ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/வழிகாட்டும் விநாயகர்

வழி காட்டும் விநாயகர்

கம்பன் பிறந்த தேரழுந்துாரில் ஒரு சிறப்பு. வேதபுரி ஈஸ்வரனான சிவனும் ஆமருவியப்பன் என்னும் விஷ்ணுவும் எதிர் எதிரே கோயில் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிவன் மேற்கே பார்க்க இருந்தால் விஷ்ணு கிழக்கே பார்க்க நிற்கிறார். இருவருக்கும் சந்நிதி வீதி ஒன்று தான். அத்தனை சமரச மனோபாவம் இருவருக்கும். இந்தத் தலத்திற்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். அவரது தல யாத்திரையில் அவர் வந்த வழி இரண்டு பெரிய கோயிலுக்கும் மத்திய பாகமான இடம். அங்கிருந்து கிழக்கே திரும்பினால் ஒரு கோபுரம் காணப் படுகிறது.

எந்தக் கோயில், தனி வழிபடு தெய்வமான வேதபுரி ஈஸ்வரர் கோயில் என்று அறியக்கூடவில்லை. இந்த நிலையில் அங்குள்ள தேரடியில் ஒரு சிறு பிள்ளையார் இருந்திருக்கிறார். அவர் தன் கை தூக்கி வேதபுரி ஈஸ்வரன் கோயிலுக்கு வழி காட்டியிருக்கிறார். அதன் பின் சிரமம் இல்லாமல் சம்பந்தர் கிழக்கு நோக்கி நடந்து சிவன் கோயில் சென்றிருக்கிறார். வேதபுரியானைப் பாடிப்பரவி இருக்கிறார். அன்றிலிருந்து அந்த தேரடிப் பிள்ளை யாருக்கு வழிகாட்டி விநாயகர் என்ற பெயர் நிலைத் திருக்கிறது.

உண்மைதானே. வாழ்க்கையில் பாதை தெரியாமல் துயர் உறுகிறவர்கள் தான் எத்தனை எத்தனை பேர். அத்தனை பேருக்கும் வழிகாட்டியாக அமைவதற்கு ஒரு பிள்ளையார் கிடைத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே கிடைத்தும் இருக்கிறது. இந்தத் தமிழகத்தில் விநாயக வணக்கம் நீண்ட காலமாக, தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று நாளும் வளர்ந்து வந்திருக்கிறது.

விநாயகர் தமிழ் நாட்டுக் கடவுளா, இல்லை வட நாடு இருந்து தென்னாடு வந்தவர் தானா, என்று ஒரு கேள்வி. பல்லவ மன்னன் நரசிம்மவர்மன், சாளுக்கியரது தலை நகராம் வாதாபி மீது படை கொடு சென்று, அந்நகரைத் தீக்கு இரையாக்கி மீண்ட போது, அந்நகர் கோட்டை வாயிலில் இருந்த விநாயகரைப் பேர்த்து எடுத்து வந்து தன் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியிலே பிரதிஷ்டை செய்தார் சேனாதிபதி பரஞ்சோதி என்பது கதை.

இந்த வரலாற்றுப்படி கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் அவர் தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேணும் என்றாலும், சில ஆராய்ச்சி வல்லுநர்கள், விநாயகர் தமிழர்களின் பழந்தெய்வம் என்பதற்கு எல்லாம் பல சான்றுகள் காட்டுகிறார்கள். இதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை. கலை உலகிலே இந்த விநாயகர் எப்படி உருவானார், அவரைப் பற்றிய வரலாறுகள் என்ன என்று அறியவே இக்கட்டுரை.

விநாயகரது பிறப்பைப் பற்றி எத்தனையோ கதைகள். அவைகளில் சில மிக மிகக் கேவலமான கதைகளும் கூட என்றாலும் இரண்டு கதைகள் பிரசித்தமானவை; நம் கவனத்தைக் கவரக் கூடியவை.

உமையும் சிவனும் ஒரு நாள் உய்யான வனத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பிடியும் களிறும் கலவியில் களிப்பதைக் காணுகிறார்கள், அம்மையும் ஐயனும் பிடியும் களிறுமாக மாறிக் களிக்கின்றனர். அந்தக் கலப்பில் பிறக்கிறார் விநாயகர். இப்படிக் கூறுகிறது. சுப்பிரபேத ஆகமம். அதையே சொல்கிறார் ஞான சம்பந்தர்.


