இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/கவிக்குரல்கள்



8. கவிக் குரல்கள்


ழுதப் படிக்கத் தெரியாத பெண்.

ஆனாலும் ஒரு தாய் என்ற நிலையில் உலகியல் ஞானங்களைத் தன் உணர்வுகளாலேயே பெற்று விடுகிறாள். மகவுக்காகத் தன் ஊனையும், உயிரையும் மகிழ்வுடன் ஈந்து ஒடுங்கும் இயல்பைத் தன் பிறப்பினாலேயே அடையப் பெற்றவள்.

இவள் தன் மகவைப் பாலூட்டிச் சீராட்டி உறங்கச் செய்ய, அன்பைக் குழைத்து, ஆவியை உருக்கும் இனிய குரலால் தாலாட்டுப் பாடுகிறாள். சொற்கள் எப்படி அழகழகாய் வந்து பாடலை அழியாக் கவிதையாக்குகின்றன?

துயரம் வெடிக்கும் போது, அந்த உணர்வுகள் ஒப்பாரியாக, சோகம் உருக்கும் சொற்களாக எப்படி வெளிப்படுகின்றன?

இலக்கண இலக்கியக்காரர்கள் குப்பை என்று தள்ளும் சொற்கள், அவர்களிடமே அரச மரியாதை பெற்றுவிடும் வகையில் வந்தமர்ந்து கொள்கின்றன.

உலகில் கவிஞர் என்றும் அறிவாளி என்றும் முதலுரிமை கொண்டாடுபவன் ஆண்தான். இவர்கள் நாவிலிருந்து பிறக்கும் மொழிகளை அப்படியே பொறித்து வைக்க ஏடும் எழுத்தாணியுமாக ஒரு சீடர் - தொண்டர் குழாம் சூழ்ந்திருக்கும்.

பெண்ணுக்கு இந்தச் சிறப்புகள் இல்லை. இவள் சொற்களை, உந்தி வரும் உணர்வுகளை யாரும் பதிவதில்லை. நாற்று நடும் போதும், ஓங்கி ஓங்கி உலக்கையால் குத்தும் போதும், கல்திரிகையைக் கட்டி இழுக்கும் போதும், உழைப்பாளிப் பெண் பாடுகிறாள். ஒருவருக்கொருவர் விரோதிகளாக மோதிக் கொள்ளும் போதும் மோதல்களில் வெடிக்கும் சொற்களில் அவர்களுடைய வெளியீட்டுத்திறன் கோலம் கொள்வதை ரசிக்க முடியும்.

என்றாலும், பல மொழிகளிலும் அறிஞர், கலைஞர், கவிஞர் என்ற சொற்களெல்லாம் ஆண்களையே குறிக்கின்றன. ‘வீரர்’ என்ற சொல்லையே ‘ஆண் சந்ததி’ என்ற பொருளில் குறிப்பிடுகிறார்கள்.

இவளுக்கென்று விதவை (கைம் பெண்) சுமங்கலி, வ்யபிசாரி, வாழாவெட்டி போன்ற சொற்களே ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

பெண்களுக்குக் கல்வியும் அறிவும் உரிமையாக்கப் படவில்லை என்ற சமூக உண்மையைப் பெரும்பாலோரும் ஒத்துக் கொள்வதில்லை.

‘வேதகாலத்தில் - பிரம்மவாதினிகள் இருந்திருக்கிறார்கள். ருஷிகளாகப் பல வேதப்பாடல்களை யாத்திருக்கிறார்கள்’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

இதே போல் தமிழன்பர்களும் ‘சங்கப்பாடல்களை யாத்த பல பெண்பாற் புலவர்கள் இருக்கிறார்கள். ஔவையார் ஒருவர் போதுமே!’ என்று சொல்லத் தவறுவதில்லை.

ஆனால் ஆராய்ந்து பார்த்தால், இது ஒரு பேச்சுக்கு ஆறுதலாக, சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே சரியாக இருக்கும் என்றால் தவறில்லை.

