இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/நாயகரைப் பாடிப்பரவிய நாயகியர்
நூற்றாண்டுகளுக்குப் பெண் தனக்குத் தூலமாகவும் சூக்குமமாகவும் விதிக்கப்பட்ட தளைகளைத் தகர்த்தெழும்புவது சாத்தியமல்லாத முயற்சியாகவே தீர்ந்து விட்டது.
அறிவுமலர்ச்சியும் குடும்பக் கடமையும் இவளுக்கு ஒன்றாக இசையாத வாழ்க்கையே விதிக்கப்பட்டு விட்டது. இறுகப் போடப்பட்ட முடிச்சை அறுத்து விடுதலை பெறுவதைவிட, முடிச்சை அதன் போக்கில் தளரச் செய்து அவிழ்த்து விடுதலைக் காற்றை நுகரமுற்படுவது ஓரளவுக்கு இயல்போடிணைந்த செயலாகிறது.
பெண், மாண்ட கணவனுடன் சிதையில் எரிக்கப்பட்டாள்; முண்டிதம் செய்யப்பட்டுக் கட்டாயத் துறவில் ஒடுக்கப் பட்டாள்.
இல்லையேல் அவள் பொது மகளாகச் சீரழிக்கப் பட்டாள். இந்த இரண்டாம் நிலையில் அவளுக்கு அறிவுக் கண் சிறிது திறக்கப்பட்டதால் ஓர் ஆசுவாசம் கிடைத்தது. தன் துயரங்களை வெளியிட்டுக் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டன.
ஆனால் முதல் நிலைக் குடும்பக் கூடும்-இரண்டாம் நிலை பொது மகள் அறிவு பெறும் வாய்ப்பும் ஒரு நாளும் இசைந்து விடாதபடி சமூகம் விழிப்புடன் இருந்தது.
அவள் கற்பரசி. கணவரைச் சார்ந்துதான் மேன்மை பெறலாம். உடல் சார்ந்த போக உணர்வுகளை அவள் வெளிப்படுத்தும் போது அது கட்டிய கணவரைச் சார்ந்து தான் இருக்க வேண்டும். கடவுளையே நாயகனாக அவள் வரித்தாலும் அது அவளுக்கு இழுக்குத்தான். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழுது, தெய்வமாக்குபவள் அவள்.
ஆண் பக்தர்கள். இத்தகைய கற்புக் கோட்பாட்டுக்குள் புழுங்க வேண்டியதில்லை. ஒரே ஒரு நாயகன் - புருஷோத்தமனான காதலனை எண்ணி, உருகி உருகிப் பக்தி செய்து பாடலாம். இறைவனுடன் கூடல் வேண்டி, தங்களைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டுத் திரியலாம். தடையில்லை. பெண் அவ்வாறு உணர்ச்சி மிகுந்து பக்தியில் கனிந்து பாடும்போது, ஒரு வகையில் தன் கூட்டுக்குள்ளிருந்தே புரட்சிக் குரல் கொடுப்பதாகக் கருத வேண்டி இருக்கிறது.
இந்திய மொழிகள் அனைத்திலும் பக்தி இலக்கியத்தைச் செழுமைப் படுத்திய சான்றோர் பலர் தம் பாடல்களாலும் காவியங்களாலும் அழியாப் புகழ் பெற்றிருக்கின்றனர்.
தமிழில் சிவபக்தச் செல்வர்களான நாயன்மார்களும் வைணவ பக்தர்களான ஆழ்வார்களும், இஸ்லாம் வளர்த்த இறையடியார்களும், கிறிஸ்தவம் சார்ந்த சான்றோர்களும், பக்தி இலக்கியங்களுக்கு உரியவர்களாகத் திகழ்கின்றனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் காரைக்கால் அம்மையார் இடம் பெற்றுள்ளார். தமிழில், பக்தி இலக்கியம் என்று வரும்போது, முதலாவதாகக் குறிப்பிடப்படும் பெண்பாற்புலவர் இவர். இவருடைய அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகங்கள் ஆகியவை பதினோராந்திருமறையில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக, பெண்களுடைய வெளிப்பாடாக ஒர் இலக்கியம் உருவாகும்போது, அது உடல்பரமான உணர்வுகளைச் சார்ந்தே முகிழ்க்கிறது என்பது ஓரளவு உண்மையாக இருக்கிறது.
ஆனால் காரைக்காலம்மையின் பாடல்களை அப்படிச் சொல்வதற்கில்லை. ‘காரைக்கால்’ என்ற ஊர்ப் பெயரைச் சேர்ந்தவளாகக் குறிக்கப்பெறும் இவ்வம்மையின் இயற் பெயர் புனிதவதி.
இவர் ஆறாம் நூற்றாண்டுக்கு உரியவராகக் கருதப்படுகிறார். சமணம் பரவித் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்ற நிலையில், ஒருபுறம், வேதப்பிராம்மணச் செல்வாக்கும் வலிமை பெற்றிருந்த சூழலில், அதற்கு எதிராக, சைவம் என்ற பக்திக் கொள்கை மக்கள் செல்வாக்கைப் பரவலாகப் பெற்று வந்த காலம் அது.
சிலப்பதிகாரக் காப்பியச் செல்வியைக் போல், புனிதவதி வணிக குலத்தில் தோன்றியவர். தனதத்தன் என்ற பெரு வணிகனின் ஒரே செல்வியாக உதித்தவர். பொதுவாகப் பெருவணிகர், சமணம் சார்ந்தவராக இருப்பதை இன்றளவும் காண்கிறோம்.
புனிதவதியார் எந்தப் பின்னணியில் தீவிர சிவபக்தச் செல்வியாக இளம்பருவத்திலேயே உருவானார் என்பதெல்லாம் புரியவில்லை. ஆனால் தன்னை ஒத்த தோழிகளுடன் விளையாடிய பருவத்திலேயே அவர் சிவபெருமானின் பல்வேறு நாமங்களைச் சொல்லியே ஆடினார் என்று கூறப்படுகிறது.
புனிதவதி காரைக்காலில் பிறந்தவர்; ஆனால் நாகைப் பட்டினத்தைச் சார்ந்த பெருவணிகனின் மகன் பரமதத்தனுக்கு அவர் மணமுடிக்கப் பெற்றாலும், காரைக் காலை விட்டு அவர், மணாளனின் ஊருக்கு, புக்ககத்துக்குச் செல்லவில்லையாம். ஒரே மகளாதலால்,அவளை ஊரை விட்டு அனுப்பாமல் அருகிலேயே வசதியானதோர் இல்லத்தில் மகளும் மருமகனும் வாழச் செய்கிறார் தந்தை.
