கும்போதே பச்சையும் நீலமும், சிவப்புமாக டால் வீசின. கழுத்திலே ஏழெட்டுப் பவுனாவது இருக்கும், மைனர் செயின்; முகப்பிலே ஏழெட்டு வைரம். கறுப்பு நெற்றிப் பரப்பிலே பளீரிட்ட வெள்ளைச் சந்தனப் பொட்டு; அந்தப் பொட்டில் வைரம், தங்கம் ஏதாவது பதித்திருந்ததா என்பதை என்னால் நிச்சயிக்க முடியவில்லை கண்கூசிற்று. வாய்ப் பற்களிலும் கோடை இரவு வானத்தில் நட்சத்திரங்கள் போல் தங்கம் அங்கங்கே ஒளி வீசியது.

"வீட்டிலேயும், தன் ஆஸ்தியில் ஒரு பகுதியையாவது விட்டுவிட்டு வந்திருப்பார் இவர்; இல்லையா? என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

எதிர் ஆசனத்திலிருந்த ஒருவர் இதற்குள் எழுந்து எங்களுக்கு இடம் கொடுத்தார். நான் ஏதோ முணுமுணுத்ததற்கு, "பரவாயில்லை; நான் கொள்ளிடம் வரையில்தான் போகிறேன்" என்றார் அவர். தந்த இடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நானும் ராஜியும் பாப்பாவும் உட்கார்ந்துகொண்டோம்.

"நம்ப ஆத்திலே இருக்காப்லே இங்கேயும் சின்ன 'பான்' இருக்கே?" என்றாள் பாப்பா உயரச் சுற்றிக்கொண் டிருந்த மின்சார விசிறியைப் பார்த்து.

"பேசாதிரு!" என்று பாப்பாவை அதட்டினாள் ராஜி.

"ஏண்டி ! இங்கே எல்லாம் பேசப்படாதா?" என்று கேட்டாள் பாப்பா.

இதற்கு ராஜி பதில் சொல்லுமுன் வண்டிக்குள் ஒரு. காலேஜ் மாணவி வந்தாள். அவள் காலேஜ் மாணவியாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சிதம்பரத்தில் இப்படி எல்லாம் அலங்காரமாக வேறு யார்? அவள் வண்டிக்குள் வந்ததே அலங்காரமாகத்தான் இருந்தது. அவளுடைய பெட்டி, படுக்கை முதலியனவும் - உபயோகமாகிற சாமான்களோ அல்லவோ - மிகவும் அலங்காரமாகத்தான் இருந்தன.

அந்தக் காலேஜ் பெண்ணைப்பற்றி விவரமாக வர்ணனை செய்யவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே எண்ணு கிறேன். இந்தக் காலத்தில் எல்லா ஊர்களிலும், எல்லாருக்கும் தான் காலேஜ் மாணவிகளின் உருவம் பழக்கமான காட்சியாகிக்கொண் டிருக்கிறதே.

வண்டியில் வேறு யாரும் ஸ்திரீகள் இல்லாததால் என் மனைவி (பாவம்! அவள் கொஞ்சம் கர்நாடகந்தான்!) அந்தப் பெண் தனக்குப் பக்கத்தில்தான் வந்து உட்காருவாள் என்று எண்ணினாள். ஓரத்தில் அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து கொண்டாள்.

ஆனால் ராஜி ஒதுங்கி நகர்ந்துகொண்டதைக் கவனிக்காதவள் மாதிரியே இருந்துவிட்டாள் அந்தக் காலேஜ் பெண். எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருந்த நவரத்தின கசிதமான பெரிய மனித ரைப் பார்த்து, "எக்ஸ்க்யூஸ்மீ ! எனக்குக் கொஞ்சம் இடம் தரேளா?" என்று கொஞ்சலாகக் கேட்டாள்.

நவரத்தின மனிதர் சற்றுப் பதட்டமாகவே நகர்ந்து இடம் கொடுத்தார். அவருக்கும் அந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையில் நாஸுக்காக ஸீட் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டாள் அந்தப் பெண். மற்றவர்களும் சற்றுப் பரபரப்புடனேயே நகர்ந்துகொண்டார்கள்.

