ஆலமரத்துப் பைங்கிளி/பிறந்த நாள்
14 பிறந்த நாள்
எட்டடிக் குச்சுக்குள்ளே வாசம் செய்துவந்த அவள், அந்த இரண்டடுக்கு மாளிகைக்குள் நுழைந்து வேலை செய்யும் அதிர்ஷ்டத்தைப் பெற்றதானது, தன்னுடைய பூர்வ ஜென்மத்தின் பலனே என்பது அவளது அசைக்க முடியாத-அந்தரங்க சுத்தியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையே அவளுக்கு வாய்த்திட்ட ஓர் எதிர்காலமாகவும் தோன்றியது. ஆகவே, அவள் அந்தப் பெருமனையின் ஓர் அங்கமாகக் கருதப்படும் அளவுக்கு உழைத்தாள். உண்மை தப்பாமல் உழைத்தாள். காஞ்சிவரம் பட்டுப் புடவைகளும் ஷிபான் ஸில்க் சேலைகளும் புழுங்கிய இடத்தில், அவள் மானம்புச்சாவடிக் கைத்தறிச் சேலையை கிழிசல் மறைத்து, அழுக்கைத் கசக்கித் துவைத்துக் கட்டிக் கொண்டுதான் நடமாடினாள்!
'நாகரிகம், செல்வந்தர் இல்லங்களிலேதான் தோன்றுகிறது’ என்று ஒரு வாசகம் உண்டு. இது முற்றிலும் உண்மை. இல்லாவிட்டால், அந்தப் பங்களாவில் ஒரு வாரத்துக்குப் பதினைந்து தினுசுப் புடவைகளும் பதினைந்து ரக சோளிகளும் அர்ஜண்ட் சலவைக்கு அனுப்பப்படுமா?
முன்மாதிரி வேலாயி இல்லை இப்போது. தலைச்சன் பிறந்தும் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. பழைய தெம்பு அழிந்தாலும், உடற்கட்டு கட்டுவிடவில்லையானதால், அவள் ஒடியாடி அலுவல் பார்க்க மனம் சளைக்கவே மாட்டாள். அவள் கூட தன் எஜமானி அம்மாளிடம், அம்மா! உங்க புடவைங்களேயெல்லாம் நானே ரைட்டாத் துவைச்சுப் போடுறேனுங்க!” என்று நயம் பயமாகச் சொல்லியுங்கூட, தாரிணிதேவிக்கு அந்த யோசனை கேவலம் பத்து ரூபாய் சம்பளத்துக்கும் மிச்சம் மீதிகளைச் சாப்பிடுவதற்குமே உரிய ஒரு வேலைக்காரியின் தகுதிக் குறைவான ஒரு யோசனையாகவேபட்டது. எனவேதான் அவள் முகத்தில் அடித்த மாதிரியாக, ‘நீ துவைச்சுக் கிழிச்சேடி போ!’ என்று எரிந்து விழுந்தாள்.
வேலாயிக்கு என்ன, வேலை மிச்சம்! அந்த நேரத்தில் சின்ன எஜமான் ராஜாவை "ரோலிங் சேரில்” வைத்து ஆட்டி விளையாட்டுக் காட்டினல் போச்சு! அதே சாக்கில், தன்னுடைய தலைமகளையும் யாரும் பார்க்காத சுபவேளையிலே சுழன்றாடும் நாற்காலியில் குந்தவைத்து, ஆட்டிவிட்டு; சிரிக்கக் செய்து, தானும் சிரித்துப் பூரித்தால் போச்சு! 'வேலாயி, உம்பாடு ஷோக்குத்தான்! பெரிய வீட்டிலே வேலை செய்யிறே என்னேப் பாரேன், ஒரு நாளைக்கு இந்தத் தஞ்சாவூரை ஒம்பதுவாட்டி சுத்துறேன், சுத்தியும் நம்ம பழைய பேப்பர் வியாபாரம் சுரத்துத் தட்டு தான்னா அதான் கிடையாதாக்கும்! ம்...! என்று அவள் கணவன் காத்தமுத்து சமயா சமயங்களில் மனம் காய்வதும் மெய்தான்.
