இங்கிலாந்தில் சில மாதங்கள்/குடிப் பழக்கம்

குடிப் பழக்கம்

மேலை நாட்டில் குடிப்பதற்கும் நம் நாட்டில் குடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

இங்கே கவலைகளை மறப்பதற்கு, துன்பங்களை நினைக்காமல் இருப்பதற்குக் குடிக்கிறான்; அங்கே நல்ல மனோ நிலையில் தெம்பாக இருப்பதற்குக் குடிக்கிறார்கள். இந்த போதை மயக்கம் என்பது வேண்டியவையே. இல்லாவிட்டால் மனிதனுக்கு மறதி என்பதே இல்லாமல் கவலைகள் மிகுதியாகிவிடும். மனோநிலை கெட்டுப் பைத்தியம் பிடிக்கிறவர்களுக்கு வைத்தியர்கள் தூக்க மருந்து கொடுக்கிறார்கள். ஏன் அவன் மனோநிலையின் வேகத்தைக் குறைத்து ஓய்வு தருவதற்கே. அதனால் குடியும் மனித வாழ்வுக்குத் தேவையானதாகவே தெரிகிறது. நம்முடைய பொருளாதாரம் இந்தக் கூடுதல் செலவுகளைத் தாங்கும் ஆற்றலைத் தரவில்லை. அதனால் அதற்குப் பழக்கமாகித் தம் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கொள்கின்றனர். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற பிரச்சாரத்தோடு அந்தத் தொழிலை அனுமதிக்க வேண்டியுள்ளது.