இதழியல் கலை அன்றும் இன்றும்/ஆறு நாடுகளின் உருவாக்கமே


9


ஆறு நாடுகளின் உருவாக்கமே
நமது குடியரசு சட்ட அமைப்பு


★ பிரிட்டன் நாட்டு அரசியல் அமைப்பு

★ அமெரிக்க ஐக்கிய நாடுகள் உயர்தர நீதிச் சட்டம்

★ கனடா நாட்டின் கூட்டாட்சி முறை

★ அயர்லாந்து நாட்டின் மாநில அரசுக் கொள்கை

★ ஆஸ்திரேலியா நாட்டின் கூட்டாட்சிக் கொள்கை அரசியல் அமைப்பு முறை

★ ஜப்பான் நாட்டின் சட்ட வழிமுறைகள்

மேற்கண்ட நாடுகளின் குடியரசுச் சட்டங்களிலிருந்து நமது இந்திய நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த ஆறு நாடுகளின் சட்ட உருவாக்கங்களால் தான் நமது இந்திய ஃபீனல் கோர்டு சட்டம் நிற்கிறது.

1930-ஆம் - ஆண்டிலேயே நமது
குடியரசு நாளைக் கொண்டாடினோம்!

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கப் பேரவை, 1885-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டுதோறும் காங்கிரஸ் இயக்கப் பேரவை, இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களிலே கூடி அதன் ஆண்டு விழா நடவடிக்கைகளை ஆராய்ந்தும், மேற்கொண்டு என்ன திட்டங்களைத் தீர்மானித்துச் செயலாற்றலாம் என்பதை; அதன் தலைவர் பெருமக்கள் கூடி, நாடு முழுவதுமுள்ள தேசியக் காங்கிரஸ் தொண்டர்களையும் அழைத்து, ஒரு மாநாடு போலத் திரண்டு கலந்துரையாடுவது வழக்கம்.

அதற்கேற்ப, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவை 1930-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலே உள்ள லாகூர் என்ற மாநகரில் கூடியது.

அந்தப் பேரவையில், நீதி, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, சுதந்தரம் தன்மை, அதற்கான கருத்துகள், பிரார்த்தனை, நம்பிக்கை, சமத்துவம், சுய கௌரவம், தேசிய ஒற்றுமை, இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் குறித்து மாநாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் பேரவைத் தலைவர்கள் கலந்துரையாடினார்கள்.

இறுதியாக எடுத்த முடிவில், 1929-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாள் நள்ளிரவிலிருந்து, ஜனவரி 1-ஆம் நாள், 1930-ஆம் ஆண்டு விடியற் காலைக்குள், மூவண்ணத் தேசியக் கொடியை நாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றி, ஓர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

அந்த உறுதி மொழிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ஆம் நாளைக் குடியரசு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே அந்த மாநாட்டின் தீர்மானமாயிற்று.

இந்திய அரசியலமைப்புக் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதியன்று கூடியது. இந்த அமைப்பு பல்வேறு குழுக்களை நிர்ணயம் செய்து, அந்தக் குழுக்கள் வெவ்வேறு விஷயங்களைச் சேகரித்து, இறுதியில் அரசியலமைப்புப் சட்டத்தை 395 தொகுதிகளாகவும், 8 பிரிவுகளாகவும் நிர்ணயம் செய்து, இந்தியக் குடியரசுச் சட்டம் நவம்பர் 26-ஆம் தேதி 1949ல் முன்னிலைப் படுத்திய பின்பு, இந்திய தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்களால் ஜனவரி 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

உலக நாடுகளின் குடியரசுத் தொகுப்புகளில் இந்தியாவின் தொகுப்பு மிகப் பெரியது.

(- ஆதாரம், ‘விகடகவி’ மாத இதழ்
பிப்ரவரி 2004)


1. தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம்
(VERNACULAR PRESS ACT- 1768)


இந்தியாவில் செய்திப் பத்திரிகையை முதன்முதலாகத் துவக்க விரும்பினார் வில்லியம் போல்ட்ஸ் என்ற ஆங்கிலேயர். அதற்கான எல்லா பணிகளையும் ஆற்றிய அவரை; ஆங்கில அரசு நாடு கடத்தல் கட்டளையைப் பிறப்பித்து இந்தியாவை விட்டே விரட்டி அடித்துவிட்டது.

நாடு கடத்தல் உத்தரவைப் பெற்ற அந்த இதழியல் வேக்காட்டு ஆர்வத் தும்பி, தனது தாய் நாடான இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு, அவர் பணியாற்றிய கல்கத்தா தலைமைச் செயலகத்தில் பின்வருமாறு முழக்கமிட்டார் :

“பொது மக்களுக்கு கல்கத்தா நகரில் அன்றாடச் செய்திகளை அறிய வாய்ப்பில்லாதது, மக்களுக்கும் வணிகத்திற்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

இந்தியர் ஒவ்வொருவருக்கும் செய்திகளைப் படிக்கும் வாய்ப்பு மிகமிக அவசியமானது. எனவே, அச்சுத் தொழில் அறிந்தவர்களுக்கும், அச்சகம் நடத்துனருக்கும் நான் ஊக்க ஆதரவுகாட்ட விரும்புகிறேன்.

பொதுமக்களுக்குச் செய்தியாகக் கூற வேண்டிய கையெழுத்துப் படிவங்களை வைத்திருப்போர், என்னைக் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் எனது அறையில் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....” என்றார் வில்லியம் போல்ட்ஸ்.

