ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/மக்கள் வாழ்க்கை கி.பி. முதல் ஐந்நூறு ஆண்டுகள்

13. மக்கள் வாழ்க்கை கி.பி. முதல் ஐந்நூறு ஆண்டுகள்


பழந்தமிழர் முறை இன்னமும் வலுவாக நடைபெற்றது


தங்களிடையே பிராமணர்கள் வாழத் தொடங்கிவிட்ட நிலையிலும், அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் ஆரிய நாகரீகத்தைத் தமிழ் நாட்டில் புகுத்த முயற்சி மேற்கொண்டுவிட்ட நிலையிலும், மக்களில் பெரும்பகுதியினர், ஆரிய நாகரீகம், தங்களிடையே இடம் பெறாதது போலவே வாழலாயினர். பழங்காலத்தில், தங்கள் மூதாதையர் வாழ்ந்த அதே முறையில் வாழ்ந்தனர்; காதல் கொண்டனர். அவர்களின் தொழில்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றில், முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினர். அதாவது, அவை சிறிதும் மாறுபடவேயில்லை. கீழே கொடுத்திருக்கும் எடுத்துக் காட்டுக்கள், கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய, எளிய சிற்றூர் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளப் படிப்பவர்க்கு துணை நிற்கம். சில நூற்றாண்டுகள் கழித்துச், சமஸ்கிருதக் கற்பனைப் பாடல்கள், தமிழர் அறிவை அடிமை கொண்டு, அவர்களின், அழகிய இயற்கையோடியைந்த இனிய பாடல்களை அழிக்கத் தலைப்பட்டபோது கைவிட்டுவிட்ட தங்களைச் சூழ உள்ள எளிய இயற்கையோடியைந்த இனிய பாடல்களை அழிக்கத் தலைப்பட்டபோது கைவிட்டு விட்ட தங்களைச் சூழ உள்ள எளிய இயற்கைக் காட்சிகளிலிருந்தே தம் அகத்தூண்டு தலைத், தாம் பெற்றிருந்த அந்நிலையைச் சமஸ்கிருத நாகரீகத்தோடு தொடர்பு கொண்டுவிட்ட அந்நிலையிலும் தமிழ்ப் பாடல்கள் பெற்று வந்தன என்பதையும் அவை உணர்த்தும்.

மலை நாட்டில் உணவு உற்பத்தி

மக்களின் முக்கியத் தொழில், உணவு உற்பத்தி. அது பல இடங்களில் விளக்கப்பட்டுளது. “வேங்கை மரங்கள் நிறைந்த, வெப்பம் மிக்க சிவந்த மேட்டு நிலத்தில், கார் காலத்துப் பெருமழையால் ஈரப்பக்குவப்பட்ட நிலத்தைக், கீழ்மண் மேல்மண்ணாகி நன்கு புழுதிபடுமாறு பலசால் உழுது, விதைத்து, முளைத்து இளம்பயிராக இருக்கும் போது, காற்று உள் நுழைய வழி செய்யவும், வருத்தமின்றிக் களை அகற்றவும், பயிர் நன்கு தழைப்பதற்கு இடம் தருமாறு, நிலத்து இறுக்கத்தை நெகிழ்விக்கவும் தாளி அடித்து, அது செய்ததன் பயனாய், பயிர் நன்கு செழித்து வளர்ந்திருக்கும் போது களை அகற்றிவிடவே இலைகள் தழைத்துப் பெருகி, அண்மையில் முட்டை இட்ட பெண்மயிலின் அழகிய தோகை போலும் தோற்றம் வாய்ந்த கரிய தண்டுகள் நீண்டு, ஒரு சேரக் கதிர்விட்டு, கதிர்களின் அடியிலும், நுனியிலும் உள்ள மணிகள் ஒருசேர முற்றிக் காய்த்த வரகை அறுக்கவும், தினையைக் கொய்யவும், எள் கறுத்து எள்ளினங்காய் முற்றவும், வளமான கொடிகளில் வெள்ளவரைக் கொத்து, கொய்யும் நிலை எய்த, நிலத்தில் புதைத்துப் புளிப்பேறப் பண்ணிய மதுவைப் புல் வேய்ந்த சிறிய குடிசைகளில் அனைவர்க்கும் வழங்க, கொதிக்கும் நறு நெய்யில் வறுகடலை துள்ள, சோறு ஆக்கி முடிக்கும் அரிய காட்சி ஒரு பாட்டில் விளக்கப்பட்டுளது.

"வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்,
பல்லி ஆடிய, பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின், தோள்தொலிபு நந்தி,
பெண்மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து,
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினை கொய்யாக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளரிக்காய் கோட்பத மாசு,
நிலம் புதைப், பழுனிய மட்டின் தேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறுநெய்க் கடலை இசைப்பச் சோறு அட்டு"
                                புறம் : 120 : 1-74

மலைநாட்டில், உழுது உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய, இன்றியமையாத ஒன்று அன்று. உழுவது வேண்டாதே, உணவுப் பொருள் கிடைக்கும் நிலை கீழ்வரும் , பாக்களில் விளக்கப்பட்டுளது. “உழுவர் உழுது விளைவிக்க” வேண்டாமல், தாமே விளையும் உணவுப் பொருட்கள் நான்கு உள.. முதலாவது, சின்னஞ்சிறு இலைகளைக் கொண்ட மூங்கில் நெல், இரண்டாவது, பலா, இனிய சுவையுடைக் கனிகளைக் காய்த்துத் தொங்கவிடும். மூன்றாவது, கொழு கொழு என வளர்ந்திருக்கம், வள்ளிக் கொடி, கிழங்குகளை மண்ணுள் விட்டிருக்கும்; நான்காவது, அழகிய நிறம் வாய்ந்த, குரங்குகள் பாய, மலைகள், தன்னிடை கட்டப்பட்டிருக்கும் அடைகளிலிருந்து தேனைச் சொரியும்”

"உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே தீஞ்சுவைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடும் குன்றம் தேன் சொரி யும்மே”..
                           புறம் : 109 : 3-8

"கிளைகள் தோறும், மலை முகடுகள் தோறும் தேனடைகள் கட்டப்பட்டுத் தொங்க, பலா முதலாம் மரங்களில் பழங்கள் குலைகுலையாகத் தொங்க, மலைகளிலிருந்து அருவிகள் மாலை போல் உருண்டோடி வர, கொல்லைகள் . தோறும் வரகு, சாமை, தினைபோலும் பதினாறுவகைக் கூலங்கள் பெருகிவிளைய, இம்மலைநாடு, எக்காலத்தும் பெருவளம் உடையது என, அதன்கண் பல்லாண்டு வாழ்ந்து, அதைப் பிரிந்து போக நேர்ந்தபோது வியந்து பாராட்டும் பெருமையுடையது”..

“பிரசம் தூங்கப், பெரும்பழம் துணர
வரை வெள் ளருவி, மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம் புலம்புக, நாளும்
மல்லற்று அம்ம இம்மலைகெழு வெற்புஎனப்

பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாடு"
                 - நற்றிணை : 93: 1-5

வேடன் வாழ்க்கை

மலை நாட்டு வழியில், இருளில் வருவதால் நேரும் இடையூறுகளுக்கு ஆளாகும் வகையில் இரவில் வாரற்க என்று, ஓரிளம் பெண், தன் காதலனுக்கு எடுத்துக் கூறும் அறிவுரையினை நினைவூட்டும் வகையில், வேடன் ஒருவன் வாழ்க்கையில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை, ஒரு புலவர் விளக்கியுள்ளார். "சிலிர்த்து நிற்கும் மயிர்கள் அடங்கிய கழுத்தினை உடைய ஆண்பன்றி, உணவின்மை யால் தோலாய்வற்றி இளைத்துவிட்ட பெண் பன்றியுடன் சென்று, முற்ற வளர்ந்து தினைக் கதிர்களை அளவின்றித் - தின்று அழித்துவிட்டது கண்ட கானவன், மலைவழியில், செல்லுதற்கு அரிய புழை அருகே பதுங்கியிருந்து, அம்பு. எய்து கொன்ற, வெள்ளிய கொம்புகளைக் கொண்ட அந்த ஆண் பன்றியை அணி செய்து கொண்ட கரிய கூந்தலை உடைய அவன் மனைவி, அறுத்துத், தன் சுற்றத்தார் வீடுகளுக்கெல்லாம் சென்று பகுத்துக் கொடுக்கும் உயர்ந்த மலை நாட்டுக்கு உரிய தலைவனே கடுஞ்சினம் கொண்ட களிற்றியானை, புலியின் வருகையை எதிர்நோக்கிக் காத்து நிற்கும் இரவில், நீ இங்கு வருதலை, நீ அஞ்சுகின்றாயல்லை; ஆனால், நான் பெரிதும் அஞ்சுகின்றேன்; ஆகவே, பாம்பு அடங்கியிருக்கும், ஈரம்பட்ட புற்றைக் கரடிக் கூட்டம் கார்மேகம் போலச் சூழ்ந்து கொண்டு, பறித்து எடுக்கும், மலையகத்துச் சிறுவழியில் இனி வாராதே"

"பிணர்ச்சுவல் பன்றி, தோல்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல்லதர் அருப்புழை அல்கிக், கானவன்
வில்லில் தந்த வெண்கோட்டு ஏற்றைப்
புனையிரும் கதுப்பின் மனையோள், தொண்டிக்
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட!
உரவுச்சின வேழம், உறுபுலி பார்க்கும்

இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்; அரவின்
ஈரளைப் புற்றம் காரென முற்றி,
இரைதேர் எண்கு இனம் அகழும்
வரைசேர் சிறுநெறி, வாரா தீமே;”
                    - நற்றிணை : 336

ஆற்றுப்பள்ளத்தாக்கில்

ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலத்தில் எழுந்த ஒரு பாடல்:

"பொய்கையின் மீன் தேர்ந்துண்ட நாரைகள், நெற்கதிர்ப்பு போரில் சென்று உறங்கும். நெய்தல் வருமளவு வளத்தால் அழகு பெற்ற வயலில், நெல் அறுவடை செய்யும் உழவர், முகை அவிழ்ந்து மலர்ந்த இதழ்களையுடைய ஆம்பலின் அகன்ற இலையாலான தொன்னையில், மதுவுண்டு, தெளிந்த கடலலை எழுப்பும் சீரான ஒலிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடி மகிழும், நன்செய் வளமிக்க நாட்டிற்கு உரிய வேந்தே பழம் : உண்ணுவான் விரும்பி, ஆகாயத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலிக்கப் பேரோலி எழுப்பியவாறே சென்று, ஆங்குள்ள பழமரங்கள், பருவம் கழிந்து போகக், காய்ப்பு மாறிவிட்டது கண்டு ஏமாந்து, வருந்தி, வறிதே மீளும் பறவகைளைப் போல, வருவார்க்கு வரையாது வழங்குவன் என்ற உன் புகழ்துரத்த வந்து, உன் புகழ்பாடும் நான், வறிதே மீளக் கடவனோ ?”

"பொய்கை நாரை, போர்வில் சேக்கும்
நெய்தலம் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருன!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப்,
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல,
நின் நசைதர வந்து, நின் இசைநுவல் பரிசிலேன்

வறுவியேன் பெயர்கோ?"
                (புறம் : 209 :1-12)

ஒரு தொழில் நடைபெறும் நிலத்தின் பொதுவான குறிக்கோள்களும், மிகமிக எளிய நிகழ்ச்சிகளும், தமிழ்நாட்டுப் புலவர்களிடமிருந்து, அப்புலவர்கள், பிற்காலச் சமஸ்கிருத இலக்கியக் கற்பனைப் பாடல்களின் செல்வாக் கின் அழுத்தமான பிடியுள் சிக்கிக் கொள்வதற்கு முன்னர், நன்மிக இனிய பாடல்களைப் பெற்றிருந்தன. இவ்வாறு பாடுகிறது ஒரு பாட்டு:

"மடை அடைத்திருந்த பல்லாற்றானும் மாண்புற்ற குளத்து நீர், மடைதிறந்துவிட்ட வழி, அக்குளத்தினின்றும், அந்நீரோடு புறம் போந்து, கால்வாயை அடைந்து, சென்று திரும்பிய, பெரிய கொம்பினையுடைய வாளைமீன், அக்கால்வாயிலிருந்து, சேறுபட்டுக் கிடக்கும் வயலுள் புகுந்து ஓடி, ஆங்கு உழுதுகொண்டிருக்கும் எருமைக் கடாக்களின் காற்சேறுபட்ட புள்ளிகளையுடைய மேற்புறத்தோடு, நிலத்தைச் சேறுபட மாறிமாறி உழும் உழவர்களின் கைக் கோலுக்கும் அஞ்சாது செருக்குற்று, சேற்றின் மேல் வரப்பு ஓரமாகவே ஓடி, மேற்கொண்டு போகமாட்டாது தடையுற்றுப் போய், அவ்வரப் படியிலேயே புரளத் தொடங்கும்.

"மாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் ,
கால் அணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை,
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடிப்
பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சால் உழவர் கோல்புடை மதரிப்
பைங்கால் செறுவின் அணைமுதல் புரளும்
                  நற்றிணை : 340 8-8

ஆற்றுப் பள்ளத்தாக்கு வாழ்க்கைமுறை பற்றிய இன்னொரு செய்யுள் இதோ: "செந்நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போன்ற செந்தாமரை மலர்களின் இடையிடையே, கதிர் முற்றிய செந்நெல்லின் தாளை அரிந்து அரி அரியாகப் போட்டுப் பணி முடிந்த உழவர், தங்களுக்குக் குடங்களைக் கொண்டுவரும் வண்டி, சேற்றில் ஆழ்ந்துவிடின், அதுபோக்கச் சிறந்த கரும்புத்தடிகளை அடுக்கி இடை யெடுக்கும், பாயும் புனலால் வளம்மிக்க ஊரின் தலைவனே! நெற்பொரிகள் போலும், புன்கம்பூ மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற நீர்த்துறைகள் அழகு பெற , ஒளிவீசும் நெற்றியும், நல்மணம் மிக்க மலர்கள் சூடிய, காண்பதற்கு இனிமை தரும் திரண்ட கூந்தலும், மாவடுக்கள் போலும் கண்களும், மார்பில் அசையும் முத்துச் சரமும், இவற்றால் பூம் நுண்ணிய அழகும் உடையாளோர் இளம் பரத்தையொடு, இடையறாது ஓடிக்கொண்டே இருக்கும் புனலில், நேற்று விளையாடி மகிழ்ந்தனை என்று ஊரார் பலரும் கூறுவர். ஆகவே, உறுதியாக, நீ, நாணம் இழந்தவனே”.

