இதழியல் கலை அன்றும் இன்றும்/பொதுக்கூட்டச் செய்தியாளர், உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது

422063இதழியல் கலை அன்றும் இன்றும் — பொதுக்கூட்டச் செய்தியாளர், உரை சுவையில் மயங்கிவிடக் கூடாதுஎன். வி. கலைமணி


24


பொதுக் கூட்டச் செய்தியாளர்;
உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!



த்திரிகைக்குரிய பலவகைச் செய்தி சேகரிப்பாளர்களில் பொதுக் கூட்டத்தில் செய்தி திரட்டுபவரும் ஒருவர். காரணம், இக் காலத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேரூர்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், மாநிலத் தலைநகரத்திலும், ஏன் சிற்றூர்களிலும்கூட நாள்தோறும் தங்களுடையக் கட்சிக் குறிக்கோள்களை விளக்கிக் கூட்டங்கள் நடத்துகின்றன. பொது மக்கள் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் கூடுகின்றார்கள். அவர்களுக்கு ஏற்றக் கருத்துக்கள் அங்கங்கே பேசப்படுகின்றன.

ஒவ்வொரு நகரங்களிலும், பேரூர்களிலும் இலக்கிய வட்டத்துப் பேரறிவாளர்களை அழைத்து, அரசு விடுமுறை நாட்களிலும், விழாக் காலங்களிலும் - இலக்கிய, தமிழார்வக் கூட்டங்கள், கவியரங்குகள் நடைபெறுகின்றன. அவற்றில், அறிஞர்களது பொழிவுரைகளில் சமுதாயத்திற்கும், இலக்கியத் துறைக்கும், ஏன், அரசியலுக்கும் பயன்படக்கூடிய கருத்துக்கள் உரையாற்றப்படுகின்றன. இந்தக் கூட்டங்களது சொற்பொழிவுகளைக் கேட்டுச் சுவைத்திட அறிஞர்கள், கல்விமான்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் திரள்கின்றார்கள்.

சில திருக்கோவில் வளாகங்களில், புராண, இதிகாச, வேத, காலட்சேபங்களும், தேவார, திருவாசக, சைவ, வைணவ சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. மேற்கண்ட எல்லாக் கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும், ஆன்மிக விழாக்களுக்கும் செய்தியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஏனென்றால், அவரவர் மேம்பாட்டுக்குரிய கருத்துக்கள், பொது மக்களுக்குரிய ஊர் வசதிக்கான தேவைகள் அனைத்தும் அங்குப் பேசப்படலாம் அல்லவா? அவை அரசுக்கும் - பொது மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற விருப்பத்தால் பத்திரிகைச் செய்தியாளர்களைத் தக்க மரியாதைகளுடன் கூட்டம் நடத்துவோர் அழைக்கின்றார்கள்.

அந்தக் கூட்டங்களுக்குச் செல்லும் செய்தியாளர், குறிப்பெடுக்கும் நோட்டுப் புத்தகம், சீவப்பட்ட கூர்மையான பென்சில்கள், மை நிரப்பப்பட்ட பேனாக்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டு சென்று, அவர்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள கௌரவ இருக்கைகளில் அமர்ந்து, நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் முடியும் வரை யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இருவகைப்
பேச்சாளர்கள்

பொதுவாக நிகழ்ச்சிக்கு வருவோர் அனைவருமே ஆற்றொழுக்காகப் பேசுபவர்கள் அல்லர்! சிலர் பேசுவதற்குக் குறிப்புடன் மட்டும் வந்து மேடையேறி அதற்கேற்றவாறு உரை முடிச்சுப் போட்டு அழகாகப் பேசுவார்கள். இது குறிப்புப் பேச்சாகும்.

வேறு சிலர், கூட்டத்திலே மேடையேறிப் பழகாததால், தங்களது பேச்சையே தயார் செய்து கொண்டு வந்து பேசி முடிப்பார்கள். இது தயாரிப்பு பேச்சு முறை.

