ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

10. தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி.1 வரை


மலைநாட்டில் காதல் :

கி.மு. 500 முதல் கி.பி.1 வரையான இக்கால கட்டத்தில் தமிழ் அரசர்கள், அரசுகள் பற்றி, வட இந்தியாவிலும் சிலோனிலும் உள்ள, பாலி அல்லது சமஸ்கிருத இலக்கியங்களில் கிடைக்கக்கூடிய குறிப்புகள் அனைத்தும், முந்திய இரு அதிகாரங்களில் எடுத்துக் கூறப்பட்டன. இந்த ஐந்நூறு ஆண்டுகளில், எண்ணற்ற தமிழிலக்கியங்கள் பாடப்பட்டடிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பின்வரும் ஓர் அதிகாரத்தில் குறிப்பிட இருப்பது போல், தமிழ்மொழி குறித்த, வியத்தகு நிலையிலான நனிமிகப் பொருந்தும் இலக்கணங்களை அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இயற்றியிருக்க இயலாது. அந்த இலக்கியங்கள் அறவே அழிந்து போயினவாக நம்பப்படுகிறது. என்றாலும், இப்போதுள்ள தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சில, அக்காலத்தைச் சேர்ந்தனவாதல் கூடும் என நான் எண்ணுகின்றேன். அவற்றுள் ஒருசில, பாடினோர் பெயர் அறியமாட்டார் நிலையின. இதற்குக் காரணம், அவை நன்மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தனவாதலின் தொகை நூல்களில், அவை வரிசைப்படுத்திய காலத்தில், அவற்றைப் பாடியவர் பெயர் மறந்திருக்கக் கூடும். மேலும், அவற்றில் சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெறா நிலையால் அவை, தனிச்சிறப்புடையவாக மதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள், முழுக்க முழுக்கத் தமிழர்க்கே உரியவாம். ஆரியக் கருத்துக்கள் பற்றிய குறிப்பு அவற்றில் அறவே இடம் பெறவேயில்லை. கிடைக்கும் பாக்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டாலும், அவை ஒரு சிலவே ஆயினும், அவற்றை, அக்காலத்திய இலக்கியங்களின் நினைவுச் சின்னங்களாகக் கொள்ளலாம். அவற்றிலிருந்து, தமிழ்நாட்டு ஐந்திணைகளில், ஒவ்வொரு திணைக்கும் உரியவாய சில பாக்களை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அப்பன்னெடுங் காலத்தில் தமிழர் நடத்திய வாழ்க்கை நிலை பற்றிய படக்காட்சியை, மறுவலும் உருவாக்கிக் காணப்படிப்பார்க்கு அவை துணை புரியும். இந்த வாழ்க்கை முறை பெரும்பாலும் அக்காலத்திற்கு முன்பும், அக்காலத்திற்குப் பின்பும், இருந்த வாழ்க்கை முறையேதான் என்பதும் காணப்படும். புறத்தூண்டுதல் இன்றி, அகத்தூண்டுதலால் எழும் இயற்கைக் காதல் நிலை , பின்வரும் சிறுபாட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ‘'என் தாயும் உன் தாயும் ஒருவருக் கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தை யும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? உள்ளத்தால் இப்போது ஒன்றுபட்டு நிற்கும் நானும், நீயும் ஒருவரை யொருவர், எவ்வாறு முன்பு அறிந்திருந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சங்கள், தாமாகவே ஒன்று கலந்து விட்டனம்


"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.'’
                 குறுந்தொகை : 40

காதலர், என்றும் போலவே, அன்றும் மன உறுதியுடையரல்லராயினர். அதனால் காதலனால் கைவிடப்பட்ட கன்னிப்பெண், அக்கைவிடப்பட்டமையை எண்ணி எண்ணிப், புலம்பத் தொடங்கிவிட்டாள், “நானோ, இவ்விடத்திலேயே இருக்கிறேன். என்னோடு பிரியாமல் ஒன்றியிருந்த என் பெண்மை நலனோ என்றால், தினைப்புனம் காத்து நிற்பார் விடும் கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, காட்டுயானை, தான் கைப்பற்றியிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டதாக, அம்மூங்கில், மீனைக் கவர்ந்து கொண்ட தூண்டிற்கோல் போல, விரைந்து மேலே எழும் இடமாகிய காட்டு நாட்டா னாகிய என் காதலனோடு, நாங்கள் பழகிய அவ்விடத்திற்கு ஓடிவிட்டதே!

யானே, ஈண்டையேனே! என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டி லின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே!
                    குறுந்தொகை : 54 )

ஊர்வம்பு பேசித் திரியும் அயலில் மகளிர், காதலர் குறித்து அம்பல் உரைக்கலாயினர். ஆதலால், அப்பெண்ணின் வளர்ப்புத் தயாயாம் செவிலியின் மகளாய், அப் பெண்ணோடு வளர்ந்தவளாய தோழி. நம் காதலை இனியும் மறைத்துப் பயன் இல்லை. அதை ஊர் அறிய உலகு அறிய உணர்த்தி விடுதேலே நலம்" என மறைத்து மொழி கிளவியால் கூறத்தொடங்கினாள்: மகளே உன் மார்பை விரும்பும் நம் இனிய தலைவன், மலைவளர் சந்தனம் பூசிய மார்பில் முத்துமாலை அணிந்துகொண்டு, சுனையில் வளர்ந்த குவளையின், வண்டுபட விரிந்த மலர்களால் ஆன கண்ணி யைத் தலையில் புனைந்து கொண்டு, நம் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து செல்கின்றான்; அக்காலத்தில், அவன் வந்து செல்லும் வழியில், மன்றங்களில் வாழும் மரையா வெகுண்டு ஓடுமாறு, அதன் ஆணைக் கொன்றுவிட்டு, சிவந்த கண்ணும், கருத்த உடலும் வாய்ந்த புலி முழங்கும். ஆகவே, நம் களவு ஒழுக்கத்தை மறைக்கும் காலம் இதுவன்று; நம் களவு ஒழுக்கத்தைப் பலர் அறிய நான் கூறிவிடுவேன். அதை நீயும் விரும்பி ஏற்றுக் கொள்வாயாக".

மலைச்சேர் அஞ்செஞ் சாந்தின், ஆர மார்பினன்,
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
ஒருநாள் வந்து நம்மனைப் பெயரும்;
மடவரல் அரிவை? நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டுச்

செங்கண் இரும்புலி குழுமும்; அதனால்
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல்; வாழி, வேண்டு; அன்னை நம் கதவே”
                  - குறுந்தொகை : 321

காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவதின் முன்னர், சமுதாய முறைப்படி இன்றியமையாது நடைபெற வேண்டிய களவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மணிமுடியாம் திருமணத்தைக் காதலன் காலம் கடத்திக் கொண்டே வந்தால், அவன் காதலியை நோக்கி வந்தபோது, தோழி. வரைந்துகொள்வது விடுத்து, இவ்வாறு வருவதைக் கைவிடுக’ எனக் கூறி மறுத்து அனுப்புகிறாள். “ஓ மலை நாடனே! மழை பெய்து ஓய்ந்த மேகங்கள், மலையிலே சென்று இடங்கொண்டுவிட்டன; தேனடைகள் தொங்கும் - மலையுச்சியிலிருந்து, அருவிகள் ஆரவாரம் செய்து கொண்டே உருண்டோடி வீழ்கின்றன; அழகிய மலையில் நிற்கும் வேங்கை மரங்கள் நாட்காலையில் நறுமண மலர்களைக் கொட்டுகின்றன, தன் தோகை அழகோடு, அவ்வேங்கை உதிர்த்த மகரந்தப் பொடிகளாலும் மூழ்கப்பெற்று மகிழ்ந்து ஆடி இளவெயில் இன்பத்தை நுகர்கின்றன மயில்கள். இத்தகு இன்பக் களஞ்சியமாய்த் திகழும் மலைநாட்டுக்கு உரியனாகிய நீயோ, இவளுக்கு நீங்குதல் இல்லாக் காமநோயைத் தந்துள்ளாய். இதை .. யாரிடத்தில் கூறி நோவேன்? வந்து புணர்ந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இனிய சொற்களை இவள் விரும்பு மாறு கூறுகின்றனை; அவ்வாறு கூறும் நீ கூறியவாறே நடந்து மணந்துகொள்வதே, இவள் உயிரைக் காக்கும் வழியாம் என்பதை மட்டும் கூறியதை மறுத்து மயங்கு கின்றனை; இதை நான் யாரிடம் சென்று முறையிடுவேன்?'’

“பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கைதந்த வெற்பு அணி நன்னாள்
பொன்னின் அன்ன பூஞ்சினை நுழைஇக்
கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை

பாசறை மீமிசைக் கணம்கொள்பு ஞாயிற்று
உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன்
நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய்
யார்க்கு நொந்துரைக்கோ யானே! பன்னாள்
காமர் நனிசொல் சொல்லி
ஏமம் என்று அருளாய், நீமயங் கினையே
                 - நற்றிணை : 396

இப்பாக்கள், மலைநாட்டுக்குரியதான, மணத்திற்கு முந்திய தான களவுக் காதல் பற்றியனவாம். குறிஞ்சித் திணைக்கு உரியவாம்

முல்லையில் காதலர் :

காடு சார்ந்த நிலத்து மக்கள் ஒழுக்கமாகிய முல்லைத் திணை, சிறு பிரிவின் துயர் ஆற்றமாட்டாது வருந்தி, இருத்த லைக் குறிப்பதாகும். போர் முடிந்து மீளும் காதலன், தேர்ப்பாகனிடம் பின்வருமாறு கூறுகிறான். நம் அரசனும் செய்தற்கரிய போரை முடித்துக் கொண்டான். மலைச் சுனைகளில், மகளிர் கண்போல் ஒளிவிடும் குவளைகள் மலர்ந்துவிட்டன. பரந்து அகன்ற காடெங்கும் வேங்கை, தன் மலர்களை உதிர்க்கலாயின. இம்மெனும் ஒலி எழ, வண்டுகள் எத்திசையும் பறக்கலாயின. பேரூர்களின் அகன்று நீண்ட தெருவு போலும் பெருவழிகளில் நெடிது நடைபோட்ட நம் வீரர்கள் ஆங்காங்கே இருந்து இளைப்பாறலாயினர். வெண்காந்தள் மலரின் பெரிய இதழ்கள், குதிரைகளின் கவிழ்ந்த குளம்புகளால் மிதியுண்டு, வெண்சங்கு உடைந்து சிதறினாற்போல் சிதறுண்டு போயின. இவை கண்டு தோள்வலிக்க விரைந்து மீளும் நம் வருகையை, அழகிய புள்ளிகள் பொருந்திய அல்குலையும், இனிய மொழியையும் உடையளாய்த் தன் மகனை அழாமல் ஆற்றுவான் வேண்டிப் பொய்க்கதைகளைக் கூறிக் கொண்டிருக்கும் நம் காதலிக்கு, நிமித்தம் காட்டும் காக்கைகள் கரைந்து அறிவித்திருக்குமோ?

