இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/துணை இழப்பும் துறவறமும்

7. துணை இழப்பும் துறவறமும்


ருவனுக்கு ஒருத்தி என்ற அக்கினி வளையம் அலட்சியமாகத் தாண்டப்படும்போது, அவள் மேனி அழகு சாதனங்களுக்குரியதாகவே மதிக்கப்பெறுகிறது. அந்நாட்களில் அவள் நித்திய சுமங்கலி, இந்நாட்களில் அவள் பொருளை ஈட்டித் தரும் வாணிப சாதனம்.

ஆனால், அந்த ஒருவன் விதிவசத்தாலோ,எப்படியோ மாய்ந்து போனால், அவள் சபிக்கப்பட்ட பிறவியாக சமுதாயத்திலிருந்தே தூக்கி எறியப்படும் குப்பைபோல் வீழ்ச்சியுறுகிறாள்.

இந்தியப் பெண்ணின் மேன்மை, அறியாப்பருவத்தில் ஒரு நாயகனுக்கு ஆட்பட்டு, அவனுக்குத் தொண்டடிமை செய்யும் கௌரவப் பதவியில் அவனுக்கு ஆண்மக்களைப் பெற்றுத் தந்து, அவன் சிறுமைகள், பெருமைகள், கொடுமைகள் எல்லாவற்றிலும் முக்கியப் பங்கேற்று, முதுமைக் காலம் வரை வாழ்ந்து, பர்த்தாவும் பார்த்திருக்க, புத்திரனும் கொள்ளி வைக்க, மஞ்சளும் குங்குமமுமாக, மருமகளிடத்தில் தன் வெறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டுப் போய்ச்சேரவேண்டும் என்பதில்தான் நிலை கொண்டிருக்கிறது.

இப்படித் தீர்க்கப்பட்ட உன்னதமான பெண்மைக்காக, உண்மை வரலாறு கூட இந்நாட்டில் திரிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மீராபாய் வரலாற்றைப் பார்க்கலாம். புகழ்பெற்ற கவிஞானச் செல்வி அவர் பதினைந்தாம் நூற்றாண்டுக்குரியவர். இவருடைய கணவர். மார்வார் இளவரசர் போஜராஜர் கணவர் இறந்தபின் பல ஆண்டுகள் மீராபாய் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்ச்சிகள் கணவர் இறந்த பின்னரே நடந்திருக்கின்றன. இவருடைய கிருஷ்ண பக்திப்பித்தும், கவிதா சக்தியும், அந்நாட்களில் அரச குடும்பத்துக்கே அகௌரவமாகக் கருதப்பட்டன. அதற்காகவே இவருடைய நாத்தியும், மைத்துனரும் இவருக்குப் பல இன்னல்களை இழைத்தார்கள். நஞ்சிட்டு இவரைக் கொல்லவும் துணிந்தார்கள். ஆனால் மீரா சாகவில்லை. அரச குடும்பத்துக்குரிய அரண்களைக் கடந்து, கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு வெளியேறினார். ‘மீராகேப்ரபு’ என்ற முத்திரையுடன் இவர் பக்தி கனிந்த இதயம் வடித்த பாடல்கள் நாடெங்கும் பாமர மக்களின் நாவில் ஒலிக்கலாயின. இந்த வரலாறு, மீரா என்ற பெண் கவிஞருக்கு ஏற்றம் தருவதாக, பின்னாட்களின் சமுதாயப் பாதுகாவலர்களுக்குத் தோன்றவில்லை. இவருடைய கிருஷ்ண பக்திக்கும், கவியாற்றலுக்கும் முன்பாக, இவர் ஒர் இளம் விதவை, குடும்ப கௌரவங்களை மீறியவர் என்ற உண்மைகள் முரண்பாடாக இருக்குமே? பக்தியும் பாடலும் அந்த வகையில் இவர் புகழைத் துக்கிப் பிடிக்காதே?

