இதழியல் கலை அன்றும் இன்றும்/தற்கால-கட்சி


8
தற்கால - கட்சி சார்பற்ற
தமிழ்ப்பத்திரிகைகள்

ந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பத்திரிகைகள் நடத்த விரும்புவோர், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றவாறு ‘நடுநிலை’ இதழ்கள் என்ற பெயரிலே தினசரி, வாரம், திங்கள், மும்மாத இதழ்கள், ஆண்டு மலர்கள், வாரம் இருமுறை ஏடுகள், மாதம் இருமுறை இதழ்கள் என்று ஏராளமான பத்திரிகைகள் வெளிவருவதும், பொருளாதார நெருக்கடிகளால் அவை நின்றுபோவதுமாக இருக்கின்றன.

புது தில்லியிலே உள்ள பத்திரிகைத் தாட்கள் வழங்கும் அலுவலகத்திலே பணியாற்றும் நாராயணசாமி நாயர் என்ற அதிகாரியிடம் நான் ஒரு முறை தாள் கோட்டா பற்றி உரையாடி விவரம் அறிந்தபோது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 356 பத்திரிகைகள் வெளிவருவதாகக் கூறினார். அந்த விவரம் ஒரு வணிக நோக்கு என்பதால் அவ்வளவு பத்திரிகைகள் வெளிவருவதாக அவரது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நாளேடு

வகைகள் :

மதுரை மாநகரிலே இருந்து வெளிவந்த ‘தமிழ் நாடு’ என்ற பத்திரிகையைக் கருமுத்துதியாகராச செட்டியார் உண்மையான தமிழ் வளர்ச்சிப் பற்று நோக்கோடு நடத்தினார். நல்ல நோக்கத்திற்குத் தான் சமுதாயத்தில் வரவேற்பு அதிகமிருக்காதே! அதனால், அந்த தமிழ்நாடு இதழ் நின்றுபோய், பிறகு வார இதழாக வெளிவந்து, இறுதியில் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பண நெருக்கடியா செட்டியாருக்கு என்றால், அவர் ஒரு பெரும் தொழிலதிபர் ஆவார்! தமிழர்களிடையே தமிழ்ப் பற்றுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை அவர் முழுமையாக உணர்ந்த பிறகு அந்த நாளேட்டையும், வார இதழையும் நிறுத்திவிட்டார் - பாவம்!

கோவை நகர்

‘நவ இந்தியா’

கோவை மாநகரில் இருந்து ‘நவ இந்தியா’ என்ற ஒரு நாளேட்டை இராமகிருஷ்ணன் என்பவர் நடத்தினார். பிறகு தலைநகரமான சென்னை மாநகருக்கு அந்தப் பத்திரிகையை இடம் மாற்றிப் பார்த்தார்! என்ன செய்வது? பெரும் செல்வச் சீமானான அவரும் அதை நிறுத்திவிட்டார்! தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தால் மட்டும் போதுமா? பத்திரிகைகள் பரவலாக விற்பனையாக வேண்டுமே!

‘நவ சக்தி’

தனுஷ்கோடி

தமிழ்த் தென்றல் என்று தமிழ் மக்களால் மதித்துப் போற்றப்படும் திரு.வி.க. அவர்கள் ‘நவசக்தி’ என்ற வார இதழைத் துவக்கினார். வெற்றிகரமாகத்தான் நடத்தினார்!

அவருக்குப் பிறகு முருக-தனுஷ்கோடி என்ற தேசியவாதியால் பெருந்தலைவர் காமராசர் ஆதரவோடு காங்கிரஸ் கட்சிக் கொள்கைகளைச் சுமந்த நாளேடாக வெளிவந்து கட்சித் தொண்டு செய்தது. அதற்குப் பிறகு அதுவும் நின்றுவிட்டது.

மதுரைநகர்

‘மதுரை மணி’

மதுரை மாநகரிலே இருந்து நடுநிலை என்ற தகுதியோடு ‘மதுரை மணி’ என்ற நாளேடு துவங்கப்பட்டது. பொதுமக்கள் இடையே பரவலாக அந்தத் தினசரி இதழ் விற்பனையாகும் வாய்ப்பு இல்லை. என்றாலும், இன்றும் அது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

திருச்சி, சென்னை

‘தின மலர்’ தினசரி!

‘தின மலர்” என்ற நாளேடு முதன் முதலில் திருச்சி மாநகரிலே இருந்து வெளிவந்தது. அதன் உரிமையாளர் இராம. சுப்பையர் தினத்தந்தி நாளேட்டுக்குப் போட்டியாக விற்பனையாவதற்குக் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் விறுவிறுப்பு, திருநெல்வேலி மாநகரிலும் அதே தின மலர் மாவட்டப் பத்திரிகையாக வெளிவந்து அவை பரபரப்பாக விற்பனையாக அய்யர் வழிகாட்டி விட்டார். இன்று அந்த தினமலர் நாளேட்டை அவரது செல்வன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுப் பல நகரங்களிலே மாவட்ட நாளேடாகவும் பதிப்பித்து நடத்தி வருகிறார். சென்னை மாநகரிலே தினமலர் விற்பனை நாளேடாக மக்கள் எதிர்பார்ப்போடு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இராம சுப்பைய்யரிடம் தினமலர் என்ற நாளேடு அன்று தாளுண்ட நீரின் உழைப்பு; இன்று தமிழ் மக்களுக்குத் தலையாலே தந்து பத்திரிகைத் தாகவேட்கையைத் தணித்து வருகின்றது.

