இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/இலட்சிய இந்தியப் பெண்மை

10. இலட்சிய இந்தியப் பெண்மை


பெண்கல்வி நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது என்று அறிவுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

இவரைக் குருவாக ஏற்று, இந்தியாவுக்கு வந்து தொண்டாற்ற விழைந்த மார்கரெட் நோபிள் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு, சகோதரி நிவேதிதா என்று பெயரைச் சூட்டி, இந்தியப் பெண்களின் கல்வித் தொண்டுக்கு உரித்தாக்கினார்.

‘இந்நாட்டில் எல்லா உயிர்களிடத்தும் மேலாம் ஆன்மிகம் இயங்குகிறது என்ற கருத்து நிலவிய போதும்’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எத்துணை வேற்றுமை? ஆண்கள் பெண்களை வெறும் இயந்திரங்களாக, உழைக்கும் உயிர்களாக மாற்றியிருக்கின்றனர். வேத கால உணர்வுகள் இழிந்து (பிராம்மண) குருபீடங்கள், ஏனைய சாதியார் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதித்த போது பெண்களின் உரிமைகளையும் நசுக்கி விட்டது என்று அவர் மனம் வருந்திக் கூறி இருக்கிறார்.

பையன்களுக்குக் கல்வி, பிரும்மசரியம் என்ற இரண்டும் இணைக்கப்பட்டு அவசியமாக்கப்பட்டது போல், பெண்ணுக்கும் கல்வியும் பிரும்மசரிய ஒழுங்கும் உரிமை யாக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தப் பிரச்சினைகளையும் தாங்களே தீர்த்துக் கொள்ளும் மன உறுதியும் துணிவும் பெறவேண்டும். வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கலையும் அவள் சமாளிக்க இயலாதவளாக, தொண்டடிமை நிலைக்கே அவளை பழக்கி, கண்ணிர் விட்டுப் புலம்பும் நிலையிலேயே வைத்திருப்பது கொடுமை. பெண்கல்வியை மையமாக்கியே சமயங்கள் இயங்க வேண்டும். மற்ற விதிகளெல்லாம் இரண்டாம் பட்சமே என்றெல்லாம் பலவாறாகப் பெண்களின் நிலையை உயர்த்தியாக வேண்டும் என்றும், இந்த உரிமைகள், மனு தர்மத்தில் உள்ளனவென்றும் மேற்கோள்கள் காட்டுகிறார்.

‘குருபீடங்கள் மனுவின் பெயரைச் சொல்லியே, பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் அதே தருமங்களின் குரல்வளைகளை நெறித்திருப்பதையும் அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை. ‘பெண்கல்வி’ என்பதே ஒரு குழப்பமான கருத்தையே மையமாக்குகிறது எனலாம். “பெண்ணுக்குக் கல்வி, மறுக்கப் பட்டிருந்தது; கன்னியாக இருந்து. வேத நூல்களைப் படித்துப் பயின்று, மேலாம் அறிவாளருடனும், ஞானிகளுடனும் விவாதிப்பதற்கு உரிமை இருந்தது என்பதையும், அதை மீண்டும் பெற வேண்டும் என்பதையும் உணர்ந்திருக்கவில்லை. இவள் தன்னைப் பற்றிய சிந்தனையே இல்லாமற் வெறும் உடலுழைப்புப் பாவையாக, தொண்டடிமையாக மாறிப்போனாள்; இவளை உயர்த்தியாக வேண்டும்...” என்று உறுதியாக உரைக்கிறார். இது புதிய பார்வை; புதிய கோணம்தான்.

ஆனால், சுவாமி விவேகானந்தர் அடுத்துத் தொடரும் வரிகள் குழப்பத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

‘இந்தியப் பெண்கள் சீதையின் அடிச்சுவட்டைப் பின்பற்ற வேண்டும். சீதை ஒப்பற்ற பெண்ணரசி, இந்தியப் பெண்மையின் இலட்சிய வடிவம். இவள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் தூய ஒழுக்கத்துக்கும், எத்தனை துன்பங்கள் மேலிடினும் அசையாமல் பொறுக்கும் சக்திக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். இந்த இலட்சியம், நமது இந்தியப் பெண்ணின மரபுகளில் - வழிவழியாக நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை எவரேனும் மாற்ற முயன்றால், நமது பெண் குலத்திலிருந்து சீதையின் இலட்சியத்தை அகற்றிவிட்டால், அது முன்னேற்றமில்லை. பெருந்தோல்வியே ஆகும்’ என்று கருத்துரைக்கிறார்.

