இதழியல் கலை அன்றும் இன்றும்/செய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!

422103இதழியல் கலை அன்றும் இன்றும் — செய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!என். வி. கலைமணி


23


செய்தியாளர் தவறு செய்தால்
சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!


ந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு சட்டமன்றங்கள் உண்டு. ஒன்று சட்டப் பேரவை. அதை இங்லீஷில் Legislative Assembly என்பர். இது மக்களால் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் நடைபெறுவது. இதற்குச் சட்டப் பேரவை என்று பெயர்.

மற்றொன்று சட்டமன்ற மேலவை. இதன் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய வாக்குகளால் (Votes) தேர்ந்தெடுக்கப்படுபவர்களாவர். இதனை Legislative Council என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

தமிழ்நாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு முன்பு வரை தொடர்ச்சியாகச் சட்டமன்ற மேலவை இருந்து வந்தது. எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் மேலவையைக் கலைத்து விட்டார். இன்று வரை தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வரப்படவில்லை. அதனால், சட்டப் பேரவை மட்டுமே இயங்கி வருகின்றது. பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு பேரவைகளும் இயங்குகின்றன.

இதனைப் போலவே இந்தியாவை ஆட்சி செய்யும் தலைநகரமான புது தில்லியிலும் இரண்டு நாடாளுமன்ற அவைகள் இருக்கின்றன.

ஒன்றுக்கு மக்கள் பேரவை (Lok Sabha) என்றும், மற்றொன்றுக்கு மாநிலங்களவை (Rajya Sabha) என்றும் பெயர். மக்கள் பேரவை உறுப்பினர்கள் மாநிலங்கள்தோறும் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆவர். மக்களவை உறுப்பினருக்குரிய வாக்குகளால் (Votes) தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாவர்.

நாடாளுமன்றங்கள் இரண்டிலும், அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால், நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் செய்திகளைச் செய்தியாளர்கள் சேகரித்து அவரவர் பத்திரிகைகளுக்கு அனுப்புவதுண்டு. அதை இதழ்கள் வெளியிடுவது அதனுடைய மக்கள் தொண்டுகளாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலச் சட்டப்பேரவை, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறைகளையும், எப்படி அமைச்சர் அவைகள்; மத்தியிலும் - மாநிலத்திலும் இயங்க வேண்டும் என்பதையும், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் எவ்வாறு அவைகளை நடத்த வேண்டும் என்பதையும், பேரவைக் கூட்டங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதையும், மன்ற உறுப்பினர்கள் இயங்கும் நிலைகளையும் விவரமாக விளக்குகின்றது. அந்த விளக்கங்களை எல்லாம் செய்தியாளர்கள் நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற, சட்டமன்ற செய்திகளை எல்லாம் கவனக் குறைவு இல்லாமல், தவறு நேராமல் திரட்டிடச் சுலபமாக இருக்கும்.

சட்டப் பேரவை
நடவடிக்கைகள்

சட்டப் பேரவைகள் நடவடிக்கைகள் நேரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை :- கேள்வி நேரம், ஜீரோ நேரம் (zero Hour), பல்வேறு வகைத் தீர்மானங்கள் நேரம், விவாதம், பதில் என்பவை ஆகும்.

சட்டமன்றமானாலும், நாடாளுமன்றமானாலும், கேள்வி நேரங்களில் செய்தியாளர்களின் கவனம் கூர்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளிலும், அவற்றுக்கு அமைச்சர்கள் அளிக்கின்ற விடைகளிலும் பற்பல தகவல்கள் கிடைக்கக் கூடும். அதனால் செய்தியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்.

ஜீரோ நேரம் என்றால் என்ன என்று வாசகர்கள் சிந்திக்கக் கூடும். அரசியல் சட்டத்தில் ஜிரோ நேரம் என்று ஒரு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றம், சட்டமன்றங்களும் கேள்வி நேரங்களை முடித்துக் கொண்ட பின்பு, உறுப்பினர்கள் தங்களது எண்ணத்திலெழும் கருத்துக்களில் எதனைப் பற்றியாவது விவாதிக்க, விளக்கம் கேட்க வேண்டுகோள் விடுக்கலாம். அதனால், இந்த நேரத்தை மன்றங்கள் ஒரு பொது நேரமாக ஏற்றுக் கொள்ளும் மரபாகி விட்டது.

