ஆத்திசூடி முதற்சூத்திர விருத்தியுரை

ஆத்திசூடி முதற்சூத்திர விருத்தியுரை

தொகு

உரையாசிரியர்:

மாகறல் கார்த்திகேய முதலியார்

தொகு

பாயிரம்- உரை

தொகு

<> <> <>

"ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
யேத்தி யேத்தித் தொழுவோ மியாமே"

- என்பது பாயிரம். எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்கற்பாற்று என்பது இயற்றமிழ் முறையாம்.

"ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும்
பாயிர மில்லது பனுவ லின்றே".

அப்பாயிரம் பொதுவும், சிறப்பும் என இருவகைப்படும். சிறப்புப் பாயிரமே தானுரைக்கின்ற நூற்கு இன்றியமையாதது. பிறவும் விரித்துரைக்கிற் பெருகும். பண்டை நூலிற் கண்டு கொள்க.

இனிச்சிறப்புப் பாயிரம் இருவகைப்படும். அவை யாவையோவெனின்:-

ஆக்கியோன் பெயரும், வழியும், எல்லையும், நூற்பெயரும், யாப்பும், நுதலிய பொருளும், கேட்போரும், பயனும் என இவை. என்னை?

"ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே" - என்றார் ஆகலின்.
"காலம் களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே" - எனவும் கூறுவாராகலின், இவை மூன்றும் சேர்த்துப் பதினொன்றாம் என்பது.
இந்நூல் செய்தார் யாரோ எனின்? தமிழ்நாடு முதலிய பலவகை நாடும் செய்த நல்வினைப் பயனால் வந்த 'கலைமகள்' வடிவேயாய திருந்திய நோன்பிற் பெருந்தகைக் கற்புடைக் கடவுட்புலமை 'ஒளவையார்' என்பது. இவர் 'பந்தன்' கொடுத்த பொற்படாமும், நெல்லியங்கனியிற் பாதியும் பெற்று நெடிதுகாலம் இருந்தனர்.
'வழி'யென்பது, இந்நூல் இன்ன வழியென்பது. கல்விப் பொருட்கு இறைமை பூண்ட கலைமகளே மற்றொரு வடிவாய் வந்து செய்து அருளினமையின் வழிநூல் என்று சொல்லப் படாது முதனூல் எனப்படுமென்பது. 'எல்லை'யென்பது, இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என்பது. இந்நூல் எவ்வெல்லையுள் நடக்குமோ எனின், அகப்பாட்டெல்லையுட் பெரும்பாலும் புறப்பாட்டெல்லையுட் சிறுபான்மையும் நடக்குமென்பது.
நூற்பெயர் என்பது, நூலது பெயர் என்றவாறு. இந்நூல் என்ன பெயர்த்தோவெனின், கொன்றைவேந்தன், வாக்குண்டாம், வேழமுகம் முதலியன போல முதற்குறிப்பான் வந்த காரணப் பெயர்த்து.
இனி, யாப்பென்பது, நூல்யாப்பு. நூல் யாக்குமிடத்து நான்குவகையான் யாக்கப்படும்.
தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் மொழிபெயர்த்தும் என, என்னை?
"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைவகைப் படுமே" - என்றாராகலின்.
அவற்றுள் இஃது தொகுத்து யாக்கப்பட்டது. என்னை? இப்பரவை யுலகின்கண்ணே வழங்கும் எவ்வகைப்பட்ட மொழியையும் பிழிந்தெடுத்த நறுஞ்சாற்றின் தீஞ்சுவையாக இந்நூல் தொகுத்தாராகலின் என்பது. நுதலியபொருள் என்பது, நூற்பொருளைச் சொல்லுதல் என்பது. இந்நூல் என்னுதலிற்றோவெனின், நூற்பயன் நான்கும் நுதலிற்றென்பது. கேட்போர் என்பது, இன்னார் கேட்டற்கு உரியார் என்பது. இந்நூல் கேட்டற்கு உரியார் யாரோவெனின், இளைஞர் முதல் எல்லாரும் கேட்டற்கு உரியார் என்பது. அவரவர் அறிவுக்குத் தக்கப்பொருள் புலப்படலின்.
பயன் என்பது, இது கற்க இன்னது பயக்கும் என்பது. இந்நூல் என்ன பயக்குமோ எனின், அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நூற்பயன் நான்கும் பயக்கும் என்பது. இனிக் காலம் என்பது இன்னகாலத்தில் இந்நூல் இயற்றப்பட்டதென்பது. இந்நூல் எக்காலத்ததோ எனின், மதுரைக் கடைச்சங்கத்தார் காலத்தது என்பது.
களம் என்பது, இன்ன இடத்தில் நூலேறியது என்பது. இந்நூல் எவ்விடத்து ஏறியதோவெனின், அக்காலத்திருந்த தமிழரசர் அவைக்களத்து ஏறியது என்பது.
காரணம் என்பது இன்ன காரணம் கருதி இந்நூல் இயற்றப்பட்டதென்பது. இந்நூல் எக்காரணத்தினால் இயற்றப்பட்டதோஎனின், பரவையுலகின்கட் படர்ந்த அறியாமையை எளிதே தவிர்க்கவேண்டுமென்னும் அருட் காரணத்தான் என்பது.
சிறப்புப் பாயிரயினன்றோ இத்துணையும் வேண்டுமெனின், அற்றன்று, இது சிறப்புப் பாயிரத்தோடு ஒத்த தற்சிறப்புப் பாயிரமாகலின் அவ்வனைத்தும் வேண்டுமென்பது. வேண்டா என்பாரை ஆக்கியோன் முதலியன இல்லாமே நூல் எங்ஙனம் படைத்தல்கூடுமெனக் கூறி மறுக்க.