ஆக பெண்ணுக்கு, கற்பு, சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளே கல்வியின் ஆதாரங்களாகின்றன. கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான நிலையில் வைக்கப்பட்ட தருமம்தான். ஆனால், அந்த நிலை நடைமுறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. மாறாக, இராமனின் வனவாசத் தனிமையில் அவன் தூய்மை குறித்த கேள்வியே எழவில்லை. தன் மனைவி, ஏற்கெனவே கற்பின் தூய்மையை அக்கினியில் புகுந்து நிரூபித்தவள் என்ற உண்மைகளுக்கப்பால், தான் நாடாளும் மன்னன் என்ற ஏகாதிபத்திய நெறியை முதன்மையாக்கி, அவளைக் கானகத்தில் விடச் செய்கிறான்.

இந்த மரபைப் பின்பற்றித்தான் ஆண் ஆதிக்கம் இன்றும் தன் வலிமையை மெய்ப்பித்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கல்வி என்பது அவளை இன்னமும் செல்லாக் காசாக, அதே தொண்டடிமை நிலையில்தான் வைத்திருக்கிறது, எனவே, விடுதலைக்கு முன் பேசப்பட்ட பெண் கல்வி, தேசியம் என்ற வகையில் பெண்ணுக்குச் சம உரிமை என்று காட்டப்படுவதற்காகத் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டதுதான்.

சகோதரி நிவேதிதா, பெண்கல்விக்குத் தொண்டாற்றினார் என்பதைவிட அக்காலத்து வங்க இளைஞர்கள் அனைவருக்கும் தேசிய எழுச்சியைத் தோற்றுவித்தார்; அதில் பெண்ணுரிமை உட்பட்டது என்பதே சரியாகும். இவர், பிரும்மசாரிணியாகத் திகழ்ந்தார். வெள்ளை இனத்தவராக இருந்ததால், மக்கள் இவரை ஏற்றுக் கொண்டனர் என்பது வெளிப்படை. இவர், தீவிரப் புரட்சிக்கான வித்துக்களை இளைஞரிடையே பரப்பினார். ‘தேசியக் கொடி’ என்ற ஒன்றுக்கு முதன் முறையாகத் திட்டமிட்டார். வெடிகுண்டு ஆயுதப்பயிற்சி போன்ற எழுச்சிகளுக்கும் கூட இவர் ஊக்கமளித்திருந்தார். அமரகவி பாரதிக்கு தேசியம், பெண் உரிமை, சமத்துவம் என்ற கணற்பொறிகளை இதயத்தில் தோற்றுவித்தவர் இப்பெருமாட்டி இவள் பிற்காலத்தில் தம்மை, வெறும் சகோதரி என்ற குறிப்பிட்டுக் கொண்டாரே ஒழிய, ‘துறவற நெறியைச் சேர்ந்தவர்’ என்று சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனெனில் துறவற ஒழுங்கில் தீவிர வாதம் முரண்பாடாகி விடும்.

எனவே விடுதலைக்கு முந்தைய பெண்கல்வியில், அவளது தனித்த ஆளுமை ஆற்றல் குறிப்பாக மையப் படுத்தப்படவில்லை. தேசியம் நமது பெண்ணரசிகள் - சீதை, சாவித்திரி, நளாயினி... என்ற கற்பரசி மரபுகள் தேசிய சிந்தனைக்குத் தேவைகளாக இருந்தன. மேலை நாட்டிலே, கற்புமரபு இல்லை. அங்கு தியாகத்துக்கு முதலிடம் இல்லை. போகத்துக்கே முதலிடம். எனவே, தேசிய உணர்வைத் தோற்றுவிக்க, பெண் முன்னேற்றம், கற்பரசிகளின் பெருமைகளிலேயே நிலைத்திருக்க வேண்டி இருந்தது.

