ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பார்ப்பானையே குறைகூறிப் பயனில்லை!
ஆரிய இனம் வேறு சில இனங்களைப் போலவே உலகெங்கணும் பரந்து கிடக்கின்றது. ஆனால் அஃது இவ்விந்திய நிலத்தொகுதியுள் - குறிப்பாகத் தென்னாட்டுத் திரவிடரிடை - தமிழரிடை மிகுந்த அளவில் ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளது போல் வேறெந்த இனத்தொடும் அவ்வாறு கலப்புக் கொண்டதில்லை. அதற்கு வரலாற்று நிலையில் பல கரணியங்களைச் சொல்லலாம். அவற்றுள் ஒன்று, பிற நாட்டு மக்கள் ஆரியரைப் போல் வெள்ளை மேனியராகவே இருக்க, தென்னாட்டவர் மட்டும் - தமிழர்மட்டும் கறுத்த மேனியராய் இருந்தமையால், அவர்கள்பால் தங்களை நிலத்தேவர் என்று கூறி ஏமாற்றுவதற்கும், அவர்கள் வளங்களை கொள்ளையடித்து வயிறு வளர்ப்பதற்கும் இவர்களுக்கு எளிதாகவிருந்தது. அத்துடன் தமிழர்கள் பொதுநிலைப் பண்பினராயும் தீவினைக்கஞ்சும் தெய்வ நம்பிக்கை யுடையவராகவும், வந்தவரை விருந்தோம்பும் அறவுணர்வினராயும், பகைவர்க்கும் உதவும் அன்புணர்வுடையவராகவும் விளங்கி வந்தமை, அவர்கள் தங்கள் இருப்பிடத்தைத் தென்னாட்டிலேயே பெரிதும் நிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக விருந்தது. ஆனால் இது மூவாயிரமாண்டுகளுக்கு முந்திய கதை. அவ்வளவு பழங்கதை எனினும், அன்று தொடங்கிய தமிழரின் வரலாற்றுச் சிதைவுக்கு இன்றும் அது கரணியமாக விளங்குவதால், மேலும் மேலும் அதையே திரும்பத் திரும்ப நினைவுகூர வேண்டியிருக்கின்றது.
மற்றபடி நம் தமிழரிடையேயும் மதத்துறையில் ஆரியத்தையும் தமிழத்தையும் வேறுபாடுணராமல் கடைப்பிடித்து வரும் சமயத் தலைவர் சிலர், “பிராமணர் தமிழருடன் வேறுபாடின்றிக் கலந்துவிட்ட இந்நிலையிலும் அவர்களைப் பிரித்துப் பேசியோ, அவர்தம் முன்னோர் செய்த செயல்களுக்காக இன்றுள்ளோரை இழித்துரைத்தோ வருவது தேவையில்லாதது; தவறானது” என்று கூறத்தான் செய்கின்றனர். எஃது எவ்வாறாயினும், ஓரினம், இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பிறிதோரினத்தின் மனமும் மானமும் வீறுகொள்ளுமாறு தன்னைத் தேவ இனமென்று கூறி, மாந்தச் சலுகைகளை அளவுக்கு மீறிப் பெறுவதும், மற்ற இனத்தை அறவே இழிப்பதும் பழிப்பதும் அவ்வாறு தன் முன்னோரால் எழுதி வைக்கப்பெற்ற பழங்கதைக் குப்பைக் கருத்துகளை இன்னமும் விடாது கூறி அவற்றில் சொல்லப் பெற்ற சடங்கு, ‘சம்பிரதாய’ முறைகளை வலுக்கட்டாயமாகப் பின்பற்றி வருவதுமாக, இருந்து வருகையில், போலியான சில பொது வுணர்வுகளை மட்டும் கூறிப் பிறரை ஆற்றுவிப்பது என்பது இயலாத ஒன்றே. எனவே ஆரியரின் இனவழியினரான இன்றைய பார்ப்பனர் தங்களை எந்த அளவில் திருத்திக்கொண்டு தமிழினத்தவருடன் ஒன்றியுணர்ந்து போக முன்வருகின்றனரோ, அந்த அளவில் தமிழரும் அவர்களை அரவணைத்துக் கொண்டு போகத் தயங்கார் என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இதற்கிடையில் ஆரிய இனத்தால் பெரும்பான்மையும் அலைக்கழிக்கப்பட்டு வந்த – வரும் திராவிட இனம் என்று தங்களைக் கூறிக்கொள்ளுளம் தமிழினத்திற்கும் அதனின்று கிளைத்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழியாளர்க்கும் ஒன்றைத் தெளிவாக்க வேண்டியே இதனை