ஆடும் தீபம்/கண் கண்டதெல்லாம் மாயைதானோ?

பொறி நான்கு:

கண் கண்டதெல்லாம்
மாயைதானோ?


காரின் கதவைப் பிடித்துக் கொண்டு, தயக்கம் காட்டிய அல்லியைச் சற்று வியப்புடன் ஏறிட்டு நோக்கிய அருணாசலம் “வா, அல்லி. ஏன் அங்கேயே நின்று விட்டாய்? சும்மா வா.” என்றான்.

தானாகப் போகா விட்டால், கையைப் பிடித்து அழைத்துப் போய் விடுவான் போல இருந்தது. பேச்சில் காட்டிய துடிப்பும், வேகமும் அப்படியிருந்தன.

மெல்லடி பெயர்த்து ஒவ்வொரு படியாக ஏறிய அல்லி, அருணாசலத்தைப் பின் தொடர்ந்து, பிரம்மாண்டமான அந்தப் பங்களாவினுள் நுழைந்தாள். வழவழவென்ற ‘மொஸெய்க்’ தள வரிசைகளில், கால்கள் சிரமமில்லாமல் நீந்துவது போலிருந்தன. -

விஸ்தாரமான ஹால் ஒன்றினுள் நுழைந்த பரமானந்தம், உடல் புதையும் வண்ணம் அமுங்கும் சோபா ஒன்றில், ‘தொப்’பென உட்கார்ந்தபடி “உட்காரம்மா அல்லி, நீயும் உட்கார் அருணாசலம்” என்றார்.

‘ஏர் கண்டிஷன்’ செய்யப்பட்டிருந்த அவ்வறையின் சிலிர்ப்புணர்வினாலோ, அல்லது உள்ளத்துறையும் அச்சத்தின் உந்தலினாலோ, அல்லியின் உடலில் லேசாக ஒரு நடுக்கம்!… கால் பெரு விரலில் பதித்த பார்வையை மீட்க அவள் ஏனோ விரும்பவில்லை. மௌனச் சிலையாய், மொழியற்ற வடிவமாய் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர், “ஏன் அம்மா! இப்படி ஒரேயடியாய் வெட்கப்படுகிறாயே?” என்று கூறி, அருணாசலத்தின் பக்கம் முகத்தைத் திருப்பி “என்னப்பா அருணாசலம் … …?” என்று முடித்தார்.

அவர் பார்வையின் கருத்தை உள் வாங்கிக் கொண்ட அருணாசலம் “புதிது பாருங்கள், கூச்சமாயிருப்பது சகஜம்தானே? … … அதெல்லாம் கவலைப்படாதீங்க … …காலில் சலங்கையைக கட்டிக் கொண்டால் போதும். அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க … …என்ன அல்லி அப்படித்தானே …?” என்றான்.

அல்லி மேலும் தலையைக் குனிந்து கொண்டாள். “ஆல்ரைட்! ஆல்ரைட்! பார்க்கலாம்,” என்றார் பட முதலாளி பரமானந்தம்.

அல்லியின் இதழ்கள் மென்மையாகப் பிரிந்து, இள நகையைச் சிந்தின. ஓரக் கண்ணால் அவளது முக பாவத்தை கவனித்த, பரமானந்தம் திருப்தியடைந்தார்.

“சரி, எதற்கும் நாளை காலை ஸ்டுடியோவிற்கு வாருங்கள். நடன டைரக்டர் நடராஜன் ஆட்டத்தைக் கவனிக்கட்டும்; திருப்திகரமாக இருந்தால், அடுத்த வாரம் ரிலீசாகப் போகும் ‘குழந்தையே குடும்பத்தின் விளக்கு’ படத்திலேயே, ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்!”

அன்று அல்லி கலைக்கூடத்திற்குத் திரும்புகையில், இரவு மணி எட்டடித்து விட்டது. அடையாற்றிலிருந்து கிளம்பிய அருணாசலம், அல்லியையும் அழைத்துக் கொண்டு, சென்னையின் வழுவழுப்பான தார்ப் பாதைகளில் உல்லாசமாக நடந்தான்.

மறி திரைகடலின் வெண் மணலில், கால்கள் தோய நடந்த இருவரும், நீரும் நிலவும் கூடும் எல்லை கண்டனர். வெண் நுரை மலர்கள் பாதங்களை வருடிச் செல்லும் பொழுது, அந்த ஸ்பரிசம் நெஞ்சத் துயரை இதமாக நீக்குவது போல இருந்தது.

