ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/சிரிக்கத் தெரியுமா?


சிரிக்கத் தெரியுமா?

லிபாக்ஸ் பிரபுவின் வாழ்க்கையில் ஒரு ரஸமான சம்பவம். லார்ட் இர்வின் என்ற பெயரோடு சில வருஷங்களுக்கு முன் இந்தியாவின் வைஸ்ராய் பதவியில் அமர்ந்திருந்தவர்தான் . சுமார் இருபது இருபத்தைந்து வயது காளையாயிருந்தபோது ஒரு நாள் பயணம் புறப்பட்டார். அவருடைய சொந்த நாடாகிய ஆங்கில நாட்டிலே செல்லும் ரயிலிலே ஏக நெருக்கடி. வண்டியில் ஏறினார். உட்கார இடம் தேடினார்.

இரண்டு சீமாட்டிகளுக்கு இடையில்தான் கொஞ்சம் இடம் கிடைத்தது. அவர்களுக்கு மத்தியிலே உட்கார்ந்து கொண்டார். அங்கே எல்லா இடத்தும் ஆணும் பெண்னும் சரி நிகர் சமானமே. இரண்டு சீமாட்டிகளுக்கும் வயது முப்பது முப்பத்தைந்துக்கு மேல் இருந்தாலும் அவர்கள் மணம் ஆகாதவரே. இதையும் தெரிந்து கொண்டார் ஹலிபாக்ஸ்.

ரயில் சென்றது, பூமியின் அடியில் அமைந்திருக்கும் டன்னல்கள் வழியாக எல்லாம் சென்றது. அப்படிச் செல்லும் போது நீண்ட டன்னல் ஒன்று குறுக்கிட்டது. டன்னல் உள்ளே ரயில் போகும் போது எங்கும் ஒரே இருட்டு. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத இருட்டு. இந்தச் சமயத்தில் நமது வாலிப ஹலிபாக்ஸ் சிறுகுறும்பு ஒன்று செய்தார்.

தனது வலதுகையின் புறங்கையை வாயில் வைத்து 'இச்' என்று இரண்டு முத்தமிட்டு விட்டு நேரே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். முத்தமிட்ட சத்தம்தான் இரண்டு சீமாட்டிகளுக்கு கேட்டது. பிரபுவை முத்தமிட்டது அவளாக இருக்குமா என்று இவளுக்கு சந்தேகம், இவளாக இருக்குமா என்று அவளுக்குச் சந்தேகம்.

இதற்குள் ரயிலும் டன்னலைக் கடந்து வெளிப் பிரதேசத்திற்கு வந்து விட்டது. சீமாட்டிகள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள்.

ஹலிபாக்ஸோ இருவரையும் அப்படியும் இப்படியும் கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்திருந்து தொப்பியைக் கழற்றி தலையைத் தாழ்த்தி, இரண்டு சீமாட்டிகளையும் பார்த்து, 'உங்களில் என் வந்தனம் யாருக்கு உரியதோ' என்று குறும்பாக வேறே கேட்டுவிட்டு வண்டியிலிருந்து இறங்கிப் போய்விட்டார்.

ஹலிபாக்ஸ்-க்கு இது ஒரு வாலிப விளையாட்டு. நமக்கோ, ஆங்கில நாகரீக வாழக்கையின் ஒரு சிறு அம்சத்தை அறிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்தச் சம்பவம். எவ்வளவு தூரம் உண்மையோ அறியோம். இது கொஞ்ச காலத்திற்கு முன் பத்திரிகையில் வந்த செய்தி, சிறந்த ராஜ தந்திரியான ஹலிபாக்ஸ் பிரபு, நல்ல நகைச்சுவையுடை யவராயும் இருந்திருக்கிறார்.

அவர் சிரிக்கத் தெரிந்தவர் தான். ஆமாம், இந்தக் கிண்டல் வேலையை எல்லாம் செய்ய இவர் யாரிடம் கற்றுக் கொண்டார்? என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைசொல்கிறது ஒரு தமிழ்ப் பாட்டு. நல்ல அந்திமாலை நேரம் கயிலாயத்திலே பரமசிவனும் பார்வதிதேவியும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் சீமந்த புத்திரனான பிள்ளையார் இருவருக்கும் இடையே வீற்றிருக்கிறார். தாய்க்கும் தந்தைக்குமே தங்கள் மூத்த குமாரனிடத்தில் அளவில்லாத பிரேமை. அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிடுகிறார்கள் இருவரும். பார்த்தார் பிள்ளையார். ஒரு வேலை செய்ய நினைத்தார். மாறி மாறி முத்தமிடும் தாயும் தந்தையும் ஒருங்கே முத்தமிட முனைந்த நேரத்திலே சடக்கென்று தன் முகத்தைப் பின்னாலே இழுத்துக் கொள்கிறார்.

