ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/தோற்றுவாய்

ஆழ் கடலில் சில ஆணி முத்துகள்


தோற்றுவாய்


பெறுதற்கரிய காதலி ஒருத்தியைப் பெற்ற பெறுதற்கரிய காதலன் ஒருவன், தான் அவள் மாட்டு நுகர்ந்த இன்பத்தின் சுவையைப் புனைந்துரைக்கவில்லை, உண்மை யாகவே உரைக்கின்றான்: அவன் அவள் கனிவாயை நுகர்ந்தானாம். அந் நுகர்ச்சியின் பயனை எவ்வாறு வெளியிடுவது? அவனுக்குப் பட்டதைச் சொல்லி விடுகிறான். இல்லை, அவன் சொல்ல வேண்டும் என்று எண்ணிச் சொல்லவில்லை. அவனையறியாது அந்நுகர்ச்சியின் தேக்கெறிவு சொற்களாக வெளிப்படுகின்றது. அந்தக் கனிவாய்ச் சுவை அவனது உயிர்க்கு இனிதாம்-இனிக்கின்றதாம். அது மட்டுமா? அமிழ்தமாகி அவனது ஆருயிர்க்கு எழுச்சி நல்குகின்றதாம். ஒரு முறையா? இரு முறையா? பலப்பல முறையும் இனிக்கின்றதாம். ஆருந்தோறும் ஆருந்தோறும்அனுபவிக்குந்தோறும் அனுபவிக்குந்தோறும் அமிழ்த மகிழ்வு மிகுகின்றதாம்; மிகுந்து கொண்டேயிருக்கின்றதாம்.

இது அவனது பட்டறிவு. அதாவது தலைசிறந்த தமிழ் மகனது பட்டறிவு. ஆண்டுக்கு இருமுறை மும்முறை மணவிலக்கு செய்து கொண்டு மறு மணம் புரிந்துகொள்ளுகின்ற, மனவளர்ச்சியற்ற மாக்களுக்கு இது விந்தையினும் விந்தை! வியப்பினும் வியப்பு! பழகப் பழகத் தமிழனுக்கு மனைவி மேல் இனிப்பு மிகுகின்றதே தவிர, குறையவேயில்லை; கசப்பாக மாறவும் இல்லை. எதைப்போல.. ?

இங்கேதான் பார்த்துப் பதிலிறுக்கவேண்டும். கனிவாய் இன்பத்துக்கு எதனை உவமையாக்குவது? "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" என்கின்றனரே! பாலே-தீம் பாலே இத்தகையது எனின் வேறு எத்தகைய இனிப்புப் பொருளை ஈண்டு இயம்புவது? அப்பழமொழியே சொல்லுகிறதே. 'பாலும்' என்பதிலுள்ள - உயர்வு சிறப்பு உம்மையே தெரிவிக்கிறதே. நாடோறும் நமக்கு நல்லுணவாகின்ற பாலுமே புளிக்கும் என்றால், பின்னைப் பேசுவானேன்?

கனிவாய் இன்பத்துக்கு ஒர் உவமை கூற இவ்வளவு திண்டாட்டமா? திணறலா? திக்குமுக்காடலா? அவன் அக்கனிவாய் இன்பினை நுகர்ந்தவன் ஏதேனும் உவமை கூறியிருக்கின்றானா? ஆம், கூறியிருக்கின்றான். ஒன்றன் சிறப்பை உணர்த்துதற்கு உவமை கூறுவதென்றால் அதனினும் சிறந்த பொருளை எடுத்துக் கூறுதல்தானே மரபு? நன்கு சுடர் விடும் விளக்கு ஒன்றிற்கு மின்மினியையா ஒப்பிடுவது? கதிரவனைப் போல் ஒளிர்கிறது இவ்விளக்கு, எனல்தானே உவமையியல்?

ஆயின், கனிவாய் இன்பத்துக்கு அவன் என்ன உவமை-ஒப்புமை கூறியுள்ளான்? தமிழர்களே, நம்புவீர்களா? அவன் கூறியிருப்பதை நம்புவீர்களா? அன்றைய தமிழன் தன் பட்டறிவிற்கு எட்டியதைச் சொன்னான். ஆனால் இன்றைய தமிழனோ, அதனைப் புரிந்துகொள்ளும் நிலையில்-நம்பக்கூடிய நிலையில், தன்னுணர்ச்சி உடையவனாய்-தன்னம்பிக்கை உடையவனாய் இல்லை. அந்தோ தமிழகமே! நீ அளியை! நீ நல்லை! நீ வாழ்க!

அவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறான்? என்ன உவமை கூறியிருக்கிறான்? "தேருந்தோறும் தேருந்தோறும் ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிக்கின்ற செந் தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் இனிக்கிறது; தேருந்தோறும் அமிழ்தாகின்ற செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் அமிழ்தாகின்றது'- என்பதுதான் அவன் செம் மொழி.

