இங்கிலாந்தில் சில மாதங்கள்/சமூகவியலும் சட்டவியலும்
சமூகவியலும் சட்டவியலும்
அந்த அந்தச் சமூகத்தின் போக்குகளும் தேவைகளையும் ஒட்டியே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எடுத்துக் காட்டாக இன்றைய அரசியல் பிரச்சனையாக அதிகம் பேசுவது ‘மது விலக்கு’ என்பது. இதற்கு ஓர் வரலாறே நமக்குப் பின்னணியாக இருக்கிறது.
அந்நியர் ஆண்டபோது அவர்களை எதிர்ப்பதற்கு இரண்டு போராட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன; ஒன்று உப்புக் காய்ச்சுதல்; கடலில் கிடைக்கும் வளம் உப்பளம்; அதில் கிடைக்கும் உப்புக்கு வரி செலுத்துவதில்லை என்ற ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்புக்கு இது ஒரு அடையாளப் போராட்டமாக மேற்கொள்ளப்பட்டது. அதே போலக் கள்ளுக்கடை மறியல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு அடிப்படைகள் இருந்தன. வெள்ளையருக்கு எதிர்ப்பு என்பது ஒன்று; மற்றொன்று மக்கள் வாழ்வு சீர்குலைவதைத் தடுப்பது; மற்றொன்று சுதேசிய இயக்கம்; கதர் கட்டுதல் என்பது அதன் விளைவு. இப்பொழுது ‘சுதேசி இயக்கம்’ என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் வெளிநாட்டு உற்பத்திப் பொருள்கள் தரம் மிக்கவை என்ற மதிப்பும் நிலவிவருகிறது. இப்பொழுதுதான் வெளி நாட்டு டி.வி. வீடியோக்கள் வராதபடி அதிக வரிவிதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.
காந்தியடிகளுக்குச் சமுதாய நல்வாழ்வும், முற்போக்கும் தனிமனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது என்ற நம்பிக்கை இருந்தது; அதை அவர் அதிகம் வற்புறுத்தினார்; சமுதாயச் சீர்திருத்தமாகத் தீண்டாமை ஒழிப்பு, தனி மனிதன் ஒழுக்கச் சீரமைப்பாக மதுவிலக்குக் கொண்டுவர வழி கோலினார்.
உண்மையிலேயே நம் நாட்டில் குடி மக்கள் வாழ்வைச் சீர்குலைக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அதற்குச் செலவு செய்யத் தேவையான பொருள் இன்மை; அதற்கு அரசாங்கம் விதிக்கும் வரிச்சுமை, ஏலம் விடுகிறார்கள். யார் அதிகம் தொகை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பனை விநியோக உரிமைகள் கிடைக்கின்றன. இன்னும் அவர்கள் யார் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதில் ஏராளமான வருவாய் ஆட்சிக்கு வருகிறது என்று பேசப்படுகிறது; மதுவிலக்கால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சத்துணவுத் திட்டங்கள் செயல்படுகின்றன; பள்ளிகளுக்கு நிதிப்பணம் கிடைக்கிறது. தீய வழியில் கிடைக்கும் நிதி நல்லனவற்றிற்குப் பயன்படுகிறது. குடிப்பழக்கத்தால் பிள்ளைகளுக்குச் சோறு போடமுடியவில்லை பெற்றோர்களால்; அவர்கள் தரும் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கம் அவர்களுக்குச் சோறு தருகிறது. வறுமைக்கு முக்கியமான காரணம் குடிப்பழக்கம் என்பது மறுக்க முடியாத சூழ்நிலை. அது மட்டும் அல்ல; இந்தத் துறையில் கலப்படம் அதிகம் ஆகிறது; குடிப்பழக்கத்தினர் உடம்பை அது மிகவும் பாதிக்கிறது. மதுவிலக்கை எடுத்தால் ஆட்சிக்கு வருவாய்; அதைப் புகுத்தினால் அதிகாரிகளுக்கு வருவாய்; கள்ளச் சாராயம் குடிசைத் தொழிலாக வளர்கிறது. ‘கலங்கல்’ என்ற ஒரு தனிப் படைப்பும் பலர் உயிரைப் பருகுகின்றது, இதைப் போன்ற பிரச்சனைகள் மேல்நாடுகளில் இல்லை; ‘குடிப்பது தீமை’ என்னும் திருக்குறளை அவர்கள் படிப்பது இல்லை; உயர்ந்த குடிவகைகள் நியாயமான விலைகளுக்குக் கிடைக்கின்றன. குடிப்பவன் குற்றம் செய்பவனாகக் கருதப்படுவதில்லை. அதே போல மற்றொன்றையும் விமரிசிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களில் கஷ்டப்பட்டுக் காதல் காட்சிகளைப் புகுத்துகிறார்கள். மறைவு நிகழ்ச்சிகளை அம்பலப் படுத்துவது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கலை என்பதே குறிப்பாக வெளிப்படுத்துவதில்தான் சிறப்பு இருக்கிறது. சில குறிப்புகள் தந்தால் போதும்.