இறையும் அருந்தொழில் முடித்தெனப், பொறைய
கண்போல் நீலம், சுனைதொறும் மலர,

வீதா வேங்கை வியன் நெடும் புறவின்
இம்மென் பறவையீண்டுகிளை இரிய,
நெடுந்தெருவு அன்ன நேர்கொள் நெடுவழி
இளையர் ஏகுவனர் . பரிப்ப, வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத்
தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள் அறிவுறீஇயன கொல்லோ ? தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள்; ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யாட்கே”
                - நற்றிணை : 161.

பிரிந்து வாழும் காலம் நனிமிகக் குறுகியதே ஆயினும், அப்பிரிவு தரும் துயர் தாங்கமாட்டாக் கொடுமை வாய்ந்த தாம். காதலனைப் பிரிந்தாள் ஓர் இளமகள், தன் தோழி முன் இவ்வாறு புலம்புகிறாள். “ஞாயிறு மறைந்துவிட்டான்; முல்லை மலர்ந்து விட்டது; ஞாயிற்றுக் கதிர்களின் கொடுமையும் தணிந்து விட்டது; நம்மைச் செயலற்றவராக் கும் கொடிய இம்மாலைக் காலத்தை, இரவை எல்லையாகக் கொண்டு கடந்துவிடலாம்; ஆனால், தோழி! அவ்வாறு மாலைக் கொடுமையைக் கடந்துவிடுவதால் யாது பயன்? அடுத்துக் கடக்க வேண்டிய இரவு என்னும் கடல் இருக்கிறதே, அது கடத்தற்கரிய கடலினும் பெரிதாக உளதே! அதை எவ்வாறு கடப்பது?'’

‘'எல்லை கழிய, முல்லை மலரக்
கதிர்சினம் தணிந்த கையறு மாலையும்
இரவுவரம் பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம், கடலினும் பெரிதே!”
                   குறுந்தொகை : 387

நெய்தலில் பிரிவுப் பெருந்துயர் :

பிரிந்துறையும். பெண்ணின் உள்ளத்தை அலைக்கழித்து நோவப்பண்ணும் நெடும் பிரிவு, கடல் சார்ந்த நிலத்து ஒழுக்கமாம் நெய்தல் திணையோடு தொடர்புடையது. வெள்ளை நாரைகள் ஓயாது ஒலிக்கும், இனிய மணம் நாறும் கடற்கரையில், மலர் செறிந்த சோலையில் உள்ள அன்றலர்ந்த புதுமலர்களைக் கலக்கச் செய்து வீசும் அலைகள் வந்து மோதி, உடைந்து பின்னிடும் துறைக்கு உரியவனாகிய தலைவனோடு, பல்லெல்லாம் தோன்ற வாய்விட்டுச் சிரித்து அன்று மகிழ்ந்ததன் பயன், இன்று நம் இயற்கை அழகு அழிய, நம் தோள், நலம் கெட்டு மெலிய, அல்லல்படும் நெஞ்சோடு இரவெல்லாம் உறங்காமல், பசலையுற்று நாம் அழிந்து போவதுதானோ?"

"தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்,
அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது.
பசலை யாகி விளிவது கொல்லோ?
வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்,
பூமலர் பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே.
                        - குறுந்தொகை : 381

பிரிவுத் துயர் பொறாது துயர் உறும் ஓர் இளமகளை, அவள் தோழி தேற்றும் முறை இது: "தோழி! சுரத்தின்கண் உள்ள இலுப்பை மரத்தின் வெண்ணிறப் பூப்போலும் . மெத்தென்ற தலையை உடைய இறால் மீன்களுடன், திரளாகக் கிடைக்கும் பிற மீன்களையும் அகப்படுத்திக் கொள்ளுமாறு பின்னி விரித்த வலைகளை உடைய பரதவர்களின், வண்மைமிக்க தொழிலில் வல்லவர்களாகிய சிறுவர்கள், காட்டில் மரங்களில் ஏறி நின்று மானியங்களை வெருட்ட விரும்பி விரைந்து செல்லும் வேட்டுவச் சிறார்களைப் போல, மீன்பிடி படகில் ஏறிக்கொண்டு, கடல்பரப்பில் நெடுந் தொலைவு சென்று மரங்களை ஈர்த்துப் பிளக்கும் வாள் போலும் வாயையுடைய சுறா மீன்களுடன், பிற பெரிய மீனினங்களையும் பிடித்து, அவற்றைத் துண்டித்த இறைச்சிகள் நிரப்பிய தோணிகளோடு, மீண்டுவந்து, கடற் காற்று கழன்று அடித்துக் குவித்த மணல்பரப்பில் இறங்கும் உப்பங்கழி சூழ்ந்த நம் பாக்கத்தில், கல்லென ஆரவாரம். எழ, நம் தலைவன் தேர்வந்து நிற்கும். இது உறுதி; ஆகவே, நீ வருந்தாதே”.

‘'அத்த இலுப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகைமீன் பெறீஇயர்,
விரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்,
மரன் மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையர் வேட்டேழுந் தாங்குத்
திமில் மேல் கொண்டு திரைச்சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இடுமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே, தோழி! கொண்கன் தேரே'’
                         - நற்றிணை, 117

பிரிவால் வருந்தும் காதலர்களோடு, கடற்கரை கொண்டிருக்கும் இம்மரபுத் தொடர்பை விளக்கும் புலவர்கள், அதே நிலையில், அக்கடற்கரைவாழ் மீனவர்கள், அவர்தம் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை விளக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பாலையில் பெரும் பிரிவு :

பாலை எனப்படும் ஒருவகைப் பாட்டில், ஒன்று. காடுகளுக்கும் அப்பாற்பட்ட தொலை நாடுகளுக்கும் காதலன் சென்றுவிட்டதைக் கூறும். அல்லது, காதலனோடு அவனூர் சென்றுவிட்ட மகளின் தாய், செவிலி போன்றோ ரின் துயரைக் கூறும். முன்னதற்கான ஓர் எடுத்துக்காட்டு இது. வாயிற் கண் வந்து நின்று இரப்பவர்க்கு அவர் விரும்புவன கொடுத்து அவர் இன்மையைப் போக்க வேண்டியது இல்லறத்தார் கடன்; அது செய்ய மாட்டா நிலையுற்ற நமது தலைவர். என் கண்ணையும், தோளையும், தண்ணெனக் குளிர்ந்து மணம் நாறும் கூந்தலையும், திதலை படர்ந்த அழகிய அல்குலையும் பலவாறு புகழ்ந்தபடி, நேற்றும் இங்கேயே இருந்தார். இன்று அவரைக் காணோம். பெரிய நீர்ப்பரப்பு போல் காணப்படும் கானல் நீராம் பேயத்தேரை, மரங்களே இல்லாமல் நீண்ட அப்பொட்டல் காட்டில், மான் கூட்டம் நீரென்று மயங்கி ; அது நோக்கி விரையும் கொடுமை மிக்க, மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர்த் தாழியில், மத்திட்டுக் கலக்கிய காலத்து, வெப்பத்தால் கைகூடாது சிதறிக்கிடக்கும் வெண்ணெய் போல, உப்புப் பூத்துக் கிடக்கும் களர் நிலத்தில் ஓமை மரங்கள் மட்டுமே நெருங்க , வளர்ந்து கிடக்கும் காட்டில், வெயில் நிலைபெற்று நிற்பதால் வெம்மை மிக்க பாலை நிலத்தில் தனியாகச் சென்று கொண்டிருப்பார் என அண்மையில் உள்ள அயலார் கூறு கின்றனர். நான் இக்கொடுமையை எங்ஙனம் ஆற்றுவேன்?"

"கண்ணும், தோளும், தண்ணறும் கதுப்பும்
திதலை அல்குலும் பலபா ராட்டி,
நெருநலும் இவணர் மன்னே; இன்றே,
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீளிடை மான்நசை யுறூஉம்
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன
உவர் எழுகௗரி ஓமையம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்மலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே; தம்வயின்
இரந்தோர் மற்றால் அற்று
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே"
                - நற்றிணை : 84.

