இங்கிலாந்தில் சில மாதங்கள்/தீமைகள் சில
தீமைகள் சில
எந்திர வளர்ச்சி அங்கு மிகுதி; மாந்தர்க்கு உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் குறைகின்றன. மனித சக்தி, மூளை இயந்திரங்களுக்குப் பொருத்தப்பட்டு வேலை செய்வது அதிசயமான சாதகை. இதனை கம்ப்யூட்டர் சைன்ஸ் (Computer Science) என்று சொல்லி வருகின்றனர்.
ஒரு பாங்கியில் ஞாயிற்றுக்கிழமை அது மூடப்பட்டு இருக்கிறது; உள்ளே ஒரு ஆள்கூட வேலை செய்ததாக இருப்பதாகவும் தெரியவில்லை. வெளியே ஜன்னல் போல ஒரு சிறிய கவுண்டர் இருக்கிறது! அங்கே தன் வங்கி அட்டையை உள்ளே வைத்து ரகசிய எண்ணையும் குறிப்பிட்டுத் தேவையான பணம் எடுக்க முடிகிறது; உள்ளே அந்தச் சீட்டுப் போன சில விநாடிகளில் சன்னலுக்கு வெளியே தாம் விரும்பி எடுக்க நினைக்கும் பணம் நோட்டுகள் வெளியே வந்து விழுகின்றன.
கார்கள் போகின்றன; வழியில் பாலங்கள் கட்டப்பட்டு இருந்தால் அதற்குரிய செலவினங்களை ‘செக்போஸ்டில்’ காருக்கு அறுபது பென்சு என்று ஏதோ ஓர் தொகை வசூல் செய்கிறார்கள்; அதற்கு ஓர் ஆள்; எழுதுவதற்கு ஒரு ரசீது இப்படி எல்லாம் இல்லாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. அங்கே ஒரு பெட்டி (திருப்பதி உண்டி போல) இருக்கிறது. அதில் போட்டால் (அந்தக் குறிப்பிட்ட தொகை) அது எந்தக் காசுகளாவது இருக்கலாம். வழி தானாக விடுகிறது; நம் ஊர் தொலைபேசியில் குறிப்பிட்ட ஐம்பது காசு போட்டால் தான் உள்ளூருக்குள் பேச முடிகிறது ; அங்கே கார்கள் நிற்கும் இடத்தில் காசு போட்டால் அது மீட்டர் காட்டிக் காசுக்கு ஏற்ற நேரத்தைக் காட்டுகிறது, இப்படி அரிய சாதனைகள் மனித முயற்சிகளைக் குறைக்கிறது.
எந்திர வளர்ச்சி மனித உழைப்பைக் குறைக்கிறது; அவரவர் தாமும் இயந்திரங்களைப் போல் ஒழுங்காகத் தம் கடமைகளைச் செய்து முடித்துவிட்டபின் தொலைக்காட்சியும், கிளப்களும் குடும்ப வாழ்க்கையும், குழந்தை வளர்ப்பும், மேஜைமேல் உணவோடு அருந்தப்படும் மதுவகைகளும் மகிழ்வைத் தருகின்றன. அங்கே மக்கள் தொகை கட்டுப்பாடு செய்யப்பட்டு உள்ளது; வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு உள்ளது; வேலை இல்லை என்று பட்டினி கிடக்கத் தேவை இல்லை; வாழ்க்கைப் பணம் அளிக்கப்படுகிறது. அங்கேயும் ஒருசிலர் ஒப்பியம் கஞ்சா முதலியன பழகிக்கொண்டு அழிகிறவர்களும் உண்டு; இங்கிலாந்து மட்டுமல்ல; பிரான்சு, பெல்ஜியம், ஜெர்மனி இப்படி ஐரோப்பா முழுவதும், அமெரிக்காவிலும் இந்தத் தீமை பரவித் தம்மைத் தாம் அழித்துக் கொள்கிறவர்கள் மிகுதியாகி வருகின்றனர். இது தவிர மற்றைய அவதிகள், கேடுகள், வருவாய் இன்மை , பற்றாக்குறை என்பவை அந்த நாடுகளில் இல்லை. அவர்களைப் போல நாமும் முன்னேற வேண்டுமென்று வேகமாக இயங்கி எந்திரங்களை உற்பத்தி செய்ய முயல்கிறோம்; வேகம் கிடைக்கும்; மனித மூளைக்கு வேலை குறைவாகும். விளைவு இங்கு ‘தொழில் இல்லை’ என்ற நிலை ஏற்பட்டு அதனால் வாழ்வு பாதிப்புக்கு உள்ளாவது உறுதி.
