ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/காமத்துப்பால்

காமத்துப்பால்

திருக்குறள் காமத்துப்பால் பலரை மிரட்டியிருக்கின் றது. திருவள்ளுவரா இதனைப் பாடினார்! இவ்வாறு பாடினார்! அவர் பாடலாமா? என்றெல்லாம் எண்ணச் செய்துள்ளது, பேசச்செய்துள்ளது. அறத்துப்பால் பொருட்பால் மட்டும் கற்றவர் உண்டு. அம்மட்டும் பாடஞ் சொன்னவர் உண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்த வீரமா முனிவர் (பெஸ்கி) என்னும் இத்தாலி நாட்டுத் துறவியார் கூட காமத்துப்பாலை விட்டுவிட்டார்.

ஏனைய பால்களினும் முதலில் காமத்துப்பால்தான் பரவவேண்டும்; உலகெங்கணும் பரவவேண்டும். பரவினால், விலங்குகள் போலவே மக்களிடம் இன்று காணப்படுகின்ற இழிநிலைக் காம உணர்ச்சி மாறும். மணவிலக்குக் குறைந்து மறையும். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய வாழ்வுமுறை உலகெங்கணும் நின்று நிலைக்கும். அதற்கு வழிகோலுகிறது வள்ளுவரின் காமத்துப்பால். இதனினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் செய்யவேண்டிய தலையாய பணி வேறு யாதோ? வீடு திருந்தின் நாடு திருந்தாதா? இனிக் காமத்தைப் பற்றிச் சிறிது ஆய்வாம்.

காம உணர்வு பசியுணர்ச்சியைப்போன்ற தொன்றாம். ஆயினும், அவ்வளவு கொடிய தன்று; அதற்கு அடுத்த வரிசையில் நிறுத்தலாம். பசியில்லாதவர் இலர்; காமம் இல்லாதாரும் இலர்; பசியை ஒழித்தவர் இலர்; காமத்தை ஒழித்தவரும் இலர். பசியை எவராலும் ஒழிக்கவும் முடியாது; காம உணர்வையும் எவராலும் ஒழிக்கவும் முடியாது. எந்தத் துறவியாயினும், மணமாகாத எந்த ஆண் பெண்ணாயினும் காம உணர்வை ஒழிக்கவே முடியாது. இதனை நான் நாற்பதாயிரங் கோவில்களில் சொல்லுவேன். இதனால், துறவியரையோ, மணமாகாதோரையோ நான் பழித்தவனல்லன். அவர்களுட் பலர் களங்க மிலாளர், மாசு மறுவற்றவர். அங்ஙனமெனின், இதில் பொதிந்து கிடக்கும் உண்மை யாது?

பசியை இனி வராதபடி ஒழிக்கமுடியாது; ஆனால் அடக்க முடியும். சினத்தை இனி எழாதபடி ஒழிக்கமுடியாது; ஆனால், வந்த சினத்தை அடக்கி வெல்ல முடியும். அதுபோலவே காமத்தையும் ஒழிக்கமுடியாது; அதனை அடக்கியாண்டு வெற்றிபெற முடியும். (ஒரு சில பேடிய ரிடத்தே இஃது ஒடுங்கி உறக்கத்திலாழ்ந்துள்ளது. இது விதிவிலக்கு, அதனாலேயே இது பசிக்கு அடுத்தபடி எனப்பட்டது.)

இவ்வுணர்ச்சிகள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. இவற்றை உள நூலார் (Psychologist) ‘இயல்பூக்கங்கள்’ (Instincts) என்கின்றனர். இவை சூழ்நிலைவசத்தால் சிலரிடத்தே அடக்கமாகவும் சிலரிடத்தே முனைப்பாகவும், சில நேரத்தே அடக்கமாகவும் சில நேரத்தே முனைப்பாகவும் இருப்பதுண்டு. இவற்றை இவற்றின் போக்கிலேயே விட்டு விடாமல், நேரிய-தூய பாதையில் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதைத்தான் “துய்மை செய்தல்” (Sublimation) என உளநூலார் குறிக்கின்றனர். இதைத்தான் கற்பிக்கின்றது திருக்குறள்.

பசியெடுத்தால் நமது உணவை உண்கின்றோம். பிறருணவை அவர் அறியாமல் அவர் விரும்பாமல் வலிய உண்பதை இழிவாகக் கருதுகிறோம். காமமும் அதுபோலவே கருதப்படவேண்டும். வருந்தியழைத்தாலும் விருந்துக்குச் செல்லாத ‘பெரிய மனிதர்’ சிலர் பிறர்பெண்களை விரும்புகின்றனர். இந்த எச்சில் உண்ணிகளை என்னென்பது! இந் நிலையைச் சாடி, உண்மைக் காதல் வாழ்வை உலகிற்கு வற்புறுத்தும் வள்ளுவர் குறள்களைக் காண்பாம்.

காமத்துப்பால்

ஒருவன்-ஒருத்தியின் காதல் இன்பவாழ்வைப் பற்றிக் கூறுவது காமத்துப்பால்.

