ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பார்ப்பனரின் எழுச்சி
பொதுவாகப் பார்ப்பனர் என்று குறிக்கப் பெறும் ‘பிராமணர்கள், நிலத்தேவர்கள் என்றே மறை(வேதங்)களிலும், நூன்முறை(சாத்திரங்)களிலும், பழநூல்(புராணங்)களிலும், பழங்கதை இதிகாசங்களிலும், அறிவு நூல்(ஆகமங்)களிலும், அறநூல்(மிருதி) களிலும், வேள்வி முறை(பிராமணங்)களிலும், மறையறிவு(உபநிடதங்) களிலும், சமயச்சடங்கு(ஆரண்யகங்)களிலும், மெய்ந்நூல்(தத்துவங்)களிலும், வினைநூல்(கரும காண்டங்)களிலும், வழிபாட்டு நூல் (பூஜா நியமங்)களிலும், ஓக(யோக) நூல்களிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் அடிப்படை உண்மைபோலும் கூறப்பட்டிருக்கின்றது. அவ்வடிப்படையிலேயே மக்களின் அமைப்புகளும் ஒருசார்புடையன வாகவே பகுக்கப் பெற்றுள்ளன.
இந்நூல்களில் கூறப்பெற்ற உண்மைகளின்படி தூய்மையே (சத்துவம்) நிரம்பியவர்கள் பிராமணர்கள் என்றும், ஆண்மை (ரஜஸ்) நிரம்பியவர்கள் ‘க்ஷத்திரியர்கள்’ என்றும், சோர்வு(தமஸ்) நிரம்பியவர்கள் ‘வைசியர்கள்’ என்றும் இம்மூன்று தன்மைகளில் எதுவுமே சரிவர அமையாதவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் கூறப் பெற்று வருகின்றன. இந்நால்வரும் உலகில் அறிவுபுரத்தல், உலகு புரத்தல், பொருள்செயல், தொண்டுசெயல் என்ற காரணங்களுக்காவே பிரம்மா என்னும் படைப்புக் கடவுளின் முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்று தோன்றியவராகக் கூறப் பெற்றுள்ளனர். இந்நால்வகை மக்களுக்கும் கூறப்பெற்ற வாழ்முறைகளும், அறமுறைகளும், ஒழுக்க முறைகளும் மனு முதலிய
ஆரிய நூல்களில் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன. அந்நூல் உட்பட எந்நூலையும், கலைகளையும், மறைகளையும் கற்று உணர்தற்கு உரியவர் பிராமணரே என்றும், பிறர் அவற்றைப் படிப்பதும், படிக்கக் கேட்பதுங்கூடக் கூடாவென்றும் கண்டிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிப்பவனும், படித்து அவற்றின் ஒழுங்கு முறைகளில் ஒழுகுவோனுமாகிய பிராமணனுக்கே இவ்வுலகம் முழுவதையும் கட்டியாளும் தகுதியிருக்கின்றது என்றும் கூறப்பெற்றுள்ளது.
பத்தே ஆண்டு நிரம்பிய பிராமணன்னைத் தந்தையைப் போலும், நூறு ஆண்டு உடைய ‘கூத்திரியனை’ப் பிள்ளையைப் போலும் மதித்தல் வேண்டும் என்றும் மனுநூல் கூறுகின்றது. இன்னும் அரசன் பிராமணரைக் கேட்டு அவர் கருத்துப்படியே அரசு செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் பிராமணரைக் கூப்பிட்டு, அவர்களுக்கு உள்ள குறைகளைக் கேட்டு, அவற்றை நீக்குவது அரசன் அன்றாடக் கடமைகளில் ஒன்று என்றும், அரசன் நோயுற்றவிடத்துப் பிராமணனே அரசவையை நடத்தத் தக்கவன் என்றும், நான்காம் இனத்தவனாகிய ‘சூத்திரனை’க் கொண்டு எந்த நாடு அரசாளப் பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட மாட்டைப் போலத் துன்புற்று, வறுமைமிகும் என்றும், புதையல் பொருளைப் பிராமணன் தவிரப் பிறர் எடுத்தால் அப்பொருள் அரசனையே சாருமென்றும், பிராமணன் எடுத்தால் அஃது