ஆடும் தீபம்/இரட்டைப் புலிகளுக்கிடையே ஒற்றை மான்!


பொறி ஒன்று:

இரட்டைப்
புலிகளுக்கிடையே
ஒற்றை மான்!


மாங்குடி மண் நிலவில் குளித்தது. மனைகள் ஒளியில் குளித்தன. இது தஞ்சை மாவட்டத்திலோ, மற்ற தமிழ் நாட்டுப் பகுதிகளிலோ காண முடியாத அதிசயம். மனைகள் என்றால் எல்லாமே இந்துக்களைச் சேர்ந்ததல்ல. கிறித்தவர்கள் இருந்தார்கள்; முஸ்லீம்கள் இருந்தார்கள். மதத்தால் வேறுபட்ட இவர்கள், மொழியாலும், வழியாலும் ஹிந்துக்களோடு தோழமை பூண்டிருந்தார்களே தவிர, தெய்வீகச் சடங்குகளில் பிரிந்து நின்றனர். வருஷம் எல்லாம் பிரிந்து நின்றாலும், மும்மதமும் ஒரேயொரு நாள் கூடி நிற்கும் வாய்ப்பு இந்த ஒளித் திருநாளில் கிடைத்தது.

ஒளிக்கும் மதம் உண்டா? காற்றுக்கு, நீருக்கு எல்லாம் மதம் உண்டா? இயற்கையை வழிபடுகிற எல்லா மதங்களுமே இதை ஒப்புக கொண்டாலும், எம்மதமும் சம்மதமாக நின்று கூடி வழிபடுவதில்லை. திருக்கார்த்திகை என்றால், ஹிந்துக்களின் விழா என்று முகத்தைத் திரும்பிக் கொள்ளும் கிறித்தவர்களும், முகம்மதியரும்தான் தமிழ் நாடெங்கும் விரவி இருக்கின்றனர்.

மாங்குடி அதற்கு மாறுபட்டு நின்றது. அக்கிரகாரத்திலும், மறவர் குடியிருப்பிலும், யாதவர் வசிக்கும் மேலக்குடி இருப்பிலும், பட்டாமணியம் வசிக்கும் கீழக்குடி இருப்பிலும் திருக் கார்த்திகை தீபங்கள் எரிந்தன என்றால், மாதா கோயிலை நடுவே வைத்து அதன் இரு மருங்கிலும் வரிசை அமைத்திருந்த கிறித்தவ உடையார்கள் பகுதியில் அகல் விளக்குகள் ஆண்டவனை நோக்கி எழுந்தன. ஊருணிக் கரையை அடுத்த முகமதியர் தெருவிலே எப்பொழுதும் மூடிக் கிடக்கும் வாசற்கதவுகள் அன்று அடித்த நெல்லில் அரிசி மணி உமியை விலக்கி நிற்பதைப் போல, சிறிதாகத் திறந்து கொண்டிருந்தன. வாசற்படியில், மாடத்தில், மாட்டுத் தொழுவத்தில் எல்லாம் சிட்டி விளக்குகள் ஒளி ஏந்திக் கொண்டிருந்தன.

பிள்ளையார் கோயிலில் சர விளக்கு; மாதா கோயிலில் மெழுகு விளக்கு; பள்ளிவாசலில் திரி விளக்கு, மாங்குடியில் மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கின்ற மனித சமூகம் ஒளித் தேவனை வழிபடுவதற்காகச் சங்கமித்த போது இந்து இல்லை: இஸ்லாம் இல்லை.

ஒளி, ஒளி, ஒளி! இருந்தது ஒன்றுதான்: இருப்பது ஒன்றுதான்; இருக்கப் போவது ஒன்றுதான்! இருந்தது, இருந்தது. இருப்பது இருக்கிறது; இருக்கப் போவது இருக்கும்.

“மாவலியோ மாவலி, மண்ணு சிறக்கும் மாவலி!”

காய்ந்த பனம் பூவை மூட்டம் போட்டு வேக வைத்து, அதையும் அடுப்புக் கரியையும், உப்பையும் தூளாக்கி, சருகக் கூடான பீர்க்கங்காய் ஓட்டில் அதை வைத்துக் கெட்டித்து, பச்சைப் பனை மட்டையை மூன்று கீற்றுகளாக வகுந்து, அவை நடுவே கூட்டை வைத்து முடைந்து தயாரித்த மாவலிகளை, விடலைப் பையன்கள் ஊருணிக் கரையில் பாட்டுப் பாடிச் சுற்றிக் கொண்டிருந்தனர். மாவலிகள் சுழன்ற சுழற்சியிலும், மோதிய காற்றின் அழுத்தத்திலும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளிப் பூக்களைச் சிந்திய போது, வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் மண்ணை முத்தமிட விண்ணகம் விட்டு இறங்கி வந்த பொன் மயக் கற்பனைகளை உலவ விட்டன.

“பயிறு பச்சை விளைஞ்சிட பாஞ்சுவந்த கார்த்திகை! உயிரு விளங்கி வாழ்ந்திட ஓங்கிப்பிடிக்கிறோம் சுளுந்தோலை”,

ஓலைச் சுளுந்தில் தீ இட்டு ஒளியை ஏற்றிய இளைஞர்களின் வாய்கள் ஓங்கிப் பாடின. நீண்டு உயர்ந்து செறிந்த ஓலைப் பந்தங்களைப் பிடித்தவாறு, வயல்களை நோக்கி வாலிபப் பட்டாளம் வீறு நடை போட்டுப் போய்க் கொண்டிருந்தது. விவசாயப் பெருமக்கள் திருக் கார்த்திகை தினத்தில், கருக்கு மட்டையில் கட்டிய ஓலைப் பந்தங்களை வயல்களின் சனி மூலையில் நட்டு வைத்தால், நன்றாக விளையும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். ஒளிக் கடவுளின் தரிசனத்தைப் பயிர்கள் கண்டால், களத்தில் பொன்னைக் காணலாம். கண்டவர்கள் அவர்கள். கண்டதைக் கண்டு, காணப் போவதைக் காண ஒளிப்பந்தங்கள் வரப்புக்களில் போய்க் கொண்டிருந்தன.