இவ்வாறு போல்ட்ஸ் அறிவித்தார் என்ற காரணத்துக்காக ஆங்கிலேயர் ஆட்சி அவரைத் தனது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டது.

இந்தியப் பத்திரிகைத் தடைச் சட்டம் இதழைத் துவங்குவதற்கு முன்பே அவரது செயற்கருவை அழித்து விட்டது.

போல்ட்சைப் போலவே, ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி என்பவர் 1780-ஆம் ஆண்டில் ‘பெங்கால் கெசட்’ என்ற, இதழைத் துவக்கி, தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்சாலும், அவரது மனைவியாலும், பெருந்துன்பத்திற்கு ஆளானார். காரணம், “கிழக்கு இந்தியக் கம்பெனி செய்திருந்த ஊழல்களை அம்பலப்படுத்துவேன்” என்று அவர் பகிரங்கமாகக் கூறியதற்காக. அதன் விவரம் வேறோரிடத்தில் உள்ளது படிக்கவும்.


2. தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி பிரபு
1799-ல் வெளியிட்ட ஐந்தம்ச சட்டம்!

வாரன்ஹேஸ்டிங்சும், அவரது துணைவியாருடைய ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட இருப்பதை அறிந்து, அவருக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஆளுநராகப் பதவி ஏற்ற டல்ஹெளசி பிரபு, செய்திப் பத்திரிகைகள் வளர்ச்சிகளை அடக்கிட, பழிவாங்கும் உள்நோக்கத்தோடு, ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை கி.பி. 1799-ஆம் ஆண்டு கொண்டு வந்தார். விவரம் வருமாறு :

1. செய்தித் தாட்களை அச்சிடுவோர் முகவரி, பெயர் இதழில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்

2. ஆங்கில ஆட்சியின் செயலாளருக்கு, பத்திரிகை நடத்தும் உரிமையாளரின் முகவரி அச்சிட்டு வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட இரண்டு சட்டங்களும் ஏன் வந்தது தெரியுமா? தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸின் மனைவி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எல்லா நன்மைகளும் பெற்றிடப் பல பரிந்துரைகளைச் செய்தார்! இறுதியில் அந்தப் பரிந்துரைகள் பாலியல் அநாகரிகமாக உருவெடுத்தது. அதை ஒருவன் துண்டறிக்கையாக அச்சிட்டு வீதிதோறும் வழங்கிவிட்டான்! அவ்வாறு செய்தவன் யார்? என்பதை அறிந்திடக் காவல்துறை எவ்வளவோ முயன்றும்கூட முடியாமல் போய்விட்டது! பாவம், ஹேஸ்டிங்சுக்கு ஊழல் கெட்ட பெயர் ஒரு புறம், மனைவியால் இழிச் சொல் மறுபுறம் உண்டானது.

அத்தகைய ஓர் அவமானம் மறுபடியும் தலைமை ஆளுநர் பதவிக்கு வந்துவிடக் கூடாது அல்லவா? அதனால் அச்சகம், பத்திரிகை உரிமையாளர்கள் முகவரிகளைப் பத்திரிகையில் வெளியிடல் வேண்டும் என்ற கட்டளையை டல்ஹௌசி பிறப்பித்தார்! அதுதான் இன்றும் நாம் பத்திரிகையின் கடைசி பக்கத்தில் அச்சிட்டு வெளிவரும் imprint என்ற அடையாள அறிகுறி ஆகும்.

ஐந்தம்ச சட்டத்தின் மூன்றாவது சட்டம் : ‘ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரிகைகளை வெளியிடக் கூடாது’ என்பதாகும்.

ஞாயிறு மனித குலத்துக்கு இயேசு படைத்த ஓய்வு நாள் அல்லவா? அந்த நாள் அரசு விடுத்துள்ள விடுமுறை நாள். அன்றைக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டால், எல்லாருக்கும் முனுமுனுப்புதானே! அதனால் ஓய்வு நாளில் பத்திரிகைகள் வெளியே வரக்கூடாது என்று சட்டம் இயற்றினார் டல்ஹௌசி பிரபு!

4. பணியிலே அமர்ந்துள்ள தலைமைச் செயலக அதிகாரிகள் பத்திரிகை வெளியே வரலாம் என்ற அனுமதியைக் கொடுத்த பின்புதான் இதழ்கள் விற்பனையாக வெளியே வரவேண்டும்.

“மேலே குறிப்பிட்ட நான்கு சட்டங்களையும் மதிக்காதவர்கள், பின்பற்றாதவர்கள், நாடு கடத்தப்படுவார்கள்” என்பதுதான் ஐந்தாவது அம்ச சட்டமாகும்.

இந்த ஐந்தம்ச சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, ஆங்கிலேயர் ஆட்சியைத் தாக்கி எழுதும் முறை குறைந்தது. அதனால் மக்கள் இடையே பத்திரிகை வாங்கும் பரபரப்பும் தளர்ந்தது. விற்பனை இல்லாததால் பத்திரிகைகளை நடத்துவோர் பலர் இதழ்களை நிறுத்திவிட்டார்கள். ஏன் இவ்வாறு சட்டம் கொண்டு வந்தார் டல்ஹௌசி பிரபு?

ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரிகை படிப்போர்; ஓய்வாக ஆர அமர்ந்து படித்தக் கருத்தைச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லவா? சிந்தனையின் எதிரொலி என்னவாகும்? ஆட்சியை எதிர்க்கும் எண்ணம் தோன்றத்தானே செய்யும்? அதனால்தான், பத்திரிகைகளின் ஞாயிறு விற்பனைகளை அழித்தார் டல்ஹௌசி.

இந்த ஞாயிறு சட்டத்தைக் கண்ட இதழாளர்களான ‘கல்கத்தா கூரியர், வெள்ளியன்றும், ‘ஆசியாடிக்’ என்ற பத்திரிகை புதன்கிழமை அன்றும், ‘ஓரியண்டல் ஸ்டார்’ என்ற இதழ் சனிக்கிழமை அன்றும் அவரவர் பத்திரிகைகள் வெளிவரும் நாட்களை மாற்றிக் கொண்டார்கள்.

3. கி.பி. 1800ல் வெளியான
அஞ்சலகச் சட்டம்

டல்ஹௌசி சட்டத்தால் நிறுத்தப்பட்ட பத்திரிகைகளும், காரணங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அமைதியைத் தேடித் தந்தன. இருந்தாலும், பத்திரிகைகளை மேலும் அடக்க நினைத்த அவர், 1800-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்.

“பத்திரிகை நடத்துவோர் தங்களது விற்பனை இதழ்களின் அஞ்சல் தலைக்குரிய பாதுகாப்புக் கட்டணத்தைக் காப்பீட்டுத் தொகையாகக் கட்ட வேண்டும்” என்பதுதான் அந்தப் புது சட்டம்.

பணம் இருப்பவர்கள் டல்ஹௌசி உத்தரவைக் கண்டு அஞ்சாமல் காப்பீட்டுத் தொகையைக் கட்டினார்கள்! பணமற்ற சாதாரண பத்திரிகைகளால் அந்தத் தொகையைக் கட்ட முடியவில்லை. அவர்களை அரசு அதிகாரிகள் வற்புறுத்திக் கட்ட வைத்தார்கள். அதற்குப் பிறகும் கட்ட முடியாதவர்களது பத்திரிகைகளை அஞ்சலகத்தார் கண்டிப்பான செயலோடு வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்க மறுத்து விட்டார்கள்.

டல்ஹௌசியின் இந்த புதிய சட்டம், பத்திரிகையாளர்களை வளர விடவில்லை. ஈரத் துணியைக் கட்டி கழுத்தை அறுப்பவனது இரக்கமற்றச் செயல் போல இருந்தது - அஞ்சலகக் காப்பீட்டுத் தொகைக் கட்டணச் சட்டம்!

4. ஆடம்ஸ் ஒழுங்கு முறைச் சட்டம்
(ADAMS REGULATION ACT - 1823)

வங்க மொழி வித்தகர் மட்டுமன்று, ஈரேழ் மொழிகளிலே புலமையாளரான இராஜாராம் மோகன்ராய், ‘சம்பத் கௌமதி’, மீரட் அல்-அக்பர் என்ற வங்க, பாரசீக மொழிகளிலே பத்திரிகைகளை நடத்திய மாமேதை ஆவார்.

அந்த பன்மொழி வித்தகர் நடத்திய தனது பத்திரிகைகளில் எழுதிய தலையங்கப் பகுதிக் கருத்துக்களை அடக்கிட, ஆங்கிலேய ஆட்சி கொண்டு வந்த அடக்குமுறைச் சட்டம்தான் இந்த ஆடம்ஸ் ஒழுங்கு முறைச் சட்டம். இந்தச் சட்டத்தை டல்ஹௌசி பிரபு 1823-ஆம் ஆண்டில் கொண்டு வந்து கடுமையாக அம்ல் படுத்தினார்.

இராஜாராம் மோகன்ராய், ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய வியாபாரக் கம்பெனியில் பணியாற்றிய நற்புகழாளராவார். அப்படிப்பட்டவர் மீதுதான் ஆங்கிலேயர் ஆட்சி ஏவியது அடக்குமுறைச் சட்டத்தை!

விளம்பரம், விலைப்பட்டியல், போக்குவரத்துச் செய்திகளை வெளியிட, அரசு தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று இந்தச் சட்டம் அறிவித்தது.

தலைமைச் செயலாளரிடம் மிகக் கஷ்டப்பட்டு அனுமதிபெற்றால் கூட, அந்த அனுமதி நீடிக்காது. ஆளுநர் நினைத்தால் அந்த அனுமதியை ரத்து செய்து விடலாம்.

பத்திரிகை அச்சடித்தான பிறகு அதன் பிரதி ஒன்றை உள்ளூர் நீதிமன்றத்தினர்க்கு உடனே, 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதும் அதே சட்டம் தான்.

அரசு தலைமைச் செயலர் அனுமதி இல்லாமல் பத்திரிகையில் செய்திகளை வெளியிட்டால், அபராதம் உண்டு! எவ்வளவு தெரியுமா? 400 ரூபாய்! அந்த அபராதத்துடன் விவகாரம் முடிந்ததா என்றால், அத்துடன் சிறைத் தண்டனையும் உண்டாம்! எவ்வளவு காலம் தண்டனை என்று கேட்பவர்களுக்கு; ஆறு மாதம் என்கின்றது அந்தச் சட்டம்.