ஆதித்தனாரின்

‘தினத்தந்தி’

பாரட்லா சட்டப் படிப்பை இலண்டன் மாநகரிலே முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக சென்னை மாநகர் வந்த சி.பா. ஆதித்தினார், பாமரனுக்கும் பத்திரிகை படிக்கும் ஆசையை உருவாக்கிய பத்திரிகை உலகத் தந்தையாக சிறந்து ஓங்கி வளர்ந்தார்.

தினத்தந்திக்கென்று அவர் ஒரு பாமரர் தமிழை உருவாக்கிய சிற்பியாகத் திகழ்ந்தார்! மக்கள் பேசும் தமிழில் கொச்சை ஒலி நீக்கி எழுதுவதுதான் ‘தினத்தந்தி’ தமிழ் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். தினந்தோறும் காலையில் பல லட்சம் மக்களுடன் அவர் தினத்திந்தி மூலமாகப் பேசும் வியாபார விற்பனைத் தொடர்பை உருவாக்கிக் காட்டினார். ஏழை மக்கள் அனைவரும் எழுத்துக் கூட்டியாவது தினத் தந்தி நாளிதழைப் படிக்க வைக்க வேண்டும் என்ற செயற்கரிய முயற்சியை அவர் செய்துகாட்டி; அனைவரையும் அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்க வைத்தவர் ஆதித்தனார்!

“இலக்கியம் படிக்க ஆசைப்படுபவன் ‘தினமணி’ படிக்கட்டும்! அன்றாட வாழ்க்கை இலக்கியம் படிக்க நினைக்கும் பாமரன் ‘தந்தி’ வாங்கிப் படிக்கட்டுமே” என்ற சிந்தனையிலே வெற்றி பெற்றவர் ஆதித்தனார்.

‘தினத்தந்தி’ வெற்றிச் சிகரத்தின் ஒளி விளக்கான பிறகு, அதே ஏழை பாமரர்களை மாலையிலேயும் படிக்க வைக்கும் பத்திரிகை வேட்கையை ‘மாலைமுரசு’ என்ற நாளேடு மூலம் உருவாக்கி, அதிலும் அவர் வெற்றி பெற்றார்.

நாளேடுகளில் அரிய பெரிய வெற்றி பெற்ற ஆதித்தனார், ‘வாராந்தரி ராணி என்ற வாரப் பத்திரிகையைத் துவக்கி, அதைக் குடும்பம் குடும்பமாகத் தமிழ் மக்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிவிட்டார்.

நாளாயிற்று, வாரமாயிற்று, மாதாந்திற்குரிய கல்வித் தொண்டு ஏதாவது செய்ய வேண்டாமா? என்ற சிந்தனைக் கனியாகப் பழுத்ததுதான் ‘இராணிமுத்து’ என்ற அவரது திங்கள் கதை வெளியீடுகள்!

இவ்வாறு தமிழ் நாட்டு மக்களைத் தினந்தோறும் காலையிலும் - மாலையிலும் வார, தினங்களிலும், மாத நாட்களிலும் பத்திரிகைகள் வாயிலாக வாழ்க்கைச் செய்திகளைப் படிக்க வைத்த பத்திரிகையாளர் யார்? ‘நாம் - தமிழர்’ என்ற பாசபந்த உறவை நாட்டிய ஆதித்தனாரைத் தவிர?

பொதுஉடைமை

கட்சி “தீக்கதிர்”!

‘தீக்கதிர்’ என்ற கம்யூனிஸ்ட் கட்சி நாளேடு, பாட்டாளி மக்கள்; தொழிலாளர் தோழர்கள்தம் வாழ்க்கைக்குரிய நலன்களுக்காகத் தீச்சுடரொளிகளை ஆதிக்கவாதிகள் மீது உமிழ்ந்து உழைத்து வெற்றி கண்டு வரும் பொதுவுடைமை ஏடாக பவனி வருகிறது. அதன் ஆசிரியர் அகத்திலிங்கம் பன்னூலுணர்ந்த புலமையாளர் மட்டுமல்ல; அரசியல், இலக்கியம், வரலாறு ஆய்வுக் கருத்துக்களைக் கட்டுரைகள் வாயிலாக அள்ளியள்ளி வழங்கும் அறிவு தாதா! மார்க்ஸ் மரபாளர்! ஜீவாவின் வாழையடி வாழையாக வந்த பத்திரிகை வாரிசு! சிறந்த பொதுவுடைமைக் கருத்துக்களை ‘தீக்கதிர்’ மூலமாகக் கொள்கை ஒளியேற்றி வழிகாட்டும் பண்பாளர் அவர்!

வருமானம் திரட்டும்

பத்திரிகை வகைகள்!

