இங்கிலாந்தில் சில மாதங்கள்/பாலியல் பார்வை

பாலியல் பார்வை

“என்னுடைய பெண் இவள்; இப்பொழுதுதான் வயசுக்கு வந்தாள்” என்று ஒரு ஆள் நம் ஊரில் என்னிடம் அறிமுகம் செய்கிறான். இது என்ன அவ்வளவு முக்கியமான செய்தியா? ‘பூப்பெய்தினாள்’ என்ற செய்தி மங்கல விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சில சமயம் விளம்பரமும் தரப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது?

பெண்ணை நாம் பார்க்கும் பார்வையே இந்த அடிப்படையில்தான் என்பதை மறுக்க முடியாது. இந்தப் பாலியல் பார்வை தேவைதானா? அதைக் கடந்து போக முடியுமா? பெண் ஆண்களோடு சம உரிமைகள் பெற்று வாழ முடியுமா? அப்படி வாழும் நாடு அந்த தேசம். ஐரோப்பா. அமெரிக்கா, ஏன் ஆங்கிலம் பேசும் உலக நாடுகள், ருஷியா, சப்பான் எல்லாம் பெண்கள் ஆண்களைப் போலத் தொழில் செய்ய முன்வந்துவிட்டார்கள்.

குழந்தை பெறுவது ஒன்றுதான் பெண்கள் செய்யக் கூடிய தனித் தொழில்; அதேபோல் அதற்குக் காரணமாக விளங்குவது ஆணின் தனி நிலை. இவ்விரண்டைத் தவிர்த்து ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவரும் இன்று அங்கு எல்லாத் தொழில்களிலும் பங்கு பெற்றுள்ளனர். ஏதோ பாலியல் நோக்கு உள்ளபோது அவள் அந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறாள்; மற்றைய சூழ்நிலைகளில் அவளும் ஆண்களைப் போலவே மதிக்கப்படுகிறாள்.