அந்தந்த அவைகளில் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிவார்கள். அவற்றுள் கவன ஈர்ப்பு தீர்மானம் (Calling Attention), ஒத்திவைப்புத் தீர்மானம் (Adjournment Motion), நம்பிக்கை இல்லாத தீர்மானம் (No-confidence Motion), கட்டுப்படுத்தும் தீர்மானம் (Censure Motion) போன்றவைகளும் உண்டு.

சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ கொண்டு வரும் பில்லுக்கு (Bill) மசோதா என்று பெயர். அதை முன்மொழிந்து விளக்குவது அவர்களது கடமைகளாகும்.

அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களின் மசோதாக்கள் மீது விவாதங்களை உறுப்பினர்கள் நடத்துவார்கள். அந்த வாதங்களுக்குரிய பதிலை அமைச்சர்கள் கூறுவார்கள். தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடக்கும். இறுதியாக, தீர்மானங்கள் நிறைவேறி விடும்.

எல்லாவற்றையும், விட வரவு-செலவுத் திட்டங்களை அவையில் நிதியமைச்சர் வைப்பார். அதன்மீது உறுப்பினர்கள் விவாதங்கள் நடக்கும். இந்த நேரத்தில்தான் செய்தியாளர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், பல முக்கியமான பிரச்னைகள், அதாவது வரி விதிப்பு, வரி விலக்குகள் போன்ற பிரச்னைகள் எழும்.

நாடாளுமன்ற, சட்டமன்றச் செய்திகளைச் செய்தியாளர்கள் எழுதும்போது, என்ன நடந்தது, ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்ற முழு விவரங்களைக் கவனத்தில் கொண்டு சட்ட முறைகளையும், நடைமுறைகளையும் கூர்ந்து சிந்தித்து எழுத வேண்டும்.

அவைத் தலைவர் நீக்கியச் செய்திகளை எல்லாம் செய்தியாளர்கள் சேர்த்து எழுதிக் கொண்டு, பத்திரிகையில் வெளியிட்டு விடக்கூடாது.

ஏனென்றால் சட்டப் பேரவையின் உரிமை மீறல் பிரச்னை வந்து விடும். அந்தப் பிரச்னைக்கு பேரவை அவமதிப்பு என்று பெயர்.

உரிமை மீறலுக்கு
ஓர் எடுத்துக்காட்டு

1967-ஆம் ஆண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்கள். எல்லாக் கட்சிகளும் அந்தக் கூட்டணியில் பங்கு பெற்று ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டன.

தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்று பெருந்துறை. அந்தத் தொகுதியில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தொகுதி சென்னிமலைத் தொகுதியா? பெருந்துறை தொகுதியா என்பது நினைவில் சரியாக இல்லை.

ஒரு கட்சி, வேறொருக் கட்சி சின்னத்தில் போட்டியிடுமா என்று கேட்டு விடாதீர்கள். தமிழரசுக் கட்சி வைத்திருந்த சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர், நாம் தமிழர் கட்சி நடத்திய தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் போன்றவர்கள் தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, மக்கள் செல்வாக்குப் பெற்ற உதயசூரியன் சின்னத்திலே 1967-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

சில மாதங்களுக்குப் பிறகு, உதயசூரியனில் நின்று சட்டப் பேரவை உறுப்பினரானோமே என்பதை மறந்து, அண்ணா ஆட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து சோசலிஸ்ட் கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார் - அந்த சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அப்போது “மாலைமணி” என்ற நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘எரியீட்டி’ என்ற ஒரு கட்டுரைப் பகுதியிலே அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த காலம் அது.

சோசலிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் அந்தப் பொதுக் கூட்டத்தில் ஆளும் கட்சியைத் தாக்கிப் பேசிய கருத்தை எதிர்த்து, எரியீட்டிப் பகுதியில் கலைமணி ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரைக்கு ‘உதயசூரியன் ஒளியில் மலம் கூட விளம்பரம் பெறுகிறது’ என்பதைத் தலைப்பாக வெளியிட்டு அந்தக் கட்டுரை ‘மாலை மணி’ நாளேட்டில் வெளியானது.

சட்டமன்ற பிரச்னையை விமர்சனம் செய்து வெளியான கட்டுரை அன்று அது. பொதுக்கூட்டத்தில் அவர் ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசிய சொற்பொழிவின் கருத்து. உதயசூரியன் சின்னத்தில் நின்று அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, ஆளும் கட்சியை மனம் போனவாறு விமர்சனம் செய்வது நன்றியுடைய செயல்தானா? என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை அது.