அந்த நேரத்திலே பரமசிவனது உதடுகள் பார்வதி தேவியின் அதரங்களிலே பொருந்தின. லோகமாதாவும் தந்தையுமே ஒருவரைஒருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். பிள்ளையாரோ, 'என் வேலை எப்படி! என்று கேட்பவர் போல இருவரையும் பார்த்து ஒரு சிறு நகை செய்கிறார். தாயும் தந்தையும் "பயல் பொல்லாத பயல்" என்று சொல்லி, பிள்ளையை - பிள்ளையாரைத்தான் - கட்டி அனைத்துக் கொஞ்சுகிறார்கள். இதைத்தான் நந்திக்கலம்பக ஆசிரியர்,

வார்ப்புரு:Bock center


என்ற காப்புச் செய்யுளாகப் பாடி விட்டார். எப்படி இருக்கிறது, எல்லாத் தெய்வங்களுக்கும் முன்னவனாய் முன்னிற்கும் பிள்ளையாரின் சிரிப்பு. இப்போது தெரிகிறது நமது ஹலிபாக்ஸ் பிரபு யாரிடம் டியூஷன் படித்திருக்க வேண்டும் என்று. சரியான இடம் பார்த்துத்தான் அவரும் 'தேங்காய்தட்டி'யிருக்கிறார்.

பிள்ளையார் தானும் சிரித்தார். பெற்றோரையும் சிரிக்க வைத்தார். நம்மையும் சிரிக்கப் பண்ணுகிறார். ஆனால் இவரையே சிரிக்க அடித்தார்களே சில பெண்கள் அது தெரியுமா எப்படி என்று? சின்னஞ்சிறிய பெண்கள் சிலர் கூடி சிற்றில் கட்டி அதில் மண்ணால் சோறு, கறி முதலியன ஆக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வந்து சேருகிறார் பிள்ளையார். அவர் தோற்றம், அவர் நடந்து வரும் அழகு எல்லாவற்றையும் கண்டு சிறு பெண்கள் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விடுகிறார்கள்.

தன் உருவத்தைக் கண்டுதான் இந்தச் சிறு பெண்கள் சிரிக்கிறார்கள் என்று தெரிந்து விடுகிறது அவருக்கு. உடனே கோபமாகச் சென்று அவர்கள் கட்டியிருந்த சிறு வீட்டை எல்லாம் அழிக்கிறார் இவர். பெண்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்தச் சிறு பெண்களிலே ஒருத்தி, கொஞ்சம் துடியானவள், பயபக்தியுள்ளவள் போல் நடித்துக் கொண்டே பிள்ளையாரை நெருங்குகிறாள்.

'ஸ்வாமி' நாங்கள் சமையல் எல்லாம் செய்து முடித்து விட்டு, உடனிருந்து உண்பதற்கு விருந்தினர் ஒருவரும் இல்லையே என்று ஏங்கியிருந்தபோதுதான் தாங்கள் வந்தீர்கள். தங்களை விடச் சிறந்த அதிதி எங்களுக்குக் கிடைக்கவா போகிறது? தங்கள் வருகையால் ஏற்பட்ட அளவு கடந்த சந்தோஷத்தினால் சிரித்தோமேயல்லாமல், தங்களுடைய யானைத் தலையையாவது, அல்லது குட்டுக்குட்டென்ற கால்களால் 'தத்தக்கா புத்தக்கா' என்று தாங்கள் நடந்து வருவதைக் கண்டாவது நாங்கள் சிரிக்கவே இல்லை. அப்படியெல்லாம் சிரிப்போமா என்ன? விபரீதமாக நினைத்துக் கொள்ளதேயுங்கள். ஸ்வாமி” என்று வெகு நைலாகச் சொல்கிறாள்.