எனவே மீரா பற்றிய சித்திரங்கள் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளின. இவர் கட்டுக்கழுத்தி சுமங்கலி என்ற வண்ணங்களைக் கொண்டே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த சாதனமாகிய திரைப்படம், மீரா பூவும் பொட்டுமாக வாழ்ந்த நிலையில் கணவரையும், அரச போகங்களையும் துறந்து, (கிருஷ்ண பக்திக்கு அவர் இடையூறு விளைவித்ததால்) வெளியேறிச் சென்றதாக நிலையுறுத்துகிறது. ‘விதவை’ என்ற சொல்லுக்குரிய நிலை, இத்தகைய அளவுக்குச் சபிக்கப்பட்டதாக இன்னமும் நிலையுறுத்தப்பட்டு வருகிறது. சுமங்கலி, கட்டுக் கழுத்தி, பூவும் பொட்டும் என்ற சொற்றொடர் பெண்ணை எந்த நிலையிலும் சமுதாய மதிப்புடையவளாக்குகிறது.

உண்மையில் சுமங்கலி என்ற சொல்; ருக்வேதம் பத்தாவது மண்டலத்தில் குறிக்கப்பெறுகிறது (X -7-1)

‘விதவா’ என்ற சொல்லுக்கு மாறான ‘அவிதவா’ என்ற சொல்லும் இதே பத்தாவது மண்டலத்தில் (X-2-2) இடம் பெற்றிருக்கிறது. ‘விதவா’ என்ற சொல், நான்காம் மண்டலத்திலும் (IV-2-8) இடம் பெற்றிருக்கிறது.

இன்றைய சமுதாயத்தில், விதவை என்ற சொல்லுக்கு நேர் எதிர்ப்பதமாக, சுமங்கலி என்ற சொல் விளங்குகிறது. ‘சுமங்கலி’ என்றால், அவள் பூவுக்கும், பொட்டுக்கும், பட்டுக்கும் உரியவள். அவள் உடலையும், கருப்பையையும் ஆளுகை செய்யும் நாயகன் இருக்கிறான் என்பதே பொருள். திருமண வைபவங்களில், மணமகள், மணமகனைப் பணியும் போது, அவன் அவளைத் ‘தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று வாழ்த்துவதன் மூலம் தன்னையே வாழ்த்திக் கொள்ளும் வழக்கம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

ஆனால், ருக்வேதம் காட்டும் இச்சொல், அவளைத் திருமணம் புரிந்த நிலையில், ஒருவனுக்கு ஆட்பட்ட தாலி, பொட்டு பூ என்று புறச்சின்னங்களோடு தொடர்பு கொண்டதாகக் குறிக்கப்படவில்லை. இந்தப் பாடல் ஸவிதாவின் மகளான சூரியா, சோமனைத் திருமணம் செய்து கொள்ள மணப்பெண்ணாகக் கூடத்தில் வந்திருக்கிறாள். இவளை மணமகன் வீட்டுக்கு அழைத்துச்செல்ல அசுவினி தேவர்கள் தேருடன் காத்திருக்கின்றனர். அந்தத் தருணத்தில், இந்தப் பாடல் கூறப்படுகிறது.

‘ஓ இந்த வது சுமங்கலியாகத் திகழ்கிறாள், பாருங்கள்! இவளை வந்து வாழ்த்தி விட்டுத் திரும்பிச் செல்லுங்கள்!’ என்று உற்றவர், ஊராரிடம் சொல்வதான பாடல் அது.

‘இந்த வது (மணப்பெண்) மங்களமான உறுப்புகளையுடையவளாய், இளமையும், ஆரோக்கியமுமாகத் திகழ்கிறாள். இவள் சந்ததியைப் பெற்றுத்தந்து இல்லத்தைப் பரிபாலிக்கும் தகுதியுடையவள் என்ற பொருள்தான் இப்பாடலில் முன்நிற்கிறது.