‘ஆண், குடும்பத்துக்கு வெளியே சென்று பொரு ளீட்டும் பொறுப்பில் உள்ளவன். எனவே அவனுக்கு, அதற்குகந்த தொழிற்கல்வி, பிறமொழிப்பயிற்சி அனைத்தும் தேவை. பெண் குடும்பத்தில் இருப்பவள். அவளுக்கு எளிமை, சிக்கனம் என்ற பண்புகளுடன் குடும்பத்தைச் செவ்வனே நடாத்திச் செல்லவும், குழந்தைகளை நன்கு வளர்ப்பதற்குமான கல்விப்பயிற்சி போதும். தாய்மொழிக் கல்வியே உகந்தது’ என்று காந்தியடிகள் கருத்துரைக்கிறார். எழுத்தறியாமை என்ற சாபக்கேட்டிலிருந்து வெளிவந்த பின்னரே, தேசியப் போராட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பங்காற்ற முடியும் என்ற வாதத்தைக் கூட அவர் ஏற்றிருக்கவில்லை. பெண்களிடம் இயல்பாக அமைந்துள்ள பொறுமை, உறுதி, தியாகம் ஆகியவையே தேசியப் போராட்டத்துக்கு உகந்த சிறப்பான பங்களிப்பைச் செய்யப் போதுமானது என்று கருத்துரைக்கிறார்.

இத்தகைய ஒரு முடிவை அவர் எப்படிக் காண முடிந்தது? அவர்தம் வாழ்வையே சோதனையாக்கியவர். அந்தச் சோதனையில் தம் மனைவி கஸ்தூரிபாவையும், தம் மக்களையும் கூட உட்படுத்தினார் எனலாம். தந்தைநாயகச் சமுதாயத்தில் குடும்பத் தலைவன் நாயகன்; அரசன். மனைவியும் குழந்தைகளும் அவன் ஆணையில் இயங்கும் பிரஜைகள்... அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்கத் தாய்க்கும் உரிமை இல்லை என்பதே உண்மை.

இனி, அன்னை கஸ்தூரிபாவின் வாழ்க்கையைச் சற்று கூர்ந்து, எந்தவிதமான சார்தலும் இன்றிப் பார்க்கலாம். கஸ்தூரிபாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் காந்தியடிகளின் மொழிகளிலேயே நமக்குத் தெரிகின்றன. எனவே இந்த உண்மைகள் நிச்சயமாக உண்மைகளே; திரிபுகள் இல்லை.

பதின்மூன்று வயதான மோகன்தாஸ் காந்திக்கு, அதே வயதுடைய கஸ்தூரிபாயைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்கள். போர்பந்தரில் செல்வந்தரான வணிகர், கோகுல்தாஸ்மகன்ஜி, கஸ்தூரியின் தந்தையாவார். மோகனுக்கு நிச்சயம் செய்த முதல் இரண்டு பெண்களும், திருமணம் என்று பேசுமுன்பு இறந்துவிட்டார்கள். கஸ்தூரி மூன்றாவதாக நிச்சயம் செய்யப்பட்டவள். ஒரே தெருவில் சிறு குழந்தையாக இருந்த நாட்களிலேயே இருவரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்திருக்கிறார்கள். மோகனின் தாய், அடிக்கடி தன் மருமகளாக வரப்போகும் கஸ்தூரியின் வீட்டுக்கு அவனையும் அழைத்துச் சென்றிருக்கிறாள்.

திருமணம் என்று நிச்சயம் செய்த போது மோகன், அந்த வயதில் படிக்கின்ற நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று தந்தையிடம் தெரிவித்ததுண்டு. 

‘இப்போது நீ எங்கள் சொற்படி நடந்துவிடு. பிற்காலத்தில், நீ பெரியவனான பிறகு, உன் குழந்தைகளுக்கு உன் விருப்பப்படி செய் என்றாராம் தந்தை காபாகாந்தி,

அந்த வயதில், அந்த சூழ்நிலையில் இளமைத் திருமணம் சரியல்ல என்று அவருக்குக் கருத்தெழ நியாயம் இல்லை என்றே சொல்லலாம். திருமணம் நிச்சயித்து விட்டார்கள். இவர்கள் ராஜ்கோட்டில் இருந்து போர்பந்தருக்குச் செல்ல வேண்டும். தந்தைக்கு அரசு அதிகார வேலையாதலால் அதிகநாள் விடுப்பெடுக்க முடியாது. அக்காலத்தில் ராஜ் கோட்டிலிருந்து நூற்றிருபது மைல் பயணத்துக்கு மாட்டு வண்டியில் ஐந்து நாட்களாகும். குடும்பத்தினர் முன்பே சென்றுவிட்டார்கள். மோகனின் தந்தை பல வண்டிகளில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கடைசியாகத் திருமண வீட்டுக்குக் கொண்டு சென்ற வண்டி குடை சாய்ந்தது. அவர் காயங்களில் போட்டுக் கொண்ட கட்டுடன், திருமணநாளன்று சென்று சேர்ந்தார்.