தாங்கள் சிரித்ததற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்ளும் போதே உண்மையிலே தாங்கள் எதற்காகச் சிரித்தார்கள் என்பதையும் அல்லவா சொல்லிவிடுகிறாள் அந்தச் சிறு பெண்.

{{block_center|

விருந்து விளிப்போம் எனக் கருதும்வேளை
அடிகேள்! இவண் நீயே
விரும்பி வந்தாய் என மகிழ்ச்சி
மீக் கூர்தலினால் செவ்வாயின்
முருந்து தோன்ற முறுவலித்தோம் அல்லால்
ஒரு நின் கரிமுகம் போல்
முகமும், பூதப் பெருவயிறும் முடங்கும்
குறள்தாள் நகு நடையும்,
இருந்தவாறு நோக்கி நகைத்திட்டேம்
அல்லேம்; இடந்தோறும்
இருக்கு முழங்கும் தேவாரத்திசையும்
துவன்றி ஓங்கவளம்
திருந்தும் கலசைச் செங்கழுநீர்ச்சிறுவா
சிற்றில் சிதையேலே!
தெள்ளத் தெளிந் தோர்க்கு அள்ளுறும்
செல்வா சிற்றில் சிதையேலே!

என்று செங்கழுநீர் விநாயகரைப் பார்த்து அந்தச் சிறு பெண் சொல்லித் தாங்கள் கட்டிய சிறு வீட்டைச் சிதைக்காதிருக்க வேண்டிக் கொள்கிறாள். வேண்டிக் கொள்வதாகச் சொல்கிறார், மாதவச் சிவஞான சுவாமிகள்.

பிள்ளையாரும் இந்த சாகசப் பேச்சில் ஏமாந்து சரிதான் என்று தலையை அசைத்து விடுகிறார். பெண்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். பிள்ளையாரோ தானும் சிரிக்கிறார். மற்றவர்களையும் சிரிக்கவைக்கிறார். ஆனால் பெண்களோ, தாங்கள் சிரிப்பதுடன் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதுடன் அமையாமல், பிள்ளையாரைப் பார்த்து சிரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தப் பெண்களும் சிரிக்கத் தெரிந்தவர்கள்தான். எவ்வளவு அருமையான தத்துவம். அதை விளக்குவதற்கு எவ்வளவு அருமையான பாட்டு. எல்லாம் தமிழில் தான்.

சிரிக்கத் தெரிவது நல்லது. வாழத்தெரிய வேண்டுமானால் சிரிக்கத் தெரிய வேண்டும். சிரித்துச் சிரித்து அதனால் உடல் பருத்துப் பருத்து வாழ் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. மனிதனுக்கு இன்பம் வரும் போதெல்லாம் தான் சிரிக்கத் தெரியுமே! விலாவெடிக்கச் சிரித்து விடுவான். ஆனால் துன்பம் என்று ஒன்று வந்து விட்டாலோ. மூலையைத் தேடி உட்கார்ந்து, மூக்கைச் சிந்திச் சிந்திப் போட்டு அழுது தீர்த்து விடுவான். இவன் எப்படி வாழ முடியும்? வாழ்க்கையில் இன்பத்தைவிடத் துன்பம் தானே அதிகம். துன்பம் என்று ஒன்று உண்டோ இல்லையோ? தன் மனதிற்கு ஒவ்வாதவைகளையெல் லாம் துன்பம் துன்பம் என்று தானே எண்ணித் துயரடை கிறான் மனிதன். இப்படித் துயருறும் மனிதன் அல்லவா சிரிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தானே நமது திருவள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொல்லுகிறார்.

ஆனால் இந்த உலகத்தில், அழுது தீர்த்தால்தான் மனவேதனை தீரும் என்று எண்ணுகிறவர்கள் பலர். உண்மை என்னவோ அதற்கு மாறானதுதான். ஒருவன் எவ்வளவுதான் அழுதாலும் அது தீரவே தீராது. துன்பங்களும் துயரங்களும் மனிதன் அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்தால்தான் திரும். துன்பத்தில் உழலும் போது எப்படி ஐயா சிரிக்கவரும்? என்று கேட்கலாம். இந்த உலகம் போகிற போக்கையும் அதில் வாழும் மக்களின் நிலையற்ற வாழ்க்கையும் நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும்.