உள்ளூரிலேயே மருமகனுக்கு ஒரு கடையும் அமைத்துக் கொடுத்ததாகக் கொள்ளலாம்.
புனிதவதியின் சிவபக்தி, அவருடைய இல்வாழ்கையில் இருந்து விடுபடக் காரணமாகிறது. கணவருக்குக் கட்டுப்பட்ட, கற்பு நெறி வழுவாத ஒரு பெண், கணவருக்கு எதிர்ப்பே காட்டுவதுபோல சிவபக்தியில் மனம் செலுத்தி, சிவனடியாரை வீட்டில் வரவேற்று விருந்தளித்துக் கடமை யாற்றினார் என்ற முரண்பாடு வலிமை பெற்றிருக்கிறது.
பக்தியைப் பரப்பும் சமய இலக்கியங்களில், அடியார்களின் வரலாறுகளில், அற்புதங்கள் பலவும், நிகழ்ந்ததாகவே காணப்படுகின்றன. மக்கள் அவற்றை நம்பினார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிப் பிடிக்கும், இந்த அறிவியல் சாதனைகளைப் பெற்ற நிலையிலும் அற்புதங்கள் நம்பப்படுகின்றன.
குறிப்பிட்ட ஒரு சமயப் பிரிவுக்குள் மக்களை ஈர்த்து நிலைநிறுத்த அற்புதங்கள் பயன்படுகின்றன. உலக வாழ்க்கையில் துன்பங்களும் சிக்கல்களும் மனித சமுதாயத்தை நெருக்கடிகளில் தள்ளிவிட்ட நிலையில் அற்புதங்கள் மக்கள் கவனங்களைத் திசை திருப்ப வல்லவையாக இருக்கின்றன.
அற்புத வரலாறு இதுதான்.
புனிதவதியின் கணவன் பரமதத்தன் ஒரு நாட் காலையில், தன் வாணிபத் தலத்திலிருந்து, இரண்டு மாங்கனிகளைத் தன் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். நண்பகலுக்குத் தான் உணவு கொள்ள வரும் நேரத்தில், மனைவி தனக்கு அதைப் படைப்பாள் என்று எதிர்பார்த்தான்.
கணவன் உணவு கொள்ள வருமுன், ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்கு வந்தார். புனிதவதி உடனே அவரை வரவேற்று உபசரித்து, அமுது படைத்தாள். அந்த நேரத்தில் அவள் சோறு மட்டுமே சமைத்திருந்தாள். எனவே அந்தச் சோற்றுடன் கணவன் அனுப்பியிருந்த ஒரு மாங்கனியையும் அவருக்குப் படைத்தாள். சிவனடியார் பசியாறிப் போய் விட்டார்.
நண்பகலில் கணவன் உணவு கொள்ள வந்தான். எஞ்சியிருந்த மாங்கனியுடன் புனிதவதி கணவனுக்கு அமுது படைத்தாள். “மாங்கனி அதிகச்சுவையாக இருக்கிறது. இன்னொரு பழத்தையும் போடு” என்றான் கணவன்.
இந்த இடத்தில், சிவனடியாருக்குப் படைத்த உண்மையை அவள் கணவனிடம் தெரிவித்திருக்கலாம். கணவன் அதை ஆமோதிக்க மாட்டான் என்ற அச்சம் இவளை அலைக்கழிப்பானேன்?
ஒரு கால் அவன் சமணம் சார்ந்தவனோ? இல்லையேல் எந்த ஒரு சிறு காரியமும் கணவன் சொற் கேளாமல் அவள் செய்யலாகாது என்ற உறுத்தலோ?
மனைவி கணவனின் அநுமதியில்லாமல் சிவனடி யாருக்கு உணவு படைத்தது தண்டனைக்குரிய குற்றமோ?
எப்படியோ-பேதை நடுநடுங்கிப் போனாள்.
எனவே, அஞ்சிய புனிதவதி, சமையலறையில் இருந்த படியே, சிவனைத் தொழுது இறைஞ்சினாள். அவள் கையில் அற்புதமாய் அதே போல் ஒரு மாங்கனி கிடைத்தது. அதைக் கொண்டு வந்து கணவனுக்குப் பரிமாறினாள். கணவன் அதை உண்டான். அத்துடன் பிரச்னை தீர்ந்துவிட வேண்டுமே? தீரவில்லை.
“இரண்டும் ஒரே மரத்துக் கனிகள்தாமே? இது மட்டும் எப்படி இவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கிறது? நான் அனுப்பிய கனியா இது?” என்று கேட்டு விட்டான்.
இளம் மனைவி நடு நடுங்கி உண்மையைக் கூறி விட்டாள். அவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியப்பட்டு, “அப்படியா? நீ இப்போது, அது போல் இன்னொரு பழம் வரவழை பார்க்கிறேன்!” என்றான். அவள் கண்ணிர் மல்க, சிவனைத் தொழுது வேண்டினாள். ஆச்சரியமாய் அவள் கையில் ஒரு கனி வந்தது. அதை அவன் கையில் கொடுத்தாள். ஆனால்... அவன் கையில் விழுமுன் அது மறைந்து போயிற்று!
முதலிலேயே, சிவனடியாருக்குக் கணவன் வாக்கில்லாமல் உணவு படைத்ததன் தண்டனை போல் அவன் கடிந்து கொண்டான் என்று ‘கதை’ வரவில்லை. ஆனால் ‘குற்றமோ’ என்று அவள் உண்மை மறைத்து, தெய்வத்தின் அருள் வேண்டினாள் என்று அற்புதம் நுழைக்கப் பெறுகிறது. சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டு, அவள் குடும்ப வாழ்வை விட்டுச் சென்றாள் என்றால், ‘கற்புடைய பெண்ணுக்கு அது இழுக்காகிறது.’ மேலும் இவளை முன்னோடியாகக் கொண்டு, கணவனிடம் துன்புறும் பெண்கள் சிவனே தஞ்சம் என்று புறப்பட்டால், சிவபக்தியும் கூடப் பழுது பட்டதாகி விடுமே?
எனவே, அற்புதம் நிகழ்த்தப்படுகிறது.
கணவன், “ஓ, இவள் சாதாரணப் பெண் அல்ல, இவள் தேவதையோ, யஷிணியோ, யரோ!” என்று அஞ்சினானாம். அது மட்டுமன்று. அப்படியே வீட்டை விட்டு நழுவி, கடலில் கலம் ஏறிச்சென்று வேறு ஒரு கரையில் இறங்கி, பாண்டிநாட்டுத் தலைநகர் மதுரைக்குச் சென்று புதிய வாணிபம் தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது.