5. செய்தித்தாள் பதிவுச் சட்டம்
(ACT No. II OF 1835)

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் சார்லஸ் மெக்கல்பால் என்பவர். இவர் டல்ஹௌசியைவிட கல்லுள்ளம் கொண்டவர். இவர்தான் செய்தித்தாள் பதிவுச் சட்டத்தை 1835-ஆம் ஆண்டு கொண்டு வந்து நடமாட விட்டவர்.

ஆனால், இவர் ஒரு நல்ல செயலையும் செய்துள்ளார். தன்னால் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் பொருந்தக் கூடிய சட்டம் என்று கூறாமல், கொஞ்சம் இரக்க உள்ளத்தோடு, கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே இந்தச் சட்டம் அமலாகும் என்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனால் பத்திரிகையாளர்களுக்கு ஓரளவு மனக்குறையும் குறைந்தது.

செய்தித்தாள் பதிவுச் சட்டத்தின்படி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், அதை அச்சிடும் அச்சகத்தாரும், பத்திரிகையை நடத்துவாரும், அவரவர் முழு பெயர்களையும், அச்சகம் இயங்கும் இட முகவரியையும், பத்திரிகை உரிமையாளர், அதை வெளியிடும் இடத்தின் முகவரியையும் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

வெளியிட மறந்தால், தவறினால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். சிறை தண்டனை உண்டா? உண்டு! இரண்டு ஆண்டு!!

6. 1857- ல் வந்த - வாய் பூட்டுச் சட்டம்!
(இதழ், சட்ட எண்:15)

இந்தியாவில் நடைபெற்ற இந்து - முஸ்லீம் இணைந்த ஆங்கிலேயர் ஆட்சி எதிர்ப்புப் போரை இந்திய வரலாற்றாசிரியர்கள் “இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்” என்று பெயரிட்டு எழுதினார்கள். ஆனால், ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களும் அவர்களது வெறி ஆட்சியும் அந்தப் போரை, போராகக் கருதாமல், சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிட்டு ஆணவமாடினார்கள்.

ஏன் இந்தப் போர் நிலை சிப்பாய்கள் இடையே மூண்டது? இங்லீஷ் ஆட்சியினர்; இந்துமத - இஸ்லாம் மத சுதந்திரங்களை, உரிமைகளை அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள். இப்படியே அந்த உணர்வை வளரவிட்டால் மத சுதந்திரம்.அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்து, இணைந்து ஒற்றுமையோடுப் போரிட்டார்கள் இந்து-முஸ்லீம் இன வீரர்கள்!

இந்தியப் பத்திரிகைகள் எல்லாம், இந்த இந்து - முஸ்லீம் மத உரிமைப் போரை ஆதரித்து செய்திகளை வெளியிட்டார்கள். தலையங்கங்களை, கட்டுரைகளைப் பத்திரிகைகள் எழுதின.

இத்தகைய இனமான பத்திரிகைகளை வளரவிடக் கூடாது என்ற ஆணவ மனப் போக்கில், பத்திரிகைகளை அடக்கி, ஒடுக்கி, நசுக்க வேண்டும் என்ற கொடூரச் சிந்தனையோடு கொண்டுவரப்பட்ட சட்டம் தான் 1857 - ஆண்டு இதழ்ச் சட்ட எண் 15 என்ற சட்டமாகும். இந்தச் சட்டத்தை எல்லா இந்திய பத்திரிகைகளும் ஒருமனதாக வாய்ப்பூட்டுச் சட்டம் என்று எழுதியே எதிர்த்தன. இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?

1. அச்சகம் அமைக்க முன் அனுமதி பெற வேண்டும்.

2. ஆங்கில ஆட்சியின் மீது வெறுப்புணர்ச்சிகளை உண்டாக்கும் செய்திகள் தடை செய்யப்படும்.

மேற்கண்ட சட்டத்தின் கொடுமையான அடக்கு முறைகளைத் தாங்கமுடியாமல் பெங்கால் ஹாரகாரு BENGAட HARKAR.சுல்தான் அல்-அக்பர் SULTAN-AL-AKBAR சமாச்சா SAMACHA, பிரஸ் ஆப்ஃ இண்டியா PRESS OF INDIA, பாம்பே டைம்ஸ் BOMBAY TIMES போன்ற பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு விட்டன என்று கூறுவதைவிட; தடைச் சட்டத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டன என்றே சொல்லலாம்.

லார்டு ரிப்பன் எங்களப்பன் என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ரிப்பன் பிரபு : கம்பெனி ஆங்கிலர்; ஆட்சியின் தலைமை ஆளுநராக வந்தார். அவர் 1882-ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் ஆணிவேரையே அறுத்தெறிந்தார்.

7. 1867-ஆம் ஆண்டில் உருவான
இதழ் சீர்திருத்தச் சட்டம். எண். 25

இந்தச் சட்டம் ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.

பத்திரிகைகள் நன்கு வளர்ச்சி பெறும் நோக்கங்களோடு இந்தச் சட்டம் பல சீர்திருத்தங்களைப் பெற்றிருந்தது.

இந்தச் சட்டம் 1867-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இன்று வரை, அதாவது 2005-ஆம் ஆண்டு வரையிலும் அது உயிரோடு நடமாடி வருகிறது. அந்தச் சட்டத்தின் நோக்கங்கள் பின் வருமாறு :

1. அச்சகம் நடத்துவோர், நீதிபதி ஒருவர் முன்பு உறுதி மொழிப் பத்திரம் எழுதித் தரவேண்டும்.