சிதம்பரம் ஸ்டேஷனை விட்டு ரெயில் கிளம்பியது. ராஜி அந்த மாணவியை விட்டுக் கண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ராஜி கர்நாடகமாயிருப்பது பற்றி எனக்குச் சிறிதும் ஆக்ஷேபம் கிடையாது; சற்றுப் பெருமைகூட என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவள் பிறத்தியார் கவனிக்கும்படியாக நடந்துகொண்டு விடுவாள். காலேஜ் பெண்கள் என்கிற ஜாதியையே பார்க்காதவள்போல அவள் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை.

"அவள் கவனத்தைத் திருப்புவதற்காக நான் சொன்னேன்: "அதோ தெரிகிறது பார், அதுதான் சிவபுரிக் கோயில்” என்று.

"அதுவா?" என்றாளே தவிர ராஜி, நான் சுட்டிக்காட்டிய பக்கம் பார்க்கவே இல்லை.

பாப்பா மட்டும் நான் காட்டிய கோபுரத்தைப் பார்த்தாள். பிறகு, "அவாத்து சரோஜா மாதிரி யிருக்கா அப்பா" என்றாள் உரக்க.

"இந்தாடி!" என்று பாப்பாவை அதட்டினாள் ராஜி.

"அம்மாவுக்குப் பெண்தானே " என்றேன் நான். பிறகு, "போக்கிரி!" என்று பாப்பாவை அதட்டினேன்.

ஆனால் என் அதட்டல் முழுக் கோப அதட்டல் அல்ல. அதில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்தது. நாலு வயசு நிரம்பாத இந்தக் குழந்தைதான் எத்தனை விஷயங்களைக் கவனித்து மனசில் வைத்துக்கொண்டிருந்தாள்!

சிதம்பரத்தில் நாங்கள் குடியிருந்த தெருவில் ஒரு மாசத்துக்கு முன், எங்கள் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் கிழக்கே ஒரு வீட்டில் புதுசாக ஒரு குடும்பம் வந்து குடியேறியது. அந்தக் குடும்பத்தின் நடையுடை பாவனைகள், போக்குவரத்து எல்லாம் ஒரு தினுசாக இருப்பதாகத் தெருவார் சில காலம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு நிச்சயமாகிவிட்டது. அந்தக் குடும்பத்துப் பெண்கள் உலகத்தின் மிகவும் பழமையான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் என்பது தெளிவாகிவிட்டது. அந்தக் குடும்பத்தின் இன்றைய, 'பொருளாதார நம்பிக்கை'தான் பாப்பா சொன்ன சரோஜா.

பாவம்! பாப்பாவுக்கு என்ன தெரியும்? இந்த மாதிரி விஷயங்களில் யார் காதிலும் விழும்படியாக எதுவும் பேசக்கூடாது. என்று! ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த சரோஜாவைப் பற்றிப் பாப்பா பேசினாலும் பாதகமில்லைதான். எங்கள் தெரு சரோஜாவைப்பற்றி அந்தக் காலேஜ் மாணவிக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது?

ஆனால் தெரிந்திருந்தால்தான் என்ன? இந்த நாட்களில் அதையெல்லாம் படித்தவர்கள் பொருட்படுத்துவதுதான் கிடையாதே.

ரெயில் வல்லம்படுகையில் நிற்காமல் வேகமாகவே சென்றது. "சின்ன ஸ்டேஷனிலெல்லாம் இந்த வண்டி நிற்காது" என்றேன் நான், என் மனைவியின் கவனத்தைச் சற்றுத் திருப்புவதற்காக.

"அப்படியானால் மாயவரம் சீக்கிரமே வந்துவிடும்" என்றாள் ராஜி. அவள் குரலில் வருத்தம் தொனித்தது.

