ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/அனுமனது விசுவரூபம்

அனுமனது விசுப ரூபம்

பிறப்பு நிலை கேடு
இவையாவான்; பாவம்
அறத்தினொடு ஐம்பூதம்
ஆவான் - உறற்கரிய
வானாவான் மண்ணாவான்
மன்னுயிர்கள் அத்தனையும்
தானாதல் காட்டினான் தான்

என்று கீதா ரகஸ்யத்தையே உரைக்கின்றார், பெருந் தேவனார், தான் இயற்றிய பாரதத்தில், தேர்தட்டின் மீது திகைத்து வாள்த்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்ட அர்ச்சுனனுக்கு 'எல்லாம் நானே ஆதலால் பலன் கருதாது உன் கருமத்தைச் செய்’ என்று உபதேசிக்கிறார் பகவான். இந்த கீதோபதேசத்தை, அருச்சுனனைத் தவிர வேறு ஒரு நபரும் அதே சமயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தான், பார்த்தனுடைய ரதத்தின் கொடியில் அமர்ந் திருந்த அனுமார். அவரோ கீதோபதேசம் கேட்கு முன்பே எல்லாவற்றையும் 'பாராயணம்' செய்யும் மனப் பக்குவம் பெற்றிருந்தவர்.

ஆதலால், கீதாவிற்கு விளக்கம் சொல்லுவதில் கீதாச் சிரியனையும் மிஞ்சி விடுகிறார். கீதார்த்தமு என்று தொடங்கும் கீர்த்தனத்தில் பக்த தியாகராஜர். அனுமன், அர்ச்சுனனுடைய தேர்க் கொடியில் வீர புருஷனாக இருந்து கீதோபதேசத்தைக் கேட்டதே ஒரு அழகான கதை. கதை இதுதான்.

சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவன் அனுமன், ஆதலால் ராம்னை விட்டுக் கடைசியாகப் பிரிகிற போது எல்லாக் காலத்திலும் தான் வாழ்ந்தாலும், ராமனுக்கு அத்தகைய நிலைத்த வாழ்வு இல்லையே. ஆதலால் அவனை எப் பொழுதுமே காணும் வாய்ப்புப் பெறுவது எங்ங்னம் என்று ஏங்கியிருக்கிறான்.

அப்போது ராமன், அவனுக்கு அடுத்த யுகத்திலும் ராமனாகவே காட்சி கொடுப்பதாக ஒத்துக் கொண்டு விடுகிறான். அனுமனும் அதே விருப்பத்தோடு அடுத்த யுகத்தில் சேதுக்கரைக்கு வந்து தவம் செய்கிறான். தீர்த்த யாத்திரை புறப்பட்ட அருச்சுனன் அதே சேதுக்கரைக்கு வருகிறான். ராம நாம பஜனம் செய்யும் அனுமனைப் பார்த்து என்ன உங்கள் ராமன் இந்தச் சொத்தைக் கடலை கடப்பதற்கு கல்லாலேயே ஒர் அணைகட்டியிருக்கிறான். நானாகயிருந்தால் என்னுடைய அம்புகளைக் கொண்டே ஒர் அஸ்திரபாலம் அமைத்து அதன் பேரிலே சேனையை நடத்தி கடல் கடந்திருப்பேனே! என்று எகத்தாளமாகப் பேசுகிறான். அனுமனுக்கோ அசாத்திய கோபம். அவனும், "உன் அஸ்திரபாலம் என்னைப் போன்ற ஒருவனைக் கூடத் தாங்க வலியற்றதாக இருக்கும்” என்று மடக்குகிறான். -

அதைத் தான் பார்த்து விடுவோமே என்று அர்ச்சுனன் தன் அம்புகளைக் கொண்டே அரைக்கணத்தில் ஒர் அஸ்திர பாலத்தை அமைத்து விடுகிறான். அனுமனும் உடனே விசுவரூபம் எடுத்து, அந்தப் பாலத்தின் மேல் நடக்க ஆரம்பிக்கிறான். பாலமோ நொறுங்கித் துகள் துகள்ாகி விடுகிறது. அருச்சுனனுக்கோ அவமானம் தாங்க முடியவில்லை. தன் உயிர் துணைவனான கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே தீப்புகுந்து உயிரை விட்டுவிட விரைகிறான்.