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன்.


என்று. அதையே கொஞ்சம் மாற்றிக் கூறுகிறது காஞ்சிப் புராணம், சிவபிரானும் உமையும் ஒர் உய்யான வனத்திற்குச் செல்கிறார்கள். அங்குள்ள மந்திர சாலையில் பிரணவம் எழுதப் பெற்றிருக்கிறது, அதையே ஊன்றி நோக்குகின்றனர் இருவரும், அந்த நோக்கிலே விநாயகர் அவதரிக்கிறார் என்று.

இந்த புராணக் கதைகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் இவர் பிறந்தது கலைஞனது சிந்தனையில்தான். மக்கள் மாக்களுக்குள்ளே உருவத் தாலும் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்து விளங்குவது யானை. வயதால் கூட 120 வருஷம் வரை ஜிவித்திருக்கக் கூடியது அது. அதனால்தான் உலகத்தைத் தாங்கி நிற்கும் அஷ்ட திக்கஜங்களாக அதனைக் கற்பித்திருக்கிறார்கள், நமது முன்னோர். எவ்வளவோ வலிமையுடையதாக இருந்தாலும் ஒரு கட்டுக்குள் அடங்கி நிற்கும் இயல்பும் வாய்க்கப் பெற்றிருத்தலால், விரிந்த மனத்திற்கும், நிறைந்த அறிவுக்கும், உருவம் கொடுத்துக் கடவுளை உருவாக்க எண்ணியபோது, களிற்றின் உருவத்தைக் கற்பித்திருக்கிறான் கலைஞன். கண்டது, கேட்டது, உணர்ந்தது எல்லாவற்றையும், எக்காலத்தும் மறவாத அதி அற்புத ஞாபக சக்தி யானைக்கு உண்டு என்பதை எத்தனை எத்தனையோ கதைகளின் மூலம் அறிவோம் நாம். மிக்க வலிமை பெற்றிருக்கின்ற அதே நேரத்தில், அளப்பரும் சாந்தமும் உடையது யானை. இதம் செய்வார்க்கு வசமாய் உதவுவதிலும் யானையை விடச் சிறந்த உயிரே இல்லை என்பது அறிஞர் துணிபு ஆதலால் அருங்குனங்கள் பல அமைந்த யானையின் தலையுடன் ஒரு கடவுளை உருவாக்கிய கலைஞன் பாராட்டுவதற்கு உரியவன் தானே. -

முடிவும் அறிவும், அதாவது சித்தியும், புத்தியும் விநாயகருக்குத் திருவடிகள் - இல்லை - திருவடி வருடும் தர்மபத்தினிகள் ஆகின்றார்கள், தாழ்செவி, சர்வ சக்தியையும், ஏகதந்தம் பரஞானத்தையும், ஒடிந்த தந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறுமையையும் அறிவிக் கும் அடையாளங்களாக அமைகின்றன. எல்லாவற்றினுக் கும் மேலாக உலகம் தோன்றுவதற்கு மூலகாரணமாம், 'ஓம்' என்னும் பிரண்வ உருவத்திலேயே தெய்வத் திரு உரு அமைகிறது. அதன் மூலம் அந்தத் திரு உருவே அறிவுக்கு அறிவாகவும், எங்கும் வியாபித்து நிற்கும் பரம்பொருளாகவும், யாவராலும் அறியப்படாத நிலையிலேயும் எல்லோராலும் வணங்கப்படும் இயல் புடையதாகவும், இறைவனுடைய தன்மைகள் எல்லாம் நிறைந்து நின்று மக்களுக்கு அருள் செய்யும் திருக் கோலமாகவும் அமைந்து விடுகிறது.