2. அச்சக உரிமையாளரும், பத்திரிகை வெளியிடுவோரும், எங்கே அதை அச்சடிக்கிறோம் என்ற இடத்தின் முகவரியை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

3. அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளின் இரண்டு பிரதிகளை அரசுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

4. பத்திரிகைகளைக் கொடுக்கத் தவறுகின்றவர்களுக்கு அபராதம் 2000 ரூபாய் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இவைதான், 1867-ஆம் ஆண்டின் பத்திரிகைச் சட்டத்தின் சீர்த்திருத்தங்களாகும்.

8. 1887-ஆம் ஆண்டு வந்த
நாடு கடத்தல் சட்டம். எண் - 27

ஆளுநர் ரிப்பன் பிரபுக்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து, 1887-ஆம் ஆண்டில் ஜான் லாரன்ஸ், மேயோ பிரபு என்ற இருவரும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்தச் சட்டத்தால் பத்திரிகைக்கு உண்டான லாபம் என்ன தெரியுமா? ஆங்கிலேயர் ஆட்சி பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்ட விக்கிமாதித்தன் கதை போல, பத்திரிகை நடத்துவோரைப் பழி வாங்கும் சூழ்ச்சிகளைப் பெற்றதுதான் லாபமாகும்.

ஆங்கில அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதும் பத்திரிகை ஆசிரியர்கள், இந்திய எல்லைகளை விட்டே துரத்தப்படுவார்கள். அதாவது பால கங்காதர திலகர் தனது ‘கேசரி’ பத்திரிகையில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து எழுதியதற்கு பர்மாவிலே உள்ள மாண்டலே காராக்கிரகத்திலே பூட்டிக் கொடுமைபடுத்தியதைப் போல, இப்போது 1887-ஆம் ஆண்டில் வந்த சட்டமும் பத்திரிகை ஆசிரியர்கள் நாடுவிட்டு வேறோர் நாட்டுக்கு விரட்டியடிக்கப்படுவர் என்பதுதான் அந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒருவேளை அந்த ஆசிரியர்கள் நாடு கடத்தப்படுபவராக இல்லாவிட்டால், குறைந்த அளவு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

அந்தச் சட்டம் இந்தியன் பீனல் கோடு 124A, 153A, 505 ஆகிய பிரிவுகளுக்கு ஏற்றவாறு அமல்படுத்தப்பட்டு தண்டனைகளை வழங்கும். எனவே, மேற்கண்ட பிரிவுகளால் இணைக்கப்பட்ட அராஜகம் சட்டம் இது.

9. 1878-ஆம் ஆண்டில் வெளியான
இந்திய மொழிப் பத்திரிகைச் சட்டம்
(THE VERNACULAR PRESS ACT OF- 1878)

மேயோ பிரபுவும், ஜான் லாரன்சும் கொண்டு வந்த இந்த சட்டம், பத்திரிகை ஆசிரியர்கள் இடையே பெரும் எதிர்ப்பைப் பெற்றது. அதனால்; இதழ்கள் உலகமே புரட்சி மனப்பான்மை என்ற தீ வளைய வட்டத்துக்குள் நுழைந்து தங்களையே தியாகம் செய்யத் தயாரான நேரத்தில், தலைமை ஆளுநராக அப்போது பொறுப்பேற்றிருந்த லிட்டன் பிரபு கொண்டு வந்த இந்திய மொழிகளது பத்திரிகைச் சட்டம் வெளியானது.

லார்டு லிட்டன் ஆட்சியின்போது பத்திரிகைகள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து நெருப்புக் குவியல் நடையில் எழுதின. அதனால் சட்டமெனும் தீயணைப்பு இயந்திரச் சக்தியைப் பயன்படுத்தினால்தான், அந்த நெருப்புக் கனல் நடை எதிர்ப்புக்களைச் சமாளிக்க முடியும் என்று எண்ணிய லார்டு லிட்டன், இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு இந்தியப் பத்திரிகை உலகின் சூழ்நிலையை எடுத்துரைத்த அவர், மன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். அந்த ஒப்புதலுக்கேற்ப சட்டம் திருத்தப்பட்டது. என்ன அந்த சட்டத் திருத்தம்?!

பத்திரிகை நடத்துபவர்கள், ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை முன் ஜாமீனாக, அதாவது பிணையத் தொகையாக Deposit ஆக கட்ட வேண்டும்.

ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பும், ஆத்திரமும் பொங்குமாறு பத்திரிகையில் எழுதக் கூடாது.

இனம், மதம், சாதி, மொழிகளது பேதங்களை உண்டாக்கி, அதனால் கலவரங்களைத் தூண்டிவிடும் நோக்கங்களில் பத்திரிகைச் செய்திகளை வெளியிடக் கூடாது.

மேலே கூறப்பட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக, அச்சகத்தாரும், பத்திரிகை பதிப்பிப்போரும் நீதிபதி முன்பு அல்லது காவல்துறை அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு ஆட்சியை எதிர்த்து எழுதினால், நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரிகளால் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்துவிடும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு.

மேற்கண்டவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து நீதியின் சந்நிதானப் படிக்கட்டுகளைக் கூட மிதிக்கக் கூடாது, அதாவது கோர்ட்டுக்குப் போக முடியாது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு முதல் முறையாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும். அந்த ஓசையைக் கேட்க மறுத்ததற்கேற்ப, மீண்டும் அதே தவறைச் செய்தால், கட்டப்பட்டிருந்த முன் பணம் பறிபோகும். அதற்குப் பிறகு அபராதமும் விதிக்கப்படும். சிறை தண்டனையும் உண்டு.