வேதப்பாடல்களில் காணப்படும் பெண்கள் பற்றி, ஓர் ஐயக் கருத்தை ‘வேத காலத்தில் பெண்கள்’ என்ற தம் நூலில், டாக்டர்.சகுந்தலா ராவ் சாஸ்திரி முன் வைக்கிறார்.

1. முழுதுமாகப் பெண் ருஷிகளால் பாடப்பட்டவை.

2. உரையாடல்களில், பெண் பெயர்களில் வருபவை. 3. பெண் ருஷிகளின் பெயரில் (ஐயத்துக்குரியதாக) பாடப்பெற்றவை.

கோசா, அபாலா, லோமசா, ஸூர்யா (ஸாவித்ரி, ஜூஹீ) (பிரும்மா - பிருஹஸ்பதி மனைவி) ஸர்ப்பக்தி-யமி-ஊர்வசி என்றெல்லாம் பெயர்கள் காணப்பட்டாலும், மிகச் சிறப்பான இடத்தைப் பெறும் முக்கியத்துவத்தை எந்த ஒரு பெண் ருஷிக்கும் அளிப்பதற்கில்லை.

முதல் மண்டலத்தில் (1-23-15) அகஸ்தியரின் மனைவி லோப முத்ராவின் இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன. ரதி தேவதைக்குரிய துதிப்பாடல்.

‘நெடுங்காலமாகத் தங்களுக்குத் தொண்டாற்றினேன்

....அல்லும் பகலுமாக... இடைவிடாது ...

காலையிலும் மாலையிலும்...... எனது அங்கங்கள் தளர்ந்தன

மூப்பும் வந்தடைந்தது.’

எனவே, இப்போது கணவன்மார் தங்கள் மனைவியரை நாடட்டும். தொன்மைச் சான்றோர், கடவுளர் சத்தியம் என்ற நெறியில் நிலைத்தவர். சந்ததிக்காக தங்கள் தவ வாழ்வின் நெறிகளைக் குலைக்காதவர், தம் மனைவியரை அணுகட்டும்.

தவ வாழ்வில் ஆழ்ந்துள்ள கணவரான அகத்திய முனிக்கு, தன் ஆசைகளையும் இளமையின் உந்துதல்களையும் அடக்கிக் கொண்டு, தொண்டூழியம் செய்த மனைவி லோபமுத்திரை, பொறுமையின் உச்சத்தில் நின்று உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல் அது.

பத்தாம் மண்டலத்தில் (X-11-17) ருஷிகா இந்திராணியின் பாடல் இடம் பெற்றிருக்கிறது.

இப்பாடல்கள், ஒரு மனைவி, தனக்குப் போட்டியாக முளைத்த இன்னொரு பெண்ணைத் தவிர்க்கப் பயன் பெறும் மந்திரப் பாடல்களாகக் கருதப்பட்டிருக்கின்றன.

இப்பாடல்களில் மேல்நோக்கிய இலைகளைக் கொண்ட மங்களமான ஒரு கொடி குறிக்கப்படுகிறது. இதைத் தோண்டி எடுப்பதனால், பெயரும் குறிக்க விரும்பாத அந்தப் போட்டிப் பெண்மணி விலகிப் போனாள். இந்த நாயகி ஒருத்தியைத் தவிர, அந்த நாயகனை வேறு எந்தப் பெண்ணாலும் மகிழ்விக்க முடியாது.

அக்கொடியின் வேரைத் தலையணைக்கடியில் வைத்துக்கொள்வதனால் இந்த நாயகிக்கே அவன் என்றும் உரியவனாக இருப்பான். ஒருவனைச் சார்ந்து புகழ் பெறவேண்டும் என்ற ஆண் நாயகக்கூறு, பெண்ணுக்குப் பெண் பகையையும் பொறாமையையும் தோற்றுவித்திருப்பதை இப்பாடல் விள்ளுகிறது.