அந்தப் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், தன்னைப் பற்றி எழுதிய ‘எரியீட்டி’கட்டுரையை சட்டமன்றம் நடக்கும் கூட்டத்திற்கு கொண்டு வந்து காட்டி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்குரிய பணிகளை ஆற்றவிடாமல் தடுக்கும் வடிவத்தில் இப்படி எழுதலாமா என்று கேட்டு, அதன் மீது உரிமை பிரச்னையை எழுப்பி, அக்கட்டுரையை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுமதிக்கும்படி வாதிட்டார்.

சட்டப் பேரவைத் தலைவர் சி.பா. ஆதித்தனாரும், அப்போது உதயசூரியன் சின்னத்திலே நின்று வெற்றி பெற்றவர் என்பதால், அவரும் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பிட அனுமதித்து விட்டார். அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் என்பதால் அவர் அவைத் தலைவர் கருத்துக்கு மறுப்புக் கூறாது மௌனமானார்.

ஒரு பத்திரிகைக் கட்டுரை அல்லது கருத்து, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டால், அந்த உரிமை மீறல் பிரச்னை சட்டப்பேரவையின் உரிமை மீறல் குழுவால், சட்டமன்றம் மூன்று முறை இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் கூடும் கால வரம்புக்குள் அது விசாரிக்கப்பட வேண்டும் என்பது விதி என்று கூறப்பட்டது.

அதனால், அந்த உரிமை மீறல் பிரச்னை அந்த மூன்று முறை கால ஆயுளுக்குள் ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும், அந்தக் குழுவால் அந்தப் பிரச்னை Renewal செய்யப்படவேண்டும். அதாவது அந்தப் பிரச்னை புதுப்பிக்கப்படவேண்டும். அப்போதுதான் அது மீண்டும் விசாராணைக்குரிய ஆயுளைப் பெறும்.

ஆனால், அந்த உரிமை மீறல் பிரச்னையை, சட்டமன்றத் குழு மூன்றாவது முறையிலும் Renewal செய்யாமல் விட்டு விட்டது. அதனால், அந்தக் கட்டுரையாளன், அந்தப் பத்திரிகை உரிமை மீறல் பிரச்னையிலே இருந்து காப்பாற்றப்பட் விட்டதாகக் கேள்வி. அதற்குக் காரணம் யாராக இருக்க முடியும்? முதல் அமைச்சர் கருணைதானே காரணமாக இருக்கும்? எப்படியோ - என்னவோ காரணம். ஆனால் ‘எரியீட்டி’ கட்டுரையாளர் உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகாமல் தப்பித்தார்! அதுதானே முடிவின் முக்கியத்துவம்?

ஏன் இதை இங்கே குறிப்பிட்டேன் என்றால், பத்திரிகையாளன் உரிமை மீறலுக்கு ஆட்படாமல் சட்டமன்ற செய்திகளை எழுத வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே குறிப்பிட்டேன்.

இத்தனைக்கும் சட்டமன்றத்தில் நடந்த பிரச்னையைக் கூட அந்தக் கட்டுரை விமர்சனம் செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை பற்றிய விமர்சனம் அது. அதுவும் அந்தப் பிரச்னை அவருடைய சொந்த எண்ணப் பிரச்னை. அதற்கே அவர் சட்டமன்றத்தில் வாதாடினார் என்றால், உரிமை மீறலைப் பெற்றுவிட்டார் என்றால், சட்டமன்றத்தில் நடைபெற்றப் பிரச்னை என்றால் எவ்வளவு எச்சிரிக்கையோடும் ஜாக்கிரதையோடும் எழுத வேண்டும் ஒரு செய்தியாளர் என்பதை, செய்தி சேகரிப்போர்களுக்கு உணர்த்தவே இந்தச் சம்பவத்தை இங்கே சான்று காட்டினேன், அவ்வளவுதான்.

எனவே, எச்சிரிக்கையோடு, ஒரு செய்தியாளர் சட்டமன்ற விவகாரங்களை எழுதத் தவறிவிட்டால், சட்ட மன்றமே, நீதிமன்றமாக மாறி, தண்டனையும் வழங்கலாமல்லவா? எனவே எச்சரிக்கையோடு செய்தியை வெளியிடுவது நல்லது.