கணவன் அகன்றபின், ஒன்றும் புரியாத புனிதவதி, வீட்டினுள் ஒடுங்கிச் சிவபெருமானைத் தொழுதவளாய் நாட்களைக் கழித்தாள். அப்போது, மதுரை சென்று வந்த வணிகர் கூட்டத்தின் வாயிலாகச் செய்திகள் இவளை எட்டின.
பரமதத்தன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தைக்கு அவள் நினைவாகப் ‘புனிதவதி’ என்று பெயரிட்டிருக்கிறான்.
கணவன் வெறுத்தாலும், மனைவி அவன் நிழலை விட்டு ஒதுங்கலாமா? எனவே அவளைக் கணவரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அந்தக் கணவன் அவளைத் தன் மனைவியாக, தனக்கு அடங்க வேண்டியவளாகக் கருதவில்லை.
தன் மனைவியுடனும், மகளுடனும் அவளுடைய அடிகளில் பணிந்து ஆசி கூற வேண்டினான்.
புனிதவதி என்ன செய்வாள்?
சிவபக்தி, அவளுக்கு உலகில் வாழ்க்கை இல்லை என்று நிர்ணயித்து விட்டது.
இந்த நிலையில், அவள் சிவனைத் தொழுது, பரமதத்தனுக்கு உரிமையான அவ்வுடலை இளமையை, அழகிய உருவைத் துறந்து, சிவனின் பக்திக்குகந்த பேயுரு தனக்கு வேண்டும் என்று இறைஞ்சினாள் என்றும் அனைவரும் கண்டு நிற்கையிலேயே அவள் பேயருவானாள் என்றும் கூறப்படுகிறது. பூமியில் ஓராடவனுக்குத் திருமண விதிப்படி உரிமையான பிறகு, அந்தப் பெண், ஆண்டவனுக்கும் கூடத் தன் உடலை உரிமையாக்க முடியாது என்ற கற்பியல் மிக அழுத்தமாக இந்த வரலாற்றில் அறிவுறுத்தப்படுகிறது.
இதே போல் தமிழ் மூதாட்டி ஔவை பற்றிய வரலாற்றிலும், ஔவை தனக்கு மண்ணுலகபரபான குடும்ப வாழ்வு வேண்டாம் என்று, முதுமையைத் தெய்வ வரமாகக் கேட்டுப் பெற்றாள் என்று கூறப்படுகிறது.
ஓராண், மனைவி மக்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு - ஆன்மீக ஏற்றம் பெற முடியும். அவன் குடும்பம் துறந்து கானகமேகித் தவநெறியில் நின்றாலும் அவன் அழகும் இளமையும் அதற்குத் தடையில்லை. ஆனால், பெண்ணுக்கு ஆன்மீக-துறவு வாழ்வே அந்நியமானது, இயல்புக்கு மாறானது. எனவே அற்புதமாகவோ, எப்படியோ அவள் தன் இளமை மேனி அழகு எல்லாவற்றையும் துறக்க வேண்டும். அவளுடைய இளமை-மேனி நலம் இரண்டுக்கும் அவள் தானே உரியவளாக இருக்க முடியாது.
இவள் பேயுருவாகவே, தலையால் நகர்ந்து திருக்கயிலையை அடைந்தாள் என்றும், இறைவன் இவளை ‘அம்மையே’ என்றழைத்து அருளினான் என்றும் வரலாறு, அறிவுக்கு ஒப்பாத அற்புதமாகவே விரிக்கிறது.
இவருடைய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி - இரட்டை மணி மாலை, திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகம் - மூத்த திருப்பதிகம் - என்பவை. இவற்றில், யாக்கை விடுத்து, சுடுகாட்டில் நடமிடும் சிவனின் பேய்க் கணங்களில் ஒன்றாகிக் களிப்பதான ஓர் இலட்சிய முனைப்பும், அந்த வெற்றியும் தவிர, வேறு, உலகியல் சிந்தனைகளோ, வாழ்க்கை பற்றிய குறிப்போ இல்லை.
ஒரு சாதாரணமான பெண், வெளி உலகம் தெரியாத கற்புடைய மனைவி, பக்தி உணர்வால் மட்டுமே, மொழியிலும், இலக்கிய அறிவிலும் இப்பாடல்களைப் புனைந்தார் என்பதும் நூற்றுக்கு நூறாக ஒப்புவதற்கில்லை.
மொழிப்பயிற்சி, புலமை, சிவனடியார் சங்கம், ஆன்மிகக் கருத்துக்களின் பரிசயம் இவை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் வெளியீட்டில், குடும்பம், கணவன், மக்கள், சமையல், என்ற அன்றாட வாழ்வின் பிரதிபலிப்புத்தான் முதன்மை பெறுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.ஆண்டாள், அக்கமா தேவி, மீராபாய் ஆகியோரின் பாடல்களில், பெண்களுக்கே உரிய இந்த இயல்புதான் இறைவனின் மீதான ஆறாக்காதலாக, வெளிப்பட்டிருக்கின்றன.
வேதப்பாடல்களைப் பார்த்தாலும், பெண்ரு ஷிகாலோபமுத்திரை, எத்தனை காலம் நான் தவம் புரியும் முனிகணவருக்குத் தொண்டாற்றினேன்! எனது இளமை போய் முதுமை வந்தெய்தியது! கணவன் மார்களே! உங்கள் சந்ததிக்காக வேனும் தவநிலையை மீறி மனைவியை அணுகுங்கள்? என்ற தவிப்பாகத்தான் வெளிப்படுகிறது.
காரைக்காலம்மை, பேயுருவையும், திருவாலங்காட்டுச் சூழலையும் உயிர்த்துடிப்புடன் சித்திரிக்கும் திறன் பெற்றிருக்கிறார். அது, அழகியலைக் காட்டிலும், ஒருவித அச்சமூட்டும் - உலகே மாயம் என்ற கொள்கையில் அழிவில் ஆனந்தம் காணும் இறை தத்துவத்தைக் குறிப்பாக்குகிறது.
காரைக்காலம்மை, கடல்கடந்த கிழக்கு நாடுகளில் சைவம் சென்ற பிரதேசங்களில் தெய்வத்துக்குரிய போற்றுதலுடன் வழிபடப்பெறுகிறார். இவர் வரலாறும், பதிகங்களும், இயல்புக்கு ஒட்டாத அற்புதங்களாகவே விரிந்திருக்கின்றன எனலாம்.
பக்தி பரவசமாகிய உணர்ச்சிப் பெருக்கு அக்காலத்தில் பெண்ணின் விடுலைக்குரல் என்றே சொல்லலாம்.
