இங்கிலாந்தில் சில மாதங்கள்/முன்னும் பின்னும்
முன்னும் பின்னும்
மண்ணின் பெருமையை விளக்கும் சுதந்திரப் போரை விளக்கும் சந்தனத்தேவன் கதை; சந்தனத் தேவன் சுதந்திரத்துக்காகப் போராடித் தூக்குமேடை ஏறி நிற்கிறான்; சுதந்திரப் பிரகடனம் அவனை மூச்சுவிடச் செய்கிறது. இந்த மண்ணில் சுதந்திரத்திற்குப் பிறகு அவன் மகன் எப்படி மாறுகிறான்; கள்ளக் கடத்தல் செய்து சமூக விரோதியாக மாறுகிறான்; அப்பா மகனைப் பார்த்துச் சொல்கிற வாசகம் நெஞ்சைத் தொடுகிறது.
“நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினோம், சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம்” என்று சொல்கிறான்.
இது ஓர் உருவகம்; நாம் எப்படி எப்படி மாறி வருகிறோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு; இன்றைய இளைஞர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்ற உயர்ந்த லட்சியங்கள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது; அன்று அந்த லட்சியம் தேவைப்பட்டு விடுதலை தவறிக் கேட்டு நிலை குலைந்த நிலையில் ஒரு உத்வேகம் ஏற்பட்டுச் செயற்பட்டனர். இன்று பலவிதமான சக்திகள் செயல்படத் தொடங்கிவிட்டன.
இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பொருளாதார அடிப்படையில் சமநிலை காணும் வேகத்தில் கட்சிகள் தோன்றின. சமநிலை வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க முடிந்ததேயன்றிச் செயல் முறையில் சாத்தியப்படவில்லை என்று தெளிவாகியதும் வேறு வகையில் சக்திகள் செயல்படத் தொடங்கின. அதன் விளைவுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை. சமுதாயச் சீர்கேடு.
இவற்றைச் சீர் செய்து செப்பனிடப் புதிய உத்வேகம் நம்பிக்கைகள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் நாட்டின் செயல்முறைகள் ஓரளவு ஏன் பெருமளவு செயல்பட்டும் வருகின்றன; அதே சமயத்தில் பிற்போக்கு சக்திகளும் வேகமாகச் செயல்படுகின்றன. இவற்றோடு போராடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையும் ஊட்ட முடியுமா என்பது இன்றைய கேள்வி.
இதற்கு பதில் காண்பது என்பது தனிப்பட்ட ஒருவரால் காண முடியாது; அதைப்பற்றி விமரிசிக்காமல் முடியாத விஷயத்தில் தலையிடாமல் கவுரவமாகத் தப்பித்துக் கொள்ளத்தான் முடியும். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டால். ஒன்றா இரண்டா ஓராயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அது அது அந்தந்தத் துறைகளில் உள்ளவர்களே பதில் சொல்ல முடியும். சந்தனத் தேவன் சொல்வது போல் சுதந்திரத்தை வாங்கிக் கொடுக்க முடிந்தது; அதைச் செய்து முடித்தார்கள். அந்தச் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச்சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதற்குள் அவர்கள் ஜீவிய காலம் முடிகிறது; முடித்து வைக்கப்படுகிறது . இப்பொழுது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விட அதைக் காப்பது எப்படி என்ற பிரச்சனையும் உள்ளது. நமக்கு எதிரிகள் வெளியேயும் அமையலாம்; அது சொல்லமுடியாது; நம்மை நாம் அழித்துக் கொள்ளும் சக்திகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை அறிந்து நீக்குவது நாம் செய்யத்தக்கது என்பதைச் சொல்ல நினைக்கிறேன். இதை யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது; ‘இங்கிலாந்தில் சில மாதங்கள்’ என்ற தலைப்பில் அந்த தேசங்களைப் பார்த்த பிறகு சில நல்லன அங்கே உள்ளன; அவர்கள் வளர்ச்சி பெற்றவர்கள்; வளர்ந்தவர்கள்; வளர்கிறவர்கள். நாமும் வளர முடியும் என்ற நம்பிக்கை ஊட்டவே இந்த நல்லவைகள் சுட்டிக் காட்டப்பட்டன.