மாமி-மருமகள் என்ற எதிர்ப்பைக் காட்டிலும் இந்தச் சக்களத்தி பகை மூத்ததாகும்.

‘கோசா’ என்ற ருஷிகா, பிரும்மவாதினி என்று குறிப்பிடப்படுகிறாள். இவள் ‘காக்சிவன்’ என்ற ருஷியின் மகள். இவள் ஒரு தீராத நோயினால் பீடிக்கப்பட்டு, வெகு நாட்கள் திருமணம் செய்து கொள்ள முடியாதவளாக இருந்தாள். இந்த நோய், அசுவினி தேவர்களின் மருத்துவத்தால் குணமாயிற்று. பின்னர் திருமணமும் செய்து கொண்டாள்.

அசுவினி தேவர்களின் மருத்துவத்திறனைப் புகழ்ந்து பாடும் இவள் பாடல்களே (X-3-10, X-3-11) பத்தாம் மண்டலத்தில் காணப்படுகின்றன.

ஸூர்யா, வாக் போன்ற பெண் தெய்வங்களே யாத்த பாடல்களாக அவர்கள் பெயரில் வரும் பாடல்கள் விளக்குகின்றன. யமன்-யமி-புரூரவஸ்-ஊர்வசி விவாதங்களில் காணப்படும் பெண்களின் உரைகள் அவர்களுக்கே உரியவையாகக் குறிக்கப்படுகின்றன. எனவே, பெண்கள் ஆண் ருஷிகளுக்குச் சமமாகப் பாடல்களை யாத்து, மேலாம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஒரு வகையில் உயர்வு நவிற்சியாகவே தோன்றுகிறது.

சங்க இலக்கியங்களில் பல பெண்பாற்புலவர்கள் காணப்படுகிறார்கள். அள்ளூர் நன்முல்லையார்; இளவையினார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, பாரிமகளிர், பூங்கண் உத்திரையார், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு, பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினியார், மாறோக் கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார்... என்று பட்டியல் நீண்டு செல்கிறது.

இப்பட்டியலில் காணப்படும் பெண்கள் அனைவரும் உயர் குடியைச் சேர்ந்தவரல்லர்- வேட்டுவர் குலம், குயவர் குலம் ஆகிய குடிகளில் பிறந்த பெண்களும் புலமை பெற்றிருக்கின்றனர் என்ற செய்தி நம்மைக் கவர்வதாக இருக்கிறது.

இவர்களுடைய பெயர்களுக்கு முன் காணப்படும் சிறப்புக் குறிப்பு இவர்கள் பாடலின் காரணமாக இசைந்ததாகும்.

பேய்மகள் இளவெயினி - போர்க்களத்தில் பேய்களை வியந்து பாடியவர் (புறம்-11) இவர் வேட்டுவர் குலம் என்று தெரிகிறது.

வெண்ணிக்குயத்தியார் - வெண்ணி - தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர். இவர் கரிகாலனைச் சிறப்பித்துப் பாடும் பாடலில், சமத்காரமாக பெருஞ்சேரலாதனைப் புகழ்கிறார் (புறம்-66). கடலில் இயங்கும் காற்றைக் கலம் செலுத்துதற்குப் பயன்படுத்தியவர், பண்டைத்தமிழர் என்று சிறப்பித்து, அத்தகைய மரபில் வந்த “கரிகால் வளவா உனக்குத் தோற்ற பெருஞ்சேரலாதன் உன்னாலுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி, வடக்கிருந்து உயிர்விட்டான். உன்னைவிட அவன் புகழுக்குரியவன்..” என்று வீரத்தைப் பாடும் இவர் குயவர் மரபினைச் சேர்ந்தவர் என்றே பெயர் குறிக்கிறது.