எனக்கென்னுங்கிறேன் கவலை மச்சான்! எங்க பெரிய எசமானருக்கு லேவாதேவி வியாபாரம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கிலே பணம் புரளும். ஒருநாளைக்கு எம்புட்டு வெள்ளைக் கடுதாசி எழுதிஎழுதி முத்திரைத் தலை ஒட்டி கையெழுத்து எல்லாம் வாங்குறாரு எங்க கணக்குப்
பிள்ளை! அடேயப்பா! நாளைக்கு எங்க சின்ன ஐயா கிட்ட கொத்துச்சாவி வந்தானதும், அப்பாலே எம்பாடு வேட்டைதான்! அப்புறம் நம்ம செவந்திக்குட்டிக்குக்கூட நல்ல அதிர்ஷ்டம்தான்! என்று மெய்மறந்து போய்விடுவாள் வேலாயி கொண்டவளின் பேச்சைக் கேட்க கேட்க, காத்தமுத்துவுக்குக் கூட வ. உ. சி. நகர், ராஜப்பா நகர், மேற்கு அலங்கம், கீழவாசல், மானம்புச் சாவடி என்று கால்கடுக்கக் சுற்றியலேயும் சோர்வில் ஒர் ஆறுதல் கனியவே செய்தது.
மூன்று மாசமாக இந்த நாடகம்!
தாரிணிதேவியார் வேலைக்காரியைக் கூப்பிடுததற்கு ஒரு 'காலிங் பெல் ' வாங்கி வைக்க வேண்டுமென்று விழைந்தாள். பின், என்னவாம்? கேவலம், ஒரு வேலைக் காரியை-'செர்வண்ட் மெய்டை' அழைக்கக்கூட இப்படித் தொண்டைத் தண்ணீரைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறதே?
கொல்லப்புறத்தில் தென்னங்கன்றின் நிழலில் குத்துக் காலிட்டுக் குந்தியவளாக, பாத்திரம் பண்டம் கழுவித் தேய்த்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள், எஜமானியின் ஒன்பவதாவது சிறுமூச்சுப் பெருங்குரலைக் கேட்டு ஓட்டமாக ஓடினாள். "அடியே...நீ என்னடி!” சரி...சரி வருகிற வெள்ளிக்கிழமை நம்ம ராஜாவுக்கு எங்க ராஜாவுக்குப் பிறந்த நாள் விழாவாக்கும்! வேலை நிரம்பக்கிடக்குது ஒடியாடி!’ என்றாள்.
பிறந்த நாளா? சின்ன முதலாளி பிறந்துதான் முனுவருசம் ஆகப்போகுதே! பிறந்த நாளுன்னா என்னவாம்?
எல்லாக் கேள்விகளையும் கேவலம் ஒரு வேலைக்காரி, பற்களில் நாவை இழைத்துக் கேட்டுவிட முடியுமா? மணி ஏழு அடித்தது.
ராஜாவுக்குக் குளிப்பாட்டிச் சட்டை போட வேண்டும்.
வேலாயி உள்ளே பார்வையினைச் செலுத்தினாள்.
பெரிய ஐயாவும் கணக்குப்பிள்ளை ஒருவரும் சிறிய பீரோவைத் திறந்து போட்டுக் கொண்டு அதன் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்கள். புரோநோட்டுக்கள் சிதறியிருந்தன. குறிப்புச் சிட்டை கணக்குப் பிள்ளையின் கையில் இருந்தது. மாதக் கடைசி செல் வைக்க வேண்டியவைகளையும், வட்டி வாங்க வேண்டியவைகளையும் காலவதி ஆகும் தருணத்தை நெருங்கியவைகளையும், காதுகிள்ளி பைசல் ஆக வேண்டியவைகளையும் இனம் பிரித்து செட்டில் செய்ய வேண்டாமா? அந்தக் குவியலுக்கு மத்தியில்-அதாவது, ஆயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கி ஆறு காசு வெள்ளைக் காகிதங்களாக வடிவெடுத்த அந்தப் பிராமிஸ்ரி கோட்டுக் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருந்த ராஜாவைக் கைத்தாங்கலாகப்பற்றி இழுத்துச் செல்வதற்குள் வேலாயிக்குப் பெருமூச்சு முட்டிற்று. கால்மூட்டு வலித்தது. நாலு வீசை தாளுமோ? ப்யூ! நான் என்னத்தைக் கண்டேன்? பொட்டைச்சி’
திலகர் திடலில் ஏதோ கூட்டம். கதிர் அரிவாள் கொடிகள் பறந்தோடின. மைக்ரடோன் வைத்துப் பேசிச் சென்றார்கள்!
வேலைக்காரிக்கு வேடிக்கைப் பார்க்கிற புத்தி இருக்லாமா?