பண்டைத் தமிழறிஞர்கள், மக்கள் வாழ்வை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தனர். ஒருவன் ஒருத்தியின் அகம் கலந்த-உள்ளம் ஒத்த காதல் வாழ்வு அகமாகும். அஃதல்லாத புறவாழ்வு-வெளியுலக வாழ்வு புறமாகும். இதன்படி நோக்கின், திருக்குறள் காமத்துப்பாலை அகம் எனவும், ஏனையவற்றைப் புறம் எனவும் கொள்ளல் வேண்டும்.

களவியல்

அகக் காதல் வாழ்வாகிய காமப்பகுதி களவியல், கற்பியல் என இரண்டாகப் பகுக்கப் பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் பிறரறியாமல் மறைமுகமாகக் கொண்டொழுகும் காதல் வாழ்வு களவியலாகும். பின்னர், திருமணம் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கை கற்பிய லாகும். முறையே ஈண்டு முதலில் களவியல் பேசப்படும்.

தகையணங்குறுத்தல்

கவின் மிக்கவனாகிய கட்டிளங்காளை ஒருவன் கவின் மிக்க கட்டிளங் கன்னி ஒருத்தியைக் கண்டான். அவள் அழகு-பேரழகு அவனை வருத்திற்றாம். அதைச் சொல்கிறான். அதுதான் தகையணங்குறுத்தல், தகை= அழகு; அணங்கு = வருத்தம்; உறுத்தம் = மிக உண்டாக்குதல். அஃதாவது, அழகு மிகவும் வருத்துதல் - அழகு மயக்குதல் என்பது பொருள். இக்கருத்துத்தான், தகையணங்குறுத்தல் என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை வருமாறு.

மாலும் நெஞ்சு

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு”

(தெளிவுரை) இதோ ஓர் உருவம்! என்ன! ஒரு தெய்வப் பெண்ணோ? அன்று. ஒருவேளை உயர்ந்தவகை மயில் தானோ? அன்று அன்று ஆயின், கனத்த தோடு அணிந்த காரிகை தானோ? என்ன வியப்பு! எதையும் பகுத்தறியவல்ல என் நெஞ்சம், இங்கே இன்ன தென்று துணிய முடியாமல் மயங்குகின்றதே!

(பதவுரை) அணங்கு கொல் = (இஃது ஒர்) தெய்வப் பெண்ணோ? ஆய்மயில் கொல்லோ = ஆய்ந்து தேர்ந்தெடுக் கத்தக்க மயிலே தானோ? கனம் குழை = கனத்த தோடு (காதணி) அணிந்த, மாதர் கொல்-மனிதப் பெண்ணோ? என் நெஞ்சு மாலும்=(எதையும் துணிய வல்ல) என் மனம் (இதைத் துணியமாட்டாது) மயங்குகிறதே! அணங்கு= தெய்வப்பெண்; குழை=காதணி, மாலும்=மயங்கும்)

மணக்குடவர் உரை:- இக்கணங்குழையை யுடையாள் தெய்வங் கொல்லோ! நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி மக்களுள்ளாள் கொல்லோ? என் மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ? பரிமேலழகர் உரை:- இக் கனவிய குழையை யுடையாள், இப்பொழிற்கணுறை-வாளோர் தெய்வ மகளோ? அன்றி யொரு மயில் விசேடமோ? அன்றி யொரு மானுட மாதரோ? இவளை யின்னளென்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. ‘ஓ’ அசை.

(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறட்பாவிலுள்ள ‘கொல்’, ‘கொல்லோ’ என்னுஞ் சொற்கள் இலக்கணங் கல்லாதார்க்கு என்னவோபோல் தோன்றலாம்; புரியாதிருக்கலாம். வட மொழி இலக்கணம், தமிழ்மொழி இலக்கணம் எல்லாங் கற்ற மிக மிகப் பெரிய உரையாசிரியரகிய பரிமேலழகரே இங்கே கோட்டை விட்டு விட்டாரே! *‘ஓ’ என்பதை ‘அசை’ என ஒதுக்கிவிட்டாரே! இப்பாட்டின் உயர்நிலைக் கட்டமே (climax) இந்த ‘ஓ’ என்பது தானே! (கொல் + ‘ஓ’= கொல்லோ) இதை ‘அசை’ என்னலாமா? அசை என்பது, பாட்டை நிரப்புவதற்காக - இடம் அடைப்பதற்காகப் பெய்யப்படுவதாகும். அதற்கென்று பொருள் மதிப்பு ஒன்றும் இல்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அரிசியில் கலந்து விற்கும் கல் போன்றது அது. வள்ளுவரா அந்தக் குற்றம் புரிவார்? அவரிடம் ‘சரக்கு’ மிக உண்டு. கற்றுக்குட்டிப் புலவர் வேண்டுமானால் அவ்வாறு செய்து பாட்டைச் சரி கட்டலாம். இப்போது பொருளுக்கு வருவோம்.

கொல், ஒ என்பவற்றைத் தனியே நோக்குங்கால் பொருள் மதிப்பு இல்லை. சொற்களோடு சேர்ந்து வரும் போது பொருள் மதிப்பு உண்டு. ‘இதைச் செய்தவன் அவன்’ என்ற தொடருக்கும், “இதைச் செய்தவன் அவன் கொல்” என்ற தொடருக்கும் வேறுபாடு தெரியவில்லையா?


  • "ஒ அசை என்று தொல்காப்பியர் ஒத்துக் கொள்ளவில்லை. நன்னூலாரே கூறியுள்ளார்.