சிறந்த பொழிவாளர்கள், மேடையேறியதும் மழை போல, தென்றல்போல, புயல் போல, பாடிப்பாடி, ஆடியாடி, கோடை இடி போல, ஏற்றப் பாட்டுகளைப் போல, பாட்டுக் கச்சேரிப் பாடகரின் ஆரோக, அவரோகண ஏற்றத் தாழ்வோசைகளோடுப் பேசுவார்கள். அதாவது, பேச்சு மேடையேறியதும் என்ன நோக்கத்தில் அவர்கள் பேசிட கருத்துக்களை ஏந்தி வந்தார்களோ, அந்த எண்ணங்களை, உரைகளைப் பேசுவார்கள். இதற்கு Extemmpore Utterances என்று பெயர்.

சில அரசியல்வாதிகள் பேச்சுகள் உணர்வூட்டிம் தீப்பொறிப் பேச்சுக்களாக Dynamic அமையும். அதாவது, இயற்கையாற்றல் விளைவுகளை உருவாக்கும் பேச்சாக இருக்கும். சிலர் பேச்சுகள் Comedy எனும் கோமாளித்தனங்களைத் தோற்றுவிக்கும். தங்கு தடையின்றி முழுக் கருத்தையும் தென்றல் நடையில் தெரிவிக்கும் உரையாகவும் சிலர் உரைகள் இருக்கும். வேறு சிலர் பேச்சு Speak Volumes for அதாவது தேவைக்குரிய சான்றுகளை வழங்குவதாக அமையும். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது உரைகள் speak without book குறிப்பில்லாமல் நினைவினின்றே புரண்டோடி வுரும் விவரங்களாக விளங்கும். சிலர் பேச்சுகள் Speak well for அதாவது பண்புகளைச் சுட்டிக் காட்டும் சூதுவாது சூழாத வெளிப்படை உரைகளாகவும் இருக்கும். மட்டு மதிப்புடன் கம்பீரமாக Speak One mind பேசுபவராகவும் சிலரிருப்பர். குறிப்பிட்டுக் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய Nothing to speak of என்ற பேச்சாளராகவும் போரடிப்பார்கள் சிலர். பேச்சுத் தொடர்பே இல்லாமல் கேட்போர்முக முறிவுகளை உருவாக்கும் Roughly Speaker பேச்சைச் சிலர் பேசுவர். மற்றும் சிலர் குத்து மதிப்பாக Speaking Acquaintance பேசுபவராகவும் இருப்பார்கள்.

எனவே, மேடைகளிலே உரையாற்ற வருபவர்கள் பலவிதமான கருத்துடையவர்களாக இருப்பதால், அவர்களிடம் செய்திச் சேகரிக்கச் செல்பவர் ‘இவர் இப்படி, அவர் அப்படி’ என்று அடையாளம் காண முடியாதவராகவும் இருக்கலாம் இல்லையா?

அதனால், கூட்டங்களில் குறிப்பெடுக்கச் செல்லும் செய்தியாளர், சற்றுக் கவனமாக, விழிப்பாக, எச்சரிக்கையோடு கவனித்து எடுக்க வேண்டிய குறிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு, சேர்க்க வேண்டியதை மட்டும் செய்தி வடிவில் சேர்த்துக் கொள்ளக் பழகிக் கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் திரண்டுள்ள மக்கள் அளவு எவ்வளவு பேர் இருப்பர்; கூட்டத்தின் பேச்சுக்களை மக்கள் எப்படிக் கேட்டார்கள் என்பதையும் கணக்கிடும் சிந்தனை உடையவரே கூட்டச் செய்தியாளர்.

சில தலைவர்கள் உரையாடும்போது, அவர்களது சொல் மாறாமல் அப்படியே எடுத்தாக வேண்டிய நிலை உண்டாகும். சிலர் பேச்சுக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு தேவைக்கேற்ப அதைச் செய்தியாக எழுதத் தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கு ஒரு சம்பவம் இதோ :-

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் அரசியல் கூட்டங்கள் அங்குள்ள கூவம் ஆற்றங்கரை ஓரத்தில், சலவையாளர் துறையில்தான் நடக்கும். நான் கூறுவது 1960-ஆம் ஆண்டுக் காலத்திற்கு முன்பு ஆகும்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் முன் வாரம் பேசிக் சென்றதற்குப் பிறகு, அறிஞர் அண்ணா அவர்கள் அதே இடத்தில் மறுவாரம் உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கூட்டத்தில் ஒருவர் ஒரு சீட்டை அறிஞர் அண்ணாவிட்ம் சேர்ப்பித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் அதற்கு அந்தப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய பதிலுரை இது :

