இந்தி எதிர்ப்பு ஏன்?/அறிஞர் அண்ணா ஆற்றிய உரை

அறிஞர் அண்ணா

ஆற்றிய உரை

அன்புள்ள தோழர்களே,

"வட ஆற்காடு மாவட்டம், தமிழகத்திலே இந்த நாளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை முதல்முதல் தமிழகத்திற்கு அறிவிக்கின்ற முறையில் இன்றைய தினம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துகின்றது. வ. ஆ. மாவட்டத்திலேயுள்ள நண்பர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டை இங்கே நடத்துகின்ற நேரத்தில் முதல் நாள் நடைபெறுகின்ற மாநாடு இந்தி எதிர்ப்பு மாநாடாக அமையவேண்டும் என்ற சூழ்நிலை நாட்டிலே இன்று உருவாகியிருக்கிறது.

“அந்தச் சூழ்நிலையை நல்லபடி உணர்ந்து நம்முடைய நண்பர்கள் முதல் நாள் மாநாட்டை ‘இந்தி எதிர்ப்பு மாநாடு’ என்று நடத்தி அதன் மூலமாக நீண்டநாளாக நம்மிடையே தொடர்பு கொண்டு இருந்தவரும், இடையிலே தனது துறையிலே பணியாற்றிக் கொண்டிருந்தவருமான எனது கெழுதகை நண்பர் – துறவிகளுடைய இலக்கணத்துக்கு ஒரு நடமாடும் சான்றாக இருந்து கொண்டிருப்பவர் – காவிகளெல்லாம் கறைபட்ட காலத்திலே, காவி உடையிலேயும் நல்ல உள்ளத்துடன் நடமாட முடியும் என்பதை நாட்டுக்கு எடுத்துக் காட்டியவர் – மறத்தமிழ்க்குடியிலே பிறந்தவர் – மறந்தும் தமிழுக்கு இழுக்குத் தேடுபவர்களை எந்தத் திக்கிலிருந்தாலும் அவர்களைச் சாடத்தக்க வகையிலே மன வலிமை படைத்தவர் – அருணகிரி அடிகள் அவர்களை இன்றைய மாநாட்டிலே நம் முன்னே கொண்டுவந்து நிறுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. வ. ஆ. மாவட்டத்திற்குத்தான் இந்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. வ. ஆ. மாவட்டந்தான் அந்த வாய்ப்பைத் தர வேண்டும். ஏனென்றால் வ. ஆ. மாவட்டம் தி. மு. கழகத்திற்கு அவ்வப்போது கைகொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் வ. ஆ. மாவட்டத்தின் காரணமாகத்தான் தி. மு. கழகமே துவக்கப்பட்டது. வ. ஆ. மாவட்டம் பெரியாருக்குப் பெண் கொடுக்காமலிருந்திருந்தால், தி. மு. கழகமே தோன்றியிருக்காது. ஆகையினாலே வ. ஆ. மாவட்டம் நெருக்கடியை உண்டுபண்ணுவதிலும் தலைசிறந்தது; ஏற்படுகின்ற நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்குப் பரிகாரம் தேடுவதிலும் முன்னணியில் இருப்பது. அப்படிப்பட்ட வ. ஆ. மாவட்டத்திலே நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் இந்தி எதிர்ப்பு பற்றி ஒரு தனி மாநாடாக நடத்துவது மிகப் பொருத்தமுடையது.

