ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/ஆகமங்களின் தோற்றம்

5. ஆகமங்களின் தோற்றம்


வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள்

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘'இந்திய தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது. “ஸ்ரௌத கர்மாவின் “ (அதாவது வேதவழிபாட்டு நெறியின்) பெரும்பகுதி அழிந்தே விட்டது. ‘'அக்னி ஆதானம்,'’ மிகவும் எளிமையாக்கப்பட்ட வாஜபெயம், கருடசயனம், மற்றும் சோமயாகம் போலும், அத்துணைச் சிறப்பிலா வழிபாட்டு நெறிகள் மட்டுமே, ஒருசில மக்களால் அவ்வப்போது மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தீ ஓம்பல் கடமையை மூன்று தலைமுறைகளாகப் புறக்கணித்து விடுவரோ, அப்பார்ப்பனக் குடும்பத்தவர், பார்ப்பனராம் தகுதியை இழந்தவராவர் என்ற விதிமுறையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டவழி நனிமிகக் குறைவான - குடும்பத்தவரே பிராமணர்களாக மதிக்கப்படுமளவு, “ஸ்மார்த்த கர்ம” நெறிதானும் விரைந்து மறையலாயிற்று. இருந்தும் இந்தியா ஆழ்ந்த சமயச் சார்புடையதாகவே உளது; ஆனால் அந்த ஆழ்ந்த சமய உணர்வு, வேதநெறி வழிபாட்டு முறைகளையல்லாமல், ஆகம நெறி வழிபாட்டு முறை அளவிலேயே அமைந்துளது.

ஆகமம் பற்றிக் கூறும்போது, அச்சொல் உணர்த்தும் பல பொருள்களுள், ஆப்தவசனம்’ (அதாவது, முற்றும் உணர்ந்த பெரியோர்களின் மெய்யுரை என்பதும் ஒன்று என்பதையும்), அதிலிருந்தே, ஆகமம் என்பதன் மற்றொரு பொருள் உருப்பெற்றது என்பதையும் ஆப்தவசனங்களில், மிகப் பெரியது அல்லது மிகச் சிறந்தது. வேதம்" ஆதலின், அவ்வேதமும் சில சமயம் ஆகமம் என அழைக்கப்படும் என்பதையும் நான் மறந்துவிடவில்லை. உண்மையில், ஆகமம் என்ற சொல், பழைமையிலிருந்து வந்தது எனும் பொருள் உடையதாகும். ஆனால், ஆகமம் என்பது, சிவ, விஷ்ணு, சக்தி வழிபாட்டு நெறிகளை உணர்த்தும் புத்தகங்களாகிய தந்திரம்' என்பதன் பெயர்களை உணர்த்தும் உண்மைப் பெயராகும். இப்பொருள் நிலையில், ஆகம நெறி வழிபாடுகள், வேதங்களோடு வேறுபட்டனவாம். பௌத்தர்கள், ஜைனர் களின் சமயக் கருத்துக்களும் பழைமையாகவே வருவன ஆதலின், அவையும் ஆகமங்கள் என்றே அழைக்கப்படும். இவ்வாகமங்கள் அனைத்தும் அவற்றின் தொடக்க நிலையில், வேதங்களுக்கு அதாவது கர்ம காண்டங்களுக்கு எதிரிகளாம். சைவ ஆகம நெறி, மகேஸ்வர" நெறி, பாசுபத " நெறி. எனவும் வழங்கப்படும். வைஷ்ணவ" ஆகம நெறி , பாகவதம்" என்றும் (அதாவது இறை சார்புடைய) "சாத்தவதம்" என்றும் (சாத்தவத அரசியல் குடும்பத்தவரே, அவர்களைப் பெரும்பாலும் முதன் முதலில் ஆதரித்தமை யால்), பாஞ்சராத்ரம்" என்றும், வழங்கப்படும். இறுதியில் கூறிய இச்சொல், வேறு ஒரு பொருளையும் குறிக்கும். அது, விஷ்ணுவின் திருமேனியை வழிபடும் சிறப்பு வழிபாட்டு நெறியை உணர்த்தி , அப்பொருள் உணர்த்தும் வகையால், வைகானஸர்கள்" பின்பற்றும் வழிபாட்டு நெறியோடு உணர்த்தப் பயன்படுவதோடு, வைகானஸர்" எனும் இச்சொல், காடு சென்று வாழும் சந்நியாசிகளையும், பொதுவாகக் குறிக்கும்) ஆகம வழிபாட்டு நெறிகள், வைதீக வழிபாட்டு நெறிகளுக்குப் பகையாக அமைந்த பழங்காலத்தில், ஆகமத்திற்கும், வேதத்திற்கும் இடையிலான வேறுபாடு நன்கு உணரப்பட்டது. ஆனால் கடந்த பல நூறு ஆண்டுகாலமாக, அவை இரண்டும் இரண்டறக் கலந்து விட்டமையால், இக்கால மக்களால், அவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு உணரப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அதற்கு மேலும் ஒருபடி சென்று, ஆகம நெறிகள், முடிந்த முடிபாக வேத நெறிகளிலிருந்தே உருப்பெற்றன; வேத உண்மைகளின் விரிவுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன; அல்லது இன்றைய கால நிலைக்கும் ஏற்கும் வகையில் அவ்வேத உண்மைகளைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளன என்ற கொள்கையும் பரவலாக வழங்கலாயிற்று. மந்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்ட முடிவிற்கும், பின்னர், வேதங்கள், ‘'அபௌரு ஷெயம்” அதாவது, காலவெளி எல்லைகளைக் கடந்த புருஷனாகிய ஈஸ்வரனாலும் இயற்றப்படாதன , எனக் கருதப்பட்டன. ஆனால், ஆகமங்கள் (சைவ, சாக்த , வைஷ்ணவ) மட்டும், சிவன் அல்லது விஷ்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்டன வாக உரிமை கோரப்பட்டு அதனால், அவை முறைப்படி “பௌருஷேயம்” என அழைக்கப்படலாயின.

