ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/தொலைக்காட்சி 'இராமாயணம்'
இராமாயண ஒளிபரப்பு நோக்கம் தமிழின வெறுப்பை வளர்ப்பதே!
இராவணன் வழியாகத் தமிழினத்தை அவமானப்படுத்துகின்றனர்!கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தில்லித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பில், இராமாயணம் ஒளிபரப்பாகி வருவதை அனைவரும் அறிவர்!
இலங்கையில் விடுதலைப் போர் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், திட்டமிட்டுத் தில்லி ஆட்சியால் இராமாயண ஒளிபரப்பு நடந்துவருவது, தமிழினத்தின் வலிவைப் பழங்கதைகளைக் காட்டி ஒடுக்குவதற்கே உதவும் என்பதை, அதன் கதைப் போக்கையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அனைவரும் உணர முடியும்.
உரையாடல்களுக்கு நடுநடுவே ஆரிய - திராவிட இனவுணர்வுகள் தூண்டப்படுவதை அனைவரும் அறியலாம். தமிழினத்தை இழிவுபடுத்தும், கோழைமை வாய்ந்ததாகக் காட்டும் காட்சிகளும்
உரையாடல்களும் தமிழர் மனத்தை மிகவும் புண்படுத்துவனவாக உள்ளன. பொதுவாகத் தொடக்கத்திலிருந்தே இடையிடையே உள்ள உரையாடல்கள் தமிழின மக்களை - திராவிட இன மக்களைக் கீழ்மைப்படுத்துவனவாகவே அமைந்து உள்ளன.
குறிப்பாகச் சென்ற கிழமை, 6:3-88இல் ஒளிபரப்பான காட்சியில், இந்திரசித்து, இராவணன் அவையில் நடந்துகொண்ட காட்சிகளும், பேசிய உரையாடல்களும் இராவணனையும், அவன் அவையினரையும் மட்டும் இழிவுபடுத்தவில்லை; தமிழினத்தையே அவமதிப்பனவாகவும் இழிவுபடுத்துவனவாகவும் அமைந்திருப்பதைக் காண, கேட்க மனம் மிகவும் புண்பட்டுப் போனது.
கதைப்படியே எடுத்துக்கொண்டாலும், இராவணன் மிகப் பெரும் வீரன். கோழை உணர்வு கொண்டவனல்லன். நேர்மையாளன். ஒழுக்கத்தில் சிறந்தவன். அவன் தெய்வத்திற் கிணையாக வைத்துப் போற்றப் பெற்றவன், இலங்கேசுவரன் இராவனேசுவரன் என்றே அவன் புகழப்பெறும்படி வாழ்ந்திருக்கின்றான்; யாரினும் அவன் இறைப்பற்றாளன், தென்னாட்டுக்கே உரிய அறிவு மதமாகிய சிவனிய மதத்தைச் சார்ந்தவன்; நேரடியாகப் போரிலோ அறிவிலோ அவனை அவன் காலத்தில் வெல்லுவதென்பது யாராலும் முடியாததாகவே இருந்தது; மிகப்பெரும் இசைத்துறை வல்லுநன்; இறையருள் பெற்றவன்; சிவனை நோக்கி எவருமே செய்ய இயலாத பெரும் தவமியற்றி அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தான் என்று வால்மீகியே குறிப்பிடும் அளவுக்கு அவன் பெருமை அளவற்றது. அத்தகைய ஆற்றல் வாய்ந்த மாபெரும் திராவிட மாவீரனை, இராமன் என்னும் ஒரு கோழை பல சூழ்ச்சிகளால் வென்றான் என்பதே கதை!
இவ்வாறான அறிவும் திறமும் வீரமும், அரிய ஆற்றல்களும், கலை, பண்பாடுகளுளம், ஒழுக்கமும் சான்ற அவனை, ஒரு மிகப் பெரும் கோழையாகவும் ஒழுக்கக் கேடனாகவும் தொலைக்காட்சி இராமாயணத்தில் காட்டப் பெறுவது கொடுமையிலும் கொடுமை! எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக் கொள்ள இயலாதது.