அந்தச் சமயத்தில் வருகிறான் ஒரு வேதியன். அனுமன் அருச்சனன் இருவரையும் பார்த்து - அவர்கள் நடத்திய போட்டி விவரங்களைக் கேட்கிறான். 'என்ன! போட்டி என்றால் மத்தியஸ்தர் ஒருவரை வைத்துக் கொள்ளாமலா போட்டி போடுவது. சரி. நான் மத்தியஸ்தனாக இருக் கிறேன், திரும்பவும் அருச்சனன் பாலம் அமைக்கட்டும்' என்கிறான்.

அருச்சுனனும் பாலம் அமைக்கிறான், அம்புகளா லேயே திரும்பவும். அனுமனும் தன் விசுவ ரூபத்துடனே பாலத்தின் பேரில் குதிக்கிறான்; ஓங்கி மிதிக்கிறான். இந்தத் தடவை பாலம் நொறுங்கவில்லை. அசையாது நிற்கிறது. அனுமன் தலைகவிழ்கிறான். அந்சத் சமயத்தில் வேதிய னாக வந்து மத்தியஸ்தம் பண்ணியவன், 'நானே ராமன்' என்று தன் உருவைக் காட்டுகிறான். அதே நேரத்தில் அருச்சுனனுக்கும் 'நானே கிருஷ்ணன்' என்றுக் காட்டி விடுகிறான். 'எல்லாம் நானே' என்னும் கீதோபதேசம் அன்றே நடந்துவிடுகிறது இருவருக்கும். கடைசியில் அருச்சுனன் வேண்டிக் கொண்டபடி அனுமனும் பாரத யுத்தம் நடக்கும் போது அவனுடைய தேரில் கொடியாக அமைந்து, வெற்றி பெற உதவுவதாக வாக்களித்து விடுகிறான். திரும்பவும் விரிவாக நடக்கிறது கீதோபதேசம்.

போர்க்களத்தில் குறையாத வீரமும், அசையாத பக்தியும் உடைய அனுமனுமே கேட்கிறான் கீதோப தேசத்தை - அறிதற்கரிய விளக்கங்களை எல்லாம் பெறுகிறான். வீரத்திற்கும், பக்திக்கும் தலை சிறந்த எடுத்துக்காட்டு அனுமன். ஆதலால்தான், ராமாயண பாத்திரங்களிலே தலை சிறந்த ஒரு பாத்திரமாக அனுமன் அமைகிறான்.

"எவனிடம் உன்னிடம் இருப்பது போல் ஞாபகசக்தி, மனத்தெம்போடு கூடிய தைரியம், சிறந்த மதி நலம், ஆழ்ந்த சாமர்த்தியம் எல்லாம் நிறைந்திருக்கிறதோ, அவன், எல்லோரையும் வெல்லும் ஆற்றல் பெறுவான்' என்று அனுமனைத் தேவர்கள் புகழ்ந்ததாக வான்மீகர் சொல் கிறார். இதைப் போலவே கவிச்சக்கரவர்த்தி கம்பனும், உத்தம கர்ம யோகிக்கு வேண்டிய மூன்று பெரிய பண்புகள் அனுமனிடம் வளர்வதாக குறிக்கின்றான். பிரம் மச்சாரியினுடைய புலனடக்கம், பிரமதேவனைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு, எல்லாவற்றிற்கும் மேலாக தருமத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஊக்கம், எல்லாம் நிறைந்திருந்தது அனுமனிடம். மானியாம் வேடம் தாங்கி,


மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய் உலகுக்கு எல்லாம்
அறம் பொருள் நிரப்பும் அண்ணல்

என்பதுதானே கம்பன் உருவாக்கிக் காட்டும் அனுமன். அனுமன் ஒரு நவவியாகரண பண்டிதன். அவன் கல்லாத கலையே இல்லை. அவன் செய்யாத தொண்டும் இல்லை. கடல் கடந்து இலங்கை சென்று அசோக வனத்திடை தவம் செய்யும் தவமாம் தையலைக் கண்டு தொழுகிறான். ராமனுடைய பண்ணையில் அவன் ஏவின வேலையைச் செய்யும் பண்ணையாளாக, கூவின சத்தத்திற்கெல்லாம் பணி செய்யும் வேலைக்காரன் என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அத்தகைய தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சியில் பேசுகிறான் சீதையிடம்.