"இன்றைய மாநாட்டிலே காலை முதற்கொண்டு நடைபெற்றுவருகின்ற நிகழ்ச்சிகளை நீங்களெல்லாம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தீர்கள் – கேட்டுக் கொண்டிருந்தீர்கள். 1937-ம் ஆண்டிலே – அந்த நாட்களிலே இந்தி எதிர்ப்பு இயக்கத்திலே ஈடுபட்டிருந்த என்போன்றவர்களுடைய மனமெல்லாம் 1937-ம் ஆண்டுக் காலத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது; எங்களுடைய மனக்கண் முன்னாலே தொண்டை மண்டலம் பள்ளிக்கூடம் காட்சியளித்தது; இந்து தியலாஜிகல் பள்ளிக்கூடம் காட்சியளித்தது; குதிரைப்பட்டாளம் காட்சியளித்தது; சிறைச்சாலைகளிலே தரப்பட்ட மண் கலயங்களும் காட்சியளித்தன. எங்களுடைய மனக்கண் முன்னாலே அந்த நேரத்தில் மூன்று துறவிகள், தி. மு. கழகம் துவக்கப்படாத காலத்திலேயே – இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் திறம்பட நடத்துவதற்கு பக்கத்திலே நின்றார்கள். அவர்களிலே தலை சிறந்தவராக நம்முடைய நண்பர் அருணகிரி அடிகள் அந்த நேரத்தில் நின்றார்கள். அவர்களுடைய வெண்கலக்குரல் முதுமையின் காரணமாக இன்றையத்தினம் கொஞ்சம் தட்டுப்பட்டிருக்கின்றது. அவருடைய வீர உணர்ச்சி முதுமையின் காரணமாகக் குறைந்துவிடவுமில்லை; குலைந்து விடவுமில்லை.

“அவருடைய சொல்லையும், அந்த சொல்லோடு கலந்து வந்த வீர முழக்கத்தையும், வீரமுழக்கத்துக்குத் துணைநின்ற வீரப்பாடல்களையும் சென்னை நகரத்திலே எல்லா மூலைமுடுக்குகளிலேயும் கேட்டிருக்கிறார்கள்.

“என்ன மடமை, இந்த இராசகோபாலாச்சாரிக்கு” - என்று இந்த தெருக்கோடியிலே இவர்பாடல்களைக் கிளப்பினால் மறு தெருக்கோடியிலே உள்ளவர்கள் வருவார்கள். அப்பொழுதெல்லாம் ஒலிபெருக்கிகள் இல்லாத காலம்.

“ஒலிபெருக்கிகள் அபூர்வமாக வைக்கப்பட்ட காலத்தில், தெருத்தெருவாக அந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு அருணகிரி அடிகள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில், அவர்கள் ஒரு மடத்திலே மிக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த மடத்திலே அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. அவரை அண்டிப் பிழைப்பவர்களும், அவரை அடிவருடக் கூடியவர்களும், அவரை ‘அடிகளே’ என்று அன்புடன் அழைக்கக் கூடியவர்களும், அவருடைய மதவுரைகளைக் கேட்டு மகிழத் தக்கவர்களும், ஏராளமாக அந்த மடத்திலே இருந்தும், மடத்திற்கு வெளிப் புறத்திலே இருந்தும், தமிழுக்கு ஒரு ஊறு நேரிடுகிறது – தமிழ்மொழிக்கு இழுக்கு வருகின்றது என்று கேள்விப்பட்டவுடன் மடத்திலே இருக்கின்ற காரியத்தைப் பற்றியும் கவலைபடாமல் காவி உடையோடு, நம்மோடு கைகோர்த்துக்கொண்டு, தமிழகக்திலே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மிகத் திறம்பட நடத்தியவர்கள் அருணகிரி அடிகள் ஆவார்கள். அவர்கள் இந்த மாநாட்டுக்குத் தலைமைவகிக்க வேண்டுமென்று நண்பர் நடராசன் மூலம் மெத்த விரும்பி வேண்டிக் கேட்டுக்கொண்டேன். இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டுமென்று நண்பர்கள் விரும்பிய நேரத்தில், அதற்குத் தலைமைவகிப்பதற்கு யாரை அழைக்கலாம்; யாராவது தமிழ்ப்புலவரை அழைக்கலாமா? என்று முதலிலே எண்ணினோம்.