"எரி அசைந்தன்னை தாமரை இடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் லினைஞர்,
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்றுரின்,
ஆய்கரும்பு அடுக்கம் பாய்புனல் ஊர:
பெரிய, நாணிலை மன்ற; பொரி எனப்
புன்கு அவிழ் அகன்றுறைப் பொலிய, ஒன்துதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்,
மாழைநோக்கின், காழ் இயல் வனமுலை
எஃகுடை எழில்நலத்து ஒருத்தி யொடு, நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை”.
                   அகம் : 116 : 1-10

கடற்கரை நிலப்பரப்பில்

கடற்கரை நிலப்பரப்பாம் நெய்தல் நிலத்தின் முக்கியத் தொழில், மீன்பிடித்தல், அத்தொழில், பாடல் புனையும் தம் புலமைக்கு ஏலா இழிவுடைப் பொருளாம் என்று புலவர் கருத வில்லை , ‘'கதிரிட்டு முறுக்கித் திருத்தமாகச் செய்யப்பட்ட வலிய கயிற்றால் பின்னப்பட்ட “ பெரிய பெரிய மீன்பிடி வலைகளை, இடிபோல் முழங்கும் அலைகள் ஓயாக் கடலில் இரும்பொருட்டு, அவ்வலைகள் நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பாகர்களால் பிணித்துக் கொண்டு செல்லப்படும். அடக்குதற்கு சுரிய களிற்றைப் போலப், பரதவர் செலுத்துவர் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் புதுமணல் பரந்த கானற்சோலையில், புன்னை, தன் நுண்ணிய மகரந்தப் பொடிகளை; ஓயாது வீசிக் கொண்டேயிருக்கும். கீழ்க் காற்று வந்து மோதுந்தோறும், நாரைகளின் வெண்ணிற முதுகில் தூவித் தூர்க்கும் தெளிந்த கடற்கரைக்கண் நிற்கும் கண்டல் மரங்களை வேலியாகக் கொண்ட ஊர்"

"வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை
இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறையரும் களிற்றின், பரதவர் ஒய்யும்
போதவிழ், புதுமணல் கானல் புன்னைநுண் தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும், குருகின்
வெண்புறம் ஓசிய வார்க்கம், தெண்கடல் கண்டல் வேலிய உர்".
                                  - நற்றிணை : 74 : 1-4 : 6-10

பின்வரும் அழகிய செய்யுளில், ஒரு மீனவப் பெண் தன் உறவினர், விரைந்து வீடு திரும்பமாட்டார் என்பதைக் கூறித், தன் காதலனைத் தன் மனையில் இரவு தங்கிச் செல்லுமாறு அழைக்கிறாள். "கீழ்க்கடலிலிருந்து எழுந்து, நல்ல செந்நிறக் கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதை ஒளிமயமாக்கிவிட்ட ஞாயிறு மேற்கு மலையில் மறைந்துவிடும், துன்பத்தைத் தூது போல் முன்போக்கிப் பின்னர் வந்து தங்கிவிட்ட துயர்தரு மாலைப் பொழுதை, ஒளிவீசும் வளை அணிந்த மகளிர் தத்தம் மாளிகைகளில், எதிர்கொண்டு வரவேற்க, மீன் கொழுப்பை உருக்கி எடுத்த நெய்வார்த்து ஏற்றிய ஒளிவிளக்குகளின் பேரொளி வீசும் நீல நிறக்கடலில் எழும் அலைகள் மோதும் கரையிடத்தே உள்ள, ஆரவாரப் பேரொலி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் எம் பாக்கத்தில் இன்று இருந்து, எம்மனையில் எம்மோடு தங்கியிருப்பின், உனக்கு ஏதேனும் குறபைாடு உளதாமோ? சிவந்த நூலால், வளைத்து வளைத்து முடியிட்டுச் செய்த அழகிய வலை கேடுற்றுப் போமாறு அறுத்துக் கொண்டு ஓடிவிட்ட, எதிர்ப்படும் எதையும் கொல்லவல்ல சுறாமீனைத் தம் வல்லமையெல்லாம் காட்டி, அகப்படுத்திக் கொள்ளாது எம் சுற்றத்தார் வறிதே வருவார் அல்லர். ஆகவே தங்கிச் சென்மோ"

"குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப்
பகல்கெழு செல்வன் குடமலை மறையப்
புலம்புவந்து இறுத்த புன்கண் மாலை
இலங்குவளை மகளிர் வியன்நகர் அயர,
மீன்நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண்சுடர்,
நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக்
கரைசேர்பு இருந்த கல்என் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ? தெய்ய; செங்கால்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வா ரலரே”
                      நற்றிணை : 215

நெய்தல் நிலத்து மக்களின் வாழ்க்கை வாய்ப்புகள், ஒரு பாட்டில் விளக்கப்பட்டுள்ளன. "நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர், செங்கதிர் பரப்பிக் காயும் ஞாயிற்றின் வெயில் வெப்பம் தாங்கமாட்டாத போது, தெளிந்த கடல் நீரில் பாய்ந்து களை தீர்வர். திண்ணிய மீன்பிடி படகாம் திமிலை உடைய வலிய பரதவர், உண்டார்க்கு உரம் ஊட்டும் மதுவுண்டு, இனிய குரவைக் கூத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடித் திளைப்பர். கடல் அலைகள் தூவும் தூவலால் தழைத்து வளர்ந்து புன்னையின் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலை அணிந்த ஆடவர், ஒளிவீசும் வளை அணிந்த மகளிர்க்கு நீராடலில் வலக்கை கொடுத்து உதவுவர், வண்டுகள் வந்து மொய்க்க் மலர்ந்த, குளிர்ந்த நறுமணமே நாறிக் கொண்டிருக்கும் கானலில் தழைத்திருக்கும் கடல் முள்ளி மாலை அணிந்த வளை அணிந்த மகளிர், வானளாவ வளர்ந்திருக்கும் பனையின் நுங்கின் இனிய நீரும், பொதிவுற வளர்ந்திருக்கும் கரும்பின் 225மக்கள் வாழ்க்கை .... சாறும், மணல் மேட்டில் நிற்கும் தென்னையின் இனிய இளநீரும் ஆகிய மூன்று நீரையும் கலந்து குடித்துவிட்டு, மழைநீர், ஆற்றுநீர், ஊற்று நீர் என்ற முந்நீராம் கடல் நீரில் பாய்ந்து ஆடுவர்".

"நெல் அரியும் இருந்தொழுவர்,
செஞ்ஞாயிற்று வெயில் முனையின்,
தெண்கடல் திரை மிசைப் பாயுந்து,
திண்திமில் வன் பரதவர்
வெப்புடைய மட்டும் உண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து!
தூவல் கலித்த தேம்பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்,
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்நறும் கானல்
முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
இரும்பனையின் குறும்பைநீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஒங்கு மணல் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு. முந்நீர் பாயும்"
                    -புறம் : 24:1-16

("முந்நீர் உண்டு - (பனை நுங்கின் நீர், கரும்பின் சாறு, வெங்கின் இளநீர் - ) முந்நீர் (ஆற்றுநீர், ஊற்றுநீர், மழை நீர்) பாயும்" என்ற வரியில் அழகிய சொல்லோவியம் அமைந்திருப்பது காண்க)

தலைவனை, ஓர் இரவு தங்கித் தலைவிக்கு ஆறுதல் அளிக்குமாறு தோழி வற்புறுத்தும் ஒரு செய்யுள், நெய்தல் நிலத்து வாழ்க்கை நிலை, வாழ்க்கை முறைகள் பற்றிய மற்றொரு காட்சியைத் தருகிறது. மீன் உண்ணும் பசிய கால்களை உடைய வெண்ணிறக் கொக்குக் கூட்டம் செவ்வேள் முருகன் மார்பில் கிடந்து ஒளிவிடும் வெண் முத்தாரம் போல, செவ்வானத்தில் எழுந்து வரிசையாக பறந்து. போமாறு, பகற்பொழுதை மெல்ல மெல்லக் கழித்து விட்ட ஞாயிறு, மேற்கு மலையில் சென்று மறைந்து விட்டான். மிக்க நாணத்தையும் மெல்லிய சாயலையும் உடைய சிறியவளாகிய இவளோ, தன் சிறந்த அழகு கெடுமாறு, உன் பிரிவுக்கு ஏங்கி, அழகிய குளிர்ந்த கண்கலங்க ஓயாது அழத் தொடங்கி விட்டாள். தலைவ! அதனாலும், உப்பங்கழியில் உள்ள சுறா மீன் குத்தியதால் புண்ணுற்ற கால்களையுடைய உன் கோவேறு கழுதை, நீர் நிறைந்து கறுத்துத் தோன்றும் நீண்ட கழியைக் கடக்கமாட்டாது மெலிந்து விட்டது. ஆதலாலும், வலிய வில்லேந்தி உன் உடன் வரும் வீரர்களோடு, இவ்விரவில் செல்லாது, இளைப்பாறி, பனைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வெண்மணல் பரந்து கிடக்கும் தோட்டங் களில், தன் துணையை அழைப்பான் வேண்டி, அன்றில் அகவும் அவ்விடத்தில், சின்னம் சிறு பூங்கொத்துக் களையுடைய நெய்தல் வளர்ந்துகிடக்கும், உப்பங்கழி சூழ்ந்த எங்கள் நாட்டின் கண், நீ தங்கிச் செல்வாயாக; அவ்வாறு தங்கிச் செல்வதால் வருவதொரு கேடு ஏதேனும் உண்டோ?”

”நெடுவேள் மார்பின் ஆரம் போலச் ,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்கால் கொக்கின் நிறைபறை உகப்ப
எல்லை பைபயக் கழிப்பிக், குடவயின்
கல் சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு;
மதரெழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணித்த சிறுமென் சாயல்
மாண்நலம் சிதைய, ஏங்கி ஆனாது.
அழல்தொடங் கினளே; பெரும்; அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே, சிதைகுவது உண்டோ ?
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அக்வும் ஆங்கண்,
சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாடே”
                           அகம் : 120

மணல் பரந்த பாலையில்

வறண்ட பாலையில், வாழ்க்கை நிலை மிகவும் கடினமாம்."தூய வெள்ளை ஆடையை விரித்து விட்டாற்போல் தோன்றுமாறு வெயில் விரிந்து காயும், கோடைப் பருவரம் நீண்ட மலைச்சாரலில், கொடிய பசியுடைய செந்நாய், வாடிய மரையாவைக் கொன்று வேண்டு மட்டும் தின்று, விட்டொழித்த எஞ்சிய இறைச்சி நெடுந்தொலைவில் உள்ள - வேற்று நாட்டிலிருந்து, கடத்தற்கு அரிய அப்பாலையைக் கடந்து செல்லும் வழிப் போவோர்க்கு உண்ணும் உணவாகும் கொடுமை மிக்க, வெப்பம் மிகுந்த அரிய வழி"

"முகில் விரித்தன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஒய்பசிச் செந்நாய், உயங்குமரை தொலைச்சி
ஆரீந்தன ஒழிந்த மிச்சில், சேய்நாட்டு
அரும்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை
                 - நற்றிணை : 43 : 1-6

பாலை, தனக்கே உரிய இனிய அழகிய காட்சிகளைப் பெறாமலில்லை. "வளைந்த சிறகினை உடைய பறவகைளின் உள்ளங்கால் சுவடுகள் வரிசை வரிசையாகப் பொருந்திய, நீர்வற்றிய இடங்கள் தோறும் மெல்லிய நுண்மணல் படிந்து கிடக்க, மெல்லென வீசும் வாடைக்காற்று வறண்டு. மோதியதால், கரும்பின் வெண்ணிறப் பூ, புதல் தோறும் ஒரு சேர விரிந்து, அரசனுக்கு வீசப்படும் கவரி போல் ஆடி அழகு செய்ய, கொண்டல் கொண்டலான மேகங்கள் நீங்கிச் செல்வதால், மாறி மாறிக் கண் விழித்துக் காட்டுவதுபோல், ஞாயிறு தோன்றித் தோன்றி மறைய, பகற்காலம் கழிய, மாலைப் பொழுதொடு இராக்காலம் வந்து சேர்தலும், பனி விழுந்து கால் கொள்ளும்".

"கொடும் சிறை
உள்ளடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈரயிர் தோன்ற

வளராவாடை உளர்புநனி தீண்டலின்,
வேழ வெண்பூ விரிவான பலவுடன்
வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய,
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பதுபோல் விளங்குபு அறைய
எல்லை போகிய பொழுதின் எல்உறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமம்”.
                - நற்றிணை : 241 : 1-10

என்றாலும், மக்கள் பெருவாரியாக, அதைக் கடந்து செல்ல வேண்டியிருந்தும், பாலை, பெரிதும் , பாழுற்றே இருந்தது. ‘'பாலை வழியைக் கடந்து செல்லும் மக்கள், அறுத்துப்போட்ட பிரண்டைக் கொடி, இடியால் தாக்குண்டு சிதறுண்ட பசிய பாம்பின் துண்டுகள் போல வழியருகே வறிதே வீழ்ந்து கிடக்கும் அப்பாலைக் காட்டில், உப்பு வணிகர் கூட்டம் விட்டுப் போன கல் அடுப்பில், வலிய வில்லையுடைய ஆறலை கள்வர், ஊனை, மணம் உண்டாகப் புழுக்கி உண்பர்”,

“ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறிகொள
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பின்
நோன்சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்”.
                           அகம் : 179 : 5-9.


ஆடுமாடுகளின் மேய்புலமாம் முல்லை நிலம்

வாழ்வதற்கு நன்மிக இனிய இடம் முல்லை . "மழை கால் இறங்கிப் பெய்யும் மழைப் பருவத்துப், பெருமழை பெய்து ஓய்ந்த கடைசி நாளன்று, பனைநார் கொண்டு பல காலிட்டுப் பின்னிய மெல்லிய உறி, பால்பானையோடு ஒரு கையில் தொங்க, தீக்கடைகோல் முதலாம் கருவிகளை ஒரு சேர இட்டுச் சுருக்கிய தோல் பையையும், மழைக்கு மறைப்பாகும் பனை ஓலையாலான குடையையும் முதுகில் கட்டிக் கொண்டு, பால்விலை கூறி விற்றுச் செல்லும் இடையன், மேய்புலத்தில், சிறுசிறு துளிகளாக ஓயாது விழுந்து கொண்டே இருக்கும் மழைச்சாரல், தன் உடலின் ஒரு புறத்தை நனைத்துக் கொண்டிருப்பதும், பொருட்படுத்தாமல், கைக்கோலை நிலத்தில் ஊன்றி, ஒரு காலை அதன் மேல் வைத்து, ஓய்வான நிலையில் நின்றவாறே , இதழ்களைக் குவித்து அவன் எழுப்பும் வீளை ஒலியைக் கேட்கம் ஆடுகள், பிறர்க்குரிய புலம் சென்று மேய்ந்துவிடாமல், அவ்வொலிக்கு மயங்கி, அவனைக்சூழ அடங்கி நிற்கும் அம்முல்லை நிலத்தில், இரவு நெடும் பொழுது ஆயினும் விருந்தினர் வந்துவிட்டால் மகிழ்ந்து வரவேற்பவளும், கணவன் கூறிய சொற்பிழையாது இல் இருந்து நல்லறம் ஆற்றும் கற்புடையாளும், மெல்லிய சாயலும் இளமை நலம் மாறா அழகுடையாளும் ஆகிய இல்லத்தரசி வாழ்கின்ற வீடு உளது."