இப்போது, இதே பத்தாம் மண்டலத்தில், அவிதவா (விதவையல்லாதவள்) என்ற சொல் வரும் இடத்தைப் பார்க்கலாம். இந்தப் பாடல், பெண்ணின் நிலை பற்றிய ஆய்வுக்கு மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பாடலில்தான் ‘அக்ரே’ என்ற சொல், ‘அக்னே’ என்று திருத்தப்பட்டு சனாதன ஆண் நாயகச் சமுதாயம், கணவன் இறந்ததும் மனைவியையும் சிதையிலேற்ற வேத அங்கீகாரத்துக்குரியதாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

(‘அக்ரே’ என்ற சொல்லே அக்னியைக் குறிக்கும். அக்ரே என்றால் முதல் தெய்வத்துக்குறிய அக்னிதான் என்று பொருள் சொல்வரும் உண்டு) கணவன் சிதையில் இருக்கும் போது, சிதையை நோக்கிச்செல்லும் மனைவியைத் தடுத்து நிறுத்தி, ‘அவளை விதவையல்லாதவர்களும், சுபத்னிகளாகிய பெண்களும் முன்வந்து வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்லட்டும்’ என்ற பொருள்படக் காணப்படும் பாடல் அது.

(அக்ரே முன்னே - அக்னே நெருப்பு)

‘விதவையல்லாதவரும் சுபத்னிகளும் இவளை மணப் பெண்ணாக்கி, அக்கினிக்கு அழைத்துச் செல்லட்டும்’ என்ற பொருளை சனாதன ஆண்நாயகம் வலியுறுத்தி அவளை நெருப்பில் போட்டது. இங்கே, ‘சுமங்கலி’ என்ற சொல் ஏன் கையாளப்படவில்லை? சொல்லப் போனால் ‘சுமங்கலி’ என்ற சொல், வேறு எந்த இடத்திலும் இல்லை - நாம் இன்று கொள்ளும் பொருளில் இல்லை என்றே சொல்லலாம்.

‘அவிதவா’ என்ற சொல்லும், ‘ஸுபத்னி’ என்ற சொல்லும் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பெறுகின்றன.

விதவையல்லாதவள் - புருஷன் உடையவள்- அது ஒன்றே போதுமே? ஸுபத்னி என்ற சொல் வேறு எதற்கு? இதற்கும் நல்ல கணவனை உடையவள் என்றுதானே பொருள்? வி-தவா நாயகன் இல்லாதவள் காப்பாளன் இல்லாதவள் என்று கொள்ளலாம். அந்தக் காப்பாளன், அவளுடைய கணவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவன் சோதரனாக இருக்கலாம்; தந்தையாகவும் இருக்கலாம்; யாராகவும் இருக்கலாமே? ‘விதவை’ என்ற சொல்லுக்கு, வேதப்பாடல்களில் குறிக்கப்படும் பொருள் திட்டவட்டமாகச் சொல்லும்படி இல்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. வேதப் பாடல்கள், உலகின் இயற்கைத் தோற்றங்கள், கோள்களின் இயக்கங்கள், உயிர்நிலைகளை அடிப்படையாக்கி, மானிட வாழ்வின் கூறுகளால் உருவகப்படுத்தப்பட்டவை, உயர்ந்த தத்துவங்களை உணர்த்துபவை என்று சொல்லப்படுகின்றன.

என்றாலும், இந்த அடிப்படையிலும், மானிட சமுதாய வாழ்வு நிலைகளைப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. ருக்வேதம் நான்காம் மண்டலத்தில் (IV-2-8) ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்திரனின் தாய் அதிதியின் கூற்றாக, இந்திரனைப் புகழும் பாடல் இது.

‘உன் தாயை விதவையாக்கியவர் யார்? உன்னைவிட ஆற்றலுடைய தேவன் உண்டோ? தந்தையைக் காலைவாரிக் கொன்ற ஆற்றுலுடையவன் அன்றோ?’ என்ற பொருள்பட, ஒரு தாய்த்தெய்வம் மகனைப் புகழ்ந்துரைக்கிறது. இதில் ‘உன் தந்தை’ என்ற குறிப்பு இல்லை. பொதுவாகத் தந்தை என்றே குறிக்கப்பெறுகிறது. இப்போது அது முக்கிய மில்லை. விதவையாக்கியதற்காக இந்திரன் போற்றப்படுகிறான். இது தான் நம்மைக் கவரும் முக்கியமான செய்தி. எனவே, ஆதிகாலத்தில், பெண்ணின் நிலை, புறச் சின்னங்களாலும், ஒடுக்கும் நெறிகளாலும் கட்டுப் படுத்தப்பட்டதாக இருக்கவில்லை என்பதும், அப்போது பயன்படுத்தப்பட்ட சில சொற்களே, பல புதிய பரிமாணங்களைப் பெற்று, இவளை ஒடுக்கும் நெறிக்கான முக்கியக் கருவிகளாயின என்று கொள்ளலாம்.