காதல் திருமணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமுதாய முறைதான் என்றாலும் தன் மகள், தங்களை மறந்து, அவள் விரும்பும் காதலனோடு அவனூர் சென்றுவிடுவதால் ஏற்படும் மனக்கலக்கத்தை எந்தத் தாயும் தாங்கிக்கொள்ள மாட்டாள், தன் அவள் விரும்பும் காதலனை அவளே தெரிந்துகொண்டு மகிழ்வதை அவள் தாய் மறுப்பதில்லை என்றாலும், அண்டை அயலார், அது குறித்துக் கூறும் வம்பு உரைகள் கேட்ட வழிப் பெரிதும் வருந்துவாள். அவ்வகையில் வந்தது இப்புலம்பல். கரிய எருமைக்கு உண்மையில் பிறந்த பெரிய காதுகளை உடைய கன்று, புதுமலர்கள் உதிர்த்த தாதுக்கள் | எருவாகக் குவிக்கப்பட்டிருக்கும் தொழுவத்தில் கிடந்து இனிதே உறங்கத்தக்க வளம் நிறைந்த வாழ்தற்கினிய மாளிகையையும் என்னையும் இங்கே விடுத்து தன்னுடன் வரும் காளை போலும் இளையோன் கூறும் , அளவு கடந்த பொய்யுரைகளில் மயங்கி, நெடுந்தொலைவில் உள்ள அவன் ஊரை அடைய விரும்பி, பசியெடுத்தபோது, உண்ணுவதற்கு வேறு உண்பொருள் கிடைக்காமையால், வழியிடையில் உள்ள நெல்லிமரச் சோலையில் உதிர்ந்து கிடக்கும் முற்றித் தேர்ந்த காய்களைத் தின்று, நீர் வறண்டு கிடக்கும் சுனையில் ஒரு சிறிதே தேங்கி நிற்கும் நீரைக் குடித்து செல்லும், நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்களை உடைய , என் மகளை, பனங்குருத்துக்களைப் பிளந்து பதனிடுவான் வேண்டிப் போட்டுப் பரப்பும், மாலைப் போதில் விரிந்த நிலவெளியிலே சென்று, தேடிப் பின் சென்று காணும் படியாகச் செய்த, இதற்கு முன்னரே, என்னைப் பெரிய கரிய தாழியில் இட்டு அடக்கம் செய்வதற்கு ஏற்ப என் உயிரைக் கொண்டு செல்லாத அந்தக் கூற்றுவன் தன் வலி அழிந்து, அத்தாழியல் இட்டுக் கவிக்குமாறு இறந்து போகக் கடவனாக'’.

“இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி,
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்
செல் பெரும் காளை பொய் மருண்டு, சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த,
குவளை உண்கண் என் மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய
மாலைவிரி நிலவில் பெயர்ப்பறம் காண்டற்கு
மாயிரும் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே”.
                        - நற்றிணை : 27

காதல் கொண்டாரை அடைவதில் ஏற்பட்டுவிடும் காலக்கழிவின் நீட்சி, காதல் உணர்வை, இயல்புக்கு மாறான வகையில் வெளியிடுவதாம் முறையை வளர்த்துவிட்டது. அதுவே, காதற்பாட்டின் - அகத்துறைப் பாட்டின் - ஒரு பொருளாகவும் ஆகிவிட்டது. காதலில் தோல்வியுற்ற ஒருவன் - மேற்கொள்ளும் நனிமிகக் கொடுமை வாய்ந்த முறை, பனை மடல்களால் ஆன குதிரை மீது அமர்ந்து கொள்ளும் மடலேறுதல் என்பதாம். இதை விளக்க, பிற்காலப் பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்படும். காமநோய் தணித்தற்கு இயலாதவாறு முதிர்ந்துவிட்டால், ஊர்ந்து செல்லும் குதிரை என்று பனைமடலால் ஆன குதிரை மீதும் ஏறிக்கொள்வர்; மாலை என்று சூடத்தகாத, குவிந்த அரும்புகளை உடைய எருக்கமலர்களால் ஆன மாலையையும் சூடிக்கொள்வர். தெருவில், பலர் பழிக்க வலம் வருதலும் செய்வர். அந் நிலையிலும் தம் காதல் நிறைவேறாதாயின் உயிர் விடுவதும் செய்வர்".

மா என, மடலும் ஊர்ப, பூ எனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்க வும் படுவ
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே."
                            குறுந்தொகை : 17.

நெஞ்சே! அழகு மிகுந்து விளங்கும், அசைந்து அசைந்து செல்லும் நடையுடையவளாகிய நம் காதலி, நம்மீது இரக்கம் கொண்டிலள் இனி நாம் விடும் தூதாக, மிக உயர்ந்த பனை மரத்தில் விளைந்து முதிர்ந்த பெரிய மடல்களால் பண்ணிய குதிரைக்கு, மணிகளைப் பூட்டி, பெரிய மலர் மாலையையும் முறைப்படி சூட்டி, நாம் வெள்ளெலும்புகளை மாலையாக மார்பில் அணிந்து கொண்டு, பார்ப்பவரெல்லாம் இகழுமாறு அம்மடல் மாமேல் அமர்ந்து, ஒருநாள், நம் உயிரோடு பிறந்த நாணத்தையும் கைவிட்டு, அவள் உறையும் ஊர்த்தெருவில் திரிவதுதானோ?

விழுத்தலைப் பெண்ணே விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபில், பூட்டி,
வெள்ளென்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி,

ஒரு நாள் மருங்கில் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ ?
கவிந்து அவிர் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே'’
                     - குறுந்தொகை : 782

காதலனை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுத்திருக் கும் ஓரிளம் பெண்ணின் தோழி அவளுக்குப் பின் வருமாறு கூறுகிறாள். ‘'உணவு உண்ணமாட்டா ஒரு குதிரையைப் பனைமடல்களால் பண்ணி, அதற்குச் சிறிய மணிகளைக் கட்டி, முதுகில் இட்ட கலன் நழுவாதவாறு பின்னே கட்டும் வார்க்கச்சினையும் கட்டி, சிறுசிறு அரும்புகளைக் கொண்ட எருக்கமலர் மாலை அணிந்த ஓரிளைஞன் அதில் வீற்றிருக்க: நம் ஊர்க்குறும்பு மிக்க இளஞ்சிறுவர்கள், நம்மூர்த் தெருவில், எம்பின்னே, தொடர்ந்து ஈர்த்து வரலாயினர்; என்னே அவர் செயல்!

‘'சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகிழ் எருக்கம் கண்ணிசூடி,
உண்ணா நல்மா பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள்.”
                           - நற்றிணை : 220

பெருந்திணை என வழங்கப்படும் இத்தகைய பாடல்கள், இறை வழிபாட்டுப் பாடல்கள் பாடத் தொடங்கிவிட்ட கிபி. 600க்குப் பிறகு, காதலன் கடவுளாக, அவன் மீது கொண்ட காதல் கைகூடாததாகப் பாடப்படும் ‘'மடல்” எனும் ஒருவகைப் பாடலுக்கு வழி செய்துவிட்டன. ஆகவே, அவை மிகவும் சுவையுடையவாயின.

மக்களின் அன்றாட வாழ்க்கை:

மக்களின் காதல் வாழ்க்கை மட்டுமல்லாமல் அக்காலத்திய, அவர்களின் அன்றாட வாழ்க்கை நிலைகளும் அப்பாடல்களில் வரைந்து காட்டப்பட்டிருக்கும். ஆனால், அப்பாடல்களெல்லாம் அழிந்துவிட்டனவாதலின், மக்கள் நடத்திய தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை 151 அன்றாட வாழ்க்கை நிலை பற்றிய ஒரு படத்தை, ஒரு நிலத்தை அடுத்து ஒருநிலமாக, எழுதிக்காண, அடுத்து வந்த காலத்தைச் சேர்ந்த சில பாடல்கள், ஈண்டு எடுத்துக் காட்டப்படுகின்றன. இருவேறு காலங்களில் மக்கள் வாழ்க்கை முறைகளில் பெரிய வேறுபாடு இருக்காது.

மலைநாட்டில்

காதல் ஒழுக்கத்தின் முடிந்த நிலையாம் முறையான திருமணச் சடங்கு விரைவில் நிகழ்ந்துவிடும் என்ற காதலியின் நம்பிக்கை இடம் பெற்றிருக்கும் பின்வரும் பாட்டில், மலை நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை பற்றிய ஒரு விளக்கமும் காணக்கிடைக்கும்.

"தனக்கு வேண்டும் இரையைத் தேடிப் புறப்பட்ட அகன்ற வாயையுடைய ஆண் கரடி , வழியில், மேலே வளைவு வளைவான வரிகள் கிடக்கும் புற்று ஒன்று இருக்கக் கண்டு, அதைப் பெயர்த்து, அதன் உள்ளே அடங்கியிருக்கம் நல்ல பாம்பும் ஒடுங்கி நடுங்கிவிடுமாறு முழங்கி, புற்றினுள் வாய்வைத்துக் கொல்லன் ஊதுகின்ற உலைமூக்கே போல் பெருமூச்செறிந்து அகத்தே குடிகொண்டிருக்கும் ஈசல்களை உறிஞ்சி உண்ணும், இரவில் நடுயாமத்தில் நீ வருவது வழக்கம் என அறிந்து யாம் அஞ்சுகின்றோம் என்று கூறி, அவ்வச்சம் அகலும் வண்ணம், இனியும் காலம் தாழ்த்தாது மணந்து கொள்வாயாக என நாம் இரந்து வேண்டிக்கொண்டால், நாள் நீட்டியாது நல்ல நாளில், நம்மை நம் மலைநாட்டில் மணம் புரிந்து கொண்டு, வேங்கை மலர்களால் ஆன மாலை சூடும் வழக்கம் உடையவர்களாகிய குறவர்கள், எருதுகளைக் கொண்டு கதிர்ப் போரடிக்கும் களத்தைச் செப்பம் செய்தாற் போன்ற அகன்ற பாறையில், புனத்தில் விளைந்த தினைக் கதிர்களைத் துவைத்து அதன் தாளைப் பெரிய போராகப் போடுதற் பொருட்டு, வைகறைப் போதில் எழுந்து கொள்ளுமாறு அவர்களை எழுப்புவான் வேண்டி, களிறு பிளிறிக் குரல் எழுப்பும் அவர் மலை நாட்டுக்கு நம்மோடு செல்ல நிற்பன்; இஃது உறுதி".