வில்லையா? அவன் கொல் என்பதில் கொல் என்பது. இதை அவனா செய்தான்-அவன் செய்திருக்க முடியுமா என ஐயப்பொருளைத் (சந்தேகம்) தருகின்றது.

இக்குறளிலும் அதே ஐயப்பொருள் தான். தெய்வப் பெண்ணோ-அல்லது மயிலோ-அல்லது மனிதப் பெண்ணோ என ஐயுறுகிறான். ஓ என்பது ஐயப்பொருள் தரும் என எவரும் இலக்கண நூல்களில் வெளிப்படையாய்ச் சொல்லவில்லைதான். ஆனால் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இலக்கியங் கண்டதற்குத்தானே இலக்கணம்? அந்தப் பொருள் அழகைக் காண்போம்.

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட அழகும் தோற்றமும் கொண்டு நின்றிருந்த அவ்வுருவைக்கண்டதும், முதலில், அணங்கோ என ஐயுற்றான். ஆடவனைக் கண்ட அவ்வுருவம் மயில் போல் அப்பால் சாய்ந்து ஒதுங்கிற்று. உடனே அவனுக்கு மயிலின்சாயல் நினைவுக்கு வந்தது. அணங்கென்று ஐயுற்றோமே, இது மயிலோ என்று மேலும் ஐயத்தின்மேல் ஐயம் அழுத்தமாகக் கொள்கின்றான். அவனது ஐய உணர்ச்சியின் இருமடங்கு அழுத்தத்தைத் தான் கொல்லோ என்பதில் உள்ள ‘ஓ’ அறிவிக்கின்றது. ஐயோ என்பது முதல் படி; ஐயையோ என்பது அதற்கும் மேல் படி. பலே என்பது முதல்படி பலே பலே என்பது அதற்கும் மேல்படி; இவை போலவே, கொல் (அணங்கு கொல்) என்பது முதல் படி; கொல்லோ (ஆய் மயில் கொல்லோ) என்பது முன்னதற்கும் மேல்படி. இந்த நுட்பத்தை உணர்ந்து சுவைத்து மகிழவேண்டாவா?

இதைத்தான் இக்குறளின் உயர்நிலைக் (உச்சி) கட்டம் என்று குறித்தேன். கொல், கொல்லோ புரியாமல் இக் குறளைக் கற்பது எவ்வாறு? பின்வரும் இடங்களிலும் உதவும் என்று கருதி ஈண்டு விரிவாக எழுதிவிட்டேன்.

மேலும், அவ்வுருவம் தன்னை மாறி மாறி நோக்கியதால், இது ஒரு மனிதப் பெண்தானோ என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. உண்மையும் அதுதானே? உச்சியிலே-வானவூர் தியிலே திரிந்தவன் தரைக்கு வந்துதானே தீரவேண்டும்?

பழைய உரையாசிரியர்கள், கனங்குழை என்பதை முதலில் எடுத்துக் கொண்டு, கனங் குழையை உடைய இந்தப் பெண், தெய்வப்பெண்ணோ மயிலோ, மனிதப் பெண்ணோ என்று பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு பொருள் கோடல், காலணா அடை யொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, இந்தக் காலணா அடை அரையனாவோ முக்காலணாவோ அல்லது காலணாதானோ என்று கூறுதற்கொப்பாகும். இது பொருந்தாது. எனது பொருளுக்கேற்பவே, குறளின் ஆற்றொழுக்கு நடை அமைந்திருப்பதையும் நோக்குக.

அக்காலத்தில், மிகக் கனமான காதணி அணிந்தனர் என்பதைக் 'கனங்குழை’ என்பது காட்டுகின்றதன்றோ?

அடுத்துப் பொருள் பாலும் அதனை அடுத்து அறத்துப் பாலும் இடம் பெறும், இவ்வாறே தொடர்ந்து மூன்று பால்களும் மாறி மாறி வரும்.

பொருட்பால்


பொருட்பால் என்பது பணங்காசைப் பற்றியதன்று. பொருட்பாலில் பெரும்பாலும் அரசியல்தான் (Politics) பேசப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய வளமான பொருளாதாரத்தைச் செழிக்கச் செய்வது அரசியல் அமைப்புதானே? - திறமான ஆட்சி முறைதானே? உலகில் ஒரு நாடு பொருளாதாரத்தில் செழித்திருக்கிறதென்றால், அதற்காக அந்நாட்டு மக்கள் அரும்பாடு பட்டிருந்தாலுங்

கூட, அப்பேரை ஆட்சியாளரே தட்டிக்கொண்டு போய் விடுகிறார்களல்லவா?

இவ்வரிய கருத்தைக் கூறும் திருக்குறளின் பொருட்பால், பழைய உரையாசிரியர்களால் பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன்றாகப் பகுத்துக்கொண்டார் பரிமேலழகர். மணக்குடவரோ, அரசியல், அமைச்சியல், பொருளியல், நட்பியல், துன்பவியல், குடியியல் என ஆறாகப் பகுத்துக்கொண்டார். இன்னும் பலர் பலவிதமாகப் பகுத்துக் கொண்டனர். உண்மையில் திருவள்ளுவர் எவ்வாறு பகுத்திருந்தாரோ? அதனை ஆரறிவார்? ஐயோ குறளே! ஆயினும், நாம் அரசியலை முதல் இயலாகத் தொடங்கிக் கொள்ளலாம். அரசியலோடு இன்னார் இன்னாரே தொடர்பு கொள்ளலாம்; இன்னார் இன்னாரெல்லாம் தொடர்பு கொள்ளலாகாது, என்பது ஒரு பொது விதி. ஆயினும், நாம் இப்போது திருவள்ளுவரின் திருக்குறள் அரசியலோடு தொடர்பு கொள்வோம்.