விநாயகர் வணக்கம் நீண்ட நாளாகவே தமிழ் நாட்டில் நிலைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல; எந்தத் தெய்வ வழி பாடும் விநாயக வணக்கத்தை முதன்மையாக வைத்தே நடந்து வருகிறது. விநாயகரை வணங்காமல் ஆரம்பித்த காரியங்கள் முட்டின்றி நிறைவேறுவதில்லை. நிரம்பச் சொல்வானேன். திரிபுரம் எரிக்கப்புறப்பட்ட சிவபிரான் விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். அவ்வளவுதான், தேரின் அச்சு முறித்து விட்டது. விநாயக வணக்கம் செய்த பின்பே தேர் நகர்ந்தது; 'திரிபுராந்தகர்' என்று பெயர் பெற்றார். தந்தை பாடுதான் இப்படி என்றால் தம்பி பாடும் இதே கதைதான். கோலக் குறமகள் வள்ளியை மணக்க விரும்பிய குமரனும் அண்ணன் விநாயகரை மறந்து விட்டான். அவ்வளவு தான்; எத்தனையோ இடையூறுகள் வள்ளியை மணக்க - ஏன்? - அவள் சம்மதமே பெற. கடைசியில் உணர்ந்தான். முருகன் தன் தவறை, அண்ணாவைப் பிரார்த்தித்தான் அன்போடு. அவரும் சமய சஞ்சீவியாக ஆனை உருவிலேயே வந்து, தம்பி விரும்பிய பெண்ணை, ஆம் வள்ளியை அவனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.

சரிதான், எல்லாத் தேவர்களும் - ஏன்? எல்லா மனிதர்களுமே பிள்ளையார் குட்டு குட்டி விட்டுத்தான் தங்கள் காரியங்களைத் துவக்குகிறார்கள். பிள்ளையார் சுழி போடாமல் எதையுமே எழுதத் தமிழன் முனைவ தில்லை. இப்படி முன்னவர்க்கும் முன்னவனாய் நிற் கின்றவர், பிள்ளையார். அதனால்தான் சிவன் கோயிலில் மட்டுமல்ல விஷ்ணு கோயிலிலுமே அக்ர ஸ்தானம் கிடைத்து விடுகிறது, அவருக்கு. சிவன் கோயிலில் பிள்ளையாராக, விநாயகராக, கணபதியாக முன் நிற்பவர் தான் பெருமாள் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராக கோபுர வாயிலிலேயே அமர்ந்து விடுகிறார்; எல்லோரும் வனங்கும் முதல் தெய்வமாக ஆகிவிடுகிறார்.

இப்படி தமிழ் நாட்டிலேயே காணும் விநாயக வணக்கம் பிறநாடுகளுக்கும் பரவியிருக்கிறது. கடல் கடந்தும் சென்றிருக்கிறது. எல்லோராக் குகையில் எழுந் தருளியதோடு நின்று விடாமல், குஜராத்திலும் ஜைனர்கள் மாத்திரம் என்ன, பெளத்தர்களுமே விநாயகரை வணங்கி வருகிறார்கள். கணபதி இருதயம்' என்னும் மந்திரத்தை உருவேற்றுகிறார்கள். இத்துடன் ஜாவாவில், ஜப்பானில், சைனாவில், நேபாளத்தில் எல்லாம் இந்த விநாயக வணக்கம் பரவியிருக்கிறது.

இப்படியெல்லாம் கலைஞனது சிந்தனையில் உருப் பெற்று மக்களால் எல்லாம் வணங்கப் பெறும் இக் கடவுளின் திருவுருவத்தைச் சித்திரத்திலே எழுதினார்கள்; கல்லிலே செதுக்கினார்கள், செம்பிலே வடித்தார்கள் தமிழர்கள். பால கணபதி, மகா கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, வாதாபி கணபதி, ஹேரம்ப கணபதி, பிரசன்ன கணபதி, உச்சிஷ்ட கணபதி என்றெல்லாம் எண்ணற்ற பெயர்களால் அழைத்தார்கள். இம்மட்டோ, ஆதி விநாயகர், சோம விநாயகர், மாணிக்க விநாயகர், வரசித்தி விநாயகர் என்றும் பெயரிட்டு, இதை விட இன்னும் அருமையாக ஆண்ட பிள்ளையார், வேதப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார், கள்ள வாரணப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார் என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பாராட்டப் பெற்ற விநாயகரை கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் மட்டும் பூட்டி வைத்துவிட வில்லை தமிழர்கள். ஊர் ஊராக, தெருத் தெருவாக, சந்தி சந்தியாக, பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள். பெரியவர்கள் மாத்திரம் அல்ல, பாமரர்கள், ஜாதியால் உயர்ந்த வர்கள் மாத்திரம் அல்ல. தாழ்ந்த இனத்தவர்கள் எல்லோரும் கண்டு தொழ, நெருங்கிப் பழகத் தகுந்த முறையில் எல்லாம் அமைத்திருக்கிறார்கள்.