“குமுதம், குங்குமம், வண்ணத் திரை, முத்தாரம், அமுதசுரபி, கலைமகள், கல்கி, விகடன்” போன்ற பருவ இதழ்கள், பிறர் எழுத்தில் வாழும் பத்திரிகைகள். தனி மனித பல்சுவை விருந்தாற்றல் இந்தப் பத்திரிகைகளுக்கு இல்லாவிட்டாலும், பெண்கள் தலை அழுக்கில் உயிர் வாழும் பேன்களைப் பெருமாளாக்கி, அவைகட்கு விழாக்கள் எடுத்து உயிர் வாழும் பணம் திரட்டிகள்; கூடுமானவரை ஓரினத்திற்காகவே கதை திரட்டிகள்; எப்படியாவது வருமானம் வந்தால் போதும் என்பதற்காகவே சினிமா நடிகைகளை நம்பி வாழ்ந்து வரும் பத்திரிகைகள். பருவ ஏடுகளது பெண்ணாள்களைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் “பத்திரிகை” என்ற தலைப்பில் பாடிய ஒரு பகுதி இது. படித்துப் பாருங்கள்!

“சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங்க ரத்தே

- ஏழைகள் பணத்தை எப்படி எல்லாம் பெறலாம்; அவர்களை வெறுங்கையர்கள் ஆக்கலாம்; அதற்காக எவ்வாறெலாம் எழுதலாம் என்ற கலைகளுக்குரிய ஏடுகளே மேலே உள்ளவை எல்லாம்! அந்த பத்திரிகைகளால் ஏழை அறிவா உயரும்? விற்பனைதான் பெருகும்; விலைதான் உயரும். இருபாலரும் பெருமை பெறார்.

விந்தன்

‘மனிதன்’

‘கல்கி’ பத்திரிகையிலும், ‘தினமணி’ கதிர் இதழிலும் ஆசிரியர் பொறுப்பிலே பணிபுரிந்த கோவிந்தன் எனப்படும் விந்தன், ‘மனிதன்’ என்ற இதழை நடத்தினார். அவர் என்ன சினிமா பெண்களை அட்டையில் அச்சடித்தர் தனது பத்திரிகை விற்பனையைப் பெருக்கினார்?

கோவிந்தன் மனிதர், புனிதர், மக்கள் அறிவை வளர்த்து வளமாக்கிட, ‘மனிதன்’ இதழை நடத்தி, ஒவ்வொரு பக்கத்தையும் வாழ்வியல் இலக்கிய ஊற்றுக் கண்களாக்கிடும் இதழியல் சிற்பியாகத் திகழ்ந்தார், குறை கூற முடியுமா அவர் ‘தினமணி கதிர்’, மனிதன் பத்திரிகை வேளாண் அறுவடைகளை?

பகீரதன்

‘கங்கை’

‘கல்கி’ பத்திரிகையிலே துணை ஆசிரியர் பணி புரிந்தவர்தான் பகீரதன்! அவர் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ்தான் கங்கை கங்கை! நீருக்கு ஆன்மீக உலகில் என்ன மரியாதை உண்டோ, மதிப்புண்டோ, அவ்வளவு மதிப்பு கங்கை இதழுக்கும் கற்றவர்கள் இடையே இருந்தது. பகீரதன், விந்தன் இலக்கிய ஆய்வுகளை, கட்டுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் - அவர்களது எழுத்துக்களின் அற்புத அருமைகள்!

பகீரதன் ‘ஓம் சக்தி’ என்ற பத்திரிகையிலும் கட்டுரைக் கொடை செய்தவர்தான்! கூற முடியுமா குறை அந்தக் கட்டுரைகளை? உண்மையான பத்திரிகையாளர்களாக மக்கள் இடையே அறிவு உலா வந்த ஏழை எழுத்தாளர்களாகவே மாண்டவர்களாவர்!

‘கலைமகள்’

கி.வா. ஜ!

‘கலைமகள்’ என்ற இலக்கியப் பத்திரிகையை கி.வா. ஜகன்னாதன் ஆசிரியராக இருந்து நடத்திய காலம் வரை, வெறும் இலக்கியம், கவிதை, வரலாறு, ஆன்மிகம் கருத்துக்களை உடையதாக நடத்தப்பட வில்லை. ஆராய்ச்சிகளையே அந்த இதழ் அரியணையாகக் கொண்டு இலக்கிய உணர்வாளர்களைக் கோலோச்சியது என்றால் மிகையன்று.

சேக்கிழார் பெருமானுடைய திருத்தொண்டர் மாக்கதையை கி.வா.ஜ. ஆராய்ச்சி செய்த கோணம் - நேர்க்கோணம். நீள் சதுரமிட்ட சதுரர் கி.வா.ஜகன்னாதன். அவரால் நடத்தமுடியாதா - ‘குங்குமம், குமுதங்களை?’. எனவே, கலை மகள் ஏடு ஓர் இலக்கிய ஊட்டி; கவிதைக் கொண்டைக்கானல்; ஆன்மிகத் திருச்செந்தூர்! கடலழகுக் காட்சிகளே அதன் கோலம் எனலாம்!

