ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/தீபம் பார்த்தசாதிகள் தெளிவடையட்டும்

தீபம் பார்த்தசாரதிகள் தெளிவடையட்டும்!

டந்த 15-1-1980-ஆம் நாளைய ‘துக்ளக்’ இதழில், ‘தேசிய மொழிகளும் தமிழ்நாடும்’ என்னும் தலைப்பில், தீபம் நா. பார்த்தசாரதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எவ்வகைக் கரணியமும் இல்லாமலேயே தமிழ்நாட்டு அறிஞர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் அளவு கடந்த வெறுப்பு இருக்கின்றதென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அவ் வெறுப்பு மிகுந்திருக்கின்றதோ, அவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அறிஞர்கள் என்று பாராட்டப் பெறுகிறார்கள் என்றும் அவர் அதில் குறைபட்டுக் கொள்கிறார். இக்குற்றச்சாட்டுடன் அவர் சமசுக்கிருத மொழியின் அருமை பெருமைகளை அக்கட்டுரையில் அளவிறந்து கூறி, அம்மொழியைத் தமிழர்கள் வெறுக்கக் கூடாது; தமிழோடு ஒப்பவைத்துப் பாராட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்று பொருள்படும்படி கூறியுள்ளார். அவர் வேண்டுகோள், ஒருவேளை தமிழ் வரலாறு தெரியாதவர்களுக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் மொழி இன வரலாற்று அழிம்புகள் விளங்காதவர்களுக்கும் சரியானது அல்லது நயன்மையுடையது போல் படலாம். ஆனால், கடந்தகால பிராமணிய மொழி, இனத் தாக்குதல்களை நன்கு உணர்ந்தவர்கள் பார்த்தசாரதியின் உரைகளை ஆரியப் பசப்பு மொழிகளில் ஒன்றாகவே கருதுவர்.

பொதுவாக, ஆரியப் பார்ப்பனர்கள் அஃதாவது பிராமணர்கள் தமிழ்மொழியை என்றுமே பாராட்டியதில்லை; பேணிக்

கொள்வதுமில்லை. அதைச் சூத்திரமொழி என்றும், நீச பாஷை என்றுமே கூறி வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், மிகச் சிறந்த அரசியல் வரலாற்று அறிஞருமாகிய வயவர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் அவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்தினர்; அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே! தமிழை விட சமசுக்கிருதமே மேல் என்பது அவர்களின் முடிந்த முடிபாகும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். பொதுவாக இன நிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் சமசுக்கிருதத்தையும், அது முடியாத பொழுது அதற்கு முற்றிலும் இலக்கண இலக்கிய வழியில் வயப்பட்ட இக்கால் உள்ள இந்தி மொழியையுமே ஆரியப் பார்ப்பனர்களும் அவர்கள் வழி வடநாட்டினரும் தலைமைப்படுத்த வேண்டும் அல்லது அதிகாரம் கொண்டனவாக ஆக்க வேண்டும் என்று அங்காந்து திரிகின்றனர். இந்நிலையில் தமிழுக்கு இக்கால் ஏற்பட்டு வருகிற மேம்பாடுகளும், தமிழர்களிடையில் தோன்றி வளர்ந்து வருகின்ற விழிப்புணர்வுகளும் பார்த்தசாரதி போலும் படித்த – ஒரளவு பொதுமக்களிடையே விளம்பரம் பெற்ற – பார்ப்பன எழுத்தாளர்களுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் தருகின்றனவாக இருக்கலாம். அவ்வுணர்வு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே ‘துக்ளக்’கில் அவர் எழுதிய கட்டுரையை நாம் கருதுதல் வேண்டும்.