இப்பொருள் செறிந்த உவமையில் எத்துணை உண்மை பொதிந்து கிடக்கின்றது! இக்கருத்து எத்துணை ஆழமுடையது. எத்துணை அகலமுடையது, எத்துணை உயர்ச்சியுடையது! இஃது எங்கிருந்து பெறப்பட்டது? இங்கிருந்து தான்:--

தேருந்தொறும் இனிதாந் தமிழ்போன்று இவள்

செங்கனிவாய்

ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் என தாருயிர்க்கே"

(தஞ்சை வாணன் கோவை-59)

என்னுஞ் செய்யுட் பகுதியிலிருந்துதான். இச் செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? "பொய் பிறந்தது புலவர் வாயிலே" என்பர் சிலர், இல்லையில்லை; புலவர்கட்குள்ளேயே பொய்யாமொழிப் புலவர் பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிக மிக இனிக்கும் என்பது முடிந்த கருத்து. தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர், நம்புவர், கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணரவேண்டும், உணரமுடியும் அல்லவா?

பொய்யாமொழிப் புலவர் பெண் இன்பத்திற்கும் தமிழ் இன்பத்திற்கும் ஒத்தநிலை தந்துள்ளார். பாரதிதாசனோ,

மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள்
மாதமிழ்க்கு ஈடு இல்லை"

எனத் தமிழின்பத்தை உயர்த்தியுள்ளார்.

தமிழை ஆராய்ந்து இன்புறுதல் என்றால் என்ன? தமிழிலுள்ள தலைசிறந்த நூல்களை ஆராய்ந்து இன்புறல் தானே! அங்ஙனமெனின், தமிழ் நூல்களை ஆராய ஆராய இனிமை மிகும் என்பது போதருமன்றோ? முதல் பொய்யா மொழிப்புலவராகிய திருவள்ளுவரே கூறியுள்ளாரே! படிக்கப் படிக்க நூலின் நயம் இனிப்பதைப் போல, பழகப் பழகப் பண்புடையவரது நட்பு இனிக்கும், என்பது அவர் கருத்து.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”

என்பது அக்கருத்தமைந்த குறளாம்.

உண்மை அஃதெனில், ஆராய ஆராயத் தெவிட்டாது இனிக்கும் தமிழ் நூல்களுள் தலைசிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து அவ்வின்பத்தைத் துய்க்கலாமே! இழப்பதேன்?

அத்தகைய தொரு தமிழ் நூலைத் தேர்ந்தெடுத்தல் அரிதன்று; எளிது, மிக எளிது. அவ்வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதனை முன்னமேயே அது செய்து முடித்து விட்டது. அந்த நாடறிந்த நூலை - ஏன், உலக மறிந்த அத்தலை நூலை ஏறக்குறைய ஒரீராயிரம் ஆண்டு கட்கு முன்பே, சங்கத் தமிழ்ப் புலவர்களே - பன்னூல்கள் எழுதிய தமிழ்ப் பாவாணர்களே விரும்பு வெறுப்பின்றி ஒரு முகமாய்த் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ் நூலை-ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கும் அந்தத் தமிழ் நூலை - சிந்திக்கும் சிந்தைக்கு இனிய, அது மட்டுமா, கேட்கும் செவிக்கும் இனிய, அம்மட்டுமா, சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ் நூலை அவர்கள் அப்போதே தேர்ந்தெடுத்து விட்டனர்.

அருங் குறளும் பகர்ந்ததற்பின் போயொருத்தர்
வாய்க் கேட்க நூலுளவோ”

என்றார் நத்தத்தனார்.

உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு“

என்றார் மாங்குடி மருதனார்.

வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு”

என்றார் உருத்திர சன்ம கண்ணர்.

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய...
வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா”

என்றார் கவுணியனார்.

உலகடைய உண்ணுமால் (வள்ளுவர்)
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து”

என்றார் ஆலங்குடி வங்கனார். இப்படி இன்னும் பலர், பற்பலர்.

அக்காலப் புலவர்கள் மட்டுமா அதன் அருமை பெருமையினை அறிந்திருந்தனர்? இக்காலத்தும் பல்வேறு இந்திய மொழிப் புலவர்கள் உட்படப் பல்வேறு உலக மொழிப் புலவர்களும் அதன் ஈடு இணையற்ற சிறப்பினை நுனித்துணர்ந்தனர். தத்தம் மொழிகளிற் பெயர்த்துக் கொண்டனர். பிற மொழியாளர்கள் அத்தமிழ் நூலை மொழி பெயர்த்துக் கொண்ட செயல், அவர்தம் பரந்த மனப்பாங்கையோ, பரந்த அறிவின் பெருக்கையோ அறிவிப்பதாகப் பொருள் இல்லை; அத்தமிழ் நூலின் கருத்தாழத்தை-எவரையும் கவர்ந்து தன் வயப்படுத்தும் அந்நூலின் தனி மாண்பினை அறிவிப்பதாகவே பொருள் அல்லவா?