வேத சம்ஹிதாக்களில் கூறப்பட்டிருப்பன எல்லாம், வைதீக சடங்குகளின்போது, ஓதுவதற்கான மந்திரங்களாம். ஆனால், ஆகமங்கள் சிவ அல்லது விஷ்ணு வழிபாட்டு நெறிகளின் விளக்கங்களையும், யோகப் பயிற்சி முறைகளை யும், தத்துவ ஞான ஆராய்ச்சிகளையும் நம்மகத்தே கொண்ட பாடநூல்களாம். மந்திரப் பகுதி, பிராமணப்பகுதி ஆகிய இரண்டையும் கொண்ட, அல்லது கர்மகாண்டம், ஞான காண்டம் ஆகிய இரண்டையும், அல்லது, வேத வேதஸிரஸ் ஆகிய இரண்டையும், குறிக்க, வேதங்கள், ஒரு மீமாம்ஸத்தின் துணையை நாடுகின்றன. ஆனால் ஆகமங்கள், முறையான பாட நூல்களாதலின் ஒரோவழி, தேவைப்படினும் உரை விளக்கம் ஒன்றை மட்டுமே எதிர்நோக்கும்.

ஆகமங்கள், கி.பி. 1000க்குப் பிற்பட்ட காலத்தே வழக்காற்றிற்கு வந்த ‘'பாஷை'’ என்ற மொழிவடிவில் இருக்க, வேதங்கள், சந்தாஸ்” எனப்படும், மிகப்பழைய கிளை மொழியில் உள்ளன. இவ்வளவும், எழுத்து வடிவம் பற்றியனவாம். இனி வழிபாட்டு முறை பற்றியன. வைதீக வழிபாடு, தீ வழிபாடாம். ஒவ்வொரு வழிபாட்டு நிலைக்கும், நெருப்பு மூட்டப்பட வேண்டும், அந்நெருப்பு தீக்கொழுந்தாக எழுப்பப்பட வேண்டும். அத்தீயிடையிலேயே படையல்கள் கொட்டப்பட வேண்டும். ஆகமவழிபாடு, தீயற்ற வழிபாடு, படையல்கள், வணங்கப்படுவதன் முன் வறிதே காட்டப் பட்டுப் பின்னர் எடுத்துக் கொள்ளப்படும். முன்னதில் படையல்கள், தீயிடையே இடப்படுவதால் அவை, கடவுள்களால் உண்ணப்படுகின்றன. பின்னதில் ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படா நுண்ணிய ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளு மாதலின், இறைவழிபாட்டாளன், அப்படையலைத் தானும் உண்டு, தன் உறவினர்க்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிப்பன் ஆதலின் வழிபாட்டாளன், தன் படையல் பொருளில் எதையும் இழப்பதில்லை. வைதீக வழிபாட்டு நெறியில், உலகப் படைப்பு நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனி கடமைகளைக் கொண்ட எண்ணற்ற கடவுள்கள் வழிபடப்பட்டன.