லார்டு லிட்டன் பிரபுவால், இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலோடு கொண்டு வரப்பட்ட இந்திய மொழி இதழ்ச் சட்டம், பத்திரிகை உலகுக்கு பெரும் கேடுகளை விளைவிப்பதாய் விளங்கியது.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகமான தாய்மொழிப் பத்திரிகைகள் நடத்தப்படவில்லை. அதனால், சென்னை மாநிலப் பத்திரிகை வட்டத்துக்கு அதிக பாதிப்புகள் ஏதுமில்லை.

ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், குறிப்பாக வங்காள மொழியில் வெளிவந்த ‘அமிர்தபசார்’ என்ற பத்திரிகையை அந்தச் சட்டம் வெகுவாகப் பாதித்ததால், இரவோடு இரவாக அந்த ஏடு மன மாறி இங்கிலீஷ் மொழிப் பத்திரிகையாகிவிட்டது.

லார்டு லிட்டன் பிரபுவுக்குப் பிறகு, மீண்டும் மனித நேயம் படைத்த ரிப்பன் பிரபுவே தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றார். அப்பாது கொடுங்கோலன் லிட்டன் சட்டத்தை அவர் திரும்பப் பெற்றுவிட்டார்.

10. 1908-ஆம் ஆண்டில் வெளிவந்த
குற்றத் தூண்டல் தடுப்புச் சட்டம்
(INSITEMENT OF OFFENCER ACT OF 1908)

நாட்டில் நடைபெறும், கொலை, கொள்ளை, திருட்டு போன்றக் குற்றங்களைத் தூண்டுகின்ற செய்திகளை, கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது, அரசு நடத்துவோர் நீதிமன்றத்தில் முறையிட்டால், அந்தப் பத்திரிகைகளை, அச்சடிக்கும் அச்சகத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த நீதிபதியின் தீர்ப்பு, பத்திரிகையாளர்கட்குப் பாதகமாக இருந்தால் அதை எதிர்த்து மேல் நீதிமன்றத்துக்குச் சென்று முறையீடு செய்திட 15 நாட்கள் கெடு கொடுக்கப்பட்ட வசதியும் ரிப்பன் பிரபு காலத்தில் வழங்கப்பட்டது.

லிட்டன் பிரபு ஆட்சியிலிருந்த இந்தச் சட்டத்திற்குப் பலியான பத்திரிகைகள், அச்சகங்களின் எண்ணிக்கை 963 ஆகும். அவருடைய ஐந்தாண்டுக் கால ஆட்சியில், பத்திரிகைகள் கட்டியிருந்த Deposit தொகை, அதாவது பறிமுதலான பிணையத் தொகை எவ்வளவு தெரியுமா? ஐந்து லட்சம் ரூபாய். அந்தக் காலத்தில் 5 லட்சம் என்றால் சாமான்யத் தொகையா அது?

11. 1910-ஆம் ஆண்டின் பத்திரிகைகள் சட்டம்
(THE PRESS Act of 1910)

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவையின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆல்போல் தழைத்து மக்கள் மனதிலே அருகு போல வேரோடி வந்தது. இதற்குக் காரணம், ஆண்டாண்டும் இந்த பேரியக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ்பெற்ற கல்விமான்களையும், வழக்குரைஞர்களையும் பல்கலை வித்தகர்களையும், தோற்றுவித்து, அவர்கள் தங்களது உடல், உயிர், உடைமை அனைத்தையும் தேசத்திற்குக் காணிக்கையாக்கவும் தயாராக இருந்த நிலைதான்!

பண்டித மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, லாலா லஜபதி ராய், சித்த ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்தர், வீர சாவர்கர், பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, இராசேந்திர பிரசாத், வல்லபபாய் படேல், டி.பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பெருந்தலைவர் காமராசர், இராசாசி, முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி ஐயர், குமாரசாமி ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.ஜீவானந்தம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சேலம் விசயராகவாசாரி, நிஜலிங்கப்பா மொரார்ஜி தேசாய் போன்ற அரும்பெரும் தியாகமணிகளது எழுத்தும், பேச்சும், உழைப்பும், சிந்தனைத் திறனும் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பேரிடியாய் ஒலித்துக் கொண்டே இருந்தன.

அண்ணல் காந்தியடிகள், தென் ஆப்ரிக்கா வாழ் இந்தியர்களுடைய மனித உரிமைகளுக்காக, சமத்துவ வாழ்க்கைக்காகத் தென்னாப்ரிக்காவில், இதே பிரிட்டிஷ் சாம்ராச்சிய ஆணவ ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்திற்கு இரு பக்கமும், இடியாக அடிக்கும் அரசியல் நெருக்கடிகளை இந்தியாவிலும், தென்னாப்ரிக்காவிலும் கிரேட் பிரிட்டன் பேரரசு அனுபவித்துக் கொண்டிருந்தது.

இந்தக் காலக் கட்டத்தில் தேசியக் காங்கிரசுக்கு ஆதரவாகவும், நாட்டின் விடுதலை உணர்ச்சிகள் ஆங்காங்கே மக்கள் இதயக் கடலிலே ஆர்த்த அலைகளாய் பொங்கி, எழுந்து, புரண்டு, உருண்டு பேரிறைச்சல்களை எழுப்பிக் கொண்டிருந்த நேரமாக இருந்தமையால், இந்திய மாநிலங்கள் தோறும் அவரவர் தாய் மொழியில் பத்திரிகைகள் தோன்றி ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதிப் போராடி அதிரடித்துக் கொண்டிருந்தன.