வண்ணக் கடலின் இடை இடந்த
மணலிற் பலரால் வானரங்கள்
எண்ணற்கரிய படைத்தலைவர்
இராமற்கு அடியார் யான் அவர் தம்


பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்
ஏவல், கூவல் பணி செய்வேன்

இப்படி அடங்கி ஒடுங்கிப் பேசும் அனுமன் பேரில் தான், ராமனும் சுக்ரீவனும் எத்தனை நம்பிக்கை வைத் திருக்கிறார்கள். தென்திசை நோக்கிச் செல்லும் அனுமன், சீதையை, சீதை இருக்கும் இடத்தைக் கட்டாயம் கண்டு வருவான் என்று நம்புகிறான் காகுத்தன். ஆனால் அனுமனுடைய ஆற்றலை எல்லாம் நன்கு அறிந்த அந்த கவி குலக் கோமகனாகிய சுக்ரீவனோ, சீதையைக் கண்டு விட்டால், சும்மா வெறுங்கையோடு வரமாட்டான், கொண்டு வந்து விடுவான் என்றே நம்புகிறான்.

ஆனால் இதே நம்பிக்கை சீதைக்கு முதலில் அனுமனிடம் உண்டாக வில்லை. இத்தகைய சிறிய உருவம் படைத்த அனுமன் எப்படி இந்த கடலைக் கடந்தான் என்று சந்தேகிக்கிறாள். அனுமனோ நான் இக்கடலை கடந்தது காலினால்தான்' என்று விளக்குகிறான். சீதைக்கோ அதிசயத்திலும் அதிசயமாகத் தோன்றுகிறது. சீதையின் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை அனுமன்.

அதுவரை அடங்கி ஒடுங்கி நின்ற அனுமன் தன் விசுவ ரூபத்தையே காட்டுகிறான். அனுமனோ பெரிய யோகி, அதனால் பல சக்திகள் வாய்ந்தவன். ஆதலால் அவன் விண்ணிற்கும் மேலே விரிந்திருக்கும் வான் முகட்டையும் முட்டும் வகையில் உயர்ந்த உருவம் உடையவனாகி விடுகிறான்.

இப்படி அண்ட முகடு அளவும் வளர்ந்தவனைக் கண்டு அன்று உலகெலாம் அளந்த நாயகனான திரி விக்கிரமனுமே நாணம் அடைகிறான், தன்னால் இவ்வளவு பெரிய உருவை அன்று எடுக்க முடியாது போயிற்றே என்று. அனுமனுடைய அறிவை, ஆற்றலை, பக்தியை எல்லாம் எப்படி எப்படி எல்லாமோ பாராட்டியிருக் கிறர்கள் கவிஞர்கள். அத்துடன் அவன் எடுத்த அந்த பேருருவை - விசுவ ரூபத்தையுமே கற்பனை பண்ணி மகிழ்ந்திருக்கிறார்கள். எண்ணரிய சக்திகளை யெல்லாம் ஒழுக்கத்தின் உயர்வால் பெற்ற ஒருவன் மக்கள் சிந்தனை யில் எவ்வளவு உயர்ந்து விடுகிறான் என்பதைத் தானே இப்படி விசுவரூபமாகக் காட்டி விளக்குகிறார்கள் கலைஞர்கள்.

காவியம் மூலம் காணும் இந்த விசுவரூபத்தை ஒவியம் - சிற்பம் மூலம் காண்பது மிகவும் எளிதாக இருக்கும். மரத்திலே, செம்பிலே வடித்தெடுத்த பெருமை, தமிழ் நாட்டுக்கு உண்டு. நாமக்கல் கோட்டைக்கு வெளியே நாசிம்ம சுவாமி சந்நிதிக்கு மேற்கே இருக்கும் அனுமனும் க்ன்னியாகுமரியை அடுத்த சுசீந்திரத்திலே தானு மாலயன் கோயிலே நிற்கும் அனு மனும் கல்லுருவிலே பெரியவை தான். இரண்டிடத்தும் அனுமன், அஞ்சலி ஹஸ்தனாக ஏவல் கூவல் பணி செய்ய எப்பொழுதுமே தயார் என்ற நிலையில்தான் நிற்கிறான். ஆதலால் அங்கெல்லாம் உங்களை இழுத்துப் போக விரும்பவில்லை இப்போது.

அவன் எடுத்த பெரிய உருவத்திற்கேற்ற பெருமை ஒரு சிறிதும் குறையாமல் மூன்று சின்னஞ்சிறிய ஊர்களிலே இருக்கும் அனுமனைத்தான் காட்ட விரும்புகிறேன் நான். வட ஆற்காடு ஜில்லாவில் ஆரணி ரோட்டு ரயில் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருப்பது களம்பூர். இந்த களம்பூரை அடுத்த சிறிய ஊர் தான் கஸ்த்தம்பாடி. இந்த ஊரில் எளிய வாழ்வு வாழ்வதற்கே கஷ்டப்படும் குடி ஜனங்கள்தான் உண்டு.