ஆகம வழிபாட்டு நெறியில், விவிலிய நூலில் கூறப்படும் யூதர்களின் கடவுளாகிய "ஜொஹாவ்" (Jehovah) வைப்போல, ஒரே ஒரு கடவுள் தான் வழிபடப்பட்டது. உலகத் தொடர்பான அத்தனை செயல்பாடுகளும், அதன் கைகளிலேயே அடங்கிவிடும். வேதவழிபாட்டு நெறியில் கடவுளுக்குப் படைக்கப்படும் ஒவ்வொரு படையலும்: வேதமந்திரம் தொடரவே படைக்கப்படும் என்பது மட்டுமன்று, வழிபடுவோனின் ஒவ்வொரு செயலும், உதாரணத்திற்குச், சோமபானம் கொண்டுவர வண்டியில் காளைகளைப் பூட்டுவது, அக்காளையைத் துரத்தி ஓட்ட ஒரு கொம்பினை ஒடிப்பது, படையல் பொருள் ஒன்றைக் கையால் பற்றுவது, பாலைக் கொதிக்க வைப்பது, கடைந்து மோர் ஆக்குவது. சுருங்கச் சொல்லின், சிறியனவோ, பெரியனவோ ஆன ஒவ்வொரு செயலும், செய்யுள் வடிவில் அல்லது உரை வடிவிலான ஒரு மந்திரம் ஓதலைத் தொடர்ந்தே நடைபெறும். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியில் வேத மந்திரங்களுக்குச் சட்ட பூர்வமான இடம் எதுவும் இல்லை. ஒருசில இங்கும் அங்கும் ஓதப்படுகின்றன. ஆனால் அதுவும் பெரிதும் முறையற்ற நிலையிலேயே ஓதப்படும். உதாரணத்திற்கு "து" என்ற அசைச்சொல்லோடு தொடங்கும் ஒரு மந்திரம், கடவுளுக்கு மணப்பொருளை அர்ப்பணிக்கப் பயன்படுத்தப்படும். உ-ம். ‘'தூப”. உண்மையில் இம்மந்திரம், ஒரு வண்டியின் நுகத்தடி எடுக்கப்படுவதைக் குறிப்பதாம். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியின் உயிர்ப்பகுதி, வணங்கப் படும் கடவுளைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை, நான் வணங்குகிறேன் எனப் பொருள்படும் ‘நமஹ” என்பதை. இணைத்துத் திரும்பத் திரும்பக் கூறுவதே ஆகும். வைதீக வழிபாட்டு நெறியின் சாரம், படையல்களைத் தீயிடைச் சொரிவதே ஆம். ஆனால், ஆகம வழிபாட்டு நெறியின் சாரம், உபகாரம் ஒன்றே; அதாவது தாம் வழிபடும் கடவுள் திருமேனியை நீராட்டுவது, ஒப்பனை செய்வது, உணவு படைப்பது, உண்மையில், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அல்லது தங்கள் அரசன் ஆகியோர்க்குச் செய்யும் அத்துணை உபசரணைகளையும் செய்வதாம்.

ஆகவே, வைதீக வழிபாட்டு நெறியில் வழிபடும் கடவுளின் காணக்கூடிய வடிவுடைய பிரதிநிதித்துவம் அதாவது தெய்வத்திருமேனி எதுவும் தேவையில்லை. காணக்கூடிய தீ ஒன்றே எல்லாக் கடவுள்களின் பிரதிநிதி ஆகும். ஆகம வழிபாட்டு நெறியில் வழிபடப்படும் ஒரு கடவுள், யாதோ ஒரு வகையில் கட்புலன் ஆகக்கூடிய சில சின்னங்களாக அமைய வேண்டும். அச்சின்னம், மூடநம்பிக்கை சார்ந்த வாள் அல்லது தண்டு, பட்டுப்போன அல்லது உயிருள்ள மரம், கல், ஓடும் அருவி, லிங்கம், சாலகிராமம் அல்லது அனைத் திற்கும் மேலாக, ஒரு படம், அல்லது வழிபடுவோரின் கருத் திற்கு ஏற்ப, உலோகம், கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆன சிலை ஆகியன மூலம் பிரதிட்டை செய்யப்படுதல் வேண்டும்.

வேதாந்தம்

வேதத்தின் முடிந்த முடிவு வேதாந்தம். வைதீகக் கர்மத்தின் முடிந்த முடிவு ஞானம். இறவாப் பெருநிலையை அடைவதற்குரிய மார்க்கம் அறிவுடைமை. “ அவனை அறிவதன் மூலமே, இந்நில உலகில், ஒருவன் இறவாப் பெரு நிலையை அடைகிறான். அவனை அடைவதற்கு இது தவிர்த்து வேறு வழி இல்லை “ ("தம் எவம் வித்வான் அமர்த பஹவதி நான்யஹ பந்தா அயனாய வித்யதே என்கிறது ஸ்ருதி) ஆகம நெறியின் முடிந்த முடிவே பக்தி . இறவாப் பெருநிலையை அடைவதற்கான வழி, அவன் மீது இடைவிடாத் தியானம் ஒன்றே ஆம் (அனன்ய சிந்தா) அல்லது ஸ்ரீகிருஷ்ணன் 'வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கூறுமாறு, ஒருவனைப் பற்றியே சிந்தித்தல், (ஏகபக்தி). உபநிஷதத்தில் கற்பிக்கப்படும் முப்பத்திரண்டு வித்தைகளும், ஒருவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதன் முன்னர், அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு நெறிகளின் வடிவங்களாம்.