ஆரியப் பார்ப்பனர்களின் குணக்கேடுகளைப் பற்றி ஆயர் துபாய்சு என்னும் வரலாற்று மேலையறிஞர் தம் புகழ்மிக்க இந்துக்களின் ஒழுக்க வழக்கங்களும், வினைமுறைகளும்(Hindu Manners, customs and ceremonies), என்னும் வரலாற்று நூலில், ‘அவர்கள் பேராசை (avarice), அதிகார வெறி (ambition), வஞ்சனை (cunning), நேர்மையின்மை (Dishonest), இரட்டை நாக்கு(double tongue), ஏய்த்தல் (Fraud), முறைகேடு (Injustice), நயவஞ்சகம் (Insurwating), கள்ளத் தொடர்பு (Intrigne). கொடுமை(Oppression), இழிதகைமை (Servile), சூது (Wile) போன்ற தீய பழக்கங்களுடையவர்கள்’ என்கிறார். இத்தீக் குணங்களுள் முழுமையுமோ ஒன்றிரண்டோ இன்றுள்ள ஆரியப் பார்ப்பனர்களிடமும் காணப்படக் கூடியவையாகவே உள்ளன. எனவே, தமிழ்மொழியின் உண்மையான சிறப்பையும் அல்லது தமிழின மேம்பாட்டையும் எவ்வகையிலும் அவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் நாமும் பார்த்தசாரதி

போலும் தமிழ்ப் படித்த பார்ப்பனர்களின் கருத்துகளையும் கவனிக்க வேண்டுவதில்லை. இனி, அவர்கள் வழி, சமசுக்கிருதத்தையும் அதன் மேலாளுமையுமே சிறப்பென்று கொண்ட வையாபுரி, மீனாட்சிசுந்தர, கண்ணதாச அடியார்களையே அவர்கள் தமிழறிஞர்கள் என்று இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழுக்கு உண்மை ஏற்றம் கண்ட மெய்யான தமிழறிஞர்களைப்பற்றி அவர்கள் எப்பொழுதுமே காழ்ப்புக் கொண்டவர்களாகவும், எரிச்சலுற்று மறைமுகத் தாக்குதலை நடத்துபவர்களாகவும், இன்னும் முடிந்தால் அப்படிப்பட்டவர்களையே திட்டமிட்டு அழித்தொழிப்பவர்களாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இனி, பார்த்தசாரதி, தம் கட்டுரையில் சமசுக்கிருதத்தைப் பற்றி வரம்பின்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார். சமசுக்கிருதம் ஒர் அரைச் செயற்கைக் கலவை மொழி என்பதையும், ஏறத்தாழ கி.மு. 5–ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப் பெற்ற மொழி என்பதையும், வேத கால ஆரியர் பேசிவந்த ஆரிய மொழி அழிந்து போன பின் பிராகிருதம் (வட திரவிடம்), பாலி மொழிகளினின்று தோற்றுவிக்கப் பெற்றதென்பதையும் மறைமலையடிகள், பாவாணர் போலும் மொழி வரலாற்றறிஞர்கள் நன்கு ஆய்ந்து புலப்படுத்தியுள்ளனர். இனி, பாவாணரவர்கள் சமசுக்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி முழுத் தமிழ்ச் சொற்களும் ஐந்தில் இரு பகுதி தமிழ் வேரினின்று திரிந்த சொற்களும், ஐந்தி ஒரு பகுதி இடுகுறிச் சொற்களென்றும் தம் துண்மாண் நுழைபுல வன்மையால் முற்ற ஆய்ந்து முடிவுகட்டியுரைப்பார். சமசுக்கிருத அகர வரிசையில் உள்ள நால்வகை ஒலிப்புகளும் பிராகிருத மொழியில் இருந்தவையே. இக்கால் பேசப்பெறும் மணிப்பிரவாளத் தமிழில் தமிழுடன் பிராகிருதமொழிச் சொற்களே மிகுதி. சமசுக்கிருதம் பிராகிருதம் கலந்து செய்யப்பட்டதால் அவை சமசுக்கிருதச் சொற்கள் போலவே தோன்றுகின்றன.

சமசுக்கிருதம் ஒருபோதும் பேசப்பட்டதில்லை. அந்த இழுக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆரியர்கள் அதால் தம் வேத மதக் கொள்கைகளை மக்கள் இழிவாகப் புறக்கணித்து விடுவார்கள் என்பதற்காக, அஃது இங்குள்ளவர்களால் அன்று, தேவர்களால் பேசப் பெறுவது என்று அதற்கு உயர்வு கூறினர். மொட்டையனைக் கேசவன் என்றும், பெட்டையனைப் புருசோத்தமன் என்றும், மூங்கையனை வாகீசன் என்றும், குருடனைக் கண்ணாயிரம் என்றும் அழைப்பது போல், இந்நிலவுலகத்து எப்பொழுதும் எங்கும் எவராலும் பேசப் பெறாத மொழியைத் தேவருலகத்துப் பேசப்

