ஆடும் தீபம்/வாழ்க கனவு!… நனவு வாழ்க!

556950ஆடும் தீபம் — வாழ்க கனவு!… நனவு வாழ்க!பூவை. எஸ். ஆறுமுகம்

பொறி பதினொன்று:

வாழ்க கனவு!…
நனவு வாழ்க!


உயிர்த் திரட்சியின் அணுக்களில் ஏற்பட்ட குலை நடுக்கம் இன்னமும் அடங்கவில்லை. உந்திக் கமலம் வெளியேற்றிய நீள் மூச்சு, விழி இணையில் சுடுநீரானது. நெஞ்சம் விம்மியது; மனச் சான்று கண்ணீர் வடித்தது. நினைவுகள் ஆற்றாமையினால், தத்தளித்தன. கனவுகள், மேற்படி நினைவுகளின் காலடியில் தஞ்சம் அடைந்து, கதறிக் கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் அழவில்லை! ஆம்! அல்லி அழவே இல்லை!

அவளுக்குப் பதிலாகத்தான், செந்தாமரை அழுதாளா? அவள் ஏன் அழுதாள்? அவள் எதற்காக அழ வேண்டும்? கண்ணீருக்கு நட்பு உண்டுதானோ? கண்ணீரில், பாசம் உள்ளடங்கிக் கிடப்பதென்பதும் மெய்தானோ?

“செந்தாமரை!” என்று அழைத்தாள் அல்லி. தோழி, தோழியைத் தொட்டுத் தட்டிக் கூப்பிட்டாள். இமைகளின் கதவுகளை மூடாமல், மூட மனமின்றி, மூட வழியின்றி நின்றாள் செந்தாமரை. அவள் பார்வையின் உணர்ச்சிக் குறிப்புக்கள் அத்தனையும் அல்லியையே படையெடுத்துக் கொண்டிருந்தன; எடை போட்டபடி இருந்தன.

“அல்லி அக்கா!”

செந்தாமரை அழைத்தாள். உதடுகளின் ஒட்டுறவில், பாசம் ஒட்டி உறவாடியது. உயிருக்குத் தோழியாக, அந்நாளில் மாங்குடி மண்ணிலே நிலவி வந்த செந்தாமரை, இப்போது அல்லிக்குச் சகோதரியானாள்; உடன் பிறவாத் தங்கையானாள்.

அல்லியின் தளிர்க் கரங்கள் மெல்ல உயர்ந்து, செந்தாமரையின் கண்களை நாடின; அதே சமயத்தில், செந்தாமரையின் விரல்களும், அல்லியின் விழிக் கரையில் ஊர்ந்தன. சொல்லி வைத்தாற் போன்று, இருவர் விரல்களிலும் துயர் நீர் சுட்டது; அந்த வெம்மையில், தண்மை இருந்தது. பாசம் சுடுவது இல்லையல்லவா?

எழும்பூர் ரெயில் சந்திப்புக் கூடம்.

பதினாறு மடிப்புக்களாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பத்து ரூபாய்த் தாளை அல்லி பிரித்த போது, அவளுக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. புதுக் கருக்குக் குலையாத நூறு ரூபாய்த் தாள்களுடன் சொந்தங் கொண்டாடிய நாட்கள் அனைத்தும், அவளுக்குச் சொப்பனமாகவே தெரிந்தன. “பணம், லட்சியம், கனவு எல்லாமே வெறுங்கானல்தானா? இன்பத்தை ஆரம்பப் பள்ளியாக்கிக் கொண்டு உருவாகும் இவை அவ்வளவுக்கும், கடைசி முடிவு நிலை துன்பமும், கண்ணீருந்தானா?” என்று அவள் மனம் மறுகினாள். சஞ்சலம் அவளது மேனியை மருவிற்று. பிரயாணச் சீட்டுப் பெறும் வழிக்குத் தடம் பிரிந்தாள். தடம் மாறிய தருணம், சுவரொட்டி ஒன்று பளிச்சிட்டுத் தெரிந்தது. நோக்கினாள்; கூத்த மதி விழித்தது; அம்பு விழிகள் மருண்டன. வண்ணப் படத்தின் நிலை, பாவையை மருளச் செய்தது; சீதையைப் பழிகாரியாக்கிக் காட்டுக்கு அனுப்பி விட்ட கட்டத்தைச் சித்திரம் வழங்கியது. அல்லி நடித்த திரைப்படம் ஆயிற்றே? பழி சுமந்து பாச,பந்தம் பறி போய்ப் பிரியும் கட்டத்தில், சீதையாக உருக் கொண்டு நடித்த நாளும், பொழுதும் சிக்கல் பிடித்துக் கிடந்த நினைவுக் கயிற்றினின்றும், சிக்கறுத்துக் கொண்டன. உம்மைப் பழவினையின் எண்ணங்கள் தூசி தட்டிக் கொண்டன. பசுமை படிந்த நினைவுகள், கனவுகளாகத் தோன்றின.