பிள்ளையார் கோயிலுக்கு எதிரே கட்டப்பட்டிருந்த சொக்கப்பனை வானத்தை நோக்கி உயர்ந்திருந்தது. ஈரப் பனை ஓலையில் வேயப்பட்டிருந்த அது, நிலவுப் பாலை அருந்தி பச்சை மாமலை போல ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்கெல்லாம் ஐயனார் கோயில் வேளார், பட்டாமணியம் பாளையப்பத் தேவரிடமிருந்து சுளுந்தை வாங்கி, சொக்கப்பனையில் எறிவார். பச்சை ஓலை பற்றி எரியும்; காய்ந்தது எரியும், பட்டது முறியும். பச்சை எரியுமா? திருக்கார்த்திகை சொக்கப்பனை எரியும். இது அதிசயம். கடவுள் சக்தியை நம்பாதவர்கள், அதிசயம் என்றுதான் சொல்லி விட்டுப் போகட்டுமே… …!

இனம், மதம் என்ற பிரிவில்லாமல் மாங்குடியே ஒளித் திருநாளைக் கொண்டாடிய போது, ஒரேயொரு வீட்டில் மட்டும் கொண்டாட்டம் இல்லை; விளக்கு இல்லை; ஒளி இல்லை!

அல்லி உடலைச் சுருட்டிக் கொண்டு மண் தரையில் அழிந்த கோலம் போலக் கிடந்தாள். மூச்சு உயிரின் சுருதி. அவளிடமிருந்து பரிந்த நெடுந்துயர் மூச்சு சுருதி பிசகி ஒலித்தது. மனம் காக்கையின் அடி மூக்கைப் போல வெந்து வெளிறியது.

“அல்லி… அக்கா!”

அல்லி தலையை லேசாகத் தூக்கிப் பார்த்தாள். வாசலில் நின்று கொண்டிருந்த உருவம் சரியாகத் தெரியவில்லை. நிலவு வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு வாசலில் சரிந்திருந்தது கூரையின் நிழல். குரலுக்கு உருவம் இல்லை. அதனால், அதைப் புரிந்து கொள்ள வெளிச்சம் வேண்டாம். மேல வீட்டு வெண்டியப்ப அண்ணன் மகள் செந்தாமaரை அல்லவா அழைக்கிறவள்?

அல்லியின் நெஞ்சுதான் செந்தாமரை என்று சொல்ல வேண்டும். வயதில் இரண்டு குறைவாக இருக்கலாம். இருந்தால் என்ன? புத்திசாலித்தனத்தில் இந்த ஊருக்கே மூத்தவள் அவள்தான். மிக மிக மெல்லிய கொடியாக ஓடிச் சீக்கிரமாக, ஆனால் ருசியில் உயர்ந்த பழங்களைத் தரும் திராட்சையை ஒத்தவள் அவள். இந்த ஊரில் வயதில் பெரியவர்கள் இருக்கிறார்கள். கோயிலில் முதல் காளாஞ்சி உரிமையை நிலை நாட்ட ‘ஹைகோர்ட்’ வரை போய் வந்த புலிகளும் இருக்கின்றன. பஞ்சாயம் செய்வதில் தீரர்களான ‘தலைப்பாகை’களும் இருக்கின்றன. அவர்களெல்லாம் நெடுங்காலம் வளர்ந்து நிலையான பலனைத் தரும் புளிய மரத்தை ஒத்தவர்கள். அது தரும் பழத்தை ‘பிளேட்’டில் வைத்துச் சாப்பிட முடியுமா? குழம்புக்குத்தான் கரைக்கலாம். அதைப் போல பெரியவர்களெல்லாரும் வேறொன்றில் கரைந்து பிரகாசிப்பவர்கள். திராட்சைப் பழத்தைப் போல தனி இன்ப ருசி படைத்தவர்களல்லர்:— அதாவது தானாக இயங்கும் புத்தியுள்ளவர்கள் இல்லை.

செந்தாமரைக்குத் தெரியாதது எதுவும் அல்லியிடம் இல்லை. அல்லியை மலர் என்றால், செந்தாமரை நார் என்று கூற வேண்டும். உதிரி மலராக அல்லியை பார்க்க முடியாது. நாரில் கட்டி முடிந்த பந்த மலராகத்தான் காட்சியளிப்பாள். அது கூட இந்த ஊருக்குப் பிடிக்கவில்லை. யாரும் குத்தி விட்டிருக்கா விட்டால், வெண்டியப்ப அண்ணன் அப்படி முகத்தை ஒடித்துக் கொண்டு பேசுவாரா? தாய் தகப்பன் இல்லாத பெண்ணாயிற்றே! சின்னஞ்சிறிசு, ஒண்ணுக்கு ஒண்ணு துணையாக இருக்கட்டும் என்று எப்பொழுதுமே செந்தாமரையை, அல்லியின் வீட்டில் இருக்க வைத்துக் கொண்டிருந்தவர், சாயங்காலம் காத்து வெட்டிச் சாமியைப் போலத் தூள் பரப்பி விட்டாரே!

