இங்கிலாந்தில் சில மாதங்கள்/அரசியல் அமைப்புகள்
அரசியல் அமைப்புகள்
அரசியல் ஆரம்பத்தில் தியாகிகளின் கையில் இருந்தது, இன்று அரசியல் மக்களைத் தியாகிகள் ஆக்கி வருகின்றன. பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்னார், “அவனவன் பணத்தை வாரி இறைத்துவிட்டு இங்குப் பணம் பண்ணாமல் வேறு என்ன செய்யமுடியும். இந்தத் தேர்தல் முறையே இந்தத் தீமைகளுக்கு வித்தானது” என்று கூறினார். இல்லை; தேர்தல் முறை நியாயமானது தான்; அதை இந்த நாட்டுச் சூழ்நிலை ஏணியாகப் பயன்படுத்துகிறது; அங்கே தொழிற் கட்சி; மிதவாதிகள் கட்சி என்று இரு கட்சிகள் செயல்படுகின்றன. தனியார் துறைக்கு ஆதரவு; தேசிய மாக்குதலுக்கு ஆதரவு இந்த இரண்டு அடிப்படைகளில் கட்சிக் கொள்கைகள் வேறுபடுகின்றன; நாம் அரசியலைப் பற்றி விமரிசிப்பது வீண்; திரைப்படங்கள் எம்.எல்.ஏக்கள் போலிகள் எனத் தொடர்ந்து சித்திரித்து வருகின்றன. ‘ஈ நாடு’ என்ற மலையாளப் படம் எப்படி சாராயக்கடை முதலாளிகளிடம் அரசியல் தவிக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. ‘கலங்கலைக் குடித்துக் குடிக்க வைத்துப் பணம் பண்ணும் அயோக்கியத்தனம் இந்தப் படத்தில் காட்டப்பட்டது. எத்தனை உயிர்கள் பறிபோயின.