அரசியல்

அரசனுக்கு வேண்டிய இயல்புகளைச் சொல்லும் பகுதி அரசியலாம். முடியரசுக்காலத்தில் அரசு-அரசன் என்று சொல்லியிருப்பதை, குடியரசுக்காலத்தில் அரசாங்கம்--அரசியல் தலைவன் என அமைத்துப் பொருள் கொள்ளலாம். இனி அரசனது இயல்பை நோக்குவாம்.

இறைமாட்சி

இறைவனது (அரசனது) மாண்புகளை - சிறப்பியல்புகளை-நற்குண நற்செய்கைகளைக் கூறுவது இறைமாட்சியாகும். நல்ல அரசனே கண்கண்ட இறைவன் (கடவுள்) ஆதலின், அவன் இறை எனப்பட்டான். அரசன் என்பவனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத் தகுதிகள் 'இறைமாட்சி' என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை வருமாறு:

அரசருள் ஏறு

(தெளிவுரை) படை, குடிமக்கள், உணவுப்பொருள், அமைச்சர், நட்பரசர், பாதுகாப்பிடங்கள் ஆகிய ஆறும் குறைவின்றி நிறைவு பெற்றிருப்பவனே அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி) ஆவான்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(பதவுரை) படை = {வன்மைவாய்ந்த) படைகளும், குடி = (உயர்ந்த) குடிமக்களும், கூழ் = சிறந்த உணவுப் பொருளும், அமைச்சு = (மதி நுட்பம் மிக்க) அமைச்சர்களும், நட்பு = (உண்மையான தூய) நட்பரசர்களும், அரண் = (அழிக்கமுடியாத) பாதுகாப்பு இடங்களும் ஆகிய, ஆறும் உடையான் = ஆறு பொருளையும் தன் உடைமையாகப் பெற்றிருப்பவனே, அரசருள் ஏறு = அரசர்களுக்குள் எல்லாம் ஆண் சிங்கம் போல் தலைமை பெற்ற அரசன் ஆவான். (கூழ் = உணவு; அரண் = பாதுகாப்பு இடம்; ஏறு = ஆண் சிங்கம்.)

(மணக்குடவர் உரை) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்னும் ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான்.

(பரிமேலழகர் உரை) படையுங் குடியுங் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்று சொல்லப்பட்ட ஆறங் கங்களையு முடையவன் அரசருள் ஏறு போல்வான்.

(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறளில்தான் எத்துணை நுணுக்கங்கள் படை, குடி முதலிய ஆறும் உடையவன் அரசருள் ஏறு என்றால், ஆறுள் ஒரு சில குறைந்தவன் அரசன் எனப் பெறானா? உலகில் வாழ்ந்த அரசர் அனைவரும் ஆறும் உடையவராய் இருந்தனரா? ஒன்றிரண்டு குறைய ஆண்ட அரசர்கள் இருந்ததே யில்லையா?

உடம்பில் இன்னின்ன ஆற்றல்கள் (வைடமின் சத்து) இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவை அனைத்தும் பெற்றிருப்பவர் முழுவாழ்வு வாழ்வர். அவற்றுள் ஒரு சில குறைந்தவர் அரை குறை வாழ்வே அடைவர். அது போன்றதே அரசர்கள் வாழ்வும். மேற்கூறிய ஆறனுள் ஒரு சில குறைந்தவர் அரைகுறை அரசரே! அவர்களைச் சிற்றரசர் - குறுநில மன்னர் என்றெல்லாம் குறிப்பிடுவர், அந்த ஆறும் பெற்றவனே முழு அரசன்-அதாவது-அரை குறை அரசர்க்கெல்லாம் பெரிய அரசனாவான். என்பது இக்குறட் கருத்து.

இங்கே ஓர் ஐயம் அகலாமல் மனத்தை உறுத்தலாம், அரசர்கள் குறைந்துபோன இக்குடியரசுக் காலத்தில். சனநாயகக் காலத்தில் அரசரைப் பற்றிப் பேசும் திருக் குறள் ஏன்? என்ற ஐயம் எழுவது இயற்கைதானே!

யார் சொன்னது இப்போது அரசர்கள் இல்லையென்று? குடியரசாவது? சனநாயகமாவது? இப்போதும் எங்கே பார்த்தாலும் எந்த ஆட்சியும் பெரும் பாலும் ஒரிருவர் கைகளில்தான் சிக்கிக்கொண்டுள்ளது. அவர்கள்தாம் அரசர்கள். ஆனால் அப்போது அரசுரிமை குடும்ப உரிமையாக இருந்தது. இப்போதோ ஆரும் (அன்னக் காவடிகளும்) அரசராய் வரலாம். அவ்வளவுதான் வேற்றுமை! இப்போதுள்ளவரை நாட்டுத் தலைவர் என்கின்றனர். அரசன், இறைவன், வேந்தன், மன்னன் என்றாலும் அதே பொருளே!

