ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்திய படைத்துறையிலும் இந்துமதப் பரப்புதல் ஏற்பாடு

இந்தியப் படைத்துறையிலும் இந்துமதப் பரப்புதல் ஏற்பாடு!

பார்ப்பனிய அட்டுழியத்திற்கும்
அதிகாரத்திற்கும் அளவில்லையா!

பிற மதங்களுக்கும் இடமளிப்பதுபோல் நடித்து, இந்து மதத்தையே முழுமையாகப் பரப்புகிறது பார்ப்பனிய அரசு!

மக்கள் திரண்டெழுந்து எதிர்க்காவிடில் எதிர்காலத்தில் பார்ப்பனியக் கருத்துகள் தவிர, வேறெதற்கும் இடமிராது!

ற்கனவே, அரசின் அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனீயத்தின் இந்துமத வெறிச் செயல்கள் கால்களை அகல விரித்துக் கொண்டுள்ளன. கல்வித்துறை, கலை, பண்பாட்டுத் துறைகள், ஒலி, ஒளி பரப்புத் துறைகள், பொழுதுபோக்கு, விளையாட்டுத் துறை முதலிய பெரும்பாலான துறைகள் இந்து மதத்திற்குச் சார்பாகவே இயங்குமாறு, கரவாகத் திட்டமிடப் பெறுகின்றன. இவ்வனைத்துத் துறைகளிலும் ஒலி, ஒளி பரப்புத் துறைகளிலேயேயும் பார்ப்பனீயம் கொடிகட்டிப் பறக்கிறது. வானொலியையும் தொலைக்காட்சியையும் கேட்கவோ பார்க்கவோ முடிவதில்லை. அவ்வளவு கொடுமைகள்! பேச்சு, நடை, உடை, மெய்ப்பாடு, காட்சி, கருமங்கள் அனைத்திலும் பார்ப்பனியம்! பார்ப்பனீயம்!! கண்களும் காதுகளும் புண்ணாகின்றன! ஒலி, ஒளிப் பெட்டிகளைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிடலாமா என்று

கடுஞ்சினம் வருகையில், அவை நம்முடையன என்ற நினைவும் கூடவே வந்து, அந்தக் கடுஞ்சினத்தைத் தணிவித்து விடுகிறது. அத்தனை அழிம்புகள்! அதிமட்டங்கள்! கேட்பார் கேள்விக்கு யாருமே இல்லை என்னும் அகங்காரம்! மதர்ப்பு! உன்மத்தம்!

இந்த நிலையில் இப்பொழுது இன்னொரு கொடுமையான செய்தி வந்திருக்கிறது.

படைத்துறையில் உள்ள வீரர்களிடம் மதக்கருத்துகளைப் பரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மதம் என்று பொதுவாகச் சொன்னாலும் - வேறு மதங்களுக்கும் அங்கு இடமுண்டு என்று அறிவித்தாலும் - அவர்களின் முழுநோக்கமும் இந்துமதத்தைப் பற்றியதுதான் என்பதில் ஐயமில்லை....)

படைத் துறையில் இஃது ஒரு புதிய ஏற்பாடு, புதிய பதவி. அதன் பெயர் இளநிலை ஆணைய அதிகாரி - மத ஆசிரியர் (Junior Commissioned Officer — Religions Teachers) என்பது.

இவர்களும் படைத்துறை அதிகாரிகள் என்னும் மதிப்பைப் பெறுவார்கள்.

அவர்களின் பணிகள் படைத்துறை வீரர்களிடம் மத உணர்வுகளைப் புகட்டுவது; மதக் கோட்பாடுகளைக் கற்பிப்பது, மதப் பழக்க வழக்கங்களைப் புகுத்துவது.

இவர்கள் மதம் பரப்புநர்கள், மத ஆசிரியர்கள். இவர்கள் மதக் கருத்துகளைப் படையினர்க்கு அறிவுறுத்த வேண்டும்; மத வழிபாடுகளை அவர்களுக்குச் சொல்லித் தருதல் வேண்டும்; வழிபாட்டுக் கூடங்களில் சமயச் சடங்குகளை நிகழ்த்த வேண்டும்; படையில் - போர்க்களத்தில் - இறந்தோர்க்கு இறுதிச் சடங்குகளை நிகழ்த்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் நலங்களுக்கென - நோய்கள் நீங்குவதற்கென வேண்டுகை வழிபாடு செய்யவேண்டும்; சிறையிலுள்ள வீரர்களைச் சந்தித்து அவர்களுக்கும் படையினர் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும், படைத்துறையில் சேர்த்துக் கொள்ளப்பெற்ற சிறுவர்களுக்கும் சிறப்பு மதக்கருத்துகளைப் பயிற்றுவிக்க வேண்டும்; அத்துடன் இவர்கள் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு மதக் கருத்துகளையும் சடங்கு, பழக்க வழக்கங் (சம்பிரதாயங்)களையும் பயிற்று வித்து, அவர்களுடைய நல்வாழ்விற்காகத் தொண்டாற்றுதல் வேண்டும் என்பனவாக அவர்களுக்குப் பணிநிலைகள் வகுக்கப் பெற்றிருக்கின்றன.