"வான் இடுப்பு சொரிந்த வயங்குபெயல் கடைநாள்
பாணி கொண்ட பல்கால் மெல் உறி,
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத்து இட்ட பால் நொடை இடையன்,
நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டுகால வைத்த ஒடுங்குநிலை, மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே, பொய்யா யாணர்
அல்லில் ஆயினம், விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே."
                       நற்றிணை : 142

முல்லையில் மிகவும் இன்பம் தரும் பருவம் இளவேனில், "பருவவரவால் இலைகளெல்லாம் பழுத்து உதிர்ந்து போன பிடவமரத்துக் கிளைகளெல்லாம் அரும்பலர்ந்து நிறைந்து விட்டன; புதல்கள் தோறும் படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடிகள் பூத்துக்குலுங்கின ; கொன்றை மரங்கள், பொன் போலும் மலர்களை ஈன்றன. காயாவின் சிறுசிறு கிளைகளில் நீலமணி போலும்" பன்மலர்கள் நிறைந்து விட்டன. இவற்றிற்கெல்லாம் காரணமான கார்காலம் தொடங்கி விட்டது. பெண்மான், மருண்டு மருண்டு விழிக்கும் அழகிய கண்களை உடையவாய தன் குட்டிகளோடு களர்நிலம் நோக்கி ஓடி விடவே, அவற்றின்பால் கொண்ட ஆருாக்காதல் நெஞ்சோடு, அவற்றைத் தேடி அலையும் ஆண்மான் அதோ விரைகிறது; காண்பாயாக.'’

"இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன் எனக் கொன்றை மலர, மணிஎனப்
பன்மலர்க் காயா குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங் கின்றே காலை......
........................
கழிப் பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனன் இருந்து ஓடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே”
                 - நற்றிணை : 1 - 15 : 6 - 10

கேட்க இனிப்பன, முல்லைக்காட்டு ஒலிகள், “தேனடைகள் கட்டப்பெற்றிருக்கும் நெடிய முடிகளையுடைய மலைச்சாரலில் குவிந்த இலைகளை நெருங்கக் கொண்ட முசுண்டையில், வானத்தில் விளங்கும் மீன் கூட்டம் போலக் 'காட்சி தருமாறு, வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் நள்ளிரவின் நடுயாமத்தில், ஆட்டுக் குட்டிகளை, மழை மறைக்கும் ஓலைப் பாயை முதுகில் கொண்டவாறே, ஒரு சேரக்கொண்டு காத்துக்கிடக்கும் இடையன், இனிய மணம் கமழும் முல்லை ‘ மலர்களைத் தோன்றிப் பூக்களோடு, வண்டுகள் வந்து மொய்க்குமாறு தொடுத்த மாலையை, அதினின்றும் நீர்த் துளிகள் ஓழுக, தலையில் அணிந்து கொண்டு, குளிர் போக்க, எழுப்பிய சிறு தீயில் தன் உள்ளங்கைகளைக் காய வைத்துக்கொண்டே, ஆட்டு மறிகளை விரட்டுவான் வேண்டி எழுப்பும் நீண்ட ஒலி, தினைப்புனத்தை அழிக்கவரும் சிறிய கண்களை உடைய பன்றியின் பெருங்கூட்டத்தை விரட்டுவான் வேண்டி, அத்தினைப் புனத்தைக் காத்துகிடப்பார், அவை வருவது அறிந்து ஊதும், பெரிய கொம்பின் ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும் முல்லைக்காட்டின் இடையே உள்ள நாடு"

"தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பருப்புற இடையன்
தண்கமழ் முல்லை, தோன்றியொடு விரைஇ
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கார்இருள் நெடு விளி,
சிறுதானி பன்றிப் பெருநிரை கடிய
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்".
                   அகம் : 94 :1 - 11

"வட்டவட்டக் கண்களையும் கூரிய வாயலகையும் உடைய பெண் காக்கை, இளமையால் நடுங்கும் இறகுகளையுடைய தன் குஞ்சுகளை அனைத்தவாறே தன் இனக் காக்கைகளையும் கூவி அழைத்து, குறுகிய கால்களை நட்டுக்கட்டப் பெற்று, உணவுப் பொருட்களை நிறையச் சேர்த்து வைத்திருக்கும் மனைகளின் முன்புறத்தில் இட்டுவைத்திருக்கும், கருணைக் கிழங்கின் பொரிக்கறி யொடு கலந்த, செந்நெல் அரிசியாலான வெண்சோற்றுத் திரளைத் தெய்வங்களுக்கு இடும் பலியொடு கவர்ந்து உண்ணக் கூடியிருக்கும்"

"கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப்பேடை,
ஒருங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து
கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
குருடைப் பலியொடு கவரிய, குறுங்கால்
கூறுடை நன்மனை குழுவின இருக்கும்"
                  - நற்றிணை : 367 51 - 5

பொதுமக்களின் இவ்வாழ்க்கை விளக்கம் வறுமையில் வாடும் ஒரு வீட்டின் படப்பிடிப்போடு முடியும். சோறு ஆக்குதல், அறவே மறந்து போனமையால், தேய்வுறாது கட்டியது கட்டியபடியே கோடு உயர்ந்து நிற்கும் அடுப்பில், காளான்கள் பூத்துக் கிடக்க, உடலை வாட்டும் பசியால் வருந்திப், பால் வறண்டு போகவே, தோல் மெலிந்து, பால் வரும் துளையும் தூர்ந்து பயனற்றுப் போன முலையில் வாய் வைத்துச் சுவைக்குந்தோறும், பால் வாராமை கண்டு அழத் தொடங்கிவிடும் தன் மகளின் முகத்தைக் காணும்தொறும் நீரால் நிறைந்துவிடும் கண்களாகிவிடும் மனையோள்'’.

"ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் ,
பாஅல் இண்மையின் தோலோடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்
மனையோள்"
               - புறம் : 164: 1-7

சிறுதொழில்கள்

இக்கால அளவில், சிற்றூர்களில் இன்று காணப்படும் அத்தனைத் தொழில்களும் செயல்பட வேண்டிய அளவுக்கு, வாழ்க்கைத்தரம் வெகுவாக முன்னேறிவிட்டது. இத் தொழில் கள், புலவர்களுக்கு நல்ல உவமைகளாக உதவலாயின, ‘இரும் பைப் பயன்படுத்திப் பல கருவிகளை வடித்துக் கொடுக்கும் கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பை விசைத்து அடிக் கும் சம்மட்டியின் அடிகளைத் தாங்கி உருக்குலைந்து போகாது நிற்கும் பட்டடைக் கல்லைப் பகைவரால் அழிவுற்றுப் போகா ஒரு பெரு வீரனுக்கு உவமை கூறியுள்ளார் ஒரு புலவர்”.

“இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே”
               -புறம் : 170 : 15 - 17

மருத நிலத்தில் குளத்தின் அடைகரையில் வளர்ந்திருக்கும், அரம் போலும் முட்களை உடைய பிரம்புக் கொடி போலும் கொடியை உடைய ஆம்பலின், நீர் குறைய நீர் மட்டத்துக்கு மேல் உயர்ந்து சுருண்டிருக்கும் இலை, அசைந்து அசைந்து வரும் வாடைக்காற்று வீசுந்தொறும், விரிந்து அடங்கும் காட்சிக்குக் கொல்லன் உலைக்களத்தில் காற்று அடிக்க விசைத்து இழுத்துவிடும் துருத்தியை உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்"

"'பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகலடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுலை
விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்"
                    - அகம் : 96 : 3-7

தீ ஓங்கி எரிந்து அடங்கிய நிலையில், நெய்யில் பக்குவப் பட்டு மிதக்கும் இறைச்சித் துண்டுகளுக்குப் பருத்தி நூற்கும் பெண், கொட்டை நீக்கி அடித்துக்குவித்து வைத்திருக்கும் பருத்திக் குவியல்களை உவமையாக்கியுள்ளார் ஒரு புலவர்,

"பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும்குறை".
                             -புறம் : 125 : 1-2

இரட்டை இரட்டையாகக் கவைத்த கதிர்களைக் குற்றிப் புடைத்து எடுத்த வரகரிச்சோற்றையும், கால்நடைச் சாணங்களால் ஆன எரு குவிந்து கிடக்கும் தெருவில், காலத்தே விளைந்திருக்கும் வேளையின் வெண்பூக்களை, வெள்ளிய தயிரில் மிதக்க விட்டு ஆய்ச்சியர் ஆக்கிய புளிக் குழம்பயும் வயிறார உண்டு அவரைக் காய்களைக் கொய்யும் தொழிலாளியைப் படம்பிடித்துள்ளார் ஒரு புலவர்.

"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்,
தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்"
                    புறம் : 215 :1-5

காண்பவர் கருத்தை ஈர்க்கும் தகுதியற்றதான இழி தொழிலும் புலவர்களின் கவியார்வத்தைத் தணித்து விடவில்லை. "ஊரில் விழாத் தொடங்கிவிட்டது. அப்போது பறை கொட்டுதல் போலும் பணி ஆற்ற வேண்டுவது அவன் , கடமை. ஆகவே ஆங்கும் செல்ல வேண்டும். பிள்ளைப் பேற்றிற்கு உரிய காலம். மனைவிக்கு வந்து விட்டது. அப்போது உடனிருந்து அவளுக்கு உதவ வேண்டுவதும் இன்றியமையாதது; ஆகவே, வீட்டிற்கும் செல்ல வேண்டும், இதற்கிடையில் ஞாயிறும் மறையத் தொடங்கிவிட்டான். மழை பெய்யவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கட்டிலுக்குக் கயிறு பின்னும் தொழிற்கடமை மேற்கொண்டு விட்ட அத்தொழிலாளி, அப்பணியை விரைந்து முடித்து விட்டு மேற்கூறிய இருபணிகள் குறித்து விரையத் துடிக்கும் நிலையில், பின்னும் வார்கோத்த அவன் கை ஊசி விரையும் விரைவினைச் சொல்ல இயலாது. அவ்விரைவினைத், தன்னை வெல்வார் யாரேனும் உளரேல் வருக என வஞ்சினம் கூறி வந்திருக்கும் வேற்றூர் வீரனோடு போரிட்டு வெல்லத் துடிக்கும், ஆத்திமாலை அணிந்து, அவ்வூர் வீரனின் உள்ள விரைவிற்கு உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்”.

“சாறுதலைக் கொண்டெனப், பெண்ஈற்று உற்றெனப்,
பட்ட மாரி, ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ!
ஊர்கொள வந்த பொருந்னொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தனை போரே"
                        -புறம் : 82

ஊரில் நிகழ இருக்கும் விழாக்களை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பாளர்களாகப் பழங்காலத்தில் குயவர்களும் பணிபுரிந்துள்ளனர். "அரும்பு கட்டிய கதிர் போல் தோன்றும், ஒளிவீசும் மலர்களைக் கொத்துக் கொத்தாக ஈனும் நொச்சி மாலை அணிந்து, ஆறுபோல் அகன்று நீண்ட தெருவில், ஊரில் உள்ளார் யாவரும் கேட்க, ‘இவ்வூரில், இன்ன நாளில் இன்ன விழா நடைபெறும்; விழாவிற் பங்கு கொள்ள வருக' என அறிவித்துச் செல்லும் அறிவால் முதிர்ந்த குயவனே. ஆம்பல் நெருங்க வளருமளவு வளம்மிக்க வயல்களையும், பொய்கையையும் உடைய ஊருக்கு, விழா அறிவிக்கச் செல்லுவையாயின், அவ்வூர் மகளிரை, 'கூரிய பற்களும் அகன்ற அல்குலும் உடையீர்' என அவர் நலம் பாராட்டி அழைத்து, 'தெறித்து இசை எழுப்புவதற்கு ஏற்புடைய நரம்பு கட்டிய யாழில் பாடத்தகும் பாடல்களை இனிதாக இசைக்கவல்ல உங்களுர்ப் பாணன் செய்யும் துன்பங்களுக்குக் கணக்கில; அவன் உரைப்பன எல்லாம் மெய்யே போல் தோன்றினும், அனைத்தும் பொய்யே; பொய்யை மூடி மறைத்து மெய்யே போல் கூறுவதில் வல்லவன் அப்பாணன். ஆகவே அவன் கூறுவதில் பெரிதும் விழிப்பாய் இருப்பீர்களாக என இதையும் அறிவித்துவர இயலுமோ? அறிவித்து வர வேண்டுகிறேன் எனப் பெண் ஒருத்தி, குயவனைப் பார்த்துக் கூறியதாக ஒரு செய்யுள் :

"கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி,
ஆறுகிடந் தன்ன அகல்நெடும் தெருவில்,
சாறுஎன நுவலும் முதுவாய் குயவ!
இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ!
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோ யாகிக்,
கைகவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ; வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர்! இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே..
                              - நற்றிணை : 200

குயவன், ஒருவகையில் கோயில் பூசாரியாகவும் இருந்து பலி கொடுப்பதும் செய்வன். பழமையும் வெற்றிச் சிறப்பும் வாய்ந்த மூதூரில் பரந்து அகன்ற ஊர் மன்றத்தில், விழாத் தொடங்குவதற்கு முன்னர், நீல மணி போலும் மலர்க் கொத்துக்களை உடைய நொச்சிமாலை அணிந்த , உருவாலும், உள் அறிவாலும் மூத்த குயவன், தான் இடும்பலியை உண்ணுமாறு, பலி உண்ணும் கடவுளையும், காக்கைகளையும் அழைப்பதைக் கூறுகிறது பிறிதொரு செய்யுள்.

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்,
பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் .
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்".
          - நற்றிணை : 293 : 1-4

குயவனின் மந்திரக் கைத்திறன் இன்னமும் அழித்து. விடவில்லை. குழந்தைகளை, ‘அக்கி’ எனப்படும் தோல் நோய் பற்றிக் கொண்டதும், அவற்றின் தாய்மார், குழந்தைகளைக் குயவனிடம் கொண்டுசெல்ல, அவன் ஒரு குச்சியை, ஒருவகைச் செம்மண் குழம்பில் நனைத்து, அக்கொப்புளங்கள் உள்ள பகுதியைச் சுற்றி, யாளி எனப்படும் ஒரு கற்பனைப் பேயின் உருவத்தை வரையச், சில நாட்களுக்கு கெல்லாம் அந்நோய் மறைந்து போய்விடும்.