அக்காலத்தில் சிறந்த வேட்கோவர்-மண்பாண்ட வினைஞருக்கு, கலைஞருக்கு, ‘குயம்’ என்ற பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு என்றும், பத்தாம் நூற்றாண்டு வரையிலும் இம்மரபு இருந்திருக்கிறதென்றும் தெரியவருகிறது. எனவே, குயம்-குயவர் குயத்தி என்பது கலைஞருக்குரிய ஒரு சிறப்புப் பட்டம் என்றும் கொள்ளலாம்.

அள்ளூர் நன்முல்லையார் என்ற பெண்பாற் புலவரின் பாடல்கள் குறுந்தொகை (9) அகம் (1) புறம் (1) ஆகியவற்றில் காணப்படுகின்றன. ஊரெல்லாம் தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்தைக் கூறித் தூற்றியபோதும் தலைவி தன் வாயால் அவனைக் குறைகூறமாட்டாளாம்.‘ஊரெல்லாம் உம்மைக் குறை கூறினாலும் நான் தூற்றமாட்டேன்; நீர் அங்கேயே செல்லலாம். உம்மைத் தடுப்பவர் இல்லை’ என்று குமுறலுடன் அவள் சொல்வதாகப் பாடுகிறார்.

தலைவனைக் குறைகூறி வருத்திப் போராடாத இப்பண்பு அவள் கற்பின் திண்மையைக் காட்டுமாம்!

காக்கைபாடினியார் நச்செள்ளையார் குறுந்தொகை 210 ஆம் பாட்டில் காக்கை கரைந்தமையைப் பாராட்டிப் பாடியதால் இப்பெயர் பெற்றார். ‘விருந்தினர் வரும்படி, கரைதலைச் செய்த காக்கை..’ காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இன்றளவும் இருக்கிறது.

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பொதுவாக, மன்னர், வீரர், கொடைத்திறம் ஆகியவற்றையே பாடியிருக்கின்றனர். போர்-காதல், மகளிர் கற்பு ஆகிய வாழ்க்கைக் கூறுகள் முக்கியமாகக் கருதப்பட்டிருக்கின்றன.

பெண்டிரின் நிலைபற்றிக் குறிப்பிடுவதாக பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்ற (அரசி) பெண்பாற் புலவரின் பாடல் விளங்குகிறது. ‘கைம்மை கொடியது. எனவே, தன்னை உடன்காட்டை ஏற விட வேண்டும்’ என்ற முறையீடாக இப்பாடல் அமைந்துள்ளது. இவர் அரசியல் அறிந்த அரசி என்பதால் உடன்கட்டை ஏறவேண்டாம் என்று தடுத்தவரை மறுத்து, உடன்கட்டை ஏறினார் என்று தெரிய வருகிறது.

ஔவையார் தமிழுலகம் மிக நன்கறிந்த பெண்பாற் புலவர் என்றாலும், சங்ககால ஔவையாரும், ஆத்திசூடி, வாக்குண்டாம், கொன்றைவேந்தன், போன்ற நீதி நூல்களைப் பாடிய ஔவையாரும் ஒருவரேயல்லர் என்பது தெளிவு இருந்தாலும், நெடுநாள் வாழக்கூடிய நெல்லிக் கனியை அதியமான நெடுமானஞ்சி இவருக்கு வழங்கினான் என்றும், அதனால் இவர் யோகினியாகப் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பாடினார் என்றும் சொல்வாருண்டு.

சிறந்த பெண்பாற்புலவர் பலர் ஔவை என்ற பெயரால் வழங்கப் பெற்றிருத்தல் என்றும் ஊகிக்கலாம். தமிழ் நாட்டில் இப்பெருமாட்டிக்குப் பல இடங்களில் கோயில்களும் இருக்கின்றன. இவரைப் பற்றிய பல செய்திகளையும் ஒன்றாக இணைத்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஔவையார்’ என்றொரு திரைப்படம் வெளியாயிற்று.

புறநானூற்றில்,
‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்துண்ணு
மன்னே...’

என்று அதியமான் நெடுமானஞ்சியின் பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடிய காலம் வேறு.

‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத்
தன்தேச மல்லாமற் சிறப்பில்லை; கற்றோர்க்கு
சென்றவிட மெல்லாம் சிறப்பு’

என்று பாடப்பட்ட காலம் வேறு.

‘வள்ளுவரைப் பற்றியும் இளங்கோவடிகள் பற்றியும் படித்த புலவர் பெருமக்களே அறிவர். ஆனால் இந்தத் தமிழ் நாட்டில் ஔவையின் நீதி வாக்கியங்களே யாவரையும் வழிப்படுத்துகின்றன. வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் 1330 குறட்பாக்களில் அடக்கினார் என்று பாராட்டப்படுகிறார். ஆனால் வீடு என்ற நான்காம் பேற்றையும் உள்ளடக்கி ஔவைப் பிராட்டி நான்கே வரிகளில், ‘ஈதலறம்; தீவினை விட்டீட்டல் பொருள்; காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்; இம்மூன்றும் விட்டதே வீடு’ என்று பாடியுள்ளார். இதனைப் பாரதியும் பாராட்டியுள்ளார். ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்று புதிய விளக்கம் கொடுக்கும், இப் பெருமாட்டி, ‘பேதைமை என்பது மாதர்க்கணிகலம் என்றும், தையல் சொற்கேளேல்’ என்றும் கூறியிருப்பாரோ? அல்லது இது இடைச்செருகலோ? எவ்வாறாயினும், பாரதி புதிய ஆத்திச்சூடியில்; பழைய தையல் சொற் கேளேல், ‘(பெண்வழிச் சேரேல்) என்ற வரியை நீக்கி மாற்றி, ‘தையலை உயர்வு செய்’ என்று கூறினார்.

பொதுவாகவே, எல்லாக் குடிகளைச் சார்ந்த பெண்பாற் புலவர்களும் அக்காலத்தில், வீரம் என்பது ஆண்களுக்கே உகந்தது, ‘வீரர்’ என்பவர் ஆண் சந்ததியினரே (புறம்-279) என்ற புலவர், ஒரு முது குடி மகளின் வீரச் செயலைப் பற்றிப் பாடுமிடத்து, ‘முதல் நாள் தந்தையை இழந்தாள்; அடுத்த நாள் கணவனை இழந்தாள்; எனினும் கலங்காது, தன் பிஞ்சுப் பாலகனுக்கு முடி திருத்தி, கச்சையணிவித்து, கையில் வேலைக் கொடுத்து அன்றைய போருக்கு அனுப்பினாள்’ என்று பாடுகிறார். அந்த வீரமகள் தானே கையில் வேலெடுத்துச் செல்லவில்லை. பெண்கள் போர்ப் பாசறைகளில் இருந்தனர். அவர்கள் யாவர்?

அக்கால விறலியர், மன்னரையும் போர்த் தலைவர்களையும் களிப்பிப்பவர்கள். பதிற்றுப்பத்து (44:7-8) செங்குட்டுவன் பாணர் கூட்டத்தில் வந்த பாடுமகளைத் தழுவி இன்புற்றான் என்று தெரிவிக்கிறது. விழாக் காலத்தில் நடனமாட வந்த விறலியின் அழகைக் கண்ட ஊர்ப் பெண்கள், தத்தம் கணவரைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தார்கள் என்று (நற்றிணை) (170: 5-8-9) வேறொரு பாடல் கூறுகிறது.

எனவே, சமுதாயத்தில் சரிசமமான கௌரவத்துடன் பெண்கள் அறிவுடையவர்களாக மதிக்கப் பெற்றார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

கைம்மைக் கொடுமையை ஏற்க இயலாமல் தீப்புக முடிவு செய்த அரசியினால், கைம்மைக் கொடுமையின் அநீதியை எதிர்க்க முடியவில்லை. வேதத்தில் காணப்படும் சார்ந்து வாழும் தந்தை நாயக நீதிகளே இங்கு ஆழ்ந்திருக்கின்றன. சிலப்பதிகாரம் சங்க நூல்களுக்குப் பிற்பட்டது என்று கருத்துரைக்கப்பட்டாலும், சங்க இலக்கியங்களின் தொடர்புடையதாகவே இருக்கிறது.

