இங்கிலாந்தில் சில மாதங்கள்/கடவுள் மயக்கம்
கடவுள் மயக்கம்
இந்தக் குடிபோதை மட்டும் மக்கள் கவலையைப் போக்குவது இல்லை. மற்றொரு தீர்வு நம் மக்களுக்கு உறு துணையாக இருக்கிறது. நிறைய கவலைகளும் அச்சமும் அவநம்பிக்கைகளும் மிகும்போது மனத்திற்கு ஓய்வும் நம்பிக்கையும் தேவைப்படுகின்றன. பகுத்தறிவு வாதம் இவர் களைத் தடுப்பது இல்லை. ‘தெய்வ நம்பிக்கை’ மிகுதியாகிறது. இதைப் போன்ற அச்சந்தரும் வாழ்க்கை அதிர்ச்சிகளும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தெய்வ நம்பிக்கை, கோயில் வழிபாடு இவற்றிற்கு (முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிறித்துவ வழிபாட்டு ஆலயங்கள் இருக்கின்றன. அங்குச் செல்வது ஒரு சடங்காக வாழ்க்கை ஒழுங்குமுறையாக உள்ளதே தவிர நம்மைப் போல் அதை மிகைப்படுத்துவது இல்லை. கடவுள் உண்டு இல்லை என்ற வாதங்களில் அவர்கள் தலையிடுவது இல்லை. கடவுள் மிகப் பெரியவர். (God is great) என்று சொல்லிவிட்டுத் தம் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்கின்றனர்.
நமக்கு இந்த நம்பிக்கை தேவைப்படுகின்றது, இல்லாவிட்டால் இந்தியாவில் சராசரி மனிதர்கள் வாழ முடியாது. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மை நாம் வளர்த்துக் கொண்ட வழிமுறைகள். இவற்றில் தீமைகள் இல்லை, நன்மைகள் மிகுதியாக இருக்கின்றன. அதனால் அவற்றைப் போற்றிக் காத்து வருகின்றோம். அது மட்டுமல்ல மனத்தை நல்லதன்கண் நிறுத்த அது மிகவும் தேவைப்படுகிறது.
நாம் பழைய வேத சாத்திரங்களின் சாராம்சங்களைப் பல வழிகளில் கேட்டு வருகிறோம். அதனால் நாம் இந்தக் கலாசாரத்தில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அவற்றைத் தூக்கி எறிய முடியாது என்ற உணர்ச்சிதான் ஏற்படுகிறது. நம் நாட்டு வேத உபதேசங்களைக் கேட்க வழிபட ஒரு சிலர்மேல் நாடுகளில் இருந்து குழுமுவது நமக்கு வியப்பைத் தருகின்றது. நிறுவனங்கள் பல; பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. இங்கே பல தேசத்து வெள்ளைக்காரர்கள் தியானம் வழிபாடு இந்த நியதிகளை மேற்கொள்வது வியப்பாக இருக்கிறது. அநேகமாக அவர்களும் மன உளைச்சலும் நிம்மதியும் இழந்தவர்களே. அவர்களுக்கு இந்த மோன நிலைகள் அமைதியைத் தருகின்றன. வேண்டிய பொருள் இருக்கிறது; அதனால் இப்படி இவர்கள் ஒதுங்கி வாழமுடிகிறது. நாம் மேல் நாட்டுத் தாக்கத்தால் பல வழிகளில் பாதிப்பு அடையும் போது அவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டுமா என்ன? நம் சிந்தனைப் போக்குகள் வழிபாடுகள் ஒரு சிலரைப் பாதித்து உள்ளன. ஆனால் அவர்கள் வாழ்க்கை முறைகளும் சிந்தனைப் போக்குகளும் நம் தேசத்தையே பாதித்துள்ளன; நம் சிந்தனைகளையே மாற்றி உள்ளன. மனிதன் உரிமையோடும் மதிப்போடும் தன்னம்பிக்கை யோடும் செயல்படவேண்டும் என்பதும் பெண்ணும் ஆணும் சரிநிகர் சமமானவர்கள் என்ற உண்மையையும் அவர்களே அறிவுறுத்தி வருகின்றனர். இதைப் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. நாம் அவர்களோடு எவ்வாறு, வேறுபடுகிறோம் என்பதைக் காட்டவே இதைப் பற்றிப் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.