நவரத்தின ஆசாமி ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணைக் கேட்டார். "அண்ணாமலைச் சர்வகலாசாலையில் படிக்கிறேளா?"

"ஆமாம்; ஆனர்ஸ் கடைசி வருஷம் படிக்கிறேன்” என்றாள் அந்தப் பெண்.

"என்ன ஸப்ஜெக்ட்?”

"சரித்திரம்" என்று சுருக்கமாகவே பதில் அளித்தாள் மாணவி.

காலேஜில் படிக்கிற தேவிகளுக்கும் சினிமாவில் நடிக்கிற லக்ஷ்மிகளுக்கும் கடவுள் ஏன்தான் தனியாக, பிரத்தியேகமாக ஒரு பொய்க்குரல் அளித்திருக்கிறாரோ என்கிற தத்துவ விசாரத்தில் ஈடுபட்டேன் நான். தத்துவ விசாரத்துக்குத்தான் முடிவே கிடையாதே!

“உங்களுக்கெல்லாம் அதுக்குள்ளாகவே விடுமுறை ஆரம்பமாகிவிட்டதா?" என்று கேட்டார் நவரத்தின ஆசாமி.

காலேஜ் பெண் பதில் சொல்லுமுன் ரெயில் கொள்ளீடத் துப் பாலத்தில் ஓடத்தொடங்கியது. அந்தச் சப்தத்தில் பேச்சு சாத்தியமில்லை.

கொள்ளிடம் ஸ்டேஷனில் வண்டி நின்றதும் எங்கள் வண் டியிலிருந்து நாலைந்து பேர் இறங்கிவிட்டார்கள். இப்பொழுது வண்டியில் சற்றுச் சௌகரியமாக இடம் இருந்தது. எல்லோரும் நகர்ந்து உட்கார்ந்துகொண்டோம்.

கொள்ளிடத்தில் கால் மணி நின்றுவிட்டு ரெயில் கிளம்பியதும் அந்தக் காலேஜ் மாணவி அந்த நவரத்தின ஆசாமியின் கேள்விக்குப் பதில் சொன்னாள். "லீவு இன்னும் பதினைந்து நாள் இருக்கு. நான் இரண்டு நாள் லீவு எடுத்துண்டு தஞ்சாவூர் ரையில் போகிறேன்" என்றள்.

இதைச் சொல்விக்கொண்டே அவள் ஸீட்டில் சாய்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.

மிகவும் ரகசியமான குரலில் ராஜி சொன்னாள். "இத்தனை அலங்காரத்துக்கும் மேலே, காலிலே பாத ஸரம் போட்டிண்டிருக்காளே! அழகாத்தான் இருக்கு!” என்றாள்.

ராஜி சொல்லுகிறவரைக்கும் நான் கவனிக்கவில்லை, அந்தப் பெண் காலில் பாத ஸரம் அணிந்திருந்ததை. இப்பொழுது பார்த்தேன். எனக்கு என்னவோ, பாத ஸரம் அணிந்துள்ள கால்களுக்கு அழகு கூடியிருப்பதுமாதிரிதான் தோன்றுகிறது! ராஜி அப்படி எண்ணவில்லை என்று தோன்றியது. அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது" என்றேன்.

"எந்த நாகரிகத்திலே சேர்த்தியாம் அது?" என்று கேட்டாள் ராஜி.

"என்னைக் கேட்டால்......?" என்றேன் நான், தப்பித்துக் கொள்கிற மாதிரியில்.

“நான் கூடப் போட்டிண் டிருக்கேனே காலில், கொலுஸு" என்றாள் பாப்பா. தன் காலை நீட்டிக் காட்டினாள்.

அந்தக் காலேஜ் மாணவி பாப்பாவைத் திரும்பிப் பார்த்தாள்; சிரித்தாள். பாப்பா வெட்கத்துடன் தன் அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"இங்கே வாயேன், என்கிட்ட" என்று கூப்பிட்டாள் அந்தக் காலேஜ் பெண்.