தமிழ்க் கலைஞனது ஆசை இத்துடன் நின்றுவிட வில்லை. பிள்ளையாரை உட்கார வைத்துப் பார்த்திருக்கிறான். நிற்க வைத்தும் நோக்கியிருக்கிறான்; நடம் ஆட வைத்துக் களித்திருக்கிறான்; நடனம் ஆடும் விநாயகரை நர்த்தன விநாயகர் என்று நாம கரணமும் செய்திருக்கிறான்.

இந்த உலகமே ஒரு சுழற்சியில் வசப்பட்டது தானே. அதனால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் ஆடத்தானே செய்ய வேண்டும். உலகம் ஆட, உயிர்கள் ஆட, மேரு பர்வதம் போன்ற பெரிய பொருள்களும் ஆட விசால மான ஆகாசத்திலே அண்டங்களும் ஆடுகின்றன. இறைவன் ஆடும் போது அப்போது உள்ளத்தோடு உள்ளமாய் கலந்து நிற்கும் விநாயகரும் ஆடுகிறார் என்கிறார் அதிகார அடிகள்.

நிலந்துளங்க, மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்க சப்பாணி கொட்டும் - கலந்து உளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கட தடத்து

மாமாரி ஈன்ற மணி

என்பது தானே பாட்டு. இந்த அற்புத தத்துவத்தை விளக்கும் அழகிய திரு உருவம் தான் நர்த்தன விநாயகர்.

இன்னும் அவரையே, மூவிக வாகனத்தில் ஏறி சவாரி செய்து கொண்டு அவசரம் அவசரமாக எங்கேயோ ஒடும் கோலத்திலும் காணலாம். அப்படி ஒடும் கணபதி தான் வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத் திலே ஒரு கல்தூணிலே இருக்கிறார். அந்த கல்யாண மண்டபத்துச் சிற்பங்களை எல்லாம் கண்டு களித்த மேலை நாட்டு ரஸிக வைஸ்ராய் ஒருவர் மண்டபத்தையே பெயர்த்து, துரண்களை எல்லாம் எடுத்து கப்பல் ஏற்றி, ஆங்கில நாட்டுக்குக் கொண்டு போய் அங்கே மண்டபத்தைத் திரும்பவும் கட்டி முடிக்கத் திட்டமிட்டு விட்டார். இந்த திட்டம் நிறைவேறாமல் போகத்தான் இத்தனை விரைவில் இந்த பிள்ளையார் ஒடியிருக்க வேண்டும். திட்டமிட்டபடி கப்பல் வந்து சேரவில்லை. கல்யாண மண்டபமும் கப்பலில் ஏற வில்லை, எல்லாம் இந்த மூவிக வாகனர் செய்த வேலை காரணமாகததான். இன்னுமொரு திருவுருவம் ஹேரம்ப கணபதி என்ற பெயரோடு. இவரையே பஞ்சமுக விநாயகர் என்று அழைக்கிறார்கள் மக்கள். ஒற்றை முகமும், ஒரு கோடும் உடையவர், மூஷிக வாகனத்தில் சவாரி என்றால், ஐந்து முகமும் அதற்கேற்ற கரங்களும் உடையவர் ஏறிச் சவாரி பண்ண வேண்டுவது சிம்ம வாகனத்தில் தானே? இந்தத் திருவுருவத்தை எல்லா இடத்திலும் காண்பது இயலாது. செப்பு விக்கிரக உருவில் ஒன்றிருக்கிறது. நாகப்பட்டினம் நீலாயதாகூஜி அம்மன் கோயிலிலே. இந்தத் திருவுருவங் களோடு வைத்து எண்ணப்பட வேண்டியவரே பிள்ளையார் பட்டிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவத்துக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு. இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர், இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும் பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்மாசனத் திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக் கரத்தில் மோதகம் தாங்கி, இடக்கரத்தை இடையில் பொருத்தி பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுக்கிறார். ஆம், ஆதிநாளிலே இப்படி இரண்டு திருக்கரத்தோடு உருவானவர்கள் தான், பின்னர் நான்கு திருக்கரங்களோடு எழுந்து நின்று, நடந்து நடமாடி மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்பவராகக் கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாரைப் பற்றித்தான் எத்தனை எத்தனை கதைகள். சிவபுராணம், விநாயக புராணம், காஞ்சிப் புராணம் முதலிய நூல்களில், ஒரு சில கதைகள் ரஸமானவை; நல்ல அனுபவத்தின் அடிப்படையிலே உருவானவை; சிறந்த உண்மைகளை உணர்த்துபவை.

