ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/காமத்துப்பால்-2


காமத்துப்பால்
களவியல்-தகையணங்குறுத்தல்
அணி எவனோ

(தெளிவுரை) மான்பிணை போன்ற மருண்ட பார்வையும் நாணமும் இயற்கையில் இருக்கும்போது, இவளுக்கு அயலான அணிகலன்களை அணிந்தது ஏனோ?

"பிணையேர் மடநோக்கும். நாணு முடையாட்
கணி.எவனோ ஏதில தந்து"

(பதவுரை) பிணை = பெண்மானைப் போன்ற, மட நோக்கும்=மருண்ட பார்வையும், நானும் உண்டியாட்கு= நாணமும் இயற்கையாய் உடிைய இந்தப் பெண்ணுக்கு, ஏதில தந்து அணி எவனோ?=அயலான அணிகலன்களைக் கொண்டு வந்து அணிந்திருப்பது எதற்கோ? (ஏதில்= அயலானவை-ஏது இல-ஏதும்-எந்தத் தொடர்பும் இல்லாதவை; தந்து=கொண்டு வந்து தந்து: பிண்ை=பெண் மான், ஏர்தல்=போலுதல்-ஏர்-போன்ற மடம்:மருட்சி - மருண்ட தன்மை, மான்போன்ற மட நோக்கு என்றால், மருண்டு மருண்டு பார்க்கும் நோக்குத்தானே!)

(மணக்குடவர் உரை) பிணையை யொத்த மடப் பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாமே அமையும்.

(பரிமேலழகர் உரை) புறத்து மான் பிணை யொத்த மட நோக்கினையும் அகத்து நாணினையு முடையவளாய விவட்கு, ஒற்றுமையுடைய இவ்வணிகளே யமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்தணிதல் என்ன பயனுடைத்து? .

(விரிவுரை) இந்தக் குறளில், தலைமகளின் நலனைப் புனைந்துரைக்கும் தலைமகன் வாயிலாக, வள்ளுவர் உலக மக்களைச் சாடுவதான குறிப்பின் வாடை வீசுகின்றது. மான் போன்ற மருண்ட பார்வையையும் நாணத்தையும் விட, ஒரு பெண்ணுக்கு அழகு தரும் அணிகலன் (ஆபரணம்) வேறு என்ன இருக்க முடியும்? அந்த இயற்கை அணிகலன் இரண்டும் உடையவளுக்கு வேறு நகைகளும் வேண்டுமா? "அல்வா" துண்டுக்குச் சர்க்கரை தொட்டுக் கொள்வதுண்டா? மட நோக்கும் நாணமும் இல்லாதவளுக்கு எவ்வளவு நகை போட்டாலும் எடுக்குமா? கசக்கும் காஞ்சிரங்காயானது, எவ்வளவு இனிப்புச் சேர்த்தாலும் இனிக்குமா? பலரோடு பொருத்திப் பார்க்கும்போது, இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மை என்பது புலனாகும்.

இங்கே கூறப்பட்டுள்ள இயற்கையணிகள் இரண்டினையும் இன்னுஞ் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மட நோக்கு என்பது, புற உறுப்பாகிய கண்ணுக்கு அணிகலம்; நாணம் என்பது, அக உறுப்பாகிய மனத்துக்கு அணிகலம். இவையிரண்டும் தொடர்புடையன. அகத்தில் நாணம் இருந்தால்தான், முகத்தில்-கண்களில் மடநோக்கு இருக்க முடியும்! அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? அகத்தில் நாணம் இல்லாத காளிகளுக்கு-உள்ளத்தில் கூச்சம் இல்லாத பேய்-பிசாசு-பிடாரிகளுக்கு மடநோக்காவது, மண்ணாங்கட்டியாவது! - -