பாப்பா தன் வெட்கத்தைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள், சொன்னாள்: "நான் உன்கிட்ட வர மாட்டேன். எங்காத்து லீலா கிட்டத்தான் போவேன்."

"என் பேரும் லீலாதான், வாயேன்" என்றாள் அந்தக் காலேஜ் மாணவி. தன் பெயர் லீலா என்று நாஸுக்காகத் தெரிவித்துக்கொண்டாள் அவள் என்று எனக்குத் தோன்றியது.

"அவள் பேரும் லீலாதானாம் அம்மா" என்றாள், பாப்பா அவள் அம்மாவிடம்.

"கூப்பிடறாளே போயேன்" என்றாள் ராஜி.

"நான் அப்பா கிட்டத்தான் உட்காந்துப்பேன்" என்று என் மடியில் தாவி உட்கார்ந்துகொண்டாள் பாப்பா.

நவரத்தின ஆசாமி கேட்டார்: "தஞ்சாவூரில்......"

"எங்கப்பாவுக்கு மாத்தலாயிருக்கு. பார்த்துவிட்டு வரப்போறேன்" என்றாள் லீலா.

"உங்கப்பா என்ன வேலையிலிருக்கிறார்?" என்று விடாமல் கேட்டார் நவரத்தின ஆசாமி.

"மெடிகல் சர்விஸிலிருக்கிறார்" என்றாள் லீலா.

இந்த மனிதனின் பேச்சைச் சற்று என் பக்கம் திருப்பினால் அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நான் சொன்னேன். "உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிற மாதிரியிருக்கு! ஆனால் எங்கேன்னுதான் தெரியவில்லை" என்றேன்.

"நீங்க தெரிஞ்சுக்கல்லே என்கிறது எனக்கும் தெரிகிறது" என்றார் அவர்.

அவரைத் தெரிந்துகொள்ளாதது என் பிசகு என்று அவர் சுட்டிக் காட்டியமாதிரி தோன்றியது. என்னைத் தெரிந்து கொண்டவர் மாதிரியும் பேசினார் அவர். நான் இதைப்பற்றி யோசித்துக்கொண் டிருக்கும்போது ரெயில் சீர்காழியில் நின்றது.

சீர்காழி பிளாட்பாரத்தில் ஏதோ அல்லோலகல்லோலமாக இருந்தது. ஒருவருடைய சட்டைப் பையிலிருந்து பர்ஸைக் களவாடிய திருடனைச் சிலர் பிடித்துப் போலீஸாரிடம் ஒப்பித்துவிட்டார்கள் என்று யாரையுமே விசாரிக்காமல் அறிந்து கொண்டோம்.

சீர்காழியைவிட்டு ரெயில் கிளம்பியதும் நான் அவரிடம் சொன்னேன்: "எனக்கு எப்பவுமே மறதி அதிகந்தான். உங்க பேரைச்சொன்னால்....."

"மறதி என்பது சௌகரியமாக இருக்கிறது சில சமயம்" என்று கூறி நகைத்தார் அவர். பிறகு சென்னையைவிட்டுப் போக இருந்த ஒரு தமிழறிஞருக்கு நடந்த ஒரு விருந்தில் என்னைச் சந்தித்திருப்பதாக அவர் ஒரு குறிப்பாகச் சொன்னார். எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. அவரை அறிந்துகொள்ளாதது பிசகுதான்.

"என்னை மன்னிக்கவேணும்" என்றேன். "நாராயண செட்டியாரை நான் உடனே தெரிந்துகொள்ளாதது என்மேல் பிசகுதான்" என்றேன்.

இப்பவாவது ஞாபகம் வந்ததே?" என்றார் நாராயண செட்டியார்

உண்மையிலேயே நாராயண செட்டியார் பெரிய மனிதர்தான். நவகோடியில்லாவிட்டாலும் நல்ல சொத்துள்ளவர். கலையிலும் நல்ல ஈடுபாடுள்ளவர்.. கலையை விட அதிகமாகக் கலைஞர்களிடம் ஈடுபாடுள்ளவர். கலைஞர்களிலும், பெண் கலைஞர்களிடத்து நிரம்ப அன்புள்ளவர் என்பது அவரைப் பற்றிய பிரசித்தமான ரகசியம். சமீபத்தில் கூட அவர் பெயர் பத்திரிகைகளில் நிறைய அடிபட்டது; ஒரு ஜீவனாம்ச வழக்கு விஷயத்தில்.