நாடகங்களில் இவ்வாறு வெறும் குறிப்புகள் தந்தால் போதும்; திரைப்படங்களில் அவ்வாறு செய்ய முடியாது: கருத்தைவிட காட்சிகளுக்குத் திரைப்படம் முதன்மை தருகிறது. அதனால் இக்காட்சிகளை மிகைப்படுத்திக் காட்டுவது மரபாகிவிட்டது. நடனக் கலை காதல் காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறது. தமிழ்ப்படத்தைவிட தெலுங் குப் படத்தில் இவை மிகுதி, தமிழ்ப்படங்கள் இவற்றி னின்று மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டு வருகின்றன.
ஆங்கிலப் படங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குப் பாடவும் ஆடவும் மிகுதியும் வாய்ப்புள்ளது. காதற் காட்சிகளில் அவற்றைத் திணிக்க வேண்டும் என்ற தேவை ஏற்படுவதில்லை. அக்காட்சிகள் நடைமுறை ஒட்டி இயல்பாக அமைகின்றன. தைரியமாக இருவர் ஒன்றாக ஆகின்றனர். நாட்டு அங்கீகாரத்தை ஒட்டி முத்தக் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
பொது இடங்களில் காதல் செய்வோர் அதை வெளிப்படுத்த, செயல்முறைப்படுத்த அணைத்துக் கொள்ளுதலும் முத்தமிடுதலும் நடைமுறை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அதைவிட, அவற்றை யாரும் கவனிப்பதே இல்லை என்பது வியப்புக்கு உரிய செய்தி. இங்கே, காதலிப்பதே யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டியுள்ளது. அடுத்த நிகழ்ச்சிகள் அதைப் பற்றி விமரிசிக்கத் தேவை இல்லை. அதை யாரும் அனுமதிப்பதும் இல்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் குற்றவியல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, திரை உலகமும் அதன்படி நடந்துகொள்ள வேண்டியுள்ளது. தனி மனிதர்கள் சில விஷயங்களில் ஆர்வம் காட்டுவது உண்டு. எப்பொழுதும் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறமுடியாது. சில பத்திரிகைகள் நிர்வாணக் காட்சிகளை வெளியிடுகின்றன. அவற்றைச் சிலர் புரட்டிப் பார்த்து என்ன இருக்கிறது என்று ஆர்வம் காட்டுவது இயல்பு. ஆரம்பத்தில் பத்திரிகைகள், போட்டோக்கள் இந்த ஆர்வத்துக்கு விருந்து அளித்தன. வீடியோக்கள் அமலுக்கு வந்ததும் அந்த எல்லையையும் அவை தொட ஆரம்பித்துவிட்டன. ‘நீலப்படங்கள் ‘ ஒளி மறைவாக எடுக்கப்பட்டுத் தனியார் கரங்களுக்கு விற்பனை ஆகின்றன. அது அவர்கள் தனிப்பட்ட போக்குகள். இவற்றிற்கெல்லாம் அங்குத் தடை விதிப்பது இல்லை; இதைப் பற்றிய விமரிசனங்கள் அங்கு நடைபெறுவதும் இல்லை. சில் கவர்ச்சிப் படங்கள் பால்பொருள் அடிப்படையில் எடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களில் திரையிடப்படவும் செய்கின்றன. அவை அரசாங்கம் அனுமதித்து உள்ளன. இவை தனிப்பட்டவர்களின் மனப் போக்குகள்: ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் இதைப் போன்ற படங்கள் பார்க்க விரும்புவதை அவர்கள் தடை செய்வது இல்லை; இந்தத் திரை அரங்குகளில் முதியவர்கள் ஓய்வு பெற்றவர்கள் கடந்த கால நினைவுகளை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளச் செல்வதுபோல் பொழுது போக்குகின்றனர். ஐரோப்பாவில் எல்லா முக்கியமான நகர்களில் இந்தத் திரையரங்குகள் செயல்படுகின்றன. இவற்றைத் தவறு என்று யாரும் அங்குக் கருதுவது இல்லை. அவற்றைத் தடை செய்வதும் இல்லை, அங்கே இத்தகைய போக்கீடுகள் இருப்பதால் பால் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் இவற்றைப் புரிந்து கொண்டு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிகமாக மன அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை, இங்கே நமக்கு இவை புதியவை. நம் கோயிற் கோபுரங்களில் ஒரு சில சிற்பங்கள் இத்தகைய மனோநிலைச் சித்திரங்களைத் தீட்டியுள்ளன என்பது மறுக்கமுடியாது . ஏதோ சில கோயில்களில் இந்த அபூர்வக் காட்சிகள் இடம் பெற்றுத்தான் உள்ளன. மனித உணர்வுகளில் பால் உணர்வு வலிமை மிக்கது; இயல்பானது; அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அந்த உரிமை அங்கீகாரம் இங்கே நடைமுறை யில் இல்லாததால் இலை தடை செய்யப்படுகின்றன; ‘ஆபாசக் காட்சிகள்’ என்று முத்திரை இடப்பட்டுக் குற்றவியல்களாகக் கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பகிரங்கமாக இவை அனுமதிக்கப்படவில்லை என்பதால் இப்படங்கள் நம் நாட்டில் எட்டிப் பார்ப்பது இல்லை என்று கூற முடியாது. இது தடைப்படுத்தப்பட்ட ஒன்று; சமூகவியல் இதற்கு அங்கீகாரம் தராதவரை தடைகள் இருப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான், சமூகவியலை ஒட்டித்தான் சட்டவியலும் செயல்படுகிறது.