நம் நாட்டின் இதிகாசங்கள், இராமாயணம், பாரதம் என்பதை எல்லோரும் அறிவர், பாரதத்தை இயற்றியவர் வியாசர் என்பதையும் தெரிவோம். அந்த வியாசருக்குக் கற்றுச் சொல்லியாக அமைந்து பாரதத்தையே எழுதியவர் விநாயகர் என்பது வரலாறு. பாரதத்தை எழுதத் திட்ட மிட்டார் வியாசர்.

அதை அவர் சொல்லும் வேகத்தோடு வேகமாய் விரைவாய் எழுத வேண்டுமே. அதற்கு ஒரு ஆள் தேடினார். நல்ல அறிவுடைய பிள்ளை, ஆற்றல் மிகுந்த பிள்ளை, விநாயகரையே தேர்ந்தெடுத்தார். எண்ணா யிரத்து எண்ணுறு சுலோகங்கள் விரைவாகச் சொல்லிக் கொண்டே போனார் வியாசர் எழுதிக் கொண்டே வந்தார் வினாயகர். இடையே எழுதும் கோல் கூர் மழுங்கி எழுத்து வேகம் தடைப்பட்டது.

ஆனால் ஏகாக்கிர சித்தத்தோடு சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு வந்த வியாசரோ நிறுத்தவில்லை. வினாயகரோ அவரது உணர்ச்சி வேகத்தைத் தடை செய்ய விரும்பவில்லை. எழுத்தாணி கூர் மழுங்கியதை அப் படியே துர எறிநது விட்டு, தன்னுடைய கொம்புகளில் ஒன்றையே ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு தொடர்ந்தே எழுதி முடித்தார் பாரதத்தை. நல்ல ரஸமான கதை. "சோர்வில்லாமலே எக்காலத்தும் பிள்ளைகள் படிக்கவும் எழுதவும் வேண்டும்' என்று எடுத்துக் காட்டும் நல்ல பிள்ளையாக அல்லவா பிள்ளையார் அமைந்து விடுகிறார். அதனால் தான் பிள்ளையார் இன்றும் பிள்ளைகளின் தெய்வமாகவே வாழ்கிறார், வணங்கப்படுகிறார்.

பிள்ளைகளுக்கு உகந்தவராக மட்டும் பிள்ளையார் இல்லை. நாட்டு மக்களுக்கும் நல்லவராக நடந்திருக்கிறார். "கங்கை யென்னும் கடவுள் திருநதியையே காவிரியாகத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தவரும் அதனால் நாடு நலம் பெறச் செய்தவரும் அவரே தான். கதை இது தான்.

கயிலை மலையிலே திருக்கல்யாணம், பார்வதி தேவிக்கும், பரமசிவனுக்கும். தேவர்களும் மற்றவர்களும் திருமணம் காண கூடிவிட்டார்கள் அங்கே. அதனால் வட நாடு தாழ்ந்து தென்னாடு துக்கி விட்டது. நாடு சமன் செய்யப்பட வேண்டும் உடனே, என்று கருதினார் பரமசிவன். கல்யாணத்துக்கு வந்த விருந்தினர்களைத் திருப்பி அனுப்புவதோ இயலாத காரியம். ஆதலால் தன்னை யொத்த தவவலிமை உடைய அகத்திய முனிவரையே தென் திசை செல்லுமாறு பணித்தார்.