பத்திரிகைச் செய்திகளின் உணர்ச்சிகளை நாள்தோறும் படித்து வந்த மக்களின் சுதந்தர எழுச்சி வேகத்தை, ஆங்கில ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகி வருவதைக் கண்ட ஆங்கில வெறிபிடித்த அதிகாரிகள்; எப்படியாவது பத்திரிகைகள் எழுச்சியை அடக்கி ஒடுக்கிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

அந்தத் திட்டத்தின் எதிரொலிதான், 1910-ஆம் ஆண்டில் வெளிவந்த பத்திரிகையாளர் சட்டம். இந்தச் சட்டம் லார்டு லிட்டன் காலத்தைய சட்டத்தைவிட மிகக் கடுமையாக இருந்தது.

இந்தச் சட்டத்தின் அடக்குமுறை ஆற்றல் என்ன தெரியுமா? பத்திரிகை நடத்துவோர் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தங்களது பத்திரிகைக்கு முன் ஜாமின் பணம் கட்ட வேண்டும். செய்த குற்றத்தையே மீண்டும் பத்திரிகைகள் செய்யுமானால், ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பிணையத் தொகையை இழக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வாழ்க்கை நடத்துவதற்காக வருவாய் தேடும் அச்சகத்தையும் அந்தச் சட்டம் பறிமுதல் செய்துவிடும்.

ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால், அஞ்சலக அதிகாரிகள் அந்தப் பத்திரிகைகளை அந்தந்த ஊர் முகவர்களுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துவிடும் அதிகாரத்தையும் ஆங்கில ஆட்சியர் அஞ்சலகத் துறைக்கு அளித்திருந்தார்கள்.

அச்சடித்த பத்திரிகைப் பிரதி ஒன்றை பத்திரிகை உரிமையாளர் அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதிகாரிகள் அளிக்கும் தண்டனையை எதிர்த்துப் பத்திரிகையாளர் நீதிமன்ற விசாரணைக்குப் போக முடியாது. இந்தக் கடுமையான அடக்குமுறைச் சட்டத்தை பத்திரிகையாளர்கள் மீதும், குறிப்பாக அதன் ஆசிரியர்கள் மேலும் ஏவி விட்டது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி!

இந்த அதிகாரக் கெடுபிடிகளால் முன் ஜாமீன் தொகையைக் கட்ட முடியாத பத்திரிகைகள் எல்லாம் நின்றுவிட்டன. இன்றைக்கு பாண்டிச்சேரியில் நடக்கின்றதே அரவிந்தர் ஆஸ்ரமம், அதன் உரிமையாளரான அரவிந்த கோஷ் தனது ‘பந்தே மாதரம்’ பத்திரிகையை உடனே நிறுத்திவிட்டு, பத்திரிகைத் துறையில் பிரிட்டிஷ்காரர்கள் அதிகாரப் பேயாட்டங்களைப் பொறுக்க முடியாமல், அரசியலை விட்டே ஓடி வந்தார்.

பிரெஞ்சு ஆட்சி நடக்கும் பாண்டிச்சேரி நகருக்குள் சந்நியாசியாக நுழைந்து ஆன்மீகவாதியாக மாறிய அவர், ஆஸ்ரமம் நடத்த ஆரம்பித்துவிட்டார்! அவ்வளவுக் கொடுமைகளை அந்தச் சட்டம் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தது!

இவ்வளவு அதிகாரக் குத்தலையும், குடைச்சலையும் கொடுத்துக் கொண்டிருந்த அந்தச் சட்டக் கொடூரத்தைக் கண்ட அதே ஆட்சி, 1921-ஆம் ஆண்டில் - அதாவது பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு, சர் தேஜ் பகதூர் சாப்ரூ என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் சாதக பாதகங்களின் பரிந்துரைகளைக் கேட்டு, 1910-ஆம் ஆண்டின் பத்திரிகைச் சட்டத்தை ஆங்கில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

12. 1930-ல் இயற்றப்பட்ட
செய்தித்தாள் - அவசரச் சட்டம்

பத்திரிகையாளர்கள் 1921-ஆம் ஆண்டு முதல் 1930 - வரை, சற்று நிம்மதியான சிந்தனைகளோடு தொழிலை வளர்த்து வந்தார்கள். ஆனால், நாட்டு மக்களது விடுதலைப் போர் உணர்ச்சிகளைப் பத்திரிகையாளர்களால் தடுத்து நிறுத்த முடியுமா என்ன? மக்களது சுதந்திரப் புரட்சி நாளுக்கு நாள் நெய் பெய்யப்படும் நெருப்பு போல புகைந்து புகைந்து சுடர்ப் பொறிகளை வெடித்து வீசிக் கொண்டே இருந்தது.

சுதந்திரச் சுடர்கள் மக்கள் இதயத்திலே பொறிகளாக வெளிவரக் காரணம் பத்திரிகைகள்தான் என்பதை உணர்ந்த ஆட்சியின் அதிகாரிகள், 1930-ஆம் ஆண்டில் செய்தித்தாள் அவசரச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

என்ன இந்தச் சட்டத்தின் நோக்கம்? ஏன் அவசரம் அவசரமாக இந்தச் சட்டம் வந்தது? என்றெல்லாம் விவரம் கேட்ட பத்திரிகையாளரிடம், ஆட்சி அதிகாரிகள் அறிவித்த அறிவிப்பு என்ன தெரியுமா?