நாமும் நம் தேவைகளை அவர்களைப்போல் பெருக்கிக் கொள்கிறோம். வசதிகளை மிகுதிப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்குகிறோம். அதனால் அவற்றோடு பற்றாக்குறை அதிகம் ஆகிவருகிறது.
மேல் நாடுகளில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடியோக்கள் நிறைய இறக்குமதி செய்யப்படுகின்றன: அதனால் அவர்களுக்கு வாணிபம் தொழில் வளர்கிறது; நம் பணம் அங்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த நிலைகள் மாறுமளவிற்கு நம் நாட்டில் தொழில் நுட்பம் பெருகவேண்டும். அந்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
இன்று ‘கம்ப்யூட்டர் சைன்ஸ்’ என்று சொல்லி வெளிநாடுகளிலிருந்து எந்திரக் கருவிகள் வரவழைக்கப்படுகின்றன. துரிதமாக வேலைகள் நடைபெறுகின்றன. இவற்றை விலை கொடுத்து வாங்க நம் நாட்டுப் பணம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது, மேலும் பல தொழிலாளர்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது, அதனால் விளையும் தீமைகள் ஏராளம்.
இங்கே நம் சமூக நிலையில் இரண்டு பெரிய நிலைகள் உள்ளன; வசதி படைத்தவர்கள் ஒருசிலர்; அற்றவர் பலர். மேல் நாட்டிலும் அநேகமாக எல்லோரும் தொலைக்காட்சி, கார்கள், விடியோக்கள், இசைப் பதிவுத் தட்டுகள்; வானொலிச் சாதனங்கள் பெற்று வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்கின்றனர். வங்கிகள் முன்பணம் தந்து கடனுதவி செய்து பொருள்கள் வாங்க உதவி செய்கின்றன. பொருள்கள் மக்கள் வாங்கினால்தான் உற்பத்திப் பெருக்கம் செய்ய முடியும்; தொழில் வளம் பெருகும் அங்கே இருப்பவர்களுக்கு வாங்கும் சக்தி அதே சமயத்தில் பெருகுகிறது; உறுதியான வாழ்க்கை நிலை உள்ளது.
அவர்களைப் போல் நாமும் கார்கள், வீடியோக்கள் டெலிவிஷன்கள் ஒரு புறம் பெருக்கும் தொழிலில் அண்மைக்காலத்தில் ஈடுபட்டு வருகிறோம். மக்களிடமும் வாங்கும் சக்தி ஓரளவு பெருகி வந்துள்ளது. உயர்மட்டத்து வாழ்நிலை உடையவர்கள் அந்த வசதிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர், அந்தத் தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ‘எலக்ட்ரானிக்’ பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் நம் நாட்டுப் பொருளாதாரத்தில் ஓரளவு சரிவு ஏற்படுகிறது. நம் பொருள் சக்தி வெளி நாட்டுக்குப் பயன்படுகிறது. இப்பொழுது அவை நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை; கூட்டுவிக்கப்படுகின்றன. ஓரளவு இங்கே தொழில் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறது.
அந்நிய நாட்டுச் செலாணியை மிச்சப்படுத்த, குறைக்க இங்கே பல துறைகளிலும் நாம் தொழில்வளத்தை பெருக்க வேண்டும். அதே சமயத்தில் எந்திரமயமாக்குவதில் பயங்கரமான தீமைகளும் உள்ளன. உற்பத்திப் பெருக்கம் ஏற்படலாம்; எந்திரங்களைக் கொண்டு துரிதமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்; ஆள் குறைப்பும் வேலை இல்லாமையும் உடனுக்குடன் ஏற்படுகின்றன, முடிவு: ஒரு பக்கத்தில் வசதி மிக்கவர்கள் தம் தேவைகளைப் பெற்று வாழ்கிறார்கள்; அற்றவர்கள் வாழ வகையின்றித் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சனையைச் சந்திக்காதவரை ஒழுங்கீனங்களையும் சட்ட விரோதமான சமூக விரோத செயல்களையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சுதந்திரத்துக்கு முன் இருந்த மனோ நிலை; அதற்குப் பின் நம்பிக்கை இருந்தது. ஓரளவு தெளிவு இருந்தது. இன்றைய நிலையில் தெளிவான பொருளாதாரப் பிரச்சனைகள் சிலவற்றைச் சந்திக்க வேண்டியுள்ளன.