அல்லி நினைத்தாள்:
“…சுண்டக் காய்ச்சிய பாலில் கொம்புத் தேன் கலந்தாற் போன்ற சுவையோடு பழகிய தோழி செந்தாமரை.

மலர்ந்து குலுங்கும் மலர்த் தோட்டத்துக்கு அன்புக் காவலாக நின்ற வெண்டியப்ப அண்ணன்.

கருத்தைக் கன்னியரிடத்தில் சிதற விட்டுத் தன்னைத் தானே மாசுபடுத்திக் கொள்ளும் சுய துரோகி இன்னாசி.

திருவின் நோக்கினால் பண்பு பெறாமல், எவரும் தள்னிகரில்லையென்று இறுமாந்து திரியும் சிங்கப்பூர் சாத்தையா.

நட்பு முறிய, அன்பு ஒடிய, நள்ளிரவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு இரு வேங்கைகளிடையே சிக்கி, மீண்டு வந்த தான், முற்றிலும் போக்கிரியாய்,-பொய்யனாய்த் தோன்றிய அருணாசலத்தின் சொல்லுக்கு உட்பட்டு நடப்பதின் மர்மமென்ன?

இன்னாசியை நினைத்தால் பீதி, சாத்தையாவை எண்ணிணாலோ பயம்! ஏறக்குறைய அவர்களை ஒத்தவன்தான் இவனும், சற்று நாகரீகமானவன் என்று வேண்டுமானால் கூறலாமேயொழிய, மற்றபடி அவர்களுக்கும், இவனுக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா? … அரும்பு மீசையும், சுருண்ட கேசமும் வெளிப் பார்வைக்கு அழகுதான். கண்களின் போக்கிரித்தனத்தைக் கூட, அவை கவர்ச்சிகரமாகவன்றோ மாற்றி விட்டன!

அந்த அழகில் நான் மயங்கிவிட்டேனா? இல்லை… … இல்லை. வெளியழகில் மட்டும் நான் மயங்கவில்லை; அருணாசலத்துக்கும், இவர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

மற்றவர்கள் ஊருக்கு உயர்ந்தவர்களாக வேஷம், உள்ளுக்குள் உலுத்தர்களாக— உளுத்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

“என்னிடம் பணமிருந்தால், நான் டிக்கெட்டே எடுத்திருப்பேனே?” என்றான் அருணாசலம், அன்றைய நிலையை கூசாமல் தெள்ளத் தெளியக் காட்டிக் கொண்டான். உண்மையில் வாழ்க்கை வசதியுள்ளவர் என்பது இப்பொழுதுதானே தெரிந்தது?...

பொய்யிலும் ஓர் உண்மை!-அதுதானே அவளை முதன் முதலில் பணப்பையை அவிழ்க்கச் செய்தது? சுருக்குப் பையின் முடிச்சை அருணாசலத்துக்காக அவிழ்க்கையில், கூடவே அவளுடைய இதயமும் அவளையறியாமலேயே திறந்து கொண்டு விட்டதோ? இல்லாவிட்டால், இரு போக்கிரிகளுக்கும், அபவாதப் புயலுக்கும் தப்பி வந்தவள், தனக்கு முற்றிலும் புதியதான சென்னையில், ஓர் ஆடவனை அதுவும் வழியில் சந்தித்தவனை, எப்படி நம்ப முடியும்? நம்புவதோடு மட்டுமா? உள்ளம் ஏன் இப்படிக் கரைந்து அவனுக்காக உருகுகிறது…?

காலின் அடியில் மண் கரைந்தது. அதே வேகத்தில், முழங்காலுக்கு மேல் உவர் நீர் ஏறியது.

“என்ன அல்லி, நெனப்பு எல்லாம் எங்கே கிடக்கு?”

அருணாசலம் இரு கரங்களினாலும், அவளைப் பிடித்து இழுத்தான் அலைக்குப் போட்டியாக.

உடலைச் சிலுப்பிக் கொண்டாள் அல்லி. அருணாசலத்தை நோக்கி அவள் வீசிய புன்னகை, தொடுவானில் அப்பொழுதுதான் கிளம்ப ஆரம்பித்திருந்த தண்கதிரைப் போல் குளிர்ந்திருந்தது. “நேரமாகி விட்டது; போகலாமா?” என்றாள் அல்லி.