வைத்தீசுவரன் கோயில் கோபுர தரிசனமாயிற்று, ரெயிலிலிருந்தபடியே. என்னையும் அந்தக் காலேஜ் மாணவியையும் தவிர அந்த வண்டியிலிருந்த மற்றவர்களெல்லோரும் கைவிரல்களால் தங்கள் கன்னங்களைத் தொட்டுக்கொண்டு, வைத்தியநாத சுவாமியிடம் தங்களுக்குள்ள பக்தியை வெளியிட்டுக் கொண்டார்கள்.

ரெயில் வைத்தீசுவரன் கோயிலில் நின்றுவிட்டுக் கிளம்பிய பிறகுதான் நான் கவனித்தேன். அந்தக் காலேஜ் மாணவி நாராயண செட்டியார் பெயரைக் கேள்விப்பட்டதிலிருந்து ஒரு மாறுதல் அடைந்திருந்த மாதிரி தோன்றிற்று எனக்கு. என்ன மாறுதல்? எப்படி மாறுதல்? ஏன் மாறுதல்? எனக்குப் புரியவில்லை.

ஆனால் ஒன்று நிச்சயமாயிற்று எனக்கு. அந்தக் காலேஜ் மாணவி லீலாவும் சமீபத்திய பத்திரிகைகளில் நாராயண செட்டியாரின் பெயரைப் பார்த்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று. சற்று விரஸமான விஷயம். அதையும் கூடியவரையில் விரஸமாகவே பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. பத்திரிகைகள் பேரில் பிசகா என்ன? விரஸமான விஷயங்களை விரஸமான பாஷையில் படிக்க விரும்புகிறவர்கள்தாமே இன்று நம்மிடையே அதிகம் பேர் இருக்கிற மாதிரி இருக்கிறது!

ரெயில் ஆனதாண்டவபுரம் ஸ்டேஷனில் நிற்காமல் தாண்டிக்கொண் டிருக்கும்போது, அந்தப் பெண் லீலா தானாகவே நாராயண செட்டியாரிடம் சொன்னாள்! "எங்கப்பா பெயர் காப்டன் ஸ்ரீநிவாஸன்."

"அப்படியா ?" என்றார் நாராயண செட்டியார். பிறகு, "இந்த ரெயில் தஞ்சாவூருக்கு எத்தனை மணிக்குப் போகிறது". என்று கேட்டார்.

"ஒன்பதரைக்கெல்லாம் போய்விடும்" என்றேன் நான்.

இப்பொழுதெல்லாம் நீங்கள் அதிகம் எழுதுகிறதில்லை. போல் இருக்கே !" என்றார் நாராயண செட்டியார்.

"எங்கே எழுதுகிறது? தவிரவும் பத்திரிகைகளுக்குப் பல. தரப்பட்ட ரஸமான விஷயங்கள்தாம் கிடைத்துக்கொண்டே இருக்கின்றனவே!" என்றேன் நான்.

நான் இப்படிச் சொன்னது அந்தக் காலேஜ் மாணவிக்குப் பிடிக்கவில்லை என்பதை என் ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டேன். அவள் முகத்தைச் சுளித்துக்கொண்டாள்.

"நீங்கள் எது வரையில் போகிறீர்கள்?" என்று நாராயண செட்டியாரைக் கேட்டாள் லீலா.

"திருவாரூர் போகணும்" என்றார் நாராயண செட்டியார்.

"மாயவரத்தில் இறங்கிவிடறேளா?" என்றாள் லீலா. அவள் குரலில் ஏதோ கொஞ்சம் வருத்தம் தொனித்த மாதிரி பட்டது எனக்கு.