தற்சிறப்புப் பாயிரம்

தொகு
தற்சிறப்புப் பாயிரமாவது என்னையெனின்?

"தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்

எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்"

- என்பதனால் உணர்க.
இப்பாயிரம் இன்றியும் நூல் இயற்றப்படுமாலோவெனின், தொல்காப்பிய முதலியன போல நூற்குப் புறம்பாகவும் இயற்றப்படும்என்க. இது பெருவழக்கிற்றன்று. இத் 'தற்சிறப்புப் பாயிரம்' வழிபடு கடவுள் வணக்கம் கூறுதல் நுதலிற்று.
யாம். எ-எய்- தொழுவோம். ப-லை- தேவனை. செ-ள்- ஏத்தி ஏத்தி இவ்வடுக்கு விடாமைப் பொருட்டு. தந்தைக்கு மூத்த மகனிடத்தும், தாய்க்கு இளைய மகனிடத்தும் விருப்பமுண்டாதல் இயற்கையதாகலின் அதுதோன்ற 'அமர்ந்த' என்றார். "எம் ஏம் ஓமிவை படர்க்கையாரையும்" என்பதனால், தொழுவோம் என்னும் தன்மைப் பன்மை வினைமுற்று படர்க்கையாரையும் தழுவாது வந்தமையின் இழுக்கன்றோ எனின் அற்றன்று. தனித்தன்மை வினைமுற்று எனவும், தன்னொடு படுக்கும் தன்மைவினைமுற்று எனவும் தன்மை வினைமுற்று இருவகைப்படும். அவற்றுள் இஃது தனி்த்தன்மை வினைமுற்றென்க. தன்னொடு படுக்குங்கால், இவ்விறுதிநிலை இன்னவிடத்து வருமென்று கூறினாரேயன்றி, அதனால் தன்னொடு படுக்காது வாராதென்று கொள்ளற்க. தொழுவோமியாம் என்பதில், "தன்னொழி மெய்ம்முன் யவ்வரினிகரம் துன்னுமென்று துணிநருமுளரே" என்பதால் இகரச் சாரியை தோன்றியது.