ராஜா இப்போது ஜம்மென்று இருந்தான். யாட்லி பவுடர் பூசும் உறவும் உரிமையும் அவன் அம்மாவுக்கே உண்டாம்!
வேலைக்காரி வந்து தலையைச் சொறிந்தபடி நின்றாள். தலையில் பேன் இல்லை. உப்பு புளிக்குக் காசு வேண்டும். ஆமாம், சம்பளத்தில்தான்! அவள் மச்சானுக்குச் சோறு ஆக்கிப் போடவேண்டாமா? செவந்திக்குட்டிக்கு நேரம் காலம் தெரியவே மாட்டேனென்கிறது. அழுவதற்கு! ஆனாலும் பெற்ற வயிறு துடித்தது.
“இருடி!"
பங்களாச் சொந்தக்காரி திரும்பினாள். ஒரு கட்டு நியூஸ் பேப்பர் வந்து விழுந்தது. "இந்தாடி! இதை உம் புருஷன் கிட்டே கொடுத்து வித்து அந்தப் பணத்தை சம்பளத்திலே கணக்குவச்சிக்கிட்டு நீ எடுத்துக்கடி!" என்றாள் அதிகாரத் தோரணையுடன்.
'அம்மா! வந்து...’ என்று பல்லக் காட்டடினாள், வேலாயி. பல் வலியா ஊஹூம்!
‘அரை ரூவாகூட தாளாதும்மா வந்து.’...
‘போடிபோய்த் தொலை! மெட்ராஸ் வேலைக்காரி கூட உங்கிட்ட பிச்சை வாங்கணும்! சரி பேப்பர் பணத்தை நீயே இனமா எடுத்துக்கடி! ஐயா காதுக்கு எட்டப் போகுதடி! ஒடிட்டு ஜல்தியா வரவேணும்!’
அனுமத்தாக ஒரு ரூபாய் லாபம் கிட்டிய மகிழ்வின் திளைப்பில், பிறந்த நாளின்ணு என்னுங்க அம்மா? என்று கேட்டுத் தெளிய வேண்டுமென்று கொண்டிருந்த நப்பாசை ஈடேறவில்லை!
செவந்திக் குட்டியையும் பேப்பர் கட்டையும் மாற்றி மாற்றித் தாக்கி வந்து குடிசையை அடைத்தவள், பேப்பர்க் கட்டைப் பரணில் வீசிவிட்டு,செவந்திக்குட்டியை மண்தரையில் வாகு பார்த்துவாட்டமாக உட்காரவைத்து அருமை மகளுக்குப் பாலமுதம் ஊட்ட, கொட்டடி
ரவிக்கை முடிச்சுக்களை அவிழ்த்த நேரத்தில், காத்தமுத்து பேப்பர் இருக்கா, பேப்பர்! கல்கி, ஆனந்த விகடன், குமுதம், தினமணி பேப்பர்!’ என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைந்து, பெரிய விகடத்துணுக்கைச் சொல்லி விட்டவன் போலச் சிரித்து வைத்தான். இம்மாதிரி சந்தர்ப்பங்களிலே சிரிக்காவிட்டால் ஆபத்து என்பதை ஊகித்து வைத்திருந்த வேலாயியும் கடனுக்குச் சிரித்து வைத்தாள். காலைக் கஞ்சியை கோப்பையில் வார்க்கும் பொழுது, ஆமாங்கிறேன். பிறந்த நாளுன்னா அது என்னவாம்?’ என்று வினவினாள்.
பெரிய மனிதர்களின் காம்பவுண்டுகளிலே புழங்குகிறவனுக்கு மனைவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யத் தெரியாமல் இருக்குமா? சாங்கோபாங்கமாகச் சொன்னான் ! அப்படீன்னு மச்சான்! நம்ம செவந்திக் குட்டிக்கும் ஒரு பொறந்தநாள் வைபோகம் கடத்திப்புடலாமே! ஆமா, வார செவ்வாய் வந்தாக்க நம்ப பொண்ணு பொறந்து வள்ளிசா ஒரு வருசம் ஆகிடுமே!’ என்றாள். பெற்ற மனத்தில் தழைத்த மகிழ்வின் காரணமாக, அவனுக்கு ஒரு கரண்டி அயிரை மீன் சுண்டல்க் குழம்பு கூடுதலாகவே கிடைத்தது!