அறந்தாங்கியில் கோட்டையில், சரஸ்வதி தியேட்டரில். ‘பேசும் படம்’ ஓடிக் கொண்டிருந்தது. ‘அடி ஆத்தே! படம் பேசுதே?… எம்பிட்டுக் கூத்தாயிருக்கு?’ என்று அதிசயப்படத் தொடங்கினாள் அல்லி. பிஞ்சுப் பிராயத்து நிகழ்ச்சி இது. அவளையும் அறியாமல், அவ்வப்போது திரைப்படம் அவளுள் ஓர் இடம் பெற்றிருந்ததென்பதை, அவளுடைய இதயத்தின் நுண் அறிவுப் புலன் மட்டுமே அறிந்திருந்தது. அந்த ஆசையின் வடிவமாகவோ, அல்லது எண்ணத்தின் எதிரொலியாகவோ, அவள் பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நடித்ததைப் பார்க்கையில், அவளுக்குக் கண்ணீர் வந்து விட்டது. அவள் முன், எதிர்காலம் ஒளிப் பிழம்பாகத் தென்பட்டது. அது கடந்த நிகழ்ச்சி, பழங்கணக்கு.

ரெயிலடியின் சுறுசுறுப்புக்கு நேரம், காலம் உண்டு. மாயவரம் வழியாக, அறந்தாங்கி செல்லும் ‘பாஸஞ்சர்’ வண்டியின் புறப்பாடு பற்றிய அறிவிப்புச் சொல்லப் பட்டது. பக்கவாட்டில் பார்வையை விலக்கினாள். கைக்கடிகாரம் திகழ்ந்த இடம் விழித் திவலையை ஏந்தியது. எதிர்காலத்தில் இருள் சூழ்ந்தது. சுவரொட்டி விளம்பரம், அவளுக்குக் கனவாகத் தோற்றம் தந்தது. “தாயே!” கண் காணாதவனையும், கண் கண்டவனையும் எண்ணமிடலானாள். புண்ணான நெஞ்சம் புலம்பியது. அழ விரும்பாத அவள், இப்பொழுது அழுதாள்.

“டோய், அவளைப் பார்டா, சினிமா இஸ்ட்டார்டா… டோய்!”

யாரோ ஒருவன் அல்லியை இனம் கண்டு கொண்டான்…! அவள் தன்னைத் தானே குனிந்து பார்த்த சமயத்தில், அவளுக்குத் தன்னை இனம் காண முடியவில்லை. மாங்குடியிலிருந்து பட்டணத்துக்கு வந்த பொழுதில், அணிந்திருந்த அதே கொட்டடி ரவிக்கையையும், கூறை நாட்டுப் புடவையையுமே இப்போதும் அவள் அணிந்திருந்தாள். இடைவேளையில் சுருண்டு கொண்ட—சுருட்டப்பட்ட கேசத்தின் இழைகள் சிதறியும், சிதறாமலும் இருந்தன. துறவு நிலையில் அவள் இருந்தாள். கடைசியாக அவள் நடித்து முடித்த துறவுக் கோலம், கருத்தில் நிழலாடியது. “எல்லாவற்றையுமே நான் துறந்து நிற்கும் ஓர் அபலைப் பெண். பிறந்த மண்ணைப் பிரிந்தேன்; பெற்ற தாயும், தந்தையும் என்னை விட்டுப் பிரிந்தார்கள்; நட்புக்கு ஒருவராய்த் திகழ்ந்த உயிர்த் தோழியைத் துறக்கும் கட்டம் வந்தது: குறுக்கிட்ட காதலைத் துறந்தேன்; வழி மறித்த பாசத்தையும் இழந்தேன். நான் இப்போது ஓர் அனாதை; போக்கிடம் ஏதும் புலப்பட மறுக்கும் அபாக்யவதி; பெண்ணாய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமென்று பெருமை கண்ட தமிழ் மண்தான், இப்போது என்னையும், உன்னிடம் அடைக்கலம் தேட வழி காட்டியிருக்கின்றது தாயே…!” பொங்குமாங் கடலின் பாதத்தில் நின்று, பொங்கும் உள்ளத்துடன் குமுறிக் கதறிக் கண்ணீர் கக்கிய திரைப்படக் காட்சி, நினைவில் சொடுக்கப்பட்டது. காலடியில் கிடந்த கிழிசல் கோணிப்பை, அவளுக்குச் சுய நினைவை அளித்தது; வழிப் பயணத்துக்குச் சீட்டு வாங்க நினைத்தவள் திரும்பினாள்: வேகமாக நடந்தாள்; பஸ்கள் குறுக்கிட்டன; அவள் அவற்றை ஒரு பொருட்டெனக் கருதினால்தானே? விரக்திக்குக் கண் இல்லை!