பெறுகிற மொழி என்னும் பொருளில் தேவ பாஷை என்று பெருமைப்படுத்திப் பேசினர். பிரம்மசிரி மருவூர் கணேச சாத்திரியார் என்பவர் எழுதியுள்ள 'வேத மதம் அல்லது வேதாகம இதிகாஸ் புராண ரகஸ்ய நிரூபணம்' என்னும் நூலில் (பக்கம் 194–195) கீழ்வருமாறு எழுதுவதை அன்பர்கள் கவனிப்பார்களாக.

“சிலர் நமது முன்னோர் குடும்பங்களில் ஸம்ஸ்கிருத பாஷை தேச பாஷையாக பூர்வகாலத்தில் வழங்கி வந்ததெனவும், அந்த பாஷை இப்போது செத்த பாஷையாகப் போய்விட்டது எனவும் தற்காலம் சொல்லுகின்றனர். இவ்வுலகில் ஸம்ஸ்கிருத பாஷை ஒரு ஸ்மயமும் தேச பாஷையாக வழங்கப்பட்டதில்லை. கற்றோர்கள் கூட்டங்களில் மாத்திரம் வழங்கப்பட்டதேயன்றி வேறு எவ்விதமுமல்ல. இவ்வுண்மை தெரியாமல் தாறுமாறாய் வசனிக்கும் விஷயங்கள் தற்காலம் விசேஷமாயிருக்கின்றமையால், ஏதோ அவ் விஷயத்தையும் இங்கு நாம் குறிக்க வேண்டியதாயிற்று. ஸம்ஸ்கிருத பாஷை யுண்ணிய புவனங்களாகிய ஸூவர்வோகம், மஹாலோகம், கைலாசம் – முதலிய இடங்களில் வழங்கும் பாஷையேயன்றிப் பூலோக தேச பாஷையல்ல. தென்தேசத்திலிருந்த நம்முடைய முன்னோர்கள் எப்போதும் தென்மொழியையே பேசும் பாஷையாக வழங்கி வந்தனரே பன்றி வேறு எந்த பாஷையும் பேசியவர்களல்லர். ஆனது பற்றியே மகாபாரத்தில் அர்ஜூனனது தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் 'மணலூர்புரே' எனும் சொல்லிலும் ஸ்கந்த புராணத்தில் 'பெண்ணாநல்லூர்' எனும் சொல்லிலும் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி யிருப்பதனாலும், இவ்வாறே மற்ற சிவரஹஸ்யாதி நூல்களிலும் நகர, கிராம ஜனங்களின் பெயர்களை வழங்கும் ஸந்தப்பங்களில் தென்மொழியே பல இடங்களில் வழங்கப்பட்டிருப்பதினாலும் தென் தேசத்தில் தமிழ் மொழியே தேச பாஷையாக வழங்கி வந்ததென வெளிப்படையாகத் தெரிகின்றது. இவ்வுலகில் இவ்வாறு தேச பாஷைகள் வழங்குவது போல் தேவ உலகில் வழங்கும் பாஷை ஸம்ஸ்கிருதமே”