நாம் இதைப் பெற வேண்டும், அதை அடைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோமே அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோமே. அடடா அப்படி நாம் அந்தப் பொருள்களையோ, பதவிகளையோ அடைந்து பெறும் லாபம் தான் என்ன என்று எண்ணினால் சிரிப்பு வரும்.

நாம் இந்த உலகில் சிலரை உற்ற சிநேகிதர்கள் என்றும் சிலரை ஜன்ம விரோதிகள் என்றும் எண்ணி சிலரோடு அளவளாவியும், இன்னும் சிலரை அண்டவிடாமலும் வாழ்கிறோமே. இந்த நண்பர்களும் சத்துருக்களும் எத்தனை நாளைக்கு நிலைப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் தானாகவே சிரிப்பு வரும்.

மேலும் சிரிப்பதற்குக் காரணங்களா இல்லை. நாம் உலகத்தை நன்றாய் அறியாமல் போனோமே என்று நம்மை நினைத்தே சிரிக்கலாம். உலகத்துக்கு நம்மைத் தெரிந்துகொள்ளும் சக்தி இல்லையே என்று அந்த உலகத்தையே எண்ணிச் சிரிக்கலாம். வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுதல்கள் திருத்த முடியாதபடி எவ்வளவோ சிக்கலாகி இருக்கின்றனவே என்று எண்ணும்போது தானாகவே சிரிப்பு வரும்.

நம்முடைய ஆசைகள் பூர்த்தியாகமல் போனதற்குக் காரணம் நாம் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை தானே? நிறைவேறவில்லை என்றெல்லாம் எண்ணி னால் சிரிப்பு வராதா சிநேகிதர்கள் என்று சொல்லுகிற வர்களின் நட்பு எவ்வளவு பொய்ம்மை நிரம்பியது. சத்ருக்களின் விரோதத்திலேயும் உண்மையில்லையே என்ற விஷயங்களை எல்லாம் மனத்துள் சிந்தித்துப் பார்த்தோமானால் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

சிரிப்பதற்குக் காரணம் என்று ஒன்றைத் தேட வேண்டிய அவசியமே இராது. இந்த அரிய உண்மை களைத்தானே நமது தெய்வங்கள், நமது மூர்த்திகள் நமது முன்னோர்கள் அவரவர்கள் வாழ்க்கையிலே நமக்குக் காட்டிப் போயிருக்கிறார்கள்.

பிள்ளையார், தன் தாய் தந்தையரைப் பார்த்தே சிரித்தார். ஆனால் அவரையே சிரிக்க அடித்துவிட்டார்கள் பெண்கள். தமிழ் இலக்கியங்களில் இந்தத் தெய்வச் சிரிப்பு - விதம் விதமாக எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உலகம் உய்ய நடம் ஆடிய அந்த நடனராஜனது உதடுகளிலே தவழ்வது ஒரு நல்ல குமிண் சிரிப்பு. இந்தச் சிரிப்பிற்கே அடிமையாகி விடுகிறார், அப்பர் பெருமான். அப்படியெல்லாம் பக்தர்கள் உளம் களிக்க மெய் சிலிர்க்கச் சிரித்த சிவபெருமானே, சிரித்தே அழிக்கிறார் திரிபுரத்தை. வாழ்விக்க உதவுவது போலவே அழிக்கவும் உதவுகிறது சிரிப்பு.

இந்த திரிபுரதகனத்தில் சிவபெருமான் சிரித்ததை விட அதிகோரமான சிரிப்பொன்றும், இலக்கியத்தில் இடம் பெற்றுத்தான் இருக்கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் அருளிய ராமாயணத்திலே அந்தச் சிரிப்பு நித்யத்வம் பெற்றிருக்கிறது என்றால் கேட்பானேன்.

ராமகதைக்குள்ளே ஒரு குட்டிக் கதை. இரண்யன் சம்ஹாரக் கதைதான். சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான் ராவணன். அவன் செய்தது தவறு.