அப்பொழுது, கண்மாய்ச் செம்பிரான் கல்லில் உட்கார்ந்து, முகத்துக்குச் சவுக்காரம் போட்டுக் கொண்டிருந்தாள் அல்லி. வெண்டியப்ப அண்ணன் தொலிக் கலப்பையைத் தண்ணீரில் விட்டு எறிந்து விட்டு, “அல்லி!” என்று ஓங்கி இரைந்தார்.

சட்டுச் சட்டென்று முகத்தில் இரண்டு கைத் தண்ணீரை இறைத்துக் கழுவி விட்டு, ஏறிட்டுப் பார்த்தாள் அல்லி. “என்ன அண்ணே?” என்றாள் சுருண்டு புரண்ட குரலில்.

“இனிமே நீ செந்தாமரையோட பேசினால், கெரண்டைக் காலை நறுக்கிப் போட்டுடுவேன்! சாக்கிரதை!” என்றார், புடைத்து விம்மிய புஜத்தை ஆட்டிக் கொண்டு.

அதை விட, ‘நீ உயிரை விட்டு விடு’ என்று கூறி இருக்கக் கூடாதா? அயர்ந்த கொன்றைக் காய்களைப் போல அச்சத்தோடு உதடுகள் அசைந்தன: “ஏன் அண்ணே?”

“ஏனா? ஊரு சிரிக்குதே உன்னைப் பற்றி. பட்டாமணியம் பாளையப்பத் தேவர் மகன் இன்னாசியோடே நீ சொரணை மறந்து கூத்தடிக்கிறது தெரியாதின்னு பாத்தியா? என் மகளும் கெட்டுச் சீரழியணும்னு பார்க்கிறியா?”

“அண்ணே” என்று அலறிய அல்லி, வெகு நேரம் வரை உள்ளுக்குள்ளேயே விம்மினாள். விம்மல் வெடித்தது: “உங்க மகள் ஒழுங்கா இருக்கணும்னு நீங்க நினைக்கிறது தப்பில்லை. அதற்காக என்னைக் கெட்டவள்னு தூற்ற வேண்டாம். இனி உங்க மகளோட நான் பேசினால், இழுத்து வச்சு என் நாக்கை அறுங்க. அதுக்கு மேலே பேச்சு வேண்டாம் … …!”

அல்லியைப் பொறுத்த வரையில், திடீரென்று காட்டிய பேய் மழை அல்ல இது. சமீப காலமாக, அவ்வூரில் பெய்து கொண்டிருந்த தூற்றல், இப்பொழுது கண்மாய்க்குள்ளும் அழுதது. அவ்வளவுதான்! ஆனால், வெண்டியப்ப அண்ணனை ஊரில் ஒருவராக அவள் நினைத்திருக்கவில்லை. தன்னில் ஒருவராக எண்ணினாள். தனக்காக அனுதாபம் காட்ட ஓர் உள்ளம் இருக்கிறதென்றும் தைரியம் கொண்டிருந்தாள். கையில் தண்ணீரை எடுத்தாலும், அது கைத் தண்ணீராகுமா? கண்மாய்த் தண்ணீர்தானே? வெண்டியப்ப அண்ணனும் ஊராகி விட்டார்.

அவளால் தாங்க முடியவில்லை. ஓர் உள்ளம் ஊராகி விட்டது சகிப்பதற்கில்லை. வேதனை விட்டதா? உயிராகப் பற்றிக் கொண்டிருந்த செந்தாமரையைப் பிரிய வேண்டும். இதையாவது சகிக்க முடியுமா?

சகிக்கக் கூடியதென்று எதையுமே அவள் சந்தித்ததில்லை. ஆனால், அப்பொழுதெல்லாம் தூரை விட்டால் கிளை, கிளையை விட்டால் கொம்பு, கொம்பை விட்டால் தரை என்று ஒரு பிடிமானம் இருந்தது. இப்பொழுது, தூரும் இல்லை; கிளையும் இல்லை; கொம்பும் இல்லை; தரையும் இல்லை.

இல்லை, இல்லை, இல்லை… …!

வெண்டியப்ப அண்ணன் தொலிக் கலப்பையைக் கழுவிக் கொண்டு போய் விட்டார். செம்பிரான் கல்லில் சவுக்காரம் போட உட்கார்ந்து கொண்டிருந்த அல்லி, தண்ணீரில் விழுந்து இரண்டு முழுக்குப் போட்டாள். வீட்டிற்கு வந்ததும், ஈரச் சேலையை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. ‘ஆல் வீட்டு’ வாசற்படியில் தலையை வைத்துக் கொண்டு சாய்ந்தவள்தான்.

“என்ன அல்லி அக்கா பேச மாட்டியா?”

இரண்டாவது முறையாகச் செந்தாமரை கேள்வி போட்டதும்தான், அல்லியின் உணர்வு வாசலுக்குத் திரும்பியது. தடதடவென்று உள்ளே ஓடி வந்து, சாய்ந்து கிடக்கிற உடலைப் புரட்டிப் புண்ணாக்கி விட வேண்டிய செந்தாமரை, இப்பொழுது லௌகிகமாக வெளியே நின்று பேசுகிறாள். எச்சரிக்கப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. திரண்டு வந்த தனிமை, பிரிவு விலக்கம் ஒரு நீண்ட பெருமூச்சாக வெளியே வந்தது: “ஊம்…”

“திருக்கார்த்திகை ஆச்சே!”

“எனக்குத் தெரியும்.”

“பின்னே, ஏன் விளக்கு ஏத்தி வைக்கல்லே?”

“நீ கேட்க வேண்டாம்.”