பகவத் கீதையில், முதல் அத்தியாயமாகிய அருச்சுன விஷாதயோகத்தில், அருச்சுனன் கண்ணனிடம் ‘தான் போர் புரிய மாட்டேன்’ என்று கூறுகிறான். அதற்கு அவன் கூறும் காரணம் கருத்திற் கொள்ளக் கூடியதாகும்.

‘போரில் மாவீரர்கள் மடிந்ததும், அவர்களுடைய நாயகியர் கணவர்களை இழப்பார்கள்; அப்போது அவர்கள் மாற்றாரைச் சேரும் சூழல் உண்டாகும்...’ ஸ்த்ரீகளின் இத்தகைய துஷ்டத்தனத்தினால் வருண ஸங்கரம் - (வருணக் கலப்பு) நேரிடும்; இதனால் குல தருமங்கள் அழியும்; மூதாதையருக்கு நீர்க்கடனாற்றுபவர்கள் இருக்க மாட்டார்கள்; ‘இத்தகைய பாவங்களுக்குக் காரணமாகும் போரைப் புரிய மாட்டேன்’ என்பது தான் அவன் கூற்று. இங்கு கூட, ‘விதவை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. கைம்மை நிலையின் கொடுமைகள் தலை காட்டவில்லை.

கைம்மை நிலை பற்றி, புத்தரின் காலத்தில் அறிய முடிகிறது. புத்தர் பெண்களுக்குத் துறவு நெறியை எளிதில் அநுமதிக்கவில்லை. புத்தருக்கு வளர்ப்புத் தாயாக இருந்து அவரை வளர்த்து ஆளாக்கிய கௌதமி அன்னை, ஒரு நெருக்கடியான தருணத்தில் அபலைப் பெண்கள் பலரை அழைத்துக் கொண்டு, புத்தரிடம் வந்தார். தங்களைத் துறவிகளாக ஏற்றருள வேண்டும் என்று அவள் கோரினாள். அவரோ, அவர்களை அருகிலேயே நெருங்க விடவில்லை.

அந்தப் பெண்கள் யாவர்?

அக்காலத்தில ரோஹினி ஆற்றின் நீருக்கான சச்சரவின் காரணமாக, சாக்கிய இனத்தவருக்கும், கோலிய இனத்தவருக்கும் இடையே மோதல்கள் உண்டாயின. அந்த மோதலில் சாக்கிய குலப்பெண்கள் பலர் தம் துணைவர்களை இழந்தார்கள். (கோலிய இனத்தவரிடமும் இதே நிலைமை ஏற்றிருக்கலாம்) அத்தகைய சாக்கிய குல அபலைப் பெண்களை அழைத்துக் கொண்டு கோதமி அன்னை தங்களுக்குத் துறவுரிமை கேட்டு வந்திருந்தார்.

அந்தப் பெண்கள் தங்கள் அணிபணிகள் நீக்கி அழகிய கூந்தலை வெட்டி எறிந்து விட்டுக் காவியாடை தரித்து வந்திருந்தனர். பெண் உடல் ரீதியாக, பலவீனமானவள்; மன உறுதி இல்லாதவள்; சஞ்சல இயல்பினள், அவளைத் துறவுச் சங்கத்தில் அநுமதித்தால் கேடுகள் வரும் என்று புத்தர் அன்னையை முகம் கொடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் கௌதமி அன்னை, அழுது கொண்டு, அந்தப் பெண்களுடன் பல நாட்கள் வெளியே நின்று மன்றாடினார். சீடர் ஆனந்தர், அவர்களுக்காகப் புத்தரிடம் மன்றாடி, அவர்களைத் துறவுச் சங்கத்தில் ஏற்கச் செய்தாராம். என்றாலும், இவர்கள் ஆண் துறவிகளுக்கு எந்த வகையிலும் சமமானவர் அல்ல. பெண் துறவிகளுக்கு மிகமிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதல் துறவியான அன்னை கோதமி அந்த நெறிகளை அப்படியே காத்து, நூற்றிருபது வயது வாழ்ந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. புத்தசங்கத்தில், அன்னை கோதமியின் முயற்சியில், பெண்கள் பிக்குணிகளாக அநுமதிக்கப் பட்டனர். இந்தப் பிக்குணிகளின் சங்கத்துக்கு அன்னையாக, அவரே திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் துறவு வாழ்க்கைக்கு வந்தனர். இந்தப் பிக்குனிகள், அரச மாளிகையில் இருந்தும், தாழ்த்தப்பட்டவர் களிடையே இருந்தும், கணிகையர் குலத்திலிருந்தும் வந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஏறக்குறைய சம வயதினரும் அல்ல.