உடைகளை வெளுத்துக் கஞ்சியூட்டல், பாடற்பொருளாக அமைவதற்குத் தகுதியற்ற சிறு செயல்களாகப் புலவர்க் நினைக்கவில்லை. "கூத்து முதலாம் களியாட்டங்கள் ஒருபால் நிகழ, ஓயாது விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மூதூர்களில், ஆடை களைப் பருத்தி ஆடை, பட்டாடை என இனம் பிரித்து அழுக்குப் போகத் துவைத்தளிக்கும் தொழிலைக் கையோய்வதில்லாமல் செய்வதால் வறுமை அறியாது வாழும் சலவைத் தொழில் மகள் ஒருத்தி, சின்னம் சிறு பூத்தொழில்கள் கொண்ட சிறந்த ஆடைக்கு, இரவில் சோற்றுக்கஞ்சி ஊட்டும் சிறப்பு ஒரு பாட்டில் கூறப்பட்டுளது".

“ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடை ஓர் பான்மையில் பெருங்கை தூவா
வறன் இல் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகள் கொண்ட புன்பூங் கலிங்கம்”.
                  நற்றிணை : 90 : 1-4

பாறையில் தினை உலர்த்திக் காத்திருக்கும் ஒரு பெண்ணைப் பாடியுள்ளார் ஒரு புலவர். முன்கை நிறைய வளையல்களையும், பிற உடல் உறுப்புகளில் அவற்றிற்கு உரிய அணிகளையும் அணிந்திருக்கும் உயர்குடி மகளிர், கரிய பெரிய மலை மீது அகன்ற பாறையில் செந்தினை பரப்பிக் காத்து நிற்கின்றனர்.

"நிறைவளை முன்கை, நேரிழை மகளிர்
இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி"
- குறுந்தொகை : 335: 1-2.

காய்ச்சிய பாலில் மோர் இட்டுத் தயிர் ஆக்குவதும் ஓர் உவமையாகக் கூறப்பட்டுளது. "பெண்மைக்குரிய மடப்பம் உடையளாய ஆய்மகள், தன்கை விரல் முனையால் தொட்டுத் தெறித்த சிறிதளவே ஆன மோர், குடம் நிறைய இருந்த பாலனைத்தையும் தயிராக்கும் நிகழ்ச்சி, களம் புகுந்த ஒரு பெருவீரன் அக்களத்தில் நிறைந்து நிற்கும் நாற்படை அனைத்துக்கும் உயிர் போக்கும் நோயாகி நிற்கும் தன்மைக்கு உவமையாகக் கூறப்பட்டுளது.

"மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே"
                    - புறம் : 276 :3-5

கடுகு மிளகு முதலாம் தாளிப்புப் பொருட்களைக் கலந்து உணவிற்கு மணம் ஊட்டுவதும் கூறப்பட்டுள்ளது. குய்க்கொள் கொழுந்துவை' (புறம் : 160 : 1) குய்யுடை அடிசில்" (புறம்: 127 : 7)

சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல் போலும் இனிய பொழுதுபோக்குகள் பற்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தச்சன் செய்து கொடுத்த சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில் அமர்ந்து சென்று இன்புறல் இயலாது எனினும், அதைக் கயிறு கொண்டு ஈர்த்துச் சென்று இன்பம் அடையும் சிறுவர் சிறுமியரின் இன்ப விளையாட்டில் இன்பம் கண்டுள்ளார் ஒரு புலவர்.

தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்.'’
       -குறுந்தொகை : 1 :1 - 3

தாம் தொடுத்த மலர்மாலையை அணிந்து கொண்டு, மூங்கில் போலும் பருத்த தோள் உடையேம் என்ற துணிவால் கடல் நீரில் புகுந்து ஆடிய மகளிர், கடற்கரைக் கானல் சோலை யில் பரந்து கிடக்கும் மணலால் சிற்றில் கட்டி விளையாடும் இன்பக் காட்சியைக் காட்டியுள்ளார் ஒரு புலவர்.

"துளைத்த கோதைப் பணைப்பெரும் தோளினர்,
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறுமனை”.
             - குறுந்தொகை : 326 : 1-3

ஒளிவீசும் வளைகளை அணிந்த மகளிர், வறுபடாத பச்சை நெல்லை, அவலாக இடித்து முடித்து, அது செய்யத் துணை புரிந்த, கரிய வயிரம் பாய்ந்த மரத்தால் ஆன உலக்கையை முற்றித் தலை சாய்த்து அழகுறக் காட்சி அளிக்கும் நெற்பயிர் நிற்கும் வயல் வரப்பில் படுக்க வைத்து விட்டு விளையாடச் சென்றுவிடும் சிறப்பைக் கூறுகிறது ஒரு செய்யுள்.

“பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும்”.
                 - குறுந்தொகை : 238 : 13

தன்பால் அன்பு காட்டுவதில் ஒப்புக் காணமாட்டாத தன் தோழியர் கூட்டத்தொடு அருவியில் பாய்ந்து ஆடி- அவ்வாறு ஆடுங்கால், நீரலைகள் தாக்கியதால், தன்னுடைய பெரிய, அழகிய, அன்பொழுகும் கண்கள் சிவந்து போகக் காட்சி அளிக்கும் செல்வத்திருமகளைக் காட்டுகிறது ஒரு செய்யுள். -

“பொருவில் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேரமர் மழைக்கண்".
                   நற்றிணை : 44 : 1:2

ஊஞ்சல் ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு விளையாட்டு. அழகிய கண்களை உடைய தோழியர் கூட்டம் ஆட்டிவிடுமாறு, கரிய பனை நாரைத் திரித்து முறுக்கிய கயிற்றை நீளமாகத் தொங்கவிட்டுக் கட்டிய ஊஞ்சல் ஒன்றை ஆட்டிக் காட்டுகிறது ஓர் அழகிய செய்யுள்.

"பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க"
                      - நற்றிணை : 90 : 6-7

பள்ளி சென்று கல்வி கல்லாத இளஞ்சிறுவர்கள், வேப்ப மரத்து அடியில், நெருங்கத் தழைத்த அதன் இலைகள் தரும், புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழலில், பொற்கொல்லன் பால் உள்ள பொன்னுரைகல்போலும் வடிவில் வட்டமான அரங்கை வரைந்துகொண்டு, நெல்லிக் காய்களை வட்டுக்களாகக் கொண்டு, பாண்டில் ஆடும் அழகும் ஓரிடத்தில் கூறப்பட்டுளது.

வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்"
             - நற்றிணை : 3 : 2 - 4

கூரை வேய்ந்த நல்ல மனைக்கு உரியவராகிய குறுந்தொடிகளை அணிந்த மகளிர், தங்கள் மனையின் முன்புறத்தில் பரப்பியிருக்கும் புதுமணலில் அமர்ந்து, கழற்சிக் காய்களைக் கொண்டு கழங்காடிக் களித்திருப்பர்.

"கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்,
மணலாடு கழங்கு".
            - நற்றிணை : 79 : 2-3

மகளிர் விளையாட்டாகப் பல இடங்களிலும் கூறப் பட்டிருப்பது ஓரை. பூஞ்சாய்க் கோரை எனும் ஒருவகைக் கோரைப் புல்லால் செய்து மகரந்தப் பொடிகள் பூசிச் செய்த பாவை வைத்து விளையாடு ஆயமொடு, ஓரை ஆடாது". "ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை 68:1-3, 155:1) “ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர்” (புறம் : 176 : 1)

மகளிரின் மற்றொரு விளையாட்டு "அல்லியம்.” ஆண் கோலமும் பெண் கோலமும் உடையவாக இரண்டு பாவைகளைச் செய்து கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.

"வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர்”.
          புறம் : 33 : 16 - 18


குருட்டு நம்பிக்கைகள்


இனி, மக்களிடையே நிலவியிருந்த குருட்டு நம்பிக்கைகள் சில. காக்கை கரைந்தால், விருந்து வரும் என்ற நம்பிக்கை, இன்றேபோல் அன்றும் இருந்தது. “கணவன் பிரிவாற்றாத் துன்பக் கவலையால் மெலிந்துவிட்ட என் தோழியின் தோள்கள், அம்மெலிவு நீங்கிப் பண்டே போல் ஆகிச் சிறப்புறுவதற்குத் துணை செய்யும் வகையில், கணவன் வருகையைக் கரைந்து முன் அறிவித்தது காக்கை; அந்நல்லது செய்த காக்கைக்கு இடும் பலியாகத் தொண்டி. நகரத்து வயல்களில் முற்ற விளைந்த வெண்ணெல் அரிசி கொண்டு சுடுசோற்றைத் திண்ணிய தேருக்கு உரிய நள்ளி என்னும் கொடைவள்ளலின் காட்டில் வாழும் ஆயர்களின் பல பசுக்களிடம் கொண்ட நெய்யைக் கலந்து, ஏழு கலத்தில் இட்டு வைத்தாலும், அது செய்த நன்றியை நோக்க, இப்பலி சிறிதாம்” எனக் கூறுகிறாள் தலைவியின் தோழி ஒருத்தி.

"திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே'’
                   - குறுந்தொகை : 270

சகுனங்களிலான நம்பிக்கை அளவுமீறி இருந்தது. பறவைகளின் போக்கு, அவற்றின் குரல், வர இருக்கும் ஆக்கம், இழப்புக்களை அறிவித்துவிடவல்லன என உறுதியாக நம்பினர். "புள்ளும், பொழுதும் பழித்தல்" (புறம்: 204 : 10). பரிசில் கிடைக்காதபோது, அது தராதுவிடுத்த புரவலனைப் பழிக்காது, தாம் புறப்பட்டு வந்தபோது நிகழ்ந்த புள்நிமித்தம் காலக்கேடுகளையே பழிப்பர்.

பேய்கள், மரங்களிலும் இடுகாடுகளிலும் வாழும் என்று நம்பினார்கள். பேய், தன் கூட்டத்தோடு ஆடிக்களிக்கும் இடுகாட்டை ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார். (புறம் : 288: 45) போர்க்களத்தில் வீரப்புண் பெற்று இறந்து வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் வீரப் புண்களைத் தோண்டி, அதிலிருந்து பெருகிய செங்குருதியால் சிவந்து போன தன் கைகளால் தனது மயிரைக் கோதி முடித்து, அதனால் கறுத்த தன் மேனியும் செந்நிறங் காட்டும் ஒரு பேய்மகளைக் காட்டுகிறார் ஒரு புலவர்.

"பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி ,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்".
                புறம் : 62:2-4

பேய்மகள் பிணத்தைத் தழுவி, அதன் வெள்ளிய நிணத்தைத் தின்னும்; "பேஎய் மகளிர் பிணம் தழுஉப்பற்றி, விளர் ஊன் தின்ற வெம்புலால்" (புறம் : 359 : 4-5) பேய், மகளிரைப் பற்றிக் கொள்ளும்; அவ்வாறு பேயால் பற்றப் பட்ட மகளிர், குதித்து ஆடுவர். "முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும்". (புறம் : 259:5-6) வெண்கடுகைப் புகைத்தால் பேய் ஓடி மறைந்துவிடும். "ஐயவி புகைப்பவும்" (புறம் : 98 : 15) என்றெல்லாம் மக்கள் நம்பி இருந்தனர்.

ஓடுகின்ற ஆற்றின் இடையே உள்ள, துருத்தி என்றும் அழைக்கப் படும் மேட்டில், பல்வேறு இசைக்கருவிகள் இசை எழுப்ப, ஆட்டின் கழுத்தை அறுத்துத், தினையைப் பிரப்பங் கூடையில் பரப்பி வைத்து தாம் வெளிப்படவந்து உலாவல் அல்லது, நோய்களைத் தீர்க்கலாகாத் தெய்வங்கள் ஒருசேர வழிபட்டு இவள் பேயால் பற்றப்பட்டாள் என்ற முடிவிற்கு * வந்து நிற்கும் மகளிரைக் காட்டுகிறார் ஒரு புலவர்.

“மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரஇச்,
செல்லாற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந் தாக.
வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
போய்க் கொளீஇயள் இவள் என'’
குறுந்தொகை : 263 : 1-5

மனித இறைச்சி, குருதிகளை விரும்புவது பேய். அதனால், களத்தில் இறவாது வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் புண்ணைத் தோண்டத் தலைப்பட்டுவிடும். பேய் தொட்ட புண், ஆறுவதும் இல்லை . அவ்வீரன் உயிர் பிழைப்பதும் இலன், இதில் நம்பிக்கை உடைமையால் அவன் மனைவி, பேய், தன் கணவன் இருக்கும் இடத்தையும் அண்டக் கூடாது என்பதால், வீட்டு வாயிலில் இரந்தை, வேப்பந்தழைகளைச் செருகி, யாழ் முதலாம் இசைகளை எழுப்பி, மெல்ல எழுந்து வீட்டை மையிட்டு மெழுகி, வெண் சிறுகடுகை எங்கும் தூவி, ஆம்பல் குழல் ஊதி, மணி அடித்து, காஞ்சிப்பண் பாடி. மாளிகை முற்றிலும் நறுமணப் புகை எழுப்பிக் காப்பன்.

“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக்,
கை பயப்பெயர்த்து, மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பில் கடிந்றை புகை இக்
காக்கம் வம்மோ ?” -
                -புறம் : 287 : 1-7


சமய வழிபாடுகள்

தொன்மையான வழிபாட்டு முறைகள், ஐந்தாவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரீகம் (Pre Aryan Tamil Culture) என்ற என்னுடைய நூலிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கே எடுத்துக்காட்டிய கடவுள்களே அல்லாமல், வேறு கடவுள்களையும் தமிழர் வழிபட்டனர். திங்கள், அவற்றின் ஒன்று. கடல் நடுவே, மீன் பிடி படகுகளாம் திமில்களில் ஏற்றப்பட்டுக் காட்சி அளிக்கும் விளக்குகள் போல, செம்மீன்கள் ஒளிவிடும் விசும்பின் உச்சிக்கண், முழுமதி நாளன்று, அம் முழுமதியைக் கண்டு, காட்டுவாழ் மயில் போன்ற, சில வளையல்கள் அணிந்த வளாய் என் விறலியும் நானும் அம்முழுமதி, வளவன் வெண் கொற்றக்குடை போன்றுளது என எண்ணியவாறே தொழுதோம் அல்லவோ? என்ற புலவர் வினாவில், மதி வழிபாடு குறிப்பிடப்பட்டுளது.

"முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ? ...........
வளவன் ..........
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே".
                  புறம் : 60


("மாக விசும்பு" எனும் இத்தொடர், புறம் : 35, 60, 270, 400, அகம் : 253, மதுரைக்காஞ்சி : 454; பரிபாடல் 47 ஆகிய பல இடங்களில் வந்திருந்தாலும், உரையாசிரியர்கள் அதற்கான தெளிவான பொருளை உணர்த்தினாரல்லர்).

காக்கைக்கு உணவு அளித்தல், ஒவ்வொரு வீட்டிலும், நாள்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு சமயச் சடங்கு. "கதிர்கள் எறித்தலால் நடப்பார் கால்களை வெப்பம். பண்ணுமாறு ஞாயிறு காயும் பகற்பொழுதில், நகரில் உள்ள பெரிய மாளிகைகளுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உணவளித்து ஓம்புவான் வேண்டி, பொற்றொடி அணிந்த அம்மாளிகை வாழ் மகளிர், விருந்தினர்க்கு உணவு படைப்பதன் முன்னர், மாளிகையின் முற்றத்தில் பலியாகப் போட்ட, கொக்கு உகிர் போலும் சோற்றைத் தின்ற காக்கைக் கூட்டம், பொழுது மறைய, மீன் அங்காடி புகுந்து, ஆங்கு நிழலில் குவித்து வைத்திருக்கும் பச்சை மீன்களைக் கவர்ந்து கொண்டு கடற்கரையில் வினை ஒழிந்து ஆடிக் கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரத்தில் சென்று தங்கும். இதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு புலவர்.

"கதிர்கால் வெம்பக், கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வின் நகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உதிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்”.
                  - நற்றிணை : 258 : 3-9

பழங்காலத்தில், பெரிய தெய்வ வழிபாடுகள், பலிகொடுத்தல், தெய்வத்தன்மை வாய்ந்த ஆடல், பாடல்களை ஒருங்கே கொண்டிருக்கும் அத்தகு ஒரு வழிபாடு கீழ்வருமாறு கூறப்பட்டுளது. “ஓ எனும் பேரொலி எழ, வெள்ளை வெளேரென ஒளி விளங்க ஓடிவரும் அருவிகளால் விளக்கம் பெற்ற மலைச்சாரலில், வேங்கையின் தேன் கமழும் ‘ மலர்களைச் சூடிக்கொண்டு, தொண்டகப்பறை எழுப்பும் ஒலியன் தாளத்திற்கு ஏற்ப, ஆடவரும் பெண்டிரும் தெருக்களில் கலந்து ஆடி மகிழும் சிறுசிறு குடிகளைக் கொண்ட பாக்கத்தில் முருகன் உலாவருதலைக் கூறுகிறது ஒரு செய்யுள்”.

கறங்குவெள் ளருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடித்
தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து இயல் முருகு”.
                      - அகம் : 118 : 1-5

குன்றுகள் வேலிபோல் நாற்புறமும் நிற்க, இடையே உள்ள சிற்றூரில், மன்றத்தில் நிற்கும் வேங்கை மரங்கள், மன நாளாகிய நல்ல நாளில் பூக்கத் தொடங்க, அவற்றின் மணி மணியான அரும்புகள் மலர்ந்த, பொன் போன்ற மலர்கள் உதிர்ந்து, அகன்ற பாறைகளை அழகு செய்யும் முற்றங்களில், குறவர்கள், தங்கள் மனைகளில், குரவை ஆட்டத்தில் கைதேர்ந்த முதிய மகளிரொடு கைகோத்து, ஆராவாரம் எழக் , குரவை ஆடி விழா எடுப்பதை விளக்குகிறது ஒரு செய்யுள் :

குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை விரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவு"
                 அகம் : 232 : 6:11.

"கழ் நீரில் மீன் ஓடும், மேல் நீரில் கண்போலும் கருங்குவளை மலரும்; உப்பங்கழி நீரால் சூழப்பெற்ற பயிர் விளைந்து நிற்கும் கழனிகளில், அவற்றைக் காப்பவர் பறை அடித்து எழுப்பும் அரித்து எழும் ஓசை கேட்டுப் பறவைகள் ஓடிவிடும். அரும்புகள் மிதக்கவிட்ட கள்ளையும், இனிய தேறலையும் நறவையும் குடித்து மகிழ்ந்த கோசர் குரவை ஆடி மகிழ்வதைக் கூறுகிறது, ஒரு செய்யுள்.

"கீழ்நீரான் மீன்வழங் குந்து;
மீநீரான் கண்ணன்ன மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளைகழனி
அரிப்பறையால் புள் ஒப்பந்து;
நெருடுநீர் கூஉம் மணல் தண்கால்
மென் பறையால் புள் இரியுந்து;
நனைக்கள்ளின். மனைக்கோசர்,
தீந்தேறல் நறவு மகிழ்ந்து
தீங்குரவைக் கொளை தாங்குந்து"
                  - புறம் : 396:1-9

கோசர் சிறந்த வீரர்; ஆகவே அவர்கள். ஆடிய இக் குரவைக் கூத்து ஒருவகைப் போர்க்கூத்து ஆகும்.

இதனினும் கொடுமை வாய்ந்த ஒரு போர்க்கூத்து, பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. “செங்கரும்பு கழிகள் மீது காற்றில் அசைந்தாடும் செந்நெற்கதிர்களை வேய்ந்து கட்டிய பந்தல், விழா எடுக்கும் இடம் போலப் பற்பல அழகுடையதாகத் தோன்ற, ஓயாது நெல் குற்றும் உலக்கை ஒலியோடு, பல்வேறு ஒலிகள் ஒலிக்கும் ஆங்கு, பொன்னால் செய்த தும்பைப் பூவாம் போர்ப் பூவுடன் பசிய பனம் தோட்டையும் அணிந்து கொண்டு, கடுஞ்சினம் மிக்க வீரர்கள் கடல் ஒலிபோல், ஆரவாரப் பேரொலி எழுப்பியவாறே, குரவைக் கூத்தை, வெறி கொண்டு ஆடுவர்”.

“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு வேறு பொலிவு தோன்றக்,
குற்று ஆனா உலக்கையால்,
கலிச்சும்மை வியல் ஆங்கண்
பொலந்தொட்டுப் பைந்தும்பை
மிசை அலங்குளைய பனைப்போழ் செர்இச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரிற் பெயர்பு பொங்க”
                புறம் : 22 : 14-23

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரிய நாகரிகம், தமிழர் உள்ளத்துள் , வெள்ளம் போல் பெருக்கெடுத்துப் பாய்ந்து அவர்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றிவிட்டது. மற்ற செயல்பாடுகளோடு, ஆடல் பாடல்களும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன, பழந்தமிழரின் இயற்கை யோடியைந்த எளிய பண்ணிசை, ஆரியரின் கற்பனைத்திறம் வாய்ந்த பல்வேறு படிகளை உடையவாய மெல்லிசைகளுக்கு இடம் கொடுத்துவிட்டது. அவர்களின் பழைய ஆடல்களின் இடத்தை, ஆரியரின், எளிதில் விளங்கலாகாப் பல்வேறு வகையாகப் பிரிவுண்ட ஆடல்கள் பற்றிக்கொண்டன. பழைய ஆடல், ஒன்று, சொற்களின் துணை வேண்டாமல், மெய்ப் பாட்டின் மூலமாகவே, காதல், வீர உணர்வுகளை வெளிப்படுத்தும்; அல்லது முழுக்க முழுக்க வழிபாடு குறித்த ஆடலாகும். ஆரிய நாகரீகத்தின் இடை நுழைவால், அக்கலையில், பல்வேறு நிலைகள் வளர்ந்து விட்டன. ஆடல் பாடல் குறித்த இலக்கண நூல்களும் எழுதப்படலாயின. ஆனால், அந்நூல்கள், இப்போது அழிந்துவிட்டன. ஆனால் அக்கலைகளைக் குலத் தொழிலாகக் கொண்ட கலைஞர்களால், அவை பயிலப் பெறுவது குறித்த குறிப்புகள் பலவற்றைச் சிலப்பதிகாரம் தருகிறது. அதன் உரையாசிரியர்கள், அவை குறித்த விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். பண்டு ஆடல் நிகழ்ந்த இடம் ஊர் மன்றம். ஆனால், அது சிலப்பதிகாரம் மூன்றாம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போலும் பல்நிலை ஆடரங்காக உருமாறி விட்டது. ஆனால், இம்மாற்றமெல்லாம், பெருநகரங்களில் இடம் பெற்றுள்ளனவே அல்லது சிற்றூர்களில் அன்று. நகரங்கள்

உரோமானிய நாட்டுடன் நடத்திய வாணிகம் பெருமள வில். வளர்ந்துவிட்ட பின்னர், தமிழகத்தில் நகரங்கள் வளமுடையவாகவும், செல்வச் செழிப்பு டையவாகவும் உயர்ந்துவிட்டன. அகநானூற்றுப் பாடல் ஒன்றில், சேர, சோழ, பாண்டியர்களின் தலைநகரங்கள் சுருக்கமாக . விளக்கப்பட்டுள்ளன.

“உறவினர்க்கு உளவாம் கேட்டினைக் களைந்து, அவரைத் தாங்கிக் கொள்ளவும், உறவினராய் உள்ளார், குறைவின்றி உண்ணவும், அயலார், அந்த அயலாராம் நிலை கெட்டுக் கெழுதகை உறவினராக மாறி ஒழுகவும் விரும்பி, அதற்குத் துணை செய்யும் பொருள் ஈட்டும் முயற்சியில் ஊக்கம் மிகக் கொண்டு, அதில் விருப்பமும் மிகுந்து, ஆத்திமாலை அணிபவரும், எதிர்த்தாரை அழிக்கவல்ல போர்முறைகளை அறிந்தவரும் ஆகிய சோழர்க்கு உரியதான, அறங்கூர் அவை இருக்கும் சிறப்பினைக் கொண்ட உறையூரை ஒத்த பெறுதற்கரிய பேரணிகலன்களை அடைந்து நல்லோர் யாவராலும் விரும்பத்தக்கதான செயற்கரிய செயலாம் பொருள் ஈட்டும் பணியை இனிதே முடித்து விட்டோம். ஆகவே, பகைவர் அரண்கள் பலவற்றை வெற்றி கொண்ட, பகைப் படைகளோடு எப்போதும் மாறுபாடு கொள்ளும் நாற்படையினை உடைய , என்றும் புகழ் வாடாத வேப்ப மாலை தரித்த பாண்டியனுக்கு உரிய கூடல்மா நகரின், காலைக் கடைவீதியின் பல்வேறு மணங்களும் ஒருசேர மணக்கும் நல்ல நெற்றியினையும், நீண்ட கரிய கூந்தலினையும், மாமை நிறத்து மேனியினையும் உடைய நம் காதலியுடன், மலையைக் குடைந்து இயற்றியது போலும், வானை அளாவிய நீண்ட மாளிகையில், கடல் நுரையை அடைத்து வைத்தது போன்ற மெல்லிய மலர்களால் ஆன படுக்கை விரித்த, ஓங்கிய கட்டிலில், உயர்ந்த விளக்கின் நெடுஞ்சுடர் ஒளியில் ஆடவர்க்கு உரிய நலமெலாம் உடைய நம் மார்பில், நம் காதலியின் மார்பகத்து அணிகள் வடுக்களைச் செய்யுமாறு, வரிவரியான கோடுகள் நிறைந்த நெற்றியினையும் வலிமிகுதலினால் முழங்கும், வாய்வரை வந்து ஒழுகும் மத நீரினையும், கூற்றுவனுக்கு நிகரான ஆற்றலும் நிலத்தை அறைந்து, பகைவரை அணுகச் சென்று கொல்வதில் தப்பாத, நினைத்தாலே நடுங்கப்பண்ணும், தொங்கும் கையினையும் உடைய கொடிய பெரிய யானைப் படையினையும், நெடிய தேர்ப்படையினையும் உடைய சேரனுக்கு உரிய , செல்வத்தால் சிறந்த மிகப் பெரிய நகரமாகிய கருவூரின் துறையில், தெளிந்த நீர் ஓடும் குளிர்ந்த ஆன் பொருநை ஆறு, உயர்ந்த கரையில் குவித்துள்ள மணலின் எண்ணிக்கையிலும், பலவாக, நாம் தழுவி இன்புறுவோம்; நெஞ்சே! வருவாயாக!

"கேள்கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு, புகல் சிறந்து,
ஆரம் கண்ணி, அடுபோர்ச் சோழர்,
அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன,
பெறலரும் செய்வினை முற்றினம், ஆயின்;
அரண்பல் படர்ந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங் காடி நாறும் நறுநுதல்,
நீள் இரும் கூந்தல், மாஅ யோளொடு,
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை,
நிவந்த பள்ளி, நெடும் சுடர் விளக்கத்து
நிலம் கேழ் ஆகம், பூண்டுப் பொறிப்ப,
முயங்குவம்; சென்மோ ; நெஞ்சே ; வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ்தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி
ஆள்கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும்பகட்டு யானை, நெடுந்தேர்க் கோதை
திருமா வியன்நகர்க் கருவூர் முன் துறைத்
தெண்ணீர் உயர்கரைக் கவைஇய
தண்ஆன் பொருநை மணலினும் பலவே".
                            -அகம் : 93

அரசர்கள் வாழ்ந்ததால் நகரங்கள், முக்கியத்துவம் பெற்றுவிட்டன. நகரங்கள் பெருகவே, செல்வமும், அரசர் களின் முக்கியத்துவமும் உயர்ந்துவிட்டன. தமிழகத்து மூவேந்தர்களும், பண்டைக்காலத்தில், வேலையற்றுக் கிடக்கும் நாட்களில் பொழுதுபோக்கிற்காகவும், தங்கள் ஆண்மையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் ஏனைய அரசுகளை அடிமை கொண்ட பேரரசாக உயர்வதற்காகவும் ஒருவரோடொருவர் போர் தொடுத்துவந்தனர். ஆகவே, இக்காலப் பாடல்களில், அரசர்களின் கொடை வளப் பாராட்டு இன்னமும் இடம் பெற்றுளது என்றாலும், அவை, அரசர்களின், போர்க்கள் வெற்றிகளைப் பாராட்டலாயின.