‘அமுத சுரபி’

விக்ரமன்

வரலாற்று எழுத்தாளர்களில் தென்றலென விளங்கும் திரு. விக்ரமன் அவர்கள், ‘அமுத சுரபி’, மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகை மணிமேகலை அட்சய பாத்திரம் போல கலை, இலக்கியக் காட்சிகளைத் தந்தது. பல ஏழை எழுத்தாளர்கள், எழுத்தர்கள் பசிப் பிணிகளை அது நீக்கியது. அதற்கொப்பவே, ‘அமுத சுரபி’ ஏடதனில், கற்றார் போற்றும் வண்ணம் அமுதக் கருத்துக்களைத் திங்கள்தோறும் சுரந்து கொண்டே வாரி வழங்கியது. விக்ரமன் ஆண்டாண்டாக வெளியிட்ட அமுத சுரபி, தீபாவளி மலர்ச் சோலைத் தோட்டங்களுக்கு ஈடாகுமா குமுதம், குங்குமம் தமிழ் தொண்டுகள்? பருவ இதழ்கள் என்றால் பணம் பண்ணும் சிலந்தி வலைக் காட்சிகளா வாசகர்களை சிக்க வைக்க? இவையெலாம் பத்திரிகைத் தொண்டுகளில் அறிவூட்டும் அறமன்று; காலத்திற்கேற்ப காசு தேடும் திறம்! தரம் ஆகும்!

‘விகடன்’ குடும்ப

பத்திரிகைகள்

ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ்.வாசன், ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திக் காட்டி வெற்றி பெற்றவர். அந்த விகடன் இதழ் குடும்பத்துள், ‘சக்தி விகடன்’, ‘அவள் விகடன்’, ‘சுட்டி விகடன்’ என்ற் பத்திரிகைகள் வெளிவந்து விற்பனையாகின்றன. மக்களுக்கு இந்த இதழ்கள் என்ன தொண்டாற்றுகின்றன என்பதை விகடன் குடும்பத்தைத் தான் கேட்க வேண்டும். ஆனால், பண வருவாய்க்குத் தொண்டு செய்கின்ற அந்த பத்திரிகைகளைப் பாராட்டலாம். அதுவும் பணம் தேடும் படலத்திற்குரிய ஒரு வருவாய்க் கலையூற்றுக் கண் தானே!

திருச்சி நகர்

‘குறள் மலர்’

திருச்சி பாலக் கரை பகுதியிலிருந்து குறள் மலர் என்றொரு வாரப் பத்திரிகையை திருக்குறள் வீ. முனிசாமி, பி.ஏ.,பி.எல்., நடத்தி வந்தார். திராவிடரியக்க நேரடித் தொடர்பில்லாத் திருக்குறளார், தந்தை பெரியார் சீர்திருத்தக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட சிந்தனையாளர். 1952 தேர்தலில் தினமணி பத்திரிகை உரிமையாளர் இராமநாத் கோயங்காவை வன்னியர் கட்சி வேட்பாளராக திண்டிவனம் நாடாளுமன்றம் தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்டு இலட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தவர். மிகச் சிறந்த நகைச் சுவைப் பொழிவாளர். அவரிடத்தை இன்றுவரை நிரப்புவாரில்லை!

மகாலிங்கம்

‘ஓம் சக்தி’

பொள்ளாச்சி தொழிலதிபர் டாக்டர் நா. மகாலிங்கம் ‘ஓம் சக்தி’ என்ற இதழுக்கு கெளரவ ஆசிரியராக இருப்பவர். ‘கல்கி’ துணை ஆசிரியராக இருந்த பகீரதன் ஓம் சக்தி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார்.

டாக்டர் மகாலிங்கம் சிறந்த எழுத்தாளர், தேர்ந்த இலக்கிய ஆராய்ச்சியாளர், அருமையாகப் பேசும் ஆற்றலுடையவர். தமிழ் மொழி வளர்ச்சி, ஆன்மிக ஆய்வு, வரலாற்று ஆய்வு, மொழி ஆய்வு நோக்கு; ஆகிய எல்லாச் சிறப்புகளையும் பெற்ற தமிழ்ப் பண்பாளர். சிறந்த எழுத்தாளர்! கற்றவர்களுக்கு கற்கண்டு கட்டுரை வழங்குபவர்!

“ஓம் சக்தி” பத்திரிகையில் தனது ஆராய்ச்சி முடிவுகளை, சீரிய சிந்தனை வெளிப்பாடுகளைத் தொடர்ந்து எழுதி வரும் திறமையாளர். ஆசிரியர் பகீரதன் ஓம் சக்தியில் தொடர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிக்கருத்துக்களை எழுதியவர். ஓம் சக்தி இதழில் ஆன்மிக கட்டுரைகள் வெளிவருவதோடு, சிறப்பாக, வள்ளல் பெருமானைப் பற்றிய அரிய சிந்தனைகளும் இடம்பெறுகிறது. மேல் நாட்டு இலக்கிய மொழி பெயர்ப்புகள், அறிவியல் அறிஞர்கள் வரலாறு; சிந்தனைக்குரிய சிறந்தக் கட்டுரைகள், வேதாத்திரி மகரிஷியின் தத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் ஓம் சக்தியில் இடம் பெற்ற அறிவுச் சோலையாக மணக்கும் இதழாகும்.

