இதழியல் கலை அன்றும் இன்றும்/அரசு ஒதுக்கும் செய்தி



15


அரசு ஒதுக்கும் செய்தி
அச்சுத்தாள் பெறும் திட்டம்


செய்தி அச்சடிக்கும் செய்தித்தாள் வெளிச் சந்தையில் வாங்கி அச்சடித்தால் விலை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

அதனால், பத்திரிகை நடத்துவோருக்கு மத்திய அரசு குறைந்த விலையில் அரசு மேற்பார்வையில் செய்தி அச்சுத்தாள் (News Print Paper) வழங்கும் திட்டம் ஒன்றுள்ளது.

அரசு விலைக் கட்டுப்பாடு அதற்கு உள்ளது. அந்த அலுவலகம், புது தில்லியில் உள்ளது. அதன் கிளை அலுவலகங்கள் சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெருநகரங்களில் உள்ளன.

அந்த அலுவலகத்தில் அரசு செய்தி அச்சுத்தாள் பெறும் படிவம் உள்ளதைப் பெற்று, அந்த மனுவில் அவர்கள் கேட்கும் விவரங்களைப் பூர்த்திச் செய்து, புது தில்லியிலுள்ள செய்தி அச்சுத்தாள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

அந்தப் பதிவாளர் அலுவலகம் ஆண்டாண்டு தோறும் அரசு அச்சுத்தாள் ஒதுக்கும் கொள்கையை (News Print Allocation Policy) அறிவிக்கும் நேரத்தில் நாம் சென்று அதற்கான ஆக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

அச்சுத்தாள் கோட்ட
(Quota) விவரம்

அச்சுத்தாள் வழங்கும் நிறுவனத்தார் தரும் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்பு, பதிவாளர்களுக்கு இரண்டு படிகள் அனுப்ப வேண்டும்.

இந்தப் படிவம் புது தில்லி இந்தியச் செய்தித்தாள் தலைமை அலுவலகத்திலும், புது தில்லியிலுள்ள Paper Exports and imports அலுவலகத்திலும், சென்னை யிலுள்ள Paper South Trading Corporation என்ற நிறுவனத்திலும் பெறலாம்.

ஆனால், பேப்பர் இறக்குமதியாளர்கள் Government Established Importers அரசு பேப்பர் கோட்டா விற்பனைக்காரர்களா? என்று கவனிக்க வேண்டும்.

ஓர் ஆண்டுக்கு எவ்வளவு பேப்பர் நமது பத்திரிகைக்குத் தேவை என்பதையும், நாம் அச்சடிக்கும் பத்திரிகையின் பக்கங்கள் எத்தனை என்பதையும், அது எந்த அளவு பேப்பர் வகை என்பதையும், அதாவது டபுள் டெம்மியா? டபுள் கிரவுனா? அல்லது வேறு வகையான காகித அளவா? தின ஏடா? வார இதழா? மாதப் பத்திரிகையா? என்று விவரத்துக்கு ஏற்றவாறு ஆண்டுக்குரிய மொத்த பேப்பர் தேவையைக் கணக்கிட்டு, அதிகாரப் பூர்வமான ஆடிட்டரிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று, புது தில்லி இந்தியச் செய்தித்தாள் பதிவாளருக்கு இரண்டு படிவங்களை அனுப்ப வேண்டும்.

நாம் அனுப்பும் செய்தித் தாட் கணக்குகள் சரிதானா என்று தில்லி அலுவலக அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகு, நமக்கேற்றச் செய்தித் தாட்களை ஒதுக்கிக், கட்டளைப் படிவம் (Order) அனுப்புவார்கள்.

குறைந்த அளவு 40 டன் தாட்கள் தேவைப்படுவோருக்கு வருமான வரிச் சான்றிதழ் தேவையில்லை. அதிகம் வேண்டுபவர்கள் ஆடிட்டர் சான்றிதழோடு அனுப்ப வேண்டும்.

செய்தி அச்சுத் தாட்கள் மட்டுமன்று; ஆர்ட் பேப்பர் (Art Paper), மெக்கானிக்கல் கிளேஸ் எனப்படும் பேப்பர், ப்ளாக் மேக்கிங், சிங்க் (Zink), புகைப்படம் (Film) கார்டு போர்டு, ப்ரவுன் பேப்பர் போன்றவைகட்கும் கோட்டா அளவு உண்டு! தேவை என்றால் அதற்கான படிவங்களில் அரசு கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் பெறலாம். அந்த விவரம் முழுவதையும், நியூஸ் பிரிண்ட் பேப்பர் வழங்கும் நிறுவனத்திலேயே கேட்டுப் பெறலாம்.

பத்திரிகை அச்சடிக்கும் வெளிநாட்டு இயந்திரங்களை இறக்குமதி செய்யுமளவுக்கு வலிமையுடைய பத்திரிகையாளராக இருந்தால், அதற்குரிய விண்ணப்பங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அரசு பிரிவு அலுவலகத் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

அததற்குரிய விவரங்கள் விண்ணப்ப மனுக்களிலேயே இருக்கின்றன. படித்துப் பார்த்துத் தவறேதும் ஏற்படாதவாறு, அதைப் பூர்த்திச் செய்து அனுப்பினால் அரசு உதவிகளை உறுதியாகப் பெறலாம்.

வெளிநாட்டு அச்சடிக்கும் மெஷின்களுக்கான அந்நிய செலாவணித் தொகையில் அச்சு வகை சம்பந்தப்பட்டவைகளுக்கு 50 சதவிகிதம் சிறு பத்திரிகைகளுக்கும், 35 சதவிகிதத்தை நடுத்தர வளர்ச்சியுடைய இதழ்களுக்கும், 15 சதவிகிதத்தை பெரிய பத்திரிகையாளர்களுக்கும் பயன் படுத்துகிறது அரசு.

அச்சு இயந்திரங்கள் இறக்குமதி செய்ய விரும்புபவர்கள் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, செக்கோஸ்லோவாக்கிய நாட்டு இயந்திரங்களை இறக்குமதி செய்யலாம். அவை நீடித்து உழைக்கும் தரமுடையதாக இருக்கின்றன.

தற்போது செய்தித் தாட்கள் நமது நாட்டிலேயே பிரமாதமாகத் தயாராவதால் அந்நிய நாட்டு பேப்பர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.