அவனுக்கே சொந்தமென்றும், மன்னனுக்குப் புதையல் கிடைத்தால் அதில் பாதியைப் பிராமணர்களுக்குத் தரவேண்டுமென்றும், குற்றம் செய்தவனை அவன் குலமறிந்தே தண்டிக்க வேண்டுமென்றும், பிராமணர் விருப்பத்திற்கு மாறாக எந்தத் தீர்ப்பையும் அரசன் சொல்லக்கூடாதென்றும், பிராமணனைக் காக்கும் பொருட்டு எவனும் எப்பொய்யைக் கூறினாலும் கரிசு(பாவமு)ம் குற்றமும் ஆகாவென்றும், பிராமணன் பொய் கூறினால் அவனை மன்னிக்க வேண்டுமென்றும், பிற மூவினத்தாரும் பொய் கூறினால் அவர்களை நாடு நடத்த வேண்டும் என்றும், பிராமணன் தவிர்த்த பிறரைக் கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண், நாக்குக்கு நா, செவிக்கு செவி, உடலுக்கு உடல் சிதைக்க வேண்டுமென்றும், பிராமணனை மட்டும் எந்த வகையான காயம் படாமலும் அவன் சொத்துகளுடன் ஊரைவிட்டு துரத்திவிட வேண்டுமென்றும், பிராமணர்களை இழிந்த பிறப்பினனாகிய நான்காம் இனத்தவன் திட்டினால் அவன் நாக்கை அரசன் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணன் அமரத்தக்க உயர்ந்த இடத்தில் சமமாக அமர்ந்தால், சூத்திரனின் இருப்புறுப்பையே அறுத்தெறிந்து, ஊரைவிட்டே ஓட்ட வேண்டுமென்றும், பிராமணனை அவன்
காறியுமிழ்ந்தால் உதடுகளையும், அவன்மேல் சிறுநீர் படும்படி செய்தால் ‘சூத்திரனின்’ ஆண் குறியினையும் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணனுடைய குடுமி, தாடி, மீசை இவற்றைத் தொட்டாலும் பிடித்து இழுத்தாலும் சூத்திரனுடைய கைகளையே துண்டிக்க வேண்டுமென்றும், பிராமணனுடைய பொருள்களைத் திருடியவன் தானே தன் தோளின்மேல் உலக்கை, கருங்காலித்தடி, அல்லது இருமுனையும் கூரான கத்தி இரும்புத்தடி இவற்றில் யாதேனு மொன்றைத் துரக்கிக்கொண்டு போய் முறையிட வேண்டுமென்றும், உடனே அரசன் அவனை உயிர்போகத் தண்டிக்க வேண்டிய தென்றும், அதனால் உயிர் போய்விடுமானால் ‘சூத்திரனின்’ கரிசே (பாவமே) போய்விடுமென்றும், அவ்வாறு தண்டியாமல் விட்டால் அரசனுக்கே அக் கரிசு போய்ச் சேருமென்றும், பிராமணனுடைய மாட்டினைத் திருடிக்கொண்டு போனவனின் முழங்காலை வெட்டி யெறிய வேண்டுமென்றும், பிராமணன் வைத்து வளர்க்கும் செடியிலுள்ள பூவைத் திருடிக்கொண்டு போனாலும் அவனை 5 குன்றிமணியளவுள்ள பொன்னைத் தண்டமாகக் கட்டச் செய்ய வேண்டுமென்றும், பிற குலத்துப் பெண்களைச் சேர்வதால் உலகில் எல்லாச் சாதிகளும் கலந்து விடுமாகையால் உலகில் அறங்கள் குன்றி மழை பெய்யாமல் போகுமென்றும், ஆகவே ஒரு குலத்தில் உள்ள ஆடவர் பெண்டிர் பிற குலங்களிலுள்ள ஆடவர் பெண்டிர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதென்றும் சூத்திரன் பணத்தை எக்காரணங் கொண்டும் தன் தேவைக்கு மிகுதியாகச் சேர்க்கக் கூடாதென்றும், அவ்வாறு சேர்த்தால், தான் அடிமையாக இருந்து உழைக்க வேண்டிய தலைவனாகிய பிராமணனையே துன்புறுத்த நேரிடலாம் என்றும், பிராமணன் தலையிலுள்ள குடுமியை மொட்டை யடிப்பதே அவனுக்கு உயிர்த் தண்டனையாகுமென்றும், ஆனால் பிறரை அவ்வாறு செய்ய நேருங்கால் உயிரை