சிலம்புச் செல்வரின்

‘செங்கோல்; தமிழ் முரசு’

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிலே ஒருவராக உருவானவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். இராஜாஜியின் கருத்தை ஆதரிப்பவர். ம.பொ.சி. சிறந்த நாவன்மை பெற்றவர். அவர் பேசும் மேடையில் எதிர்கட்சிக்காரன் கேட்கும் வினாவை இவரே கேட்டு, அதற்கு அவரே பதிலளிக்கும் பாணி ம.பொ.சி. மேடை பேச்சு பாணி! இதுவரை 200 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள பல்சுவை இலக்கியச் சிந்தனையாளர்.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று தியாகம் புரிந்தவர். தமிழ்ப் பற்றுடையவர். சிறந்த எழுத்தாளர். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு, காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ம.பொ.சி. தமிழரசுக் கழகம் என்ற ஒரு கட்சியைத் துவக்கிச் சிறப்பாகவே நடத்தினார்.

தனது கட்சி வளர்ச்சிக்காக ‘செங்கோல்’, ‘தமிழ் முரசு’ என்ற இரண்டு வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி வந்தார். இரண்டுக்கும் அவரே ஆசிரியர்.

சுதந்திரம் பெற்ற பிறகு வட எல்லை போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் சார்பாக நடத்திச் சிறை சென்றார். திருத்தணி நகரமும், அதைச் சுற்றியுள்ள சில தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களும், ம.பொ.சி. நடத்திய போராட்டத்தால் தமிழ் நாட்டுக்குக் கிடைத்தவையே. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, படாஸ்கர் குழு ம.பொ.சி. போராட்டத்தைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு பரிந்துரைத்ததை பெற்றுக் கொண்டு அதற்கு அனுமதியும் அளித்தது. அதனால், திருத்தணி தமிழ்நாட்டின் வட எல்லையானது. திருப்பதி ஆந்திரருக்கு போனது.

ம.பொ.சி.யின் முயற்சியால், வீர பாண்டியக் கட்டபொம்மன் விடுதலைப் போர் வீரனானான். அவன் கதை திரைப் படமானதற்கும் ம.பொ.சி.தான் முதல் காரணம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தியாக வரலாற்றைத் திரைப்படமாக்கிட ம.பொ.சி.யின் தமிழ்ப் பற்றே காரணமாகும். இரண்டு திரைப் படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே கட்டபொம்மனாகவும், வ.உ.சி.யாகவும் நடித்தார்.

தமிழரசுக் கழகம் கலைக்கப்பட்ட பிறகு ம.பொ.சி., தி.மு.கழகத் தேர்தல் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு பத்திரிகையாளர் சென்னை சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி பெற்றார் என்றால், அது பத்திரிகைத் துறைக்கும் பெருமை அல்லவா?

பத்திரிகையாளர் சங்கம்

நடத்தும் - “தமிழ்த் தென்றல்”!

“எந் நாட்டும் இல்லாத இந் நாட்டுத் தென்றலே! வாழ்க”! என்றார் பாவேந்தர் பாரதிதாசன்!

‘தென்றல்’ என்றால் சிலருக்கு கவிஞர் கண்ணதாசன் நடத்திய பத்திரிகை பெயர் தான் நினைவிலே ஊஞ்சலாடும்!

தமிழ்த் தென்றல் என்றால், திரு.வி.க.விற்கு தமிழ் அன்பர்கள், பண்பர்கள் கொடுத்த விருது ஆயிற்றே என்ற ஊற்று நீரிலே தமிழர் நீராடுவர்.

ஆனால், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் ‘தமிழ்த் தென்றல்’ திங்கள் இதழை இங்கே நாம் குறிப்பிடுகிறோம். திங்கள் இதழ்தான் என்றாலும், அதன் கருத்துக்கள் திங்கள் ஒளியைப் பொழிவதை நாம் அனுபவிக்கின்றோம். சங்க மாநிலத் தலைவர் திரு. டி.எஸ்.இரவீந்திர தாஸ், இதழின் ஆசிரியர். தமிழ்ப் புலமை பெற்ற சட்டாவதானி. அவரது எழுத்து, கலந்துரையாடல், சிந்தனை, உழைப்பு எல்லாமே வெள்ளுவா ஒளியே!

உழைக்கும் பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு தென்றல் தரும் இன்பம் போன்ற இதமான வசதிகளைச் செய்து கொடுக்க சங்கத் தலைவர் விரும்பி உழைக்கின்றார்! ஆனால், வீசும் காற்றின் மேற்பட்ட பஞ்சு போல, மஞ்சு போல அவற்றைப் பறக்கடித்து-கரைத்து விடுகின்றது. ஜனநாயக ஆட்சி! மக்களாட்சியின் நான்காவது துண் அல்லவா பத்திரிக்கையாளர்கள் சங்கம்? அதற்கு ஜனநாயக அரசு ஆற்றும் நன்றி இதுதானோ!

எதிர் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குரிய வசதிகளை எந்த அரசாவது ஆற்றாமமலா போகும்? என்ற மன அமைதியோடு ‘தமிழ்த் தென்றல்’ பத்திரிகைப் பணிகள் மூலம் போராடி வருகிறார். டி.எஸ். இரவீந்திரதாஸ். பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் பத்திரிகை என்பதற்கேற்ப, அதன் இதழ்கள் அறிவொளியைப் பரப்புகின்றன.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கப் பணிகளை, தலைமை நிலையப் பொறுப்பாளராக அமர்ந்து ஆற்றிவரும் சகோதரி வளர்மதி - பத்திரிகை வளர்ச்சிக்குரிய பணிகளையும் செய்து வருகிறார்.

