ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/செயலலிதாவே தமிழினத்திற்கு வாய்த்த கடைசி எதிரி

செயலலிதாவே தமிழினத்திற்கு வாய்த்த கடைசி ஆரிய எதிரி!
வாழப்பாடியே கடைசி வீடணன்!
இனிமேல் இத்தகையவர்களைத் தமிழர்கள் தோன்றாமல் செய்யவேண்டும்!

அடுத்த தேர்தல் போராட்டம் தமிழினத்தின் உரிமைப் போராட்டமாக முகிழ்க்க வேண்டும்!

பாவலரேறுவின் வரலாற்றுக் கணிப்பு இது!

(இவ்வுரை இராசீவின் மறைவுக்கு முன்னர் எழுதப் பெற்றது.)

டுத் தெருவில் விழுந்த தேங்காயை நாய்கள் உருட்டிக் கொண்டு அலைக்கழிப்பதைப் போல் இந்திய அரசாட்சி அல்லோலப் பட்டுக் கிடக்கிறது.

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?”

- என்று பாவேந்தர் பாடினார். இந்திய அரசியலும் இவ்வாறுதான் ‘மகராசர்கள்’ எனப்படும், இனத்தலைவர்களாகத் தங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் பார்ப்பனர்களிடமும், அவர்களின் பகடைக் காய்களாக உருட்டப்படும் ‘பனியாக்கள்’ என்று கூறப்பெறும் வடநாட்டு வணிகர்களிடமும் சிக்கிச் சீரழிந்துகொண்டு வருகிறது. கன்னக்கோல் எடுத்தவனெல்லாம் இன்று கட்சி தொடங்கித் தலைவன் என்று உலா வந்து கொண்டிருக்கின்றான். திரையில் நடிக்க வந்தவர்களெல்லாரும் இன்று அரசியலிலும் நடித்து அதைவிடப் பணம் பெருக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மாநில ஆட்சிகளை அப்படி இப்படி உருட்டி எடுத்துவிட்டு, அலங்கோலத் தேர்தலை நடத்த ஆள்வோர்கள் முடிவு செய்துவிட்டார்கள். இந்திய மக்களுக்குத் தேர்தல் என்பதும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நூற்றுக் கணக்கான மதவிழாக்களைப் போலத் தான் கருதப்பெறுகிறது.

குடியரசாட்சியில் மக்கள் ஆட்சியறிவு பெறவில்லையானால், ஏற்படும் எந்த ஆட்சியும் இருக்கும் என்பதற்கு இந்திய அரசின் கடந்த நாற்பதாண்டுக் கால வரலாறே அழிக்க முடியாத ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியா தன்னுரிமை பெற்ற பின் இங்கு அமைந்துள்ள ஆட்சிகள் அத்தனையுமே ஊழலும், கொடுங்கோன்மையும் நிறைந்தவைதாம் என்பதில் ஐயமே இல்லை. இந்திய மக்கள் விடுதலை பெற்ற மற்ற எல்லா நாட்டு மக்களையும் விடப் பிந்திய மக்களாகத் தாம் இருக்கின்றனர்.

இந்தியா அரசியலிலும் சரி, பொருளியலிலும் சரி, மற்ற நாடுகளைவிட முன்னேறாமைக்குப் பல கோணங்கள் உள. அவற்றுள் முகாமையானவை - இங்குள்ள மதங்களும் சாதிகளுந்தாம். வேறு நாடுகளிலும் மதங்களும், சாதிகளும் இங்கிருப்பன போல் இல்லாமற் போயினும், வேறுவகையான இன, நிற வேறுபாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆனாலும் இங்கு இருப்பது போல் பார்ப்பனீய மேலாளுமை இல்லை. மக்களை இந்த அளவில் மேல் கீழென்றும் உயர்வு தாழ்வென்றும் பிரிக்கின்ற வருணாசிரம, சாதிப் பிரிவுகள் இல்லை. எனவேதான் இங்குள்ள உயர்நிலையிலுள்ள சிறுபான்மை மக்களைத் தவிரப் பிற பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு நடுவணரசு போடும் திட்டங்கள் சட்டங்கள் எதுவும் ஒரு பயனும் தருவதில்லை. இதைப் பற்றி யெல்லாம் ஆட்சிக்கு வரும் எந்த அரசியல் கட்சியும் கவலைப்படுவதுமில்லை. அவ்வாறு கவலைப்படும் ஒரிரண்டு கட்சிகளையும் இங்குள்ள பார்ப்பனர்களும் முதலாளிகளும் தொடர்ந்து ஆட்சி நடத்த விடுவதும் இல்லை. அத்தகைய நடுவணரசும் மாநில அரசுகளும் விரைவில் கவிழ்க்கப்பட்டு விடுகின்றன. இதுபோல், இந்நாடு உரிமை பெற்றதிலிருந்து தொண்ணூறு முறைகள் மாநில அரசுகள் கவிழ்க்கப் பட்டுள்ளன. உலகெங்கும் நடைபெறாத அரசியல் கொடுமை இது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இங்குள்ள வேற்றுத் தேசிய இனத்தவர்கள் எவரும் அடையாத கொடுமைகளைத் தமிழினம் மட்டுமே அடைந்துவருவதை நாம் - குறிப்பாகத் தமிழர்களாகிய நாம் உணர்ந்தே ஆகவேண்டும். இந்த நிலைக்கும் பலவேறான காரணங்கள் உண்டு. இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்களை மொழியாலும், இனத்தாலும், கலை, பண்பாடுகளாலும், மரபாலும், ஆட்சியமைப்பாலும், மதத்தாலும், சாதியமைப்புகளாலும் நேரடியாக எதிர்க்கின்றது தமிழ்த் தேசிய இனம் ஒன்றுதான். வேறு தேசிய இனங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையிலோ பலவகையிலோ ஆரியத்துடன் இணைப்பும் பிணைப்பும் உடையனவாகவே உள்ளன. எனவே ஆரிய எதிர்ப்பினை அவை எந்த ஒரு கோணத்திலும் காட்டுவதில்லை.