ஆத்தி:

கடலாத்தி, காட்டாத்தி, கொடியாத்தி, படராத்தி, திருவாத்தி, கோழையாத்தி முதலிய பல்வகை ஆத்திகளுள் ஈண்டு நுதலியது எவ்வாத்தியோ எனின், தமிழின்கண்ணே ஆத்தியை உணர்த்தும் 'ஆர்' முதலிய சொற்களான் இன்ன ஆத்தியென விளங்காவிடினும் ஆரியத்தின்கண்ணே 'தாதகி', 'தாதுபுட்பிக' என்னும் சொற்களான் செம்மரமும், செம்மலரும் உடைய ஆத்தியென இனிது விளங்கலானும், அத்தன்மை காட்டாத்தியினிடத்தே இருக்கின்றமையானும், முக்கட்பெருமான் துறவறவேடம் பூண்டு சிறுத்தொண்ட நாயனாருக்காகத் திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியது இவ்வாத்தியின் கீழாகலானும், ஏனை ஆத்தியினிடத்தே இ்ச்சிறப்பின்மையானும், அம்முக்கட் பெருமான் பூண்ட ஆத்தி காட்டாத்தியென்றே தெளிக. திருவீழிமிழலை முதலியவற்றில் தலவிருட்சம் காட்டாத்தியேயாம். காட்டாத்தியை உரித்தக்கண் அதன்பட்டை சிவப்பாகவே யிருக்கும். அதனால், 'தாதகி' என்றனர்.
வழிச்செல்வோன் தன் வலப்பக்கத்தில் காட்டாத்தி நேர்ந்து அதனது மெல்லிய இனிய பூந்தளிர் கொய்து வலச்செவியிற் செருகிக்கொள்ளின், அன்னோன் அற்றைநாள் கற்றாவுடையான் விருந்துண்டு இனிதுவக்கும் எனப் பௌராணிகர் கூறுப. அதனால் வடநூலார் முருட்டான்ன பத்திரியென்ப. இங்ஙனமன்றிக் கொடியாத்தி முதலியனவாகக்கூறல் பொருந்தாதென மறுக்க.
ஆத்திசூடி என்பதை வினையெஞ்சுகிளவியாக வைத்துச் சிவபெருமானை வணங்குதும் எனின் பொருந்தாது. என்னை? யானைமுகக் கடவுளையே காப்புக் கூறல் வைதிக சமயமரபு. ஒளவையாரும் வழிபடு கடவுள். அது ஈமத்தாடி, பேயோடாடி, பயங்கொளி, தோற்புக்கொளி என்பனபோல உயர்திணையில் வந்தது. சூடு+இ, உயர்திணைப் பெயர் விகுதி.
"அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறை" ஆகலின் இந்நீதி நூற்கு நீதியிற் சிறந்து தேவர் பட்டம் பெற்ற ஆரக்கண்ணியனாகிய சோழனைக் காப்பாகக் கூறுவோரும் உளர் எனின், நூல் முடிவு பெறுங்காறும் ஆக்கியோர் தமக்குப் புறத்தே நோய் முதலியன எய்தினும், அகத்தே செய்யுள்உணர்வு முதலியன குன்றினும், முறையே அவற்றைச் சுருக்கற்கும், பெருக்கற்கும் அன்னோன் வலியன் அல்லன் ஆகலின் அதுவும் பொருந்தாதென்க.
தேவனடியைத் தொழுவோம் என்னாது, தேவனைத் தொழுவோம் என்றது என்னையெனின், யானைமுகக் கடவுளுக்குத் தேவாங்கம், பூதாங்கம், மிருகாங்கம் என்னு மூன்றனுள் தேவாங்கமாகிய பாதபூசையே சிறந்ததாகலின் அங்ஙனம் கூறினும் அப்பொருளே பயக்கும். மிருகாங்கம் ஒருமொழி வடிவென்பர்.

பாயிரம் முற்றுப்பெற்றது

தொகு
பார்க்க
ஆத்திசூடிநூல்-பாயிரவிருத்தி

ஆத்திசூடி- பரிமேலழகர் உரை.

[[]] [[]] [[]] [[]]