‘தமிழ் மூவேந்தர்’

“முரசு’’ மாத இதழ்

‘இலக்கியச் சுடர்’ மூவேந்தர் முத்து, நடத்திவரும் இலக்கியத் திங்கள் இதழ் ‘தமிழ் மூவேந்தர் முரசு’. அந்த பத்திரிகைக்கு ‘கலைமாமணி’ பேராசிரியர் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிறப்பாசிரியராகவும், ‘இலக்கியச் சுடர்’ மூவேந்தர் முத்து ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள் என்றால்; அதன் இலக்கியச் சேவைகள் எவ்வாறு இயங்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டு மறைந்த அரிய அறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்திடும் தமிழ்ப் பண்புணர்வுகளை; ஆண்டாண்டு தோறும் ஆறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு முரசறைந்து நினைவூட்டி வருகிறது மூவேந்தர் முரசு! பாவேந்தர் விழா, திரு.வி.க. விழா, அ.ச.ஞானசம்பந்தர் விழா நூல் பதிப்புச் செம்மல்கள் விழா, தமிழ்த் தொண்டர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள் விழா, கவிஞர் கண்ணதாசன் பவள விழா; பாவாணர் நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா நினைவலைகளது சம்பவங்கள், மேல் நாடுகளில் நடைபெறும் தமிழ்க் கலைவிழா, கவிதை இனங்களுக்குத் தக்காரைக் கொண்டு தொண்டாற்றும் வித்தகப் பண்பு, வாழ்க்கைக்குரிய மருத்துவக் குறிப்புகள் போன்ற பல தமிழ் உணர்ச்சிகளை மூவேந்தர் முரசு வாயிலாக நினைவொலிகள் எழுப்பி, மற்ற பத்திரிகைகளுக்கும், மக்களுக்கும் தமிழ்ப் பணி சேவை உணர்வுகள் மூலமாகத் தொண்டு புரிகின்றது.

‘யோகக் கலைக்கு

ஒரே ஓர் இதழ்!

புகழ்பெற்ற தமிழ்ப் பதிப்பகங்களில் ஒன்றாக நிலைத்துவிட்ட பாரதி பதிப்பகம் நடத்தும் திங்கள் இதழ் யோகக் கலை! பதிப்பகத்தின் திறமையாளராக விளங்கிய தெய்வத்திரு பழ. சிதம்பரம் அவர்களின் ஆற்றல்மிகு மக்கட் பேறுகளான பழ. சி. இராசேந்திரன், பழ. சி. மணி, பழ. சி. வைத்தியநாதன், பழ.வெங்கட் ஆகியவர்களின் கடும் உழைப்பின் எதிரொலியாக இயங்கி வருகின்ற ‘யோகக் கலை’ பத்திரிகையில்; யோகாசனம், தியானம், இயற்கை மருத்துவம் மற்றும் வரலாற்றுச் சம்பவ நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன.

மொத்தத்தில், ‘யோகக் கலை’ விஞ்ஞானிகளான பதினெண் சித்தர்களின் ஒரே ஒரு குருகுல இதழாக ‘யோகக் கலை’ பத்திரிகை உலா வந்து, ஆரோக்கிய வாழ்வை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

“நக்கீரன்” தொண்டு

“invincible” லா?

தருமி என்ற கவிஞனின் வறுமை ஒழிய ஆலவாயப்பன் எழுதிக் கொடுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவிதையிலே பொருட் குற்றம் கண்ட புலவர் பெருமான் நக்கீரரைப் பார்த்து : ‘கீர் கீரென்று அறுக்கும் கீரனோ என் கவியை ஆராயத் தக்கவன்?’ என்று கொந்தளித்தக் கோபத்தோடு மதுரை சொக்கேசர் பெருமான் பாண்டியன் அவையிலே பொங்கினார்!

‘சங்கறுப்பது எங்கள் குலம், தம்பிரானுக்கு ஏது குலம்?’ என்று நக்கீரர் “நா” பெருமான் முன்பு சீற்றமாட, அதைப் பொறுக்காத சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்ட, ‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று அக்கவிதைக் குற்றத்தை நிலைநாட்டிடப் போராடிய அருளாளர் ‘நக்கீரர்’!

அந்த நக்கீரர் பெருமான் பெயரோடு நடமாடும் பத்திரிகையை நடத்துபவர் கோபால் என்ற பத்திரிகையாளர். அவர் நடத்தும் investigation இதழ் “நக்கீரன்”.

ஒருவனுடைய குற்றங்களைச் சோதனை செய்கின்ற, அலசி ஆராய்கின்ற அந்த ஏடு, கர்நாடகம், தமிழகம் என்ற இரண்டு அரசுகளின் இனிமையான தயவுக்காக ‘நக்கீரன்’ தூது சென்று, இறுதியில் invidious எனப்படும் ‘போட்டிப் பொறாமைகளைத் தூண்டக் கூடிய ‘பத்திரிகை என்ற தரத்தைப் பெற்றான் ‘நக்கீரன்!’.