“ஓ! போகலாம், அல்லி.”

அருணாசலம் புறப்பட்டு விட்டான். காரில் செல்கையில் “ஏன் அல்லி, ஒரு மாதிரியாய் இருக்கிறே? உனக்கு நடிப்பதில் திருப்திதானே” என்று கேட்ட அவனுக்கு, ஒரு சிறு தலையசைப்பின் மூலம் விடையிறுத்த அல்லியின் உள்ளம், அவளை மீறியதொரு நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. உணர்ச்சியின் எல்லையை அடையுங்கால், அங்கு சொல்லுக்கு இடமேது? நெருங்கி வருவது இன்பமோ, துன்பமோ, எதுவென்றே உணராத நிலையில். மௌனமே அவளுக்குத் துணையாக நின்றது.

கலைக்கூடத்தின் வாயிலில் கார் நின்றதும்தான், இரவின் திரை, உலகை மூடி விட்டதை உணர்ந்தாள் அல்லி. ஏதோ பிழை செய்து விட்டாற் போன்றதொரு உள் கூச்சத்துடன் படியேறினாள் அவள். கூடத்து வாசற்படியருகிலேயே, வெற்றிலைப் பெட்டி சகிதமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்த ராஜநாயகம், அவளுடைய தவிப்பைக் கண்டதும் ஒரு புன்னகை பூத்தார். பொருள் பொதிந்த அப்புன்னகையின் விளக்கத்தை உணர்ந்து கொண்ட அல்லிக்கு, அவர் தன்னைக் கடிந்து கொண்டிருந்தால் கூட, அவ்வளவு வேதனை ஏற்பட்டிராது என்றே தோன்றியது.

அல்லி மாடிப்படிகளில் ஏறுகையில், மேலேயிருந்து.காமினி, திலோத்தமா, நீலா, கல்யாணி ஆக நால்வரும் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.அன்று கன்றுப் பொங்கலல்லவா? மாலையில், கலைக்கூடத்தில் விசேஷ நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராஜநாயகம். தீப வரிசைகள் சூழ, ஆனந்த நடனமிடும் நிருத்தியக் கடவுளின் முன்பு, அவரவர்கள் கற்ற கலையைக் காணிக்கையாக்கி மகிழ்ந்து, குருவின் ஆசி பெற்றுப் போக வந்திருந்தார்கள் அவர்கள். ராஜநாயகம் கூடச் சொல்லியிருந்தாரே, ‘அல்லி, இன்று மாலையில் உன் ஆட்டம் பிரமாதமாக இருக்க வேண்டுமென்று?’—அது அல்லிக்கு இப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. சந்திரகாந்தக் கல் பட்டவுடன், இரும்பு ஒளி பெற்று உருகுவது போல், அருணாசலத்துடனிருக்கும் அவளும், அவனது இயல்போடு ஒன்றி விடுகிறாளே!… உலகமே மறந்து விடுகிறதா என்ன…?… ஆசிரியரின் உத்தரவு உலகிற்குள் அடங்கியதுதானே? அதையும் சுலபமாக மறந்து, அவனோடு கிளம்பி விட்டாள் போலும்!

நீலாவை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கண் சிமிட்டிய படியே, “ஏன் அல்லி, நீ இப்பொழுதுதான் வருகிறாயா?”-என்றாள் காமினி.

“அவளுக்கென்னடியம்மா, நம்மைப் போலவா அவள்?” இது நீலா.

தொடர்ந்து ஜலதரங்கத்தை துரித கதியில் தட்டி விட்டது போல், நால்வரும் கூட்டுச் சிரிப்புச் சிரித்தனர். சிரிப்பா அது?

அல்லியின் ரத்த நாளங்கள் சுண்டின. ஐயோ உலகமே! எந்தப் பக்கம் திரும்பினாலும், உனக்குத் தப்புக் கணக்குத்தான் போடத் தெரியுமோ? உண்மையை உணர உனக்கு சக்தியற்றுப் போகக் கடவது என்று கண்ணகி சபித்தாளா? கற்புக்கரசியின் வாக்கு பொய்க்கலாகாதென்று நீ வாளாவிருக்கின்றாயா?.

வான் நின்று வீழ்ந்த உயிர்ச் சுடர் போலத் துடி துடித்தாள் அல்லி. கட்டிலில் வீழ்ந்த அவள், பெருகிய கண்ணீரைத் தாங்கி, அவள் துயரில் பங்கு கொண்டது அந்த வெண் உறை பொதிந்த தலையணை.