சிலர் கன்னியர்; சிலர் கைம்பெண்கள்; சிலர் வயது முதிர்ந்தோர். இவர்கள் பலர் தத்தம் அநுபவங்களை வரலாறுகளைப் பாடல்களாக யாத்திருக்கின்றனர். இதுவே ‘புத்த தேரி காதா’ என்ற நூலாக உருவாயிற்று. இவை முதலில் வாய்மொழியாக உலவி, மௌரிய அரசர் காலத் தில், வரிவடிவம் பெற்று, இரண்டாவது திரிபிடகமாகிய சுத்தபிடகத்தில் இடம்பெற்றதென்பர்.

இந்தப் பாடல்களில் மிக நீண்ட பாடல், ஸுமேதா என்ற பெண் துறவிக்கு உரியது. மந்தவதி நாட்டில் பிறந்த ‘கிரௌஞ்ச’ என்ற அரசனின் மகள் ஸுமேதா. வாரணாவதி நாட்டு மன்னன், அநிகர்த்தன் இவளை மணக்க விரும்பினான். அவனே வந்து இவளிடம் வேண்டினான். எழுபத்தைந்து பாக்களுடைய இந்த வரலாற்றில் இவள் பிறப்பு, வளர்ப்பு, துறவு எல்லாம் வருணிக்கப்படுகிறது. இவள் கல்வி கற்றாள் மனம் புரிய வந்தவர்களை மறுத்தாள். பெற்றோர் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. பிரும்மசரியம்-பேரின்பம் இரண்டுமே வாழ்க்கை என்று புத்தமதம் தழுவினாள்.

இஷிதாஸி என்ற துறவியின் வரலாற்றில், பெண்கள் மறுமணம் செய்து கொள்வதில் தடையில்லாமலிருந்த குறிப்பு தெரிகிறது.

உஜ்ஜயினியில் உயர் வணிக குலத்தில் பெற்றோர்க்கு ஒரே மகளாக உதித்த செல்வி இவள். இவளை, ஸாகேத நகரத்தில் வணிக குல வாலிபனுக்கு மணமுடித்தார்கள். மணம் முடிந்தபின் கணவன் வீடு சென்றாள் இஷிதாஸி. பாடல் பின்வருமாறு வருகிறது.

‘காலையும் மாலையும் கணவரையும் (பெற்றோர்) மாமன் மாமியரையும் நெற்றி நிலத்தில் தோய, முழங்கால் பூமியில் பதிய எனக்குச் சொல்லிக் கொடுத்தபடி தொழு தெழுவேன்.

கணவரின் சோதர-சோதரர்-அவ்வீட்டு உறவினர்- எவர் வந்தாலும் பணிவுடன் எழுந்து நின்று வணங்கினேன்.

சீவிச் சிங்காரித்துத் தாதியாக அவருக்குப் பணிவுடன் ஏவலுக்குக் காத்து நின்றேன். சோறு பொங்கி, பண்ட பாத்திரம் கழுவி-கூனிக் குழைந்து பணியாற்றினேன்.

இவ்வளவுக்கும் நான் பெற்றது யாது!

அவர்கள் வெறுப்பே!

ஏற்றுக் கொள்ளப்படாத வாணிபப் பொருள் போல் தாய் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப் பெற்றேன்.

இரண்டாம் முறையாக ஒரு செல்வச் சீமானுக்கு மண முடித்தார்கள்.

அவனும் ஒரு குற்றமும் அறியாத என்னை ஒரு மாதத்துக்குப் பிறகு திருப்பி அனுப்பி வைத்தான்.