எனவே, உலக மக்களே! இரவல் நகை கூடாது; சொந்த நகையே போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரவல் நகை என்றால். ஒருவன், நகையில்லாத தன் மனைவிக்குப் போடுவதற்காக, நகை வைத்திருக்கின்ற மற்றொருவனிடம் சென்று, மான மின்றி-தன் கையாலாகாத்தனத்தைத் தானே வெளிப்படையாய் ஒத்துக்கொள்பவன் போல இரவல் கேட்கிறானே, அந்த இரவல் நகை யைக் குறிப்பிடவில்லை , ஒருவன், தன் மனைவிக்கு, நல்நோக்கும் நாணமுமாகிய நகைகளுக்குப் பதிலாக, தன் சொந்தப் பணத்தில் தானே வாங்கிப்போட்டுள்ள சொந்த நகையைத்தான் இரவல் நகை என்று சொல்கிறேன் நான். இல்லையில்லை; மன்னிக்கவும், இவ்வாறு நான் சொல்ல வில்லை; வள்ளுவர் தான் சொல்லியிருக்கிறார் "அணி எவனோ ஏதில என்று! இங்கே 'ஏதில என்றால் அயலானவை - இரவலானவை என்று பொருளாம். ஏதிலான் என்றால் அயலான் - ஏதில என்றால் அயலானவை, எனவே மடநோக்ககும் நாணமுமே சொந்த நகைகள், தலைமகளுக்கு அவைகளே போதும், என்கிறான் தலைமகன்.

மேலும், 'அணி எவனோ?' என்று அங்கலாய்க்கிறான் தலைமகன். எவன் என்றால் ஏன்-- எதற்கு என்று பொருள். மேலும் 'ஓ' சேர்த்து எவனோ - எதற்கோ என்று வன்மையாகக் கண்டிக்கிறான். அவன் மற்ற அணிகலன்களைப் பொருட்படுத்தவில்லை, புறக்கணிக்கிறான் என்பதை 'ஏதில தந்து' என்னும் "ஏனோ தானோ தொடர் அறிவிக்கின்றது. அதாவது வேண்டாத வேற்றுப் பொருளை வலியக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள் என்ற கருத்தைத்தான் 'ஏதில தந்து' என்பது அறிவிக்கின்றது.

அணிகலன் அணிவது - அழகு தருவதற்காக! இவளுக்கோ அது இயற்கையிலேயே இருக்கிறது. அங்ஙனமிருக்க, அணிகலன் அணிவிக்கும் காரணம் என்ன? எங்களிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டும் தற்பெருமை விளம்பரமா இது? அல்லது, இந்த நடிகையும் இதைத்தான் பயன்படுத்துகிறாள் என்று நடிகையின் படத்துடன் ஆடம்பரப் பொருளை அறிமுகப் படுத்தி அவள் மூலம் அப்பொருளுக்குப் பெருமை தேடுகின்ற வாணிக விளம்பரம் போல. தலைமகளுக்கு அணிவதன் மூலம் இந்த நகைகளுக்கு அழகு தேடவேண்டும் என்ற அவாவா இது? அல்லது, தலைவியின் இயற்கையழகைப் புரிந்து கொள்ள முடியாத குருட்டு மடமையா இது? அல்லது இவளுக்கு மேலும் மேலும் அழகு செய்து என்னைப் போன்ற 'இளிச்சவாய்' இளைஞர்களை இன்னற் படுத்த வேண்டுமென்ற இழிநோக்கந்தானா இது? பின்னே என்ன காரணம்? என்று காலால் தரையை இடித்துக் கையால் பலகையைக் குத்திப் பேசிக் கேட்பவனைப் போல "அணி எவனோ என்று அலறியுள்ளான் அவன்.

இந்தக் குறளிலிருந்து, குறிப்பாகப் பெண்மணிகள் - அவருள்ளும் சிறப்பாகச் செல்வ மங்கையர் தெரிந்து கொள்ளவேண்டியதென்ன? ஆடவர்கள் அவர்தம் செல்வத்தின் அளவை அறிவிக்கும் விளம்பர வண்டியாகத் தங்களைப் பயன் படுத்திக்கொள்ள இடந்தரலாகாது. நாங்களென்ன அலங்காரப் பதுமைகளா? அல்லது சுமை தாங்கிகளா? என்று ஆடவரைக் கேட்கவேண்டும். ஆடவர் நகை வாங்கிப் போடாவிட்டால், போடும்படி அவர்களை வற்புறுத்துகின்ற மங்கையர்க்கு நமது இரக்கம் உரித்தாகுக!