சிஷ்யைகள் விடை பெற்றுப் போனபின், ராஜநாயகம் அருணாசலத்தை நோக்கினார்.

“என்னப்பா அருணாசலம், ‘அக்கா மகளுடன்’ எங்கெல்லாம் சுற்றி விட்டு வருகிறாய்? உட்கார்ந்தே பதில் சொல்; பரவாயில்லை,” என்று தன் எதிரில் இருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார் ராஜநாயகம்.

மௌனச் சாமி போல், அதில் உட்கார்ந்த அருணாசலம் இரண்டொரு வினாடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அந்த அவகாசம், அவனது பழைய கில்லாடித் தனத்தை மீட்டு விட்டது. தன்மானத்தை அடக்கி, அதன் மேல் இறுமாப்பைப் போர்த்திக் கொண்டான் அவன் . கண்களிலே பணிவற்ற போக்கிரித் தனம் கூத்தாடியது. பேர் பெற்ற வில்லன் போல் ராஜநாயகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“முதலாளி வீட்டுக்குக் கூட்டிப் போனேன்!”

‘நீ யார் அதைக் கேட்பதற்கு?’ என்ற வினா அதில் ஒலித்தது.

“முதலாளி வீட்டுக்கா? எந்த முதலாளி வீட்டுக்கு?”

“அழகி படக் கம்பெனிக்கு; பரமானந்தம் வீட்டுக்கு?”

“எதற்கோ?”—ஒரு மாதிரியாகக் கேட்டார் ராஜநாயகம். அருணாசலத்தை அல்லி புரிந்து கொண்டதை விட, அதிகம் புரிந்து கொண்டவரல்லவா. அவர்? பாம்பின் காலைப் பாம்பறியுமே!

ரத்தம் வேக விசையில் முகத்தில் ஏற, உதடுகள் துடித்தன; “எதற்குப் போவார்கள்? கலையைக் கையில் வைத்துக் கொண்டு, பின் இரும்புக் கடைக்கா போவார்கள்?”

ராஜநாயகம் வாய் விட்டுச் சிரித்தார்.

“இரும்பு கரும்பொன். பொன்னை விடச் சிறந்தது தம்பி! கலை என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? பொன்னின் பகட்டு இருந்தாலும், இரும்பை விட உறுதியானதாக அது இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அதில் தெய்வீகம் இருக்கும். கடை தேடிப் போய், விலை கூறும் சரக்கல்ல கலை. அது ஈசுவர உபாசனைக்குரியது; மலரின் மென்மையும் அதற்கு உண்டு!… …”

“மண்ணாங்கட்டி!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அருணாசலம்.

ராஜநாயகம் அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தார்: “நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அல்லி என் மகள்! அனுபவமில்லாத அவள், எளிதில் உன்னிடத்தில் மயங்கியது பெரிதல்ல; அவளைத் திருத்த எனக்கு வழி தெரியும். நான் உனக்குச் சொல்லப் போவது என்னவென்றால்—சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்—அல்லியின் வழிக்கு இனி நீ வரக் கூடாது… இன்று போகட்டும், இனி இது மாதிரி என் உத்தரவன்னியில், அவளைக் கூட்டிக் கொண்டு போனால், அப்புறம் நான் ரொம்பவும் பொல்லாதவனாக இருப்பேன். ஆமாம்! ”

சற்றுக் கோபமாகவே பேசினார் ராஜநாயகம். சத்தம் போட்டுப் பேசினால், தம் உணர்ச்சியை அருணாசலம் எளிதில் புரிந்து கொள்வான் என்று நினைத்தாரோ என்னமோ?-குரல் ஓங்கிப் பேசினார்.

அருணாசலம் இதைக் கேட்டதும், பயம் நிரம்பிய சிரிப்புச் சிரித்தான்.

“நானாக அல்லியைக் கூட்டிக்கிட்டுப் போயிருக்கிறதாகத் தானே நீங்க நினைக்கறிங்க?”

“அவளாக வர மாட்டாளே?”

“அது எனக்குத் தெரியாது. ஆனா, படத்திலே நடிக்க அவளுக்கு விருப்பம். அது எனக்குத் தெரியும். பரமானந்தத்திடமும் ஒப்புக் கொண்டு விட்டாள். நாளைக் காலையில் அவர் ஸ்டுடியோவிற்கு வரச் சொல்லியிருக்கார்…!”