(1) ஊழல் முறைகள்; எல்லா நிலையிலும் பணம் கொடுத்துத்தான் எதையும் சாதிக்கமுடிகிறது. இது அதிகமாகிக்கொண்டு வருகிறது.
(2) தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய எந்திரக் கருவிகள் இருப்பதுபோல் கல்விப் பெருக்கும் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டு வருகிறது.
(3) பொருளுக்கும் உயிர்க்கும் பாதுகாப்புக் குறைந்து கொண்டு வருகிறது. எங்கே யார் எதைச் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
(4) வசதிகளை அனைவரும் அனுபவிக்க விரும்புகின்றனர்; அதன் பொருள்களின் விலைவாசிகள் உயர்கின்றன. பணத்தின் மதிப்புக் குறைகிறது. பணப் பெருக்கம் மிகுகிறது.
சமுதாய நிலையில் ஒரு சில மனோநிலைகள் உரிமைப் போர்கள் மேல் நாட்டுத் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ளன.
அவற்றுள் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்.
(1) பெண்கள் மேல் நாட்டினரைப் போல் கல்வியும் தொழிலும் கற்றுச் சரிசமமான வாய்ப்புகளைப் பெற்றுத் தொழில் ஏற்றல் வளருமா?
(2) பெற்றோர்களின் பாதுகாப்பிலும் அவர்கள் பொறுப்பிலும் பிள்ளைகள் வளர்ச்சியும் திட்டங்களும் பெறுதல் நீங்குமா? அவர்கள் தலை நிமிர்ந்து ஆட்சியின் பாதுகாப்பில் திட்டங்களில் உறுதியாக வாழ முடியுமா?
(3) சாதிகள் என்ற பேரால் தேர்தல்கள்; சமுதயாக் கட்டுப்பாடுகள் தகர்க்கப்படுமா? இல்லையா? (4) கலப்பு மணம், விவாகரத்து, மறுமணம், விதவை மணம் இவற்றைச் சமுதாயம் நியதிகளாக அங்கீகரிக்குமா?
(5) சிறு தவறுகள், பாலியல் சந்திப்புகள், காதல் தோல்விகள் இவற்றால் ஏற்படும் தற்கொலைகள் குறையுமா?
(6) பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழ்க்கைச் சிக்கல்கள் நீங்குமா? இந்த அடிப்படைகள் ஒழியுமா?
இதுபோன்ற சமூகப் பிரச்சனைகள் இப்பொழுது எழுந்துள்ளன. இவை நீங்கிய நிலையில் வாழும் மேல் நாட்டு உரிமை வாழ்வு நம்மவர்க்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அனுபாவம் உடையவர்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு மேல் நாட்டு வாழ்வியலை எடுத்துக்காட்டாகக் காட்டுவது மரபாக உள்ளது. நாம் என்னதான் கலப்படமற்ற இந்திய கலாச்சாரம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முயன்றாலும் மேலை நாட்டு வாழ்வியல் முறைகள் நம்மைத் தாக்கிவருகின்றன. தேவையானவை, வளர்ச்சிக்குரியவை கொள்ளப்பட்டு மற்றலை எள்ளப்பட்டுப் புதிய மாற்றங்களுக்கு இடம் தருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆங்கிலம் மேல் நாட்டுப் போக்குகளை அந்த நாட்டுத் தற்கால இலக்கியம் வழியாக அறிவித்து வருகின்றன.
இன்று பல பத்திரிகைச் செய்திகள் படிக்கிறோம், ஒன்று அவளாகத் தன்னை எரித்துக் கொள்கிறாள்; அல்லது திட்டமிட்டு அந்த வீட்டார் அவளைத் தொலைத்துக்கட்டுகிறார்கள். இது நியாயமா? இதற்கு வழி என்ன? எல்லை மீறும்போது விவாக ரத்து செய்து கொள்வது தான் வழி; அது செய்துகொண்டால் போதாது; இளை ஞர்கள் விரும்பி அவர்களை மணக்க முன்வரவேண்டும்). அவளுக்குத் தக்கபடி. மற்றொருவன் கிடைக்காமலா போவான். அதற்கு வழிவகைகள் உண்டாவதற்கு இந்த மேல் நாட்டு வாழ்வியல் நிச்சயம் வழிகாட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.