ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியப் பார்ப்பனரும் சமற்கிருதமும்

ஆரியப் பார்ப்பனரும் சமசுக்கிருதமும்!

றிவூட்டாமல் பகுத்தறிவு விளங்காது; பகுத்தறிவு ஊட்டாமல் மெய்யறிவு விளங்காது!

பார்ப்பனீயம் இந்திய மக்களினத்தின் கொடுநோய்! மக்களை ஏமாற்றவே ஆரியப் பார்ப்பனர் இந்து மதத்தை உருவாக்கினர்; கடைப்பிடித்து வருகின்றனர்.

மெய்யறிவில்லாதவர்கள் மதத்தின் போலித்தனங்களையும், பொய், புனை சுருட்டுகளையும் மக்கள் உண்மை உணருமாறு எடுத்துக் கூறி விளங்கச் செய்துவிட முடியாது.

இந்து மத மூடச் செயல்களும், தில்லுமுல்லுகளும் பார்ப்பன ஏமாற்றும் சூழ்ச்சியும் மக்களுக்கு விளங்கக்கூடாது என்பதற்காகவே, மதப் பயன்படுத்தத்திற்கென்று சமசுக்கிருத மொழியைப் பார்ப்பனர் அக்காலத்தில் அவர்களுக்குத் தெரிந்திருந்த வேதமொழி, அவர்கள் வந்து புகுந்த வடநிலத்தில் பரவியிருந்த பிராகிருதம், பாலி முதலிய வடதிராவிட மொழிகள், தமிழ் ஆகிய தென்மொழி ஆகியவற்றைக் கொண்டு, உருவாக்கிக் கொண்டனர். சமசுக்கிருதம் ஒரு குழுஉக் குறியே! பார்ப்பனர்கள் மட்டுமே விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் படைத்து மொழியப்பெற்ற மொழியே அது.

இந்த நிலையில் தமிழர்கள் அறிவுணர்வு பெறாமல் எந்த நிலையிலும் திருந்த முடியாது. எனவே உண்மைத் தமிழ் வழியாகப் பார்ப்பனியத்திற்கு எதிராக உள்ள அனைத்துக் கருத்துகளும் பரப்பப் பெற வேண்டும். அப்பொழுதுதான் போலிச் சமக்கிருதப் புன்மைகள் விளங்கும்.

வெறும் தமிழ் படித்த தமிழ்ப்புலவர்களால் இந்தப் பணியைச் செய்ய முடியாது. தமிழ் படிக்காத அறிஞர்கள் பிறராலும் இதைச் செவ்வனே செய்வது கடினம். அறிவியலும் தமிழும் படித்த மெய்யுணர்வாளர்களால் மட்டுமேதாம் நம் மக்களுக்கு உண்மை அறிவை ஊட்ட முடியும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 138, 1990