ஆனால் காரைக்காலம்மையின் வரலாறு, அவருடைய பாடல்களில் ஒரு பெண்ணுக்கே உரிய அநுபவ உணர்ச்சிகளாகப் பிரதிபலிக்கவில்லை. எழுத்துப் படிப்பும் ஆன்மீக ஞானமும், நான்கு சுவர்களுக்குள் , கணவனுக்கு அஞ்சி உண்மை மறைத்து, அற்புதத்தில் உயிர்த்த பெண்ணுக்கு எப்படிக் கூடியது?
எவ்வாறாயினும், அற்புதப்பதிகம், மூத்தபதிகம் என்ற சிறப்பைப் பெற்றிருப்பதும், பதினோராம் திருமறையில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழில், இத்தகைய ஞானச் செல்வரின் உண்மை வரலாறுகள், சமய அற்புதப் போர்வைக்குள் உருத் தெரியாமலே அழுத்தப்பட்டுவிட்டது ஒரு வகையில் துர்ப் பாக்கியம் தான்.
ஆண்டாள்...
சூடிக் கொடுத்த சுடர்க் கொடி...
கோதை நாச்சியார்...
பூமாலை மட்டுமின்றி பாமாலையும் புனைந்து கொடுத்த திருமகள்.
இந்தப் பெருமகள் மண்ணில் உலாவிய காலம் எட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதி என்று வரலாற்றறிஞர் கணிக்கின்றனர்.
வடநாட்டிலே உதித்த மீரா இன்னும் எட்டு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மீரா அரச குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு, கண்ணனையே நாயகனாகக் கருதி, தன்னை அவனுக்கு ஆட்படுத்தியவள். அதன் காரணமாக அவள் அடைந்த துன்பங்கள் அனைத்தையும், கண்ணனின் பால் ஆழ்ந்த காதலாக்கிக் கொண்டவர். அந்த வேதனைகளும் தவிப்புகளும், விடுதலை பெற்றுப் பேரானந்தத்தில் இலயிக்கத்துடிக்கும் ஆன்மாவின் தவிப்பாகப் பாடல்களில் பிரதிபலிக்கின்றன.
ஆனால், ஆண்டாளின் பிறப்பே, சீதை எனும் காவிய நாயகியின் பிறப்பைப் போன்ற மருமமாக இருக்கிறது. சீதை காவிய நாயகி எனவே ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் இந்தக் கோதையோ, திருப்பாவை முப்பது பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்த பெருமாட்டி. இவள் மண்ணிலே உலவி, அக்கால வழ்வைத் தன் பாசுரங்களில் பிரதிபலிக்கச் செய்தவள். கண்ணனையே எண்ணி மறுகித் தன் உணர்வுகளை அழகு தமிழில் பாசுரங்களாக வடித்த இவள், ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த உயிரும் உடலுமான பெண்தான்.
ஆனால், இவள் வரலாறோ, புராண மரபுகளில் புதைந்து போயிருக்கின்றன என்றால் தவறில்லை. கட்டுக் கதைகளைப் போல் விரிக்கப்பட்டிருக்கிறது.
இப்பெண் - இறைவனின் திருமார்பில் உரையும் பிராட்டியின் அம்சமாகத் திருவவதாரம் செய்தவள் என்றும், துளசிச் செடிகளுக்கு நடுவே கிடந்தாள் என்றும், திருவில்லிப் புத்தூர் கோயிலில் உறையும் பெருமாளுக்கு மலர்களும் மாலைகளும் கொண்டு செல்லும் பணியைச் செய்து வந்த விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் இந்த மகவைக் கண்டெடுத்துப் புதல்வியாக வளர்த்தார் என்றும் சொல்லப் படுகிறது. இவளைக் கண்டெடுத்த நாளையே கணக்கிட்டு, ‘ஆடிப்பூரம்’ இவள் திருவவதார நாளென்றும் கொண்டாடப்படுகிறது.
ஒரு பெண் மகவு, தாயால் அநாதையாக விடப்பட வேண்டுமென்றால், தந்தை என்று முறையாகச் சொல்லிக் கொள்ளத் திருமணம் இல்லாத நிலையில் ஒருத்திக்குப் பிறந்திருக்க வேண்டும்; இல்லையேல், அவள் கணவன் என்ற ஒருவன் இருந்தும் அந்தக் கூட்டுக்கு வெளியே வேறொருவன் உறவால் பெற்ற மகவாக இருந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், அந்தத் தாய்-மகள் தொடர்பு, சமுதாயம் ஒப்புக் கொள்ளாத நிலை என்பது வெளிப்படை. இந்த உண்மை, திருவவதாரம் என்ற மருமத்தில் மறைக்கப் பட்டிருக்கிறது.
ஆண்டாளின் வரலாற்றில் முரண்பாடாக விளங்கும் கூறுகளில் முக்கியமானவை, அந்தச் சமுதாயமும், அவர் பாசுரங்களில் காணப்படும் அதீதமான காதற்சுவையும்தாம்.
விஷ்ணுசித்தர், நந்தவனத்தில் பூக்கொய்து, எம் பெருமானுக்கு மாலைகள் புனைந்தளிக்கும் திருப்பணி செய்பவர்; அந்தணர் என்று தெரியவருகிறது. இவர் துளசி வனத்தில் கிடந்த குழந்தையைக் கொண்டு வந்து வளர்க்கிறார். இந்த வளர்ப்பில் தாய் யாரும் சம்பந்தப் பட்டதாகத் தெரியவில்லை. இவர் கண்ணனின் லீலா விநோதங்களை அக்குழந்தைக்குக் கூறி வந்தார். அவற்றைச் செவியுற்று, அக்குழந்தை சிறுமிப் பருவத்திலேயே கண்ணனைத் தன் நாயகனாக வரித்து விட்டாள்.
அந்தண சமுதாயத்தில், பூப்படையுமுன் திருமணம் செய்து கொடுத்து விடும் மரபு உண்டு.
நாச்சியார் திருமொழியில் வரும் விவரங்களனைத்தும் மிக நுட்பமாக, உடல் சார்ந்த விரகதாபத்தைப் பல்வேறு கோணங்களில் மனமுருக்கும் சொற்களால் உணர்த்துகின்றன. அவளுடைய தேர்ந்த அறிவும், மன உணர்வுகளை வெளியிடும் திறமும், அவளை இறுக்கமுள்ள ஓர் அந்தண சமுதாயக் குடும்பச் சூழலில் வளந்த பெண்ணாகக் காட்டவில்லை. அழகுக்கலைகள் அனைத்தையும் கற்க உரிமை கொண்ட ஒரு குடும்பச் சூழலில், பக்குவமும் பழக்கமும் பெற்ற திருமகளாகவே அவளை அந்தப் பாசுரங்கள் காட்டிக் கொடுக்கின்றன. மொழியும், பாவனைகளும், அவளை அருங்கலைச் செல்வியாகவே அடையாளம் காட்டுகின்றன. இறைவனுக்குத் தொடுத்து வைத்த மாலைகளைத் தான் அணிந்துகொண்டு கண்ணாடியில் அழகு பார்த்ததாக வரும் செய்தியே, ஒழுக்கமுள்ள குடும்பச் சுழலில் ஏழை பூக்கட்டும் அந்தணர் வீட்டுப் பெண்ணுக்கு உகந்ததாக இல்லை.
நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள், தமிழ் இலக்கிய மரபுகளை நன்கு பயின்றுணர்ந்த ஓர் அருங்கலைஞர் யாத்தவையே அன்றி, பன்னிரண்டு வயதில் கண்ணனையே மணம் செய்து கொள்ள விரும்பிய ஒரு பெண் படியதென்று கூறமுடியவில்லை.
இவளுடைய தாபங்கள், “மானுடர்கென்று பேச்சுப் படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!” என்ற வரியில், ஓர் அழுத்த நிலையின் உச்சத்தில் வெடித்துக் கொட்டும் உணர்வுகளாகவே வெளியாகின்றன.
பெண்ணாகப் பிறந்த வாழ்வு, பெற்ற தாயில்லா நிலையில், பேரழகும் கவித்திறனும் உள்ள ஒருத்திக்கு, சுதந்திரமாக வாய்த்திருக்க முடியாது.
அக்கமகா தேவியை, கௌசிக மன்னன் விரும்பி, மணம் புரிய நிர்பந்தித்தான். நிபந்தனைகளுக்குட்பட்டு, அவளை அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ஆனால், அவளுடைய சிவபக்தியை அவனால் ஒப்ப முடியவில்லை. அவள் உடலின் மீது மட்டும் அவன் நோக்கு மிகுந்திருந்தது. அக்கமாதேவி அக்கூட்டைவிட்டு வெளியேறும் உச்சகட்டம் வந்தது. அதேபோல், மீராபாய் அரசகுடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு அரசியாக அந்தப்புரத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அவள் பக்திக்கு அது தடையாகவே இருந்தது. காரைக்கால் அம்மையின் வரலாறும் இப்படிக் குடும்ப முரண்பாட்டில்தான் தொடங்குகிறது.
ஆனால் கோதையின் வரலாற்றில், குடும்பம் என்ற தடை அழுத்தத்தைக் கொடுக்குமளவுக்குக் காணப்படவில்லை. அவள் சூடிக்கொடுத்ததைக் கடவுளே ஏற்றுக் கொண்டார் என்றும், பெருமாள் கனவில் வந்து, அற்புதமாக, அந்தச் சமுதாயமே அவளைப் போற்றி வழிபடச் செய்ததென்றும் காண்கிறோம்.
இந்த நிலையில், ஒரு பதினாறு வயசுப் பெண், தான் இறைவனோடு ஒன்றிவிடுவதற்கு முன்பு, தன்னை ஆயர்குலச் சிறுமியாக நினைத்துக் கொண்டு நோன்பிருந்ததும், வழிபட்டதும், உண்மையாக நிழ்ந்த நிகழ்ச்சிகள் என்பதைவிட, கூட்டை உடைத்துக் கொண்டு வெளிச் செல்ல முடியாததொரு அழுத்தத்திலும் வேதனையிலும் கற்பனையின் பாவனையில் மலர்ந்த உயிர்ச் சொல்லோ வியங்களே என்று கருதுவது பொருந்துகிறது.
கண்களில் காணும் பொருட்களில் எல்லாம், காட்சிகளில் எல்லாம், அவள் தன் விரக வேதனையை ஏற்றிப் புலம்புகிறாள். பெண் போகத்துக்குரிய உடலுறுப்புக்களையே குறிப்பிட்டுப் பாடப்படும் இப்பாடல்கள், நிச்சயமாக, போகம் என்ற எல்லைக்குள் எட்டிப் பார்க்கவும் வாய்ப்பில்லாத ஒரு குலத்தில், ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்த சிறுமியின் பாவனைக்குரியவை என்று கொள்வதற்கில்லை.
- “பெண்ணின் வருத்தமறியாத பெருமானரையில் பீதக
- வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிரே!”
என்றும்,
“நெடுமாலூதி வருகின்ற குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே” என்றும் விரக வேதனையின் உச்சத்தில் வெளிப்படும் சொற்களை, பதினைந்து பதினாறு வயதுக் கற்புடை மரபுள்ள குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்ணுக்குரியதாகக் கொள்ள முடியாது.
வளர்ப்புத்தந்தையிடம் கண்ணனின் பெருமைகளை, திருமால் குடிகொண்ட தலமகிமைகளைச் செவியுற்றதனால் மட்டும் தோன்றிவிட்ட கிளர்ச்சி என்று கொள்வது கடினமாக இருக்கிறது.
சிலப்பதிகாரக் காப்பியத்தில், கண்ணகி தன் ஆற்றாமை உச்சத்தில், தன் மார்பகத்தைக் கொய்து, மதுரை மாநகர் பற்றி எரிய விட்டெறிந்தாள் என்று வருணிக்கப்படுகிறது. பெண் போகத்துக்குரிய அவ்வுறுப்பு பிரிவில் தீயாகவும் உடலை குளிர்ச்சியாகவும் அவர்களுக்கு இன்ப துன்பங் களைத் தருவதாம்! இந்த உறுப்பு, பெற்ற சேய்க்கு அமுதுரட்டும் தெய்வீகத்தன்மை பொருந்தியதாகக் கருதப்பட்ட நிலை மாறி, இது, ‘கற்பு’ என்ற கொள்கையின் தீயைத் தாங்குவதாகவும் பேசப்படுகிறது. எனவே அந்தத் தீயில் மதுரை மாநகரம் பற்றி எரிந்தது!
அந்தச் செய்கை நினைவில் வரும்படி,
- “உள்ளே உருகி நைவேனை, உள்ளோ இவளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை, கோவர்த் தனனைக் கண்டக்கால்,
- கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
- அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே!”
என்று பாடுகிறாள்.
இப்படி ஒரு கற்பனை முதலில் ஓர் ஆணுக்குத் தோன்றியதா, அல்லது பெண்ணுக்கு உரியதாக இருக்குமோ?
இறுதியில், கோதை, கோவிந்தன் வந்து தன்னை மண முடித்தாற் போன்று கனவு காண்கிறாள்.
இந்தப் பாசுரங்கள், திருமண விழாவின் அன்றைய சமுதாயச் சடங்குகள் அனைத்தையும் விவரிக்கின்றன.