“பின்னே யார் கேட்கணும்னு நினைக்கிறே?”

“யாரோ!”

“இன்னாசியா?”

“கொலைகாரி! உன்னைச் சாகடிச்சிடுவேன்!” விர்ரென்று எழுந்து வெளியே ஓடினாள். செந்தாமரையின் கழுத்தை நோக்கி இரு கரங்கள் நீண்டன.

“கொன்னுடு. ஏன் தயங்கிறே?”

அல்லியின் கைகள் துவண்டு கீழே விழுந்தன. “நீ பெண்… ”

“நீயும் பெண்தானே?”

“யார் நினைக்கிறாங்க? முதல்லே நீ நினைச்சியா? சதா என்னைக் கொன்னுக்கிட்டே இருப்பதிலே, உங்களுக்கு என்ன சுகம்? உங்களுக்கெல்லாம் வேறே வேலை இல்லை? நீ பொம்பளைப் பிள்ளைதானே?— உங்க வீட்டிலே விளக்கேத்தி வைக்கிறதுதானே? அதை விட்டுட்டு, ஏன் என் மனசிலே கொள்ளியை ஏத்தி வைக்கிறே!”

“அப்பாதான் சொல்லிச்சு, அக்கா!…”

“அந்த ஓடுகாலிக் கழுதையோடே உனக்கென்ன பேச்சு, செந்தாமரை? குதிகாலைப் பெயக்க வேணுமா?” என்ற இடிகுரல் கேட்டு இருவரும் விதிர்விதிர்த்து நின்றனர்.

வெண்டியப்ப அண்ணன் மாட்டுக் கொட்டகையிலிருந்து குதி போட்டுக் கொண்டு ஓடி வந்தார். “சாயந்திரம் என்ன சொன்னே, அல்லி? என் மகளோடே பேசினா, உன் நாக்கை இழுத்துப் பிடிச்சு அறுக்கச் சொன்னாயல்லவா, இப்போ அறுக்கத்தானே வேணும்?”

அல்லி ஒன்றும் கூறவில்லை. தளர்ந்து நடந்து, இருளோடிக் கிடந்த ஆல் வீட்டில் வந்து சாய்ந்தாள்.

இதே ஆல் வீட்டில் இரண்டு சாவுகளைக் கண்டிருக்கிறாள் அவள். முதல் சாவைக் கண்ட போது, அவளுக்கு நான்கு வயது. இறந்து கிடந்தவர் அவள் அப்பா. எல்லோரும் அழுதார்கள். அவள் தாய் மார்பில் அடித்துக் கொண்டு, “மகாராசா போயிட்டீங்களே!” என்று கதறினாள். ‘இத்தனை பேர் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் போது, அப்பாவால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது?’ என்று ஆச்சரியப் பட்டாள் அல்லி. பிணத்தைக் குளிப்பாட்டும் போது, அவளுக்கு ஒரே சந்தோஷம். ‘வேண்டும் அப்பாவுக்கு. நான் வேண்டாமென்றாலும், பிடித்து உட்கார வைத்துக் குளிப்பாட்டி விடுவாரல்லவா? இப்பொழுது எத்தனை பேர் அவரை உட்காரக் கூட விடாமல், கீழே சாய்த்துப் பிடித்துக் கொண்டு குடம் குடமாகத் தண்ணீர் கொட்டுகிறார்கள்? கொட்டட்டும்!’ பிணத்தைப் பாடையில் வைத்துத் துாக்கும் போது, தப்பு கிடுகட்டி தம்பூரா, உறுமி, கொம்பு முதலிய வாத்தியங்கள் முழங்கின. தன் வீட்டு வாசலில் அத்தனை வாத்தியங்களும் முழங்குவதில் அவளுக்கு ஒரு பெருமை. இந்தச் சாவில், அவளுக்கு முழுக்க முழுக்க ஆனந்தம்,

இரண்டாவது சாவை அவள் மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காரணம், சாவின் பயங்கரத்தை உணரக் கூடிய வயசுப் பெண்ணாக அவள் இருந்ததுதான். செத்தவள் தாய். இருந்த ஒரு கடைசிப் பிடிப்பும் கை விட்டுப் போன அவலத்தில் முட்டிக் கொண்டு அழுதாள். எல்லோரும் அவள் துக்கத்தை அதிகப்படுத்தினர். “நீ இனி எப்படியம்மா இந்தப் பொல்லாத பருவத்தை வைத்துக் கொண்டு, தனியாக வாழ்ந்து குப்பை கொட்டப் போகிறாய்?” என்று மூக்கைச் சிந்தினர்.

அப்பொழுது நம்பிக்கை கொடுத்தவர் வெண்டியப்ப அண்ணன்தான். “விதியை மறிக்க யாராலே முடியும்? அவுங்க அவுங்க தனிததனியா வாராங்க, கொஞ்ச காலத்துக்கு ஒரு கூட்டத்தைச் சேர்த்து விட்டுட்டுத் தனித் தனியாப் போறாங்க, வந்து போய்க்கிட்டிருக்கிற விருந்தாளிகளை நிறுத்தி வைக்க முடியுமா அல்லி? கண்ணீரைத் துடைச்சுக்க, என்னை உன் அப்பனா நினைச்சுக்க. செந்தாமரையை உன் தங்கச்சியா எப்போதுமே பக்கத்திலே வச்சுக்க. எத்தனை கவலை இருந்தாலும், உனக்குச் சோத்துக் கவலை இல்லை. வேண்டிய மண்ணு இருக்கு; உழைக்கிறதுக்கு நானிருக்கேன்.”