அகத்தியரும், புறப்படும் போது பரமசிவனது திரு முடியில் உள்ள கங்கையை தன் கமண்டலத்தில் ஏந்தி தன்னுடன் கொண்டு வர மறக்கவில்லை. வருகிற வழியில் நித்திய கர்மங்களை முடிக்க வேண்டி தன் கமண்டலத் தைத் தரையில் வைத்தார். சமயம் பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் இது தான் தக்க தருணம் என்று எண்ணி, காக உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். ஒடிப்பெருகியது கங்கை தமிழ் நாட்டில். காகத்தால் கவிழ்க்கப்பட்ட கங்கைதான் அன்று முதல் காவிரியானாள் தமிழ் நாட்டில். 'காகம் கவிழ்த்த காவிரிப்பாவை’ எனப் பாடப்பெறும் பேறும் பெற்றாள். இதனால் நாடு வளம் உற்றது. சோழ வளநாடு சோறு பெற்றது. ஆம், எல்லாம் விநாயகர் அருளினால்தான்.

தமிழ் நாட்டில் பிள்ளையாரை வணங்கி வீடு பெற்றவர்கள் கதை அனந்தம் என்றாலும், வாழ்வோடு வாழ்வாக பிள்ளையாருடன் ஒட்டிக் கொண்டவள் ஔவைப் பிராட்டி. இளமையிலேயே பிள்ளையார் வணக்கம் அவள் உள்ளத்தில் ஊன்றி விட்டது.

வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.

என்று தமிழ் நாட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் போதித்தவர் அவர் தான்.

“சீதக் களபச் செந்தா மரைப்பூவும்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
"

என்றெல்லாம் பாடி விநாயக வணக்கத்தைத் தமிழர்கள் உள்ளத்தில் எல்லாம் ஊன்றச் செய்தவரும் அவரே தான். அவர் முக்தியடைந்ததும் அந்தப் பிள்ளையார் மூலமே தான். கதை நல்ல அற்புதமான கதை.

சேரமன்னர், சேரமான் பெருமாள் நாயனாரும், அவரது தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரும் நாட்டில் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர், கயிலாயம் நோக்கிப் புறப்பட்டனர். இருவரும் சென்றனர் யானைமீதும், குதிரை மீதும் ஏறிக்கொண்டு. செல்லும் வழியில் ஒளவையைக் கண்டனர். அந்த அம்மையையும் உடன் வர அழைத்தனர். அம்மையோ அப்போது விநாயகருக்குப் பூசை செய்து கொண்டு இருந்தார். நண்பர் களுடன் எளிதாகக் கயிலாயம் செல்லலாமே என்ற ஆசை ஒளவையாருக்கு. ஆதலால் விரைவிலேயே பூசையை நடத்திவிட முனைந்தார். ஒளவையாரின் அவசரத்தை அறிந்த பிள்ளையார் 'ஏன் பாட்டி! இத்தனை அவசரம் இன்று?’ என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னார் ஒளவையார். 'அடடா அதுதானா? உன் நண்பர்களைப் போகச் சொல். அவர்கள் அங்கு செல்லுமுன் நான் உன்னைக் கைலாயம் கொண்டு சேர்க்கிறேன் என்றார். அவசரப்பட்ட சேரமானும் சுந்தரரும் சென்று விட்டார்கள். அம்மையும் நிதானமாகவே பூசை செய்தார். பூசை முடிந்ததும் அப்படியே அம்மையைத் தன் தும்பிக்கையாலேயே அநாயசமாகத் தூக்கி, கயிலாயத்திலே இறக்கி விடுகிறார் பிள்ளையார். ஒளவையாரும் கைலாய வாசலிலே நின்று முன் சென்ற சேரமானையும், சுந்தரரையும் வருக! வருக!' என வரவேற்கிறார். 'எப்படி இந்த ஒளவையார் தமக்கு முன் கயிலாயம் வந்து சேர்ந்தார்?’ என்று அறியாது திகைத்தனர் இருவரும்.