இம் மதம் பயிற்று அதிகாரிகளுக்கான சம்பளம் 1300–40–2100 ஆகும். இத்துடன் அகவிலைப்படி, கூடுதல் அகவிலைப்படி, இலவய இருப்பிடம், இலவய உணவு, சீருடை, அவருக்கும் அவர் குடும்பத்தவர்க்கும், அவரைச் சார்ந்துள்ளோர்க்கும் இலவய மருத்துவ வசதி, மற்றும் விடுப்பு, போக்குவரத்துச் சலுகை, பிற உண்டிச் சாலை வசதிகள், பிற படைத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பெறும் கூடுதல் படிகள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டாம் பணிக் காலத்திற்குப் பின் ஓய்வூதியமும் பிற சலுகைகளும் உண்டு.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இந்த மதம் பயிற்றுவிப்பார் பணியில் இந்துமதம், கிறித்தவ மதம், இசுலாம் மதம், சீக்கிய மதம் முதலிய அனைத்து மதம் பயிற்றாசிரியர்களுளம் எடுக்கப் பெறுவதாக அறிவிப்பு வந்தாலும், பெரும்பகுதி இந்து மதவாசிரியர்கள்தாம் எடுக்கப் பெறுவர் என்பது எல்லாரும் அறிந்ததே! பிற மதங்களில் பெயருக்குச் சில பேர்கள் எடுக்கப் பெற்றாலும் அவர்களுடைய செயற்பாடுகள் மிகுதியாக இருக்கும்படி விட்டுவிடமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இதில் இன்னொன்றும் உண்டு. இப்பதவிக்கு வருபவர்கள் சமசுக்கிருதம் அல்லது இந்தியில் அல்லது வட்டார மொழியில் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று அறிவிப்பு கூறுகிறது. ஆனால் பணிவாய்ப்பு சமசுக்கிருதம், இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் மிகுதியாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இவ்வாறு இந்தியாவில், இதுவரையில் இல்லாதபடி, இந்தியப் படைத்துறையிலும் இந்துமதம் பரப்புதல் - வல்லாளுமை - புகுந்து விட்டது. இதற்குக் காரணம் படைத்துறையில் உள்ள மேனிலை அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகள் ஆகியோரில் ஏதோ ஓரிருவரைத் தவிர, மிகப் பெரும்பாலோர் பார்ப்பனர்களே!

அவர்கள் ஏற்கனவே வானூர்தி கப்பல் முதலியவற்றை வெள்ளோட்டம் விடும்பொழுது அவர்களின் படைத்துறை நடவடிக்கைகளில் இல்லை என்றாலும், தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றிப் பூசைசெய்து படைத்து வரும் வகையிலும் பிற வாய்ப்புள்ள இடங்களிலும் மதச்சடங்குகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்க்ளைப் போன்றவர்களுக்கு இப்புது மதம் பரப்புதல் நடவடிக்கை இன்னும் மதவெறியை வளர்ப்பதற்கு உதவும். இனி, நின்று கொண்டு பேய்ந்தவன்கள் ஓடிக்கொண்டே பேய்வான்கள். பார்ப்பனீய அட்டுழியத்திற்கும் அதிகாரத்திற்கும் அளவே இல்லையா?

இந்துமதந்தான் பார்ப்பனீயத்தின் ஆணி வேராகும். சாதிகள் பக்க வேர்கள்தாம்! எனவேதான் பார்ப்பனர்கள் இந்துமதத்தைப் பரப்புவதிலும், ஏழை, எளிய, கல்லாத, கரவு, வஞ்சனைகளில்லாத கீழ்த்தட்டுப் பேதை மக்களிடம் அதை வேரூன்றச் செய்வதிலும் இத்தனை ஆர்வமும், சூழ்ச்சியும், செருக்கும் கொள்கின்றனர். ஒருபுறம் அறிவியலை வளர்க்கப் பார்ப்பான் ஏதோ இவனுக்கு. மட்டிலுந்தான் அக்கறை இருப்பது போல் தம்பட்டம் அடிக்கிறான். மறுபுறம் ஆரியத்தை மத ஆணி அறைந்து யாராலும் அசைக்க முடியாதபடி வலுப்படுத்துகின்றான்.

மக்கள் திரண்டெழுந்து இக்கொடுமைகளை எதிர்க்காவிடில், எதிர்காலத்தில் எந்தத் துறையிலும் பார்ப்பனீயக் கருத்துகள் தவிர, வேறெதற்கும் இடமிருக்காது என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்!

-தமிழ்நிலம், இதழ் எண் : 154, 1992