எனவே, அவர்கள் கூற்றுப்படியே சமசுக்கிருதம் தேவருகலத்தில் வழங்கி வரும் மொழியாக இருக்கிறதென்றால், இங்கு, இந்தத் தமிழ்நாட்டில், அல்லது இந்தியாவில்தான் அதற்கென்ன வேலை! இதற்குப் போய் ஏன் தீபம் பார்த்தசாரதியார் அலட்டிக் கொள்கிறார். அவ்வாறு அலட்டிக் கொள்வது அவர் அறிவன்று அவர் போட்டிருக்கும் பூணூல். தமிழ் பேசும் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டத்தினரைச் சூத்திரர் என்றும், தங்களைப் பிராமணர்கள் என்றும் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நாளிலும் கூறிப் பெருமை பேசும் வெட்கங்கெட்ட இனம் சார்ந்த பார்த்தசாரதியார், சமசுக்கிருதத்தை வெறுப்பவர்களே தமிழறிஞர்களாக இத்தமிழ்நாட்டில் மதிக்கப் பெறுகின்றனர் என்று வயிறெரிந்து சாவது ? உண்மை அதுவன்று. அற்றைநாள் தமிழறிஞர்கள் சமசுக்கிருதத்தைத் தேவ மொழி என்று கைகட்டி வாய் பொத்தி வணங்கி வாழ்த்துப் பாடினர். அவர் வழி வையாபுரி, தெ.பொ.மீக்கள் தோன்றினர். இன்றுள்ள நிலை வேறு, தேவமொழியை மட்டுமன்று, தெய்வத்தையே ஆராயும் அறிவியல் காலம் இது. சமசுக்கிருதத்தின் உண்மை வரலாறு இங்குள்ள அனைவர்க்கும் தெளிவாகத் தெரிகின்ற காலம் இது. இந்நிலையில் அங்குள்ள இயல்பான வரலாற்று நிலைக்கு மேல் தெய்வீகத்தனம் கற்பித்துப் பேச, தமிழர்கள் இன்னும் குடுமி வைத்தவர்கள் அல்லர். இன்னும் சொன்னால் தமிழ், சமசுக்கிருதத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் விளக்கம் தேவையானால் கேளுங்கள்; தெரிவிக்கிறோம். மற்றபடி எழுதுவதற்குத் துக்ளக் போலும் இதழ்களும், அவற்றைப் பொதுமக்களிடம் பரவலாக விளம்பரப்படுத்த செல்வக் கொழுப்புடையவர்கள் பணமும், அதிகாரக் கொழுப்புள்ளவர்களின் ஆட்சியும் உள்ளதென்று தமிழ் மொழியையும் தமிழ் அறிஞர்களையும் தாழ்த்திப் பேச வேண்டா.

திரவிட மொழிக் குடும்பத்தை வடமொழிச் சார்பற்றவை என்று முதன் முதலிற் கண்டு காட்டியவர் கால்டுவெல் ஆவர். அவர்க்குப் பின் தமிழியல் வரலாறு மிகவும் தெளிவுபடுத்தப் பெற்று விட்டது. இதற்கு மேலும் தமிழ் சமசுக்கிருதத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்க முடியாது. அவ்வாறு கிடக்க சமசுக்கிருதம் தமிழைவிட மேம்பட்ட மொழியுமன்று. சமசுக்கிருத இலக்கணத்தின் தன்மை மிக மிகக் காட்டு விலங்காண்டித்தனமானது. ஓரிரண்டு எடுத்துக்காட்டிகளிலேயே இதை மெய்ப்பிக்கலாம். சமசுக்கிருத பாலியற் பாகுபாடு என்னும் இலக்கணக் கூறு ஒன்றில் உள்ள செயற்கைத் தன்மையைக் கீழ்வரும் சொற்களில் காணலாம்.

சமசுக்கிருதத்தில் அஃறிணைப் பொருளாகிய ‘கல்’ என்று பொருள்படும் 'பாஷாணம்' ஆண்பால். அதே கல்லைக் குறிக்கும் சிலா என்னும் சொல் பெண்பால். இன்னும் மனைவி என்று பொருள்படும் மூன்று சமசுக்கிருதச் சொற்களில் தார - ஆண்பால்; பார்ய - பெண்பால்; களஸ்திர - அலிப்பால். அதே போல் பொத்தகம் என்று பொருள்படும் மூன்று சொற்களில் கிரந்த - ஆண்பால்; ச்ருதி - பெண்பால், புஸ்தக - அலிப்பால். தத்கச்சதி

என்னும் ஒரே படர்க்கை வினைமுற்று இடத்தைப் பொறுத்து அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது என்று மூன்று வகையாகவும் பொருள்படும். இத்தகைய திணை, பால், எண், இடம்ட தெளிவாக இல்லாத சமசுக்கிருதம் எப்படித் தேவமொழியாகும்? மேலும் தூய தனித்தமிழ்ச் சொற்களை ஒலி மாற்றியும், திரித்தும், கடைக்குறைத்தும் சமசுக்கிருதம் என்று கூறி வந்த பொய் பித்தலாட்டத்தைத் தமிழர்கள் இன்னும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான சொற்களை இதுபோல் காட்டலாம். எடுத்துக்காட்டுக்குச் சில சொற்கள். (இவை பாவாணரின் ஆராய்ச்சி வெளிப்பாடுகள்).