வாங்குவதே முறையாகு மென்றும், நாட்டிலுள்ள எல்லாக் கடின வேலைகளுக்கும் நான்காம் இனத்தாரான சூத்திரரையே அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு அவர் எந்த வேலை செய்தாலும் அந்த வேலையினால் வரும் வருமானம் முழுவதும் அவருடைய தலைவர்களுக்கே சொந்தமாகுமென்றும், உழைப்பவர்களுக்குத் தம் தலைவர்கள் கொடுக்கின்ற பொருள்களல்லால் பிறிதோர் உடைமை இல்லை யென்றும், பிராமணன் இந்த உழைப்பாளர்களிடமிருந்து எல்லா வகைப் பொருள்களையும் இலவசமாகவோ வலுக்கட்டாயமாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும், நான்காம் இனத்தவராகிய
சூத்திரரை அரசன் தம்தம் தொழில்களையே தொடர்ந்து, விடாமல் செய்து வரும்படி கட்டாயப்படுத்தி வேலை வாங்கவேண்டுமென்றும், இல்லையெனில் வேலையற்ற இவர்கள் உலகத்தையே அழித்து விடுவார்களென்றும், அரசன் பிராமணர்களைக் கொண்டே வரவு செலவு எழுதல், கருவூலப் பொருள்களை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்ய வேண்டுமென்றும், பிராமணனைப் போல் பூணூல், குறிகள் முதலியவற்றை அணிந்துகொள்ளும் நான்காம் இனத்தவரின் உறுப்புகளைக் குறைத்தல் அரசன் கடமை யென்றும், அரசனின் கருவூலமே கொள்ளை போனாலும் பிராமணர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாதென்றும், இவ்வுலகத்தில் தீ சுடுவதும், கடல் நீர் உவர்ப்பதும், நிலவு தேய்ந்து வளர்வதும், உலகங்கள் இயங்குவதும், மாந்தர்கள் படைக்கப் பெறுவதும், வேதங்கள் ஒதப்பெறுவதும் பிராமணர்களாலேயே என்றும், எனவே அவர்களுக்குச் சினம் வரும்படி அரசன் நடந்துகொள்ளக்கூடாதென்றும், பிராமணன் உடலிலிருந்தே அரசன் (க்ஷத்திரியன்) உண்டாக்கப் பெற்றனாகையால் பிராமணரை அரசர்கள் காக்க வேண்டியதே கடமையென்றும், இவ்விருவரே உலகிலுள்ள இன்பங்களை யெல்லாம் நுகரத்தக்கவர் என்றும், மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன்னிடம் மிகுந்திருக்கும் பொருள்களைப் பிராமணர்களுக்கும் அரசைத் தன் பிள்ளைகளுக்குமே விட்டுச் செல்ல வேண்டுமென்றும், உள்ளும் புறமும் கவடின்றி, மேலினத்தாரைத் தாழ்த்திச் சொல்லாமல், அவர்களுக்குத் தம் வாழ்க்கை முழுவதும் மேலான அடிமையாயிருந்து மன மகிழ்ச்சி யுடையவனே முதல் தரமான ‘சூத்திரன்’ என்றும், இனக்கலப்பே அறத்துக்குக் கேடு என்றும், நான்காம் இனத்தவர் பேசும் அத்தனை மொழிகளும் ‘மிலேச்ச’ மொழிகளே என்றும், சமற்கிருதமே தேவமொழி என்றும், சூத்திரர்கள் ஒரோவொருகால் சமற்கிருதத்தைக் கற்றுக்கொண்டாலும் அவர்கள் அடிமைகளாகவும் திருடர்களாகவுமே ஆவார்கள் என்றும், இவர்களனைவரும் ஊருக்கு வெளியிலும், மரத்தடிகளிலும், தோப்பு துரவுகளிலும், இடுகாடு சுடுகாடுகளிலும், மலைமடுவுகளிலுமே வாழ்ந்திருக்க வேண்டுமென்றும், இவர்கள் எந்த வகையான மாழை(உலோக) ஏனங்களிலும் புழங்கக் கூடாதென்றும், இவர்கள் உண்ணுவதற்கு உடைந்த சட்டிகளையே வைத்துக் கொள்ளுதல் வேண்டுமென்றும், பிணங்களுக்கு இடுகிற துணி வகைகளையே இடுப்புவரையில் அணிய வேண்டுமென்றும், பொன், வெள்ளிகளை நகைகளாக இவர்கள் அணியக் கூடாதென்றும், இரும்பு, பித்தளைகளாலான
