இதய உணர்ச்சி/ஒளரேலியனுடைய சித்தாந்தம்



ஒளரேலியனுடைய சித்தாந்தம்

மார்க்க ஒளரேலியனுடைய மணி மொழிகளில் உயர்ந்த அறங்களும், உன்னதமான உபதேசங்களும் அடங்கியுள்ளன. ஆனால் உலக வியவகாரங்களில் கலந்து கொள்ளாமல் விலகி நின்ற பெரியோர்களுடைய போதனைகள் எத்துணைச் சிறந்தனவாக இருந்தபோதிலும் நீண்டநாள் மக்கள் நினைவில் நிற்பதில்லை. “தாம் உரைப்பதற்குத் தக நிற்கவும் அதற்காக உயிர் துறக்கச் சித்தமாகவும் இல்லாத பெரியோர் அறவுரைகளால் யாது பயனும் உண்டாகமாட்டாது” என்று ஒளரேலியன் கூறுகிறான். அவன் தன்னுடைய சித்தாந்தத்தின்படியே ஒழுகிய சான்றோன் ஆவன். அவனுடைய சித்தாந்தம்யாது?

மனிதன் தன்னுடைய இயற்கைக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைக்கும் உகந்தவாறு நடப்பதே வாழ்வின் லட்சியமாகும். அவ்வாறு நடப்பவரே உலகத்தில் சாந்தியும், சமாதானமும், சந்தோஷமு மடைவர்.

மனிதன் தன்னுடைய இயற்கைக்கு உகந்தவாறு நடக்க விரும்பினால் அவன் தன்னுடைய இதயத்தில் கோயில் கொண்டுள்ள பகுத்தறிவு என்னும் கடவுள் காட்டும் வழியிலேயே நடக்க வேண்டும். பகுத்தறிவுக்கு முரணாக நடப்பவன் மனித இயற்கைக்கு முரணாக நடப்பவனே ஆவான்.

மனிதன் பிரபஞ்சத்தின் இயல்புக்கும் தக்கவாறு வாழவேண்டியவனாவான். பிரபஞ்சத்துக்குத் தக்கவாறு நடப்பதற்காக அவன் எந்தச் சமூகத்தில் பிறந்திருக்கின்றனோ அந்தச் சமூகத்துக்கும் அதன் மூலம் மனித சமுகத்திற்கும் உகந்தவாறு தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் கடன். மக்களை விட்டுப் பிரிந்து நின்று தனியாக வாழ்தல் கூடாது. அப்படித் தனியாக வாழ்தல் சோம்பற்கும் சுகபோகத்துக்கு மாயினும், சிந்தனைக்கும் யோகத்துக்கு மாயினும் தவறேயாகும். செடிகளும் மிருகங்களும் தமக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகிப்பது போலவே மனிதனும் தனக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகித்தல் வேண்டும்.

மனிதன் தனியே வாழாமல் சமூகத்தில் வாழ வேண்டியதற்குரிய காரணம் யாது? மக்கள் எல்லோரும் இரத்த உறவோடு அறிவு உறவும் உடையவர்கள். அதனால் உடம்பிலுள்ள உறுப்புக்கள் போல ஒத்துழைக்க வேண்டியதே மனிதனுடைய இயல்பாகும். ஒருவர்க்கொருவர் விரோதமாக நடப்பது இயற்கைகக்கு விரோதமேயாகும். அத்துடன் அன்பு செய்வதே பகுத்தறிவின் பண்பாகும்.

நாம் அன்பு செய்தாலும் நமக்குப் பிறர் தீங்கு செய்தால் என் செய்வது? பிறர் தீங்கு செய்தால் உடனே நமக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாகும். அது இயற்கையே. ஆனால் அவரைத் தண்டிப்பதற்குரிய தலை சிறந்த முறை அவரைப் போல் ஆகாமல் இருப்பதேயாகும். பிறர் தீங்கு செய்ததாக மனத்தில் எண்ணம் உகிக்குமேயானல் உடனே அவன் அறிந்து செய்தானா அறியாமல் செய்தானா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அப்போது கோபம் போய் இரக்கம் உண்டாகும்.

தங்களுடைய நலத்துக்கும் சமூகத்தின் நலத்துக்கும் முரண்படாதவாறு வாழ விரும்புகிறவன் சிறந்த ஒழுக்கத்துக்கு உகந்த லட்சியங்களை உடையவனாக இருத்தல் இன்றியமையாததாகும்.

அத்தகைய இலட்சியங்கள் உடையவன் தன் நலமும், சமூகநலமும் முரண்பட்டவையல்ல, ஒன்றேயென்று கண்டு கொள்ளுவான். தேனீச் சமூகத்துக்கு நல மல்லாதது தேனீக்கும் நலமல்லாததே.

அதனால் தான் ஒளரேலியன் “சமூக நலனுக்கும் அறிவுக்கும் தக்கவாறு நடப்பதே என்னுடைய இயல்பு”. ஆதலால் என்னுடைய ஊரும், நாடும் மார்க்கன் என்ற நிலைமையில் ரோமாபுரி; மனிதன் என்ற நிலைமையில் உலகம். இந்த இரண்டுக்கும் ஏற்றதே எனக்கும் ஏற்றதாகும்’ என்று கூறுகின்றன்.

ஆதலால் மனிதன் அறிவை ஐயம், திரிபு இல்லாதபடி தூயதாக வைத்துக்கொள்ள வேண்டும்; அறிவுக்கு முரணான ஆசாபாசங்களை அகற்றிவிட வேண்டும். இடை விடாது மக்கள் நலத்துக்கு உகந்த செயல்களிலேயே ஈடுபடவேண்டும். இவ்வாறு இயற்கைக்கு ஏற்றவாறு நடப்பதே மனித வாழ்வின் குறிக்கோளும், பயனுமாகும். அறத்தின் பயன் அறவாழ்க்கையேயன்றி வேறன்று.

இது தான் மார்க்க ஒளரேலியனுடைய சித்தாந்தத்தின் சுருக்கம். எத்தனையோ பெரியோர் இத்தகைய அறவுரைகள் கூறியிருந்த போதிலும் இவனைப்போல் அதற்குத் தக நின்ற உத்தமர்கள் வெகு சிலரே ஆவர்.