“அக்கா!…அல்லி அக்கா!”

அல்லி பார்வையை நிலை நிறுத்திய போது, பாய்ந்து வந்த ஒளி வெள்ளத்தில், பரந்து கிடந்த ரத்தத் துளிகளுக்கு ஊடாகக் கிடந்த அவ்வுருவினைக் கண்டாள்.

“தாமரை!… தங்கச்சி தாமரை!” என்று கூவினாள்.

“என் செந்தாமரைக்கு என்ன ஆச்சு அல்லி..?” என்று வினவியவாறு பறந்து வந்தான் கண்ணப்பன்—செந்தாமரையின் அத்தான்.

நாடிக் குழலை நாடிப் பாய்ந்தது அந்தப் பத்து ரூபாய் நோட்டு!

அப்போதுதான், உடலில் உயிர் ஒட்டிக் கொண்டது போல, ஓர் உணர்வு ராஜநாயகத்திற்கு ஏற்பட்டது; கை நழுவிப் போன பொருள் கை சேர்ந்தது மாதிரி, அவருக்கு மகிழ்ச்சி பிறந்தது. விலகிப் பிரிந்த பாசம் இளகிப் பரிந்து வந்தது. ‘தெய்வமே, தாமரையின் உதவியால் என்னை மீண்டும் அடைந்த என் மகள் அல்லியை, என்னிடமே நிரந்தரமாக இருக்கச் செய்து விடு, அப்பனே!’ சிரிப்பொலியும், கையோசையும் இணைந்து வந்தன.

நடையில் நின்றவாறு, உள்ளே பார்த்தார் நடன வாத்தியார், ஜன்னல் கம்பிகளினூடே அவரது கண்ணோட்டம் பிளந்து பாய்ந்தது.

“தாமரை, நான் இனி இங்கே இருக்க விரும்பவில்லை; ஊருக்கும் போக ஒப்பவில்லை. உயிர் மாண்ட சாத்தையன், சிறைப்பட்ட இன்னாசி ஆகியவர்களின் உறவுக்காரர்கள் ஏதாவது தொல்லை கொடுப்பார்கள்: சஞ்சலத்தைச் சுமந்து கொண்டு வந்த நான், திரும்பவும் சஞ்சலத்துடனேயே மாங்குடியை மிதிக்க எனக்கு மனம் இடம் தர மாட்டேன் என்கிறது.”

“அப்பாலே, உன்னோட முடிவு என்ன?…”

அல்லிக்கு என்ன பதில் சொல்வது, எப்படிப் பதில் கூறுவதென்று புலனாகவில்லை. அருகிருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகையைப் புரட்டினாள் அவள். முதற் பக்கத்தில் பேனாவால் கிறுக்கப்பட்டிருந்த ‘அருணாசலம்’ என்னும் பெயர், அவள் பார்வையில் பட்டது. ஆறு எழுத்துக்கள் அவள் நெஞ்சத் துடிப்பினைத் தொட்டன; மனச்சாட்சி சுட்டது. இதயத்துள் எரிமலை வெடித்தது.

“அல்லி அக்கா”

செந்தாமரையின் மனம் அடித்துக் கொண்டது. அல்லி நல்ல முடிவைத் தெரிவிக்க வேண்டுமே என்று மாங்குடிக் காளியம்மாளைத் தொழுதாள். அன்றொரு நாளில் அல்லியுடன் தொடர்ந்த ஓர் ஆடவனுடன், சிங்கப்பூர் சாத்தையா ஏதோ பேசிக் கொண்டு காரில் சென்றதைக் கண்ட செந்தாமரை, ‘பாம்பு கொத்தப் படம் விரித்து விட்டது. விஷம் உடலில் பரவு முன், போய்த் தடுக்க வேண்டும். மாசற்ற அன்புக்கு இதுவே கைமாறு’ என்பதாகத் தீர்மானம் செய்தவளல்லவா இந்தத் தாமரை?