அக்காலத்தில் சிக்கனத்தைக் கருதி, மூன்று நான்கு திருமணங்களை ஒன்றாகச் சேர்த்து நடத்துவது வழக்கம். அப்போது மூன்று திருமணங்கள் ஒன்றாக நடந்தன.

மணமகளையும், மணமகனையும் பொன்னாலும் பட்டாலும் அலங்கரிப்பது வழக்கம். ஆனால் மோகனோ கழுத்தில் தங்கத்தாலான அணிகளைப் போட்டுக் கொள்ள மறுத்தார். அப்போது உடல்நலம் குன்றிய காபாகாந்தி பின்னர் தேறவேயில்லை.

பிற்காலத்தில் காந்தியடிகள், இளமைத் திருமணம் கூடாது என்று எழுதிய நாட்களில், தங்கள் விருப்ப மின்றியே, இரு குழந்தைகள் வாழ்க்கையென்னும் பெருங் கடலில் பிணிப்புற்று விடப்பட்டதாகக் கருத்துரைக்கிறார்.

சாதாரணமாக, வேதகாலத் திருமணங்களிலும், வயதுக்கு வந்த பின்னரே பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. பூப்படைவதற்கு முன் திருமணம் செய்தாலும், திருமணம் பொருள் பொதிந்ததாக நிலைபெறும் சடங்குக்குப் பெண் பூப்படையும் வரையிலும் காத்திருப்பார்கள். முன்பே பூப்படைந்த பெண்ணானாலும், அன்றிரவே அவர்கள் கூடி உறவாட விடுவதில்லை. வேத காலச் சடங்குகள் திருமணம் நடந்த பிறகும், விரத நியமங்கள் காத்த பின்னரே, அவர்களை உடலுறவு கொள்ள அனுமதித்திருக்கின்றன.

ஆனால் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றில், பதின் மூன்று வயதுப் பையனையும், பதின் மூன்று வயதுப் பெண்ணையும் முதலிரவு என்று சொல்லிக் கொடுத்துத் தனியே விடப்பட்டதாக வருகிறது. இது சீரணிக்கவே கடினமாக இருக்கிறது.

தந்தையிடம் தமக்கு அப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்னதாகக் குறிப்பிட்டாலும், திருமணம் என்பது தனக்கு ஒரு பெரிய மதிப்பையும், குடும்பத்தில் பெருமையையும் கொண்டுவரும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்ததாகவே தெரிகிறது.

திருமண வாழ்க்கை பற்றி, குஜராத்தியில் எழுதப்பட்ட கையேடு ஒன்றைத் தாம் படித்தாகவும், அதில் குறிப்பிட்டிருந்தபடி இலட்சிய கணவன் - மனைவியாக வாழத் தாம் ஆசை கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலட்சியக் கணவனாக அவர் இருப்பார். ஆனால் இலட்சிய மனைவியாக அவளை எப்படி ஆக்குவது?

ஒருவருக்கொருவர் கற்புமாறாத அன்பு செலுத்தி நேசிக்க வேண்டும். அவளை இலட்சிய மனைவியாக்க வேண்டும் என்ற தீவிரம், இந்த இளங்கணவனை, மனைவி மீது சந்தேகப்படுபவனாக, அவளிடம் பொறாமை கொள்பவனாக, அவள்மீது அதிகாரம் செலுத்துபவனாகச் செய்தது. அவள் எங்கே செல்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்றெல்லாம் கண்காணிக்கத் தலைப்படுகிறான். அந்தப் பேதையோ, இவை ஒன்றையும் அறியாதவளாக எப்போதும் போல் வெளியே சென்றாள்; வந்தாள்; உறவினருடன் பேசிச் சிரித்து மகிழ்ந்தாள்.

‘பெற்றோர் வீட்டுக்கோ, கோயிலுக்கோ செல்வதற்கும் அவரிடம் அனுமதிபெற வேண்டுமா? இதற்கெல்லாம் தடை போடுவதை அவளால் எப்படி ஏற்க முடியும்? எனவே அவனுடைய கட்டுப்பாடுகளை அவள் சிறிதும் பொருட் படுத்தவில்லை.

கணவன் என்ற அதிகாரத்தைச் செலுத்தி, அவள் பணிய வேண்டும் என்று ‘கடமை’யை அறிவுறுத்தியபோது, அவளால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவள் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு அப்பால் சென்றாள்.