"பகைவரை வென்று அவர்தம் பட்டத்து யானையின் பொன்னாலான நெற்றிப் பட்டத்தைக் கைக்கொண்டு, அது அழித்துப் பண்ணிய பொற்றாமரை மலரைப் பாடிப் புகழும் பாணன் தலையில் அழகு பெறச் சூட்டிய சிறந்த தலைமை யினையும், போரில் புறம் காட்டாக் கோட்பாட்டினையும் உடைய பெரியோன் வழியில் வந்தவனே! இராப்பொழுது இங்கேயே உறங்கிவிட்டதோ , என ஐயுறுதற்கு ஏற்பப் - பேரிருள் சூழ்ந்த அடர்ந்த சிறு காட்டையும், பறை ஒலி போல் ஒலிக்கும் மலையருவி களையும் உடைய முள்ளூர் மலைக்கு உரிய வேந்தே! முள் போலும் கூரிய பற்களையுடைய பாம்பையும் நடுங்கப் பண்ணும் இடியேறுபோல் போர் முரசு முழங்க, தலைமை தாங்கிவந்த யானையும், அதன் மீது அமர்ந்து போரிட்ட அரசும் களத்தில் ஒருங்கே இறந்துபட, அழித்தற்கரிய அவர் நாற்படைகளைச் சிதற அழித்து, சிறிதும் பொருந்தாத பகை, தன் நாட்டை அணுகவும் விடாது, தடுத்து நிறுத்தும் எல்லையாகத் திகழும் பெண்ணையாறு பாயும் நாட்டிற்கு உரியவனே : உன் புகழைப் பாடவல்லமாயினும், வல்லோமல் லேமாயினம், உன்பால் வந்து உன்புகழ் பாடுவோமாயின், அழிக்கலாகாத் தன்மை யராகிய உன் கிளையொடு நீயும் பெருவாழ்வு வாழ, இந்நிலமிசை உள்ளார் எல்லாரினும் அறிவு ஒழுக்கங்களில் மாசற்ற அந்தணனாகிய கபிலன், பொருள் வேண்டி இரந்து செல்லும் புலவர்களுக்கு இனிப் புகழ்வதற்கு இடமில்லை எனக் கூறுமளவு உன் புகழும், அவன் புகழும் பெருகி நிற்கப்பாடிவிட்டான். அதனால், சினம் மிக்க சேனைக்கு உரியவனாகிய சேரனுக்குரிய மேலைக்கடலில், பிறநாட்டுப் பொற்காசுகளைச் சுமந்து வரும் கடலோடவல்ல பெரிய நாவாய்கள் ஓடிய இடத்தில், வேறு சின்னஞ் சிறு மரக் கலங்கள் ஓடமாட்டாதது போலும் நிலையினராகி விட்டோமாயினும், எம்முடைய வறுமை துரத்த, உன் பெரும்புகழ் ஈர்த்துக் கொண்டுவர வந்து, உன் வளமைக் குணங்களில், சிலவற்றை நாங்களும் பாடிப் பாராட்டினம்".

"ஒன்னார். யானை ஓடைப்பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய, விழுச்சர்,
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே,
நின்வயின் கிளக்குவ மாயின், கங்கல்
துயில் மடிந் தன்ன தூங்குஇருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறலரும் மரபின் நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புவன் அழுக் கற்ற் அந்த ணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடனின்றிப்,
பரந்திசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு,
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது; அனையேம். அத்தை;
இன்மை தூரப்ப, இசைதர வந்து நின்
வண்மையில் தொடுத்தனம் யாமே, முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
அண்ணல் யானையொடு வெந்துகளத்து ஒழிய
அரும் சமம் ததையத் தாக்கி, நன்றும்
ஒன்னாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடு கிழ வோயே".
                                 புறம். 126

போர் முரசுக்கு, அல்லது, கூறுவதாயின், அப்போர் முரசின் உறையும் தெய்வத்தின் ஆவிக்குக், குருதிப்பலி கொடுப்பதே போராகக் கருதப்பட்டது. போர் முரசு, அதற்கென அமைக்கப்படும் தனி இருக்கையில் வைக்கப்படும். ஒரு செய்யுள் இவ்வாறு கூறுகிறது. "முரசுக்குக் குற்றமாம் எனக் கூறப்படும் குற்றம் எதுவும் இல்லாதவாறு வலித்துப் பிணித்த வாரை உடைய, கருமரத்தால் செய்யப்பட்டமை யால், கருமை நிறம் காட்டும் பக்கம் அழகு பெற, மயிலின் தழைத்து நீண்ட தோகை, ஒள்ளிய புள்ளிகள் நிறைந்த நீலமணிபோலும் நிறம் வாய்ந்த மாலை, ஆகியவற்றைப் பொன் போலும் தளிர்களையுடைய உழிஞையொடு அழகுற அணியப்பெற்ற, குருதிப்பலி கொள்ளும் வேட்கையுடையதான பகைவர் உளம் நடுங்க முழங்க வல்லதான போர் முரசம், நீராடி வருவதன் முன்னர் எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போல், மெல்லிய மலர்கள் குவித்து வைக்கப்பட்ட கட்டில் ஒழுங்கு செய்யப்படும்”.

"மாசற விசித்த வார்புறு வள்பின்,
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி, ஒண்பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை , உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை”.
                          -புறம் : 50 7-7

ஒப்பிட்டு நோக்க, கொடுமைமிகா, வேத வழி வேள்வி முறைகள் இடம் பெறத் தொடங்கிவிட்ட இந்நூற்றாண்டின் இறுதியிலும், பாண்டியப் பெருவீரன் ஒருவன் குறித்துப் பின்வரும் போர்ப்பரணிப் பாடலைப் பாட, ரு புலவரைத் தூண்டுமளவு, பழைய வெற்றிப்பலிகள் பால் களவேள்விகள் பால் கொண்ட பெரு வேட்கை, தமிழ் அரசர் உள்ளத்தில், இன்னமும், அத்துணை ஆழமாக வேரூன்றி இருந்தது. “மிக்க ஆழம் உடைய பெரிய கடலில், காற்றால் தாக்கப்பட்ட மரக்கலம் கடல் நீரைக் கிழித்துக்கொண்டு ஓடுவதுபோலப், போர்க்களிறு களம் புகுந்து பகைவர் படையைத் தாக்கிப் பாழடித்துக் களத்தில் இடம் பண்ணிவிட, அவ்வாறு இடம் கண்ட களத்தில் நன்கு தீட்டப்பெற்று ஒளிவீசும் இலை போலும் முனையையுடைய வேலொடு புகுந்து, அரசையும் அழித்துப் பகைவர் படையையும் பாழ்செய்து, அவ்வெற்றிப் புகழ் நாடெங்கும் பரவ, பகைவர் போர் முரசைக் குருதிப் புனலை உலை நீராகக் கொண்டு, உலையில், தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை அணிந்த தோளாகிய துடுப்புக் கொண்டு, துழாவி ஆக்கிய உணவைப் பேய்களுக்குப் படைத்து, அக்களத்தில் கள வேள்வி செய்த, கொல்லும் போர்வல்ல செழிய".

"நளிகடல் இரும் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியலாங்கண்,
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசுப்ட அமர் உழக்கி,
உரைசெல, முரசு வெள்வி,
முடித்தலை அடுப்பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அருபோர்ச் செழிய!"
                           புறம் : 26:7-17


நகரங்களில் பரத்தமைை

நேரிடை நிலை, உருவக நிலை ஆகிய எந்நிலையில் பொருள் கொண்டாலும், நகர வாழ்க்கை என்றால், நாகரீக வளர்ச்சி என்றே பொருள் : நாகரீகத்தின் தெளிவான முத்திரை, விரும்பத் தகாதது எனக் கருதப்படாதாயின், பரத்தைமை ஒழுக்கம் இடம்பெறுவதேயாம். பரத்தையர் ஆடல் பாடல்களில் நன்கு பயிற்சி பெற்றிருப்பர், கண்கவர் வகையில் உடையணிந்திருப்பர். அழகுற ஒப்பனை செய்து கொள்வர். "விறல்பட ஆடவல்லாளாகிய விறலி, மாணிக்க : மணிக்கோவை எட்டால் ஆன மேகலை அணியால் அழகு பெற்ற அல்குலும், மடப்பம் பொருந்திய மை உண்ட கண்களும், ஒளிவீசும் நெற்றியும் கொண்டு", திகழ்தலைக் கூறுகிறது ஒரு புறநானூற்றுச் செய்யுள்.

"இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண், வாள் நுதல் விறலி”
                      -புறம் : 89 : 1-2

எளிதில் வயப்படக்கூடிய ஆடவரைத் தங்களோடு, ஆற்றுத்துறையிலும், குளப் படித்துறையிலும் நீராடி மகிழுமாறு தூண்ட வல்லவர் பரத்தையர். ஆடவன் ஒருவனைத் தன் அழகால் மயக்கவல்ல உள்உரம் படைத்த ஒரு பரத்தை, அவன் மனைவிக்குக் கீழ்க்காணும் இறுமாந்த சொற்களைக் கூறி அனுப்பினாள். ‘'என் கூந்தலில் ஆம்பலின் முழுப்பூவை அணிந்து அழகு செய்து கொண்டு, புது வெள்ளம் புரண்டோடும் பெரிய நீர்த்துறையில் புனல் விளையாட்டை விரும்பிச் செல்கின்றேன். அவள் கணவனும், அங்குத் தவறாது வந்து, புனல் விளையாட்டில் என்னோடு பங்கு கொண்டு விடுவானோ என அவள் அஞ்சுவளாயின், கொடிய போர் நிகழும்போது, போர் அறம் பிறழாது போரிட்டுப் பகைவரை அழிக்கவல்ல எழினி என்பானது பெரிய வேற்படை போர்க்களத்திடத்தே உள்ள அவனுடைய பெரிய ஆனிரையைப், பகைவர் கொள்ளாவாறு சூழ நின்று காப்பது போல, தன் கணவன் மார்பு, என்னை அணுகவிடாவாறு, தன் தோழியர் கூட்டத்தோடு அவனைக் காத்துக் கொள்வாளாக’

"கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவ துடைய ளாயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனை ஆன் பெருநிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே'’
                          குறுந்தொகை : 80

விழா நிகழும் இடங்களில் ஆடவர்க்குக் காம வேட்கை ஊட்டிக் கவர்ந்து கொள்வான் வேண்டிப் பரத்தையர் பெருங்கூட்டமாக வந்திருப்பர். வாளை மீன்கள், நீரில், பிறழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டும், அவற்றைக் கவர்ந்து கொள்ளக் கருதாது, அக்குளத்தில் வாழும் நீர்நாய், நாள்தோறும் துயில் மேற்கொண்டுவிடும் இடமாகிய, வாரி வழங்கும் கைவண்மையுடைய கிள்ளிவளவனுக்கு உரிய , கோயில் வெண்ணியைச் சூழ உள்ள வயல்கள் விளைந்து கிடக்கும், நல்ல நிறம் வாய்ந்த, முற்றிய தழைகளால் ஆன ஆடையை, மெத்தென்ற அகன்ற அல்குல் மேல், அழகு உற உடுத்துக்கொண்டு, நானும் இங்கு நடைபெறும் விழாவிற்குச் செல்ல வேண்டும். புதுப்புது வருவாய்களை உடைய ஊரன், என்னை அங்கு, அக்கோலத்தில் காண்பனாயின், என்னை வரைந்து கொள்ளாது விடுத்துப்போவது அரிதினும் அரிதாகும்".

"வாளை, வாளிற் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்,
கைவண் கிள்ளி, வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை
ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ,
விழவிற் செலீஇயல் வேண்டும், மன்னோ !
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே".
நற்றிணை- 390 : 1-8

பரத்தை, ஆடவர் தேடும் வெறியோடு தெருக்களில் வரும்போது, மனைவியர், தத்தம் கணவரை விழிப்போடு காத்துக் கொள்ள வேண்டும். தலைவியை, அவள் தோழி இவ்வாறு எச்சரிக்கிறாள். "கள்ளமிலா நோக்கமைந்த அழகிய கண்கள், மயிர்ச்சாந்தணிந்து மணம் ஊட்டப்பெற்ற கூந்தல், பருத்த தோள்கள், ஒழுங்குற வளர்ந்த வெண்பற்கள், திரண்டு நெருங்கிய துடைகள் ஆகிய இத்தகு சிறப்புகளால் ஒப்புயவர்வற்ற பேரழகியாகிய பரத்தை அழகிய தழையாடை உடுத்தும் விழா நிகழ் களம் பொலிவு பெற வந்து நின்ற விட்டாள். அவள் பார்வையினின்றும் நம் கணவரைக் காக்க, தோழிமீர்; எழுமினோ எழுமின்!"

"மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்றுச், சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அந்தழைத் தைஇத் , துணை இலள்,
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநர்க் காக்கும்"
                     - நற்றிணை : 170:1-5

ஆடவரை அடிமை கொள்ளும் பரத்தையரின் முயற்சி பற்றிய மற்றொரு காட்சி இதோ; ‘'ஊரில் விழாவும் முடிந்து விட்டது, முழவின் முழக்கமும் அடங்கி விட்டது; இந்நியிைல் இவள் யாது கருதினளோ என்று கேட்பாயே யாயின், கூறுகிறேன் கேள். ஒரு நாள் தழை ஆடை உடுத்து, அத்தழை ஆடை அசையும் அல்குலை உடையவளாய்த் தெருவின்கண் இப்பரத்தை சென்றாள். அவ்வளவே, பழைய வெற்றிகள் பல கொண்ட மலையமான் திருமுடிக்காரி, அவ்வோரிக்கு உரிய நகரின் ஒப்பற்ற பெரிய தெருவில் வெற்றிக்களிப்போடு புகுந்தானாக , அதுகண்ட ஓரியின் மக்கள் ஒன்றுதிரண்டு ஆரவாரப் பேரொலி எழுந்துவிட்டது. அது கேட்டதும், ஆராய்ந்து கொண்ட, சிறந்த வளையல்களை அணிந்த அழகிய மேனியை உடைய இவ்வூர் மகளிரெல்லாம், தங்கள் கணவன்மார்களை, அவள் கண்ணில் படாவாறு காத்துக் கொண்டனர். அதனால் இவர்களும் நன்மை அடைந்தார்கள். நடந்தது இதுதான்”,

“விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று;
எவன்குறித் தனள் கொல் என்றி யாயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்திற்குப் பழவிறல்
ஓரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்கநேரார் புலம்போல்,
கல்லென் றன்றால் ஊரே, அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி.