தோழி அல்லியிடம், அவள் முடிவைப் பற்றிக் கேட்டாள். அவள் ஆண்டவனிடம் தன் முடிவின் அந்தரங்கத்தை விசாரித்தாள். அந்தப் பெயரின் ஆறு எழுத்துக்களும் விசுவரூபம் எடுத்தன. தனக்கென இடமின்றி தனக்குரிய இடம் எதுவென்று புரியாமல், தன்னந் தனியளாகப் புறப்பட்டதை மறப்பாளா? ‘நீ மொந்தைக் கள்ளு’ என்று பெற்றவள் முடிவு கட்டிச் சொன்ன மொழியை, நினைக்காமல் இருப்பாளா? இரட்டைப் புலிகளுக்கிடையே அகப்பட்ட புள்ளி மான் தப்பி, மோனத் தவத்திடையே, மனித உணர்ச்சியை இழந்து விடாத ஈர இதயத்தின் காரணமாகப் போக்கிரி அருணாசலத்துக்குச் செய்த உதவியைத்தான் அவள் எண்ணாமல் இருக்க முடியுமா?

பட்டணம் வந்த நாட்டுப் புறாவைக் கொத்தத் துடித்த வல்லூறு, பாசத்தின் உருவமாக மாறி ‘தந்தை’ ராஜநாயகமாகத் திகழ்ந்த அந்தப் புனித வேளையை, அவள் எவ்விதம் நினைவிலிருந்து துறக்கக் கூடும்?

‘அருணாசலம்!’

நெருப்புத் துண்டங்களாக ஒளி கக்கிப் பயங் காட்டிய அந்த ஜோடிக் கண்கள், அவள் மனக் கண்ணில் தெரிந்தன. முதற் சந்திப்பு, அந்தச் சந்திப்பில் விளைந்த முதற் காதல், போக்கிரியைத் திருத்திய முதற் பணி, அருணாசலத்தின் ஒத்தாசையினால், திரைப்படக் காட்சியில் ஆடிய முதல் நடனம், ‘அல்லிக்கும் எனக்கும் கல்யாணம் வேண்டாம்!’ என்று கூறும் அளவுக்குக் காரணமான சுகுணா என்பவளின் முதல் அனாமதேயக் கடிதம், சாத்தையா—இன்னாசி ஆகிய இருவரின் பயங்கரப் பேயாட்டத்தில் பங்கு கொண்ட அருணாசலத்திடமிருந்து உண்டான முதற் பிளவு, அதன் விளைவாக இறுதியில் ஏற்பட்ட முதற் பலி ஆகிய இத்தனை காட்சிகளும், அவள் முன்னே ஏடு புரண்டன; நினைவுகள் நாட்குறிப்புச் செய்திகளாகத் தோன்றின,

‘என் அழகால் ஆட்டி வைத்து, என் மதியால் திருத்தினதாகப் பெருமைப்பட்ட ‘அவர்’ இன்று எங்கே?…

நான் விழித்துக் கொண்டு, கடைசியில் அவரும் விழிப்புப் பெறும் நிலை அண்டினதும், சட்டமும் விழித்துக் கொண்டு விட்டதே?…’

பூதாகாரமாகத் தோற்றம் அளித்தான் அருணாசலம். பலியான சாத்தையாவுக்காக, அல்லி ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாள்.அவளின் ‘மொந்தைக் கள்’ எழிலில் கிறங்கிப் போதை கொண்டு, தான் ஆடியதுடன், அவளையும் ஆட்டிப் படைத்த இன்னாசிக்கு கிடைத்த முடிவுதான் வாழ்வின் முற்றுப் புள்ளியா?

‘மணிமேகலைத் துறவு’ என்னும் படத்தின் காட்சியொன்று நினைவைத் தட்டிக் கொடுத்தது. அம்முடிவைத் தொட்டுத் தேட ஓடிய போது, குறுக்கிட்டு மறித்த திரும்பு முனை அவளைக் கண்டு சிரித்தது.

“நான் போகப் போகிறேன்!” என்று வீறு கொண்டு முழங்கினாள் அல்லி.

“எங்கே?” என்று வினவினாள் செந்தாமரை. அல்லி மௌனச் சிலையானாள். “நீ இங்கேயிருந்து போய் விட்டால், அப்புறம் நானும், என் மூத்த மகள் ராஜவல்லியைத் தேடிக் கொண்டுதான் போக வேண்டும்; இது ஆண்டவன் மீது ஆணை!” என்று புலம்பினார் ராஜநாயகம். அவர் பச்சைப் பாலகனானார்.