“அதற்குப் பிறகு தமிழ்ப்பெரும் புலவர்கள்; தமிழிலே தான் திறமை பெற்றிருக்கக் கூடுமே தவிர, தாய் திருநாட்டு விடுதலைக்கு ஏற்ற ஆற்றல் அவர்களுக்கிருந்தாலும், அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல்கள் அவர்களுக்கு அச்சத்தையூட்டும் என்ற காரணத்தினாலே, அவர்களைத் தேடாமல் இருந்தோம். அப்படியானால், பெரிய அரசியல் தலைவர்கள், நம் இயக்கத்தோடு இரண்டறக் கலந்து இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெருங்கி வரக்கூடியவர்கள், ஓரத்திலே இருந்தாலும் நம்மிடத்திலே கொஞ்சம் உள்ளன்பு படைத்தவர்கள், அப்படிப்பட்டவர்கள் யாரையாவது அழைத்து தலைமை வகிக்கச் சொல்லலாமா என்று நண்பர்கள் என்னிடத்திலே சொன்னார்கள். எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது; அந்தப் பெயரை நண்பர்களிடத்திலே சொன்னேன். ‘நான் சொன்னதாக நீங்கள் போய் சுவாமி அருணகிரிநாதரை அழையுங்கள்; அவர்தான் இந்த நேரத்திற்குத் தலைமை வகிக்க மிகப் பொருத்தமானவர்’ என்று நான் சொன்னேன்.

“நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையத்தினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்துவிடப் போவதில்லை. இந்த மாநாடு பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

“தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புகளையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும் எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக்கொண்டு இன்றையத் தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான் — நமக்கு ஏற்ற மொழிதான் — தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். காதல் பேசும் நேரத்திலே கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு ‘உன்னைவிட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை’ என கொஞ்சுவான். இப்படி கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையத் தினம் கொஞ்சுகிறோமேயொழிய அதற்கு வாதங்கள் தேவையில்லை. ‘என்னுடைய மொழியைவிடச் சிறந்த மொழி உலகத்திலே வேறொன்றில்லை’ என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்கிமோ நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான்.

“நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில் பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும் பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே தமிழ் மொழிக்காக வாதாடுவதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்கமொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? நிறத்திலே என்ன இருக்கின்றது? என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ்மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற ‘ஊரும் பேரும்’ எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும். தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன? இதற்கு சோமசுந்தர பாரதியார் ஒருவர் போதும். ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.

“இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தர வேண்டுமானால்,” நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்கு சித்தமாக இருக்கின்றீர்களா? “என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும், புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.”

“வெட்டவெளியிலே கொட்டகைபோட்டு வீதி தவறாமல் தோரணங்கள் கட்டி, சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்கநிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம் இந்தி மொழியைவிட தமிழ்மொழி சிறந்தது என்று வாதாடுவதற்கல்ல. தமிழ் நாட்டிலே இந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை எந்த முறையிலே ஒழித்துக்கட்டுவது; எந்த வழியிலே அழித்துக்கட்டுவது; அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர வெறும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல.

1937-ல் அருணகிரிநாதர் அவர்கள் சொன்னபடி நான் வாலிபனாக இருந்தேன். என்னோடு இன்றைய தினம் வாலிபர்களாக உள்ளவர்களில் பலபேர் அன்று தத்தி விளையாடும் பிள்ளைப் பருவத்திலிருந்தார்கள். ஆனால் இன்றைய தினம், 1937-லே கிடைத்திராத ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கிறது. 37-லே நமக்கு கிடைக்காத பெருந்துணைகள் 57-ல் கிடைத்திருக்கின்றன. 37-ல் வாலிபனாக இருந்த அண்ணாதுரை 57-ல் நடுத்தர வயதினனாக ஆகியிருக்கின்றான். அன்று பிள்ளைகளாயிருந்தவர்கள் இன்று வாலிபர்களாகியிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட அளவுக்கு தனிப்பட்ட ஆட்கள் வளர்ந்திருப்பது மாத்திரம் அல்ல; தமிழருடைய உணர்ச்சியும் அந்த அளவுக்கு நன்றாக வளர்ந்திருக்கின்றது. தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும் வடநாட்டார் இன்றையத்தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால் உங்களையும் என்னையும் நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ்நாட்டுக்கு உயிர்நாடியாக இருக்கின்ற தமிழ்மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள். நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலையில்லை; 2,000 கிளைக்கழகங்களா? வைத்துக் கொள்ளுங்கள்; 2 லட்சம் உறுப்பினர்களா? இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா? கேள்விப்படுகிறோம்; ஊர் தவறாமல் மாநாடா? பார்த்துக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய இயக்கத்திலே பத்திரிக்கைகள் பல இருக்கின்றனவா இருக்கட்டும் – இருக்கட்டும்; உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் பேசட்டும்; “ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும்” என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.

“இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சியடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் இருக்கின்ற திக்குநோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ் பார்வையிலே குளிர்ச்சியும் உண்டு; கோபக்கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான், தோழன் என்று வருபவனுக்கு. தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்ற வரை ஓயமாட்டான் என்பதை நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.

“எந்த இந்தி மொழியைத் தமிழகத்திலே இன்றையத்தினம் புகுத்த வேண்டும் – திணிக்க வேண்டும்” புகுத்தலாம் – திணிக்கலாம்; புகுத்தி விட்டோம் – திணித்து விட்டோம் – என்று எண்ணத்தக்க அளவுக்கு இன்றையத் தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக்கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழிதெரியாமல் வழுக்கி வீழ்ந்துகொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்ட பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களை கேட்கின்றேன் – அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது ? ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே தமிழ் வாணிபன் – தமிழ் வணிகன், ரோம் நாட்டுக்கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே,

“ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இன மக்களை இழுத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளியறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி எங்கேயும் பயன்பட்டு வந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படி பேசுகிறார்கள் என்று மன்னித்து விடலாம் என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க்கட்டையைத் தடவிச்சொல்லுகின்றார்கள்.

“தம்பி, தம்பி! தமிழ்மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே. அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத் தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன் மிக அழகாக இருக்கின்றது” என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம், ஒராண்டுக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். என்றாலும் தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும். இந்தியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள், என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்கள்.

சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்க முடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக வழி தவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டுவருபவள் குணத்திலேயும் குடிகேடி; பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்த கட்டழகியோடு நீ இருப்பது? அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு; இவளை நீ முன்கட்டிலே வைத்துக் கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம் கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழ வேண்டும்.

“தமிழ் மொழிக்கு வந்துற்ற இழுக்கைத் தடுப்பதற்கு – போக்குவதற்கு 1937-ல் தமிழர் பெரும்படை கிளம்பிய நேரத்தில் தாய்மார்கள்தான் அதற்கேற்ற உறுதுணையாக இருந்தார்கள். காலையிலே ஒரு வரலாற்று உண்மையை அருணகிரி அடிகள் எடுத்துச் சொன்னார். பெரியாருக்குப் ‘பெரியார்’ என்ற சிறப்பு பட்டப் பெயரை அளித்தவர்களே தாய்மார்கள்தான் என்பதை எடுத்துச் சொன்னார்கள்.”

அந்த நாட்களையெல்லாம் எண்ணிப்பார்த்தால்............’ அந்த நாட்களிலே இந்தியை ஒழித்துவிட்டோம் என்று நாங்களெல்லாம் இறுமாந்து இருந்தோம்; 20 ஆண்டுக் காலத்துக்குப்பிறகு, மறுபடியும் அந்த இந்தி ஆதிக்கப் பயம் நாட்டு மக்கள் உள்ளத்திலே புகுத்தப்படும் – மறுபடியும் இந்தியை எதிர்க்க வேண்டிய கட்டம் பிறக்கும் – மறுபடியும் அந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நடந்து தீர வேண்டும் – மறுபடியும் நானும் அருணகிரி அடிகளும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் – மறுபடியும் தமிழகத்திலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அறப் போரிலே ஈடுபட வேண்டும் – என்று நாங்கள் அந்த நாட்களிலே எண்ணியதில்லை. ஏனென்றால், அன்றையத் தினம் போரைத் துவக்கிய நேரத்தில், எங்களை எதிர்த்தவரை விட இன்றையத்தினம் எங்களை எதிர்க்கக் கூடியவர்கள் யாரும் திறமைசாலிகள் இல்லை என்பதை நான் தெளிவாக – திட்டமாக சொல்லுகிறேன்.