பகல் நேரங்களில் இவர்கள் தனியே சந்தித்துப் பேச முடியாது. இளந்தம்பதியர் பெரியோர் முன்னிலையில் அவ்வாறு பேசிப்பழக முடியாது. ஆனால் இரவில் மோகன் படிக்கச் சொல்வதாகக் கூறிவிட்டு, மனைவியைத் திருத்த முற்பட்டான். அவளைக் கணவனின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தொடங்க, சண்டையும் கண்ணீருமாக முடிந்துவிடும். அதன் பயனாக ஒருவருக் கொருவர் பலநாட்கள் பேசாமல் இருப்பார்கள். ஆனால் இம்மாதிரியான பிணக்குகளில் அவள்தான் பிடிவாதமாக நின்றாள். அவளுக்கு மன உறுதி அதிகம். அவனால் பணிய வைக்க முடியவில்லை.

இது போகட்டும்... கணவன் உயர்ந்தவன் என்பதை மீண்டும் அறிவுறுத்த அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க இந்தக் கணவன் முற்பட்டான். ஆனால் அவளுக்குப் படிப்பில் விருப்பமே இல்லை. இத்துடன் மோகனுக்கு மனைவியின் மீதுள்ள உடல்சார்ந்த மோகம், வேறு சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் இருந்தது. பகலில் பள்ளியில் இருந்த நேரத்திலெல்லாம், இரவின் தனிமையும் மனைவியின் உறவுமே இவன் எண்ணங்களில் தோன்றி எரித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாட்களில் இந்த அலைக்கழிப்பு, தனக்கு அகால மரணத்தைக் கொண்டு வந்து விடுமோ என்று கூட அவனை அச்சுறுத்தியது. அந்தந்த நேரத்துக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற ஒழுக்க உணர்வு இத்துன்பத்திலிருந்து அவனைக் காப்பாற்றியது. மூன்றாண்டு காலம் இந்தப் பிள்ளைப் பருவ இல்லறம் கழித்து பதினாறாவது வயதில் கஸ்தூரி கருவுற்றாள். அப்போதும் மோகனின் வேட்கை குறைந்து விட வில்லை. உடல் நோயால் துன்புற்ற தந்தைக்கு இரவு கால் பிடித்துத் தொண்டு செய்யும் கடமை இருந்தது. அந்தப் பணியைச் செய்யும் போதெல்லாம், எப்போது முடிந்து படுக்கையறை செல்லலாம் என்ற நினைப்பே மேலோங்கியது.

அன்று சிறிய தந்தை ஊரிலிருந்து நோய் வாய்ப் பட்டிருந்த தமையனைப் பார்க்க வந்திருந்தார். மோகனிடம் அவனைப் படுக்கைக்குச் செல்லச் சொல்லி அந்தப் பணியைத் தாமே செய்ய அமர்ந்தார்.

அப்போது கஸ்தூரி உறங்கிப் போயிருந்தார், கர்ப்பிணியான அவளைப் பூப்போல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவு அவனிடம் இல்லாமலில்லை. என்றாலும் மனம், தடுக்க வேண்டிய மோக வெறியில் கிளர்ந்திருந்தது. அவளை உறக்கம் கலைய எழுப்பினான். அப்போது அறைக் கதவு இடிபட்டது. தந்தை இறந்த செய்தி அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதை வாழ்க்கையில், தம்மைக் கூசிக் குறுகச் செய்த சம்பவமாக காந்தியடிகள் விவரித்துள்ளார். இளம்பருவத் திருமணத்தின் கேடுகளை அவர் இச்சம்பவத்தின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

அந்தக் குழந்தை முழுதாகப் பிறந்து உயிர்தரிக்க வில்லை. அது காலத்தினால் விளைந்த பிண்டம் என்று அவர் கருதினார். 

இங்கே கஸ்தூரியின் ‘மனஉறுதி’ கூர்ந்து கவனிப்பதற்குரியதாகும். கணவரின் அதிகாரத்துக்குக் கட்டுப்படாமல் முரண்டிய அவள் இயல்பு உடல் சார்ந்த உணர்வுகளின் தாகத்துக்கு எதிர்ப்பாக இல்லை. அவள் மனஉறுதி, கணவரின் ஆக்கிரமிப்பில் தகர்க்கப் படுவதைத் தவிர்க்கக் கூடியதாக இல்லை. ஒரு கணவன் உடல்சார்ந்த உணர்வுகளில் மனைவியை முழுதுமாக அடிமை நிலையில் வைத்திருக்கிறான் என்பது உண்மையே.