எழுதப் புகுந்தோம். அவ்வின, மொழிக்காரர்கள் அனைவரும் இதனைப் படிக்க வாய்ப்பில்லாமற் போகுமென்றாலும், அவர்களுள் வாய்ப்புக் கிடைத்த ஒருசிலரேனும் இக்கட்டுரைக் கருத்துகளை ஊன்றிப் படித்து எண்ணித் தெளிவதுடன் பிறர்க்கும் எடுத்துக்கறுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பொதுவாக, இன்றைய நிலையில் பிராமணர்கள் எனப்பெறும் ஆரியப் பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் மூன்று அல்லது நான்கு விழுக்காட்டினரே! இவ்வளவு மிகச் சிறிய அளவினரான ஓரின மக்கள், மிகமிகப் பெரும்பான்மையினரான பிறரை அடக்கி யாள்வதாகவோ, ஏமாற்றுவதாகவோ – குறைகூறப் பெறுவதற்கு முந்தைய வரலாற்றில் எங்கேனும் ஓரிடத்தில் பேரளவில் ஒரு
தொய்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவும் தன்னம்பிக்கை குறைந்த அளவிலோ, அளவுக்கு மீறிய நம்பிக்கை தங்கள் அறிவை மழுக்கிய அந்நேரத்திலோதான் அச்சரிவு நிகழ்ந்திருக்க வேண்டும். அத்தகைய சரிவு – ஒர் இடைப்பள்ளம் – தமிழினத்தின் வரலாற்றில் நேர்ந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்நிலை ஏற்பட்டுக் கடந்த மூவாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளதே அதுதான் வேடிக்கையினும் வேடிக்கை இனி, அதனினும் வியப்பான – வேடிக்கை எதுவென்றால், மிகவும் பெரும்பான்மைமிக்க அவ்வினம் – அஃதாவது – நம் இனம் – தொடர்ந்து தாழ்ந்த நிலையிலேயே சாய்க்கடைப் புழுவென வீழ்ந்து கிடப்பதற்கு, அந்த மூன்று அல்லது நான்கு விழுக்காட்டுக் கூட்டத்தையே கரணியங் காட்டிப் பேசி வருகின்றோமே அது! அதை நினைக்கையில்தான் வெட்கத்தை விட்டுச் சிரித்துப் புழுங்க வேண்டியிருக்கின்றது!
தமிழர்களாயிருக்கும் நம்மை முன்னேற்றிவிட வந்த நம் தலைவர்களும் நம் எதிரிகளைச் சாடிய அளவிற்கு, நம்மையே அரித்துக் கொண்டிருக்கும் நம் இனப் பற்றின்மையையோ நம்மின் இனங்கொல்லித் தன்மையினையோ, நம்மையே நாம் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் அடி மூடத்தனத்தையோ குல மத வெறியாட்டங்களையோ அத்துணை வலிந்த குரலில் சாடியதில்லை. கம்பனை நாம் அவன் நம்மவரைத் தாழ்த்தும் வகையில் இராமாயணத்தைப் பாடியதற்காக, அவன் இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகுமளவிற்குத் திட்டித் தீர்த்திருக்கின்றோம். ஆனால் அதற்குப்பின் அத்தகையதொரு நிலை ஏற்படாதிருக்குமாறு நம் இனப்போக்கில் சில தெளிவுகளை உண்டாக்கிக் கொள்ளவில்லை. கம்பவிராமாயணத்தைப் போல் அத்துணை இனக் கேடான ஒரு பாவியம் கம்பனுக்குப்பின் பாடப் பெறவில்லை யாயினும், அப்படி ஒரு பாவியம் எழுந்து செய்ய வேண்டிய வேலையைப் பன்னூறு மடங்காக அவன் இராமாயணமே செய்து கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. திறமையில் கம்பனைப் போலப் பாட எவரும் முன் வரவில்லையே தவிர, நம் இனங்கொல்லும் தற்கொலை வேலையில் கம்பனையே மிகச் சிறியவனாக்கிய தமிழர்கள் தோன்றித்தான் உள்ளனர். இந்த நிலை ஏன் என்று நமக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதற்குப் பார்ப்பானைக் குறைகூறிப் பயனில்லை.
அடுத்து, பார்ப்பானே உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் குலக்கோட்பாடுகளுக்கும் கரணியனல்லன்.