நகைகளையே இக் குலத்துப் பெண்டிர்கள் அணிந்துகொள்ளவேண்டுமென்றும், இவர்கள் மார்புக்கு எவ்வகையான துணிகளையும் அணியக் கூடாதென்றும், எப்பொழுதும் கடினமான தொழில்களைச் செய்தே பிழைக்க வேண்டுமென்றும், இவர்கள் நாய், கழுதைகள் தவிர மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாதென்றும், இவர்களைப் பிறர் தீண்டவே கூடாதென்றும், இவர்களுக்கு வேலைக்காரர்களைக் கொண்டே சோறிட வேண்டுமென்றும், இதுவே பிரமன் கட்டளை யென்றும், சூத்திரன் சுண்ணாம்பு வீடே கட்டக் கூடாதென்றும், வீட்டிற்குக் கதவே வைக்கக்கூடாதென்றும், படித்த சூத்திரனும் மதம் பிடித்த யானையும் ஒன்று என்றும், அதனால் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கவே கூடாதென்றும், பிராமணன் எந்தக் காலத்திலும் உழவு செய்யக்கூடாதென்றும், உழவுத் தொழில் உலகில் உள்ள தொழில்களெல்லாவற்றிலும் மிகத் தாழ்ந்த தொழில் என்றும், அதைச் சூத்திரர்களைக் கொண்டே செய்விக்க வேண்டுமென்றும் இன்னும் பலவாறாகவும் பார்ப்பனர்களுக்கு நன்மையாகவும் பிறருக்குத் தீமையாகவும் மிக விழிப்பாகவும் கரவாகவும் மனுநூலில் எழுதப் பெற்றுள்ளன.
இவற்றை எதற்காக இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறினோம் என்றால் அக்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் இந்த அடிப்படையான கொடுமைகளையே உலக நெறிமுறையாகக் கொண்டு பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை விளக்கிக் காட்டவே! இத்தகைய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகும் அரசர்களையே அவர்கள் வாழ்த்தினர் என்பதற்கும், அவ்வாறு அல்லாதவர்களை அவர்கள் சூழ்ச்சியாலும், விரகாலும் தாழ்த்தினர் என்பதற்கும் தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ஏராளமான சான்றுகள் உள. தப்பித்தவறி அவர்களின் விரகுக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் தமிழறம் புரந்த தமிழரசர்களின் வரலாற்றை மாற்றியெழுதி அவ் வரலாறுகளையும் தங்களுக்குத் துணையாக்கிக் கொண்டனர். ‘மனுநீதி கொன்ற சோழன்’ என்னும் பெயராக மாற்றி, அவர்களின் அடிப்படையான எண்ணங்களில் பிறர் ஐயுறா வண்ணம் திறமையாக நடந்துகொண்டனர். தாங்களே நிலத்தேவர்கள் என்றும், தங்களிடமே இவ்வுலக ஆட்சியைப் ‘பிரமன்’ ஒப்படைத்தான் என்றும் எழுதிவைத்துக் கொண்டு செயல்படும் இவர்களின் கரவும், எத்தும், புரட்டும் இன்றுகாறும் தொடர்ந்தே வருகின்றன.
தமிழரை மொழியாலும், செயலாலும், அரசாலும், கல்வியாலும் அடிமைப்படுத்தி, உலகாண்மை முழுவதும் தங்கட்கே
உரியன என்று வக்கணை பேசி ஏய்த்துக்கொண்டு வரும் இவ்வாரியப் பார்ப்பனர்தம் கேடுகளை எடுத்து ஒவ்வொன்றாக விரித்துரைப்பதென்றால் ஏடும் காலமும் போதா. ‘கருநிறக் காக்கைக்கும் கல்நெஞ்சப் பார்ப்பனர்க்கும் உருவத்தில் மாற்றம் வேறொன்றில்லை' என்று பழம்பாடல் ஒன்று கூறுகின்றது. இவையெல்லாம் பழங்கதைகள் என்று கூறித் தள்ளுமாறில்லை.