தமிழ் வ. சொல்
அக்கை அக்கா
அம்பலம் அம்பரம்
அரசன் ராஜன்
இடைகழி தேஹலி
உருவம் ரூப
உலகு லோக
உவமை உபமா
கரணம் கரண
கருமம் கர்ம
கலுழன் கருட
கன்னி கன்யா
காக்கை காக்க
காளி காலீ
குண்டம் குண்ட
கும்பம் கும்ப
கோபுரம் கோபுர
சவம் சவ
சவை சபா
சுக்கு சுஷ்க
கடிகை கடிக
திரு ஸ்ரீ
கலாவம் கலாப
தூதன் தூத
தோணி த்ரோணி
படி ப்ரதி
நிலையம் நிலைய
பாதம் பாத
பல்லி பல்லீ
பிண்டம் பிண்ட
புடவி ப்ருத்வி
புழுதி பூதி
புருவம் புருவ
பொத்தகம் புஸ்தகம்
மண்டபம் மண்டப
மயிர் சமச்ரு
மயில் மயூரி
மாத்திரை மாத்திர
முத்தம் முக்த
மெது மருது
வட்டம் வருத்த
சாயை சாயா
கடிகை கடிக
கலாவம் கலாப
சகடம் சகட
சடம் ஜடம்

மேலும், சமசுக்கிருதத்திற்கு முன்னர் வேத ஆரியர் பேசி வந்த வேதமொழியிலேயே தமிழ்மொழிக் கூறுகள் மிக்கிருந்தன என்று

பல சான்றுகளுடன் நிலைநாட்டுவர் கேம்பிரிட்சு வடமொழிப் பேராசிரியராகிய இராப்சன்(Rapson) என்னும் அறிஞர்.

இன்னும் தமிழ்மொழி சீரிழந்து போனதற்கும், தமிழினம் சீரழிந்து போனதற்கும் சமசுக்கிருதமும் ஆரியப் பார்ப்பனருமே தலையாய கரணியமும் கரணியரும் ஆவர். சமசுக்கிருதத்தை வேண்டுமென்றே ஆள் பெயர், ஊர்ப் பெயர், நாட்டுப் பெயர், கோவில் பெயர் அனைத்திலும் புகுத்தியவர்கள் சமசுக்கிருத வெறியர்களே. பார்த்தசாரதி கூறுவதுபோல் தமிழில் இன்னும் வெறியர்கள் தோன்றவில்லை. தமிழ் வெறியர்கள் ஒரு பத்துப் பெயராகிலும் இருப்பாரேயாகில், உண்மைத் தமிழகத்தில் பார்த்தசாரதியும் இரார்; ‘துக்ளக்’கும் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் பார்த்தசாரதி மார்பில் பூணூலும், ‘துக்ளக்’ இதழில் பெயருடன் கலப்புத் தமிழும் இல்லாமலிருந்திருக்கும். நிலை அவ்வாறில்லாமல் இருப்பது ஒன்றே பார்த்தசாரதி கூறும் தமிழ் வெறியர்கள் யாரும் இங்கு இல்லை என்பதை உணர்த்தும்,

பார்த்தசாரதி கூட்டத்தினரின் சமசுக்கிருத வெறி இத்தமிழகத்தில் எப்படிச் செயற்பட்டது என்பதற்கான சான்றுகள்:

மாற்றப்பட்ட ஆட்பெயர்கள்:

வடமொழிப்பெயர் பொருள்
கேசவன் மயிரான்
பூவராகன் நிலப்பன்றி
கும்பகர்ணன் குடக்காதன்
மண்டோதரி பானைவயிறி
சூர்ப்பநகா முறம்பல்லி
காமாட்சி காமக்கண்ணி
மீனாட்சி கயற்கண்ணி
ஸ்வர்ணாம்பாள் பொன்னம்மை

மாற்றப்பட்ட கடவுள் பெயர்கள்:

