இங்கிலாந்தில் சில மாதங்கள்/கடமைகள்

கடமைகள்

கடமைகளும் பொறுப்புகளும் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. அது அந்தந்த நாட்டு ஆட்சியின் பொறுப்புகளை ஒட்டியதும் ஆகும். பழங்காலத்துப் புறநானூற்றுப் பாடல் கடமைகளை விளக்கிக் கூறுகிறது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன்
நன்னடை நல்கல் தந்தைக்குக் கடன்
சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்”

என்கிறாள் தமிழ்ப் பெண்.

மகனைப் பெறுவது தாயின் கடமை; பெறுவது மட்டுமல்ல; அவனை வளர்ப்பதும் அவள் பொறுப்பாகிறது. அதனால் அவள் ‘ஈன்று’ என்று மட்டும் கூறாமல் ‘புறந்தரு தல்’ என்றும் கூறுகிறாள்; அவனை மற்றவர்கள் மதிக்கத்தக்க நிலையில் வளர்ப்பது தாயின் கடமையும் பொறுப்பும் ஆகிறது; அவனுக்கு நல்ல ஒழுக்கங்களைக் கற்பிப்பது, பழக்குவது, தந்தையின் கடமை. அவனை வாழத் தகுதியுடைய சான்றோன் (எல்லாவகையிலும் நிறைவு உடையவன்) பொதுக் கல்வி, தொழிற் கல்விப் பயிற்சி இவற்றைத் தந்து குடிமகன் ஆக்குதல் ஆட்சியின் கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடல் தெளிவாக அறிவுறுத்துகிறது.

இந்த மூன்றாவது பொறுப்பையும் பெற்றோர்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. பையனைப் படிக்க வைத்துத் தொழில் தேடி. எல்லாவகையிலும் அவனை உருவாக்குதல் தந்தையின் பொறுப்பாகிறது; பெண்ணுக்கும் இதே போலப் படிக்கவைத்துக் காப்பாற்றித் தக்க பொருளும் தந்து அவள் வாழ்வுக்குத் தேவையானவற்றைத் தந்துகொண்டே இருப்பது பெற்றோரின் கடமையாகிறது.

இந்த மூன்றாவது நிலையில் அவர்கள் தேசம் நம்மிலிருந்து மாறுபடுகிறது. பையனுக்குக் கல்வி தொழில் இவற்றை அவனே தேர்ந்து எடுத்துக் கொள்கிறான் ; அங்கேயும் நம் நாட்டைப் போல அரசு பொதுப் பள்ளிகள் இருக்கின்றன, வசதி உடையவர்கள் தனியார் பள்ளிக்கே அனுப்புகின்றனர். அங்கு வாழும் நம் நாட்டவர் தனியார் பள்ளிகளுக்கே தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். கல்வியின் தரம் மட்டுமல்ல; வசதியுள்ள குடும்பங்கள் வந்து படிப்பதால் உயர் குடும்பப் பிள்ளைகளின் தொடர்பு ஏற்படுகிறது, அதனால் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை. அதே நிலைதான் நம் நாட்டிலும் ஏற்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் பிள்ளைகளின் பொதுத் தேவைகளுக்குப் பணிபுரிகின்றன; தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தை மையமாக வைத்து மேல் நிலைக் குடும்பங்களின் தேவைகளுக்குப் பயன்படுகின்ற’. அங்கே மேலே படித்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற தேவை இல்லை. இங்கே வைத்தியப் படிப்புப் படித்தால்தான் வசதியாக வாழ முடியும் என்ற சூழ்நிலை; இன்ஜினியராக இருந்தால்தான் நிலையான பதவிகளில் உயர்வு பெறமுடியும் என்ற நம்பிக்கை; சூழ்நிலை;

இப்பொழுது இங்குச் சட்டப் படிப்புக்கும் கடும் போட்டி ஏற்பட்டுவிட்டது. காரணம் சுதந்திரமாகத் தொழில் செய்து பிழைக்கலாம் என்ற நம்பிக்கை; மற்றொன்று நாட்டில் குற்றங்கள் இவர்கள் பிழைப்பைத் தேடி.க்கொள்ளத் தக்க வகையில் பெருகிக்கொண்டும் வருகின்றன. மற்றொன்று இதுவரை படி.த்துவந்த கலைக் கல்லூரிகளில் பட்டங்களுக்குத் தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. படிப்பு வேறு; தொழில் வேறு என்ற பேதத்தை உணரமுடிகிறது. படிக்கும்போது ஏதோ ஒரு நோக்கத்தில் படிக்கிறான்; அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் பிற்காலத்தில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுவதில்லை. அது ஒரு குறை என் றும் கூற முடியாது. நாலும் தெரிந்தவனாக இருந்தால்தான் ஏதாவது ஒன்றுக்குப் பயன்படுவான், கல்லூரிகளில் கல்விப் பயிற்சியும் சில துறைகளில் சிறப்பு அறிவும் பெற முடிகிறது. பிற்காலத்தில் வாய்ப்புக்கேற்றபடி அவன் தனித்து வளர முடிகிறது.