பொருள் பால்
அரசியல் - இறைமாட்சி
பண்புடை வேந்தன்

(தெளிவுரை) காது கசக்கும்படித் தாங்கள் சொல்லுங் குறைகளைப் பொறுத்துக்கொண்டு ஆவன புரியும் உயர்ந்த பண்பாடுடைய அரசனது ஆட்சியில்தான் மக்கள் தங்குவர்.

"செவிகைப்புச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு" (பதவுரை) செவி கைப்ப = கேட்கும் காது கசக்கும்படி, சொல் பொறுக்கும் = மக்கள் சொல்லும் குறைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய, பண்புடை வேந்தன் = உயர்ந்த பண்பாட்டினையுடைய மன்னனது, கவிகைக்கீழ் = குடை நிழலின் கீழே, உலகு தங்கும்=உலகம் தங்கி வாழும். (கைத்தல்=கசத்தல்; சொல் =சொல்லுங்குறை; கவிகை -குடை; உலகு -- உலக மக்கள்).

(மணக்குடவர் உரை) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டுவைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக்கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் 'புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல' என்பாரு முளர். (இந்த உரை பொருந்தாது )

(பரிமேலழகர் உரை) இடிக்குத் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும் விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை நிழற்கண்ணே தங்கும் உலகம்.

(விரிவுரை) இந்தக் குறளை இருபதாம் நூற்றாண்டினர் துருவித்துருவி ஆராய வேண்டும். இந்தக் காலமோ குடியரசுக் காலம்; வள்ளுவர் காலமோ முடியரசுக் காலம்; ஆனால் உண்மையில் எது முடியரசு? எது குடியரசு? என்று பார்ப்போம்.

'செவி கைப்புச் சொல் பொறுத்தல்' என்றார். சில உணவுப் பொருள்கள் நாக்குக்குக் கசப்பது போன்றே, சில சொற்கள் காதுக்குக் கசக்கும். நம்மைப் பாராட்டிப் புகழுஞ் சொற்கள் காதுக்கு இனிக்கும்; குறைகூறி யிகழுஞ் சொற்கள் காதுக்குக் கசக்கும். இதைத்தான் 'செவி கைப்பச் சொல் என்றார். வாய்ச் சுவை போலவே செவிச்சுவையும் உண்டன்றோ ? 'செவியிற் சுவையுணரா' என்னும் குறளை நோக்குக. தம்மைப் புகழ்ந்து பேசுபவரை வீடுவரைக்கும் அழைத்துச் சென்று பாய் போட்டு அமரச் செய்து. சிற்றுண்டியும் நல்கி, விடிய விடிய விரிவாகத் தம் புகழைப் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்வதென்றால் மக்களுக்கு விருப்பந்தான். ஆனால் அவரே ஏதேனும் ஒரு குற்றங்குறை சொல்லத்தொடங்கி விடுவாராயின், "சரி நல்லது போய்வருகிறீர்களா? என்று உடனே அவ்விடத்தை விட்டுக் கிளப்பிவிடுவார்கள். இஃது உலகியற்கை யன்றோ ? ஏன் இந்நிலை? தமது குறையைப் பிறர் சொன்னவுடனே கசப்புத் தோன்றிச் சினமாக மாறுகின்றது. அதனைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை. இது ஒரு பெரிய வலுக்குறை (பலவீனம்), இங்கே பொறுத்துக் கொள்ளுதல் என்றால் குற்றத்தை உணர்ந்து திருந்துதல் என்பது பொருள் ; அது மட்டுமன்று-தன் குற்றத்தை யுணர்ந்து தான் திருந்தும் விதத்தில் அக்குற்றத்தை எடுத்துக்காட்டியவருக்கு நன்றி செலுத்துதலும் ஆகும். தம்மிடம் உள்ள குறையைப் பிறர் சுட்டிக் காட்டியபோது, உணர்தலும், திருந்துதலும், நன்றி செலுத்துதலும் உயர்ந்த பண்பாடு. ஆதலினாலேயே "பொறுக்கும் பண்பு என்றார் ஆசிரியர். இஃது எல்லோர்க்கும் இயலாது என்பதைப் 'பொறுக்கும் பண்பு' என்னும் தொடர் அறிவிக்கவில்லையா? கூர்ந்து கவனியுங்கள்!