அண்மைக் காலம் வரை அவர்களின ஆகாத போக்கிற்குப் போராடிய குமுகாயத் தொண்டர் பலர். இராவணணன் காலம் முதலாக இக்கால் பெரும் அளவில் குமுகாயப் போராட்டம் நடத்தி வரும் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் காலம் வரை இவர்களின் வல்லாண்மை ஓங்கியே வந்திருக்கின்றது. தன்மான இயக்கமும் பகுத்தறிவுக் கொள்கையும் வலிமிகுந்த இவ்விடைக் காலத்தில், மக்கள் ஒருவாறு பார்ப்பனரின் கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் விழிப்புற்றனர் எனினும், இக்கால் அச் சூழ்ச்சியும் கரவும் மேலோங்கி வருவதைப் பார்த்தால் நம் போன்றவர்கள் வேறெதிலும் நாட்டம் செலுத்தவியலாமற் போகின்றது.
இற்றை மீண்டும் இப் பார்ப்பணியம் தலையெடுக்கத் தூண்டு கோலாயிருப்பவர்களுள் திரு. இராசாசியும், அவர்தம் குலக் காவலரான காமகோடி பீடாதிபதி சகத்குரு சங்கராச்சாரியார் அவர்களும், அவரைச் சார்ந்த வரும் பிற தமிழ் அடிமைகளுமேயாவர். அவர்களுக்கு உள்ள நோக்கமெல்லாம் அரசியல் பற்றியது மன்று; பொருளியல் பற்றியது மன்று. அவர்களுக்கிருக்கும் ஒரே கவலை தம் இனம் துன்புறக் கூடாது; தம் இனத்திற்கிருக்கும் தேவத் தன்மை குறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். இக்கொள்கை முறியடிக்கப்படும் பொழுது அதன் எதிர்புறத்திலிருப்பவர் காந்தியானாலும் சரி, வேறு எவரானாலும் சரி, அவர்களை அழிப்பதே அவர்களின் முழுநோக்கமாகும். திரு. இராசாசி அவர்கள் இக்கால் அறம் பிறழ்ந்துவிட்டது என்றும், அவ்வறத்தைச் சரி செய்யவே இதுநாள்வரை இறைவன் தம்மைப் பிழைக்கச் செய்து கொண்டு வருகின்றான் என்றும் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இவர் அறம் என்று கூறியதற்கு அடிப்படைப் பொருள் இக் கட்டுரையின் முற்பகுதியில் கூறப்பெற்ற மனுநூலின் ஒழுகலாறுகளே! இவையெல்லாம் அறங்கள் என்று அவரடி சாரும் மடயர்களே யன்றி, தன்மானம் உள்ள எவனாகிலும் ஒப்புவானா?
திரு. இராசாசி அவர்கள் 1938-இல் பதவியில் இருந்தபொழுது 2500 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், மீண்டும் பதவிக்கு வந்த
1952-ஆம் ஆண்டில் 6000 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், சமற்கிருத மொழியைக் கற்பிக்கவே இந்தியைக் கட்டாயமாக ஆக்கினேன் என்று கூறியதற்கும், இம்மனுநூலில் கூறப்பட்ட ஒழுகலாறுகளே காரணமாக இருந்தன என்று கூறாமலிருக்க முடியுமா? மேலும் இவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் சிற்றூர்ப் புறங்களில் இருந்தவையே! அவற்றில் படித்துவந்தவர்கள் எல்லாரும் தமிழப் பிள்ளைகளே; அஃதாவது இவர் கருத்துப்படி சூத்திரப் பிள்ளைகளே! இவ்வளவு பள்ளிக்கூடங்களையும் மூடியதல்லாமல் மிகுதியிருந்த பள்ளிக்கூடங்களில் படித்துவந்த மாணவர்களுக்கும் அரைநேரப் படிப்புப் போதுமென்றும், மிகுந்த அரைநேரத்தில் அப்பிள்ளைகள் அவனவன் அப்பன் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சட்டம் செய்தாரே அதற்கும் இம் மனுநூல்தானே காரணமாக இருக்க முடியும்.