‘'இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊது உலைக் குருகின் உள்உயர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்துவரல் இரக்குவ மாயின், நம்மலை
நன்னாள் வதுவை கூடி, நீடின்று
நம்மொடு செல்வர்மன்; தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர், எருது ஏறி களமர்
நிலங்கண்டன்ன அகன்கண் பாசறை
மெனதினை நெடும் போர்புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும் தம் பெருங்கல் நாடே”.
                               - நற்றிணை : 125

‘'பேயினங்கள் காற்றுப் போல விரைந்து இயங்கா நிற்க, ஊரினர் அனைவரும் உறக்கம் கொண்டு விட்டனர். ஆனால், குறிஞ்சிப் பண்ணைக் கேட்போர் அச்சம் கொள்ளுமாறு பாடும், இவ்வூர்க் காவலராய கானவர் கண்துயில் கொண்டாரல்லர்; வலிய ஆண்யானையோடு போரிட்ட, வாள் போல் வளைந்த கோடுகளையுடைய புலி, மலையடிவாரத்தே இருந்து முழங்கா நிற்கும். வானளாவ அயர்ந்து நிற்கும் மலைச்சரிவுகளில், விரைவில் விடியாது நீண்டு செல்லும் இரவின் ஒரு யாமத்தில், பாம்பும், தன் அழகிய நீலமணியைக் கக்கி வருந்துமாறு, பேரொளிகாட்டி மின்ன, பேரொலி எழ இடித்து மழை பெய்யா நின்றது. அந்தோ! முன்பே மெலிந்திருக் கும் என் தோள்கள் மேலும் மெலிவுற்று நாம் வருந்த நேரினும், அவர், அந்நள்ளிரவில் அக்கொடுவழியில் வாராதிருப்பராயின், அதுவே நனிமிக நன்றாம்”

“கழுது கால் கிளர ஊர்மடிந் தன்றே;
உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியன்நகர்க் கானவர் துஞ்சார்;
வயக்களிறு பொருத்த வாள்வரி வேங்கை
கன்முகைச் சிலம்பில் குழுமும் ; அன்னோ !
மென்தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்,

வாரார் ஆயினோ நன்றுமன்; தில்ல:
உயர்வரை அடுக்கத்து ஒளிருபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி அரவு தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஓங்குவரை யாறே"
                            - நற்றிணை : 255

மலைநாட்டு மகளிரின் கடமைகளுள் ஒன்று, தினை, கதிர் முற்றும் பருவத்தில் அத்தினைப்புனத்தைக் காத்தல் ஆகும். அதனால்தான், தங்கள் காதலர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பு அம்மகளிர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. தினை முற்றி அறுவடைப்பருவம் வந்துற்றதும், இம்மகளிர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுப் புறம் போகவிடாது காக்கப்படுவர். இது, இற்செறிப்பு எனப்படும். அவ்வாறு இற்செறிக்கப்பட்டாள் ஓர் இளம்பெண்ணின் தோழி இவ்வாறு புலம்புகிறாள்: தோழி! தினையின் கதிர்கள் எல்லாம், விரிந்த அலைகளையுடைய கடல் வற்றிவிட்டாற் போலக், காய்ந்து கொய்யும் பருவம் அடைந்து விட்டன; அந்நிலையை நீ காண்பாயாக; இனி, நமர், அவற்றைக் கொய்துகொண்டு போவதல்லாமல், உன்னை வீட்டில் இட்டு வெளியே போகாவண்ணம் காப்பதும் செய்துவிடுவர் அது உறுதி. பொன் போலும் நிறம் வாய்ந்த மலர்களால் நிறைந்த வேங்கை மரங்கள் வளர்ந்து மணம் நாறும் மலைச்சாரலில், பெரிய மலைநாட்டுக்கு உரியோனாகிய காதலனோடு, தினைப்புனத்தில் தங்கியும் சிவந்த வாய்களை உடையவாகிய கிளிகளைத், தினைக்கதிர்களைக் கொய்து செல்லாவாறு. ஓட்டியும், அடுத்திருக்கும் கரிய மலைச்சாரலில் உள்ள அருவியில் நீர் விளையாடல் புரிந்தும், மலைச்சாரலில் வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தாலான சாந்தை அதன் மணம் - அறிந்து வண்டுகள் வந்து மொய்க்க மேனியெல்லாம் பூசிக்கொண்டும், பெரிதும் விரும்பி மேற்கொண்ட அந்நட்பு, மெல்ல மெல்லச் சிறுகி, முடிவில் அதுதானும் இல்லாவாறு போய்விட்டது போலும் ஒரு காட்சியை நான் மனக்கண் ணால் காணுகின்றேன். அதுகுறித்து நாம் என்னதான் செய்ய இயலும்?

‘'யாங்குச் செய் வாம்கொல்! தோழி! பொன்வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச்,
செவ்வாய்ப் பைங்கிளி ஒப்பி; அவ்வாய்ப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன்; விரிதிரைக்
கடல்பெயர்ந்த தனைய வாகிப்
புலர் பதம் கொண்டன, ஏனல் குரவே.”
                    - நற்றிணை : 259

பாலைநிலத்தில்


பாலை நிலத்தில் மிக எளிதில் கிடைக்கும் உணவு, விளாம்பழம், “நிலம் பிளவுபடுமாறு மண்ணுள் இறங்கிய வேறாம், பெரிய கிளைகளும், உடும்புகள் அணைந்து கிடப்பது போலும் பொரிந்த செதில்களும் உடைய மிக உயர்ந்த விளாமரத்தின் கிளைகளிலிருந்து அறுபட்டுப் பச்சைக்கம்பளத்தை விரித்தாற்போலும் பசும்புல் விளைந்து கிடக்கும் நிலத்தின் மீது, இளம் சிறார்கள் ஆடி விடுத்த பந்து கிடப்பது போல் வீழ்ந்து பரந்து கிடக்கும் விளாங்கனிகளாம் . உணவு”. பாலை நிலத்து மக்கள், விளாங் கனிகளைத் தங்களுடைய முக்கிய உணவாக மேற்கொள்வர்.

‘'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்த நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர் தாஅம்
வெள்ளில் வல்சி”
           - நற்றிணை : 24:1-5

மேய்ச்சல் நிலத்தில்:

மலைநாட்டு மக்கள் நடத்துவது போன்ற இன்ப வாழ்க்கையைக் கால்நடை ஓம்புவோராகிய ஆயர்களும், முல்லை நிலத்தில் நடத்தி இன்புறுவர். புன்செய் நிலங்களாம் கொல்லைகளில் குடிவாழும் ஆயர்களுக்கு உரிமையுடைய தான சிறிய புனத்தில் வளர்ந்து நிற்கம் குறுகிய கிளைகளைக் கொண்ட குரா மரத்தின் குவிந்த கொத்தில் உள்ள வெண்ணிற மலர்கள், ஆடுகளை மேய்க்கும் இடைமகன் அணிந்து மகிழும் வண்ணம் மலரும்".

"கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவியிணர் வான்பூ
ஆடுடை இடையன் சூடப் பூக்கும்"
               - நற்றிணை : 266 : 1-3

பாறைபடுதயிர் என்பதுபோல் நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போலும் மெத்தென்ற கையால், தயிர்க்கறை போகக் கழுவிய கையினால் மட்டுமே தொடத் தக்கதான உயர்ந்த ஆடையைக், கணவனுக்காம் உணவை விரைந்து முடிக்கும் ஆர்வ மிகுதியால், கழுவாமேலே எடுத்து உடுத்துக் கொண்டு, குவளை மலர் போன்ற மை உண்ட கண்களுள் தாளிப்புப் புகை புகுந்து தாக்க, தானே சமைத்து முடித்த புளிக்குழம்பைக் கணவன், இனிது இனிது எனக் கூறியவாறே மகிழ்ந்து உண்ணக் கண்ட அவ்விளமகளின் ஒளிவீசும் முகம் புறத்தே புலனாகாவாறு அகத்துக்குள்ளாகவே. அகமிக மகிழும்".

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் ,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத் ,
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."
               -குறுந்தொகை : 167

"தோழி! மதுவை நிரப்பிவைத்திருக்கும் நீலக் குப்பிகளைப் போன்ற குறுகிய வாயையுடைய சுனைகளில் வாழும் பிளந்த வாயையுடைய தேரைகள், கிளியோட்டும் கருவியாகிய தட்டைப்பறை ஒலிபோல் ஓயாது ஒலிக்கும், நாட்டுக்கு உரியவனாகிய நம் காதலன், களவுக்காலமாகிய பழைய திங்களில், முழுமதி நிலவொளியில் என் தோளை ஆரத் தழுவினான். அதனால் அவன் மேனியின் முல்லை மணம் என் தோள்களில் இன்றும் வீசா நிற்கும்”

“மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்,
தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
மணந்தனன் மன் நெடுந் தோளே :
இன்றும் முல்லை முகைநா றும்மே”
-குறுந்தொகை : 193

‘பரல்கற்கள் மலிந்த பாலை நிலத்தில் வளர்ந்து ஓங்கி நிற்கும் மீன் குத்திப் பறவை போலும் முளைகளையுடைய கள்ளிச்செடி மீது படர்ந்து தழைத்திருக்கம் முல்லையின் மணம் மிக்க மலர்களை, எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் தலையை உடையவாகிய ஆட்டுமந்தையை மேய்த்துவரும் வலிய கையையுடைய இடையன் இரவிலே கொய்து பனம் குருத்தின் பிளவினால் தொடுத்த மாலையின் நியமணம், மலைப் போதில் தெருவெங்கும் கமழும் சிறிய குடிகளை யுன்

‘'பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் ததைஇய அலங்கலம் தொடலை
மறுகுடன் கமழும் மாலைச்
சிறுகுடிப் பாக்கம்”
                - நற்றிணை : 169 : 4-10

“தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய தலையினை உடைய கரிய எருமையை, அதனிடமிருந்து மிக இனிய பாலை நிரம்பக் கொள்வான் வேண்டி, அவற்றின் கன்றுகளை அத்தொழுவத்திலேயே விட்டுவிட்டு, ஊரில் மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள், அவ்வெருமைகளின் மேல் அமர்ந்து கொண்டு மேய்புலம் நோக்கிக் கொண்டு செல்லும், நிறை இருள் மெல்ல மெல்லக் கழியும் விடியற்காலம்.'’

"மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பால் பயம் கொண்மார், கன்றுவிட்டு
ஊர்க்குரு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலவர் விடியல்"
              நற்றிணை : 80 :1-4


கடல் சார்ந்த நிலத்தில் :

கடல் சார்ந்த நிலத்தைச் சேர்ந்த இளமகளிர் நாள்தோறும் முறையாக மேற்கொள்ளும் வாழ்க்கை முறை, அப்பெண்களின் தோழி பாடிய இந்தப் பாட்டிலிருந்து நன்கு தெரியவரும்.