ஆம், பிள்ளையாரைப் பின் பற்றினால் கயிலாயம் சேர்வது எளிதாகவும் இருக்கும். விரைவாகவும் நடக்கும் என்று தெரிந்தனர், அவர்கள் இருவரும் அன்று. அதையே நாமும் தெரிந்து கொள்கிறோம் இன்று.

இன்னுமொரு கதை. சிதம்பரத்தை அடுத்த திருநாரை யூரிலே உள்ள பிள்ளையார் பொல்லாப் பிள்ளையார். பொல்லா என்பதனால் அவர் ஒரு பொல்லாத பிள்ளை அல்ல. சிற்றுளியால் பொள்ளப்படாத சுயம்பு மூர்த்தி என்பதனால் தான். அவரைப் பொள்ளாப் பிள்ளையார் என்று மக்கள் அழைத்தனர். நாளாவட்டத்தில் பொள்ளாப் பிள்ளை, பொல்லாப் பிள்ளையாகவே மாறிவிட்டார். உலக வழக்கில். ஆனால் இந்தப் பொல்லாப் பிள்ளை செய்த பொல்லாத வேலை காரணமாகவே, நமக்கு தெய்வம் மணக்கும் தேவாரப் பாக்கள் எல்லாம் கிடைத் திருக்கின்றன. திருநாரையூரிலே பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்தவர் ஒரு அந்தனர். ஒரு நாள் வெளியூர் செல்ல விரும்பியபோது தன் மகனைப் பூசை செய்யும் படி பணித்துவிட்டுச் சென்றிருந்தார். பிள்ளை என்னத் தைக் கண்டான்? பூசையை முடித்து, நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து அவர் அதை உண்ண வேண்டி னான். அசையாது கல்லுப் பிள்ளையாராக இருந்தார் பொல்லாப் பிள்ளையார். பார்த்தான் அந்தணச் சிறுவன். 'உண்ணுகின்றீரா, இல்லாவிட்டால் உமது திருவடியிலே என் தலையை மோதி உடைத்துக் கொள்ளவா? என்றான். இப்படிச் சும்மா பயங்காட்டவில்லை. உண்மையாகவே தன் தலையை மோத முனைந்து விட்டான்.

பார்த்தார் பிள்ளையார். தும்பிக்கையை நீட்டி, வாயைத் திறந்து அவன் தந்த நைவேத்தியத்தை எல்லாம் வாங்கி வாங்கி உண்டார். இதை, ஊர் திரும்பிய தந்தை நம்பவில்லை முதலில். மறுநாள், நிகழும் அற்புதத்தைக் கண்டார். அவ்வளவு தான். பொல்லாப் பிள்ளையாருக்கு அமுதுரட்டிய அந்தணச் சிறுவன் நம்பியாண்டார் நம்பியாகி விடுகிறான். சோழ மன்னர் ராஜராஜன் இந்த நம்பியை வந்து கண்டு வணங்குகிறான். அவன் ஆர்வம் தீர, அந்தப் பிள்ளையாரே நம்பியிடம் திருமுறைகள் இருக்கும் இடத்தையும், அதைப் பெறும் வகையையும் எடுத்துரைக்கிறார். சிதம்பரத்திலே சமயகுரவர் மூவரும் கைசாத்திட்டு வைத்திருந்த அறையில் இருந்த திருமுறை அம்ப்லத்துக்கு வந்து விடுகிறது.

நாட்டுக்கு வேண்டும் அற்புதமான பாக்கள் அனைத் தும் கிடைத்து விடுகிறது நமக்கு. பொல்லாப் பிள்ளை யாரும் திருமுறை கண்ட பிள்ளையார் என்ற புதிய பட்டத்தையும் தட்டிக்கொண்டு போய் விடுகிறார். நாடு நலம் பெற, காகம் கவிழ்த்து காவிரி கொணர்ந்தவரே, மக்கள் உள்ளம் இறைவனிடம் ஈடுபடத் திருமுறைகளை யும் தேடியெடுத்துக் கொடுத்து விடுகிறார்.