‘நக்கீரன்’ சென்ற தூது வேலையை ஊக்கமூட்டக் கூடிய invigorates பத்திரிகைப் பணி என்று எண்ணாமல், இரண்டு அரசுகளின் ஒழுங்கு, உறவுகளைத் தலைகீழாகத் திருப்பும் பணிinversion என்று கருதி, நக்கீரன் தலையிலே பொடா சட்டச் சுமையை ஏற்றி வைத்தது வஞ்சக, பழி வாங்கும் பண்புடைய தமிழக அரசு.

சிவபெருமானுடைய நெற்றிக் கண் தீப்பொறிகளுக்குப் பலியாகித் தீராக் குட்ட நோய் பெற்ற நக்கீரனாரைப் போல, ‘நக்கீரன்’ கோபால்; பொடா என்ற ஆணவக் குண வஞ்சகத்துக்கு ஆட்பட்டு சிறைபட்டதால், ‘40’ என்ற நாடாளுமன்ற மக்கட் சக்தியின் வெற்றியெனும் கருணையால், நக்கீரன் சிறைக் கபாடத் தாள் தூள் தூளாக்கப்பட்டு வெளியே வந்தார். இது, இன்வஸ்டிகேஷன் என்ற பத்திரிகைக்கு அந்த ஏடு தேடிக் கொண்ட ‘மரியாதை’!

புலனாய்வுப் பத்திரிகை என்றால், குற்றம் சாட்டப்பட்டவனுடைய குற்றங்களை மட்டும் எடுத்துக் காட்டும் ஒரு முனைப் போக்குதான் என்பதாக மட்டும் அமையக் கூடாது. குற்றம் சாட்டுபவன் மட்டும் நியாயவானா? யோக்யமானவனா? சமுதாயத்தில் நாணயமுடையவனா! என்பதையும் மக்களுக்கு எடுத்து விளக்கும் இதழாக இருக்க வேண்டாமா? குற்றம் சாட்டுபவன் என்ன புராண அரிச்சந்திரன் பேரனா? அவனுக்கும், அவனைப் போலவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் காரண - காரியங்களுக்காகவும் வாதாடுகின்ற பத்திரிகைகள் துவக்கப்பட வேண்டுமோ!

‘இன்வெஸ்டிகேட்’ பத்திரிகைகள் செய்யும் துப்புத் துலக்கல் பணிகள் invisible ஆக, எந்த வஞ்சகச் சக்திகளாலும் வெல்ல முடியாததாக இருக்க வேண்டும்! அதுதான் investigate என்பதன் இலக்கணம்!

ஒரு செய்தியை நீதிமன்றம் பயத்துக்காக அஞ்சி, தெரிகிறது, புரிகிறது; நம்பப்படுகிறது; கூறப்படுகிறது என்று உண்மையை மூடி மறைத்தால், செய்த அந்த புலன் விசாரணை மதில்மேல் பூனையாக மாறாதா?

எனவே, புலன் விசாரணைப் பத்திரிகையின் விசாரணை முடிவுகள், குற்றம் சாட்டப்பட்ட, குற்றம் செய்த இருமுனை வாதிகளுக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக Alert ஆக அமைய வேண்டும். அப்போதுதான் அடுத்து ஒருவன் குற்றம் செய்யாமல் பய பக்தியோடும் AWE, அதிர்ச்சியோடும் சமுதாயத்தில் நடமாடுவான். மக்களிடையே ஒரு விழிப்புள்ள நிலை Awareness உருவாகும்.

தற்போது இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரால் பல பத்திரிகைகள் புற்றீசல் போல பறந்து பறந்து பொத்து பொத்தென்று பணம் எனும் புதர் மேலேயே இறக்கைகள் சிதறி வீழ்ந்து அழிகின்றன! இது புலனாய்வுப் பத்திரிகைத் துறைக்கே அவக்கேடு ஆகும்!

‘விகடகவி’

பல்சுவை இதழ்

“வரலாற்றுப் புகழும், வரலாற்று இழுக்கும், இவ்விரண்டும் உணர்ச்சி வசப்பட்டுச் செய்யும் பெரிய நன்மையாலும், கவனமின்மையால் செய்யும் சிறிய தவறினாலும் நிகழ்ந்துவிடும்” என்று விகடகவி என்ற பல்சுவை மாத இதழ், வாசகர்களுக்கு மட்டுமல்ல; பத்திரிகையாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக (Alert), எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்ற ஓர் அக்கறை ஒலியை அடித்துக் கொண்டே திங்கள் தோறும் வெளிவருகிறது.

விகடகவி என்றால் Humourous Verse அதாவது நகைச் சுவைப் பாடல் என்றும்: நகைப்பை நடமாட விடுபவர் Bufoon என்றும், Jester என்றும் கூறுவர்.