தாங்கள் பிறர்மேல் எவ்வளவு குற்றம் வேண்டுமானாலும் சொல்லலாம்; தங்கள் மேல் மட்டும் எவரும் எந்தக் குற்றமும் சொல்லக் கூடாது என்பதில் எளிய மக்களும் கண்டிப்பாய்க் கவனமாய்க் கண்ணுங் கருத்துமாய் இருக்கும் போது, நாடாளும் மன்னன் மேல் குற்றம் சொல்லலாமா? சொல்லத்தான் முடியுமா? சொன்னால்தான் விடுவானா? அவ்வாறு குறைசொல்ல விடுபவனே சிறந்த மன்னன், அவனது ஆட்சியே உண்மையான குடியரசு ஆட்சி- அவனது  நாடே உண்மையான குடியரசு நாடு. மொடுக்கென்று வாயைத் திறந்ததுமே தலையைச் சீவுகின்ற நாட்டில் சோற்றுமழை பெய்தாலும் நான் அங்கு வாழ விரும்பேன் , பட்டினி கிடந்தாலும் பேச்சுரிமை - எழுத்துரிமை உள்ள நாடே எனது இன்பபுரி. இதைத்தான் சொற்பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும் என்றார்.

மேலும், தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துச் சொல்லத்தான் மக்கள் விரும்புவர். தமது துன்பத்தைப் பிறர் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும், வெளியில் எடுத்துச் சொல்வதே ஒரு பெரிய ஆறுதல் - ஒரு பெரிய மருந்து. இதற்குத்தான் "வெளிப்பாட்டு மருத்துவம்" (Expressive Theory) என்று பெயராம். "ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்" என இறைவனை நோக்கி மணிவாசகர் முறையிட்டுள்ள திருவாசகப் பகுதியினை ஈண்டு ஒத்திட்டு நோக்குக. மணிவாசகர் கண்காணா இறைவனை (கடவுளை) நோக்கி நீ அருள் புரியவில்லை எனக் குறை சொன்னார். மக்களோ கண்கண்ட இறைவனை (முன்னனை) நோக்கிக் குறை சொல்வர். இதற்கு மன்னன் இடங்கொடுக்க வேண்டும். அன்னவன் கவிகையின் கீழேதான் உலகு தங்கும்.

பிறர் சொல்வதையெல்லாம் பொறுத்துக்கொள்வது அரசனுக்குக் கோழைமையல்லவா என்று சிலர் கருதலாம். இல்லை, பொறையுடைமை ஒரு பெரிய வலிமையாகும். 'வன்மையுள் வன்மை பொறை' என்று வள்ளுவர் மற்றோரிடத்தும் கூறியுள்ளார். மேலும் இஃது ஓர் அரசியல் திறமையும் (இராச தந்திரமும்) ஆகும்.

இந்தக் காலத்து அரசுகள் சில, ஒறுக்கும் நோக்குடன் - கொல்லும் குறிக்கோளுடன், அரசாங்கத்தைத் தாக்கிப் பேசுபவர் யார்-தாக்கி எழுதுபவர் யார் என ஒற்றர்கள் (C.1.D.) மூலம் துருவித் தேடுகின்றன. ஆனால் அக்காலத் திலோ, குறையைப் போக்கி நலமுண்டாக்க வேண்டும் என்னும் நல்ல நோக்குடன். அரசர்கள் தாங்களே மாறு கோலம் புனைந்து, மக்கள் என்ன குறைபாடு பேசிக்கொள் கின்றனர் என்று துருவித் தேடினர். இந்த நிலை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே 'செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன் என்றார்.

மக்கள் சொல்லியும் திருந்தாத மன்னர்களை அன்று அறிஞர்களும் அமைச்சர்களும் இடித்துரைத்தனர். இக்காலத்தில் இடித்துரைத்தாலோ சீட்டுக் கிழிந்துவிடும். பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார், வெள்ளைக்குடி நாகனார். கோவூர்கிழார், ஒளவையார் முதலிய பழங்காலப் புலவர்கள் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்களைப் புரட்டிப் பாருங்கள்! நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிற அளவுக்கு மன்னர்களை நேரில் தாக்கிப் பேசியுள்ளனர். அம்மன்னர்களும் திருந்தியதாகத் தெரிகிறது. இதுதான் "சொல் பொறுக்கும் பண்பு" ஆகும்.