தமிழ் வ.சொல்
பொன்னன் ஹிரண்யன்
அரவணையன் சேஷசாயி
அடியார்க்கு நல்லான் பக்தவத்சலம்
அம்மையப்பன் சாம்பமூர்த்தி
தூக்கிய திருவடி குஞ்சிதபாதம்
தென்முகநம்பி தக்ஷணாமூர்த்தி
மங்கைபாகன் அர்த்த நாரீசுவரன்
உலகநம்பி ஜகநாதன்
உலகுடையான் ஜகதீச்வரன்
சொக்கன் சுந்தரன்
தாயுமானவன் மாத்ருபூதம்
கருமாரி கிருஷ்ணமாரி
ஆடலரசன் நடராஜன்
செம்மலையான் அருணாசலம்
பிறைசூடி சந்திரசேகரன்
மாலிடங் கொண்டான் சங்கர நாராயணன்
முருகன் சுப்பிரமணியன்
பிள்ளையார் கணபதி

- இவ்வாறு தூய தமிழைக் கெடுத்து இழிவு தோன்றுமாறும் அதை விளங்கிக் கொள்ளாதவாறும் செய்த ஆரியப் பார்ப்பனர்கள் மொழி வெறியர்களா, இத்தீமையை ஏற்றுக்கொள்வதனால் எதிர்வரும் தாழ்ச்சிகளையும் அழிவுகளையும் அழியாத கள்ளங் கவடற்றவர்களானவர்களும், அன்பினாலும் விருந்தோம்பலினாலும் பகைவர்களையும் அரவணைத்து ஆதரித்துப் போற்றி, இன்று அவலத்திற் காட்பட்டுக் கிடப்பவர்களும் ஆன தமிழர்கள் மொழி வெறியர்களா? இதற்குப் பார்த்தசாரதியார் ‘துக்ளக்’கிலேயே விடை தருவாரா? அல்லது தென்மொழிக்கே எழுதித் தம் பெருந்தன்மையை உணர்த்துவாரா?

இன்னொன்றை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுதல் நன்று. மக்களினத்தில் மட்டும் ஆரியப் பார்ப்பனர்கள் சாதி யிழிவுகளைப் புகுத்தவில்லை. தமிழ் எழுத்துகளிலும் சாதிப் பாகுபாட்டைப் புகுத்தி யிருப்பதைப் - பார்த்தசாரதியார் அறிந்திருப்பார். ஏனெனில் அவர் தமிழாசிரியராக இருந்தவர். பாட்டியலில் உள்ள எழுத்துச் சாதிப் பாகுபாடுகள் இவை:

உயிரெழுத்துகளும், முதல் ஆறு மெய்யெழுத்துகளும் -பார்ப்பன எழுத்துகள்
இரண்டாவது ஆறு மெய்யெழுத்துகள் - சத்திரிய
ல், வ், ழ், ள் - வைசிய எழுத்துகள்
ற், ன் - சூத்திர எழுத்துகள்
இன்னும் அதில் குறிப்பிட்டுள்ள பாட்டு நிலைகள் வருமாறு:
பார்ப்பனர்க்கு - வெண்பா
சத்திரியர்க்கு - ஆசிரியப்பா
வைசியர்க்கு - கலிப்பா
சூத்திரர்க்கு - வஞ்சிப்பா

கலம்பகத்தில், தேவர்க்கு 100 செய்யுள். பிராமணர்க்கு 95, அரசர், அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50 செய்யுள், சூத்திரர்க்கு 30 செய்யுள் பாட வேண்டும் என்பது பாட்டியல்,

இப்படி எழுத்து, சொல், பாட்டு, மக்கள், ஊர், பேர், கடவுள் எல்லாமும் பார்ப்பனர்க்கு அடிமையாக இருந்தால் பார்த்தசாரதியார் மெச்சி, உச்சி குளிர்வாரோ? நல்லவேளை அவர் உச்சிக்குடுமி எதுவும் வைத்திருக்கவில்லை, பரட்டைத்தலை யராக இருக்கிறார்). இல்லாவிட்டால், அல்லது தட்டிக் கேட்டால், அல்லது ஆரியப் பார்ப்பனர்க்குத் தமிழர் அடிமைகள் ஆக முடியாது என்றால், அல்லது சமசுக்கிருதத்திற்குத் தமிழ்மொழி தாழ்ந்ததன்று உயர்ந்ததே என்றால் உடனே ‘லோகம் கெட்டுப் போயிடுத்து’ என்று கூத்தாடும் சவண்டிப் பார்ப்பனர் போல, பார்த்தசாரதியாரும் தமிழ்நாட்டு அறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் காரணமற்ற வெறுப்பு, துவேஷம் என்று ‘துக்ளக்’கில் இல்லையென்றால் தினமணிக் கதிரில் எழுதோ எழுதென்று எழுதுவார். இல்லையா, தீபம் பார்த்தசாரதி அவர்களே!