ஆனால், கற்றார்களுக்கு வேறுபாடகவும் Change, சிந்தனை இளைப்பால் களைப்புத் தேவைப்படுவோர்க்கு A Mas Querade Dance போன்ற ஒருவகை நாட்டிய நாடகத் தமிழ் இன்பமாகவும், எதிர்வாதமிடுவோர்க்கு Roughness போன்ற கரடு முரடான ரோஜா முள்ளாகவும், இலக்கணப் பகுதி போன்ற சில சிந்தனைகள் Comical லாகவும்; நடிகன் தனுஷ் போன்றவன்கட்கு What is hideous என்ற பயங்கர விமர்சனமாகவும், காரகம் போன்ற செய்திகள் வரலாற்று அழகுணர்வூட்டும் Beauty ஆகவும் ‘எது கட்சி? என்ன கொள்கை? யார் தலைவன்?’என்ற Bewilderment எனும் திணறலை, திகைப்பை மூட்டுவதாகவும்; இன்றைய சமுதாய அரசியல் ஒரு வகை Kind of Hell நரகமாகக் காட்சியளிப்பதை Haughty Person என்ற செருக்குப் பண்போடு விகடகவி பல்சுவை இதழ் Jester ஆக நடமாடுவது பத்திரிகை உலகுக்கு ஒரு புதுமை

பத்திரிகைக்கு ஆசிரியர் ஜே.பால், தலைமை நிர்வாக ஆசிரியர்கள் தோழியர்கள் பா.பிரேமலதா, ஜெ.நிரஞ்சின் ஆவர்! எந்த கட்சி ஏடு இது, என்று கணிக்க முடியாத உருவத்தோடு நடமாடுகிறது.

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நாயகம் சார்லி சாப்ளின் திருஉருவை சின்னமாகப் பெற்றுள்ளதால், மக்கள் சிந்தனைக்கே அந்தப் பத்திரிகைக் கருத்துக்கள் அடையாளங்களாக அணி வகுக்கின்றன!

‘கழக முரசு முருகு’ இதழ்

பெயர்தான் கழக முரசு! ஆனால், அதன் தொண்டு சீரிய இலக்கிய ஆய்வுப் பணியாக, இலக்கிய அறிஞர்கள் இடையே சுற்றுலா வட்ட ஒலியை எழுப்பி வருகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிப் புலமையாளரான கவிஞர் முருகுவண்ணன் இதன் ஆசிரியர்.

கவிஞர், தனது 80 ஆண்டுக் காலம் முத்தமிழ்த் தொண்டில் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இலக்கிய வானியலில் விந்தைகள் பல விளைவித்தக் கூர்த்த மதியினர்; இருமொழி ஊற்றுக் கண்களாகச் சுரப்பவர்; அந்தச் சுரப்பு நீர் விண் நீராகவும்; தண்ணீராகவும், உண்ணீராகவும், வெந்நீராகவும், அமுதம் போன்ற உமிழ் நீராகவும், பன்னீராகவும், சில நேரங்களில் கண்ணீராகவும் இலக்கிய வேட்கைகளில் சுவையூட்டியதுண்டு.

தமிழின் தனிமையை இனிமையோடு நிலைநிறுத்தும் கவிஞர் மட்டுமல்லர்; விண்ணியல், மண்ணியல் ஆய்வுகளை ‘அருட்பா’ சிந்தனையில் நடத்தி அரிய கவிதைகளை வரைந்தவர். திருக்குறட் கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்து, என் போன்ற பசிஞர்களுக்கு ஊட்டுபவர்; ‘கழக முரசு’ அறிஞருலகத்திற்கு மென்னோசை எழுப்பி, இன்னோசை வழங்கி, பண்ணோசையால் மண்மாந்தரை மகிழவைத்து, கவிஞர் தனது எண்பதாவது வாழ்க்கைக் கல்லில் காலடி பதிய வைத்து, தமிழ்ப் பணியாற்றி வரும் பூ மனத் தும்பியாக இலக்கிய தேன் கூடு கட்டி வருபவர்!

‘அல்லயன்ஸ்’

“விவேக போதினி”

திருமயிலை கபாலீச்சுரம் திருக்குளம் எதிரே இலக்கிய முத்துக்களை ஆழ்ந்து; ஆய்ந்து வழங்கி நூறாண்டு காலமாக ‘அல்லயன்ஸ்’ என்ற பெயரில் பதிப்பகமாகக் காட்சி வழங்கி வருகின்றது.

அந்த அறிவுப் பூங்காவை நிறுவிய வித்தகர் திரு. குப்புசாமி ஐயர், பல்வேறு இலக்கிய நூற் எழிற் பூவினங்களின் இதழ் மணங்களை நுகர்ந்தவர். தேசப் பிதா அண்ணல் காந்தியடிகள், தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், ரைட்ஹானரபில் வி.எஸ்.சீநிவாச சாஸ்திரி, இராஜாஜி, நாவலர் சத்தியமூர்த்தி ஐயர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோர் அல்லயன்ஸ் பதிப்பகத்தைப் பாராட்டி மகிழ்ந்துள்ள சம்பவம் பதிப்பக உலகமே அனுபவிக்காத ஓர் அரிய சம்பவமாகும்.

இத்தகைய ஆற்றலும், அனுபவமும் உள்ள திரு. குப்புசாமி ஐயர், ‘விவேகபோதினி’ என்ற தமிழ் இலக்கிய மாதப் பத்திரிகையை நடத்தி தமிழ் உலகுக்கு இலக்கியத் தொண்டு புரிந்துள்ளார். அவர் வகுத்த பாதையில் அவரது பெயரன் திரு. சீநிவாசன் இன்று ஆற்றிவரும் அரிய பணியை எழுத்துலகம் என்றும் மறவாது. வாழ்க, வளர்க, அல்லயன்ஸ் சீநிவாசன் எழுத்துத் துறையின் சேவைத் திறம்!