மதுரை மன்னன் ஸ்ரீவல்லபதேவனே, இவளைச் சிவிகையிலேற்றி, திருமணத்துக்குரிய மங்கள வைபவங்களுடனும், திருவரங்கத்துத் தெய்வத்தின் சன்னிதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான் என்றும், இவள் மணமகளாக, சர்வாலங்காரங்களுடன், வளர்ப்புத் தந்தை மற்றும் அடியார், பெரியவர் புடைசூழ திருவரங்கத்துப் பெருமானின் சன்னிதிக்கு வந்து, கருவறைக்குள் ஐக்கியமானாள் என்று வரலாறு கூறுகிறது.
இது கதைபோல் நன்றாக இருக்கிறது.
ஆனால் வரலாறு, இப்படியே இருந்திருக்குமோ என்பது ஐயத்திற்குரியது.
கன்னடத்து ஞானச்செல்வி அக்கமாதேவியின் கவி வாசகங்களில் அவளுடைய வாழ்க்கை அநுபவங்கள் மிகத் தெளிவாய்ப் பிரதிபலிக்கின்றன. என்றாலும், அந்தப் பெருமாட்டியின் வரலாற்றில், உண்மை - காலப்போக்கில் இடம் பெற்றுவிட்ட அதீதங்கள் என்பவை ஆராயப் பெற்று வரலாறு, அறிவுக்கும் காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பெற்றிருக்கிறது எனலாம். சமயம்-பக்தி என்று வரும்போது, அற்புதங்களும், மாற்றங்களும் வரலாற்று உண்மைகளை மறைத்துவிடுகின்றன என்பதை கன்னட மொழி ஆய்வாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கமாதேவி பற்றிய வரலாற்றில் பல ஆய்வாளர் பல கருத்துக்களைத் தெளிவாக்குகின்றனர். கௌசிக மன்னன் அவளை மணம் புரிந்து கொண்டானா, இல்லையா என்பதிலிருந்து, அவருடைய பெற்றோர் பெயர் வரையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
இலக்கிய வரலாற்று அறிஞருக்கு, இவளை நாயகியாக வைத்து, நவீனம் படைப்பதும்கூடச் சாத்தியமாகி இருக்கிறது.
ஆனால் தமிழில், மிக அண்மைக்காலச் சான்றோர் கவிஞர் வரலாற்றிலும் கூட, அற்புதங்களே முதன்மை பெற்று, உண்மைகளைக் கண்டறியாத வண்ணம் ‘தெய்வீக’ முத்திரைகளில் முடக்கப்பட்டிருக்கின்றன.
ஆண்டாளின் வரலாற்றைச் சுற்றியுள்ள தெய்வீக அற்புதப் போர்வையைச் சற்றே நீக்கி வரலாற்றுக்கண் கொண்டு பார்க்கலாம்.
பக்தி இலக்கியத்துக்கு வளமை சேர்த்து பெண் கவிஞர்களில் மிக அதிகமாகக் காதற்சுவையை போகம் என்ற உருவில் வியக்கத்தக்கவிதம் வெளியிட்டிருப்பவர் கோதை நாச்சியார்தாம். இதனால்தான் போலும் ஒரு சிலர், இப்பாடல்கள் ஒரு பெண்ணால் பாடப்பட்டவை அல்ல. நாயகி பாவம் கொண்ட, பெரியாழ்வாரே (கோதையின் வளர்ப்புத் தந்தை) இப்பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார் என்றும் கருத்துரைக்கின்றனர்.
கோயிலில் திருப்பணி ஆடல் பாடல் உபசாரங்கள் செய்யும் போது மகளிர் குலத்தில் வளர்ந்து ஓர் ஆடவனை முறைப்படி மணந்து வாழ முடியாத சூழலில், மன்னனுக்கும், எம்பிரானைப் பூசிக்க உரிமை பெற்ற மேற்குலத் தோருக்குமே உரியவள் என்ற நெருக்கடியில், எம் பெருமானே உகந்த மணாளன், மானுடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துயரம் வெடிக்கப் புலம்பினாளோ? செல்வபோகங்களும், அரச ஆணையும் கட்டாயப் படுத்தப்பட்டபோது, அவளுடைய வேதனை அநுபவங்கள் இத்தகைய உணர்ச்சிப் பாடல்களாக வெளிவந்தனவோ? பலகாலம் சிறையிலிருந்த பித்தியாகி அற்புதமான பாவனைகளில் மூழ்கியதால் இத்தகைய அரும்பாசுரங்கள் உருவாயினவோ? உண்மை யாருக்குத் தெரியும்?
ஆனால் சமுதாயம் - பெண்ணை அடக்கி ஒடுக்கிய ஆதிக்கத்தில் நிமிர்ந்தாலும், ஆண்டாளைத் திரு அவதாரம் செய்த பிராட்டியாக்கி, தெய்வ மதிப்பையே ஏற்று வித்திருக்கிறது. அவப்பெயர் ஒட்டாதவகையில், வரலாறே அற்புதச் சித்திரிப்பாக மிளிர்ந்திருக்கிறது.
கன்னடத்துச் சிவஞானப் பெண் கவிஞர் அக்கமா தேவி, காரைக்காலம்மைக்குப் பின் ஏறக் குறைய ஆறு நூற்றாண்டுகள் சென்றபின் வடகன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கருகில் ‘உடுதாடி’ என்ற கிராமத்தில் தோன்றினார். வீரசைவ மரபில் தோன்றிய இவருடைய பெற்றோரே, சிவபக்தச் செல்வர்கள். இவர்கள் தம் அருஞ்செல்விக்கு, இளமையிலேயே, அறிவுக் கல்விக்கான ‘சிட்சை’ யும் ஞானப்பயிற்சிக்கான ‘லிங்க தீட்சை’யும் ஒருங்கே அளித்தனர். அதே கிராமத்தில் கோயில் கொண்டிருந்த சென்னமல்லிகார்சுனரையே இவர் இஷ்ட தெய்வமாகக் கொண்டார். இவருடைய காலமும் காரைக்காலம்மையின் வாழ்காலம் போன்று, பிரமணர் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டு செல்வாக்குப் பெற்று வந்த சமண ஆதிக்கத்தை ஒடுக்கும் முகமாக, வீரசைவ பக்தி இயக்கம் பேரூன்றிப் பரவிய காலமாக இருந்தது. பஸவண்ண, அல்லம ப்ரபு போன்ற ஞானிகள் வாழ்ந்த காலம் அது.