இனி இக்குறளின் உட்பொருளை நோக்குவாம்:

படை:- அரசனுக்குப் படைவேண்டும். படையின்றி ஆட்சியில்லை. சுற்றி வளைக்காமல் துணிவுடன் சுருக்கமாகச் சொல்லின், நாட்டை ஆள்வது படைதான். சான்று, இக்காலப் படைப் (இராணுவப்) புரட்சியே. படை, அன்று யானை, குதிரை, தேர், காலாள் என்பன. இன்றோ தரைப்படை, கடல்படை, வானப்படை என்பன. அன்று வில், வாள், வேல் முதலியன. இன்றோ குண்டு விகற்பங்கள், இப்படைகளைத் தன் உடைமையாக உடையவன் அரசன் என்பது குறள். படைகளுக்குப் பணிபவனோ, அல்லது பிறவல்லரசுகளிடமிருந்து பிச்சையாகப் படைகளைப் பெறு பவனோ அரசனாகான்.

அடுத்தது குடி குடிமக்கள் இல்லாத அரசும் உண்டா? இதையும் வள்ளுவர் கூறவேண்டுமா? இங்கே இரண்டினை ஊன்றி நோக்கவேண்டும். மேல் நாட்டினர் மக்கள் தொகையைப் பெருக்க ஊக்கம் அளிப்பது ஏன்? ஒரு நாட்டிற்கு மக்கள் வளம்-மக்கட் செல்வம் வேண்டும். அடுத்து, ஒரு நாட்டின் குடிகள், பிறநாட்டிடம்-பிறநாட்டுத் தலைவரிடம் உயிரை வைத்துக் கொண்டிருந்தால் சொந்த நாடு உருப்படுமா? அவர்கள் பிறந்த நாட்டின் குடிகளாவாரா? உடைமையாவாரா? எனவே, நாட்டுப்பற்றுடைய மக்களை அரசன் உடைமையாகப் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்தது கூழ் - உணவுப் பொருள்: தன் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் முழுவதும் உடையவனே அரசன் , பிறரிடம் கப்பல் கப்பலாய்க் கையேந்துபவன் அரசனல்லன். பின்னர் அமைச்சு: அறிவுரை வழங்கி ஆட்சியைக் கவனிக்கும் அமைச்சர்கள் தேவைதானே!

பிறகு நட்பு: துன்ப வேளையில் துணைபுரியும் நட்பரசர் களும் (நேசநாட்டினரும்) மன்னனுக்கு வேண்டும். அந்த வேலையை இப்போது அமெரிக்காவும், ரழ்சியாவும் தங்கள் தலைமேல் தூக்கிப்போட்டுக் கொண்டுள்ளன. இறுதியாக அரண்: கோட்டை-கொத்தளங்கள், கடல், மலை, படைத் தளங்கள் முதலிய பாதுகாப்பளிக்கும் சூழ்நிலையும் வேண்டும்.

இந்த ஆறும் உடையான் அரசன். உடையான்’ என்னுஞ் சொல்லை ஊன்றி நோக்குக. தன்னுடையனவாக. தனக்குரியனவாக உடையவனே அரசன்-அரசருள் அரசன். பிறரிடம் பெறுபவன் அவனுக்குக் கீழ்ப்பட்டவனே. உண்மைதானே இது! இனி அறத்துப்பால் வருக,

அறத்துப்பால்

மக்கள் ஒழுகவேண்டிய - பின்பற்றி நடக்கவேண்டிய நல்ல நீதி நெறி முறைகளைக் கூறும் பகுதி அறத்துப்பால். இதனை இல்லறவியல், துறவறவியல் என இரண்டாகப் பகுத்துள்ளனர். முதலில் உள்ள இல்லறத்தினை முதலில் கற்ற காமத்துப்பாலின் தொடர்ச்சியாகவும், அடுத்துள்ள துறவறத்தினை இரண்டாவதாகக் கற்ற பொருட்பாலின் தொடர்ச்சியாகவும் அக உள்ளத்தில் அமைத்துப் பார்ப்பதும் ஒர் அழகே! எனவே. காமத்துப்பால் - பொருட்பால்களின் முடிமணியாக அறத்துப்பாலைக் கொள்ளலாமன்றோ?

மக்களே, காமத்திலேயே தோய்ந்து விடாதீர்கள், காதல் வாழ்விலேயே திளைத்து விடாதீர்கள், இல்லறம் ஒழுங்காக நடைபெற வேண்டும் எனவும், பொருளியலிலேயே வீழ்ந்து கிடக்காதீர்கள், உலகியலிலேயே ஆழ்ந்து கிடக்காதீர்கள், எதிலும் தன்னலங் கருதாத துறவுள்ளம் வேண்டும் எனவும் உலகிற்கு உணர்த்தும் எச்சரிக்கை மணியாக அறத்துப்பாலைக் கொண்டால் அது மிகையாகாது. காமக்கடலையும் பொருட்கடலையும் கடக்க உதவும் கலங்கரை விளக்கமுமாகும் அவ்வறத்துப்பால்.