இக்கால், அவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் திறக்கப் பெற்றதுமன்றி, மேற்கொண்டும் பல்லாயிரக்கணக்கான பள்ளிக் கூடங்கள் திறக்கப் பெற்றதையும், பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக் கல்வி புகட்டப்படுவதையும், இனிக் கல்லூரிவரை இலவசக் கல்வி புகட்டப் பெற இருப்பதையும், இவ் வேந்து(வசதி)களால் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து முன்னேற வாய்ப்புள்ளதையும் கண்டுதானே வயிற்றெரிச்சல் தாளாது ஆட்சியே குட்டிச்சுவராய்ப் போய்விட்டது என்று குதிக்கின்றார். இவர் உள்ளப் புழுக்கத்தைப் புரிந்துகொண்டன்றோ ‘மெயில்’ முதலிய பார்ப்பன ஏடுகளும் பல்கலைக்கழகப் படிப்பு என்பது யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவர்கட்கு மட்டுந்தான் தரப்படவேண்டும் என்றும் தரத்தைக் கெடுக்கும்வகையில் கண்டவர்களுக்கும் படிப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்றும் பின்பாட்டுப் பாடுகின்றன.
கல்வியின் தரங்கெட்டுப் போனதற்குக் காரணங்கள் பல. அதன் இழப்பைத் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஊதியமாகக் கருதிக் கொண்டு கதைக்கும் இத்தகைய எழுச்சிகளுக்கெல்லாம் என்ன காரணம்? எங்குப் பார்த்தாலும் ‘சமஸ்கிருத சதஸ்', ‘ஆகம சில்ப வியால பாரத வித்வத் சதஸ்’ என்றும் பலவாறான பார்ப்பனர்க ளெல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு பழமைக்கு வித்திடுவதும் அழிந்துவிட்டதாகக் கூறும் இந்தியப் பழக்க வழக்க(சம்பிரதாய)ங்களை யெல்லாம் புதுப்பிக்க முயற்சி செய்வதும் எதைக் காட்டுகின்றன? தங்கள் தங்கள் கைக்குக் கிட்டிய செய்தித்தாள்கள், பதிப்பகங்கள், வானொலிக் கூடங்கள்,
நாடகமேடைகள், காலக்கழிப்பு(காலட்சேப) மேடைகள் எல்லாவற்றிலும் சமற்கிருத மொழியை வளர்க்கவும் பரப்பவும் படுகுழிக்கு வித்திடும் பார்ப்பன நெறிமுறைகளை வளர்ப்பதும், மக்களிடையே செல்வாக்கிழந்துவரும் இராமாயண, பாரதப் பழங்கதைகளைப் பேசி அவர்களை மதிமயக்குகளில் ஆழ்த்தி வருவதும் எதைக் குறிக்கின்றன? அரசினர் சார்பில் இயங்கி வரும் தொழிற்கூடங்கள், திட்டத் தொழில்கள் முதலிய யாவற்றிலும் தங்கள் தங்கள் இனத்தாரான பூணுால் திருமேனிகளையே அமரச் செய்வதும், அவர்களுக்கு ஏதாகிலும் ஒரு தீங்குவரின் உடனே உயர்நெறி மன்றம், தலைமையமைச்சர், குடியரசுத் தலைவர் முதலிய பேரிடங்களில் முறையிடுவதும் எதனைக் காட்டுகின்றன. தமிழகத்துள் பார்ப்பனர் மீண்டும் தங்கள் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கிவிட்டனர் என்பதைத் தானே? இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன?
தமிழன் மொழியடிமைப்பட்டு, அரசியல் அறியாமையுள் அழுந்தி, பதவிப்பித்துத் தலைக்கேறி, தன்னலத்திற்காகத் தன் மனைவி, மக்கள், நாடு, நலங்கள், மொழி, முன்னேற்றங்கள் முதலிய யாவற்றையும் அடகுவைக்கத் துணிந்துவிட்டான் என்பதாலன்றோ மீண்டும் பார்ப்பணியம் தலையெடுத்து வருகின்றது. இவற்றைப் பற்றி எல்லாம் எண்ணுகையில் நமக்கு ஆக்க வேலைகள் எவற்றிலும் கவனம் செல்லுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சாணக்கிய மூளைகளை அணைக்கத் துணிகின்ற தமிழர்களே! பதவிப் பித்திற்காகக் கழுதைகளின்பின் கற்பூரந் தேடிப்போகும் குருடர்களே! நீங்கள் மானமுள்ளவர்கள் தாமா? இனநலம் காப்பவர்கள்தாமா? உங்களால் தமிழும் தமிழரும் முன்னேற வழியுண்டா? எண்ணிப் பாருங்கள்!
–தென்மொழி சுவடி : 4, ஓலை : 8, 1966