கணபதியின் பிள்ளைவிளையாட்டிலே சிறந்தது கஜமுகாசுரனை வென்றது தான். அசுர குலத்திலே, மாகத முனிவருக்கும் விபுதைக்கும் மகனாக கஜமுகாசுரன் பிறக்கிறான். வழக்கம் போல் தேவர்களை எல்லாம் துன் புறுத்துகிறான். தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள். தேவர் குறை தீர்க்கத் திரு உளம் கொண்ட சிவபிரான், தன்னுடைய அம்சத்திலே கணபதியைச் சிருஷ்டிக்கிறார். -

யானை முகத்தோடும், ஐந்து திருக்கரங்களோடும், மூன்று திருக்கண்களோடும் அவதரித்த இந்தப் பிள்ளை யைச் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவனாக்குகிறார் சிவபெருமான். கணங்களுக்கு எல்லாம் தலைவனாய் அமர்ந்த கணபதி கஜமகாசுரனுடன் போர் தொடுக்கிறார். கஜமுகனே எத்தனையோ மாயைகளை நிகழ்த்தி கடும் போர் புரிகிறான். கடைசியில் பெருச்சாளி வடிவோடு வந்த போது, அவனை அடக்கி அவன் மேலேயே ஆரோ கணித்து, தன்னை அன்று முதல் சுமக்கச் செய்து விடுகிறார்.

கஜமகாசுரன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்ட பொழுது, அவன்றன் கொலுவில், அவன் தேவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்தி, தங்கள் தங்கள் தலையில் மும்முறை குட்டி, இரண்டு கைகளாலும் எதிராக காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்து வந்தான். இப்படி கஜாமகாசுரன் முன்பு செய்து கொண்டதைத்தான், கணபதி கஜமுகாசுரனை வென்று அடக்கிய பின்பும் அவர் முன் செய்யத் தலைப்பட்டனர். இப்படித் தேவர் செய்யும் திருத்தொண்டு கணபதிக்கு உகந்ததாயிருந்தது.

அதனால் தான், இன்றும் கணபதியை வணங்குவோர் தலைகளில் குட்டிக் கொண்டு, காதைப் பிடித்துத் தோப் புக் கரணம் போட்டு வணங்குகின்றனர். ஆணவம் மிகுந் துள்ள ஆடவர் எல்லாம் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதாலேயே, தன் முனைப்பு நீங்கினவர்களாய், என்றும் இறைவனுக்கே ஆட்படும் பேறு பெறுகிறார்கள் அல்லவா? ஆண்டவன் சந்நிதி யிலே தன்முனைப்பு நீங்கத்தானே தரையில் விழுந்து வணங்குகிறோம்; தோப்புக்கரணம் போடு கிறோம்.

இன்னும் எத்தனையோ கதைகள் விநாயகரைப் பற்றி. கதைகளைக் கதைகள் என்ற அளவில் மட்டும் படிக் காமல், கதை எந்த அடிப்படையில், எந்த தத்துவத்தை விளக்க எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்வோ மானால் - தெரிந்து கொள்ள முயல்வோமானால் - சமய உலகில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து விடும். தமிழன் கண்ட கடவுள், ஏதோ ஒரு நாளில், ஒரு வருவடித்தில் உருவானவர் அல்ல.

நீண்ட காலமாக கலைஞர்கள் சிந்தித்துச் சிந்தித்து 'உள்ளக் கிழியில் உரு எழுதி' அதன் பின் தான்
 

பாக்களில், சித்திரத்தில் சிற்பத்தில் எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி உருவானவர்களில் தலை சிறந்தவர் தான் ஆனை முகப் பெருமான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் ஏன்? கடல் கடந்தும் சென்று மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் இடம் பெற்றிருக்கிறார் அவர். நாட்டுக்கு நாடு அவர் வேறு வேறு திரு உருவங்களில் அமைந்திருக்கிறார் என்றால் அது அந்த அந்த நாட்டு மக்களின் சிந்தனையிலும், கற்பனையிலும் உருவான தோற்றங்கள்தான். 'கற்பனை கற்பித்த கடவுளாம் கற்பக விநாயகர் அவரவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை யாகத்தானே கோலம் கொள்ள முடியும்; அருள் பாலிக்க இயலும்.