மேலும் இராமாயணக் கதை என்பது எங்கோ, எப்பொழுதோ, நடந்த ஆரிய திராவிட இனப் போரையே அடிப்படையாகக் கொண்டதென்பதும், அதில் வரும் வாலி, சுக்கிரீவன், அநுமன் முதலிய வானரக் கூட்டம் என்பது திராவிட அஃதாவது தமிழினத்தவர்களே என்பதும், வீடணன் முதலியவர்கள் தமிழினத்தவரை ஆரியர்க்குக் காட்டிக் கொடுத்த வஞ்சகர்களே என்பதும், சவகர்லால் நேரு உள்ளிட்ட வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவரும் ஒருமுகமாகக் கருத்தறிவித்த
பின்னும், தொலைக்காட்சியில், இப்படிப்பட்ட இராமாயணக் கதையைத் தம் அதிகார, ஆணவ, பண வலிவாக்கத்தின் மமதையால் தில்லி வடவராட்சியும், இராசீவும் திட்டமிட்டு நாடெங்கும் பரப்பி வருவது, மீண்டும், தமிழின ஒடுக்கத்திற்கே அல்லது அழிப்புக்கே வழியமைத்துக் கொடுக்கும் கரவான அமைதிப் போர்த் தந்திரமே ஆகும்.
எனவே, இதை மீண்டும் ஒளிபரப்பக் கூடாதென்று, தமிழின நலம் நாடும் தலைவர்களும் மானமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கைகளும் கோரிக்கைகளும் விடுப்பதுடன், போராட்டங்களும் நடத்துதல் வேண்டும்.
தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது உணர்ந்தோ உணராமலோ, தமிழினம் மிகக் கொடுமையான அரசியல் இனவியல் அழிவுச் சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அது தங்களுக்குள்ள இன, மத, சாதியக் கட்சி வேறுபாடுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு புறத்தே வரும் வரும் பருமனான இப் பகை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை யானால், இனி எதிர்காலத்தில் அது தன் ஒட்டுமொத்த வீழ்ச்சியினின்றும், அழிவிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள முடியவே முடியாது என்பதை அனைத்துத் தமிழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தித் திணிப்பு என்பது மொழியாலும், தமிழகத்தில் இப்பொழுதுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியென்பது அரசியலாலும், இராமாயண ஒளிபரப்புப் போன்றவை இனத்தாலும், தமிழினத்தின் மேல் ஒட்டுமொத்தமாகச் சூழ்ந்திருக்கும் போர் மூட்டங்களாகும். அத்துடன் இலங்கைச் சூழலால் தமிழின அழிப்பு வேலை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருவதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் அரசியல் பதவிகளுக்காக இங்குள்ள தமிழர்கள் அடித்துக் கொண்டும் பிடித்துக்கொண்டும் கிடப்பது அறிவுடைமையாகாது.
தமிழினத் தாக்கங்களைத் தமிழகப் பொதுமக்கள் உணரவில்லை. அவர்கள் உணராமல் இருப்பதற்கு நம் அரசியல் தலைவர்களே காரணம். அவர்களை ஏமாற்றி வாழ்வதே அவர்களது குறிக்கோளாகும். இந்நிலையில், தமிழின நல நாட்டமுடையவர்களே பெரும் அளவில் இம் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும். அதனடிப்படையில் ஒரு பெரும் பேரினக் கிளர்ச்சி தொடங்கப் பெறுதல் வேண்டும். அந்நிலையில் என்ன நடக்கும்? தமிழகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகளல்ல; தொலைக்காட்சி நிலையங்களே உடைபடும்! இந்தி எதிர்ப்பன்று; இந்திய எதிர்ப்பே இங்கு நடக்கும்! இராசீவ் இல்லை; இராசீவ் இனமே இங்கிருந்து விரட்டியடிக்கப் பெறும் அது எப்போது? காலம் விடை சொல்லும்!
- தமிழ்நிலம், இதழ் எண். 101, 1988