“சிவஞானம் எனது நண்பர்! அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுச் சிறையிலே சிப்பி ஏந்தியவர்தான். அதை நான் மறுக்கவில்லை. பெருமையோடு அவரது தியாக உணர்வை மதிக்கிறேன்; பாராட்டுகிறேன்; போற்றுகிறேன். ஆனால், நான் ஜஸ்டிஸ்கட்சிக்காரன், தந்தை பெரியாருடன் பணியாற்றியவன் என்பதற்காக என்னை இந்தியா சுதந்தரம் பெற்ற விடுதலையை எதிர்த்த துரோகி என்கிறார். என்னை வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி என்கிறார். இது எந்த வகையிலே நியாயம்?

நான் வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கிதான்; அதற்காக வெட்கப்படவில்லை. உண்மையைப் பெருமையோடு ஒப்புக் கொள்கிறேன். ஆனால், காலங்கடந்து இதைச் சிவஞானம் கூறுகிறார். தந்தை பெரியார் இந்தியா விடுதலை பெற்ற நாளைத் துக்க நாளாக அறிக்கை விட்டார். அவர் தலைமையை நான் ஏற்றிருந்தபோதே ஆகஸ்ட் 15ம் நாள், நமக்கும் விடுதலை நாள்தான் என்று தந்தை பெரியாரை எதிர்த்து அறிக்கை விட்டவன் நான். எனது கருத்தை உண்மையான காந்தி பக்தர், தென்னாட்டு காந்தி என்று காங்கிரஸ்காரர்களால் பாராட்டப் பட்ட ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் பாராட்டினார்கள். அப்போது நினைத்திருக்க வேண்டாமா? அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி என்று?.

‘காண்டீபம், பேரிகை’ பத்திரிகை நடத்தும் காங்கிரஸ் காரரான எஸ்.எஸ். மாரிசாமி, ‘அமெரிக்கா’ என்றொரு புத்தகம் எழுதி, அதற்கு அரசு பரிசளிப்பு விழா நடத்திட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் தலைவர் பக்கா காங்கிரஸ்காரரான கல்வி அமைச்சர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார். அவர் அமைத்த குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராக அவர் நியமித்தார். அப்போது சொக்கா காங்கிரஸ்காரர்கள் நினைத்திருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று!

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை, காங்கிரஸ்காரர். ஒருவர் எழுதிய புத்தகத்தை ஆய்வு செய்யும் குழுவில் உறுப்பினராகப் போடலாமா என்று சில காங்கிரஸ்காரர்கள் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள்.

அவிநாசியார் அதற்குப் பதிலளித்தபோது, ‘அண்ணாதுரை எந்தக் கட்சியிலே இருந்தாலும் அவர் அழகு தமிழ் பேச்சாளர்; அடுக்கு மொழி பேசும் தமிழர்; அழகானக் கட்டுரைகளைச் சுவையோடு எழுதி மக்களால் விரும்பப்படும் எழுத்தாளர். அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழில் மறுமலர்ச்சி சிந்தனையைப் புகுத்தியவர் என்பதால், எஸ்.எஸ். மாரிசாமி எழுதிய தமிழ்நடையை ஆராயும் குழுவில் அண்ணாதுரையை உறுப்பினராக நியமித்தேன்” என்றார்.

எந்தக் கட்சியிலே இருந்தாலும், அண்ணாதுரை ஒரு தமிழர் என்றாரே அவினாசிலிங்கம், அப்போது அவர் எண்ணியிருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று?

காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றபோது, ‘எங்கே சென்னையில் இந்து-முஸ்லீம் கலவரம் வந்துவிடுமோ’ என்று அச்சப்பட்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள், என்னை அகில இந்திய வானொலியிலே அழைத்து அமைதி காக்கப் பேச வைத்தார்களே, அப்போது எண்ணியிருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று?