அவ்வறத்துப்பாலின் உட்பிரிவாகிய இல்லறவியல், துறவறவியல் எனும் இரண்டனுள். முறையே முதற்கண் இல்லறவியலை ஈண்டு எடுத்துக்கொள்வாம்:

இல்லறவியல்

இல்லறம் என்றால் மனையறம். இல் என்றால் மனை அல்லது வீடு. வீட்டிற்கு உரிய காரணத்தாலேயே. மனைவிக்கு இல், இல்லாள், இற்கிழத்தி என்னும் பெயர்கள் எழுந்தன. எனவே, இல்லறம் என்றால் வீட்டில் மனைவிமக்கள முதலியோர் சூழ இருந்து, அறநெறி தவறாமல் குடும்பம் நடாத்தும் வாழ்க்கை ஒழுங்கு என்பது பெறப்படும். இல்லற இயல் என்றால், அவ் வில்லறத்தின் இலக்கணங்களை அஃதாவது இல்லறத்தில் இருப்பவர்கள் இயற்றவேண்டிய கடமைகளைக் கூறும் பகுதி என்பது பொருள். முதற்கண் இல் வாழ்க்கை’ என்னும் தலைப்பு வருமாறு:

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை என்பதற்கு ஆடவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடத்தும் குடும்ப வாழ்க்கை என்பது பொருள். இல்லறத்தின் பெருமையினையும், அதனால் உண்டாகும் நன்மையினையும், இல்லறத்தாரின் கடமையினையும் தொகுத்து, சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் என்னும் அழகுபெற இப்பகுதியில் கூறியிருத்தலின், இது முன் வைக்கப்பட்டது.

இயல்புடைய மூவர்

(தெளிவுரை) இல்லறத்தான், இயல்பாகவே தன்னோடு உரிமை உடைய தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையர்க்கும் நல்ல துணையாய் நின்று காக்கக் கடமைப் பட்டவனாவான்.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை."

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - வீட்டில் மனைவியுடன் இருந்து வாழும் குடும்ப வாழ்க்கையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் . இயல்பு உடைய - இயற்கையாக உரிமை உடையவர்களாக உள்ள, மூவர்க்கும் - (பெற்றோர், மனைவி, மக்கள் என்னும்) மூவகையார்க்கும், நல் ஆற்றின் - (நல்வாழ்வு என்னும்) நல்ல வழியிலே நின்ற துணை - (உதவியாகக் கிடைக்கப்பெற்று) நின்ற துணையாவான் , (விரிவுரை) ஒரு பெண், தன் இளம்பருவத்தில் பெற்றோரின் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் கணவனின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்வதாகக் கூறுவதியல்பு, அதுபோவே ஓர் ஆண் மகனும், இளம் பருவத்தில் பெற்றோர் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் மனைவியின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்கின்றான். இம்முறையாக நோக்குங்கால். ஓர் இல்வாழ்வான் ஒரு சேரத் தன் பெற்றோரையும் மனைவியையும் மக்களையும் காப்பாற்றவேண்டிய கட்டாயக் கடமை உடையவனாய்க் காணப்படுகின்றான் என்பது தெளிவு. பொருட்செறிவுடைய கதையொன்றும் புகலப்படுவது உண்டு நம் நாட்டில்! ஒரு நாள் ஒரு விறகு வெட்டி ஆறுபணம் ஈட்டினானாம். அவற்றை அன்றைக்கே செலவழித்துவிட்டானாம். மெய்தானே! ஆறுபணம் எப்படிப் போதும் ஒரு குடும்பத்திற்கு! ஆனால் அவன் அன்றிரவு தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பின்வருமாறு பகர்ந்தானாம். இன்றைக்கு நான் ஆறுபணம் ஈட்டினேன். அவற்றுள் இரண்டு பணத்தைப் பழைய கடனுக்காகக் கொடுத்து விட்டேன். இரண்டு பணத்தைக் குடும்பத்திற்காகச் செலவழித்துவிட்டேன், மீதி இரண்டு பணத்தைப் பின்னால் உதவுவதற்காக உண்டிப்பெட்டியில் போட்டுவைத்துள்ளேன் என்பது விறகு வெட்டியின் செலவு விளக்கம். கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன், வியப்புடன், இக்காலமான காலத்தில் ஆறுபணம் முழுவதுமே போதாதே! அப்படியிருக்க, கடன் எப்படித் தந்தாய்? மிச்சப்படுத்தியது எப்படி? என்று வினவினான். பின் விறகு வெட்டி பழைய கடனைக் கொடுத்தல் என்றால், இதற்குமுன் என்னைப் பெற்று வளர்த்துச் செலவு செய்து காப்பாற்றிய என் பெற்றோர்க்காக இரண்டு பணம் ஒதுக்குதல், குடும்பத்திற்குச் செலவழித்தல் என்றால், எனக்கும் என் மனைவிக்குமாக இரண்டு பணம் ஒதுக்குதல்; மிச்சப்படுத்துதல் என்றால், எதிர்காலத்தில் காப்பாற்றும் கடமைப்பட்டுள்ள பிள்ளைகட்காக இரண்டு பணம் ஒதுக்குதல் - என்று மேலும் விளக்கம் செய்தானாம். இப்போது விளங்குமே இக்குறட் கருத்து.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண - உரை) இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் (பிரமச் சாரி, வானப் பிரத்தன், சந்நியாசி என்னும்) இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின் கண்ணே நின்ற ஒரு துணை . (பரி. உரை) இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப் படுபவன் (பிரம்சரிய ஒழுகத்தானும், வனத்தின் கண் தீயோடு சென்று மனையாள் வழிடத் தவம் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தானும் ஆகிய) அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.