“அவசியம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் செய்தித் தாட்களை நிறுத்தி வைப்போம்” என்ற உரிமையை அரசிற்கு அந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றார்கள் அந்த அதிகாரிகள்!

இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு எந்த இந்திய மொழிப் பத்திரிகையாளர்களும் அயரவில்லை; அஞ்சவில்லை. அவர்கள் மேலும் மேலும் எரி எண்ணெயில் தோய்த்த தீப்பந்தம் போலவே எரிந்து எரிந்து எழுதினார்கள். உரிமைத் தீ சுடரிட ஆரம்பித்தது.

13. 1931-ல் பத்திரிகைகள் சந்தித்த
நெருக்கடிக் கால அவசரச் சட்டம்
(INDIAN PRESS EMERGENCY ACT 1931)

இந்திய விடுதலைப் போரின் தந்தையான அண்ணல் காந்தியடிகள் அடிக்கடி அறப்போர் புரிந்து வருவதை உலக நாடுகள் எல்லாம் அறிந்த ஒன்று.

அதற்கேற்ப காந்தியடிகள் 1931-ஆம் ஆண்டில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சட்டமறுப்பு அறப்போர் இயக்கம் நடக்கும் என்று அறிவித்ததால், போராட்டமும் நடந்து கொண்டிருந்தது.

நாடு பொங்குமாங்கடலானது. மக்கள் சுனாமி அலைகளென ஆங்காங்கே கொந்தளித்துப் போராடினார்கள்.

மக்கள் அறப்போராட்டத்தின் உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய பத்திரிகைகள் மீது, ஏகாதிபத்திய ஆட்சி 1931-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தைப் பத்திரிகையாளர்கள் மீது ஏவியது. என்ன அந்தச் சட்டத்தின் கொடுமை என்கிறீர்களா?

வேறொன்றுமில்லை; பத்திரிகைகள் 2000 ரூபாயை முன் ஜாமீனாக ஏற்கனவே கட்டி வந்த நிலையை மாற்றி, இப்போது 10,000 ரூபாயைப் பிணையத் தொகையாகக் கட்ட வேண்டுமென கட்டளையிட்டது. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல; எந்த அச்சகம் அந்தப் பத்திரிகையை அச்சடிக்கின்றதோ, அந்த அச்சகத்தாரும் 10,000 ரூபாயைப் பிணையத் தொகையாகக் கட்ட வேண்டும் என்பது அச்சட்டத்தின் முதுகெலும்பு நோக்கமாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலான வேறோர் கொடுமை என்ன தெரியுமோ?

அச்சகமும், பத்திரிகை உரிமையாளரும் கட்டிய பிணையத் தொகைகளை, மாநில அரசுகளே கபளீகரம் செய்து கொள்ளும் அதிகாரமும் உடையது அந்தச் சட்டம்? எப்படி நெருக்கடிச் சட்டம்? அதன் கொடுமை?

14. 1932 - ல், மற்ற நாடுகளின்
வெளி உறவு முறைச் சட்டம்
(FOREIGN REGULATION ACT 1932)

உலகப் பேரரசு என்றால், போர்க் கால நடவடிக்கைகளை அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலைகள் அதற்கு உருவாவதுண்டு. 1914-ஆம் ஆண்டில் உலக முதல் போர் ஆரம்பமாகி, 1918-ல் முடிந்தபோது, உறவு நாடுகள் - பகை நாடுகள் என்ற அணிகள் உருவாயின.

அதிலும் குறிப்பாக, ஐரோப்பா கண்டம் என்றாலே, எப்போது பார்த்தாலும் - தமிழ்நாட்டு மூவேந்தர்களைப் போல எங்காவது ஒரு மூளையில் போரொலி கேட்டுக் கொண்டே இருக்கும் கண்டம் அது! இங்கிலாந்து நாட்டுக்குக்கும் அதில் பங்குண்டு என்பது உலக வரலாறு.

அதற்கேற்ப, கிரேட் பிரிட்டனுக்கும் நட்புறவு நாடுகள், பண்டைய நாடுகள், பகை நாடுகள் ஆகிய அணிகள் உண்டாகலாமல்லவா? அதனால், அவற்றுக்கு எதிராக இந்தியப் பத்திரிகைகள் பத்திரிகை மூலம் எந்தவிதக் கருத்தையும் கூறிட வாயைத் திறக்கக் கூடாது.

வெளிநாடுகளின் உறவு இருக்கும்வரை எந்த ஒரு செய்தியினையும் ஆதரித்தோ - எதிர்த்தோ பத்திரிகைகளில் எழுதக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

15. 1934-ல் வெளி வந்த இந்திய
அரசின் பாதுகாப்புச் சட்டம்

இந்தச் சட்டம் இந்தியாவிலே உள்ள சிற்றரசுகளைச் செய்தித்தாள்கள் தாக்கி எழுதக் கூடாது என்று பத்திரிகையாளர்களது பேனாமுனைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட சட்டம் இது. ஏனென்றால், சிற்றரசுகள் எல்லாம் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தரும் சூழ்நிலைகள் அமைந்துவிடக் கூடாதல்லவா? அதனால்!