எழில்மா மேனி மகளிர் -
வீழு மாந்தனர், தம் கொழுநரைக் காத்தே".
           நற்றிணை : 320

அளவுக்கு மீறிய பரத்தையர் ஒழுக்கம், இல்லற வாழ்க்கையில் பெரிய பூசலுக்கு வழிவகுத்துவிட்டது. ஊடல் எனப்படும், கணவன் மனைவியர்களுக்கிடையேயான சிறு பூசல், மருதத்திணை சார்ந்த பாடல்களின் கருப்பொருளாகிவிட்டது. கீழ் வரும் பாட்டு அது குறித்தது. "வெள்ளிய நெற்கதிரை அறுவடை செய்யும் உழவர் முழக்கும் தண்ணுமை ஒலிக்கு அஞ்சி, அவ்வயலில் அடங்கியிருந்த பறவைகள் எல்லாம் எழுந்தோடி நெருங்க அமர்தலால், வயல் மீது தாழ வளைந்திருக்கும் கிளைகளையுடைய மருத மரத்தின், பூங்கொத்துக்கள் உதிராநிற்கும், இரவலர்க்குக் கொடைப் பொருளாகத் தேர்களையே வழங்கும் வள்ள லாகிய விரான் என்பானுக்கரிய சிறந்த இருப்பையூர் போன்ற என் அழகெல்லாம் கெடுவதாயினும் கெடுக; என்னை நெருங்க உன்னை விடுவேனல்லேன். நெருங்கவிட்டால் என்வாய் உன்னை விலக்கினும், என் கைகள் உன்னை அணைத்துக் கொள்ளும். ஆனால், நீயோ பரத்தையின் மார்பால் மாசுபட்ட சந்தனம் பூசப்பட்ட மார்பினை உடையாய்; அப்பரத்தை தழுவியதால் வாடிய மாலையினை உடையாய்; அத்தகைய உன்னைத் தொடுவது, தொடத்தகாதன எனக் கழித்துவிட்ட தாழி முதலாம் கலங் களை எடுத்து ஆள்வதற்கு ஒப்பாகும். ஆகவே என் மனைக்கு வாரற்க; உன்னை அணைத்த அப்பரத்தை நெடிது வாழ்க"...

"வெண்நெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல்புள் இரியக், கழனி
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல்கவின் தொலையினும் தொலைக; சார
விடே என்; விடுக்குவ னாயின், கடைஇக்
கவவுக்கை தாங்கும்; மதுகையம் குவவுமுறை
சாடிய சாந்தினை ; வாடிய கோதையை,

ஆசில் கலம் கழீஇ யற்றும்;
வாரல்; வாழிய! கவைஇநின் றோளே”.
நற்றிணை : 350

கணவன் பிழையை, மனைவி, ஒரோவழி மன்னித்து, அவனை ஏற்றுக் கொள்வதும் உண்டு. “பாணனே! அருகே வருக! நல்ல அணிகலன்களை அணிந்த என் மனைவி, சுற்றத்தார் அனைவரும் கூடியிருந்து ஓம்ப, முதல் சூல் உடையாளாகி மகவு ஈன்று, நம் குடிவளர வழிசெய்து, நெய்யோடு கலந்த வெண்சிறுகடுகாம் விதைகளை நம் மாளிகையொகும் விளங்கப் பூச, பாயலில் படுத்திருந்தவளை நெருங்கி அழகிய கூந்தலை உடைய முதுபெண்டுமாகித் துயிலா நின்றனையே! என்னே நின் சிறப்பு! எனப் பலப்பல கூறிப் பாராட்டி மகவு ஈன்று மாண்புற்ற அவள் அழகிய வயிற்றை, என் கைக்குவளை மலரால் தடவிக் கொடுத்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன் போல் சிறிது பொழுது அங்கு நின்றிருந்த என்னை, மெல்ல நோக்கி, முல்லையின் அரும்புகள் போலும் பற்கள் தோன்ற சிறிதே நகைத்துப் பின்னர், வெட்கம் வந்துறவே, நிலமலர் போலும் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டு மகிழ்ந்த காட்சி, எனக்கு நகை தருவதாய் இருந்தது. அது குறித்து நகைத்து மகிழ பாணனே! வருக”.

“வாராய் பாண! நகுகம், நேரிழை

கரும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி, நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து, அவ்வரித் திதலை அல்குல் முதுபெண் டாகித், துஞ்சுதியோ? மெல் அஞ்சில் ஓதி ; எனப் பன்மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு, மெல்ல முகை நாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைத்து உவந் ததுவே'’

                           - நற்றிணை : 370</poem>}} தலைவியின் சினம் பெரும்பாலும் தணிவது இல்லை. கணவன் வாயில் வேண்டிப் பாணர்நண்பனைத் தூது போக்கினும், அது பயன் அளிப்பதில்லை . சினம் மாறா ஒரு மனையாள் கூறுவது இது: பாணனே! மகப்பெற்றதனால் உற்ற வாலாமை நீங்க எழுப்பிய புகையும் படிந்து, புதல்வனுக்குத் தீட்டும் மையும் இழுகி, ஆடையும் அழுக்குப் படிந்துள்ளது. சுணங்கால் அழகு பெற்ற இளைய கொங்கையின் இனிய பால் பெருக, அது கரப்பப் புதல்வனை அணைத்துக் கொண்டமை யால் தோளும் முடை நாற்றம் வீசுகிறது. ஆகவே, இவை போல்வனவற்றால் தூய்மை கெட்டுப் போகாமல் புதுப் பொலிவோடு இருப்பவரும், நல்ல பல அணிகளை - அணிந்தவரும் ஆகிய பரத்தையர் சேரிக்கண் தேரில் திரிந்து கொண்டிருக்கும் உன் தலைவனுக்கு, நான் தகுதியுடையவள் அல்லள். அதனால், பொன்கம்பி போன்ற நரம்புகளைக் கொண்ட யாழில் எழும் இசைக்கு ஏற்ப, இன்குரல் எடுத்துப் பாடுதலில் நீ வல்லவனே ஆயினும், கருதி வந்ததைப் பெறுவான் வேண்டி, என்னைத் தொழுது பாடுவது செய்யற்க குளிர்ந்த நீர்த்துறைகளால் நிறைந்த நல்ல ஊருக்கு உரியோனாகிய உன் தலைவனை இங்கிருந்து கொண்டு சென்று விடுவாயாக. பலராலும் பாராட்டப் பெறும் தகுதியுடையதாகிய என் மனையில் இருந்து நீ பாடாதவாறு, தெருவில் நெடும்பொழுது நிற்குமாறு தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் அந்நிலையை வெறுத்துக் குரல் எழுப்புகின்றன. ஆகவே, நான் விரும்பாத நிலையில், பயனில் சொற்களை மேலும் கூறிக் கொண்டு நிற்க வேண்டாம்". 

”நெய்யும் குய்யும் ஆடி, மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லப் புனிறுநா றும்மே;
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேன்; அதனால்
பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ்
எழாஅல், வல்லை ஆயினும்; தொழாஅல்,

கொண்டு செல், பாண! நின் தண்துறை ஊரனை
பாடுமனைப் பாடல் கூடாது, நீடுநிலைப்
புரவியும் பூண்நிலை முனிகுவ;
விரகில் மொழியல்; யாம் வேட்டது இல்வழியே”.
                  - நற்றிணை : 380.

போற்றா ஒழுக்கம் உடையராகிய பரத்தையரின் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஆடவர் செய்யும் தவறுகளுக்கு அளவே இராது என்பது நோக்கிக், கணவரை ஏற்க மறுக்கும் மனைவியரின் பிடிவாதத்தின் நியாயத்தன்மை உணரப்படும் பரத்தையர் ஒழுக்கம் கொண்ட கணவனால் புறக்கணிக்கப் பட்டாள் ஒருத்திக்கு அவள் தோழி கூறுவது, இது; “அன்னை போலும் அன்புடையாய்! நறிய நெற்றியையுடைய அரிவையே! காதில் குழை அணிந்து மார்பில் மாலை சூடி, கையில் தொடி அணிந்து விழாக் களத்தில் துணங்கை ஆடிக்கொண்டிருக்கும் தலைவனைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடலாம் என்று, என் அறியாமையால் ஆசைப்பட்டு, விழாக்களும் நோக்கிச் சென்று கொண்டிருக் கும்போது, நம்மிடம் அயலான் போல் நடந்துகொள்ளும் அவன், நெடிய பெரிய தெருக்கோடியில், ஒரு வளைவான இடத்தில் வேறு ஒரு வழியாகத் திடுமென வந்து எதிர்ப்பட, அவனை, “மனையாளைப் பிரிந்து பரத்தையர் பின் திரியும் உன்னைக் கண்டித்துக் கேட்பார் யாரேனும் உளரோ? அல்லது ஒருவருமே இலரோ'’ என்று நான் கேட்க, அவன் அதுபற்றி ஏதும் கருதாதான் போல், என்னைப் பார்த்து, ‘உன் நெற்றிப் பசலை நனிமிகு அழகு” என்று கூறினான். பகைவராலும் பாராட்டத்தக்க பெரும் சிறப்புடையான் என்பதை மறந்துவிட்டு, “நண்ப! நீ ஒரு நாணிலி” எனக் கடிந்து கூறிவிட்டேன்”

"அறியாமையின் அன்னை ! அஞ்சிக்
குழையன், கோதையன், குறும்பைத் தொடியன்:
விழவயர் துணங்கை தழுஉகம் செல்ல,
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,
நொதும லாளன் கதும் எனத் தாக்கலின்,

'கேட்போர் உளர்கொல்? இல்லை கொல்? போற்று' என
'யாளது பசலை', என்றனன்; அதன் எதிர்'
“நாணிலை எலுவ!” என்று வந்திசினே;
செறுநரும் விழையும் செம்மலோன், என,
நறுநுதல் அரிவை! போற்றேன்;
சிறுமை பெருமையின் காணாது, துணிந்தே".
                     - நற்றிணை : 50

துணங்கையாவது, ஆடவரும் பெண்டிரும் பங்கு கொள்ளும் ஒருவகை ஆடல்; ஆடுங்கால், கைகளை வளைத்து ஒருவரையொருவர் தழுவிக்கொள்வர். அது, மக்களைப் போலவே, பேய்களுக்கும் பொதுவானது. ”கண்டாரை உளம் நடுங்கப் பண்ணும் நடையும், கண்டார்க்கு அச்சம் ஊட்டும் உருவமும் உடைய பேய்மகள். செங்குறுதி துழாவிய கூரிய நகங்களைக் கொண்ட விரல்களால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்டுவிட்ட முடை நாற்றம் உடைய கரிய பிணத்தின் தலையைத் தொடியணிந்த கையில் ஏந்திக் கொண்டு, பகைவர்க்கு அச்சம் வருமாறு, எதிர் சென்று அழிக்கும் போர்க் களத்தைப் பாடித் தோள் குலுங்க அப்பிணத்தைத் தின்னும் வாயுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடா நிற்கும்".

"உருகெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்,
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்,
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி, வெருவர
ஏன்று அடு விறற்களம் பாடித்து, தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க".
திருமுருகாற்றுப்படை 57-56

யாழ் இசைக்கும் பாணரும் கூத்து ஆடும் கூத்தரும் கூத்தியரும், நடனமாடும் விறலியரும் ஒன்றுகலந்தே வாழ்வர். ஒருவருக்கு ஒருவர் துணைபுரிந்து கொள்வர். அவர்கள், பெரும்பாலும் பேரரசர்களாலும், குறுநிலத் தலைவர் களாலும் பேணப்படுவர். அவர்களில் ஒரு குழுவினர், ஒருமுறை, பெரிய வில்லாளனாகிய ஒரு குறுநிலத் தலைவனைச் சென்று கண்டனர். அவர்களுள் தலைவன், பாணன். ஆகவே, அவன் ஏனையோரை நோக்கி, ‘'நான் பாடுகிறேன், விறலி; நீங்களெல்லாம் முழவினை முழக்குங்கள், யாழ்களில் பண்ணிசை எழுப்புங்கள் ; களிற்றின் தொங்கும் கைபோலும் தூம்பு எனப்படும் பெருவங்கியத்தை இசையுங்கள்; எல்லரி எனப்படும் சல்லியை வாசியுங்கள். ஆகுளி எனப்படும் சிறுபறையை அறையுங்கள்; பதலை எனப்படும் ஒருகண் மாக்கிணையின் ஒரு பக்கத்தை மெல்லக் கொட்டுங்கள்; நமது தொழில் உணர்த்தும் அடையாளக் கோலாம் மதலை மாக்கோலை என் கை தாருங்கள்'’.

"பாடுவல்; விறலி! ஓர்வண்ணம், நீரும்
மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்;
கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பை என இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தம்மின்".
                புறம் : 152 : 13-18

பாட்டுடைத் தலைவன், அவர்களுக்கு இறைச்சி கலந்த உணவும், இனிய மதுவும், பொன்னும் நிறையத் தருவன் என்பது கூறத் தேவை இல்லை. பாணன் கூற்றில் கூறுவதானால், “வேட்டையில் தான் எய்து கொன்ற மானின் நிணத்தோடு கூடிய இறைச்சியாம் பக்குவமாகப் பண்ணப்பட்ட உணவோடு, உருக்கிய ஆன் நெய்போலும் மதுவையும் தந்து, தன் மலையில் கிடைத்த கலப்பில்லாத பொன்னொடு, பல்வகை மணிக்குவியல்களையும், வாங்கிக் கொள்ளுங்கள் என வழிநடையில் வாரி வழங்கினான்”.

"வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான்நிணப் புழுக்கோடு
ஆன் உருக் கன்ன வேரியை நல்கித்,
தன் மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கி யோனே” (புறம் : 152 : 25-30)

கடற்கரைத் துறைமுகங்கள்

கிறித்துவ ஊழியின் தொடக்கத்தில், உரோமாபுரியோடு நடைபெற்ற வாணிகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியோடு, கடற்கரை நகரங்களும் மிகவும், முக்கியத்துவம் உடையதாக உயர்ந்துவிட்டன. அவ்வாறே இலக்கியங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரையில் வடகோடியில் குறிப்பிடக்கூடியது, பிற்காலத்தில் மல்லை என்றும், மேலும் பிற்பட்ட காலத்தில் மகாபலிபுரம் என்றும் அழைக்கப் பட்டதான மாவிலங்கைத் துறைமுகமாம். விளையாடும் கூட்டமாகிய சிறந்த தொடி அணிந்த மகளிர், பன்றிகள் உழுது சேறாக்கிய மண்ணைக் கிளறினால் அதன் கண் புலால் நாறும் ஆமை முட்டைகளையும், தேன் நாறும் ஆம்பல் கிழங்குகளையும் பெறும் மண்வளமும், இழும் எனும் ஒலி ஓயாது ஒலிக்குமாறு நீரை வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கம் மதகுகளைக் கொண்ட நீர்வளமும் உடைய பெருமைமிக்க மாவிலங்கை".

ஓரை ஆயத்த ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழும் என ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கை "
    -புறம் : 176 : 1-6

இத்துறைமுகம் மற்றுமோர் இடத்தில், மணம் நாறும் மலர்களையுடைய சுரபுன்னை , அகில், சந்தனம் ஆகிய மரங்களை நீராடும் துறையில் நீராடும் மகளிர்களின் தோள்களுக்குத் தெப்பம் ஆகித் துணைபுரியுமாறு, கரைகளைக் குத்தி அழிக்கும் பெருவெள்ளம் அடித்துக் கொண்டுவந்து தரும் ஆற்றுவளம் மிக்கதும், அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்த தொல்பெரும் நகராம் இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய போதே பெற்றதுமாகிய மாவிலங்கை" எனக் கூறப்பட்டுள்ளது.