“ஆ!…”

“அது மட்டுமா? அல்லியை நானே கட்டிக்கிடவும் போறேன்!”

இப்படிச் சொல்லி விட்டுப் பெருமிதத்துடன், இரு தோள்களையும் குலுக்கி விட்டுக் கொண்டான் அருணாசலம்.

ராஜநாயகத்துக்குத் திகைப்பும், அருவருப்பும், ஒருங்கே ஏற்பட்டன. தான் குற்றம் புரிகையில், தன்னோடு சேர்ந்து பிறரும் குற்றமிழைக்கையில், அது வெகு நியாயமாகவே தோன்றுகின்றது. தோழமை பூண்டு, திட்டம் வகுத்து, சேர்ந்தே பாதகங்கள் செய்வதில் சலிப்பில்லை. தான் திருந்தி விட்டால், தான் செய்த குற்றங்கள் பூதாகாரமாகத் தோற்றமளிப்பதோடு, நேற்று வரையிலும் தோழனாக இருந்தவனின் கயமைத் தனமும், துடைத்த பளிங்கு பிரதிபலிப்பது போல் நன்றாகத் தெரிகின்றன.

பெண்ணைப் பெண்ணாகவே பாவிக்க, அவருக்குக் கற்றுக் கொடுத்தவள் அல்லி. அவளது தலை, அவர் பாதத்தில் தோய்ந்த அதே வேளையில், அதல பாதாளத்தில் உழன்று கொண்டிருந்த அவரது உள்ளமும் உயர்ந்து விட்டது. உண்மையில் திருந்தியவன், ஒரு நாளும் தவறுவதில்லை.

தனது சென்ற காலத்திற்காகவும், அருணாசலத்தின் தற்போதைய போக்கிற்காகவும் ராஜநாயகத்தின் உள்ளம் கண்ணீர் வடித்தது. ஒரு சந்தேகம்! இந்தப் பயல் எந்த ஆதாரத்தைக்கொண்டு அல்லியைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஜம்பம் பேசுகின்றான்? ஒரு வேளை அவளே உடன்பட்டிருப்பாளோ? இருவரும் ஒரே ரயிலில் இறங்கினார்களே?…

“அல்லி சம்மதித்து விட்டாளா?” என்று மட்டுமே அழுத்தமாகக் கேட்டார் ராஜநாயகம்.

“சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு!” அதே அழுத்தத்துடன் பதில் வந்தது.

“சரி, நானே கேட்டுக் கொள்கிறேன். இனி நீ போகலாம்.” என்று கடுமையாக மொழிந்த ராஜநாயகம், மேலும் அங்கு உட்கார்ந்திருக்க விருப்பமற்றவராக எழுந்தார்.

“நான் வருகிறேன், வாத்தியாரே! நாளைக் காலை பத்தரை மணிக்கு வண்டியுடன் வருவேன். அல்லியைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்,” என்று மிடுக்குடன் கூறிய அருணாசலம், ‘சரக் சரக்’ என பாதரட்சைகள் ஒலிக்க, படிகளில் இறங்கித் தெருவின் ஜனத்திரளில் மறைந்தான்.

வெற்றிலைப் பெட்டியை சடக்கென்று அறைந்து மூடினார் ராஜநாயகம், அருணாசலத்தின் பேச்சோ, அவர் இதயத்தில் அறைந்த மாதிரி இருந்தது.

“நாச்சியாரம்மா, இலையைப் போடு; அல்லி எங்கே?” எனறு வினவியவாறே, உள்ளே நுழைந்தார் ராஜநாயகம்.

நாச்சியாரம்மாள் இரண்டு இலைகளைப் போட்டு, அருகில் தண்ணீரையும் எடுத்து வைத்தாள்.

“அல்லி மாடியில் படுத்திருக்குதுங்க; போய் சாப்பிடக் கூப்பிட்டேன்; நீ போ; பசியில்லைன்னு ஒரு மாதிரியாகப் பேசிடுச்சு!” என்று நாச்சியாரம்மாள் கைகளைப் பிசைந்தவாறு கூறினாள்.