அங்கே அனைவரும் மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்று திட்டமிடுவதில்லை. மேல்நிலைப் பள்ளி முடித்ததும் அவரவர் போக்குக்கும் திறமைக்கும் ஏற்படத் தொழில் ஏற்று மன நிறைவு பெறுகின்றனர். அந்த அந்தத் தொழிலில் அவர்கள் மனநிறைவு பெறுகின்றனர். இப்படி ஆகியிருக்கலாமே என்ற ஏக்கங்கள் அவர்களை வாட்டுவது. இல்லை . அமெரிக்க நிறுவனங்கள் நடத்தும் சிற்றுணவு அகங்களில் பள்ளிப் படிப்பு முடித்த நிலையில் இளம் பெண்கள் அங்குப் பரிமாறும் பணி, பண்டங்களை எடுத்துத் தரும் பணி ஏற்று நடத்துகின்றனர், இவர்கள் விடுமுறைகளில் ஒய்வு நேரங்களில் இதைப் போலச் சிறு தொழில்களை ஏற்றுப் பணம் சேர்த்துக் கொண்டு கல்லூரிப் படிப்புக்குத் தயார் செய்து கொள்கின்றனர் என்பதைக் கேட்டு அறிய முடிந்தது. பெற்றோர்களின் பொருளாதாரத்தில் தம் எதிர்காலங்களை அந்த நாட்டுப் பிள்ளைகள் நம்பி வாழ்வதில்லை. சுய முயற்சியும் தன் நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றனர்.

‘சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்’ என்ற கோட்பாடு அங்கே நிலவுகிறது. நாடு அவர்களுக்குத் தக்க வாய்ப்புகள் தருகின்றன.

தேறாத ‘கேசுகளும்’ அங்கும் உள்ளன. பொதுவாக அங்குத் தம்மைத் தாம் வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலைகள் உள்ளன என்று கூற முடியுமேயன்றிப் பிள்ளைகள் எல்லாம் தெளிவாக வாழ்கின்றனர்; தம்மைத் தாம் தகுதியாக்கிக் கொள்கின்றனர் என்றும் கூற முடியாது. வேலை வெட்டியற்றுத் தேறாத ‘கேசுகளும்’ உள்ளன. கடை வீதிகளில் சுறுசுறுப்பான இடங்களில் அங்காடிகள் கட்டிடங்களில் சோம்பித் திரிந்து வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களைப் பிரித்து அறியத்தக்க வகையில் சில போக்குகளையும் காணமுடிகிறது. திருப்பதிக்குப் போகாமலேயே மொட்டையடித்துக் கொள்ளும் பக்தர்களாகக் காட்சி அளிக்கின்றனர். ஒரு சிலர் நம் நாட்டுக் கோயில் குடுமிகளைப் போல உச்சிக் குடுமி வைத்தும் இருக்தின்றனர். சிலர் மயிர்முடி சிவப்பேறிச் சேவற் கொண்டைகளைப் போல ஒரு பக்கம் சாய்த்துவிட்டு அவர்கள் தனித்தன்மையைக் காட்டி வெளிப்படுத்துகின்றனர். சமயம் வரும்போது ரகளைகளுக்கு இவர்கள் துணை நிற்கின்றனர். பெண்களும் இப்படி ஒழுங்குபடாமல் வன்முறையில் அல்ல மென்முறையில் இயங்குபவர்களும் உண்டு; அவர்களை ஒன்றும் அடையாளம் காண இயலவில்லை; சொல்லித் தெரிந்து கொண்டேன். எல்லாம் எங்கேயும் ஒழுங்காக இருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும், அளவில்தான் வேறுபாடு. இவர்களைத் ‘தேறாத கேசுகள்’ (drop outs) என்ற செல்லப் பெயரால் குறிப்பிடுகின்றனர்.