என்பதை இடித்துக் கூற விரும்புகிறான், அவனுடைய தம்பி விபீஷணன். எல்லாம் வல்ல இறைவனையே 'தூ' என்று தள்ளி தன்னிச்சையோடு உலகாண்டவீரன் இரண்யன் அழிந்த வரலாற்றை சாங்கோபாங்கமாக எடுத்துரைக்கிறான். இரணியன் உலகளந்த உத்தமனாகிய பூரீமன் நாராயணனை எவ்வளவுக் கெவ்வளவு வெறுத்தானோ, அவ்வளவுக் அவ்வளவு போற்றுகிறான் அவன். மகன் பிரஹலாதன். தந்தைக்கும் மகனுக்கும் வாதம்.

பள்ளிக்கூடம் ஆனாலும் சரி வேறே எங்கேயானாலும் சரி, 'இரண்யாய நம:' என்றே குட்டுப் போட வேண்டுமென்கிறான் இரணியன். இல்லை "ஓம் நமோ நாராயணாய, என்று தான் ஆரம்பிப்பேன் என்கிறான் பிரஹலாதன் தான் கெட்டதும் அல்லாமல் ஊராரையு மல்லவா கெடுக்கிறான் மகன் என்று எண்ணுகிறான் தந்தை.

பெற்ற மகனை ஜன்ம விரோதியாகவே பாவித்து என்ன என்ன வெல்லாமோ செய்து கொல்லப் பார்க்கிறான். அத்தனைக்கும் தப்பித்து விடுகிறான் பிரஹலாதன். அதன் பின்னும் தந்தை முன் கம்பீரமாகத் தன் சித்தாந்தத்தை நிலை நாட்ட வீறுகொண்டெழுகிறான் இருவருக்கும் வாதம் முற்றுகிறது. "நீ போற்றும் ஹரி எங்கிருக்கிறான? இங்கிருப்பானா? அங்கிருப்பானா? என்றெல்லாம் கேட்டு உறுமுகிறான் இரணியன். "அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தொட்டஇடமெல்லாம் தோன்றுவான் அவன்" என்றே முறைக்கிறான் மகன்.

சாணினும் உளன், ஓர்த்தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன், மாமேருக்
குன்றினும் உளன், இந்நின்ற

தூணினும் உளான், நீ சொன்ன
சொல்லினும் உனன், இத்தன்மை
காணூதி விரைவில் என்றான்
நன்றெனக் கனகன் சொன்னான்.

தூணையே எற்றுகிறான் இரணியன். பிளந்த தூணி லிருந்து புறப்படுகிறான் நரசிம்மன்.எப்படிப் புறப் படுகிறான்? அது நம்மால் சொல்லத் தரமன்று. கம்பர் தான் சொல்ல வேண்டும்.

நசை திறந்து, இலங்கப் பொங்கி
நன்று நன்று! என்ன நக்கு
விசை திறந்து உருமிவீர்ந்தது
என்னவே தூணில் வென்றி
இசைதிறந்து உயர்ந்த கையால்
எற்றினன், எற்றலோடும்
திசைதிறந்து அண்டம் கீறி
சிரித்தது செங்கண் சீயம்

என்று பாடுகிறார் கம்பர். என்ன பயங்கரமான சிரிப்பு. ஆனால் இந்தச் சிரிப்புக்கு இரணியன் பயந்தானா? "ஆரடா! சிரித்தாய்! போரடா பொருதியாயின் புறப்படு புறப்படு என்று தானே சிரித்துக் கொண்டு ஆரவாரிக்கிறான். இது மட்டுமா? இந்த ஹரியை வணங்கி வாழும் தன் மகன் பிரஹலாதனைப் பார்த்தும்

கேளிது! நீயும் காண
கிளர்ந்த கோளரியின் கேழில்
தாளொடு தோளும் நீக்கி
உன்னையும் துணித்துப் பின் என்
வாளினைத் தொழுவதெல்லால்
வணங்குதல் மகளிர் ஊடல்

நாளினும் உளதோ என்றான்
அண்டங்கள் நடுக்க நக்கான்

என்று தானே கோரமாகச் சிரிக்கிறான் - 'ஆ' இந்தச் சிரிப்பு பயங்கரத்தையும் வென்ற பயங்கரச் சிரிப்பாக அல்லவா இருக்கிறது. அடடா இறைவன்தான் எப்படி எப்படி எல்லாம் சிரிக்கிறான். அவனையே பார்த்து இந்த மனிதனும் எப்படி எல்லாம் சிரிக்கப் படித்துக் கொண்டான்.