“அந்த நாளிலே எங்களை எதிர்த்தவர்கள் யார்? இந்தியத் துணைக்கண்டத்திலேயே அரசியல் தந்திரத்தில் தன்னை நிகர்த்தவர் யாருமில்லை என்றப் பட்டப் பெயர் பெற்ற இராசகோபால ஆச்சாரியார் எங்களை எதிர்த்தார்.

“அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறந்த பொழுது, இலவம் பஞ்சுகள் இன்றையத் தினம் எங்களை அடக்கலாம் என்று கருதினால் உண்மையிலேயே அது நடக்கக்கூடிய காரியமல்ல. இந்தியைப் புகுத்துவதற்கு யாராவது ஒருவர் இந்தியத் துணைக் கண்டத்தில் துணிவோடு காரியம் செய்தாரென்றால், ஆச்சாரியார் ஒருவர்தான் செய்தார். கட்டாயமாக இந்தியைப் பள்ளிகளில் புகுத்துவேன் என்றார்; ஒரு புறத்திலே பெரியார் இராமசாமியும், மற்றொரு புறத்திலே பாரதியாரும் இன்னொரு புறத்திலே பன்னீர்செல்வமும், மற்றொரு புறத்திலே அருணகிரி அடிகளும் மற்றவர்களும், முழக்கம் செய்த நேரதில் ‘யார் இந்த நாட்டை ஆளுகின்றவர்கள்? நானா, இராசாமி நாயக்கரா,பார்த்துவிடுகிறேன்” என்றார். நான் அவருடைய வீரப்பிரதாபம் பலிக்காமல் போய்விட்டது என்று ஏச்சுக்குச் சொல்லுகிறேன் என்று கருதாதீர்கள். காலம் எந்த அளவுக்குக் கனிந்துள்ளது என்ற பேருண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால் கட்டாய இந்தியைத் துணிவோடு புகுத்திய ஆச்சாரியார்தான் இன்றையத் தினம் ‘கட்டாயமாக இந்தி நுழையக்கூடாது’ என்று நாட்டிலே முழக்கம் செய்து வருகிறார். இந்தி எதிர்ப்பிலே அருணகிரி அடிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பியவரும், என்னை சிறைச்சாலைக்கு அனுப்பியவரும் பெரியார் இராமசாமியை பெல்லாரி சிறைக்கு அனுப்பி, ‘அது மிகவும் வெப்பமுள்ள இடமாயிற்றே, தள்ளாத வயதிலே அங்கு அனுப்பலாமா’ என்று சட்டசபையிலே கேட்டால், உங்களுக்குப் பெரியாரைத் தெரியாது; எனக்கு தெரியும். அவருடைய உடம்புக்கு வெயில் நல்லது’ என்று வேடிக்கையாகப் பேசிய அதே ஆச்சாரியார் ‘இந்தி நிச்சயமாகத் தடுக்கப்பட வேண்டும் – இந்தி கட்டாய பாடமோ, இஷ்ட பாடமோ அது எந்த முறையிலே வந்தாலும் தடுக்கப்படவேண்டும் – தமிழ்நாட்டுக்குத் தமிழ் மொழி போதும். மற்ற நாடுகளோடு தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் இருந்தால் அது சாலச்சிறந்தது என்று, தனி அறையிலேயல்ல – எங்களையெல்லாம் கூட்டிவைத்துத்தான் சென்ற ஆண்டு சொன்னார்.