இந்தக் காப்பியத்தில் நம்மைக் கண்ணகியின் பாத்திரப் படைப்பே அதிகமாகக் கவருகிறது.

இவள் ஏதும் அறியாத சிறுமியாகவே இருக்கிறாள். கணவன் மாதவியிடம் செல்வங்களைத் தோற்று விட்டுத் திரும்பிய போது, அவள் அந்த அநீதியைப் பற்றி ஒரு சொல் எழுப்பவில்லை. கணவனோடு புறப்பட்டுக் கல்லும் முள்ளும் நிறைந்த கானக வழியில் நடந்து மதுரைக்கு வருகிறாள். இங்கே வந்து, கணவன் கொலையுண்டான் என்ற செய்தி வந்த பிறகுதான் இவள் விசுவரூபம் எடுக்கிறாள்.

ஒன்றுமே அறிந்திராதவளாகக் காட்டப்பட்ட இப் பெண், அரசன் முன் சென்று நீதி கேட்கும் ஆங்காரியாகிறாள். அரசன் தன் தவறை உணர்ந்து அக்கணமே உயிரை விட்ட பின்னரும், அவன் பத்தினி உயிரை விட்ட பின்னரும் அவள் சீற்றம் தணியவில்லையாம்.

‘தன் இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அமைந்து, மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள், எறிந்தாள்’-

என்று சிலப்பதிகாரம் விரிக்கிறது. இது ஒர் அதீதமான செயலாகவே இருக்கிறது.

பெண்மையின் - தாய்மைக்குரிய அடையாளமான உறுப்பைத் திருகி எறிந்து சூளுரை செய்யும் இச்செயல், அபூர்வமானதாக, அறிவுக்கும் பொருந்தாததாகவே தோன்றுகிறது.

‘சங்ககால மன்னர் காலநிலை வரலாறு’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வி. புருஷோத்தம், இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்வழக்கம் ‘திவ்ய வதனா, ஜாதக மாலா’ என்ற பௌத்த நூல்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கிறார்.

தன்னைப் பிரிந்த கணவனின் கவலையில் வாடி வருந்திய மாவுண்ணி என்ற பெண், இப்படி ஒரு மார்பகத்தைக் கொய்து கொண்டாள் என்றும், காலப் போக்கில் அவள் கடவுளாக வணங்கப்பட்டாள் என்றும், அவளுக்கு வேங்கை மர நிழலில் கழனிகளில், பரண்களில் கோயில்கள் அமைக்கப்பட்டன என்றும் நற்றிணைப்பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.

திருமாவுண்ணி என்ற அந்தப் பெண்ணின் வரலாறும்,

ஆவியர் குடித் தலைவன் பேகன் என்பவன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து, ஒரு பரத்தையுடன் வாழ்ந்ததும் (புறம் 143-147) சிலப்பதிகாரம் உருவாகச் செய்திகளாக உதவியிருக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

கட்டியவளுக்கு அநீதி செய்வது கணவனின் உரிமை; ஆனால் கணவனுக்கு அநீதி என்று வரும்போது, அவள் இயற்கையின் சீற்றத்தையே எழுப்பி விடுமளவுக்குப் பொங்கெழுச்சி கொள்கிறாள். இந்தக் கற்பு வழிபாட்டுக்குரியது.

கற்பு நெறி என்பது, நூற்றாண்டுகள் மனித சமுதாயத்தின் உயிரோட்டமான இழைகளை ஊடுருவி மகளிரின் மனித உரிமைகளைப் பிணிப்பது தெரியாமல் பிணிக்கச் செய்த வரலாறுகள் இவை.