(ஆராய்ச்சி உரை) திருமணம் ஆவதற்கு முன் உள்ள நிலைக்குப் பிரமசரியம் என்பது பெயர். திருமணமாகி மனைவியோடு வீட்டில் வாழும் நிலைக்குக் கிருகத்தம் என்பது பெயர். வீட்டை விட்டு மனைவியுடன் காட்டையடைந்து தவம் செய்யும் நிலைக்கு வானப்பிரத்தம் என்பது பெயர், எல்லாவற்றையும் துறந்த தனித்த நிலைக்குச் சந்நியாசம் என்பது பெயர். இது வடநூல் வைப்பு முறை. இந்நான்கு திறத்தாருள், கிருகத்தனாகிய இல்வாழ்வான் ஏனைய மூன்று திறத்தாரையும் காப்பாற்றவேண்டும் என்றே இக்குறளுக்கு உரையாசிரியர்கள் பலரும் உரை தீட்டிவிட்டனர். தமிழர் தம் கோட்பாடு இன்னதன்று. இதனினும் வேறுபட்டது.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
நோக்கெதிர் நோக்குதல்

(தெளிவுரை) என்னை அவ்வுருவும் மாறி மாறி நோக்குவதால் அது மக்கள் இனப் பெண்ணே. ஆயின், அப்பெண் இயற்கையாகத் தன் வடிவழகால் என்னை வருத்துவதல்லாமல், என் பார்வைக்கு எதிர் எதிராக மாறி மாறி என்னை நோக்கித் தன் மனக்குறிப்பாலும் என்னை வருத்துகிறாளே. இயற்கையாகவே தானே பிறரைத் தாக்கி வருத்தக்கூடிய ஒரு துடுக்குத் தெய்வம் (துஷ்ட தேவதை) தனக்குத் துணையாகப் பெரிய படையையும் அழைத்துக்கொண்டு வந்திருப்பது போலல்லவா இருக்கிறது இது?

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து."

(பதவுரை) நோக்கினாள் = நல்ல தோற்றமுடைய அந்தப் பெண், நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு எதிர் எதிராக. அதாவது நான் பார்க்கும் போதெல்லாம் - தானும் பார்ப்பது, தாக்கு அணங்கு = தானே தாக்கி வருத்தக் கூடிய ஒரு துடுக்குத் தெய்வம், தானை கொண்டன்னது உடைத்து = படையையும் தன்னுடன் கொண்டு வந்திருப்பது போன்ற தன்மையை உடையதாம். (நோக்கு = அழகுத் தோற்றம், கண் நோக்கு; அணங்கு = வருத்தும் தெய்வம்; தானை = படை (சேனை) அன்னது - அது போன்றது; கொண்டன்னது = கொண்டு வந்திருப்பது போன்றது.)

(மணக்குடவர் உரை) இவ்வழகிளை யுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்த வல்ல தெய்வம் அஞ்சாமல் வரும் தானையைக் கொண்டுவந்தது போலும்.

(பரிமேலழகர் உரை ) இப்பெற்றித்தாய வனப்பினை யுடையாள் என்னோக்கிற் கெதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்துவதோ ரணங்கு தாக்குதற்குத் தானையையுங் கொண்டுவந்தாற் போலுந் தன்மையை யுடைத்து.

(விரிவுரை) நோக்கெதிர் நோக்குதல் என்றால் என்ன? ஏதோ ஒர் உள்நோக்கு- உள் கருத்து ஒன்றிருந்தால் தான் நோக்கெதிர் நோக்குதல் நடைபெறும். (நோக்கெதிர் நோக்கு கிறாள் என்ற போதே, ஏதோ ... ஆமாம்... உள்பொருள் இருப்பது புரிகிறது. அவன் மேல் கருத்து இல்லை யென்றால், அவனை ஒரு முறைக்கு மேல் மறு முறை அவள் பார்த்திருக்கக் கூடாது. அவன் பார்க்குந் தோறும் அவளும் பார்க்கிறாள் என்றால் அதற்கு என்ன பொருள்? நாம் இரவில் 'மோட்டார்' வண்டியில் செல்லும்போது, எதிரே ஒரு வண்டி வரும். இரண்டிலும் விளக்கு எரியும். ஒவ்வொரு சமயம் வண்டியோட்டிகள் இருவரும் மாறி மாறி விட்டு விட்டு விளக்கை நிறுத்தி எரியவைப்பார்கள். அது போலவே இங்கும்! தலை குனிதல் - எதிர் நோக்குதல், தலை குனிதல் - எதிர்நோக்குதல். இந்த நுட்பமான குறிப்பைத்தான் நோக்கெதிர் நோக்குதல்' என்னும் தொடரில் அடக்கி வைத்துள்ளார் ஆசிரியர், அணுவுக்குள் ஆழ்கடல் அல்லவா அது?