அல்லிக்குச் சொந்தமான பணம், நகை, நட்டுக்கள், துணி மணிகளுக்கு மத்தியில், அல்லி வாய் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“அப்பா! அப்பா”

தழலிடைப்பட்டுச் சோதனையில் வெற்றி பெற்றுச் சுடர் தெறித்த சொக்கப் பச்சைத் தங்கத்தின் இதயமெனும் எழில் தீபம் ஆடிக் கொண்டிருந்தது. பூஜை அறையின் தூண்டாமணி விளக்கு ஆடாமல் அசையாமல் நின்று, நிதானமாகச் சுடர் விட்டுக் கொண்டேயிருந்தது.

தாமரையின் வதுவை மடல் வந்தது. நினைவுகள் மணம் கமழ்ந்தன. கனவுகள் அந்நினைவுகளுக்கு உயிர்ப்புத் தந்தன.

அல்லி சிரித்தாள்; அவளின் சிரிப்பை வான்மதி எடுத்துச். சொன்னது. அவள் இதயத்துக்கு உதாரணம் காட்டியது. ஆடாத அத்தீபம். மாங்குடிப் பெண் அல்லியின் நெஞ்சுத் தளத்தில் எழிலரசி அல்லி ஆடினாள்; மனம் அதிர ஆடினாள். பட்ட துன்பங்களை எட்டி மிதித்து, வெற்றி கொண்ட எக்காளத்தில் ஆடினாள்; கானலாகி, விட்ட கனவுகளை மறந்து ஆடினாள்; முக்காலத்தையும், மோனத் தவத்துள் அடைத்துக் கொண்ட துறவு நிலையில் நின்று, ஆடினாள்; ‘அப்பா!’ என்ற பாசமிகு அழைப்பு ஒன்றுடன் ஆடினாள்; தெய்வத்தின் திருமுருகு தீபமும் ஆடியது.

“அத்தான்!”

அவள்தான் அழைத்தாளா? யாரை அழைத்தாள்?

அல்லி தலை நிமிர்ந்தாள்; பார்த்தாள்; அதிர்ந்தாள்;

அருணாசலம் நின்றான், விழிப் புனல் வழிந்தோடிக் கொண்டிருந்தது. கனவா இது?

தீயோன் இன்னாசியின் கெட்ட சகவாசத்தினால், அவன் அடைய வேண்டிய தண்டனையில், அருணாசலமும் பங்கு பெற்றான். சட்டம் அவன் கைகளுக்கு விலங்கிட்டது. ராஜநாயகம் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்ததை, அல்லி அறிந்திருந்தாளோ, என்னவோ?

“அல்லி, உன்னை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று இருந்தது. அதிகாரியின் உத்தரவைப் பெற்று வந்திருக்கிறேன். உன் கண்ணீருக்கு மத்தியில், பிரிய நேர்ந்த நான், இப்பொழுது உன் சிரிப்புக்கு ஊடாகப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை நான் உணர்ந்து கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டேன், அல்லி. இனி நான் மனிதனாக வாழ்வேன்!”

“நீங்கள் இப்போது ஏன் வந்தீர்கள்?”

“உன்னிடம் ஒரு வரம் பெற்றுப் போகத்தான் நான் வந்தேன். அல்லி…”

ஆடும் தீபத்தின் ஒளி அருணாசலத்தின் கூப்பிய கைகளிலும், இதழ் மூடிய கண்களிலும், வழிந்தோடிய நீரிலும் நிழலாடியது. அவன் நயனங்களைத் திறந்தான்.

அல்லியின் கையிலிருந்த அம்பிகையின் பூமாலை, அருணாசலத்திடம் ஏகியது.

“அத்தான், நான் இனி மேல் உங்கள் சொத்து!”

அருணாசலம் மணமாலையை, அல்லிக்குச் சூட்டினான். வெறுமை சிரித்தது…!

தெறித்து ஓடியிருந்த கண்ணீரில், பாதம் பதித்தது சட்டம்தானா?

“தாயே, நான் இனி ஆடும் தீபம் அல்ல! என் முதற் கனவை வாழ வைத்த உன் கருணைக்கு ஈடேது அம்மா…?”

சுபம்

செல்வியின்

புதிய நூல்கள்
பாரதியார் விருந்து
தங்கத் தம்பிகள்
பிறந்த நாள் சோதிடப் பலன்கள்
சிவனடியான்
கவியரங்கக் கவிதைகள்

மறுபதிப்பு

நூல்கள்
கீதாஞ்சலி
தாலாட்டு

செல்வி பதிப்பகம்

புத்தகம் வெளியிடுவோர்—விற்பனையாளர்
காரைக்குடி-623 001.