இந்த ஊரிலே ஒரு சிறு கோயில். அந்தக் கோயிலுக்குள்ளே ஒரு சிறு சந்நிதி அனுமனுக்கு. அங்குள்ள அனுமனை வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர் அன்பர்கள். சிறை இருக்கும் செல்வியைத் தேடி இலங் கைக்குத் தாவ விரும்பும் அனுமன் மகேந்திர மலையில் ஏறுகிறான். பேருருவோடு கிளம்புகிறான். அந்த நிலையை


வால் விசைத்து எடுத்து,
வன்தாள் மடக்கி
மார்பு ஒடுக்கி, மானத்
தோல் விசைத் தோள்கள்
பொங்க, கழுத்தினைச்
சுருக்கித் தாண்டும்
கால் விசைத் தடக்கை

நீட்டி - மேல் விசைத்து எழுந்தான் என்று கம்பன் கூறுகிறான். இத்தனையும் சொல்லி விட்டு, இந்தக் காட்சியை கண்கள் நெடுநேரம் கண்டு அனுபவிக்க முடிய வில்லை. காரணம் அதற்குள் அவன் விண்ணில் பறந்து விடுகிறான் என்கிறான் கம்பன். ஆனால் மகேந்திரமலை யில் நின்று புறப்படும் நிலையை அப்படியே படம் பிடித்து விடுகிறான் ஒரு சிற்பி. அந்த நிலையை ஒரு கலை உருவமாகக் கல்லிலே செதுக்கியும் வைத்து விடுகிறான்.

பாய்வதற்குத் தயாராகும் நிலையிலே அமைந்த திரு உருவம் தான், கஸ்தம் பாடியிலே இருக்கிறது. கட் புலனுக்கு எட்டாத வண்ணம் அன்று அனுமன் இருந்தான் என்று கம்பன் கையை விரித்தாலும், கலைஞன் கையை விரிக்காமல், அந்த நிலையை இன்னும் நாம் கண்குளிரக் காணும் வண்ணம், கற்பித்து நிறுத்தி விடுகிறான்.

கல்லிலே கண்ட அஞ்சனை புதல்வனை மரத்திலே காணவேண்டுமானால் கோவை ஜில்லாவினுக்கே போக வேணும், பொள்ளாச்சியை அடுத்த ஊத்துக்குழி என்ற கிராமத்திற்கே வந்து சேரவேணும். அங்குள்ள ஜமீன்தாருக்கு காளிங்கராயர் என்று பட்டம். கலிங்கம் வென்ற கருணாகரன் உடன் சென்ற சிறந்த படைத்தலைவன் பரம்பனர போலும், அந்த ஜமீன்தார் அரண்மனைக் குள்ளே நான்கு ஐந்தடி உயரத்தில் இருக்கிறான், இந்த அனுமன். ஏதோ மரத்தாலாய பீடத்தின் பேரில்த் தான் சிற்பி அமைத்து நிறுத்தியிருக்கிறான்.

என்றாலும், தோற்றம் அந்த மகேந்திரமலை மேலே - முதல் முதலாக ஏறி நின்ற நிலைதான். மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரும் மெய்யனாகக் காட்சி கொடுக்கிறான். உருண்டு திரண்ட மேனி, ஓங்கி வளர்ந்த வடிவம். நிமிர்ந்து உயர்ந்த கதை, சுருண்டு வளைந்த வால் எல்லாம் அந்த உருவத்தின் காம்பீர்யத்தை பறை சாற்றுகின்றது. அசப்பிலே பார்த்தால் சிலை என்றே சொல்ல முடியாது. நல்ல ஆஜானு பாகுவான அனுமனே எழுந்து நிற்பது போலத்தான் இருக்கும். நல்ல வடிவ அழகோடு கூடிய சிற்பச் சிலைகளும் மரத்திலே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு - இந்தச் சிற்பமே ஒரு எடுத்துக்காட்டு.