இந்தக் குறட் கருத்தை இக்கால நிலைக்கு வைத்துப் பார்ப்போம். "உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது" என்றபடி, மக்கள் ஆட்சியில் மக்கள் எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். மக்கள் பேசாவிடினும், அவர்களுக்குப் பதிலாகச் சென்றிருக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்தின் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டிக் காது கைக்கப் பேசுவார்கள்தாம். அப்பொழுதுதான் அரசாங்கம் விழிப்புடன் இருக்கும். "தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்" ஆகிவிடுவானல்லவா? நல்லதொரு கட்சி நாட்டையாள், அதற்கு உரங்கொடுக்க வலுவானதோர் எதிர்க்கட்சி வேண்டும் என்பது இதற்காகவே! இவ்வாறு காது கைக்கப் பேசுபவரைப் பெற்றிருப்பது, அரசாங்கம் திருந்தி மக்களுக்கு நன்மை புரிந்து நல்லபேர் எடுப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாகும். இவ்வாறு செய்தால் மக்கள் கூட்டம் வந்து தம்பால் விழும். அதனாலேயே, "பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும்" என்றார்.

கவிகை என்றால் குடை. கவிந்திருப்பதால் கவிகை எனப் பெயர் பெற்றதோ? மன்னனது குடையின் கீழே: உலகமே தங்கும் என்கிறாரே. இஃதென்ன பெரிய புதிர்? ஒருகுடை ஒருவருக்கே போதவில்லையே, உலக முழுவதும் எப்படி ஒரு குடையின்கீழ்த் தங்க முடியும்? உண்மையில் ஒரு குடையின்கீழ் வந்து தங்குவதில்லை. இவ்வாறு சொல்வது ஓர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! கோடை வெயிலிலே குடைநிழல் எத்தகையதோ, அத்தகையதே குடிமக்களுக்குப் பண்புடைய வேந்தனது ஆட்சி. மன்னனது குளிர்ந்த ஆட்சியின் அறிகுறிதான் குடை எனப்படுவது. பண்புடைய வேந்தனது குளிர்ந்த ஆட்சியென்னும் குடை நிழலைவிட்டு உலகம் அப்படியிப்படிக்கூட அசையவே அசையாது - அகலவே அகலாது என்பதை அறிவிக்கவே "தங்கும்" என்ற சொல்லைப் பெய்தார் ஆசிரியர். ஒரு சிலர் மட்டுமல்லர். எல்லோருமே இன்புற்றுத் தங்குவர் என்பதை அறிவிக்கவே "உலகு" என்ற சொல்லை இட்டார் ஆசிரியர். இப்பொழுது ஒருமுறை குறளைப் படிப்போம்; "செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு."

இதுவரையும் இந்தக் குறளைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பார்த்தோமே; இப்பொழுது இவ்வளவையும் ஒரு வரியில் சுருக்கிச் சொல்லி முடித்துக் கொள்வோமா? "பொறுத்தார் பூமி யாள்வார்!"

மக்கட்கு இறை
"முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்" (பதவுரை) முறைசெய்து = ஒழுங்கான முறையில் ஆட்சி புரிந்து, காப்பாற்றும் மன்னவன் = குடிமக்களைக் காப்பாற்றுகின்ற அரசன், மக்கட்கு இறை = அம்மக்களுக்குக் கடவுள் ஆவான், என்று வைக்கப்படும் = என்று உயர்த்தி வைத்து மதிக்கப் பெறுவான். முறைசெய்தல் - செங்கோலாட்சி புரிதல்; இறை = இறைவன் - கடவுள்.)

(மணக்குடவர் உரை) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லா வுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

(பரிமேலழகருரை) தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ் செய்யுமரசன், பிறப்பான் மகனே யாயினும், செயலான் மக்கட்குக் கடவுளென்று வேறு வைக்கப்படும்.