ஆகமங்களின், முதலாவதும், இரண்டாவதுமான நூல்கள் (சரியை, கிரியை) சிவன் அல்லது விஷ்ணுவை வழிபடுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் பக்தி நெறியின் கட்டுப்பாட்டு நிலைகள், பல இடங்களில் யோகப் பயிற்சி வடிவிலான தத்துவார்த்த கடமைகளையும் உடன் கொள்ள வேண்டியிருப்பதால், ஆகமங்களின் மூன்றாவது நூல், யோகநிலை பற்றிக் கூறுகிறது. ஈண்டு ஞானம் எனக் கூறப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட ஞானம் அன்று. மாறாக, ஆகம நெறிக் கோட்பாடுகளில் புதையுண்டு கிடக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை விளக்குவது என்ற பொருள் உடையதாம். இந்தத் தத்துவம், வேதாந்தத் தத்துவத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. காரணம், பின்னது, இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால், ஒரேயொரு உண்மைப் பொருளை மட்டுமே, அதாவது பிரம்மாவை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொள்கிறது. முன்னது, முப்பொருள் உண்மைகளை "தத்வ த்ரயம்" அதாவது, ஈஸ்வரன், தனி மனிதன், செயல் ஆகியவைகளை, உண்மைப் பொருள்களாம் என ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு ஒவ்வோர் ஆகமமும், யோகபதம், ஞானபதம் என இரண்டைக் கொண்டுள்ளன என்றாலும், உபநிஷதங்கள், ஞானமார்க்கத்தின் சமயத்திருநூல் தொகுதியாதல் போல, ஆகமங்கள், தொடக்கத்தில், பக்தி மார்க்கத்தின் சமயத் நிருநூல் தொகுதியே ஆகும். ஆகமத் திருமுறை நூல் பலர்க்கு உரியதாம். உபநிஷதம், குறிப்பிட்ட சிலர்க்கு மட்டுமே உரியதாம். ஆகம நெறி எளிய நெறி. உபநிஷத நெறி கடின நெறி. ஸ்ரீ கிருஷ்ணன் பின்வருமாறு கூறுவது காண்க. ‘'அருவுருவாம் இறைவன் மீது இதயத்தை நிறுத்தி வழிபடுவார், அனுபவிக்க வேண்டிய துன்பம் மிகப் பெரிதாம். அகவுணர்வுகளுக்குப் புறஉருவம் கொடுத்து, வழிபடுவார்க்கு, இறைவனை அருவுருவ நிலையில் நிறுத்தி வழிபடும் நெறி, மிகப்பெரிய துன்பத்தைத் தரும்...... (கிலெஸொதிகரஸ் தெஷாம் அவ்யக்தாஸக்த செதஸாம் அவ்யக்தாஹிகதிர் - துக்கம் தெஹவத்பிர் அவாப்யதெ.

பகவத் கீதை - 12:5

வைதீக வழிபாட்டு முறை, மக்களில், நான்கு வருணங்கள் பிரிக்கப்படுவதைத் தேவைப்படுத்திற்று. வேத, வேதாந்தங்களைக் கற்பதிலிருந்து, நான்காவது வருணமக்களை ஒதுக்கி வைப்பதற்கும் கொண்டு சென்றது. மக்களை நான்கு வருணங்களாகப் பிரிப்பது, வருணாஸ்ரம தர்ம வளர்ச்சிக்கும், அந்நான்கு வரணத்தவர்க்கும் ஆஸ்ரமங்களை வகைப்படுத்து வதற்கும் வழி வகுத்துவிட்டது. இதன் விளைவு, சந்நியாசம், பிராமணர் ஒருவர்க்கு மட்டுமே உரிமையுடையது. மோக்ஷம், சந்நியாச வாழ்க்கையில் இடம் பெறும் தனிப்பயிற்சிக்குப் பின்னரே அடையக்கூடும் என்ற கோட்பாடுகளாயின. இக்கோட்பாட்டின் முடிந்த முடிவு, வைதீக நெறிப்படி, மோக்ஷம் பிராமணர்களால் மட்டுமே அடையக் கூடியது என்பதாகிறது.

ஆகம நெறி, இக்கோட்பாட்டுக்கு எதிராக நிற்கிறது. எவன் ஒருவனும், ஏன், ஒரு சண்டாளனும் கூட, விஷ்ணு அல்லது சிவனின் திருமேனி அல்லது சின்னத்தைக் கொண்டு வந்து வைத்துப் பூசை செய்யலாம். சிவனடியார்கள் வரலாறு கூறும் தமிழ்ப் பெரிய புராணம், கோயில்களில், சிவனை வழிபட்ட, இழிகுலத்துச் சைவ அடியார்களைக் குறிப்பிடுகிறது. காளத்தித் திருக்கோயிலில் உள்ள சிவனுக்குக் கண்ணப்ப நாயனார், இறைச்சி உணவைப் படைத்துள்ளார். வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான, பெரும்பாலும் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணன், சீரங்கம் திருக்கோயிலைக் சூழ உள்ள தெய்வத் திருமண்ணில் நடப்பதற்கும் தகுதி அற்றதாம் அளவு இழிவுடையவராகக் கருதப்படும், கால்களைக் கொண்ட இழிகுலத்தவராகக் கருதப்பட்டவர். ஆகமங்கள், நான்கு சாதிக் கொள்கையை ஏற்கவில்லை.

ஆனால் உண்மையில் வேதத்தின் ஒரு பகுதியாகிய வேதாந்தம், சூத்திரர்களுக்குக் காட்டப்படாது மறைக்கப் பட்ட ஒரு நூலாகும். இதை உறுதிப்படுத்தும், ஒரு தனிப் பிரிவையே 'பாதராயணம்" கொண்டுளது, காரணம், சூத்திரர்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும், சடங்கு நெறிகளுக்குத் தகுதி படைத்தவரல்லர், ஆகவே, அவர்கள், வேதங்களை, ஓதவும் கேட்கவும் விலக்கப் பட்டனர். (வேதம் - சூத்திரம் - 1:335-38) ஆகமங்கள் இதற்கு மாறாக, அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன்படி இன்றும் சிவ தீக்ஷை பெற்ற ஒரு பறையன், அத்தீக்ஷையைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகவும் ஆகலாம். ஆகம நெறியாளர்களிடையே சந்நியாச நிலைகளும் பரவலாயின. வைஷ்ணவ சந்நியாசிகள், ஏகாந்திகள்" என்றும், சைவ சந்நியாசிகள், சிவயோகிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆகமங்களின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லா இனத்தவர்க்கும் உரியதான பக்தி நெறி, ஒரு இல்லறத்தானையும், வாழ்க்கைப் பெருங்கடலைக் கடந்து கரை சேர்க்க வல்லதாம் ஆதலின், சந்நியாச நிலை, மோக்ஷம் அடைவதற்கான அடிப்படைத் தேவையன்று. பக்தர்கள் சந்நியாசிகள் ஆகின்றனர் என்றால், அதற்குக் காரணம் யோகப் பயிற்சி, ஆகம நெறியோடு இரண்டறக் கலக்கவில்லை ஆயினும், அதன் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மேலும், யோகப்பயற்சி, சந்நியாச வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளக் கூடியதாயிற்று.

வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி

பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை - கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறி களின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும் உள்ள நல்லனவற்றையெல்லாம் தேர்ந்து தன்னகத்தே கொண்ட ஒருநெறியினைப் பின்பற்றத் தொடங்கிய மக்களால், பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யாகங்களில், உயிருடைக் கால்நடைகளுக்குப் பதிலாக, மாவினால் செய்யப்பட்ட, அவற்றின் வடிவங்களை (“பிஷ்டபஷீ “) மாற்றுப் பொருளாக ஏற்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிட்டது.

பகவத்கீதை, தொடக்கத்தில், ஆகம நெறியாளரின் ஒருபிரிவினராகிய பாகவதர்களின் சமய நூல் தொகுப் போடும், ஸ்ரீகிருஷ்ணன், பாகவதர்களின் பக்திநெறியை, வேதாந்திகளின் ஞானநெறி, சாங்கியர்களின், நனிமிகு நுட்பம் வாய்ந்த இயல்கடந்த ஆய்வு நெறிகளோடு ஒருங்கு இணைத்து, வேறு வேறுபடும் இந்நெறிகள் எல்லாம், ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு கோணங்களாகத் தோன்றும், உயர்ந்த நிலையிலிருந்து பேசத் தொடங்கி, அறிவெல்லை கடந்த இப்பேருண்மையை அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான். என்றாலும், பகவத் கீதை, வேதத்தை, அதாவது கர்மகாண்டத்தை மிகமிகக் கடுமையான சொற்களால், தூற்றிக் கண்டிக்கும் நிலையில், தன்னுடைய ஆகம நெறி இயல்பை வேண்டுமளவு இன்னமும் பெற்றுளது.

“ஓ பார்த்தா! வேதங்கள் பற்றிய வாதங்களில் மகிழ்ச்சி காணும், அறிவிலிகள், அணிநயம் கலந்த இவ்வினிய சொற்களைக் கூறுகின்றனர். கர்ம பாதையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, அவர்களின் உள்ளம் ஆசைகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் ஸ்வர்க்கத்தில் அனுபவிக்கப் போகும் இன்பத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள், மறு பிறவியை எது தருமோ, அதிலும், கர்மத்தின் பயனிலும், எண்ணற்ற சடங்குகளைக் கொண்டுள்ள விழா நிகழ்ச்சிகளிலும், குறியாக நிற்கின்றனர்; இன்ப நுகர்வு அதிகார ஆணை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இன்ப நுகர்வுக்கும், அதிகார. போதைக்கும் அடிமைப்பட்டுப் போன உள்ளத்தோடு, இன்ப நுகர்விலும் அதிகார போதையிலும் ஈடுபாடு கொண்டுவிடும் அவர்களின் புத்தி, அவர்களுக்குச் சிறிதே அறிவினைத் தருமாயினும், அமைதியான தியானத்தில் நிலையாக நிற்காது. வேதம், மூன்று குணங்களால் உருவான பொருள்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அர்ஜ்ஜூனா! அம் முக்குணங் களால் உருவாகும் பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பாயாக இவையல்லாமல், ஆகமங்களுக்கே உரியவாய எண்ணற்ற சொற்கள் பகவத்கீதையில் இடம்பெற்றுள்ளன.

யாமிமாம் புஷ்யிதாம் வாசம் ப்ரவதந்த அவிஷ்கிதஹ
வேதவாத ரத்ஹாஹ பார்த்த ! நான்யத் அஸ்திதி வாதிஹை
காமரத் மாஹ ஸ்வர்க்க பரர்ஹ ஜன்மகர்ம பஹல பிரதாம்
கிரியாவிஸேஷ பஹலாம் போகைஸ்வரிய பஹலம்ப்ரதி
போகைஸ்வர்ய ப்ரஸக்தனாம் தயா அப்ஹ்ருத செதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்திஹி சமாதெளன விதியதெ
த்ரைகுண்ய விஷ்யா வேதா நிஸ்த்ரை
                             குண்யொ பவராஜுலர்
                                      - பகவத் கீதை - 2 42-45