இனித்தான் வருகிறோம் ஒரு நல்ல செப்புச் சிலையைக்கான விசுவரூபம் என்றால் இது வரை பெரிய உருவம் என்று தானே எண்ணி வந்தோம். ஆனால் இப்போதுக் காணும் விசுவரூபம் உண்மையிலே எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டி நிற்கும், பெரிய உருவம் தான். மூர்த்தியினுடைய பெயரே 'திரிநேத்ர சதுர்புஜ அனுமார்' என்பதாகும்.

மூன்று கண்களுடனும், பத்துக் கைகளுடனும் இவர் காட்சி தருவார் என்பதைப் பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நமது தெய்வங்களிலே வலிமிகுந்தவர்கள் சிவன், விஷ்ணு, தேவேந்திரன், யமன் முதலியவர்கள் தான். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே நின்றால், ஒருவரை ஒருவர் வெல்வது கூட எளிதாக இருக்கும். எல்லோருமே சேர்ந்து ஓர் உருவமாக நின்றுவிட்டால் அந்த வடிவினை வெல்லுதல் என்பது அசாத்தியமே.

அத்தகைய திருஉருவம் தானே உண்மையில் விசுவரூபமாக இருக்க முடியும். அளவில் மட்டும் பெரியதாய் இராமல், ஆற்றலிலும் பெரியதாய் இருக்க வேண்டு மல்லவா. இத்தகைய விசுவருப தரிசனமே கிடைக்கிறது நமக்கு இங்கே சிவனுடைய நெற்றிக்கண், மான் மழு எல்லாம் இந்த உருவில் அமைந்து விடுகிறது. விஷ்ணுவோ தன் சங்கு சக்கரம், வில், வாள் எல்லா வற்றையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். இந்திரனுடைய வஜ்ஜிராயுதம், கேடயம் எல்லாம் வந்து சேர்ந்து கொள்கிறது.

யமனுடைய பாசத்தையும் சூலத்தையுமே பறித்துக் கொள்கிறான் அனுமன். இப்படியே பத்துக் கைகளிலும் பத்து ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை எல்லாம் தாங்கும் வலிமை பெற்ற விரிந்த மார்பும் திரண்ட தோள்களும் வேறே. தலையிலே நீண்டுயர்ந்த மணி மகுடம். இத்தனையும் ஏந்தி நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான தோற்றம். எல்லாம் சேர்ந்து கலை உலகத்தில் இந்தச் சிலா உருவத்திற்கு ஓர் உயரிய ஸ்தானத்தையே அளிக்கிறது.

இந்த உருவத்தைதான் பார்க்கிறீர்கள் பக்கத்திலே. வசதி உள்ளவர்கள் எல்லாம் நேரிலும் சென்று காணலாம். மாயவரம் தரங்கம் பாடி ரோட்டிலே திருக்கடவூருக்கு கிழக்கே மூன்று நான்கு மைல் போனால் - அனந்த மங்கலம் இங்கே இருக்கிறது என்று வடதிசையைக் காட்டிக் கொண்டு ஒரு கைகாட்டி நிற்கும். அந்தக் கைகாட்டிய திசை வழி அரை மைல் சென்றால் ஒரு சிறு கோயிலிருக்கும். மன்னார் குடியில் உள்ள ராஜகோபாலன் தன் துணைவி செங்கமல வல்லியுடன் தன் பக்தன்

நாயக்க மன்னன் ஒருவனுக்காக இங்கே புறப்பட்டு வந்து விட்டார் என்று கர்ண பரம்பரை கூறும் அந்த ராஜ

கோபால சாமி கோயிலிலே தான் இருக்கிறான், இந்த திரிநேத்ர சதுர் புஜஅனுமன். எனக்கு தோன்றுவது என்ன வென்றால். இந்த அனுமனு பெருமையை உணர்ந்த மக்கள் அன்றே இந்த ஊருக்கு அனுமந்த மங்கலம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதைத் தான் நாம் அனந்த மங்கலம் என்று இன்று சொல்லி திருப்தி அடைகிறோம் என்பது தான்.

அறிவாலே, ஆற்றலாலே, அன்பாலே சிறந்தவன் அனுமன் என்று கண்டோம். அவனது பேர் உருவை கல்லிலே, மரத்திலே, செம்பிலே உருவாக்கி வழிபடவும் தெரிந்து கொண்டோம். அறிவு, ஆற்றல், அன்பு எல்லாம் கலந்த ஒரு கலவையை, கல், மரம், செம்பு என்னும் மூன்று பொருளிலும் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கிறது நமக்கு. இதுபோதாதா என்று சொல்லத் தோன்றுகிறது எனக்கு.