ஆப்பிரிக்கக் காட்டுக் காபிரியர்கள் இனத்திலும், சீனர்கள் மூட நம்பிக்கைகளிலும், எகுபதியரின் காட்டு விலங்காண்டி வழிபாடுகளிலும் ஆரியம் புகுந்து வேலை செய்யவில்லை. உலகம் எங்கனுமே – மக்கள் உள்ள இடங்களிலெல்லாம் மூட நம்பிக்கைகளும், மதக் கொடுமைகளும் மக்களினத்தைக் கட்டவிழ்த்துத் தாம் வந்திருக்கின்றன; வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பார்ப்பன இனமே கரணியமாகி விடாது. இன்னுஞ் சொன்னால் பார்ப்பனர் தமிழகத்திற் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு இங்கும் குலசமயங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றை ஆரியர் கைப்பற்றிப் பற்பல மாறுதல்களைச் செய்து தம் இன நலத்திற்கென வடிவமைத்துக் கொண்டனர். இதை வரலாறு படித்த எவனும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் பார்ப்பானைக் குறைகூறியே தமிழன் தப்பித்துக் கொள்ள முடியாது, தமிழினத்துள் பார்ப்பானைவிடக் கொடுமையான வடிவங்கள் மிகப்பல உண்டு. அவர்களையெல்லாம் நம் இனத்தலைவர்கள் இனங்காட்டத் தவறிவிட்டனர். அவர்கள் நம்மினத்துக்குள்ளேயே இருந்து செய்து வந்த கேடுகள்தாம் இன்று நம்மைத் தன்னாய்வு செய்துகொள்ள முடியாதபடி தடுத்துவிட்டன. நம்மை வீழ்த்திய வரலாற்று நாடகத்தில் நாம் நடித்த காட்சிகளே பலவாக இருக்கத்தான் இருக்கின்றன. இவற்றை நாம் வெளிப்படையாக அவிழ்த்துப் பேச வெட்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தமிழினத்திற்கு நம் மூவேந்தர்களால் ஏற்பட்ட நலிவுகளும் கேடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. நம் இன அரசர்களைப் பார்ப்பர்னுக்கு அடிமையாக இருக்கச் சொன்ன மடயன் எவன் பார்ப்பானை நம் தந்தலத்திற்காக நாம் என்றும் – இன்றுகூட – விலக்கியதில்லை. அவனால் நாம் நலம் பெறுவோம் என்றால், நம்மவனையே புறக்கணிக்கவும், ஏமாற்றவும், கவிழ்க்கவுங்கூட நாம் என்றும் தயங்கவில்லை. இவற்றையெல்லாம் நம் தலைவர்கள் நமக்குச் சொன்னதாக நான் கேட்டதில்லை. நாம் நம் பெருமைகளையும் எதிரியின் சிறுமைகளையும் புட்டுப் புட்டுப் பேசிக் கொண்ட அளவில், நம் சிறுமைகளையும் எதிரியின் பெருமைகளையும் ஒருசில நொடிகள்கூடப் பேசிக் கொண்டதில்லை. நமக்கு நாம் மருத்துவம் செய்துகொள்ள மறுத்தே வந்திருக்கின்றோம்.