காந்தி தம் முப்பத்திரண்டாவது வயதில், தம் குடும்பத்தை இனியும் பெருக்கிக் கொள்ளக்கூடாது; சமூகப் பொறுப்புக்களை ஏற்பதற்கு அது பெருந்தடையாக இருக்கும் என்று கருதி பிரும்மசரிய விரதம் ஏற்க முடிவு செய்தார். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தபோதும், கஸ்தூரிபா பணிந்து போகிறார். பாரம்பரிய மரபுகள், இந்தப் பத்தினியை எழுதப் படிக்க வேண்டாம் என்று உணர்த்துகிறது. அந்த வகையில் அவர் கணவர் சொல்லை முக்கிய வாக்காக ஏற்று அவர் விருப்பத்தை நிறைவேற்ற முயலவில்லை, ஆனாலும் கணவனின் காரியங்கள் எதையும் எதிர்க்காமலே ஏற்கிறார்.

குடும்பவாழ்க்கை, சமூகவாழ்க்கை, அரசியல் போராட்டம் எல்லாவற்றையும் சோதனைக் களமாக்கியவர் காந்தியடிகள். கஸ்தூரிபா கணவனே தெய்வம் என்ற பாரம்பரிய பண்பாட்டுக்குத் தலைவனங்காமல் கேள்வி கேட்கக் கூடியவளாக இருந்திருந்தால் தம் வாழ்வின் சோதனைகளில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்திருக்க முடியுமா என்பது ஐயமே.

என்றாலும், கஸ்தூரிபா பண்பட்டுச் சட்டத்துக்குள் தம் குரலை எழுப்பப் போராடிய சந்தர்ப்பங்கள் வந்திராமல் இல்லை. தம் மனைவியிடம் வைத்திருந்த ‘அன்பு’ அவரைக் குரூரமாகவே பாதித்திருந்ததாக காந்தியடிகளே தெரிவிக்கிறார். தம் வீட்டில் எழுத்தராக வந்த, கிறித்தவ தாழ்ந்த சாதி இளைஞனின் கழிப்பறைச் சட்டியை எடுத்து, கஸ்துாரிபாவே சுத்தம் செய்ய வேண்டும் என்று விதித்திருந்தார்.

வழிவழியாகத் தம் பண்பாட்டில் ஓடிய தீண்டாமை மரபு, கஸ்துரிபாவுக்கு அதைச் செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை. இவர் செய்ய மறுத்தால், அவரே அதைச் செய்ய முற்படுவார். அதற்கும் அவருடைய ‘பத்தினி தருமம்’ இடம் கொடுக்கவில்லை. எனவே, முகக் கடுப்புடன் அவர் அந்தச் சட்டியுடன் மாடிப்படியில் இறங்கி வந்தபோது, காந்தியடிகளால் பொறுக்க முடியவில்லை. அவளே, இந்தப் பணியைச் செய்ய வேண்டும்; மனமொப்பி முகம் கடுக்காமல் மலர்ச்சியுடன் செய்ய வேண்டும். இது கணவனின் ஆணை போன்ற எதிர்பார்ப்பு.

‘முகத்தைக் கடுத்துக் கொண்டு... தீண்டாமை பாராட்டும் மனைவி’

‘இப்படி ஒரு மூடத்தனத்தை இந்த வீட்டில் என்னால் பொறுக்க முடியாது!’ என்று காந்தியடிகள் கத்தினார். கஸ்துரிபாவும் ஆத்திரத்துடன், ‘உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்’ என்று பதிலுக்குக் கத்தினார்.

அப்போது அவர் என்ன செய்தார்?

கோபத்துடன் மனைவியின் கையைப் பற்றித் தரதர வென்று இழுத்துச் சென்று வாயிற் கதவைத் திறந்து வெளியே தள்ளி விட்டார்.

கஸ்துரிபாய்க்குத் துயரம் தாளாமல் கண்ணீர் பெருகியது. அதோடு அவள் உணர்வுகள் சொற்களாக வெடித்துச் சிதறின. 

‘உங்களுக்கு வெட்கமில்லை? சுய உணர்வு போய் விட்டதா? யாருமில்லாத இந்த நாடுவிட்ட நாட்டில், என்னை வெளியே பிடித்துத் தள்ளினால் நான் எங்கு செல்வேன்? நீங்கள் உதைத்தாலும் நான் பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான். கடவுள் மேல் ஆணை! யாராவது சிரிக்கப் போகிறார்கள்! கதவைச் சாத்துங்கள்!’, என்று உள்ளே வந்தாள். உலகம் மதிக்கும் தம் கணவர் மீது மனைவியை வெளியே தள்ளினார் என்ற பழிச்சொல் விழக்கூடாது என்பதில் மனைவி மிகக் கருத்தாக இருப்பது வெளிப் படுகிறது.

