ஆடும் தீபம்/ரசனைக்கு விருந்து


ரசனைக்கு
விருந்து
ஒரே ரகப் பொருள்களைத் தொகுத்து மகிழும் ரசிக உள்ளம், பல ரகங்களையும் ஒன்று கூட்டி, ஆனந்தம் அடையவும் அவாவுகிறது. அதன் தூண்டுதலால் கிடைக்கும் விளைவுகளில் விசேஷக் கவர்ச்சியும், தனிச் சுவையும், அலாதி மணமும் அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

பல ரக மலர்களைக் கொண்ட கதம்பம் தனிச் சிறப்பு உடையதுதானே? கலவைச் சந்தனத்தில் விசேஷ மணம் இல்லை என்று சொல்ல முடியுமா? அவியலிலும், கூட்டாஞ் சோற்றிலும். ‘மிக்ஸ்ச’ரிலும் தனிச்சுவை இருப்பதனால்தானே நாவும், மனமும் அவற்றை மீண்டும் மீண்டும் நாடுகின்றன?

ரசிக உள்ளத்தின் இத்தகைய தூண்டுதல்தான், தொடர்கதையிலும் கதம்ப உத்தியைக் கையாளும் ஆசையை வளர்த்திருக்க வேண்டும். ஒரு சில முறைகள் வெற்றி கண்ட பிறகு, அதுவே விசேஷ மரபு ஆக வந்தாலும் வந்து விடலாம்!

நண்பர் பூவை அவர்களின் முயற்சியால் உருவாகும் ‘ஆடும் தீப’த்தில், முதல் சுடர் ஏற்றும் பொறுப்பை அன்பர் வாசவன் அவர்கள் சிறப்பாகச் செய்து விட்டார். சுடர், சுடரைக் கொளுத்துகிறது. தீபம் தீப வரிசைக்கு ஒளி தருகிறது. தீப வரிசையில், ஒரே ரக விளக்குகள் இருப்பதை விட
வர்ண மாறுபாடுகள் இருந்தால், அழகாக இருக்கும் என்று ஆசைப்படும் ரசிக உள்ளம், வர்ணத் தாள்களைச் சுற்ற வைத்து மகிழ்கிறது.

‘ஆடும் தீபம்’ வளர, வளர அவ்வித வர்ண விஸ்தாரங்களைப் பெறுவதும் சாத்தியமே. விதம், விதமான மனோபாவமும், வெவ்வேறு ரக நடையும் கொண்டவர்கள் அமைக்கும் கோலம் எதிர்பாராத புதுமைகளை ஏற்கலாமன்றோ? எது, எவ்வாறாயினும், கெட்டுப் போகாத கன்னியாக மாங்குடியை விட்டு வெளியேற திரு. வாசவன் வழி காட்டிய அல்லியை, நல்லவளாகப் பட்டணம் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி அவள் என்ன ஆவாள் என்பதை உங்களைப் போலவே, நானும் ஆவலுடன் எதிர் பார்க்க வேண்டியவன் ஆகி விட்டேன். அவள் கதியை நண்பர் ‘பூவை’தான் அறிவாரா?

வல்லிக்கண்ணன்