நம் சிவனிய (சைவ) மாலிய (வைணவ) சமயங்கள் என்று நாம் கொண்டவற்றில்தாம் மூட நம்பிக்கைகள் மிக்கிருந்தன. எல்லாம் வல்ல இறைப்பேராற்றல் ஒன்றை வடிவம் கொடுத்து அமைத்த முதல் இனம் தமிழினமே! ஆரியத் தெய்வங்களுக்கு
வடிவங்களே இல்லை! நீரும், நெருப்பும், காற்றும் அவர்களின் தெய்வங்களாக அவர்தம் வேதங்கள் பேசுகின்றன. தமிழர்களுக்குத்தான் வடிவங்கள் தெய்வங்களாக இடைநின்றன. மிகத் தொன்மைத் தமிழரின் தீவணக்கமான கந்தழி வணக்கம் நம்மவர்களால்தான் கந்தன் வடிவமாக்கப் பெற்றது. (வடமொழி “ஸ்கந்தம் ‘கந்த'னாக மாறியதென்பது, திரவிடம் தமிழாக மாறியதென்பது போலும் பிழையான கருத்து. தமிழமே த்ரமிளமாகிப் பின் திரவிடமாகத் திரிந்த தென்பதே உண்மை). சமயத் தலைவர்களை யெல்லாம் குருக்கள் என்றும், தெய்வ வடிவங்களென்றும் வழிபாடு செய்த – செய்து வருகின்ற – பெரு மூடப் பழக்கங்கள் இன்றும் சிவனிய, மாலியர்க்கிடையில்தாம் மிகுந்த அளவில் பெருகியுள்ளன. மதத் தலைவர்களை யெல்லாம் – குலத் தலைவர்களை யெல்லாம் கடவுளர்களாக்கியவன் நம்மவனே. ஆரியனுக்கு அன்றும் இன்றும் ஒரே வகைத் தெய்வங்களே. புதுப்புதுக் கடவுளர்களின் தோற்றம் நம்மவரின் மோடி வேலையே. திருவிறக்க(அவதார)க் கதைகளுக்கு ஆரியத்தில் அடிப்படையில்லை. கண்ணன் (கிருஷ்ணன்) தமிழனே! பூசாரி முறையும் தமிழர்களுடையதே! பார்ப்பான் பின்னர் கைபற்றிக் கொண்டானே தவிர, அம் முறையை உண்டாக்கியவன் அவனல்லன். இவற்றுக்கெல்லாம் சான்றுகள் உண்டு வரலாறு உண்டு. இன்னுஞ் சொன்னால் பார்ப்பான் கோயில்களைக் கட்டியதில்லை. அவனுக்குக் கோயில் கட்டத் தெரியாது. அவன் அடர்ந்த காடுகளில் தீக்குழிகளையே தெய்வ வணக்கத்திற்குரிய இடமாகக் கருதி அதனையே வழிபட்டு வந்திருக்கின்றான். கோயில்களைக் கட்டியவனும், அவற்றில் படிமங்களைப் பண்ணி வைத்தவனும், அவற்றில் ஆறுகாலப் பூசனை முறைகளைப் புகுத்தியவனும், வழிபாட்டு முறைகளை வரையறுத்தவனும் நம்மவன்தான். இவற்றின் உண்மைகளை வெளிப்படையாக நாம் பேச விரும்பியதில்லை. நம் மேலேயே நாம் குறைகூறிக் கொள்வது, சாணியைத் தெளித்துக் கொள்வது போன்ற ஒரு வெட்கத்தை நமக்கு உண்டாக்கியிருக்க வேண்டும். நம் இன வையாபுரிகளும், தெ.பொ. மீக்களும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வரையில் அவனுக்கு அவனைப்பற்றித்தான் தெரியும்; நம்மைப் பற்றித் தெரியாது. இவற்றையெல்லாம் நம்மவன் நன்கு எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இன்னும் சொன்னால், நம்மவனுக்குச் செருக்கும் தன்னலமும் மிகுதி. நம்மவனை நாம் என்றும் கைதூக்கிவிட்டதில்லை. தப்பித்
தவறி எங்கோ ஒருவன் கைதுக்கிவிட்டாலும், அவன் தலைமேலேயே நாம் ஏறி நிற்க விரும்பினோமேயன்றி, அவனுக்கு நன்றியுணர்வு காட்டி அவனை மதித்துப் பாராட்டியதில்லை. சில வேளைகளில் அவனுக்கே நாம் குழிதோண்டி வைக்கவும் தவறியதில்லை. புறம் பேசுவது நம்மிடையில் மிகுதி. இதை நேரிடையாக ஒருவன் கேட்பானானால் அவனையே அக்குற்றத்திற்கு ஆளாக்கிவிட்டு, அவனை விட்டுப் புறம்போதலும் நம்மவரிடையே மிகுதி. நேருக்கு நேராய் வாய்திறக்க நம்மவருக்கு இன்னும் துணிவு வரவில்லை. நம் குறைகளாகவும் நாம் கூறிக்கொண்டிருக்கும் வரை, நாம் ஓர் இம்மியளவும் முன்னேறப் போவதில்லை. இப்பொழுது முன்னேறியுள்ளதாக நாம் கருதிக் கொண்டிருப்பதும் நம் முன்னேற்றமில்லை. ஆற்று வெள்ளத்தில் தப்பித் தவறி வீழ்ந்து அடித்துச் செல்லப்படும் மரக்கட்டைகளைப் போல் நாம் எங்கோ அடித்துச் செல்லப்படுகின்றோம். நம்மில் திறமையான ஒருவனை அவன் பெற்ற அத்திறமையான அத்துறையில் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றோம். நம் எல்லாரையுமே எல்லாத் துறைகளிலும் அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் பேராசை நம் அனைவருக்கும் இருக்கின்றது. சிறிது அளவில் கற்ற மட்டிலேயே பேரளவில் பேச மேடைபோட்டுக் கொள்ளுகின்றோம். ஒரு பக்கங்கூடப் பிழையின்றி எழுத வராத குரும்பைகளெல்லாம் இன்று எழுத்தாளர்களாகவும் கலை மேதைகளாகவும் உலாவரக் காண்கின்றோம். பதவி, அதிகாரம் இரண்டால் அறிவுலகத்தையே ஆளத் துடிக்கின்றோம். தமிழர்களாகிய நமக்கு வாய் நீளம்; கை மிக மிக நீளம். பிசிறு அடிக்கின்ற கருத்துரைகளையெல்லாம் துல்லிய நேர்கோடுகளாகக் காட்டிவிடப் பொழிந்து தள்ளுகின்றோம். வள்ளுவருக்குப் பின் உலகனைத்தையும் இணைத்து நோக்கிய தமிழறிஞர் ஒருவரையும் என்னால் பார்க்க முடியவில்லை.