"நானும் திருவாரூர் வரையில்தான் போகிறேன்" என்றேன் நான்.

ரெயில் நீடூரில் நிற்காமல் தாண்டியது. "அடுத்தது மாயவரமா?" என்றர் நாராயண செட்டியார்.

"தஞ்சாவூருக்கு எப்பவாவது வந்தால் வீட்டுக்கு வாங்களேன் " என்று நாராயண செட்டியாரை லீலா அழைத்தாள்.

இந்தத் திடீர் அழைப்பு என்னைத் திடுக்கிடச் செய்தது. இதென்ன விபரீதமாக இருக்கிறதே என்று எண்ணினேன் நான். நாராயண செட்டியாரையும் கூடத்தான் திடுக்கிடச்செய்தது இந்த அழைப்பு என்று எனக்குத் தோன்றியது. திரும்பி என்னைப் பார்த்தார். பிறகு, லீலாவிடம், "அதற்கென்ன? தஞ்சாவூர் வந்தால் வருகிறேன் " என்றார்.

பேச்சை மேலே தொடர இஷ்டப்படாதவர் போல நாராயண செட்டியார் எழுந்து ஒரு டவலைக் கையில் எடுத்துக்கொண்டு முகம் கழுவிக்கொள்ளச் சென்றார். மாயவரம் ஜங்ஷனில் ரெயில் நின்ற பிறகுதான் அவர் வெளியே வந்தார்.

மாயவரத்தில் இறங்கித் திருவாரூர் ரெயிலைத் தேடிக்கொண்டு போகும்போது நான் ராஜியைக் கேட்டேன். பாதஸரம் என்ன? அநாகரிகமான நகையா ?"

"அநாகரிகம் என்று சொல்லவில்லை. மற்றதெல்லாம் நாஸுக்கும் நாகரிகமுமாக இருக்கச்சே, பாத ஸரத்தைப்பார்த்ததும் எனக்கு வேடிக்கையாக இருந்தது."

மாடிப்படிகள் ஏறத் தொடங்கும் வரையில் மௌனமாக இருந்துவிட்டு நான் சொன்னேன். "பாத ஈரம் என்பது ஒரு சின்னம். பெண்களைப் பூமியுடன் பிணைக்கும் ஒரு தத்துவம்" என்றேன்.

"அப்படி என்றால்......?"

“ரொம்ப ரொம்பப் படிக்கிற பெண்களுக்கு இறக்கை முளைத்துப் பறந்து போய்விடாமல் இருப்பதற்காக, அவர்களைப் பூமியுடன் பிணைக்கும், சங்கிலி இந்தப் பாத ஸரந்தான்."

"விலங்கு மாதிரிதான் இருக்கு அது" என்றாள் ராஜி.

மாடிப்படிகள் இறங்கும்போது நான் ராஜியைக் கேட்டேன். 'கடைசியாக அந்தப் பெண் நாராயண செட்டியாரைத் தஞ்சாவூருக்கு அழைத்தாளே......"

"அழைத்தாளா? நான் கவனிக்கவில்லையே!" என்றாள் ராஜி.

திருவாரூர் வண்டியில் ஏறிக்கொண்டோம். "அந்தச் செட்டியார்தான் எத்தனை வைரம் போட்டிண் டிருக்கார்? அடேயப்பா! ஆளை அழிச்சால் இரண்டு மூணு லக்ஷம் தேறும் போல் இருக்கு" என்றாள்.

நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். நவரத்தின ஆசாமி நாராயணசாமி செட்டியார், அவர் உடலின் பல பாகங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் டால் வீச மாடிப்படிகள் ஏறி வந்துகொண் டிருந்தார்.

"அதென்னவோ, ராஜி, நம் பாப்பாவைப் படிக்கவைக்கப் படாதுன்னுதான் எனக்குத் தோணறது?" என்றேன் நான்.

 

 
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/பாத_ஸரம்&oldid=1526867" இலிருந்து மீள்விக்கப்பட்டது