ஆடும் தீபம்/அல்லியை அறிந்தவன் நான்


அல்லியை
அறிந்தவன் நான்

முன்னம் ஒரு நாள், ஐவர் சந்திப்பின் மூலம் சிறு தொடரொன்றை ஆரம்பித்து வைத்தேன். பெயர் ஆலவாய் அழகி. இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள், மனம் திறந்து பாராட்டினார்கள்.அவர்களது நல்ல மனம் தந்த துணிச்சலின் துணையுடன்தான், ‘ஆடும் தீபம்’ ஒளி காட்டத் தொடங்கியது. ஏறத்தாழ ஓராண்டுக் காலம், அல்லியின் அன்புடன், அழகுடன், துணிவுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாய்ப்புக்கு அடி கோலியவர்கள், எழுத்துலகில் தேர்ந்த அனுபவம் பெற்றவர்கள்; அனைவருக்கும், அல்லியின் அன்பும், நன்றியும், வணக்கமும் உண்டு.

புதிரின் உட்பொருள்தான் வாழ்க்கையின் மகிமை போலும்! இந்நிலைக்கும், நினைவுக்கும் நேரிடைச் சாட்சியமாக அமைகிறாள் அல்லி. அழகுக்கும், தீபத்துக்கும் இறுகிய பிணைப்பு உண்டு. பாசமும், பந்தமும் இவ்விணைப்பின் வழியேதான் உருவாகும் வல்லமை பெறும். அல்லியைப் பொறுத்த வரை, அவளது அழகு தீபம் ஆனது; கற்பு நெறியும் தீபமாக மாறியது; தீபம் அவளை முழுமையாகக் காத்தது; அவள் தீபத்தைப் பாதுகாத்தாள். அத்தகு சூழலின் விட்ட குறை—தொட்ட குறையின் காரணமாகத்தான், அறையிலும், அம்பலத்திலும் ஆடினாள்; கனவுகளுக்கு மத்தியில் வாழ்ந்தாள்; வளர்ந்தாள்;
ஆடாத தீபமாக—ஆனால், ஆடும் தீபத்தின் உள்ளப் போக்குடன் அல்லி நின்றாள். எழும்பூர்ச் சந்திப்பு நிலையத்தில் கண்ட அவளை, மீண்டும் கனவுகளின் மடியில் தவழ்ந்து, விளையாடி, அமைதி பெறச் செய்திருக்கின்றேன். அவளது நெஞ்சுரமும், நேர்மைத் திறமும், அவளுடைய கனவுகளை வாழ வைக்கும் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான். ஏனென்றால், நான் அல்லியின் இதயத்தை, நினைவை, குறிக்கோளை, கனவைப் பூரணமாகப் படித்து அறிந்தவன் அல்லவா?

பூவை எஸ். ஆறுமுகம்