“சென்ற ஆண்டு ஒரு நாள் திடீரென்று சுப்பையா பிள்ளை என்ற தமிழ் ஆர்வம் படைத்த ஒரு கண்ணியவான் என்னை வந்து பார்த்தார், அவரிடத்திலே நான் பேசுகிற நேரத்திலே, என்னிடத்திலே அவர் சொன்னார், ‘இந்தியை மறுபடியும் புகுத்தலாமா என்பதற்காக கேர் கமிட்டி விசாரணை நடத்துகின்றது. இந்த நேரத்திலே நாம் ஏதாவது செய்யவேண்டுமே, என்று. தமிழ் நாட்டிலே புதிதாக அதற்குள்ளே உருவாகிவிட்ட விசித்திரமான அரசியல் நிலைமை காரணமாக நான் அவரிடத்திலே சொன்னேன்; ‘ஐயா நான் ஏதாவது செய்தால், நான் செய்கிறேன் என்பதற்காகவே அது வேண்டாம் என்று சொல்லுகின்ற ஒரு மாபெரும் தலைவர் தமிழகத்திலே இருக்கிறார். ஆகையினாலே என்னை முதலில் ஏதும் செய்யச் சொல்லாதீர்கள். அவரைப் போய்ச் செய்யச் சொல்லுங்கள்; அவர் செய்கின்ற காரியத்தை நான் அடுத்துச் செய்கிறேன்’ என்று. ‘நீ யாரைக் குறிப்பிடுகிறாய் என்று எனக்குத் தெரிகின்றது. ஆனால், அவரைக் கேட்டுவிட்டுத்தான் உன்னிடத்திலே நான் வந்து சொல்லுகிறேன்; ஆச்சாரியாருடைய இல்லத்தில் பல கட்சித்தலைவர்களை வரவழைத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாமெல்லாம் கலந்து பேசலாம். வரவேண்டும்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.

“அந்த நேரத்திலே திராவிடர் கழகத்திலே ஒரு தீர்மானம் – ‘தீண்டினால் திருநீலகண்டம்’ என்று திருநீலகண்ட நாயனார் போட்ட தீர்மானம் போல் – நாங்கள் வந்தால் அவர்கள் வரக்கூடாது, அவர்கள் இருக்கிற இடத்திற்கு நாங்கள் போனால், அவர்கள் கலைந்துபோய்விட வேண்டும் – இப்படி ஒரு தீர்மானம் போட்டு வைத்திருந்தார்கள். அரசியலிலே ஒரு புதிய தீண்டாமை ஜாதியைச் சிருஷ்டித்தார்கள்.

“அதை நான் சுப்பையா அவர்களுக்குக் கவனப்படுத்தி, ‘இப்படி இருக்கிறதே’ என்றேன்: ‘இல்லை பெரியாரிடத்திலே கலந்து பேசினேன்’, “வரச்சொல்லுங்கள் – பேச சொல்லுங்கள்” – என்று சொன்னார், ஆகையினாலே நீங்கள் வரலாம்” என்றார்.

“அந்த நேரத்திலே நானும் பல நண்பர்களும் சென்றோம். இந்தியை அவசரப்பட்டு இங்கே திணிக்கக் கூடாது என்றும், உண்மையிலேயே தமிழ்மொழி தமிழ்நாட்டுக்குப் போதுமென்றும் பிற நாடுகளோடு தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் இருந்தால் போதுமென்றும் அன்றையத் தினம்பேசித் தீர்மானிக்கப்பட்டதில் யார் யார் கையொப்பமிட்டிருக்கின்றார்கள் என்ற பட்டியலை மட்டும் உங்களிடத்திலே படிக்கின்றேன்.

ஏன் நான் இந்தப் பட்டியலை படிக்கின்றேன் என்றால், இந்தப் பட்டியலுக்கு வெளியே இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமில்லை. இந்தப் பட்டியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகள் அதிகம்பேர் நாட்டிலே இருக்கமுடியாது. இந்தப் பட்டியலிலே உட்பட்டிருக்கின்ற பெயர்கள் அத்தனையும் தனிப்பட்ட முறையிலேயும் சிறந்தவர்கள்; சிலர் குறிப்பிட்ட சில இயக்கங்களுக்குக் கர்த்தாக்களாகவும் தலைவர்களாகவும் நடத்திச் செல்பவர்கள். இவர்களெல்லாம் எதிர்க்கின்றார்கள் 1956-ல் என்பதை, உங்களுக்குக் கவனப்படுத்த அந்தப் பட்டியலைப் படிக்கின்றேன். முதலிலே கையெழுத்திட்டவரும் இந்த வாசகத்தை எழுதியவரும் ஆச்சாரியார் அவர்களாவார்.