அல்லிக்குப் புதுப் பிடிமானத்தில் வாழ்க்கையை நிறுத்துவதற்குக் கொஞ்ச காலம் கஷ்டமாகத்தான் இருந்தது. அம்மாவும், பெண்ணுமாக உலவிய அந்த வீட்டில் பெண்ணாக இருக்க நேர்ந்த போது, பழைய நினைவுகள் மனதில் வாள் தீட்டும்.

அல்லிக்குத் துடுக்கு அதிகம். கள்ளமில்லாமல் சிரித்து, நாலு பேரை வம்புக்கு இழுப்பதில் மாவடு தொட்டுக் கொண்டு பழஞ்சாதத்தைச் சாப்பிடுவது போன்ற ஆனந்தம்.

அல்லி எட்டு முழப் பந்தல் குடிச் சிற்றாடையை உடுத்தும் பருவத்திற்கு வந்த போது, அம்மாக்காரி ரொம்பக் கண்டிப்பாக இருந்தாள். ‘அங்கே நிற்காதே, இங்கே போகாதே!’ என்றெல்லாம் கடுகடுத்தாள். “இன்னும் நீ சின்னப் பெண் இல்லை!” என்றாள்.

பருவம் அல்லியைப் புரிந்து கொண்டிருந்தது. அல்லிதான் பருவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. “பிறகு, நான் என்ன பெரியவளா?”

“பெரியவளா இருந்தாலும் பாதகமில்லையே? நீ மொந்தைக் கள்ளு!”

“இப்போத்தான் கள்ளே இல்லையே அம்மா? இந்த மது விலக்குக் காலத்திலே, இப்படி எல்லாம் நீ சொல்லிக்கிட்டிருந்தியானா, நிச்சயம் உன்னைப் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிடும்.”

“வேடிக்கை இல்லே அல்லி, உன் பருவம் கள்ளாக நிற்குது. குடிவெறி கொண்ட காலிப் பயலுங்க ஊரிலே அதிகம்.”

குழந்தையைப் போலப் பேசிக் கொண்டிருந்த அல்லி, இந்த இடத்தில்தான் பெரிய மனுஷியானாள்; “நீ பெத்த பெண்ணம்மா நான். ஆயிரம் காலிப் பயல்களுக்கு மத்தியிலே கூட, உன் பொண்ணு புடம் போட்ட தங்கமா நின்னு ஜொலிப்பாம்மா!”

தாயைப் பறி கொடுத்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே, அவள் அம்மாவின் பெண்ணாக நடந்து காட்ட வேண்டிய நெருக்கடி வந்து தொலைத்தது.

அம்மா இறந்த வீட்டில், யாரோ ‘பொல்லாத பருவத்தை வைத்துக் கொண்டு எப்படித் தனியாக வாழ்ந்து குப்பை கொட்டப் போகிறாய்?’ என்றார்களே, அது எவ்வளவு உண்மையாகி விட்டது?

சாயங்காலம் வரை தூங்கி விழுந்து விட்டு, பொழுது சாய்ந்ததும் அவசரஅவசரமாக நீலச் சவுக்காரம் போட்டு வேட்டியைத் துவைத்து உலர்த்திக் கொண்டே ஆயிங்குடி டேராச் சினிமாவுக்குப் போகும் பெரிய மனிதர்கள் வீட்டு இளவெட்டுகள் மாங்குடியில் அதிகம். டேராவுக்கு ‘லைசென்ஸ்’ கிடைக்காமல், ஆயிங்குடியில் சினிமா நின்று விட்டால், இளவெட்டுகளின் இரவு நடமாட்டம் கன்னியர்கள் வாழும் வீடுகளைச் சுற்றி அலையும். ‘ஒரு தலைப் பண்பு’ என்ற நொண்டிக் குதிரையில் சவாரி செய்யும் ‘ஜாக்கி’கள் இந்த வரிகளைப் படித்து, முகத்தைச் சுளித்தால், இவர்கள் ஏறி அமர்ந்த நொண்டிக் குதிரை இன்றையக் கிராமாந்திரங்களில் நடமாடவில்லை என்றுதான் அனுதாபப்பட வேண்டும்!

அல்லி தாயைப் பறி கொடுத்த ஆறாவது மாதத்தில், ஆயிங்குடி சினிமா நடக்கவில்லை. வாலிபர்களின் நடமாட்டம் அவள் வீட்டைச் சுற்றி அதிகமாக இருந்தது. குளிக்கப் போனால் நாலு பேர், வாசலுக்கு வந்தால் முறைத்துப் பார்க்க நாலு பேர் என்றாகி விட்டது. எல்லா இளவட்டங்களும் கிறங்கிப் பார்த்தாலும், நெருங்கி வரும் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். பட்டாமணியம் பாளையப்ப தேவர் ஊருக்குப் பெரியவர். அவர் மகன் இன்னாசி எது வேண்டுமானாலும் செய்யலாம். கேட்க நாதி ஏது? நியாயம் ஏது? அவன் மட்டும் அல்லியை நெருங்கிப் பல்லிளித்தான். இளித்த பல் தெறித்து விழும்படியாக, அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்து வைத்தாள் அல்லி. வாங்கிய முதல் அதிகம். பிறகு அருகே நெருங்காமல், தூரத்தில் இருந்து சீட்டி அடித்துத் தன் உள்ளக் கிடக்கையை ஆற்றிக் கொண்டான் இன்னாசி.