‘ஓஹோ!’ என்று ராஜநாயகம் தடதடவென்று மாடிப்படிகளில் ஏறலானார். காலடி ஓசை சமீபித்ததும், அல்லி நிமிர்ந்து பார்த்தாள். கலங்கியிருந்த விழிகளை, லேசாகப் புடவைத் தலைப்பால் ஒத்திக் கொண்டாள். ராஜநாயகத்தை நோக்கிப் புன்னகை புரிய முயன்றதின் அடையாளமாக, அதரங்கள் சற்றே பிரிந்தன. கருமுகிலினூடே, பிறை நிலவு எட்டிப் பார்க்குமே, அதே போல, பல் வரிசை மின்னி மறைந்தது.

“என்னம்மா உடம்புக்கு? சாப்பாடு வேண்டாமென்றாயாமே?” என பரிவுடன் விசாரித்தபடியே, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார் ராஜநாயகம். அவருக்குத் தெரியும்—பரிவு சாதிக்கும் காரியத்தை அதிகாரம் சாதிக்காது என்று. நைந்த உள்ளத்தில் பரிவுடன் கூடிய அமுதப் பேச்சுப் பரவியவுடன், மதகுச் சீப்பைத் திறந்ததும், அடைபட்டுக் கிடந்த அணை வெள்ளம் பாய்வது போல, அவளது உணர்ச்சிகள் வெளிப்பட்டு விட்டன.

அருணாசலத்தின் மேல் அவள் கொண்டுள்ள அன்பே, அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது.

பொறுமையுடன் அத்தனையையும் கேட்ட ராஜநாயகம், நீண்டதொரு பெருமூச்சு விட்டார்.

“அருணாசலத்தை கட்டிக்க உனக்குச் சம்மதம்; அப்படித்தானே?”

‘ஆம்’ என்ற பாவனையில் தலையைக் குனிந்து கொண்டாள் அல்லி. “சரி அம்மா. முதலிலே எழுந்து சாப்பிட வா. உன் இஷ்டப்படியே ஆகட்டும். அருணாசலம் உள்ளத்தில் நல்லவன்தான் . வெளிச் சாவகாசமும், வாலிபக் கோளாறுமாக பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாக அவன் வளர்ந்து விட்டான்; நீ அவனை நல்லவனாக்கி விடு!…” என்று இதமாக மொழிந்தார் அவர்.

ராஜநாயகம் பேசிய கருத்து, அவளை இன்பம் அடையச் செய்தது. நாணம் கன்னங்களில் செம்பஞ்சுக் குழம்பை அப்ப, மனம் மெய் நிலையிலிருந்து நழுவி, அதற்கப்பாலுள்ள ஓர் உயர்ந்த நிலையில் சஞ்சரிக்க ஆரம்பித்தது.

மாட்டுக்குத் தீனி அரைக்கவும், நெல் குத்தவும், கழனிக்குக் கஞ்சி கொண்டு போகவும், கண்மாய்க் கரையில் ஓரணா மலிவுச் சவுக்காரம் போட்டு அடித்துத் துவைக்கவும், இடை கொள்ளாமல் பெருங்குடத்தில் நீரேந்தி வரவும், கேட்ட வார்த்தைகளுக்கு மட்டுமே பதில் சொல்வதோடு, அனாவசிய கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமலும் வளர்ந்திருந்த அந்த உரம் மிகுந்த பட்டிக்காட்டுப் பெண், இப்பொழுது சதா கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்க விரும்பினாள்…!

பொழுது அலர்ந்தது.

அழகி படத் தயாரிப்பாளர்களுக்காகப் போடப்பட்டிருந்த ராமாயணப் பின்னணி கொண்ட ‘ஸெட்’ ஒன்றில், அல்லி நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.

ராஜநாயகம் கூட. துணைக்கு வந்திருந்தார் என்றால், அல்லியின் பால் கொண்டுள்ள வாத்ஸல்யம் எத்தகையது?

“ஓ, கே!” என்றார் டைரக்டர்.

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததுமே, ராஜநாயகம் அருணாசலத்திடம் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார்.

“அருணாசலம், அல்லியை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றது. நிச்சயம்தானே?”

“ஆமாம்; உறுதியாக!”

“சரி, எனக்கும் சம்மதம்தான்; ஆனால் எப்படிச் செய்து கொள்ள வேண்டும் தெரியுமா? இரண்டாம் பேர் அறியாமல், மோதிரம் மாற்றியோ, பதிவு செய்து கொண்டோ அல்ல. ஊருக்குக் கடிதம் போடு; உன் அப்பா அம்மாவை வரவழை. அவர்கள் சம்மதம்தான் முக்கியம். வடபழனி கோவிலில், அல்லிக்குத் தாலி கட்டிக் கல்யாணம் செய்து கொள்!”