ஒரு நாள் ஒர் இளம் பிக்கு, தந்தை வீட்டுக்கு வந்தார்.

பெற்றோர் அவரிடம், துறவு வாழ்க்கையை விட்டு தம் குற்றமற்ற மகளை மணந்து கொள்ள வேண்டினர்.

பிக்கு இசைந்து, என்னை மணம் முடித்தார்.

ஆனால், ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை வாழ்வு. அவர் அவளைவிட்டு மீண்டும் துறவியாகவே சென்றார்.

நான் எனது பெற்றோரிடம், 'உயிரை மாய்த்துக் கொள்வேன்.’

‘அல்லது என்னைத் துறவு கொள்ள அநுமதியுங்கள்’... என்று மான்றாடினேன்.

ஜீன தத்த... பிட்சு எங்கள் இல்லம் வந்தார்.

நான் துறவியானேன்...

இவ்வாறே, சுபா என்ற துறவியின் வரலாறு விரிகிறது.

பிக்குணி சுபா, ஜீவகனுக்குச் சொந்தமான மாந் தோப்பில் உலவிக் கொண்டிருந்தாள். ஜீவகன் வந்து வழிமறித்தான்.

‘நான் தனிமை விரும்புகிறேன்; புனிதமானவள்; நீ மாசுற்ற மனதினன். விலகிப் போ!’ என்று வெருட்டினாள் சுபா.

ஜீவகன், ‘நீ மாசற்ற கன்னி; ஏன் உலகைத் துறந்தாய்! துரவாடையை ஏன் விரும்பினாய்? இந்த வாழ்வை விடு. இதே தோப்பில் இந்த இளவேனிலில் மலரும் மணமுமாய் இன்புறவோம்! நீ என் ராணியாகலாம்!’ என்றான்.

சுபா வெறுத்தாள். ‘இவ்வுடல் மரணமடையும். நீ விரும்புகிறாயா?

ஜீவகன் அவளைப் புகழ்ந்து கொண்டே இருந்தான். கண்களின் வசீகரங்களைப் புகழ்ந்தான்.

சுபா உடனே தன் கண்களைத் தோண்டி அவனிடம் கொடுத்தாள்.

‘இந்தா! நீ புகழ்ந்த கண்!’

அவன் உடனே வெட்கி மன்னிப்புக்கோரினான். அவள் புத்தரிடம் திரும்பினாள். அவர் அருளால் கண்ணொளி மீண்டது.

(அற்புதத்துடன் முடிகிறது)

இவ்வாறே குண்டலகேசியின் வரலாறு வருகிறது.

தமிழ் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று குண்டலகேசியை நாயகியாகக் கொண்டதாகும். ராஜகிருஹ நகரில் ஒரு வணிகனின் மகளாகப் பிறந்த குண்டலகேசி, குலகுருவின் மகன் சார்த்தகனைக் காதலித்தாள்.

அவன் வஞ்சகன்; திருடன். தெரிந்தும் அவனைத் திருட்டுக் குற்றத்தில் இருந்து மீட்டுத் தந்தையின் உதவியினால் மணந்து கொள்கிறாள். அவன் அப்படியும் திருந்தாமல் இவளை வஞ்சகமாகக் கொன்று நகைகளை அபகரிக்கச் சூழ்ச்சி செய்கிறான். ஆனால் அவளோ அதற்குமுன் அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு எந்த வழுக்குப் பாறையில் அவளைத் தள்ளிக் கொல்லக் கருதினானோ, அதே வழுக்குப் பாறையில் அவனைத் தள்ளிக் கொன்றுவிட்டு அவள் புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்குணியானாள்.

இவ்வாறு துறவியானவர்கள் தங்கள் வரலாறுகளைப் பாடி வைத்திருப்பதை ஒரு வகையில் குரல் கொடுத்த முன்னோடிகள் எனலாம். கணிகையர் பலர் போக வாழ்க்கையை விடுத்துத் துறவு பூண்டனர். அம்பாலி, அர்த்தகேசி, பத்மாவதி, விமலா என்ற பெயர்கள் புகழ் பெற்ற கணிகையர்க்குரியவை. சநாதன வேத குருபீடங்கள் கணவனை இழந்த மனைவிக்கு, அக்கினியில் புகுவதிலிருந்து விலக்களித்து, கட்டாயத் துறவை விதித்தன.