தோழி! நீ வாழ்வாயாக! பெரிய உப்பங்கழிகளில் உள்ள மீன்களாகிய இரையைத் தின்ற பல்வேறு இனப்பறவைகளின் வரிசை வரிசையான கூட்டம், வளைந்த பனைமடல்களிடையே கட்டிய குடம்பைகளில் அடங்கி இராப்பொழுதை நெருங்கியிருந்து கழிக்கும். அப்பனை மரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கும், வெண்மணல் பரந்த கொல்லை கள் சூழ்ந்த கானலிடத்துக்கு உன் தோழி மாரோடு, காலைப் பொழுதிலேயே சென்று, தேன் துளிக்கும், மணம் கமழும் மலர்களை உடைய நெய்தலின், ஒன்றோடொன்று மாறுபடும் உருவம் வாய்ந்த இலைகளைப் பறித்துக் கொணர்ந்து ஆடையாகத் தைத்து அதை உடுத்துக் கொண்டு, சிற்றில் புனைந்து, அது சிறக்கக் கோலமும் இட்டு மகிழ்ந்து விளை யாடி, புலால் நாறும் அலைகளால் மோதுற்று மோதுற்று வளைந்து போன அடியை உடைய கண்டல் மரத்து வேர்களின் இடையே, இணை இணையாகச் செல்லும் சிவந்த நண்டுக் கூட்டங்களின் நடை அழகைக் கண்டு மகிழும், இவைபோலும் சிறுசிறு விளையாடல்களையும் கைவிட்டுப் பெரிதும் வருந்திக் கிடக்கின்றனையே உனக்கு வந்துற்ற , அத்துயருக்கு யாதுதான் காரணம்? கூறாய்தோழி!"

உரையாய்; வாழி! தோழி! இருங்கழி
இரையார் குருகின் நிரைபறைத் தொழுதி,
வாங்குமடல் குடம்பைத், தூங்கிருள் துவன்றும்

பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கட்கமழ் அலர தண்நறும் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடிப்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல்
செம்பேர் இரணை அலவற் பார்க்கும்
சிறுவிளை யாடலும் அழுங்க,
நினக்குப் பெரும் துயரம் ஆகிய நோயே
                           நற்றிணை : 123

ஆற்றுப்பள்ளத்தாக்கில்


ஆற்றுப்பள்ளத்தாக்கில் மக்கள் நடத்திய வாழ்க்கை முறையினைப் பின்வரும் பாக்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்:

“தேன்கலந்து மிகுசுவை உடையதாக ஆக்கிய இனிய வெண்ணிறம் கெடாப் பால் உணவை, சிறந்த ஒளிவீசும் பொன்னால் பண்ணப்பட்ட கிண்ணத்தில் இட்டு, அக்கிண் ணத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு, மலர் நிறைந்த பூங்கொடி போலும், மெல்லிய கொம்பை மறு கையில் ஓக்கியவாறே அணுகி, இப்பாலை உண்ணுவாயாக’ எனக் கூறலும், தெள்ளத் தெளிந்த முத்துக்களைப் பரலாக இட்டுப் பண்ணப்பட்ட பொற்சிலம்பு காலிலிருந்து ஒலிக்கப் பாய்ந்து, மெல்ல நரைக்கத் தொடங்குமளவு, அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்த செவிலித்தாய் பின்தொடர்ந்து வந்து பற்றிக் கொள்ளமாட்டாது தளர்ந்து போகுமாறு ஓடி , மனை முன்றிலில் உள்ள மலர்ப்பந்தற் கீழ்ப் போய் நின்று கொண்டு, ‘உண்ணேன்; உணவு வேண்டேன்’ என மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டுப் பருவத்தாள் என் மகள்.”

‘'பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் ,
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்நிப் -
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஓக்குபு புடைப்ப, தெண்ணீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇ மலிந்து ஒலியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி".
                - நற்றிணை : 710 : 1-8


மலைகளைச் செய்துவைத்தது போல் காட்சி அளிக்கும் அடி பரந்து மிக உயர்ந்த நெல் நிறைந்திருக்கும் பல கூடுகளையுடைய , ஏர்களில் எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழுவ! மறுநாள் நடைபெற வேண்டிய உழவுப் பணிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து விட்டமையால் கண்ணுறக்கம் கொள்ளாமல் இருந்து, குளிர்ந்த விடியற்போதிலேயே எழுந்து கொண்டு, கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரிய பெரிய துண்டுகள் மிதக்குமாறு பண்ணி வைத்திருக் கும் குழம்போடு உண்பதற்கு ஏற்ப நன்கு தீட்டப்பட்ட அரிசியால் ஆன சோற்றுத் திரளைக், கை நிறைய வாங்கி வாங்க உண்டு முடித்து, நீர் நிறைந்திருக்கும் நன்செயில், நாற்றுக்களை நட, உன்னோடு தொழிலாற்றும் நாற்று நடுவாருடன் நீ செல்கின்றனை.

மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாது, தண்புலர் விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும் மாந்தி நீருறு செறுவில்
நாறுமுடி அழுத்தநின் நடுநரோடு சேறி"
                - நற்றிணை : 60 : 1-8

உழவர் மகளின் அன்றாடக் கடமை, உணவு சமைத்தல் - ஆகும். அவள் காதலன், அவள் பெற்றோரின் விருந்தோம்பும் பண்புக்கு ஏற்ப, அம்மனைபுகும் விருந்தினருள் ஒருவனாகச் சென்று, தன் காதலியைக் கண்டு மகிழ்வதோடு, உழவர்வாழ் சிற்றூர்களின் மனை வாழ்க்கையின் மாண்பு எத்தகையது என்பதை நாம் அறியவும் செய்துள்ளான்.

வளைந்து நீண்ட கொம்புகளையுடைய எருமையின் தளர்ந்த நடையுடையவாய இளம் கன்றுகள் வீட்டுத் தூண்கள் தோறும் கட்டப்பட்டுக் காண்பதற்குக் களிப் பூட்டும் நல்ல மனையின் கண், வளைந்த குண்டலங் களைக் காதில் அணிந்து கொண்டிருக்கும், செழித்த உடல் நலம் உடையவளாகிய நம் காதலி, சிறிய கல் மோதிரம் செறிக்கப்பட்ட மெல்லிய விரல்கள் சிவந்து போகுமாறு, வாழையின் குளிர்ந்த இளம் தண்டை , சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அடிசில் ஆக்குதலால், புகை படிந்து சிவந்த கண்களை உடையளாகி, அழகு உண்டாகுமாறு, பிறைவடிவான நெற்றியில் உண்டாகியிருக்கும் சிறுசிறு துளிகளான வியர்வையைத் தன்னுடைய அழகிய சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டு , சமையல் முடிந்தும், கணவன் வந்திலனே என்ற நினைப்பால் நம் மீது கொண்ட சினத்துடன் அட்டிற் சாலையில் இருக்கிறாள். விருந்தினராய் வர விரும்புவார் என்னோடு வருவார்களாக; விருந்தினர். முன்னே, அழகிய மாமை நிறம் வாய்ந்த என் காதலி, என்னைச் சினந்து கண் சிவந்து காட்சி தரமாட்டாள், முள்போலும் சிறிய பற்கள் சிறிதே தோன்றப் புன்னகையே. காட்டுவள்; அவளின் சிரிதே முகத்தை நானும் கண்டு மகிழ்வேன்”

"தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த, காண்தகு நல்இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை ,
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப,
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகை இப்
புகை உண்டு அமர்ந்த கண்ணன், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டிலோளே, அம்மா அரிவை!
எமக்கே, வருகதில் விருந்தே; சிவப்பாளன்று;
சிறிய முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே"
                      - நற்றிணை - 120

சிற்றூர் ஆட்சிமுறை

பண்டைய நாட்களில், தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, முழுக்க முழுக்க சிற்றூர்களைச் சார்ந்தே இருந்தது. சிற்றூர்கள் இப்பொழுதைக் காட்டிலும், அன்று தன்னிறைவு பெற்று விளங்கின. சிற்றூர் ஆட்சிமுறை, எளிதில் விளங்கிக் கொள்ளலாகாச் சட்டங்களை எதிர்நோக்கியிருக்கவில்லை. சட்டங்கள் மூலம், மக்கள் எதை எதிர்பார்த்தனரோ, அதை, அம்மக்களின் பழக்க வழக்கங்களே வழங்கிவிட்டன. ஏதேனும் ஓர் இடையூறு, ஒரு வழக்கு ஏற்பட்டு விட்டால், ஊர்ப்பெரியவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் செய்வதுபோல், ஊர்நடுவே நிற்கும் மரத்தடியில், பொதுவாக, ஆலமரத்தடியில் கூடியிருந்து, ஒரு கலயம் கள்ளுக்கு, அவ்வழக்கினைத் தீர்த்துவிடுவர். அத்தகு மரங்களின் அடியில் இருக்கும் திறந்தவெளி, பொதியில், பொதியம், பொதுவில், மன்று, மன்றம்" என்றெல்லாம் அழைக்கப்படும். மன்றம், என்றால் பொதுவாக ஊர்ப் பொதுவிடம் எனப்படும். ஊர்க்கால்நடைகள் ஆங்கே மடக்கி வைக்கப்படும். கன்றுகளை அழைக்கும் 'அம்மா எனும் குரல் எழுப்பியவாறே மன்றில் புகுந்து நிறைந்துவிடும். ('கன்றுபயிர் குரல் மன்று நிறைபுகுதரும்" (அகநானூறு: 14:11) இதே வரி, குறிஞ்சிப்பாட்டிலும், எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றுளது. (குறிஞ்சிப்பாட்டு : 278) கால்நடைகள், வரிசை வரிசையாக மன்றுள் நுழைவதையும், கொல்லேறு : எனும் காளைகள், அம்மன்றத்தில் திரிவதையும் புறநானூற்று வரிகள் உணர்த்துகின்றன. மன்று நிறையும் நிரை (புறம் : 387 : 24), "கொல்லேறு திரிதருமன்றம்" (புறம் : 309:4) மரம் செடி, கொடிகள் அற்ற, மேடு பள்ளம் இல்லாத திறந்த வெளிகளும், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி வைக்கப் படும், அத்தகு இடங்களும் மன்றம் என அழைக்கப்படும். ஆங்கு மகளிர் செல்வதும், குரவை போலும் கூத்தாடுவதும் செய்வர். "மென்தோள் மகளிர் மன்றம் பேணார்" (புறம் : 375:12) மன்று தொறும் நின்ற குரவை, (மதுரைக்காஞ்சி : 615) பெரியாழ்வார் திருமொழி, மன்றில் குரவை ஆடிய திருமாலைக் குறிப்பிடுகிறது. ‘'மன்றில் குரவை பிணைந்த மால்” (1 : 2 : 2:12)

இது போலும் திறந்த வெளிகளில், அவ்வந்நிலத்துக்கே உரிய மரங்கள் வளர்க்கப்படும் பாண்டியர்க்கு உரிய மன்றத்தில் வேம்பு வளர்க்கப்பட்டு, தங்கள் தலைமாலைக்கு வேண்டும் தழை அம்மரத்திலிருந்து கொய்யப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன். ஊர் மன்றத்தே இருக்கும் வேம்பின் பெரிய கிளைகளில் உள்ள தளிர்களை உழிஞைக் கொடியோடு கலந்து கட்டிய தலை மாலை அணிந்து போருக்குப் புறப்பட்டான்.

மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடுமிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
                        - புறம் : 76 : 4-6

வேம்பு நிற்கும் ஊர்மன்றத்தில் உள்ள குளத்துக் குளிர் நீரில் மூழ்கி அம்மரத்து ஒள்ளிய தழைகளை அணிந்து கொண்டான்: “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து” (புறம்: 79 : 1-2) பல்வேறு நிலங்களைச் சேர்ந்த மன்றங்களில், அவ்வந்நிலத்துக்கு உரியவாய் நிற்கும் பல்வேறு மரங்களாவன. 1. பலா : “மன்றப் பலவின் மாச்சினை,” ‘'மன்றப்பலவின் மால்வரை” (புறம் : 128-1: 476:5) 2. விளாம்: ‘'மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்” : (புறம்: 181:1) 3. இலந்தை : “இரத்தி நீடிய அகன்றலை மன்றம் ; “ . “மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்” (புறம்: 34:12, 325 : 10-11) புன்னை : ‘'மன்றப் புன்னை மாச்சினை “ (புறம் : 49:8)

பொதியில், மன்றம் என்ற சொற்கள், ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடியிருந்து, ஊர் நிகழ்ச்சிகளைப் பேசித் தீர்க்கும் மரத்து நீழல், பொதுவாக ஆலமரத்து நீழல் என்றும் பொருள் படும். அம்மரம், ஊர்முகப்பில் நிற்கும். பிற்காலத்தவராய மாமூலனாரும் அத்தகு மரத்தடி மன்றம், இன்று இருப்பது, போலவே, தம் காலத்தும் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ‘'முன்னூர்ப் பொதியில்” (புறம்: 390:19) “தொன்முது ஆலத்து அரும்பணைப் பொதியில்" (அகம்: 251:8) நகரங்கள் எழுந்ததும், அரசர்கள், முதலில் ஒரு பொதுக்குடிசையை, அடுத்து, ஒரு பொது வீட்டை அல்லது நகர் அரங்கைக் கட்டினார்கள். அவையும் பண்டைப் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அதில், கந்து அல்லது கந்தம் எனப்படும் மரக் கிளை நடப்பட்டு, அம்மரத்துண்டில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படும் கடவுள், தண்ணுமை முழக்கத்திற்கிடையே வழிபடப் பெறும். "பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை" (புறம் : 89:7). இவ்வரங்குகளில், ஆரியர்களிடையே, நிகழ்ந்தது போலவே, பண்டைக் காலத்தில் சமய நிகழ்ச்சிகளோடு நடைபெற்றதான சூதாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கீழ்வரும் பாட்டு, அவ்வாறு பாழுற்றுக் கைவிடப்பட்ட ஒரு கோயில் பற்றிய விளக்கமாம். "வீடுதோறும் மீன் சுடுதலால் புலால் நாற்றத்தோடு கலந்து எழும் புகையின் நீண்ட ஒழுங்கு, வயலருகே நிற்கும் மருதமரத்து வளைந்த கோடுகளில் சென்று சூழ்ந்து கொள்ளும் பெரிய வருவாய் இப்போது இல்லையாகிப் போகவே, முழவு முதலாயின முழங்க, பலியிட்டு வழிபட்ட கடவுள் எல்லாம், தாம் குடியிருந்த கந்தகங்களை விட்டுப் போய்விட்டன. அதனால் பாழுற்றுப் போன ஊர் மன்றங்களில் பண்டெல்லாம், நரைதிரையுற்ற முதியோர் ஓய்வாக அமர்ந்து சூதாடுங்கால், சூதாடுகருவிகள் வீழ்ந்து வீழ்ந்து பண்ணிவிட்ட குழிகள், உடலெல்லாம் புள்ளிகளைக் கொண்ட காட்டுக் கோழிகள் இட்ட முட்டைகளால் நிறைந்துவிடும்"

"மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின். வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்,
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லில் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனம்"
                          புறம் - 52-9-16;

இது போலவே பாழுற்றுப் போன பொதியிலில் உள்ள பள்ளங்களிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை நற்றிணை குறிப்பிடுகிறது. ‘'மன்றத்துக் கல்லுடைப் படுவிற் கலுழி” (39 :3-4) அதே தொகை நூலில், ‘'முருங்கை மரத்தில், வேனிற் காலத்தில் காய்ந்து முற்றிய நெற்று போன்ற அழகு இல்லாத விரல்களையுடைய , அச்சம் ஊட்டும், பேரொலி எழுப்பும் வாயையுடைய பேய், வளப்பத்தைப் பண்டு உடையதாகி இருந்த ஊரின்கண் உள்ள, தெய்வத்தை வழிபட்டு இடும் பலிச்சோற்றை உண்ணுவான் விரும்பிப் பாழ்மன்றம் நோக்கி மோதி எழும்”, துன்பமிக்க மாலைப்பொழுது விளக்கப் பட்டுள்ளது.

“வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
                      நற்றிணை : 73 : 1-4

மேலும் பிற்பட்ட காலங்களில், ஊர்மன்றமாகப் பெரிய மாளிகைகள் கட்டப்பட்டு, மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவான் வேண்டிவரும் புலவர்களும் பிற இரவலர்களும் தங்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. மரத்தாலான பல கம்பங்களைக் கொண்ட நகர் அரங்கின் ஒரு பக்கம், பள்ளியாகப் பயன்பட்டதைப் புறநானூறு காட்டுகிறது, "பல்கால் பொதியில் ஒருசிறை பள்ளி ஆக” (புறம் : 375 : 2-3) "மன்றுபடு பரிசிலர்” (புறம்:135: 17) நகரில் உள்ள, மன்றம், பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத்திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. மன்றமும் பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத் திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. "மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்" (திருமுருகாற்றுப்படை : 226) வழக்கறுக்கும் நடுவர் மன்றமாகவும் விளங்கிய உறையூர் நகர் அரங்கம், புறநானூற்றில் (220 : 7) “மூதூர் மன்றம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றாலும் உரை ஆசிரியர் ஒருவர், மன்றம் என்பதற்குக் குதிரைகள் ஓடும் செண்டுவெளி" எனப் பொருள் கூறியுள்ளார்.

அறம் வழங்கும் ஊர்ப்பெரியவர்கள் கூடும் ஆலமரத்திலும், ஊர் முதியோர் ஓய்வு கொள்ளும் பழைய குடில்களிலும் நடப்பட்ட கந்து எனும் மரக்கழிகளிலும் இடம் பெற்றிருந்த கடவுள் எது என்னும் வினா விடை காணமாட்டாதே நிற்கிறது. இவ்வினாவிற்கு விடை காண்பதற்கு முன்னர், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் இக்காலத்திற்கு மிகமிக முற்பட்ட காலமாகிய கற்கால கட்டத்தில், ஐயத்திற்கு இடம் இன்றி வழிபடுவதற்காக என்றே கல் லிங்கங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடல் பொருந்தும். உலோகக் காலம் (வட இந்தியாவில் செப்புக் காலம், தென் இந்தியாவில் இரும்புக்காலம் தொடங்கிய பின்னரும் கல் இலிங்க வடிவங்கள் தொடர்ந்து வழிபட்டு வரலாயின. லிங்கம் போல் தோற்றம் அளிக்கும். சில பொருட்கள், ஹாரப்பா, மோகன் ஜோதரோக்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயரத்தில் அரை அங்குலத்திலிருந்து ஓர் அடிவரை வேறுபடும் சதுரங்க விளையாட்டுக்காய்கள் போலும் வடிவுடையன; இரண்டு, குறுக்கே அரை அங்குலத்திலிருந்து 3 அடி அல்லது 4 அடி உயரம் உள்ள வட்டக்கல் வடிவுடையன. "அவற்றுள் சில காணப்பட்ட சூழ்நிலையோடு, அது தொடர்பான பொருள் களின் தொகுதியினையும் இணைத்துப் பார்க்கும்போது, அவ்வுண்மைகள் வழிபாட்டு முறைக்கு உரிய, யாதோ சில பொருள்கள் அங்கு இருந்தன என்ற முடிவிற்குச் சிறு சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. அவ்வட்டக்கல், மெஸபடோமியாவில் காணக்கிடைத்த ஒரு பொருளோடு ஒருமைப்பாடுடையதான செண்டு அல்லது தண்டாயுதத்தின் தலையாக இருக்கலாம் என்ற கருத்தும் கூறப்பட்டது. ஆனால் நூலாசிரியரின் கருத்துப்படி, பலபடியாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம், வட்டக்கல், யோனி ஆகும். சதுரங்கக்காய் போலும் பொருள் லிங்கம் ஆகும் என்பதே ஆம். யோனியும் லிங்கமும், வடகோடி முதல் தென்கோடிவரை, கீழ்க்கோடி முதல் மேற்கோடி வரையான இந்தியா முழுவதும், சிவனைக் குறிக்க எல்லோர்க்கும் விளங்கும் வடிவமாகும். லிங்க வழிபாடு, ஆரியர் வருகைக்கு மிகவும் முற்பட்ட, நன்மிகப் பழைய வழிபாட்டு முறையாம் என்பதில் எவ்வித வினாவிற்கும் இடம் இல்லை.'’ என்கிறார் திருவாளர் ஜான் மார்ஷெல் அவர்கள். (Archaeological Survey of India. Annual Report. 1925-26, page:79)