வைதீகர்கள், இதற்கு மாறாக, ஆகம வழிபாட்டினரை நனிமிக இழிந்தவராகவே மதித்தனர். இது பண்டை ஆரியர்கள், மந்திரம் ஓதும் தஸ்யூக்களை, 'ம்ரித்ரவாஹ' என அழைத்து வந்த ஏளனத்தின் தொடர்பே அல்லது வேறு அன்று. இவ்வெறுப்பு வளர்ச்சியின் அடையாளம் இன்றும் காணக்கூடியதே. வைதீக நெறியும், ஆகம நெறியும், யாமுனாச்சாரியர் காலம் தொட்டே, ஒரே நெறியாக இரண்டறக் கலந்துவிட்டன என்றாலும், சைவம் வைஷ்ண வம் ஆகிய இரு சமயங்களையும் சார்ந்த கோயில் குருக்களைப் பொறுத்தமட்டில், கொடிய வேதாந்திகளால் இழிகுலப் பிராமணர்களாகவே மதிக்கப்பட்டனர். உண்மையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வகையில், எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர்; வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும், ஆகமவழிபாட்டு நெறியை வன்மையாகக் கண்டிக்கிறது. ‘பாசுபதர்கள்’ (வேதாந்த சூத்திரம் - 22:34-41) ‘பாஞ்சராத்ரர்’ (வேதாந்த சூத்திரம் - 22:2; 42 -44) ஆகிய இருவர்களையுமே, பாத்ராயணர், தம்முடைய சூத்திரங்களில் வெளிப்படையாகவே பழித்துள்ளார்.

ஆகம வழிபாட்டு நெறிகள் தோன்றியது எப்போது?

இனி, ஆகம வழிபாட்டு நெறிக் கொள்கைகள், உருப் பெற்றது எப்போது, அவை எங்கிருந்து முகிழ்த்தன என்பன பற்றி ஆராய்கின்றேன். முதற் கேள்வி, விடை காண்பதற்கு அரியது அன்று. அண்மையில் நடந்து முடிந்த உலகப்போரின் போது நடைபெற்றுவிட்ட நினைத்தாலும் நடுங்கத்தக்க பேரழிவு, புதிய வாழ்க்கை நெறிகளைக் கொணரத் தொடங்கியது போல், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உய்த்துணர்ந்து கூறுவது அத்துணை விரைவில் இயலாது.

மகாபாரதப் போரின் மிகப் பெரிய படுகொலைகள், இந்திய நாட்டு வாழ்வியலில், ஓர் ஆழமான மாற்றத்திற்கு வழிவகுத்துவிட்டன. “மந்திர மந்திரத்ரஷ்டாரஹ” ங்களின் கண்காணிப்பாளர்களாகிய ரிஷிகளின் காலம், மீண்டும் வாரா வகையில் மறைந்துவிட்டது. வேதத்தின் கர்மகாண்டம் உறுதி அளித்த ஒன்றேயொன்றான, எல்லாமே கெட்டவைதாம் எனக்கருதும், அழுத்தமான சோர்வு வாதம், அதாவது இம்மையிலும், மறுமையிலும், சுவர்க்கலோகத்தில் போலவே, பூலோகத்திலும், ஐம்பொறி இன்ப நுகர்வின் மீதான கொடிய -வெறுப்புணர்ச்சி, மக்களை அடிமை கொண்டுவிட்டது.

சிந்தனையாளர்கள், நிலைதடுமாறும், இவ்வுலகியலுக்கு இடையில் ('நாமரூபம்") நிலைதடுமாறும் இயல்பு வாய்ந்த ஒரே பொருளான ("அக்ஷரம்") பிரம்ம பரமம் மீதான பல்வேறு வகையான தியான நிலைகளில், கேட்டிலிருந்து . மீள்வதற்கான ஒரு வழியினைத் தேடிக் காணலாயினர். அதன் பயனாய், உபநிஷதத்தின் முப்பத்திரண்டு வித்யாக்கள் பிறந்தன. கர்மகாண்டத்து வழிமுறைகளின் அடிச்சுவடுகள் காண்டொக்யத்திலும், 'பிரஹதாரண்யக' விலும் விளங்க உரைக்கப்படும், வித்யாக்களில் தெளிவுறத் தோன்றுமளவு, உபநிஷதங்கள், கர்மகாண்டத்திலிருந்து படிப்படியாகத் தோன்றி வளர்ச்சி நிலைபெற்றன. என்றாலும், மக்களில் பெரும்பாலோர் உள்ளுறுதி அற்ற நோஞ்சான்களாயினர்.

அவர்களின் உள்ளம், ஓளபநிஷத கொள்கை, பயிற்சிகளின் விழுமிய சிறப்பு நிலையினை அடையும் உணர்வுகளால் நிறைந்து வழியலாயிற்று. அவர்களுக்காகவே முகிழ்த்தன. ஆகமக் கொள்கைகளும் பயிற்சிகளும். இவை, உலகின் சாதாரண வாழ்வின் இயல்புகளோடு பங்கு கொண்டு விட்டன. கடவுள் வழிபாடு என்பது மக்களைப் போற்றும், சிறப்பாக, குருக்கள் மற்றும் அரசர்களைப் போற்றும் வழிபாட்டு நெறியின் மறுபடிவமேயாம். இவ்வாறு, பாரதப், போருக்குப் பிற்பட்ட காலமே, உபநிஷதங்களும், தலையாய ஆகமங்களும் தோன்றிய காலமாம் என்பதைக் காண்கிறோம்.