ஆரியப் பார்ப்பனர்களை அடியூன்றத் திட்டித் தீர்க்கும் ஒரு தன்மானச் செய்தித்தாள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஆசிரியரிடம் ஒருபால், தென்மொழித் தாள் சலுகைக்கென நான் கையேந்திப் போன நாட்களில் அவர் தமக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாதெனக் கூறியதை, இன்றும் எண்ணிப் பார்த்து, நம்மவர்க்கு வரவேண்டிய பொதுமை உணர்வுகளுக்காக என்னைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலை இன்னும் சிறுஅளவில் கூட நம்மைவிட்டு நீங்கியபாடில்லை. பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றி மேடைதோறும் பாமுழக்கும் ஓர் அமைச்சர், தமக்குப் பதவி வந்தபோது, அவரை அணுகிய பாவேந்தர் பெயரனுக்கு மருத்துவக்
கல்லூரியில் இடந்தர உருபா பத்தாயிரத்தை பாவேந்தர் மகளிடமே கேட்ட நிகழ்ச்சியை நான் நன்கு அறிவேன். நம்மவர்கள் பதவியும் அதிகாரமும் வந்தவுடன் நடந்துகொள்ளும் தகவின்மை யிருக்கின்றதே. அது, பதவியும் அதிகாரமும் பெற்ற பார்ப்பான் ஒருவன் நடந்துகொள்ளும் தகவாண்மையைவிட நூறுமடங்கு தாழ்ந்ததாக விருக்கின்றது. பார்ப்பனர்களையும் அவர்தம் அன்றைய இன்றைய செயற்பாடுகளையும் தென்மொழி கண்டித்த அளவு வேறெந்த இதழும் கண்டித்ததில்லை. ஆனால் அதற்குப் பார்ப்பனர்களால் வந்த கேடுகளைவிடத் தமிழர்களால் வந்த கேடுகளே மிகுதி. எஃது எப்படியோ, புகழ்ச்சி நமக்குச் சுவையாக இருக்கின்றது. அது மனத்தில் இனிக்கின்றது. ஆனால் நம்மைப் பற்றிய இகழ்ச்சியுரைகள் நம் செவிகளிலும் கைப்பதில்லை.
இத்துறையில் நாம் இன்னும் சொல்ல வேண்டுவனவும் விண்டு விளக்க வேண்டுவனவும் நிறையவுள. இவற்றை வேறு வழியின்றி வெளிப்படையாகவே கூறவேண்டியிருப்பதால், ஒரு சோற்றுப் பதமாகவே சிலவற்றைக் கூற வேண்டி வந்தது, ஆனால் தமிழர்கள் இவ்வளவிலேயே தங்கள் குறைபாடுகளை இன்னின்ன என்று இனங்கண்டு கொண்டு, தாம் ஆண்டாண்டுக் காலமாய் வீழ்ந்து கிடக்கும் அத்துணை இடர்ப்பாடுகளுக்கும், ஆரியப் பார்ப்பன இனமே நூற்றுக்கு நூறு கரணியம் என்று வீணே எண்ணி இறுமாந்து திரியாமல் தம் அறியாமையும், மடித்துயிலும், தந்நலமும், நடுநிலையற்ற போக்கும் பிறவுமே நம் வீழ்ச்சிக்குப் பெருங்கரணியங்கள் என்று கண்டு, நம்மை முன்னேற்றிக்கொண்டு போவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று தலைவணங்கி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 8, 1971