பெண்ணின் தலையை முண்டிதம் செய்து அலங் கோலமாக்கும் வழக்கம், சமண, புத்த சமயங்கள் துறவுரிமை அளித்ததன் எதிரொலியாகப் பெண்ணுக்கு வந்து விடிந்தது என்று கொள்ளலாம்.

தமிழ்ச்சங்க இலக்கியங்களின் காலத்தை வரையறை செய்வதில், கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. 'சங்கம்' என்ற சொல்லே, புத்தமதம் சார்ந்ததாகும். கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டி ல் தோன்றிய 'மணிமேகலை' என்ற காப்பியத்தில்தான் 'புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க' என்று காணப்படுகிறது என்று பேராசிரியர் வித்தி யானந்தன் 'தமிழர் சால்பு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சங்க நூல்களில், 'சங்கம்' என்ற சொல்லே வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்குகிறார்.

எனினும் 'புலவர் அவை' என்ற அமைப்பும், ஒரே தன்மையுடைய பண்புகளைக் கொண்ட இலக்கியங்கள் எழுந்த அக்காலமும் அப்பாடல்களால் தெரிய வருகின்றன.

சங்ககாலம் என்பது கி.மு. முதலாம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையுள்ள காலப்பரப்பைச் சங்ககாலமெனக் கொள்ளலாம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இப்பாடல்கள் பாடப்பட்டன என்றும், தொகுக்கப்பட்ட காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர் கருத்துரைத்திருக்கின்றனர்.

காலக் கணிப்பு முன் பின்னானாலும், சங்க காலத்தில், பெண்ணின் கைம்மை நிலை, பரிதாபத்துக்குரியதாகக் காட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமாகிறது. சங்க இலக்கியப்பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற தொகுப்புகள், வீரர் பெருமை, போர்க்கள வெற்றி ஆகியவற்றை முதன்மைப் படுத்துகின்றன. வீரரைச் சார்ந்த காதலியர், கற்பு நெறியில் ஒழுகும் தலைவியர் ஆகியவர் நிலைகளில் பெண்களின் வாழ் நிலையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சுடுகாட்டுக்கு வந்த மனைவியை, மங்கலப் பெண்களுடன் வீடு திரும்பிச் செல்லும்படி பணிக்கும் ருக் வேதப் பாடலில், அதற்கு முந்தைய எரிக்கும் வழக்கத்தின் மெல்லிய இழைச் சான்று தெரியவருகிறது. அது, மாற்றப்படும் கூறு அழிக்கப்பட்டு, பெண்கள் கணவனுடன் எரிக்கப்பட்டனர். சட்டங்களும், கல்வி, புதிய நாகரிகங்கள் எதுவும் இந்த வழக்கத்தை அடியோடு ஒழித்து விடவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், ‘ரூப்கன்வார்’கள் பலர் எரிக்கப் படுகிறார்கள்.