இளமையிலேயே சிவபக்தச் செல்வியாக விளங்கிய அக்கமாதேவி, திருமணப் பருவம் வந்தபோது, இகஉலக வாழ்வு பற்றிய சிந்தனையே இல்லாதவராகவே இருந்தார். உலகியல் வாழ்வுக்கப்பால், தம்மை சென்ன மல்லிகார்ச்சுன சுவாமிக்கு அர்ப்பணித்தவராய், ஞான வழியிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால், உரிய பருவத்தில் பேரழகுடன் திகழ்ந்த இவளுக்குத் தகுந்த வரனைத் தேடி மணமுடிக்க வேண்டும் என்று பெற்றோருக்குக் கவலை இல்லாமல் இல்லை. எனினும் செல்வியை எந்த நிலையிலும் கட்டுப்படுத்தி அவளைத் துன்புறச் செய்யும் பெற்றோரும் இல்லை அவர்கள்.
இந்தத் தருணத்தில் எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது. வீதி உலாவந்த கௌசிக மன்னன், உடுதாடியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தவன், இந்தச் சிவ மங்கையின் பேரழகினைக் கண்டுவிட்டான். மையல் கொண்டான். தனக்கு மணம் பேச, அவள் பெற்றோரிடம் காவலரை அனுப்பினான். பெற்றோர் திடுக்கிட்டனர். ஆனால், செல்வி கலங்கவில்லை. மணம் பேச வந்த காவலரிடம், தான் தன்னைச் சிவபெருமானுக்கே உரித்தாக்கி விட்டதாகவும், அரசமாளிகையில் தனக்கு எந்தப் பிடிப்பும் கிடையாதென்றும் மறுத்துவிட்டாள்.
பெற்றோர் அஞ்சி நடுங்கினர். கௌசிகன் சமண மதத்தினன். மன்னன் கடுங்கோபி. அவன், மகளை அனுப்பவில்லை என்றால், உமக்கு மரணம் என்றும் சொல்லலாமே?
அக்கமாதேவி, அரசனுக்குச் சில நிபந்தனைகள் விதித்து, ஒப்புதல் தெரிவித்தாள்.
சிவபூசை; சிவனடியார் உபசாரம்; குருவழிபாடு; தொண்டு...
இவள் தன் வாழ்வை இந்த நியமங்களுக்கு உட் படுத்துவாள். அரசன் மறுதலிக்கலாகாது.
மன்னன் நிபந்தனைகளை ஏற்றான். மாளிகை சிவனடியார் திருக்கூட்டத்தால் நிறைந்தது. அரசியோ, பூசை வழிபாட்டிலும் அமுதுபடைத்தலிலும் நாள் முழுவதும் மன்னன் நிபந்தனைகளை நிராகரித்து அவனை நெருக்கினாள்.
சிறிதும் தயக்கமின்றி, தேவி, அந்தப் பந்தத்தை அறுத்தாள். அரசமாளிகையின் போகங்கள், அணி பணிகள், ஆடைகள் யாவுத் துறந்தாள்.
- “எருமை நினைப்பதொன்று; தோல்வினைஞன் நினைப்பதொன்று,
- எனக்கு என்சென்னமல்லிகார்சுன தேவன் ஏற்பாரோ என்ற தாபம்-
- உனக்கோ, இந்த உடலில் காமம் கிளர்த்திவிட்ட பசி”
என்றும்,
- “இகத்திலொரு கணவன், பரத்துக்கொரு நாயகனோ?
- உலகியலுக்கொப்ப ஒருகணவன், ஆன்மீக நாயகன் மற்றொருவனோ?
- என்கணவன் சென்னமல்லிகார்சுன தேவனே!”
என்று உறுதி கொண்டு புறப்பட்டுவிட்டாள். பெற்றோரிடம் ஆசி பெற்றே இந்தப் பருவம் ததும்பும் இளம் பெண், தன் ஆடைகளையும் துறந்து நிர்வாணமாகப் பயணம் புறப்பட்டாளாம்.
இவருடைய வரலாற்றில், காரைக்காலம்மை, தம் இளமையைச் சிவனிடம் வேண்டி மாற்றிக் கொண்டு பேயுருவில் புறப்பட்டதுபோல் அற்புதம் நிகழவில்லை. சாத்தியமல்லாத அசாத்தியமே, சாத்தியமாக்கப்படும் திட உணர்வையும் நம்பிக்கையையும் தேவியின் அனுபவ உணர்வுகள் பிரதிபலிக்கும் கவி வாசகங்களில் காண்கிறோம்.
காடு மலைகள் கடந்து, கொடிய விலங்குகள், மூடர் மூர்க்கர், கள்வர் என்ற எதிராளிகளைச் சமாளித்து, பசி சோர்வு, உறக்கம், களைப்பு என்ற உடல் உபாதைகளை வென்று, ஸ்ரீசைலத் தலத்தில் குடிகொண்ட சென்ன மல்லிகார்ச்சுன தேவனின் தரிசனமே இறுதி இலட்சியம் என்று பயணம் செய்கிறார் தேவி.
தனது கரிய அடர்ந்த கூந்தலால், மேனி முழுதும் மூடவிரித்து, இவர் நடந்தாராம்.
இவரைத் துன்புறுத்த வந்தவருக்கு இவர் அறிவுறுத்திய வாசகம் இது:
- “அவிழ்ந்த கூந்தல்; வாடிக்கருகிய முகம்.
- மெலிந்து வற்றிய உடல்,
- மெய் சோர்ந்து, உலக வாழ்வு ஒதுக்கி,
- குலம்கெட்டு, சென்னமல்லிகார்ச்சுன தேவனைக்கூடப்
- புறப்பட்ட பித்திநான்...என்னைத் தொடர்ந்து துன்புறுத்துவானேன்,
- என்பிரிய சோதரரே!”
- “உடுபுடைவை துறந்து, நிர்வாணமானாலும்,
- கருங்கூந்தலை விரித்த உடலைமறைப்பதேன்?
- உள்ளத்தில் உடலாசை உணர்வுகள் வைத்துப்
- புறத்தில் துறவென்று ஆடை துறந்தாயே!”
என்று கேலி செய்து, வம்புக்கிழுத்தவருக்கு மாதேவியின் பதிலும் பாடல்களில் பிரதிபலிக்கிறது.
- “மேனி வாடிக்கருகிப் போனாலும்,
- மேவும் இளமை மினுமினுத்தாலும்,
- என் உள்ளத்தின் உள்ளே துயஒளி போதுமே!
- இந்தமேனி எப்படியானாலும் சென்னமல்லிகார்ச்சுன தேவருக்கே உரியது.
- உள்ளம் பழுத்தாலன்றோ தோலின் நிறம்மாறும்!