நறுவீ நாகமும், அகிலும், ஆரமும்
துறையொடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய

பொருபுனல் தரூஉம் போக்கரும் மரபின்
தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய நன்மா
விலங்கை”
                 - சிறுபாணாற்றுப்படை : 116 - 120

காவிரி கடலொடு கலக்குமிடத்தில், தொல்லூாழிக் காலத்திலிருந்தே புகழ் பெற்றிருந்த புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் இடம் பெற்றுளது. ஆகவே, அது பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அப்புகார்த் துறைமுகம் “ மேலே விரித்த பாயைச் சுருட்ட வேண்டாமலும், ஏற்றிய பாரங்களை இறக்கிவிட வேண்டாமலும், ஆற்று முகத்துத் துறைமுகத்துள் புகுந்த பெரிய கலத்திலிருந்து பணியாட்கள், பண்டங்களை, இடைநிலை நகருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்” சிறப்புடையதாகக் கூறப்பட்டுளது.

"மீப்பாய் களையாது, மிசைப்பரம் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெரும்கலம், தகாஅர்,
இடைப்புலப் பெருவழிச் சொரியும்”
                    புறம் : 30 : 11-13

பூக்கள் உதிர்ந்து பரந்து கிடக்கும் அகன்ற துறைகளை யுடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர், நுண்மணல் திரளுமாறு மேடாக்கிய வெண் மணற் குவியல்களையும், புதுவருவாய்களையும் உடைய ஊர்களை உடைய செல்வவளம் மிக்க சோழ வேந்தர்களால் புரக்கப்படும் உலகமெல்லாம் பாராட்டும் நன்மை மிக்க நல்ல புகழ் உடையதான நான்மறைகளாம் பழம் நூல்களை அளித்த முக்கண் செல்வன் கோயில் கொண்டிருக்கும் ஆலமுற்றம் என்னும் இடத்தில் அழகுற எடுக்கப்பட்ட பொய்கைகளைச் சூழ்ந்திருக்கும் பூஞ்சோலைகளில், மனையுறை மகளிர், அழகுறச் செய்யப்பட்ட மணற் பாவைகளை வைத்து விளையாடும் துறையினை உடையதும், மகரக் கொடிகளை உச்சியில் கொண்ட வானளாவ உயர்ந்த மதிலையும், முடி அறியப்படாவாறு மிக உயர்ந்த மாளிகைகளையும் உடைய புகார்” என்றும், பூக்கள் மலர்ந்து மணக்கும் நீண்ட உப்பங்கழிகளின், நடுவண், பெரும்புகழ் வாய்ந்த காவிரியின் கரைக்கண் உள்ள நகரம்" என்றும் கூறப்பட்டுளது.

பூவிரி அகல்துறைக் கனைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர்கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர்,
ஞாலம் நாறும் நலங்கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவை துறை
மகர நெற்றி வான்தோய் புரிசைச்,
சிகரம் தோன்றாச் சேண்உணர் நல்இல்
புகா அர்"
                 -அகம் : 181 : 11-22

பூவிரி நெடுங்கழி நாப்பண்; பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினம்.
                   அகம் : 205 : 17-12

இரண்டு பாடல்களில் கூறப்பட்டிருக்கும், புறந்தை எனப்படும் புறையாறு, கிழக்குக் கடற்கரையில் உள்ள மற்றொரு துறைமுகப்பட்டினம், பெரிய அலைகள், ஒலியோடு, இயக்கமும் அடங்கியிருந்த, மேகம் சூழ்ந்த இரவில், கொழுத்த மீன்களைப் பிடிக்கும் பரதவர், பரந்த கடலில், தங்கள் மீன்பிடி திமில்களில், கடலின் இருளும் நீங்குமாறு ஏற்றியிருக்கும் விளக்குகள், போரில் புறம் காட்டாக் கோட்பாட்டினை உடைய வேந்தன் பாசறைக்கண் உள்ள, ஒயாது ஆடிக்கொண்டேயிருக்கும் இயல்புடையவாய, போர்யானைகளின் அழகிய முகத்தில் பூட்டியிருக்கும் முகபடங்களின் ஒள்ளிய சுடர்போலத் தோன்றும் இடமாகிய, பாடிவரும் இரவலர்களைப் பிறரிடம் செல்லாவாறு வளைத்துக் கொள்ளவல்ல கைவண்மை வாய்ந்த கோமகனாகிய, குதிரைகள் பூண்ட சிறந்த தேர்ப்படையுடைய பெரியன் என்பானுக்கு உரிய, மலர் விரிந்த கொத்துக்களைக் கொண்ட புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புறந்தை” என்றும், ‘'கள் உண்டு மகிழ்ந்திருப் பவனும், நல்ல தேர் உடையவனும் ஆகிய பெரியன் என்பானுக்கு உரிய , கள் மணக்கும் பொறையாறு” என்றும் கூறப்பட்டுளது.

“பெருந்திரை, முழக்கமொடு இயக்கு அவிந் திருந்த
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடியல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன், விரியினர்
புன்னையம் கானல் புறந்தை முன்துறை”
                 - அகம் : 100 : 5- 13

‘'நறவுமகிழ் இருக்கை, நற்றேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு”
            - நற்றிணை : 131 : 7-8

பாண்டியரின் முக்கிய துறைமுகம், கொற்கை. அது முத்துக்கள் விளைகின்ற பரந்த கடலையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறைமுகம் ; “முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை” (நற்றிணை : 23 : 6) என்றும், வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியர்கள், அறநெறி கெடாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் கொள்ளும் முத்து ‘'மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கைஅம் ‘பெருந்துறை முத்து” (அகம் : 27 : 9-10) என்றும்; வீசும் அலைகள் கொண்டு வந்து குவிக்கும், குளிர்ந்த இனிய ஒளியினையுடைய முத்துக்கள். ஊர்பவர். விரும்புமாறு நடக்கும் குதிரைகளின் கால் வடுக்களை மறைக்கும் நல்ல தேரையுடைய பாண்டியரது கொற்கை. இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம். கவர்நடைப் புரவிக் கால்வடு தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை ' (அகம் : 130 : 9-11) என்றும், வெற்றியே காணும் போரில் வலலவர்களாய் பாண்டியரது, புகழ் மிக்க சிறப்பினையுடைய கொற்கை : முன் துறையில் கிடைக்கும் ஒளிவீசும் முத்துக்கள்: "விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தம்" (அகம் : 207:3-5) என்றும், கடல் நீர்ப் பரப்பில் சென்று, பல மீன்களையும் பிடிப்பவர், அவற்றுடன் சேரக்கொண்ட முத்துச் சிப்பிகளை, நாரால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளின், மகிழ்ச்சி மிக்க விலையாகக் கொடுக்கும். மிக்க புகழ் வாய்ந்த கொற்கை", " பரப்பில் பன் மீன் கொள்வர் முகந்த சிப்பி , நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை (அகம் : 296 : 8-10) என்றும், விளங்கும் பெரிய கடலில், எதிர்த்தாரைக் கொல்லும் சுறாமீன்களை நீக்கிவிட்டு வலம்புரிச் சங்குகளை முழ்கிக் கொணர்ந்த பெரிய மீன்பிடி . படகுகளை உடைய பரதவர், பிடித்த அச்சங்குகளின் கல்லெ னும் ஒலியினை முழுக்க ஆரவாரம் மிக்க கொற்கை நகரத்தார் வரவேற்கக் கரைசேர்வர் என்றும் பாராட்டப் பட்டுளது.

இலங்கு இரும் பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலித்தலைப் பணிலம் ஆர்ப்பக் கல் எனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்".
                     -அகம் : 350 : 10-13

சேரர்களின் முக்கிய துறைமுகம் முசிறி . "சேரர்க்கு உரிய சுள்ளியாகிய பேரியாற்றின் வெள்ளிய நுரைகள் சிதறி விலகுமாறு, யவனர்கள் கொண்டுவந்த அழகிய வேலைப் பாட்டால் சிறப்புற்ற மரக்கலம், பொற்காசுகளோடு வந்து மிளகுப் பொதிகளோடு மீளும், வளம் மிக்க முசிறி".

சேரலர்,
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'.

மீன் விற்று விலையாகப் பெற்ற நெல்லைக் குவித்து, அந்நெல்லைத் தோணிகளில் ஏற்றிவந்து மனைகளில் நிறைத்து மனைகளில் குவிந்துகிடக்கும் மிளகுப் பொதி ‘களைப் பேரொலி மிக்க கடற்கரையில் தாறுமாறாகப் போட்டு வைப்பர். கலங்களில் வந்த பொற்காசுகளை உப்பங் கழிகளில் நிற்கும் தோணிகளில் கரை சேர்ப்பர். மலைபடு பொருள்களையும் கடல்படு பொருள்களையும் ஒன்று கலந்து, வந்து புகழ் பாடுவார்க்கு வழங்குவர். கள்வளம் மிக்கதும், பொன்மாலை அணிந்த சேரர்க்கு உரியதுமான, முழங்கும் கடல்போல் முரசு முழங்கும் முசிறி .

‘'மீன் தொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து;
மனைக் குவை இய கறி மூடையால்
கலிச் சும்மைய கரைகலக் குந்து;
கலம் தந்த பொற்பரீசம் -
கழித்தோணியால் கரை சேர்க்குந்து;
மலைத்தாரமும் கடல்தாரமும்
அலைப்பெய்து வருநர்க்கு ஈயும் -
புனலம் கள்ளின், பொலந்தார்க் குட்டுவன்,
முழங்கு கடல் முழவின் முசிறி”
           புறம் : 343 : 7-10

கடற்கரை வாழ் மக்கள், கடலில் கலங்கள் கவிழ்ந்து போவதை அறிந்திருந்தனர். அதனால்தான் அடுத்துவரும் பாட்டில், அழகிய உவமை இடம் பெற்றுளது. “பாணன் கையில் உள்ள, யாழுக்கு உரிய இலக்கணப் பண்புகளோடு கூடிய நல்ல யாழ், அழகிய வண்டுகள் போல இம் எனும் இசை எழும், நீ வழக்கமாக வரும் தெருவில், நீ வருவதை எதிர் பார்த்து உன் மார்பை, முன்பு தமக்கு உரியதாகப் பெற்றிருந்த, சிறந்த அணிகளை அணிந்திருந்த பரத்தையர் பலரும், நீ கைவிட்டுவிட்ட கவலையால், கண்களிலிருந்து வெப்பம் மிகுந்த கண்ணீர் சொரிந்தவாறே, கொடிய புயல் காற்று கடுமையாக வீசுவதால் துன்புற்றிருந்தபோது, கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலம் கவிழ்ந்துவிட, மேலும் கலக்க முற்றுத் தாமும் ஒரு சேரக் கடலில் வீழ்ந்து ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையை, வீழ்த்த அனைவரும் ஒருசேரப் பற்றிக் கொண்டு, தாம் தாம் தனித்தனி இழுப்பது போல, உன் கைகளைப் பற்றி, அவரவர் நத்தம் பக்கம் இழுக்க, அவரிடை அகப்பட்டு நீ வருந்திய வருத்தத்தை நான் கண்கூடாகக் கண்டேன்: கண்ட என்னால் யாது செய்ய இயலும்?"

"கண்டனென்; மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென் இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி, நின்
மார்புதலைக் கொண்ட மாண் இழை மகளிர்,
கவலே முற்ற செய்து வீழ் அரிப்பனி ,
கால் ஏழுற்ற பைதடு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன்பிறப்பு
பலர் கொள் பலகை போல்
வாங்க வாங்க நின் தூங்கு அஞர் நிலையே"

         நற்றிணை : 30

இந்த அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பல செய்யுள்களிலும், இயல்பான அல்லது கற்பனைத் திறமான இந்தியக் கலையின் முழு முதல் மூலமாம் சிறப்பியல்புகளைத் தனியே காணலாம். இந்தியக் கலையின் நோக்கம், தொடக்க நிலையில் அழகு படுத்துவதே ; ஒன்றைப் பார்த்து, அதைப் பின்பற்றுவதன்று. கலைஞன், இலக்கியப் பொருளாகிவிட்ட இயற்கைப் பொருட்களை, 'இற்று' எனல் போல், உள்ளது உள்ளவாறே கூறிவிடுவதை விரும்பவில்ல. மாறாகத், தன் கையில் கிடைத்த அப்பொருளை அழகு செய்வதற்கான அளவிற்கு எல்லையே இல்லை. எடுத்துக் கையாண்ட பொருளின் ஒவ்வொரு சிறு கூறும், இயற்கையோடு கூடிய தாகத் தெளிவாகப் புலப்படவல்ல, அணிகளின் சிறுகூறு களால் அழகு செய்யப்பட்டிருக்கும். ஆகவே, செய்யுள் நடையில், ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கு முன்பும், ஒரு பெயரடைச் சொல் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப் படும் இடை ஒரு தொடராக அமைந்துவிடின், அத்தொடரில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பெயர்ச்சொல்லின் முன்னும் ஒரு பெயரடை கொடுக்கப்படும். இம்முறை , கிரேக்கக் கலைக் கொள்கைகளில் பயிற்சி பெற்றிருக்கும் ஓர் உள்ளத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கி, ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பதை மிகக் கடினமாக்கும் வகையில், முழுச் செய்யுளையும் நோக்கும்போது, ஓவியங்களால் ஒப்பனை செய்யப்பட்ட வாயில் கோபுரம் போல் தோன்றும் வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்தியக் கலைஞர்களின் உள்ளம், வெப்ப மண்டலக் காடுகளில், இலைகள் மலர்கள் ஆகியவற்றின் தங்குதடையற்ற வளமைக்கு அடிமைப்பட்டுப் போனதன் விளைவான, அவை பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அக்காலத்திய இந்தியக் கலை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் நின்றது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1920


திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,


தலைமை நிலையம் : 154, டி. டி. கே. சாலை, ஆள்வார்பேட்டை, சென்னை - 18.


கிளை நிலையங்கள் :

79, பிரகாசம் சாலை, (பிராடுவே) சென்னை - 108.

91, கீழைத் தேர்த் தெரு, திருநெல்வேலி - 6.

18, ராஜவீதி, கோயமுத்தூர் - 1.

28. நகர் உயர் பள்ளிச் சாலை, கும்பகோணம்-1.

24. நந்தி கோயில் தெரு, திருச்சி - 2.

36. செர்ரி ரோடு, சேலம் - 1..

70/71, தானப்ப முதலி தெரு, மதுரை - 1.

அப்பர் அச்சகம், சென்னை - 600 106.