ஆகமங்களின் மூலம்

ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை, தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக் கொண்டனவும் ஆம் ஆதலின், தஸ்யூ வழிபாட்டு உரிமைகள், வேத காலத்தில் என்ன ஆயின என்ற வினாவை, எவன் ஒருவனும் தனக்குத் தானேயும் கேட்டுக் கொண்டான் அல்லன். ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர் தஸ்யூக் களிடையேயான பகை, இனம் பற்றியதாம் என்பதற்காம் பல்வேறு விளக்கங்களிலும், தஸ்யூக்களை ஆரியர்களோடு இரண்டறக் கலக்கப் பண்ணும் புரியாப் புதிரிலும், முழுமை. யாக ஆழ்ந்து போயிருந்தமையால், ஆரிய வழிபாட்டுமுறை பரவிய பின்னர், தஸ்யூ வழிபாட்டு முறையின் வரலாறு பற்றி ஆய, அவர்கள் ஒரு முறையும் நின்று நோக்கினாரல்லர். இவ்வினாவுக்குப் பொருத்தம் உற விடையளிக்க நம்மால் இயலுவதற்கு, “ஸ்ரெளத” வேள்விகள் எனப்படுபவை, “ர்த்விகா” என அழைக்கப்படும் வேள்வி ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடியது.

வேத வேள்விகளை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தருமளவு, பெருஞ்செல்வம் வாய்ந்த வேந்தர்களும், வேந்தர் நிகர் விழுநிதிச் செல்வர்களும் வணிகர்களும், அவ்வேள்விகள் தரும் கட்புலனாகாப் பலன்களைத்தான் பெற முடியுமேயல்லாது, அவ்வேள்விச் சடங்குகளில் பங்கு கொள்ளக் கூடாது. எல்லோர்க்கும் தெரிந்து சமயம் என அழைக்கப்பட வேண்டியதான பொது மக்களின் சமயச் சடங்குகள் ஆகா என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

மனைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீ வழிபாடுகளில் பயன்படும் மந்திரங்களை அதர்வ வேதம் கொண்டுள் ளது உண்மை. ஆனால், இவ்வழிபாட்டு முறைகள், ஒருவர் விடாமல் மக்கள் எல்லோராலும், ஏதும் அறியாப் பாமரர் களைப் போலவே முற்றவும் அறிந்த உயர்ந்தோர் ஒரு சிலராலும் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்யும் சான்று எதுவும் அறவே இல்லை . வேதகாலம் முழுவதும் சாதாரண பொதுமக்கள் தீ வழிபாட்டு முறையல்லாத, சமய வழிபாட்டு நெறிகளைப் பெற்றே இருக்க வேண்டும். அவை, பண்டைய தஸ்யூ வழிபாட்டு முறைகளாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வழிபாட்டு முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை, பொதுமக்கள் வழிபட்ட கடவுள்கள் யாவை என்பதை அறிந்து கோடற்கான மார்க்கம் ஏதேனும் உண்டா? தமிழ் இந்தியா, வட இந்தியாவைப் போலவே, ஆரிய தீ வழிபாட்டு நெறி தோன்றுவதற்கு முன்னர், தஸ்யூக்களின் தீ வழிபாடற்ற வழிபாட்டு முறையினையே பின்பற்றி வந்தது; பண்டைத் தமிழரின் சமய வழிபாட்டு முறை பற்றிய விளக்கக் குறிப்பு முன்பே கொடுக்கப் பட்டுளது. வடநாட்டுச் சாதாரண மக்கள், வேதகாலம் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்தில் வழிபட்டு வந்தது போலவே, வேதகாலத்திலும், தீ வழிபாடு இல்லாத, உள்நாட்டுக் கடவுள்களையே வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவரவர்களின் இன்றைய வழிபாட்டு நெறியைப் போலவே, தஸ்யூக்களின் வழிபாட்டு நெறி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டா ஆடல் பாடல் தொடர்ந்து வர கடவுள் திருமேனிகளுக்கு உணவு படைத்தலைக் கொண்டிருந்தது. வால்மீகி கூற்றுப்படி, சுக்கிரீவனின் முடி சூட்டு விழா, அவ்வகையில்தான் கொண்டாடப்பட்டது. அந்நாட்களில் முடிசூட்டு விழா, சமயச்சார்பற்றது அன்று. மாறாக சமயச் சார்புடைய ஒரு சடங்கே ஆகும்.

மகாபாரதப் போருக்குப் பின்னர், தீ வழிபாட்டு முறை மறையத் தொடங்கவே பிராமணச் சமய ஆசிரியர்கள், தங்கள் தொழில் அழிந்துபோனதை அறிந்து கொண்டு நாட்டில் அப்போதும் நடைமுறையில் இருந்துவந்த தீ வழிபாடற்ற வழிபாட்டு நெறியில் தங்கள் கருத்தைத் திருப்பியிருத்தல் வேண்டும். பெரும்பாலான மக்களின் இயல்பு, உணர்ச்சி வயப்பட்டுப் போவதே ஆதலின் - கட்புலனாகா நுண்ணிய உலகியல் கடந்த பொருளுணர்ச்சி குறித்த ஆய்வாம் உணர்விலேயே வாழ்ந்துவிடவல்ல உள்ளம் வாய்க்கப் பெற்ற, அறிவார்ந்த உணர்ச்சியினராகிய மக்கள், எக்காலத்தும் ஒரு சிலரே. அம்மக்களுக்குப் பக்தி மார்க்கம் மீதான கவர்ச்சி பிராமணர்களின் கருத்தைப் பக்திவழியில் திருப்பியதற்கான மற்றொரு காணக்கூறு ஆதல் வேண்டும்.