காலங் கடந்த, கண்டங் கடந்த, சாதி சமயங் கடந்த அத்தகு உலகப் பொது நூல்-உலகப் பொது மறை திரு வள்ளுவரின் தெவிட்டாத திருக்குறளன்றோ? வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' என்று சுப்பிரமணிய பாரதியார், திருக்குறள் உலகப் பொது நூல் என்பதற்கு நற்சான்றிதழ் (Certificate) கொடுத் திருப்பதாகக் கூறுவது வழக்கம். இல்லை, இஃது அவரது சொந்தச் சரக்கு இல்லை. ஒருவேளை அவ்வாறே எடுத்துக் கொண்டாலும், இக்கருத்தை முதலில் வெளியிட்டவர் அவ ரல்லர். இதனைத் திருவள்ளுவர் காலத்திலேயே புலவர் பெருமக்கள் பறைசாற்றித் தெரிவித்து விட்டனர்:

"வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குங்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகு அடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து."

என ஆலங்குடி வங்கனார் அப்போதே அறிவித்துப் போந்தார். 'உலகு அடைய-உலகம் முழுவதும்-உண்ணும்' என அப்போதே குறி (ஆருடம்) சொல்லிவிட்டுப் போனார். எதிர்காலத்துக்கும் இடம் வைத்து, 'உண்ணும்' என்று 'செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் கூறிப் போந்தமையின் நுணுக்கத்தினை நுனித்து நோக்கி மகிழ்க.

வள்ளுவர் உலகங் கொள்ள மொழிந்தார் குறள்”

என நரி வெரூஉத் தலையாரும் கூறியுள்ளார்.

ஆம், உலகினர் உட்கொளகின்றனர்; ஆனால் தமிழர்களின் நிலை என்ன? "வள்ளுவன் குறளை வையகமெல்லாம் வாரியிறையடா தமிழா" என்று பாடுகிறோம், ஆடுகிறோம்; ஆனால் செய்தோமா? செய்கின்றோமா? போகட்டும், இனியேனும் செய்வோமா?

தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான்-அதனை அனைத்துலகிற்கும் அறிமுகப் படுத்த அவர்கள் மறந்தது உண்மைதான். ஆனால், திருக்குறள் தமிழர்களை மறக்கலில்லை. அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்து வைக்க அது மறக்க வில்லை. தன் கருத்தின் திண்மையால் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, 'திருக்குறள் என ஒரு நூலுண்டு, அஃது எழுதப்பட்டது தமிழ் மொழியில், அம்மொழியினைப்பேசுபவர் தமிழர்கள், அவர்கள் அத்தகையதொரு நூலை உலகிற்கு அளிக்க வல்ல ஆற்றலும் அனுபவமும் நிரம்பியவர்கள்' என அனைத் துலகினரும் அறிந்து வியக்கச் செய்தது நம் அருமைத் திருக் குறளன்றோ?

உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்புவது அப்புறம் இருக்கட்டும், முதலில் நீங்கள் படியுங்கள்! என்று திருத் குறள் சொல்லுவது போல்-திருவள்ளுவர் சொல்வது போல் தோன்ற வில்லையா?

திருக்குறளை ஒரு முறை படித்தால் போதுமா? இரு முறை படித்தால் போதுமா? ஒரு கருத்துரையைக் கற்றால் போதுமா? ஒரு குறிப்புரையைக் கற்றால் போதுமா? திருக்குறளோ ஒரு வாழ்க்கை நூல்-வாழ்க்கைத் துணை நூல். இளமையில் ஒரு முறை படித்துச் சுவைத்தோம். இன்னும் இல்லாண்டுகள் சென்ற பின்னர்-சில அனுபவங்களைப் பெற்ற பின்பு திருக்குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் தெரியும். புது அழகு-புது நயம்-புதுப்பொலிவு காணப்படும். இவ்வாறே ஆண்டுகளுக்கு ஆண்டு, அனுபவத் துக்கு அனுபவம் திருக்குறள் தெவிட்டாது இனிக்கும், 'உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி' என மாங்குடி மருதனாரும், 'முப்பால் ஆய்தொறும் ஊறும் அறிவு' என உருத்திரசன்மகண்ணரும் உரைத்திருப்பதை இப்போது ஒருமுறை ஊன்றி நோக்குக.