தென்னிந்தியாவில், கி.பி. 500க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாடல்களில், சிவன், ஆலமர் செல்வனாகவே கூறப்பட்டுள்ளான் என்பது ஈண்டுக் குறிப்பிடல் பொருந்தும், புறநானூறு பாட்டு ஒன்று, ஆலமரத்தைக் கடவுளுக்கு உரியதாகக் கூறுகிறது. ‘கடவுள் ஆலம்'’ (1:7) வேறுசில பாடல்கள், சிவனை, ஆலில் உறையும் இறைவனாம் எனத் தெளிவாக உணர்த்துகின்றன. “ஆலமர் செல்வன்'’ (சிறுபாணாற்றுப்படை: 1:97; கலித்தொகை : 81:9:83:45), "ஆல்கெழு கடவுள்” (திருமுருகாற்றுப்படை : 256). இப்பாடல்கள், ஆரியக் கருத்துகள், தமிழ்ப்பாடல்களிடையே இடம் பெறத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்தவை என்றாலும் கந்து எனப்படும் கம்பத்தில் இடம் பெற்ற கடவுளும், ஆலமரத்தில் இடம் பெற்ற கடவுளும் ஒன்றே. பண்டைத் தமிழ் இலக்கிய காலத்தில் சிவன், ஒரு நிலத்தின் தெய்வமாக இடம் பெறவில்லை. அவன் ஒரு சிறு தெய்வமே முருகனுக்குத் தந்தையாக உணர்ந்து முடிவாக, ஐந்து ஆறு நூற்றாண்டுகளில், சைவ ஆகம நெறி, தமிழ்நாட்டில் பரவியபோது பெருந்தெய்வம் ஆயினான். வட இந்திய ருத்ரன், தொடக்கத்தில், ஒரு மலைநாட்டுத் தலைவன் மகளை மணந்து கொண்ட ஒரு மலைக்கடவுளாவன். ஆகவே அவன் தங்கள் தவ ஒழுக்கத்தை மேற்கொள்வான் வேண்டி - மலைகளில் சென்று தங்கும் யோகியர்களுக்குக் கடவுளாகி விட்டான். தென்னாட்டிற்கு அவன் குடிபெயர்ந்ததும், சிவவழிபாடு சிறந்து வளர்ச்சியைப் பெற்று விட்டது. ஆனால் அது நிகழ்வதற்கு முன்னர், கிடைக்கக் கூடிய நனிமிகப் பழைய தமிழ்ப்பாடல்களில் காணப்படுவது போல், தமிழ் நாட்டில், அவன் ஆலமரத்துக் கடவுளாகவே இருந்துள்ளான், ஒருவேளை, ஆலமரத்து நிழலில் ஒரு லிங்கம் நடப்பட்டிருக்கக்கூடும். அங்ஙனம் இல்லை என்றால், அவன் ஆலமர் செல்வனாக ஆகியிருக்க முடியாது. மருதம், இலந்தை, நாவல் போலும் மரத்தடிகளிலும், லிங்கம் வைக்கப்பட்டது. சிவ வழிபாடு பெருகி, அம்மரங்களை உள்ளடக்கிச் சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கிய ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவையெல்லாம் புகழ் பெற்ற வழிபாட்டிடங்களாகி விட்டன. இப்போது தென்னாட்டில், மிகவும் புகழ் பெற்று விளங்கும் சிவன் கோயில்களில், இவையும் இடம் பெற்றுள்ளன. புனித மரங்களிலிருந்து வெட்டப்பட்டு, இம்மரம், அம்மரத்தடி லிங்க வடிவம் ஆகிய இரண்டின் இறைத்தன்மையும் கொண்டுவிட்ட கோயில் குடில்களில் நடப்பட்டு, கந்து எனப்படும் அக்கழிகளும், லிங்கமாகக் கருதியே நடப்பட்டிருக்கக் கூடும்.

நகரங்களின் தோற்றம்

ஒரு நிலத்துப் பண்டங்களைப் பிற நிலங்களின் பண்டங்களுக்கு விலையாகப் பண்டமாற்றம் செய்து கொண்டதன் விளைவாகவே, தொடக்கத்தில் நகரங்கள் தோன்றலாயின. கடற்கரை நாட்டின் பொருளாம் உப்பு, ஏனைய நாடுகளில், இன்றியமையாப் பொருளாகிவிட்டது. அதனால் நனிமிகப் பழங்காலத்திலிருந்தே, உப்பைச் சில சமயம் உலர்ந்த மீனையும் ஏற்றிக் கொண்ட, தள்ளாடித்தள்ளாடிச் செல்லும் கட்டை வண்டிகளின் வரிசை, மண் சாலைகளைக் கடந்து, மலை நாட்டின் அடிவரைக்கண்ணதான உள்நாடுகளுக்குச் செல்லலாயின. உப்பு வண்டிகளும், உப்பு வணிகரும் புலவர்களால், அடிக்கடி கூறப்பட்டனர். "குன்றின் மீது தோன்றும் உப்பு வணிகர் தலைவன்", "குன்றில் தோன்றும் குலவுமணல் சேர்ப்ப" (அகம் : 310:10) (குறிப்பு : 'குலவுமணல்" என்ற தொடரைக் குவ, உமணர்" எனச் சொற்சிதைவு செய்து அவ்வாறு பொருள் கொண்டுள்ளார். அது தவறு. குன்றுபோல் தோன்றும், மணல்மேடுகள் நிறைந்த கடற்கரை, தலைவனே என்பதுதான் அத்தொடர் உணர்த்தும் பொருளாகும். அதே அகத்தில், பாலையில் பயணம் கொண்ட உப்பு வணிகர், ஆங்கே மூன்று கற்களால் செய்து கொண்ட அடுப்பு உணர்த்தப்பட்டுளது. “உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பு” (அகம் : 119 : 8). அப்பாக்கள் கூறும் விளக்கத் திலிருந்து, பண்டங்கள் வண்டி வண்டியாக, ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு போகப்பட்டன என்பது தெரிகிறது. கடலைச் சார்ந்த நிலத்தில், கழிநீரால் விளைந்த உப்பை ஏற்றிக் கொண்டு, மலைநாட்டை நோக்கிச் செல்லும் வண்டியின், ஆரக்கால்களையுடைய சக்கரம் பள்ளத்தில் பாய்ந்துவிடும்போது, தன் உரங்கொண்டு அத்தளர்ச்சி தீர்த்து ஈர்த்துச் செல்லும், பெரும்பாரம் தாங்கவல்ல மிக்க வலியுடைய காளைக்கு ஓர் அரசன் ஒப்புக் கூறப்பட்டுள்ளான்.

"கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்”
                          - புறம் : 60 : 6-9

இடைவழியில் முரிவுற்றுப் போயின், ஆங்கு உதவுவதற்காகத் தனியாக ஓர் அச்சு உடன் கொண்டு செல்லுமளவு வண்டிகளில் பெரும்பாரம் ஏற்றப்படும்; அவ்வாறு தனியே எடுத்துச் செல்லும் அச்சு ‘'சேம் அச்சு” எனப்படும். எருதுகள் இளையன: நுகத்தடியில் இதற்கு முன் பூட்டி அறியாதன. வண்டியிலோ பண்டப் பொதிகள் மிகப் பெருமளவில் ஏற்றப்பட்டுள்ளன. மேடு நோக்கி ஏறும் போதோ, பள்ளம் நோக்கிப் பாயும் போதோ ஏதேனும் ஆகக் கூடும் அதை முன்கூட்டி அறிதல் இயலாது. எதற்கும் தனியே ஓர் அச்சு உடன் கொண்டு சேரல் நல்லது என எண்ணும் உமணர், உள்ள அச்சின் கீழே, வேறோர் அச்சைத் தனியே பிரித்துக் கொண்டு செல்வர் என்கிறது புறநானூற்றுப் பாட்டு ஒன்று.

‘எருதே இளைய நுகம்உண ராவே; :
சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே;
அவல் இழியினம், மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார்? என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம் அச்சு”
                 புறம் : 102 : 1-5

உப்பு வண்டிகள் ஒழுங்காகச் செல்வது, இளம் சிறார்களுக்குக் களிப்பூட்டும் கண்காட்சியாம். இனிய நீர் நிறைந்து, மிக்க அழகுடையதான சுனையில் பூத்த செங்கழுநீரின் மொட்டு அவிழ்ந்த மலர்ந்த மலர்களைப் புற இதழ்களை நீக்கிவிட்டு முழு மலர்களால் ஆன ஆடை அசையும் அல்குலையும், பேரழகு வாய்ந்து அருள் ஒழுகும் கண்களையும், இனிய இள நகையினையும் உடைய இளமகளிர், புல் ருெங்க முளைத்துக் கவர்த்த வழியினையும், நெருங்க முள்வைத்துச் செய்த வேலியினையும், பஞ்சு நிறைந்த முற்றத்தினையும் உடைய வீட்டின் ஒருபால் உள்ள பீர்க்கங் கொடியும், சுரைக்கொடியும் படர்ந்து கிடக்கும், ஈச்ச மரத்து இலைகளையும் கொண்ட குப்பை மீது ஏறி நின்று, உமணர் வண்டிகளை, ஒன்று இரண்டு என எண்ணிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றுளது.

"தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பு அவிழ்முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்துஎழில் மழைக்கண்; இன்னகை மகளிர்,
புன்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சு முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலைக் குப்பைஏறி, உமணர்
உப்பொய் ஒழுகை எண்ணும்"
                 - புறம் : 116: 1-8

ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கு உப்பைக் கொண்டு செல்வது இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்றது என்றால், மற்றப் பண்டங்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம். அவ்வாறே, அரிசியும் பருத்தி ஆடைகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வறண்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. பயறு வகைகளும் பால்படு பொருள்களும் முல்லைப் பகுதியிலிருந்து நன்செய் நிலப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. தினை, தேன், மற்றும் மலைபடுபொருள்கள், மற்றப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இப்பண்டங்கள் முல்லை, குறிஞ்சி போலும் மேட்டு நிலமும் தாழ்வான நிலப்பரப்பும் இணையும் இடங்களில், பெருமளவில் பண்டமாற்றம் செய்யப்பட்டன. அத்தகு பண்டமாற்றுமிடங்களெல்லாம் பெருநகரங்களாக வளர்ந்துவிட்டன.

ஆகவே, வறண்ட நிலமாம் புன்செய் நிலப்பகுதியிலும், நீர்வளம் மிக்க நன்செய் நிலப்பகுதியும் இணையும், அதாவது, ஆறு, தன் இடைநிலைப் போக்கைக் கைவிடுத்து, சமநிலத்தில் அமைதியாக ஓடத் தொடங்கிய இடத்தில், முதன்முதலாக நகரங்கள் எழலாயின. சோழர் தலைநகர் மதுரை ஆகிய பழம்பெரும் நகரங்களின் தோற்றத்திற்கு இதுவே காரணம். இந்நகரங்கள், பருத்தி விளையும் பகுதிகளிலிருந்து பருத்தி கொண்டு வரப்பட்டு, எங்கு ஆடையாக நெய்யப்படுமோ, அந்த இடங்களில், இன்றே போல், பண்டும், ஆடை, நெசவுக்குப் பெயர்பெற்றிருந்த இடங்களில், இடம் பெற்று உள்ளன. இவ்விடங்களில் வளர்ந்து பெருகிய வாணிகம், தமிழரசர்களின் தலைநகராம் பெருமையை, அந்நகரங்கள் தொடக்கத்திலேயே பெறத் துணை புரிந்தன. இந்நகரங்கள் குறித்த விளக்கம் பழம்பாடல்களில் இடம் பெறவில்லை.

முக்கிய துறைமுகங்கள்

இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெளிநாட்டு வாணிகம், அடுத்த நூற்றாண்டில் பெரிபுளூஸ் ஆசிரியராலும், தாலமியாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்ட எண்ணற்ற துறைமுகங்கள் இடம் பெறத் துணைபுரிந்தது. முந்திய அதிகாரத்தில் எடுத்துக் காட்டிய பெத்த ஜாதகா கதையிலிருந்து, கி.மு. முதல் ஆயிரத்தாண்டில், காவிரிப் பூம்பட்டினம், சோழ அரசர்களின் மிகப் பெரிய துறைமுகமாகவும், அவர்களின் இரண்டாவது தலைநகராகவும் திகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டோம். சமஸ்கிருத எழுத்தாளர்களால் பாண்டியரின் நுழைவாயில் எனும் பொருளில், ‘'பாண்டிய கவாடம்” என அழைக்கப்பட்ட கொற்கை, பாண்டியர் தலைநகராம் பெருமையை மதுரையிலிருந்து பறித்துக் கொண்டு, பாண்டியர் தலைநகர், அண்மையில், மதுரைக்கு மாற்றப்பட்டது எனத் தாலமி கூறும் காலம் வரை, தக்க வைத்துக் கொண்டிருந்தது. கொற்கையின் முக்கியத்தும், பண்டையோரால் பெரிதும் புகழப்பட்ட முத்து வாணிகத்தின் நிலைக்களமாய் உண்மையிலேயே இடம் பெற்றது. சேரர்களின் முக்கியத் துறைமுகங்கள். மேற்கு ஆசியாவுக்கும், எகிப்துக்கும், அவற்றிற்கு அப்பாலும், மிளகையும், மற்றும் மணம் தரு உணவுப் பண்டங்களையும் ஏற்றுமதி செய்த முசிறியும், தொண்டியுமாம்.

அரசர்கள்

நாகரீக வாழ்வு காணா அப்பழங்காலத்தில், அரசனுக் கான நிர்வாகப் பணிகள் மிகச்சிலவே; ஆட்சி முறையில் ' தேவைப்படும் ஒரு சிலவும், ஊர் அறங்கூர் அவைகளால், நன்மிகப் பழைய முறைக்கேற்ப நிறைவேற்றப்பட்டன. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்கள், ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் நாடு பிடிப்பதற்காக என்று இல்லாமல் தங்கள் வீரத்தை பறைசாற்றவும், பிற அரசர்களைக் காட்டிலும், தாமே பெரியவன், பேரரசன் என்ற நிலையை நாட்டவுமே நடைபெற்றன. அம்மூன்று நாடுகளின் எல்லைகள் ஒரு நிலையிலேயே இருந்தன. களத்தில் வெற்றி கண்டிருந்தாலும் எல்லைகள் மாற்றம் பெறவில்லை. அமராவதி ஆறு, காவிரியோடு கலக்கும் மூன்று முக்கோணங்களின் பொதுவான முனையில் சந்திக்கின்றன. அந்த இடத்தில், மூவேந்தர்களின் வழிபாடுகளை ஒரு சேரப் பெற்றவளும், அன்புக்கடவுள் - வளம் - வழங்கும் கடவுள் என்றெல்லாம் பாராட்டப் பெறுபவளுமான செல்லாயி என்ற பெண் தெய்வத்துக்கு, ஒரு சிறு கோயில் நிற்கிறது. அக்கோயில் நிற்கும் இடம், எனக்கு உரியது, என யாரும் வாதாட மாட்டா ஒருவர்க்கே உரிய இடமாக உளது. அவ்விடத்தில் காவிரியோடு கலக்கும், "கரைபோட்டானாறு" என்ற பொருள் பொதிந்த பெயருடைய ஒரு சிற்றாறு, இரு நாடுகளுக்குமிடையே எல்லை வகுத்து, மேற்குக் கடற்கரை வரை நீண்டிருக்கும் சோழ நாட்டிலிருந்து பிரிக்கிறது, காவிரியில் அக்கரையில், பண்டு இருந்ததற்கான அடிச்சுவடு இன்றும் காணப்படும், செயற்கையாலான ஒரு மேடு, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையைக் குறிப்பிடுகிறது. (புறநானூறு 47 ஆம் எண் செய்யுட்குக் கீழ்வரும் கொளுவிலும், மணிமேகலை, 19 ஆம் காதை 126 ஆம் வரியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி இறந்த காரியாறே, இந்தக் கரை போட்டானாறாதல் கூடும். பின்னர்க் கூறிய மணிமேகலைப் பகுதியில் சோழ நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள காரியாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்று குறிப்பிடத்தக்கது) சோழ நாட்டின் தலைநகர், உறையூர், ஆற்றின் கீழ்ப்பகுதியில் உளது. சேர நாட்டின் தலைநகர் கரூர் ஆற்றின் மேற்பகுதியில் உள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை, ஆற்றிற்குத் தெற்கில் உளது.

அரசர்களின் தலையாய பணி, நாட்டை ஆடுமாடுகளைக் கொள்ளையடித்துச் செல்பவரிடமிருந்து காத்தல், கால்நடை கள், ஒன்று, மறவர், கள்ளர்களின் இனத்தலைவர்களாம் கொள்ளைக் கூட்டத்தலைவர்களால் கடத்திச் செல்லப்படும். அல்லது, அந்நாட்டு அரசனோடு விடுத்த அறைகூவலாக, மற்றொரு நாட்டு அரசனால் கடத்திச் செல்லப்படும். இவ்விரண்டில் எது குறித்துப் போர் மேற்கொண்டாலும், அரசன் தன் குலத்துக்கு உரிய மாலையோடு, சோழனாயின், ஆத்திமாலையோடு, பாண்டியனாயின் வேப்ப மாலையோடு, சேரனாயின் பனைமாலையோடு, தான் குறித்துச் செல்லும் போருக்கு உரிய அடையாள மாலையையும், அணிந்து செல்வர். நாடு காவலை அடுத்து அரசனுக்கு உரிய பிறிதொரு தலையாய கடமை, தம் பாக்கள் மூலம் தன் புகழ் பாடும் புலவர் போலும் இரவலர்களை அழைத்துத் தன்னைச் சூழ வைத்துக் கொண்டு, அவர்கள் பாராட்டு கேட்டு மகிழ்ந்து பரிசாக, நல்ல உணவும், மதுவும், நிறைபொருளும் கொடுத்தல். கீழ்வரும் செய்யுள், சிறிது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த தேயாயிலும், அரசர்களின் இக்கடமைகளைத் தெளிவாக உணர்த்துகிறது. அவையே, அக்காலத்தும் இருந்த உண்மையான நிலையாகும். "குறையாத வண்மையும், பகை அழிக்கும் பேராண்மையும் வாய்ந்த தலைவ, உன் படையைச் சேர்ந்த யானைகள் மலைகள் போல் காட்சி அளிக்கின்றன. நின் நாற்படையின் ஆரவாரப்பேரொலி, கடல் அலைபோல் முழுங்குகிறது : கூரிய முனையை உடைய உன் வேற்படை மின்னல் போல் ஒளி வீசுகிறது. இத்தகு பெரு நிலையால் உலகத்துப் பேரரசர்களெல்லாம் உளம் ஒடுங்குவதற்கு ஏதுவாய பேராற்றலோடு திகழ்கின்றனை : நினக்கோ நின் நாட்டிற்கோ வரக்கூடிய குற்றம் எதுவும், இல்லையாயிற்று; இந்நிலை, உன் குடிக்கு வழிவழியாக வரும் பெருமையாகும். அதனால், உலகத்து ஆறுகள் எல்லாம், மலைகளிலிருந்து வீழ்ந்து விரைந்து கடலை நோக்கி அடைவது போல், புலவர்களும் இரவலர்களும் உன்னை நோக்கி வருவாராயினர்".

"ஆனா ஈகை, அடுபோர் அண்ணல்!
யானையும் மலையின் தோன்றும்; பெரும!
நின் தானையும் கடல் என முழங்கும்; கூர்நுனை,
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலைபணிக்கும் ஆற்றலை; ஆதலின்
புரைதீர்ந்தன்று; புதுவதோ அன்றே;
..........................
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே".
                 (புறம் : 42 : 7-6; 19-21)