இந்தியா விடுதலைப் பெற்றவுடன் முதல் மத்திய அமைச்சரவையிலே நிதி மந்திரியாக இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் யார்? காங்கிரஸ் போராட்டங்களிலே கலந்து கொண்டு சிறை சென்று மீண்டு தியாகத் தழும்புகளைப் பெற்றவரா? ஜஸ்டிஸ் கட்சியோடு சம்பந்தப்பட்ட சர்.ஆர்.கே.எஸ். வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி அல்லவா?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதும் குழுவுக்கு தலைவர் யார்? காங்கிரஸ் கட்சியிலே வட மண்டலத் தலைவரா? தென் மண்டலத் தலைவரா? அவர்க்கும் காங்கிரசுக்கும் என்ன ஒட்டு உறவு?

இந்த அண்ணாதுரையாகிலும் வெள்ளைக்காரன் பூட்சை மட்டும் நக்கினான்! ஆனால், பூட்சையும், கழற்றிவிட்டு பாதங்களையே நக்கியவர்கள் யார்? காங்கிரஸ் தலைவர்கள் தான் என்பதைச் சிப்பியேந்திய சிவஞானம் மறந்து விட்டாரா? அறிவுப் பஞ்சம் உங்களுக்கு வரும்போதெல்லாம் உதவுபவர்கள் சர்.ஏ.இராமசாமி முதலியாரைப் போன்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தான் என்பதை மறந்து விட்டரா நண்பர் சிவஞானம்?

அண்ணா அவர்களது இந்தப் பேச்சை, அப்போதிருந்த பத்திரிகைச் செய்தியாளர்கள் எல்லாம் வந்திருந்து குறிப்பு எடுத்தார்கள். பொழுது விடிந்து எல்லா பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்தால் ஓர் இதழிலும் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைச் சுருக்கம் அறவே ஒரு பாரா கூட வெளியிடப்படவில்லை.

என்ன காரணம் என்று அந்தப் பத்திரிகைச் செய்தியாளர்கள் அனைவரையும் விசாரித்தால், அந்தப் பேச்சுக்களை வெளியிட ‘முரசொலி, தனியரசு, மாலை மணி, நம்நாடு போன்ற நாளேடுகள் இருக்கின்றனவே என்று பத்திரிகை உரிமையாளர்கள் கூறி விட்டார்கள் என்று அந்தந்த இதழ்களது செய்தியாளர்கள் கூறினார்கள்.

எனவே, அண்ணா அவர்களது அந்தப் பேச்சை ‘முரசொலி’, தனியரசு, மாலை மணி, நம்நாடு போன்ற கட்சி ஏடுகள் மட்டுமே அன்று வெளியிட்டனவே தவிர, பொது மக்கள் நலம் நாடும் எந்த ஏடுகளும் வெளியிடவில்லை. அந்தக் காலம் எப்படிப்பட்ட நேரம் தெரியுமா? Hindu போன்ற நாளேடுகள் எல்லாம் Annadurai also spoken என்று எழுதப்பட்டக் காலமாகும்.

பொதுக்கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்கச் செல்கின்ற செய்தியாளர்கள், கூட்டங்கள் நடைபெறும் காரணங்களைச் சிந்தித்தும், பேசுபவர்கள் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் செய்திகளைச் சேகரிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட அண்ணா பேச்சு உணர்த்துக்கின்றது அல்லவா? கட்சி பத்திரிகைச் செய்தியாளர்கள் அண்ணா பேச்சை எடுத்து வெளியிட்டார்கள். அதுதானே சரி!

அந்தப் பொதுக் கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சுக்களைச் செய்தியாளர்கள் சரியாகக் குறிப்பெடுக்காமல் விட்டுவிட்டார்கள். காரணம் என்ன என்று கேட்டதற்கு, அறிஞர் அண்ணா அவர்களது பேச்சில் எதை எழுதுவது, எதை விடுவது என்று ஏற்பட்ட குழப்ப மயக்கத்தால், பேச்சை சரியாக எடுக்க முடியாமல் போய் விட்டது என்று கூறினார்கள்!

எனவே, பொதுக் கூட்டத்திற்குச் செல்லும் செய்தியாளர்கள், புகழ் பெற்ற பேச்சாளர்களது பேச்சுப் போதையில் மயக்கமடைந்து விடக் கூடாது.