இன்னொன்றைப் பார்த்தசாரதியார் தம் கட்டுரையில் கூறியிருக்கிறார். அதுதான் சமசுக்கிருதம் கழகக் காலத்திலும் அதையடுத்த காலங்களிலும் ஒர் அறிவுத் தொடர்பை(intellectual Companianship), தொடர்ந்து அளித்து வந்திருக்கிறதாம். நல்ல வேடிக்கை இது. தமிழ்மொழியில் இருந்த நூற்றுக்கணக்கான அறிவு நூல்களைச் சமசுக்கிருதத்தில் பெயர்த்து எழுதிக் கொண்டு, தமிழ் மூலங்களை அழித்து விடுதல் பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து செய்து வரும் ஒர் அப்பட்டமான அழிம்பு வேலை. இதுபற்றித் தென்மொழியில் முன்பே பல செய்திகளையும் குறித்திருக்கிறோம். இப்பொழுது தஞ்சை சரசுவதி மகாலில் தொடர்ந்து இவ்வேலை நடந்து வருவதையும் சுட்டியிருக்கிறோம். வேதத் தொடரின் இறுதியில் சேர்க்கப் பெற்றிருக்கும் உபநிடதங்கள் யாவும் தமிழ் முனிவர்கள் எழுதியவை என்பதை மறைமலையடிகள் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் அறிவுத் தொடர்புக்கு மட்டுமன்று. உலகத்தின் அறிவுத் தொடர்புக்கே தமிழ்தான் மூலமாக இருந்து உதவும் என்பதைக் கீழ்வரும் பர். கில்பர்ட் சிலேட்டர் (Dr. Gilbert Slater) அவர்களின் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

Since Dravida is as once the part of India where the most ancient culture still survives and the part which is closest in touch with the twentieth century. In the flow of intellectual commerce between the east and the west the English speaking studentss of Tamil will supply many of the most achieve intermediaries.

இனி, அறிஞர்களின் அறிவுப் பரிமாற்றத்திற்கு மட்டுமன்று, இந்திய மக்களினத்தின் ஒருமைப்பாட்டுக்கே தமிழ்தான் இணைப்பு

மொழியாக இருந்து உதவும் என்று காந்தியடிகள் கூறியதையும் பார்த்தசாரதிக்கு நினைவூட்டுகிறோம். (Calcutta ‘Modern Review’).

இனி, இறுதியாக,

தெய்வா தீனம் ஜத்ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன்மந்த்ரம் ப்ரர்ஹ்மணா தீனம்
பிராஹ்மணா மம தைவதம்”

(இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலால் பிராமணரே நம் தெய்வம்.)

- என்ற காலம் மலையேறி விட்டது. தேசியம், ஒருமைப்பாடு, ஒற்றுமை, இந்தியா என்றெல்லாம் பேசி ஆரிய இனத்துக்கும் மொழிக்கும் பிற இனத்தவரை, குறிப்பாகத் திரவிடரை, இன்னுஞ் சொன்னால் தமிழரை அடிமைப்படுத்தி அரசோச்சிய காலம் கழிந்து விட்டது; இனிமேலும் தமிழினத்தைப் பார்ப்பனர்க்கு மட்டுமன்று. உலகில் வேறு எந்த இனத்துக்கும் அடிமைப்படுத்திவிட முடியாது. தமிழினம் விழித்துக் கொண்டது; விழித்துக் கொள்கிறது; விழித்துக் கொள்ளும்! பார்த்தசாரதிகளும் துக்ளக்குக்கும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- தென்மொழி, சுவடி : 16, ஓலை : 6, 1980