- ஆசையுணர்வுகள் அடையாளம் காட்டினால் துன்பமாகும் என்று
- அன்பினால் அங்கங்கள் கூந்தல் கொண்டு மறைத்தேன்.
- துன்புறுத்த வேண்டம் அண்ணா!
- சென்னமல்லிகார்ச்சுன தேவரின் உள்ளத்தின் உள்ளே சேர்ந்தவள் இவளே...”
இந்தப் பாதையில்லாப் பெருவழியில், தேவி, மேற் கொண்ட ஆன்மீக இலட்சிய யாத்திரை அநுபவங்கள், தாப உணர்வுகள் போராட்டங்கள் யாவுமே கவிவாசகங்களாக கன்னட இலக்கியத்தின் அருங்குவியலாக வாய்த்திருக்கின்றன.
கல்யாணம் என்ற தலத்தில், சமயக்குரவர்கள் தங்கி மேன்மைமிகு உரைகளையும் உலகுக்களித்த மடத்தில், அக்கமாதேவியும் வருகிறாள். பஸவண்ணர், அல்லமப்ரபு ஆகிய சிவபக்த ஞானியரைக் கண்டு உரையாடும் அநுபவங்களைப் பெறுகிறாள். பல்வேறு கொள்கைக்காரரிடம் பேசியும், இவளுடைய அறிவும், ஞான சாதனையும் ஏற்றம் காணும் மேன்மைகளைப் பெறுகிறாள்.
- “கல்யாணம்; கயிலாயம்...
- உள்ளும் கல்யாணம் வெளியும் கல்யாணம்...”
என்று பரவசப்படுகிறாள்.
கல்யாணத்திலிருந்து, ஸ்ரீ சைலம் செல்லும் பயணம் ஓர் அற்புத சாதனை என்றே கூறலாம்.
அன்பு முற்றிய உச்ச நிலையில், தாபத்தீ எரிக்கும் வேதனையில், கூடலை எண்ணி ஆறுதல் கொள்ளும் எல்லைக் கோட்டில், அவர் வாசகங்கள் அற்புதமான அநுபூதி அநுபவங்களை விரிக்கின்றன. ஆண்டாளைப் போன்று உடல்பரமான போக உணர்வுகளாய் மட்டுமே வெளிப்படவில்லை; காரைக்காலம்மை போன்று, “கொங்கை திரங்கி, நரம்பெழுந்து குண்டு கண் வெண்பற்குழி வயிற்றுப் பிதுங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள் கணைக்காலோர் பெண்பேய் தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கக் குளிர்ந்தலை ஆடும் எங்கள் அப்பன் இடந் திருவாலங்காடே” என்று அச்சம், அவலம், இருசுவைகளும் முதன்மைப்படுத்தப்படும் உலகியல் மாயக் கொள்கை யாகவும் பிரதிபலிக்கவில்லை.
வாழ்வியல், ஆன்மிக இலட்சியம் இரண்டு முனைகளையும் தம் அநுபவ சாதனைகளாகப் பெண் என்ற உணர்வுகளோடு, இணைக்கும் அநுபூதி அநுபவங்களாகவே அவை வெளிப்படுகின்றன.
“மலையுச்சியில் வாழத் தெரிந்த உனக்கு வனவிலங்குகளிடம் அச்சமுண்டோ? கடற்கரையில் வசிக்கும் உனக்கு, கடலேற்ற இறக்கங்களைப் பற்றிய பீதி என்ன? சந்தை இரைச்சலில் வதியும் உனக்கு, பேரிரைச்சலின் பாதிப்பு எது? உலகில் வாழப்பிறந்தபின், புழுதிக்கும், பூச்செண்டுக்கும் மனம் குலையா அமைதிக்கும் பழகுவாய்…” “பசி எடுக்கும் போது இரந்துண்பேன்… தாகமெடுக்கும்போது, கிணற்றிலும் குட்டையிலும் பருக நீரிருக்கிறது - தூக்கம் வரும் போது, பழைய கோயில்கள் எனக்கு இளைப்பாறும் இடமாகும்… வாழ்நாள் முழுதும் உள்ளத்தினுள்ளே நீ துணையாக இருக்கும் போது, எனக்கென்ன பயம்? எது நேர்ந்தாலும் அச்சமில்லை…
“சருகுகளைத் தின்று வாழ்வேன்; கத்திமுனையில் தலை வைத்துப்படுப்பேன், வான் திறந்து பேய்மழை பொழிந்தால் நான் நீராடும் மகிழ்வில் திளைப்பேன். பாறை பிளந்து என் மீது விழுந்தால், எனக்கு மலரணி கிட்டியதாக மகிழ்வேன். என் தலை கொய்யப்பட்டால், ஓ, பிரபுவே! என் உயிரை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன்…
தம் காலத்தில், வாழ்வின் இலட்சியத்தை எட்டிவிட்ட பேரானந்தத்தில் திளைக்கிறாள் மாதேவி.
லிங்கமென்றுரைப்பாய்;ஐக்யமென்றுரைப்பாய்
லங்கமென்றுரைப்பாய்; (பற்று)விட்டதென்றுரைப்பாய்
உண்டென்றுரைப்பாய்; இல்லை என்றுரைப்பாய்
சென்னமல்லிகார்ச்சுனலிங்க - ஐக்யமானபின்
உரைப்பதற்கு ஏதுமில்லை...
தன்னுடைய உயர்ந்த இலட்சியத்துக்காக, சமுதாயத்தையும், அரசதிகாரத்தையும், ஒரே சமயத்தில் எதிர்த்து நின்ற அக்கமாதேவி, வாழ்நாள் முழுவதுமே பேராட்டத்தில் கழித்தார் எனலாம். கன்னட மொழி இலக்கியத்துக்கே சிறப்பான வசன இலக்கியத்துக்கு வளமும் புகழும் இசைத்த மகா ஞானியான கவி அக்கமாதேவி. கவிவசனங்கள் கிடைத்திருப்பவை, முந்நூற்று நாற்பத்து இரண்டு. இவ் வசனங்களைத் தவிர, ச்ருஷ்டியின் வசனம், ‘யோகாங் த்ருவிதி’ ஸ்வரவசனங்கள் என்று வழங்கப்பெறும் பதினேழு (கீதங்கள்) (இசைப்பாடல்கள்) ஆகியவையும் அக்கமா தேவியின் படைப்புக்களாகும்.
இவை அனைத்தும், பக்தி இலக்கியத்தில், இந்திய மொழிகளில் கூட்டை உடைத்துக் கொண்டு குரல் கொடுத்த கவிச்செல்விகளில் மிக முக்கியமான சிறப்புடைய வராக, அக்கமாதேவியை இனம் காட்டுகின்றன.