முதலிலேயே அந்த ஆரணங்கின் மேனியழகிலே மயங்கித் தவித்துத் தத்தளிக்கும் அவனை அவளது "குறு குறு" குறும்புப் பார்வை வேறு வாட்டி வதைக்குகிறது . வலியவன் ஒருவன் தன்னினும் மெலியவன் ஒருவனைத் தான் தாக்குவதல்லாமல் தன் ஆட்களையும் விட்டுத் தாக்குகிறான். இதைத்தான் தாக்கணங்கு ஒப்புமை வாயிலாகக் கூறியுள்ளார் வள்ளுவர். இந்த நோக்கெதிர் நோக்கிய போரில் அவன் கண்ணடி. தாளாமல் கலங்கி விட்டான்; படுதோல்வியும் அடைந்து விட்டான். கண் நோக்கு அவ்வளவு கனமானது போதும்!

இந்த எளிய செய்தியை எவ்வளவு சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்தக் குறளைக் கற்காமல், கத்தரிக்காய் - காதல் கதை வெளியீடுகளைக் கட்டியழுது கொண்டிருக்கின்றார்களே நம்மவர்கள்! உலகில் காதல் இலக்கியம் வேண்டுபவர்கள், வள்ளுவரின் காமத்துப்பாலை வந்து பார்க்கட்டும் - என்று அறைகூவல் விடுகிறேன்.
எமனைப் பார்த்தேன்

(தெளிவுரை) உலகில் 'எமன் எமன்' என்று பலரும் சொல்லக் காதால் கேட்டிருக்கிறேனே தவிர, அந்த எமனை இதற்கு முன்பு நேரில் கண்டதில்லை; ஆனால், பெண் தன்மையோடும் போரிடும் பெரிய கண்களோடும் அந்த எமன் என் எதிரில் நிற்பதை இதோ நேரில் காண்கிறேன்.

"பண்டறியேன் கூற்றென் பதலை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு"

(பதவுரை) கூற்று என்பதனை = எமன் என்று சொல்லப் படுவதை, பண்டு அறியேன் = முன்பு பார்த்தறியேன்; (ஆனால் அது) பெண்தகையால் = பெண் தன்மையோடு, பேர் அமர் கட்டு = பெரிய போர் செய்கின்ற கண்களையும் உடையது என்பதை, இனி அறிந்தேன் = இப்போது (நேரில் பார்த்து) அறிந்து கொண்டேன். (கூற்று = எமன்; இனி = இப்பொழுது, பெண்தகை = பெண் தன்மை; அமர் = போர்; கட்டு (கண் + டு) = கண்களை உடையது.)

(மண- உரை) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றித் தென்பதை அறியேன்; இப்பொழுது அறிந்தேன்: அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து.

(பரி-உரை) கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டறிவதல்லது கண்டறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண்டகையுடன் பெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து.

(விரிவுரை} கூற்று - கூற்றுவன் என்றால் எமன், எமனது வேலை, உடல் வேறு உயிர் வேறாகக் கூறு போடுதல் அதாவது கொல்லுதல் என்றும், அவனது அலுவலகம் (ஆபீசு) தென்திசையில் இருக்கிறதென்றும் கூறுகின்றனர். அது என்னவோ? அதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டியதில்லை உயிரைக் கொல்லும் ஆற்றலைக் கூற்று என்பது உலகியல், உயிர் போக்குவதைப் போல மிகுந்த தாங்கமுடியாத துன்பம் கொடுப்பவரை நோக்கி, 'அட எமனே' என்று நோவது உலகில் கண்கூடு.

இங்கே, அப்பெண் அவனுக்கு எமனாகத் தோன்றுகிறாள். அவளது பெண்தகை அதாவது பெண் தன்மை அதாவது பெண் தோற்றம் அதாவது நாணிக் கோணி ஒடிந்து வளைந்து சாய்ந்து சரிந்து நிற்கும் அழகுப் பொலிவு அவனது காமத்தைத் தூண்டித் துலங்கச் செய்து விட்டது. அதனோடு, நெருப்பில் நெய்வார்த்தாற் போல, நோக்கெதிர் நோக்கிப் போர் புரியும் பெரிய கண்களும் சேர்ந்து கொண்டன, அவளைப் பெறமுடியாமல் காமத் தீயால் வருந்துகின்றானாதலின், அதற்குக் காரணமான அவளை எமன் என்கிறான். அவளை மணந்தால் அவனுக்கு வாழ்வு: அவள் கிடைக்கவில்லையானால் சாவே. எனவே, இன்னும் கிடைக்கப் பெறாத அவள் அவனுக்கு எமனாகத் தோன்றுவதில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா?

இன்னொரு கோணத்திலும் இக்கருத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இசையரங்கில் ஒருவர் மிக நன்றாகப் பாடினார் என்றால், "இன்றைக்குக் கொன்று விட்டார் கொன்று" என்று கூறுவது வழக்கம். அதே போலே, தன் பேரழகுத் தோற்றத்தாலும், குறும்புப் பார்வையாலும் அவள் தன்னைக் கொன்று விட்டதாக அவன் கூறியிருக்கிறான், பார்க்க முடியாத எமனைப் பார்த்ததாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவரின் கலைத்திறன் தான் என்னே !