காலம் ஓடியது.

அறந்தாங்கியில், ஷண்முகானந்தா டாக்கீஸ் ஆரம்பமானது. ‘குழந்தையே குடும்பத்தின் விளக்கு’ என்ற புதுப் படத்தைப் பணம் செலவழித்துக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

பத்தணா கொடுத்து சேர் டிக்கட் வாங்கிக் கொண்டு, வெகு மிடுக்குடன் சென்று அமர்ந்த இன்னாசி, யதேச்சையாகப் பின்புறம் திரும்பிப் பார்த்தான். மடிப்புக் கலையாத சலவை உடைகளில் தெளிக்கப்பட்ட மருக்கொழுந்து ‘சென்ட்’டின் மணம் மூக்கைக் குடைய, சிங்கப்பூரான் உட்கார்ந்திருந்தான்.

இரண்டு பேரும், நினைவின்றி வரப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், இரவுக் காவலுக்காக லயன் கரைக்குப் போகும் ரெயில்வே காங்கி ஒருவன், அவர்களைக் கண்டு பாவ புண்ணியத்துக்குப் பயந்து, ஊருக்குள் போய் ஜனங்களைக் கூட்டி வந்து, இருவரையும் தஞ்சை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்ததும், இன்னாசிக்கு நினைவில் எழுந்தன.

சாமான்களை ஏற்றி வரும் லாரி அப்பால் சென்றவுடன், அது எழுப்பிய புழுதியும் அடங்கி விடுவது போல திருக் கார்த்திகைக்கு மறு நாள் வெகு வேகமாகவும், விதம் விதமாகவும் கிளம்பிய வம்புப் புழுதி, காலக் கிரமத்தில் தானாகவே அடங்கி விட்டது. மாங்குடி மண் எப்போதும் போல் வெயிலிலும், நிலவிலும் மாறி மாறிக் குளித்து வந்தது.

இன்னாசியும், சிங்கப்பூரானும் ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை அடைந்து வந்தனர். ஒன்றும் அறியாத வேஷம் போட்டனர். யாரோ திருடர்கள், இருவரையும் தாக்கிப் பணப் பையைப் பறித்துப் போனதாகக் காயத்துக்கு ஒரு காரணம் கற்பித்தனர்.

விளக்குகள் அணைந்த வேகத்தில், வெண் திரையில் காட்சிகள் ஓடலாயின.

கதையில் சிந்தை செலுத்திய இன்னாசியும், சிங்கப்பூரானும் கண்களை எடுக்காமல் கவனித்தனர். திரைப் படத்தில் ஒரு நாட்டிய நாடகம்.

வண்ணானின் சொற்கேட்டு, சீதையை அபராதியாக்கிக் காட்டுக்கு மீண்டும் அனுப்பிய கட்டம். வால்மீகி ஆசிரமம்; லவகுசர் பிறப்பு.

உத்தர ராமாயணக் காட்சிகளை நாட்டிய நாடகமாக உருவகப்படுத்தியிருந்தனர் படத் தயாரிப்பாளர்கள். மாங்குடி அல்லிதான் சீதையாகத் திரையில் மின்னினாள். இன்னாசி மீசையை உற்சாகத்துடன் தடவிக் கொண்டான்.

சிங்கப்பூரானைத் திரும்பிப் பார்த்த அதே வேளையில், சிங்கப்பூரானும் இன்னாசியைப் பார்த்தான். “நானும் கவனித்து விட்டேனடா பயலே!” என்ற பாவனை அதில் நன்கு தெரிந்தது.

“அண்ணாச்சி, ஊரிலே எல்லோரும் பேசிக்கினாங்க; அந்த பாயாஸ்கோப்பிலே, நம்ம அல்லி ஆடுதாம்!” செந்தாமரை வருத்தத்துடன் கூறினாள்.

“ஆடிட்டுப் போகட்டுமே? அது ஆடப் பொறந்தது. அடங்கிக் கெடக்கப் பொறக்கல்லே! அதுக்கு நீ ஏன் அழுவுறே?”

