இங்கிலாந்தில் சில மாதங்கள்/உயிர்வாழ்வுக்குப் பாதுகாப்பு
உயிர்வாழ்வுக்குப் பாதுகாப்பு
இங்கிலாந்து தேசம் மக்களின் உயிர் வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கிறது; பிறந்த குழந்தைக்கு அரசாங்கம் மானியம் தருகிறது; அக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு இருபத்தைந்து பவுண்டு அளவு மாதாமாதம் தரப்படு கிறது; தாய்ப் பாலை மட்டும் அக்குழந்தை உண்டு வளரவில்லை; நேரிடையாக அரசாங்கம் தரும் மானியத் தொகையையும் பெறுகிறது, நாட்டின் மகன் என்ற அங்கீகாரம் தரப்படுகிறது. அதே போல வயது வந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை இல்லை என்றால் பட்டினி கிடக்கத் தேவை இல்லை. வாழ்க்கைப் பணம் அ சாங்கம் தருகிறது. வேலையே தேடாமல் ஒருவனும் ஒழித்தியும் இந்த வாழ்க்கைப் பணத்தைப் பெற்றுக் குடும்பம் நடத்த முடிகிறது; குழந்தைகளையும் பெற்றுக்கொள்கிறார்கள்; உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இம் மூன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மக்களின் உயிர் வாழ்வுக்கு நாட்டு அரசாங்கம் பொறுப்பேற்று இருக்கிறது. நம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் ஆட்சியின் பொறுப்பு என்ற நிலை கொள்கை அளவில் சொல்லப்படுகிறது; முழுப் பொறுப்பை இந்த வகையில் ஆட்சி ஏற்கவில்லை. கல்வி இன்று தனியாரின் கைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதை வைத்து ஒரு கொள்ளையே நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கொள்ளைக்கு “நன்கொடை” {donation) என்ற பெயர் வழங்கப்படுகிறது. மருத்துவம் இஞ்சினியரிங் எல்லாம் பொருளில்லார்க்கு இல்லை என்ற நியதி சொல்லப்பட்டுவிட்டது. சாதாரண மருத்துவ உதவி ஆட்சியாளர் நடத்தும் மருத்துவமனையில் தரப்படுகிறது. வசதி படைத்தவர்கள் அவர்களை ஒட்டி மற்றவர்களும் தனியார் மருத்துவத்தை நாடும் நிலை இங்கு வளர்ந்துவருகிறது.
இங்கிலாந்தில் ஒரு வியத்தகு அமைப்பு உள்ளது; இயங்கி வருகிறது. ‘தனியர் மருத்துவ மனைகள்’ அந்த நாட்டில் அறவே நீக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் முழுப்பொறுப்பேற்று மக்களின் நல்வாழ்வுக்குக் காப்பு அளிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. அவை தனியார் மருத்துவமனை போன்ற அமைப்பை உடையன. அதில் நான்கு அல்லது ஐந்துபேர் கூட்டாகச் சேர்ந்து நடத்துகின்றனர். அது அவர்கள் அரசாங்கப் பொருள் உதவி பெற்று இயக்கி வருகிறார்கள். அதற்கு ‘சிகிச்சை அகம்’ (Surgery) என்று பெயர். ஒவ்வொரு வைத்தியரின் கீழ் சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்யப்படுகின்றனர். ஒரு சிகிச்சை அகத்தில் பத்தாயிரம் பேர் புதிவு பெறுகின்றனர், அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு இந்தச் சிகிச்சை அகத்தைச் சார்ந்தது.
காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை அங்கு நேரில் சென்று நோயாளிகள் மருத்துவ உதவி பெறுகின்றனர். இதுமட்டுமல்ல. அவர்கள் வீட்டுக்கும் இவர்கள் அழைப்பின் பேரில் செல்லவேண்டும். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரை அழைப்பார்கள். அவர்கள் இல்லங்களுக்கு இரவு எந்த நேரமாயினும் பகல் இரவு என்று பாராமல், அவர்களைக் கவனித்து மருத்துவம் பார்க்க வேண்டும். இதற்குக் கட்டணமாக அவர்கள் எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. அரசாங்கம் இவர்களுக்காக இந்தச் சிகிச்சை அகங்களுக்குக் கட்டணத்தொகையைச் செலுத்திவிடுகிறது,
இதைவிட நாம் நம்பமுடியாத பொறுப்பை அரசாங்கம் ஏற்று நடத்துகிறது. அவர்கள் மருந்துக்குக் காசு தர வேண்டியது இல்லை. மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை மருந்து கடையில் நீட்டினால் அந்த மருந்துக்குக் காசு வாங்காமல் அவர்கள் மருந்து கொடுக்கின்றனர். அது எந்த விலையாயினும் எவ்வளவு அரிய மருந்தாயிலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மருத்துவச் சீட்டைக் காட்டினால் தரப்படுகிறது என்றால் அரசாங்கம் மக்களின் உயிர்வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கும் உயர்வைக் காணமுடிகிறது.
அந்தச் சிகிச்சை அகங்களில் தீர்க்க முடியாத நிலையில் அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர். அங்கே வசதிகள் அதிகம்; தங்கி இருந்து சிகிச்சை பெற இடமும் தரப்படுகிறது. நான்கைந்து சிகிச்சை அகங்களின பொது அமைப்பாக இது செயல்படுகிறது. அதுவும் அவர்களைக் கவனிக்க முடியாத நிலையில் ‘பெரு மனைக்கு’ (Govt Hospital) நம் நகரப் பொது மருத்துவமனை போன்ற இடம் அங்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றால் அதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த நிலை நம் நாட்டில் ஏற்படவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. அரசாங்கம் துணிந்து பொறுப்பு ஏற்கிறது.