அப்பிராமணர்கள், திரிமூர்த்திக் கொள்கையை, தாங்கிய சமயக் கொள்கையாம் உலகப் பருப்பொருளின் முக்குணக் கொள்கையோடு ஒன்றுபடுத்திட உருவாக்கினர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கும், சிவனின் எண்ணற்ற , ஆனால் தற்காலிக மானிட இயல்பு காட்டும் திருவிளையாடல் களுக்கும் உருவம் கொடுத்து வளர்த்தனர். (பாகவத புராணம் குறைந்தது 22 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது) (பிரம்மா வின் செயல்பாட்டுத்திறன், படைப்புத் தொழிலோடு தீர்ந்து விடுவதால், அவன் உயிர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயலான். ஆகவே, ஆகமங்கள், அவனை இருட்டடிப் புச் செய்துவிட்டன) அப்பிராமணர்கள், 108 வைஷ்ணவ ஆகமங்களையும், 28 சைவ ஆகமங்களையும் இயற்றினர். 77. ஆகமங்களைக் கொண்டிருப்பதாய்ப் பெருமை சாற்றிக் கொள்ளும், சக்திக்கு உரியதான பிறிதொரு ஆகம நெறி பிற்காலத்தே வளர்ச்சி பெற்றது. இக்காலங்களில், சிவ வழிபாடும், கிருஷ்ண வழிபாடும் வழக்காற்றில் இருந்தன என்பதற்குப் பாணினியும் சான்று பகர்கின்றார்.

பையப்பைய, வேதாந்த நெறியும், ஆகம நெறியும், ஒன்றையொன்று ஈர்க்கத் தொடங்கின புராணங்களில் அவை, அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. ஆனால் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடவில்லை, சங்கராச்சாரியார் காலத்திலும் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) அவை, ஒன்றாகி விடவில்லை என்பதை நாம் அறிகிறோம். வேதாந்த சூத்திரங்களை விளக்கிக் கூறும் நிலையில், பாசுபத சமயநெறியும், பாஞ்சராத்ர சமய நெறியும் ஒன்றோடொன்று முரண்பட்டவை எனக் கூறுவதில், அவர் பாத்ராயணரைப் பின்பற்றுகிறார் என்றா லும், அவருடைய ‘'பிரபஞ்ச ஹர்தயம்'’ என்ற நூல். உண்மையான ஆகம நூலே ஆகும்.

செவிவழிச் செய்திப்படி, விஷ்ணு, சிவன் சக்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் ஆகியோர் வழிபாட்டு நெறிகளை முறைப்படுத்தினார். அவற்றிடையே தாம் கண்டு நிறுவிய மதங்கள் பின்பற்றும் வழிபாட்டு முறையினைப் புகுத்தினார் என்ற காரணங்களால், அவர் ஷண்மத ‘ ஸ்தாபனாசாரியர் (அறுவகை மதங்களைக் கண்ட ஆசிரியர்) எனவும் அழைக்கப்பட்டார். இவ்வகையால், தம்முடைய வேதாந்த நூல்களையும், ஆகம நூல்களையும், ஒன்றோடொன்று கலக்க விடாது வேறுபடுத்தியே அவர் வைத்திருந்தார் என்பதைக் காண்கிறோம். பொதுவாக 'விஸிஷ்ட்ஹாத்வைத வேதாந்தம்' என அழைக்கப்படும் வைஷ்ணவ வேதாந்த நெறியைத் தோற்றுவித்த யாமுனாச்சாரியர்தாம், வைஷ்ணவத் தலைமைக்கு, (ப்ராமாண்யம்) அதாவது, வேதத்திற்கு நிகரானது, 'சாத்விக ஆகமம்' என்பதற்கு முதன்முதலில் வாதிட்டவராவர். உண்மையில் இராமானுஜ ஆச்சாரியர்தாம், அவை இரண்டையும் இரண்டற்று ஒன்றுபட இணைத்தவ ராவர். இது, ஆகம நெறிக் கொள்கைகள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்ததற்குப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்தது. தென்னிந்தியாவில், அவை எப்பொழுது, எவ்வாறு பரவியிடங்கொண்டன என்பது பின்னர் ஆராயப்படும்.

ஆரியத்துக்கு முந்திய இந்திய வழிபாட்டு நெறியிலிருந்து முகிழ்த்த ஆகம வழிபாட்டு நெறி, கி.பி. 55 ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியரின் உள்ளத்தை ஆட்கொள்ளவும், வேதாந்த நெறியோடு இரண்டறக் கலந்துவிட்டபோது, மீண்டும் வட இந்தியாவுக்கே பாய்ந்து சென்று, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் இந்து சமயமாகவும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதலின், வட இந்தியாவில் ஆகம நெறிகளின் வளர்ச்சி குறித்து, இவ்வளவு விரிவாக ஆராய வேண்டியதாயிற்று.