ராஜாவின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தேற கேட்கவும் வேண்டுமோ? அழைப்புக்கள் ரயிலேறிப் போனதுதான் தாமதம், உற்றவர்களும் உறவுக்காரர்களும் ரயிலேறி வந்து விட்டார்கள். கடைசி மைத்துனன் மட்டும் லடாக்கில் அகப்பட்டுக் கொள்ளவே, தேவியார் ஆயிரம் முறை அந்தப் பாழாய்ப் போன சீனக்காரனே வறுத்தெடுத்து விட்டாள்!
குமாரி குந்தளா நடனம்.
ஶ்ரீமதி மோகனாம்பாள் பாட்டுக் கச்சேரி, பரிசுகள் எத்தனை, படப்பிடிப்புக்கள் எத்தனை! விழாவுக்குத் தலைமை தாங்கிய புதுக் கலெக்டர் குழந்தைக்கு அளித்த ஆசிகள் எத்தனை!
வேலைக்காரி வேலாயியும் அவள் பிராணபதியான காத்தமுத்துவும் மணிக்கூண்டுப் பொடியன் விற்ற இஞ்சி முரப்பா'வை ஆளுக்கு ஆறு காசுக்கு வாங்கித் தின்ற தென்னவோ, உண்மையிலும் உண்மையே!
வேலாயிக்குச் செவ்வாய்க் கிழமைதான் சிந்தனையாக இருந்தது. இன்னம் ரெண்டே ரெண்டு நாளுதான் மிச்சம் கெடக்குது. மச்சான் கிட்டயிருக்குற காசையும் உண்டிக் கலயத்திலே இருக்குற சில்லறையையும் சேத்துச் செலவு செஞ்சு எங்க செவந்தியோட பொறந்த நாளே திருவிழா கணக்கிலே கொண்டாட வேணும்! என்னம்மோ, விரலுக்குத் தக்கின வீக்கம்! ஏழைக்குத் தக்கது எள்ளுருண்டை சின்னவருக்கு வந்து குமிஞ்சாப்பிலே பரிசுங்க எதுவும் எங்கக் குட்டிக்கு வராட்டியும், கடைசிப் பட்சம் எங்க எசமானி அம்மாவானும் ஏதாச்சும் இனம் தருவாங்க கட்டாயமா!’
கை ஓய்வான பொழுது.
வேலாயியின் பார்வைக்கு தாரிணிதேவி இலக்கானாள். தன் அபிலாஷையை பிட்டுப்பிட்டு வைத்துவிட்டாள் வீட்டுப் பணி இயற்றுபவள்!
ஆத்தாடி கேட்டீங்களா கூத்தை ஆளுன்னாலும் ஆளு நீ அம்மன்பேட்டை ஆளுங்கிறதை நிரூபிச்சிட்டீயேடி! போடி போ! உன் பொண்ணுக்குப் பிறந்த நாள் ஒண்ணு. தான் குறைச்சலாக்கும் வேறே யார் காதிலேயும் இதைச் சொல்லாதே! பைத்தியமின்னு உன்னே நினைச்சிடப் போருங்க!’ என்று கேலிச் சிரிப்புடன் பேசினாள் தாரிணி.
வேலாயிக்கு நெஞ்சிலடித்த மாதிரி இருந்தது அப் பேச்சு. 'ஏம்மா! பணக்காரங்க மட்டுந்தானா அவங்க அவங்க குழந்தை குட்டிகளுக்குப் பிறந்த நாள் வைபவம் கொண்டாடுறது? ஏழை பாழைங்க கொண்டாடப் புடாதின்னு சட்டம் உண்டுங்களா?’ என்று பொங்கி வந்த ஆத்திரத்துடன் கேட்டுவிட்டாள் வேலாயி.
தாரிணிக்குக் கோபம் வந்ததே, பார்க்கவேண்டும்: பவுடர் அப்பியிருந்த முகம் கறுப்பாகச் சிவந்தது. அவ்வளவு கோபம்! சீ நாயே! ஓடு என் சோற்றைத் தின்று விட்டு என்னையா எதிர்க் கேள்வி கேட்குறே? என்று திட்டிக்கொண்டிருக்கையில், உள்ளே காரசாரமாகத் திட்டிக் கொண்டிருந்த தன் கணவரின் கோப மொழிகள் அவள் செவிகளில் விழுந்தன.
தாரிணிக்குக் குலை நடுக்கம் எடுத்தது. ஐயாயிரம் ரூபாய் கடன் கொடுத்து, எழுதி வாங்கிய புரோநோட்டு ஒன்றைக் கானோமாம்!