இந்நிலையில்தான் இங்குத் தேர்தல்கள் அடிக்கடி வருகின்றன. தேர்தலில் மாநிலக் கட்சிகள் வென்றால் அவற்றின் மேல் ஏதாவது ஒருசில காரணங்களைக் காட்டித் தில்லியில் உள்ள பார்ப்பனிய வணிக ஆட்சி அவற்றைக் கவிழ்த்துவிடுவது இயல்பாகி விட்டபின் தேர்தல்கள் நடப்பதிலேயே பொருளில்லை. ஆனால் மக்களையும் பிற நாடுகளையும் ஏமாற்றி, இந்தியாவில் நடப்பது குடியரசாட்சி தான் என்று நம்ப வைப்பதற்காகவே, கோடிக்கணக்கான பொருளைச் செலவிட்டுத் தேர்தலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது தில்லி ஆட்சி.

எஃது, எவ்வாறாயினும், தொன்று தொட்டுத் தமிழினம் பார்ப்பனியத்தாலும், இந்தியா தன்னுரிமை பெற்றபின் வட நாட்டாராலும், அரசியல், பொருளியல், குமுகவியல் முதலிய அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றது. இந்நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், திராவிட மரபு என்னும் பெயரால் ம.கோ. இராமச்சந்திரனாலும், அதன்பின் அவர் பெயரைச் சொல்லித் தம்மை வலிமைப்படுத்திக் கொண்ட செயலலிதாவாலும் இன்னும் தமிழினம் ஏமாறியே வந்து கொண்டுள்ளது. இனிமேலும் இத்தகையவர்களால் தமிழினம் ஏமாறாமல் ஓரளவு விழிப்படைந்திருக்கிறது என்று கருத இடம் உண்டு. தமிழின இளைஞர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பார்த்துத் தமிழின உணர்வு பெற்று வருகிறார்கள் என்றும் ஒருவாறு கூறலாம். எனவே செயலலிதாவே தமிழினத்திற்கு வந்து வாய்த்த கடைசி ஆரிய எதிரியாக இருக்க முடியும். அதுபோல் வாழப்பாடி இராமமூர்த்தி தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கடைசி வீடணனாகவும் இருக்கலாம். இனிமேல் இத்தகைய பகைவர்களும் உட்பகைவர்களும் தோன்றாமல் தமிழினத்தை விழிப்படைச் செய்யும் முயற்சியைத் தமிழின நலங்கருதும் அறிஞர்களும், இளைஞர்களும் விடாமுயற்சியுடனும் ஊக்கத்துடனும் நம்பிக்கையுடனும் செய்துவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இனி, அடுத்து வரும் இந்தியத் தேர்தல்களில் தமிழினத்தவர்கள் பங்கு கொள்ளத் தேவையில்லாதபடி, இங்குத் தமிழக விடுதலை முயற்சிகள் காட்டுத் தீயெனக் கனன்று பரவி எதிரிகளைக் கட்டோடு முறியடித்தல் வேண்டும். அவ்வாறான நிலையில், தப்பித் தவறி இன்னொரு தேர்தலை இத் தமிழ்நாட்டிலும் நடத்துவதற்கு வடநாட்டாரும் பார்ப்பனரும் இங்குள்ள வீடனர்களும் முயற்சி செய்வார்களானால் அது, தமிழினத்தின் உரிமைப் போராட்டமாகவே முகிழ்க்க வேண்டும் எனத் தன்மானத் தமிழர்கள் உறுதிகொள்ள வேண்டும் என்பதை அனைவரும் நெஞ்சில் நிறுத்துக.

- தமிழ்நிலம், இதழ் எண். 145, 1991