ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/மூடநம்பிக்கைக்கு ஆதரவு தரும்

மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே!

“ ‘விளக்கு வரிசை’ (தீபாவளி) விழா நாடெங்கும் பரவலாகக் கொண்டாடப்பெற்றது” - என்று வழக்கம் போல, பார்ப்பன வானொலி, தொலைக்காட்சி இரண்டும் வாய் கிழியப் பீற்றிக் கொண்டன. ஊரைக் கெடுத்து, ஏழை மக்களின் பணத்தை உறிஞ்சி வாழும் செய்தித் தாள்களும் பக்கந்தோறும் நடிக நடிகையரின் படங்களொடும், அவர்கள் பெயர்களோடு வெளியிட்ட கட்டுரைகளொடும் வெட்கங்கெட்ட முறையில் மலர்கள் வெளியிட்டு, ஊதியங்களை வாரிக் கொட்டிக் கொண்டன. மொத்தத்தில் மக்களிடையில் மூடநம்பிக்கைகளை வளர்த்துச் செழிக்க வைப்பதில், இந்த நாட்டு முதலாளிகளுக்கும் அவர்களின் அடிமைகளான பார்ப்பனீயப் பாதந் தாங்கிகளுக்கும் மிகுந்த அக்கறை உண்டு.

‘தீபாவளி’க் கொண்டாட்டம் முழுவதும் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விழா, மொத்தத்தில் இந்த நாட்டில் கொண்டாடப்பெறும் பொங்கல் விழாவைத் தவிர்த்த பிற அனைத்து விழாக்களும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே கொண்டாடப் பெறுகின்றன. அத்தனை விழாக்களும் பார்ப்பனியத்தை வளர்க்கும் ஆரியச் சேறு நிறைந்தவையே! அறிவியல் அல்லது குமுகாயவியல் தொடர்பான எந்த ஒரு

செய்தியும் அவற்றில் மருந்துக்குக்கூட இல்லை. மக்களை அறிவு வளர்ச்சியின் பக்கமே திரும்ப விடாமல் செய்யும் குருட்டுக் கொண்டாட்டங்கள் அவை! சிந்தனையின் மூடு விழாக்களே அவை ! எந்த மானமுள்ள அரசும் இவ்வார்ப்பரிப்புக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தர விரும்பாது. நம் நாட்டு நடுவண்(தில்லி அரசும், மாநில (அரைப்பார்ப்பன) அரசுந்தாம் மக்களை அறியாமையினின்று நீங்கிவிடாமல் செய்ய இவ்வாரவார விழாக்களுக்கு முழு ஆதரவு தந்து, அவற்றைக் காலங் காலமாகப் பாலூட்டி, நெய்யூற்றி வளர்த்து வருகின்றன. மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே !

இந்த நாட்டில் உள்ள பொதுவுடைமைக் கட்சிக் கோமாளிகளுங்கூட இந்த விழாக்களுக்கு ஏராளமான ஆதரவை தந்து, தங்களின் கொள்கை இளிச்ச வாய்த் தனத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். தீபாவளி போலும் மூட விழாக்களை எதிர்த்துப் பேசும் அல்லது எழுதும் எந்தப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரையும் இந்த நாட்டில் பார்க்க முடியாது, மொத்தத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி என்பது அரைப் பார்ப்பன, அரை மார்க்சீயக் கலவைக் கட்சியே! இந்த விழாக்களுக்கு எந்த அறிவியல் மக்களியல் காரணத்தையும் அக்கட்சி எடுத்துக்காட்டிவிட முடியாது.

எந்தக் கோணத்திலிருந்து கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் - அஃதாவது அரைப் பார்ப்பன அரை மார்க்சியக் கட்சியும், பார்ப்பணியமுமே தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் ஒரு விரற்கடையும்(அங்குலமும்) முன்னேறவிடாமல் தடைபோட்டு அறிவுச் சலவை செய்து, சீர்குலைத்து வருகின்றன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியானது எந்த மக்கள் முன்னேற்றக் கூறையும் மார்க்சியம் என்றே பறைசாற்றுகிறது. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பார்ப்பனியமோ அனைத்து அறிவு நிலைகளும் வேதவழிப் பட்டனவே என்று கூசாமல் நாணாமல் பொய்யுரைத்துக் கொட்டமடித்துக் காட்டுகிறது. இரண்டு இயக்கங்களுமே வேறு மாந்த, மக்களினச் சிந்தனைகளை ஒப்புக் கொள்வதில்லை. இந்தத் தன்மையில்தான் இந்த நாட்டில், அந்த இருபெரும் ஆற்றல்களும் மக்களை அறிவாளுமை - அறிவாளிய முறையில் (இதுவும் ஒருவகை முதலாளியமே) மூளைச் சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள விரும்புகின்றன!

இவற்றின் மூடக் கிறுக்கில்தான் தீபாவளி போலும் புரட்டுத் தேசியப் போக்கிரித்தன விழாக்கள். இந்நாட்டில் வியத்தகு அறிவியல் வளர்ச்சியுற்ற இந்தக் காலத்திலும், மிக மிகத் தாராளமாகக் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றன. மக்களும், தங்களின் ஏழைமைத்தனத்தை மறந்து, அறியாமையை மறந்து, அடிமைத் தன்மையை அறவே மறந்து, கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச காசுகளையும் பட்டாசாகக் கொளுத்தி நாட்டின் ஆக்கத்தைக் கரியாக்கி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு எப்பொழுது தான் வருமோ, தெரியாது!

தமிழினத்திற்கு மட்டும் ஒரு சொல்! இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியமே! பார்ப்பன ஆளுமை, வேத அதிகாரம், மனு நூல் சட்டம், இந்து மதக் கோட்பாடு, மக்களின் மூட நம்பிக்கை - இவற்றை வலிவாகக் கட்டிக் காப்பதே தேசியம்! இத்தேசியத்தின் அடிப்படையில்தான் பலநூறு கோடி உருபாக்கள் மத விழாக்களுக்குச் செலவிடப்படுகின்றன! பல நூறுகோடி உருபாக்கள் தேசியத் திருவிழாக்கள் என்னும் பெயரில் வாரியிறைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்களில் விளையாட்டு வேடிக்கைகள், குதிரைப்பந்தயக் கொண்டாட்டங்கள் என்னும் பெயரில் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்கள், கலைகள் திரைப்படங்கள் என்னும் பெயரில் காமக் களியாட்டங்களில் கரைக்கப்படுகின்றன ! நாட்டின் உண்மை நிலையோ பட்டை உரித்த மரம் போலப் பச்சையானது! எங்குப் பார்த்தாலும் ஏழைமை ! ஏழைமை ! ஏழைமை உடலொடியச் சாறுபிழியப்படும் பாட்டாளி மக்கள்! அவர்களின் எலும்புக் கூட்டுப் பரிவாரங்கள்: ஆமாம், அவர்களின் வாழ்விடங்களோ, குப்பை மேடுகள் சந்தி சதுக்கங்கள் ! சாய்க்கடை ஒரங்கள்! புழு, பூச்சிகள் நெளியும் புழக்கடைச் சேறு! உருப்படுமா இந்த நாடு?

- தமிழ்நிலம், இதழ் எண் : 3, 1982