‘என் ஆணையை நீ மறுக்கக்கூடாது; அதையும் முகமலர்ச்சியுடன் நீ நிறைவேற்ற வேண்டும்’ என்று உச்சகட்ட அடக்குமுறை என்று கூடச் சொல்லலாம்.

அவர் ஆண்; மரபுவிதிகளை மீறலாம்; சோதனைக்கு உட்படுத்தலாம் என்ற வகையில் மேலாண்மை செய்யும் உரிமைக்கு இயல்பாக்கப்பட்டவர். அவளோ, உயிரே போவதாக இருந்தாலும் மரபுகளை மீறக்கூடாது என்று பதப்படுத்தப்பட்டவர். புருஷன் மீறினாலும், அந்த மீறலுக்கும் சேர்த்துத்தான் பரிகாரம் காணவேண்டும் என்று, சுமைகள் ஏற்பவள் அவள்.

அந்த வகையில் தீண்டாமையை அவள் பாலிக்கும் கட்டாயத்தில் நிற்க முயலுகிறாள். முரண்பாடுகள் தலை காட்டுகின்றன. ஆனால் விருப்பமோ, விருப்பமில்லையோ கணவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதால் மேன்மையுறலாம் என்றே கருதி நடக்கிறாள். இதே போல்தான் புலனடக்க வாழ்க்கை நடத்த அவர் துணிந்து முயற்சி செய்ய அவள் பூரண ஒத்துழைப்பை நல்குகிறாள்.

‘எங்களின் அபிப்பிராயங்களில் மிகுந்த வேற்றுமை இருந்த போதிலும், எங்களுடைய வாழ்க்கை எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், மனித உரிமைகளின் அடிப்படையில் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. ஓர் இலட்சியமான கணவன் என்ற மேலாண்மைக் கருத்தில் இருந்து விடுபட்டிராத நாயகனின் கண்களில் பெண் அடிப்படை மனித உரிமைகள் கொண்டவளாகக் கருதப்பட்டிருக்கவில்லை. ‘சராசரிக்கும் மேலானவளாக நீ உயர்வாய் - என் தலைமையை ஏற்று நட’ என்ற கருத்தே அந்த வாழ்க்கையில் தொனிக்கிறது. சத்தியாகிரகப் போருக்கு அவர் குரல் கொடுத்து அழைத்ததும் எதிர்பாரா வகையில் பெண்கள் திரண்டு வந்தார்கள்.

ஏன்?

அந்தப் பெண்கள் இனி இழக்க ஒன்றுமில்லை. ஆண் சமுதாயம் முன்நின்ற போது இவர்களும் விடுதலை பெற்றாற் போல் வந்தார்கள். கூட்டை உடைத்து வெளிவரச் சொன்னது ஓர் உந்துதலுக்கான கூவல். அவர்கள் தங்கள் ஆண்களைப் பின் தொடர்ந்தார்கள். அறியாமையில் அழுந்திக் கிடந்த பெண்கள், புருஷ ஆதிக்கத்தில் கட்டுண்டிருந்தவர்கள், அரசு ஆதிக்கத்தை எதிர்த்துப் புறப்பட்டார்கள் என்றால் சந்தர்ப்பம் ஒரு வடிகாலாக வெளிப்பட்டது. அண்மையில் அவள் ‘தன்னுரிமை’ என்ற உணர்வுடன் தேசியப் போராட்டத் துன்பங்களை ஏற்றதாகச் சொல்ல முடியாது. அந்த உள் அடுக்கு வரையிலும் எதிர்ப்புக் குரல் எட்டவே இல்லை.