“நீ இப்படிச் சொல்லாதே அண்ணாச்சி! என்னோடு உசிருக்கு உசிராகப் பழகிய சிநேகிதி அவ. எனக்கு அவளைப் பத்தின பேச்சு நாலு பேர் வாயிலே புரளறப்போ எப்படியிருக்கு, தெரியுமா?”

“என்னை என்ன செய்யச் சொல்றே இப்போ?”

“அண்ணாச்சி, எனக்கு அல்லியை இப்பவே பார்க்கணும். பார்த்து, ‘பாவி, நம்ம பழக்க வழக்கத்தையெல்லாம் மறந்திட்டியா? ஓடினதுதான் ஓடின; இப்படி பகிரங்கமாகவே வெளிப்பட்டுப்பிட்டியே?’… அப்படின்னு கேக்கணும். அவள் கன்னத்திலே, என் கையாலே நாலு அறை வைக்கணும்!”

வெண்டியப்பன் வாய் விட்டுச் சிரித்தான்.

“பைத்தியக்காரி!… அல்லியைப் பத்தி உனக்கு ஏன் கவலை?… பணம் கைக்கு வந்தவுடன், நாமும் பட்டணம் பொறப்படலாம். அந்தப் பீடையை பார்க்கறதுக்கல்ல!… நம்ம அத்தை மகன் கண்ணப்பன் பட்டணத்துலே இருக்கான்லே… அந்தச் செண்பகத்து அத்தை வீட்டுக்குப் போகப் போறேன். உன்னையும் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி, அத்தை எழுதியிருக்குதே!” அவளது நினைவுப் பந்தலில், இளமை நினைவுகள் படர்ந்தன. வெள்ளைச் சட்டையும், கிராப்புத் தலையுமாக விளங்கும் பட்டணத்து அத்தான் கண்ணப்பனின் உருவம் நிழலாடியது.

மௌபரிஸ் சாலையின் தருக்கள் கவிழ்ந்த நிழலின் கீழ், கப்பல் போன்ற நிறமுள்ள கார் வழுக்கிக் கொண்டு ஓடியது ஆழ்வார்ப்பேட்டைத் திருப்பத்தைக் கடந்து, லஸ் மாதா கோயில் சாலையினூடே விரைந்தது.

பிரம்மாண்டமான தியேட்டர் வாசலில் நுழைந்து நின்றது அந்தக் கார். அல்லியும், அருணாசலமும் இறங்கினார்கள்.

“அல்லி!…அல்லி…”

“செந்தாமரையா?” அல்லியின் குரல் வியப்பு மேலோடியது.

“நீ ஆட்டம் பார்க்க வந்தியா?” என்றாள் செந்தாமரை. அல்லியை ஏறிட்டுப் பார்த்தாள். மின்னல் பாய்ந்தது.

“கண்டவங்க கிட்டெல்லாம் பேசிக்கிட்டு நிக்க வந்தியா?” என்று வெண்டியப்பன் அல்லியை நோக்கி முறைத்துப் பார்த்து விட்டு, செந்தாமரையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் .

‘கண்டவங்க’ என்று வெண்டியப்பன் சொன்னதைக் கேட்ட அருணாசலம், பொங்கியெழுந்தான். கையை ஓங்கவும் தயாராகி விட்டான். அடிக்கத் துடித்த அவனது கைகளைப் பிடித்தபடியே, “என்னப்பா அருணாசலம், யாரை அடிக்க இப்படித் துடிக்கிறே?” என்று விஷமமாகக் கேட்டதை உணர்ந்த அருணாசலம், திரும்பிப் பார்த்தான்.

சிரித்தபடியே நின்ற சாத்தையாவைக் கண்டதும், “அடேடே! சாத்தையாவா? நீ எப்போ பட்டணம் வந்தே? வரப் போறேன்னு ஒரு வார்த்தை கூட எழுதலியே?” என்றவாறு அருணாசலம், வெகு உரிமையுடன் அவன் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டான்.

அண்டசராசரத்தின் உயிர்ப்புச் சக்தி அடங்கி விட்டாற் போல, அல்லியின் ஐம்புலன்களும் ஒடுங்கின; அமைதியாயின. அல்லியின் முன் ஒரு பிரளயமே உருவானது போலிருந்தது.

“அல்லி என்ன உடம்புக்கு?” என்று திடுக்கிட்டு வினவிய அருணாசலம், தள்ளாடிய அல்லியைக் கீழே விழுந்து விடாமல் தாங்கியணைத்துக் கொண்டான்.