வீடு அமளி துமளிப்படாதா?
வேலாயி கடந்து வந்த துயரத்தை ஒதுக்கிவிட்டு, கடந்து கொண்டிருக்கிற துன்பத்துக்கு அனுதாபப்பட்டவளாக, அடுப்படி, கூடம், முகப்பு என்று தேடினாள். ராஜாவும் பிஞ்சுக் கரங்களைத் துழாவித் தேடுகிறானே!
தாரிணிக்கு எப்போதோ பார்த்த சினிமா ஒன்று ஞாபகம் வந்தது. அப்படத்தில் ஒரு திருட்டில் வேலைக்காரி சந்தேகத்துக்கு ஆளான நாட்டம் நினைவில் குதிக்கவே, இங்கே இப்பொழுது எஜமானி அம்மாளும் வேலாயி மீது பாய்ந்து கோபமாக குதித்தாள்.
“ஐயோ அம்மா’ என்று விம்மித் துடித்தாள் வேலைக்காரி,
அப்பொழுது, சைக்கிளில் வந்து இறங்கினான் காத்த முத்து.
‘இந்தாங்கம்மா! அன்னிக்கு எம் பெண்சாதிக்கு நீங்க தந்த பேப்பர்க் கட்டுக்குள்ளாற இது இருந்திச்சு. இப்பத் தான் பார்த்தேனுங்க!’ என்று மூச்சு வாங்கச் சொல்லி நீட்டினான்.
காணாமற்போயிருந்த அந்தப் பிராமிசரி நோட்டு கிடைத்துவிட்டது.
குற்றவாளியான ராஜாவுக்கு எப்பொழுது பார்த்தாலும் சிரிப்புத்தான்!
தாரிணிதேவியாருக்கு உயிர் வந்தது. ரகசியமாக நூறு ரூபாய் கோட்டு ஒன்றை வேலைக்காரியிடம் நீட்டினாள். இந்தா வேலாயி! இதை என் இனமாக வச்சுக்க. உன் மகளின் பிறந்த நாளைக் கொண்டாடு என்னை மன்னிச்சிடு’ என்று வேண்டினாள்.
வேலாயி குதூகலம் எய்தினாள்; அம்மா, நீங்க நல்லா இருக்கோணும். எங்க மகளோட பிறந்த நாளைக்கொண் டாடுறத்துக்குப் பெரிய மனசு பண்ணி உத்தரவு தந்திங்களே, அதுவே போதுமுங்க! உங்க பணம் காசு வேனாமுங்க! உங்க அன்பு குறையாமல் எப்பவும் இருந்திருக்க, அதுவே போதுமுங்க! உங்க மாதிரி நடந்துகிடறதுக்கு அன்றாடங் காய்ச்சிகளான நாங்களும் ஆசைப்படுறது குத்தமுங்க தப்புங்க தலைக்கு வந்த ஆபத்து தப்பிப் போன விசயமே, எனக்கு ஆயிரம் ரெண்டாயிரம் பணம் கெடைச்சமாதிரி. அம்மாந்தூரம் செம்பு ஊறிக்கெடக்கு துங்க எம்மகளுக்கு ஆயுசு, மட்டும் பலமாக எழுதிப் போடும்படியா நீங்க சாமியை நெனச்சி ஆசீர்வாதம் பண்ணுங்க தாயே! அது போதும்’ என்றாள். சுடுசரம் விரிந்தது. கண்டாங்கிப் புடவைத் தலைப்பில் கனவுகளையும் முடிந்தாளோ?
செவ்வாய்க்கிழமை.
எட்டடிக் குச்சுக்குள்ளே, செவந்தியைத் தாய் வீட்டு கல்ல விளக்கின் முன் அமர்த்தினார்கள். பூச்சூட்டினார்கள். தெய்வத்தை ‘நேந்து’ கொண்டு விபூதிச் சம்புடத்திலிருந்து விபூதித் துகளை எடுத்து மாறிமாறிப் பூசினார்கள் பெற்றவர்கள். “போதுமிங்கிர மனசை எங்களுக்கு நிதம் கொடு, தாயே!” என்று வேண்டிக்கொண்டார்கள். தாரிணிதேவி வற்புறுத்திக் கொடுத்த இனாம் நூறு ரூபாயோடு குழந்தைக்குக் கொடுத்த பட்டுக் கெளனையும் போட்டு மகிழ்ந்தார்கள்.✽