கஸ்துரிபாவின் எண்ணத்தில், கணவரின் பரி சோதனைகளில் எல்லாம் தாம் ஈடுகொடுத்தாக வேண்டும் என்ற மரபுக் கருத்துத்தான் முனைப்பாக இருந்திருக்கிறது. குடும்பம் என்ற நிலையில், தம்மை மட்டுமின்றி, தம் குடும்பத்தையும் காந்தியடிகள் வாழ்க்கைச் சோதனைகளில் ஈடுபடுத்துகிறார். தம் பிள்ளைகளுக்கு, சமூகம் மதிக்கும் கல்வியும் மேன்மையும் அளிக்க வேண்டும் என்றே எந்தப் பெற்றோரும் விரும்புவார்கள். ஆனால், அவர் தம் மக்களை  தென்னாப்பிரிக்க ஆங்கிலப் பள்ளிக்கும் அனுப்பவில்லை; இந்தியாவுக்கும் கல்வி பெற அனுப்பவில்லை. சோதனைகளுக்கு அவர்களை உள்ளாக்கினார். பிள்ளைகளைக் கை இயந்திரத்தில் மாவரைக்கவும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவும் பணித்தார். நண்பர்களும் பல்வேறு சமயத்தினரும் அடங்கிய ஆசிரமம் போன்ற பெரிய ‘குடும்பத்தில்’ எல்லோருமே உழைக்க வேண்டும். கஸ்தூரிபாய்க்குச் சமையல் வேலையே சரியாக இருந்தது.

இத்தகைய கட்டாயங்களினால் மூத்த பையன், தந்தையை வெறுத்தான். அடியோடு பிரிந்து சென்றான். ஒரு தாய் என்ற நிலையில் கஸ்தூரிபாயின் சோகம் வெளிப்படாமலே போயிற்று.

இதே போல கஸ்தூரிபாய் உடல்நலம் சீர்கேடுற்று, இரத்த நஷ்டத்தினால் மிகமெலிந்து நலிந்த போது, இறைச்சி ரசம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் கருதிய போதிலும் அதை காந்திஜியிடம்தான் தெரிவித்தார். அவர் அப்போது, ஜோஹன்ஸ்பர்க்கில் சத்தியாக்கிரஹ இயக்கம் தொடங்க முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். கஸ்தூரிபாய் டர்பன் நகரில் டாக்டரின் பராமரிப்பில் இருந்தார். கஸ்தூரிபாய் தீண்டாமையை அநுசரிக்கக் கூடாது என்று வெளியே பிடித்துத் தள்ளத் துணிந்த அவர், இறைச்சி ரசம் கொடுப்பதற்கு கஸ்தூரிபாய் விரும்பினாலன்றிக் கொடுக்க வேண்டாம் என்று பணித்தார்.

மாட்டிறைச்சி ரசம் குடிக்க நிச்சயமாகக் கஸ்தூரிபாய் இணங்க மாட்டாள். இவர் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியம் கருதி டாக்டர் கொடுக்க வேண்டும் என்பதை இவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படை சமயவெறியோ, எதுவோ இங்கே மறை முகமாகக் கட்டுப்படுத்துவது தெரிகிறது. கஸ்தூரிபா இறைச்சி ரசம் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். இதே கஸ்தூரிபாய், தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் கண்டசரம் (வைரக் கற்களிழைத்தது) வேண்டும் என்று விரும்பி எடுத்து வைத்தபோது காந்தியடிகள் ஒப்பவில்லை.

பேதை, தமக்கு இல்லாது போனாலும், தம் மருமகள்களுக்கேனும் உதவுமே என்று ஆசைப்பட்டார். ஆனால் கந்தியடிகளோ, அதை உடனே திருப்பிவிட ஆணையிட்டு விடுகிறார்.

சுதந்திரம், மேன்மை என்பதெல்லாம், அவருடைய கருத்துக்கிசைய அவள் ஆசைகளை வெட்டித் திருத்திக் கொள்ளல் என்ற பழைய செப்புகளிலேயே வடிவம் பெற்றிருக்கின்றன.

‘இந்தியப் பெண்மை என்ற ஒரு முழுவடிவத்துக்கு, கஸ்துரிபா எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறார். தம்முடைய தனித்துவம் என்ற சிந்தனையை கணவனின் ஆணையுடன் ஐக்கியப்படுத்தி, அவர் போற்றிய கற்பின் வடிவமாகத் திகழ்ந்த அன்னை, சிறையில் கணவர் மடியில் உயிர் நீத்தார். இந்தப் பத்தினி வடிவம், இந்தியப் பெண்மைக்கு முரண்பாடான கணவனை இழந்த கோலத்துக்கு உட்படாதது, மிகமிகப் போற்றுதற்குரியதாகி விட்டது. கற்புடை மகளிர் கணவர் கண்கலங்க, முன்னதாக மங்கலப் பொருட்களுடன் இறுதியை எய்தினர் என்ற இந்திய நம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழ்கிறார், கஸ்தூரிபாய்.