கைக்குக் கிடைக்காததைக் கொட்டிக் கவிழ்ப்பது சாம்ராஜ்ய தந்திரம் அல்லவா? இன்னாசி இத்தகையதொரு ராஜதந்திரப் பிரச்சாரத்தில் இறங்கினான். “அல்லிக்கும் எனக்கும் சிநேகம். அந்த மேல் சவுக்காரத்தை நான்தான் அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். அவ போட்டிருக்காளே சீட்டி ரவுக்கை. அது ஆயிங்குடி ராவுத்தர் கடையிலே நான் எடுத்து வந்தது!” என்று பிடிக்கும் இடங்களாகப் பார்த்துப் பற்ற வைத்தான் . -

கிராமங்களில் புரளிகளுக்கு ரொம்ப மவுசு உண்டு. நகரங்களில் ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுத்தும், தேர்தலில் நாமத்தைப் போட்டுக் கொண்ட சட்டசபை விரும்பிகள், கிராமங்கள் சூழ்ந்த பிரதேசத்தில், புரளியைத் தேர்தல் சின்னமாகக் கொண்டு நின்று பார்க்கட்டும். நிச்சயம் வெற்றி பெறுவார்கள்!

இன்னாசி கிளப்பி விட்ட புரளி பலன் பெற்றது. சம்பாதிக்கிறாள் என்று குளக்கரை பேசியது; சாவடி பேசியது; வயல் வெளிகள் பேசின. இருவர் கூடினால், அல்லி சுடுபடுவாள். அவள் போட்டிருக்கிற ரவுக்கை அடிபடும். ஆவள்.குளிக்கின்ற சோப்புத் தேயும், ‘சினிமாவை விட அல்லிக்கு வசூல் சாஸ்தி’ என்று நாலும், இரண்டும் படித்தவர்கள் (நாலடியாரையோ, குறளையோ படித்தவர்கள் என்று மயங்க வேண்டாம்) பேசிக் கொண்டார்கள்.

அல்லிக்குக் காது செவிடில்லையே! எல்லாம் விழுந்தன. இடியும் விழுந்தது. வீட்டைச் சாத்திக் கொண்டு, குன்றிப் போய்க் கிடப்பாள். செந்தாமரை உசுப்பிப் பார்த்து விட்டுச் சிணுங்கிக் கொண்டு போவாள். வெண்டியப்ப அண்ணன் வருவார். “போம்மா, போக்கத்த பெண்ணே! ஊருக்கு வாய் கொழுத்தா, அதுக்காக நீ பட்டினி கிடந்து சாகணுமா? ஊரை விட்டுத் தள்ளு… குப்பை! எழுந்திருந்து உலையை வை” என்று சமாதானப் படுத்துவார். குன்றியவள் எழுந்து நிமிர்ந்து உட்காருவாள்.

அந்த அண்ணன்தான் கண்மாயில் கயிறை விட்டெறிந்து பேசினார். செந்தாமரையைக் கூட அறிவில் மூத்த தலையாக எண்ணி இருந்தது தவறுதான். அவள் என்ன பேச்சுப் பேசி விட்டாள்? இனி மேல் எந்தப்பிடிப்பை வைத்துக் கொண்டு இங்கே குப்பை கொட்டுவது?

“அல்லி ஞாபகம் இல்லையா? சொக்கப்பனை கொளுத்தறப்போ, ஊரே பிள்ளையார் கோயில்லே இருக்கும், அப்போ நான் வருவேன்!”—வாசலிலிருந்து ஒரு கனைப்புக்குப் பின், இந்தப் பேச்சு உள் நுழைந்து வந்தது.

பேசுபவன் இன்னாசி அல்லவா? இரண்டாவது எச்சரிக்கையா?

அல்லி எழுந்து உட்கார்ந்தாள். நடுங்க வேண்டிய மனம் நடுங்கவில்லை. ஆட வேண்டிய உடல் ஆடவில்லை. நிறுத்தி வைத்த எல்லை அம்மன் சிலையைப் போலச் சலனமற்றிருந்தாள். ஒரே விநாடிதான் அப்படி. அதற்கப்புறம் ஆயிரமாயிரம் அலைகள் விட்டு எறியும் கடலைப் போலாயிற்று நெஞ்சம். அதிலே பெரும் திமிங்கிலமாக நீந்தினான் இன்னாசி.

மத்தியானம் கதவோரமாக அமர்ந்து, குப்பைக் கீரையை நறுக்கிக் கொண்டிருந்தாள் அல்லி. திண்ணைக் காலோரமாகச் செருமல் ஒன்று வெடித்து வந்தது. நிமிர்ந்து பார்த்தாள். கள் குடித்தவன் போலக் கண் சிவக்க, முகம் சிவக்க நின்று கொண்டிருந்தான் இன்னாசி.

“அல்லி, இனிமே நீ தப்பிக்க முடியாது. இன்னிக்கு ராத்திரி ஊர் சொக்கப்பனை கொளுத்திக்கிட்டிருக்கிற போது, நான் உன்னை அடைஞ்சே தீருவேன். நீ கழுதையாக் கத்தினாலும் விட மாட்டேன். ஜோராச் சிங்காரிச்சுக் கிட்டுக் காத்திருக்கணும்.”

பதிலிறுக்க அவள் வாய் துடிதுடித்தது. கேட்பதற்குத்தான் ஆள் இல்லை. அவன் போய் விட்டானே!

மனத்தில் கண்ட வெடிப்புக்களிலிருந்து பாய்ந்த நீர், கண்களில் வழிந்தது. அந்த நீர்க் கோலத்திலே, என்றோ இறந்து போன தாயின் முகம் தெரிந்தது.