(விளக்கவுரை) இந்தக் குறளில் "இலைமறைகாய்" ஒன்று ஒளிந்துள்ளது. மேலோடு பார்த்தால் அது தெரியாது. உள்ளே ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தோடு நுனித்து நோக்கினால்தான் அது புலப்படும். அது என்னவாய் இருக்கக் கூடும்? அரசனது இலக்கணம் கூறும் பகுதி இது. ஆனால் அதற்குப் பதிலாக ஆண்டவனது இலக்கணம்தான் இந்தக் குறளில் இயம்பப் பெற்றுள்ளது. இதுதான் அந்த இலை மறைகாய். மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்? எதனால்? முறை செய்து காப்பாற்றுவதால்! கடவுளே முறை செய்து உலகைக் காப்பதாகக் கூறுவது வழக்கம். அவரைப்போல மன்னனும் காப்பதால், அவன் மக்களுக்குக் கடவுளாவான்.

இந்தக் கடவுள் தத்துவத்தை ஆசிரியர் திருவள்ளுவர் வேறு எங்கேயும் சொல்லவில்லை; இங்கே தான் குறிப்பிட்டிருக்கிறார். கடவுள் வாழ்த்து' என்னும் பகுதியில் பல குறள்களில், கடவுளை வணங்கினவர் வாழ்வார். என்று கூறியுள்ளார். ஆனால் மன்னனோ, தன்னை வணங்கினும் வணங்காவிடினும் மக்களை வாழவைக்க வேண்டும். அது அவனது கடமை. நாட்டில் வறுமை என்றால் கடவுள் தப்பித்துக் கொள்கிறார். மன்னன்தான் அகப்பட்டுக் கொண்டு கிடந்து விழிக்கிறான். ஆளத் தெரியவில்லை என்று ஆண்டவனை யாரும் பழிப்பதில்லை; மன்னனது தலையைத்தான் மக்கள் உருட்டுகிறார்கள். எனவே, மாதேவனைவிட மன்னனுக்குத்தான் மக்களைக் காப்பதில் பொறுப்பு மிகுதி - அக்கறை அளவு கடந்தது. ஆகவே, உண்மையில் மக்களுக்கு இறைவன் எனப்படுபவன் அந்த ஆண்டவன் கூட அல்லன்; முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் தான் மக்களுக்கு இறைவன் என்றார் ஆசிரியர். எனவே, இந்தக் குறளுக்கு மன்னவன் மக்கட்கு இறைவன் போன்றவன் என்று பொருள் பண்ணாமல், மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் கூறுக. இதனாலன்றோ "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்" என ஆழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்; கடவுள் தத்துவத்தை மன்னனிடத்தில் கண்டிருக்கிறார்.

கடவுளர்கள் தம் வேலைகளை மக்கள் தலைவரிடம் ஒப்படைத்து விட்டுக் கவலையின்றி இன்பமுடன் பொழுது போக்குவதாகக் 'கண்டியரசன்' தெரிவித்திருக்கிறான், இலங்கையில் ஒருகால் வறுமை தலைவிரித்தாடியது. மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்ட கண்டியரசன் தமிழகத்துச் சோழநாட்டில் வாழ்ந்த சடையப்ப வள்ளலிடம் உதவி வேண்டினான். சோழ நாட்டிலிருந்து கப்பல் கப்பலாய்க் கண்டிக்கு நெல் கிடைத்தது. நன்றி பாராட்டு முகத்தான் கண்டி மன்னன் பாடல் ஒன்று எழுதி வள்ளல் தலைவலற் கனுப்பினான். அதில் என்ன எழுதியனுப்பினான்? "சிதம்பரத்தில் ஒருகடவுன் (சிவன்), ஆடிப் பாடிக் களியாட்டத்தில் மூழ்கிக்; கிடக்கிறார்; திருவரங்கத்தில் . ஒரு கடவுள் (திருமால்) காவிரி நடுவே இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் என்ன? உயிர்களைக் காப்பாற்றும் வேலையை நம் சடையப்பன் பார்த்துக் கொள்வான் என்ற துணிவே" என்று எழுதியனுப்பினான்.

"கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் நின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலே யொரு
கருணை மாமுகில் துயிலுமே
தருவுயர்ந்திடு புதுவை யம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழவே"

என்பது கண்டி. மன்னன் பரராச சேகரனது பாடற்பகுதியாம். எனவே, மக்களுக்குக் கண்கண்ட இறைவன் மன்னனே என்பது புலப்படும். ஆசிரியர் கூட, அரசனது மாட்சிமையைப் பற்றிச் சொல்லும் இந்தப் பகுதிக்கு இறை மாட்சி என்று பெயர் வைத்திருக்கும் நுணுக்கத்தில் மிளிரும் நயத்தினைக் காண்க. இறைமாட்சி என்னும் இந்தப் பகுதிக்கு. இறையைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள், முடிந்த முடிபாக - உயர்ந்த உச்சி மணி விளக்காக மிளிர்வதைக் கண்டுபிடித்தே. நான் இந்தக் குறளை இறுதிக் குறளாக - அதாவது பத்தாவது குறளாக அமைத்திருக்கிறேன். ஆனால், பழைய உரையாசிரியர்களுள், காலிங்கர் என்பவர் இதனை ஏழாவது குறளாகவும், பரிமேலழகர் எட்டாவதாகவும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் ஒன்பதாவதாகவும், பரிதியார் பத்தாவதாகவும் தத்தம் உரைகளில் அமைத்துள்ளனர். இம்மட்டில் நான் பரிதியார் பக்கத்தைச் சேர்ந்தவனே. நீங்கள் எப்படியோ? ஆராய்க!

இனி, இந்தக் குறளிலுள்ள சொல் நயங்களில் சிறிது திளைப்பாம்: காப்பாற்றுபவன் எவனோ அவனே இறைவன் - அல்லது மன்னவன்; அதுபற்றியே மன்னனுக்குக் காவலன், புரவலன் (காத்தல் = புரத்தல்) என்ற பெயர்களும் தமிழ் மொழியில் உண்டு; இந்தக் கருத்தை அறிவிக்க வந்தவர் போல் காப்பாற்றும் மன்னவன்" என்றார் ஆசிரியர், காப்பாற்றுபவன் என்றால் கடனுக்கு அழுபவனல்லன்; யார் யார்க்கு என்னென்ன தீர்ப்பு வழங்க வேண்டுமோ - யார் யாரிடத்தில் எப்படியெப்படி நடந்து கொள்ளவேண்டுமோ, அந்தந்த முறைப்படி செங்கோலாட்சி செலுத்துபவன் என்பதையறிவிக்கவே "முறை செய்து காப்பாற்று மன்னவன்" என்றார். மக்களுக்கும் மன்னனுக்கும் உள்ள உறவு முறையின் இறுக்கத்தை. 'மக்கட்கு இறை' என்பதிலுள்ள நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' அறிவித்து நிற்கிறது என்பதை இலக்கணம் நன்கு கற்ற எல்லோரும் உணர்வர். முரட்டு நாத்திகரும் அல்லாத - குருட்டு ஆத்திகரும் அல்லாத நம் திருவள்ளுவர் 'மன்னனே மக்கட்கு இறை' என்று 'ஏ' இட்டு உறுதிப்படுத்திக் கூறினால், எங்கே தமக்கும் நாத்திகப் பட்டம் வந்து விடுமோ என்று சூழ்ந்து, "அப்படி நான் கருதவில்லை; மன்னன் உலகினரால் இறையென்று வைக்கப்படுவான்" என உலகினரின் தலைமேலே பழியைப் போட்டுத் தாம் பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள முயல்பவரைப் போல, "இறை யென்று வைக்கப்படும்" என மூன்றாந்தர முடிபில் கூறியுள்ள அழகு தான் என்னே!

"ஆண்டவன் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களே! நீங்கள் உலகத்தைக் காத்து ஆளப்போகின்றீர்களா? அல்லது - அழிக்கத்தான் போகின்றீர்களா? என்ன செய்ய இருக்கின்றீர்கள்? "என்று இன்றைய சில அரசியல் சூதாட்ட அரங்கினரை எச்சரிப்பதுபோல் இந்தக் குறள் தோன்றுகிறதல்லவா?