சங்க இலக்கியங்கள், பெண்ணை உரிமையுள்ளவளாகக் காட்டுவதாகவே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை வெறுக்கக்கூடிய கருத்தும் துறவு நெறியும், புலாலுண்ணாமை போன்ற ஒழுக்கங்களும் முதன்மைப் படுத்தப்பட்ட, சமண பௌத்த சமயச் செல்வாக்கு வலிமை பெற்றிராத தமிழ்ச் சமுதாயத்தை அந்த இலக்கியங்களில் காணமுடிகிறது. ஆரிய சமுதாயத்தின் வருணப் பாகுபாடுகள் கூட ஆழ்ந்து பிரதிபலிக்காத இச் சமுதாயத்தில் பெண்கள் சமூக விழாக்களில் பங்குபெற்றுச் சுதந்தரமான வாழ்க்கை நடத்தினர்; கணவருடன் கள்ளருந்தினர். மகளிர் ஆடவருடன் கலந்து பழகத் தடை யிருக்கவில்லை. வினைகள் இயற்றுவதில் கணவருக்குப் பெண்கள் துணையாயிருந்தனர், பரணில் ஏறிக் கிளிகளை விரட்டிப் பயிரைப் பேணினர்-பாலை நிலத்து எயிற்றியர் (வேடர்) இரும்பு அலகினையுடைய மண்வெட்டிகளினால் நிலத்தைத் தோண்டுவர்-இல்லத்துப் பெண்கள் வாயில் முற்றம் கூட்டிச் சுத்தம் செய்வதில் இருந்து, நெல் குற்றுவது போன்ற அனைத்துப் பணிகளையும் செய்தனர். பாசறைகளிலும் பெண்கள் வினை இயற்றினர் என்றெல்லாம், பேராசிரியர் வித்தியானந்தன் தம் நூலில் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, புறநானூறு, மலைபடுகடாம், ஐங்குறு நூறு போன்ற பல நூல்களிலிருந்து சான்றுகளுடன் தெரிவித்துள்ளார். பெண்கள் காதலித்து மணந்த தலைவர்களுடன், கற்புநெறி தவறாத வாழ்க்கையில் எல்லா உரிமைகளுடனும் வாழ்ந்தனர் என்றே பொதுவான சித்திரம் தீட்டப்படுகிறது.

பெண்ணின் வாழ்வில், அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அவலமான சோகக் கூறாகப் பற்றியுள்ள கைம்மை நிலை பற்றிய குறிப்பை இந்நூல் தரவில்லை.

புறநானுற்றில், இது பற்றிய பல சான்றுகள் காணப்படுகின்றன. 246 ஆம் பாடல், பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்ற அரசிக்குரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாண்டிய நாட்டின் வட எல்லை, ஒல்லையூர் என்ற நாடு. அதைச் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். பூதப்பாண்டியன் சோழனுடன் போரிட்டு அதை வென்றான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு, அரசியல் அறிந்தவள். கணவன் இறந்ததும் இவ்வரசி தீப்புக முனைந்தாள். அப்போது, அரசியல் சுற்றத்தாரான பெருமக்கள், அரசன் இல்லாக் குறை நீங்க, அரசை ஏற்று நடத்திட வேண்டும், தீப்புகக்கூடாது என்று தடுத்தனர். ஆனால் அவள் செவி மடுக்கவில்லை. அதற்கு அவள் கூறிய காரணம் குறிப்பிடத் தகுந்ததாகும்.

‘என்னைத் தீப்புகுதல் நன்று என்று சொல்லாமல் தடுக்கும் சான்றோரே...’ என்று விளிக்கையில், ‘பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே’ என்று குறிப்பிடுகிறாள்.

‘நெய்யும் அரிய பண்டங்களும் விலக்கி, வெறும் நீர்ச் சோற்றில் புளிசேர்த்துச் சமைக்கப்பட்ட வேளைக் கீரையைச் சேர்த்து ஒரு நேரம் உண்டு, பாயில்லாத பருக்கைக்கல் படுக்கையில் படுக்கும் கைம்மையின் கொடுமைக்கு, இந்த ஈமப்படுக்கை மேலானது’ என்று உரைக்கிறாள். இந்தப் பாடலை அடுத்து, அவள் காட்டிலுள்ள காளிகோயிலின் முன் தீ வளர்த்து எரிபுகுந்ததை, மதுரைப் பேராலவாயர் என்ற புலவர் 247 ஆம் பாடலில் சித்திரிக்கிறார். இதே கைம்மை நிலையை, இரங்கத்தக்கதாக, ஒக்கூர் மாசாத்தனார் (248) தும்பைச் சொகினனார் (249) தாயங்கண்ணியார் (250) ஆகியோர் விவரிக்கிறார்கள். ஆவூர் மூலங்கிழார் (261) பாடலில், ‘கொய்ம்மழித்தலையொடு கைம் மையுறக் கலங்கிய’ என்று வள்ளலான் நண்பன் காரியாதி என்பவர் இறந்ததும், மனைவி, மழித்த தலையுடன் காட்சியளித்ததையும் குறிப்பிடுவார்.

எனவே, இச்சான்றுகள், தாயநாயகச் சமுதாயமாக தமிழ்ச் சங்ககால சமுதாயத்தைக் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்குதற்குரிய நெறிகளாக, ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.