“அம்மா உன் பொண்ணைப் பார்த்தாயா அம்மா? அன்னிக்கு உன்னிடம் சொன்னேனே, ‘ஆயிரம் காலிப் பயல்களுக்கு மத்தியிலே கூட, உன் பொண்ணு புடம் போட்ட தங்கமா நின்னு ஜொலிப்பா’ன்னு? ஒரே ஒரு காலிப் பயலுக்கிட்டேயிருந்து கூட என்னாலே தப்பிக்க முடியாது போலிருக்கே!” என்று அலறினாள்.

ஏன் தப்பிக்க முடியாது? இன்று வரை தப்பிக்கவில்லையா? காலிப் பயல்களிடமிருந்து தப்பித்து விடலாம். உயிர் காவலாக நிற்கும் வரை, கற்புக்குப் பங்கம் ஏற்படக் காரணம் இல்லை. ஆனால், அபவாதத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா? முடியவில்லை. அதற்குக் காவல் இல்லை.

இதிலிருந்தும் தப்பித்து விட்டால்… …?

எழுந்தாள். விளக்கை ஏற்றினாள். இருப்பே நாலைந்து துணிமணிகள்தாம். அறந்தாங்கி செவ்வாய்ச் சந்தையில் எடுக்கப்பட்டவை. அவற்றை எடுத்துப் பையில் திணித்தாள். ஐந்தறைப் பெட்டியில் ஐம்பது ரூபாய் இருந்தது. நேற்று ஆயிங்குடிக் கோனாரிடம் இரண்டு ஆடுகளை விற்று முதல் வரவு. அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்,

‘எங்கே போவது?’

‘கெட்டும் பட்டணம் சேர்’ என்கிறார்களே, அந்தப் பட்டணத்திற்குப் போனால் என்ன? கெட்டால்தான், அந்தப் பட்டணத்திற்குப் போகலாமா? கெடாமல் இருப்பதற்காகத்தானே, அங்கே தொலைய வேண்டும்? பட்டணத்தை ரொம்ப கேவலமாகச் சொல்கிறார்களே! அங்கே நடக்காத அயோக்கியத்தனங்களே இல்லையாமே? நாலெழுத்து இங்கிலீஷ் படித்திருந்தால்தான், ரிக்ஷாக்காரன் கூட வண்டியில் ஏற்றுவானாமே! நமக்கு நாலாம் கிளாஸ் வரை உள்ள தமிழ்தான் தெரியும். ஹ்ம்… அங்கே லக்ஷ ரூபாய் வாங்கும் நடிகர்களெல்லாம் இங்கிலீஷா படித்திருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் ரிக்ஷாக்காரன் ஏற்றாமலா இருந்திருப்பான்? ‘தமிழரசு’ வேண்டும் என்று ஒரு கட்சி கேடடுக் கொண்டிருப்பதாகவும், அதற்கு அபரிமிதமான ஆதரவு இருப்பதாகவும், நேற்று வெண்டியப்ப அண்ணன், பத்திரிகையிலிருந்து படித்துச் சொன்னாரே?… அங்கே தமிழைக் கொண்டே சமாளித்துக் கொள்ளலாம். அடிவாதத்திற்குப் பயந்துதானே அங்கே போகிறோம்? அது மட்டும் ஊர் இல்லையா? அங்கு வாய் கொழுக்கப் பேசுபவர்கள் இல்லையா? மாங்குடியைத் தவிர, வேறு புலி வசிக்கும் ஊராக இருந்தாலும், தாக்குப் பிடித்து விடலாம்…!

விளக்கை அணைத்தாள். பன்னெடுங் காலமாக, இந்த வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. ஒருமிக்க விளக்குத் திருநாள் எடுக்கும் சமயத்தில், இந்த வீட்டிலே விளக்கை அணைக்கும் புண்ணியத்தை ஊர் கட்டிக் கொண்டது. ஒரு குடியைக் கெடுத்தா, ஊர்க்குடி வாழ்ந்து விட முடியும்? முதலில் தனக்கு ஒரு பெரிய குழியைத் தோண்டிக் கொண்டுதான், ஒருவன் மற்றவன் குடி இருக்கும் வீட்டின் குச்சைப் பிரிக்கின்றான். இது யாருக்குத் தெரிகிறது? வர, வர வாழ்க்கையின் நெருக்கடி மனிதனைக் குருடனாக்கிக் கொண்டு வருகிறது.

பூட்டை எடுத்தாள். கதவைப் பூட்டினாள். சாவியை இடுப்பில் செருகிக் கொண்டாள். குறுஞ்சிரிப்பு உதடுகளில் மேவியது. வீடு, வாசல், நிலம், நீச்சை எல்லாம் உதறி விட்டுப் போகும் போது, வீட்டை எதற்காகப் பூட்ட வேண்டும்? சந்தைக்குப் போய்த் திரும்பி வரும் மாதிரி நினைத்துக் கொண்டு, ஏன் சாவியைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்? இப்படித்தான் வைராக்கியம் எல்லாம். வேகத்தில் மனம் துணிந்து விட்டாலும், நீண்ட காலமாகக் கொண்டிருந்த பிடியை நழுவ விட அழுது சாகிறது. பளிங்கில் பட்ட தண்ணீர் மாதிரி ஒட்டாமல்தான் நிற்கின்றன வாழ்க்கையும், வைராக்யமும். இனி இந்த வீட்டில் நாய் நுழைந்தால் என்ன? நரி நுழைந்தால் என்ன?

இடுப்பில் செருகிய சாவியை எடுத்துப் பூட்டில் சேர்த்து வைத்தாள். வைராக்கியத்தை வென்று விட்டது போன்ற ஒரு நிம்மதி, வாசற்படியை விட்டுத் தெருவில் இறங்கினாள்.

பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது?

கணக்கிட்டு வாழ்க்கையை முதலீடு செய்யச் சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது; பலருக்கு வாழ்க்கை தீர்க்க முடியாத பெரும் கடனாக இருக்கிறது. எல்லோரும்தான் வாழ்கிறார்கள். நாயும்தான் வாழ்கிறது. மனிதனை விட நாய் ஒரு படி மேல்தான். அதற்கு அடுத்த வேளையைப் பற்றிய கவலை இல்லை. மனிதனுக்கு அடுத்த ஜன்மத்தைப் பற்றிக் கூடக் கவலை! நாளையைப் பற்றிச் சிந்திப்பதால், இன்றைய இன்பத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை. நடப்பது நடக்கும். நடந்து கொண்டிருப்பதைக் கை நழுவ விடுவானேன்?

“சரிதான்; பட்டணம் போக வேண்டியது தீர்மானம்; என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டணம் அல்லவா கூற வேண்டும?”

தெருவில் ஒரே கூட்டம். சொக்கப்பனையைப் பார்ப்பதற்காகப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது ஊர். ஒருத்தியை உயிரோடு வேக வைத்து விட்டு, மற்றொரு பச்சைக் குச்சை எரிய வைக்கச் சென்று கொண்டிருக்கிறது. பிணத்தை எரித்து, எரித்துப் பழக்கப்பட்ட இந்த மனித சமுதாயம், எதையாவது, எந்தப் பெயரைச் சொல்லியாவது எரித்துக் கொண்டிருக்க விரும்புகிறது. சொக்கப்பனையும் அதில் எழுந்த ஒன்றுதானே?

நின்று பிரயோசனம் இல்லை. கீழண்டைப் பக்கம் திரும்பி நடந்தாள். அங்கே கூட்டம் இல்லை. எதிர்ப்பட்ட வாய்க்காலைத் தாண்டி, வயல் வரப்பில் சென்றாள். நாலு வயல்களைக் கடந்து விட்டால், வண்டிப் பாதை அதில் இரண்டு மைல் கிழக்கு நோக்கி நடந்தால், ஆயிங்குடிதான். முன் ஜாமத்தில் வரும் ‘காரைக்குடி மாயவரம் பாஸஞ்சரை’ப் பிடித்து விட்டால், காலைப் பொழுது சென்னையில் விடியும்.

‘விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும்!’ வயல் ஓரங்களில் பச்சைப் பயிர்களுக்கிடையே ஊன்றி வைத்திருந்த எரிந்து கருகிய சுளுந்துகள், இளம் விதவைகளின் உள்ளத்தைப் போல அழுது கொண்டிருந்தன. நிலவு சிரித்துக் கொண்டிருந்தது. பழியாடும் ஊரைப் போல.

நடந்த வேகத்தில், வரப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இரண்டொரு நண்டுகள் நசுங்கின. பயிர்களின் தண்டுக் குருத்தை ருசித்து மெல்லும் விட்டில் கூட்டங்கள், அரவம் கேட்டு ‘உஸ்’ஸென்று பறந்தன; தவளைகள் தத்தி ஓடிப் பிலாக்கணம் பாடின. நீர்க்கால்களை ஒட்டியிருந்த நீர் முள்ளிகளின் சிவப்பு முட்கள், அவளுடைய மெல்லிய பாதங்களைக் கீறி அசைந்தன. எப்படியோ நாலு வயல்களைக் கடந்தாகி விட்டது. இனி வண்டிப் பாதைதான். பிறகு அவ்வளவு சிரமம் இல்லை.

வண்டிப் பாதையில் கால் வைத்தாள். பின்னிருந்து ஒரு கை, அவள் கையைப் பற்றியது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். இடிச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் இன்னாசி.

“எங்கே போறே என்ன விட்டுட்டு? உன்னை ருசிக்காமே விட மாட்டேன்!” என்று முரட்டுக் கையை அல்லியின் முழங்கைக்கு ஏற்றினான்.

பையைச் சுமந்து கொண்டிருந்த அல்லியின் மற்றொரு கையை, வேறொரு கரம் வேகமாகப் பற்றியது. பக்கவாட்டில் பார்த்தாள், சிங்கப்பூர் பணக்காரன் சாத்தையா அவன்! “எத்தனை நாளா உன் பேரிலே கண் போட்டிருக்கேன்! ஊரை விட்டு ஓடினா, உன்னை விட்டுடுவேனா…?”

“என்னோட போட்டிக்கு வருகிறாயா, சாத்தையா?” ஏசுகிறான் இன்னாசி.

“அல்லிக்காக என் உயிரையே கொடுக்கத் தயாரா இருக்கேன்!”

“விடுடா அவள் கையை, சாத்தையா!”

“நீ விடு என் கண்ணாட்டியோட கையை!”

“கொன்றுடுவேன்!”

“வேல்க் கம்பாலே சரிச்சுடுவேன்!”

இருவரும் இழுத்த இழுப்பில், அல்லியின் கைகள் அழுந்திப் புண்ணாயின. அழுவதற்கோ, அலறுவதற்கோ சக்தியை இழந்து விட்டிருந்த அவள், அண்ணாந்து வானத்தை நோக்கினாள். மழை மேகங்கள் நிலவை மறைத்துக் கொண்டிருந்தன. மானத்தை மறைத்துக் கொள்ள வகை தெரியாமல், இரு பக்கங்களிலும் சுவர்களைப் போல, நெருங்கிக் கொண்டிருந்தவர்களுக்கிடையே நசுங்கிக் கொண்டிருந்தாள் அல்லி!