“இரண்டாவதாகக் கையெழுத்திட்டவர் ஈ. வெ. இராமசாமி பெரியார் – திராவிடர் கழகத் தலைவர்.

“பி. டி. இராசன் – ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்.

“இராஜா சர் முத்தையா செட்டியார் – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு சான்சலராக இருந்து வருபவர்.

அடுத்தபடி நான், நெடுஞ்செழியன் – தி. மு. கழகப் பொதுச் செயலாளர்.

“திராவிட பார்லிமெண்டரி கட்சித் தலைவர் சுயம்பிரகாசம்.

“எஸ். ஜி. மணவாள இராமானுசம் – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே துணைவேந்தராக இருந்தவர்.

“டி. எம். கிருஷ்ணசாமி அய்யர் – திருவாங்கூர் கொச்சியிலே பிரதம நீதிபதியாகப் பணியாற்றியவர்.

“இவர்களெல்லாம் கூட சாதாரணமாக இருக்கும்; இப்போது படிக்கின்ற பெயர் உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

“ம. பொ. சிவஞான கிராமணியார் – தமிழரசுக் கழகத் தலைவர்.

“ஆ. இரத்தினம் – தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனைச் சேர்ந்தவர்.

“எஸ். ஆர். வெங்கட்ராமன் – சர்வண்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டியிலே செயலாளராக இருப்பவர்.

“கி . ஆ. பெ. விசுவநாதம் – தமிழ்ப் பேரவைச் செயலாளர்.

“பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை – சென்னைப் பல்கலைக் கழகம்.

“டாக்டர் எம். வரதராசன் – பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருப்பவரும், இன்றையத்தினம் சர்க்காரிடத்திலே வீரச் சுதந்தரப் பதக்கம் பெற்றவருமான நம்முடைய நண்பர் அவர்கள்.

“மற்றொருவர் வி. எஸ். தியாகராச முதலியார் – திருவாரூரைச் சேர்ந்தவர்.

“எம். பி. சோமசுந்தரம் – “கல்கி” பத்திரிகைக்கு அந்த நாளிலே ஆசிரியராக இருந்தவர்.

“அமிர்த கணேச முதலியார் செஞ்சிலுவைச் சங்கத்திலே தலைவராக இருப்பவர்.

“டாக்டர் ஏ. சீனிவாசன் – எம். எல். சி. யாக இருந்தவர்.

“ஏ. சுப்பையா இதைக் கூட்டியவர்.

“நான் இப்போது கேட்கிறேன் – இவர்களையெல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் எந்தத் தலைவர்களைக் காட்டி இந்தியைப் புகுத்தப் போகிறீர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கருத்துக்குச் சொந்தக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நடத்திச் செல்லக்கூடியவர்கள்” ஒவ்வொருவர் பின்னாலேயும் பல இலட்ச மக்கள் இருக்கிறார்கள், என்றால் – வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் “உன் பக்கத்திலே அதிக ஆளா, என் பக்கத்திலே அதிக ஆளா, — இதிலே தகராறு இருக்குமே தவிர, தமிழ்நாட்டிலே உள்ள அறிவுபடைத்த அரசியல்வாதிகள் அத்தனைபேரும் இவர்களிலே யார் பக்கத்திலாவது இருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து 1956–லே இந்தி தேவையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, எந்த கேர்கமிட்டி இன்றையத்தினம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றதோ, அவருக்கே அனுப்பினார்கள். அந்த கேர்கமிட்டியிலே இருக்கின்ற அறிக்கையைப் படித்தால் இப்படி ஒரு மனு வந்ததாகக்கூட ஒரு குறிப்பு இல்லை. இந்த அரசியல் அநீதிக்கு நாட்டை ஆளுகின்றவர்கள் என்ன பதில் அளிக்கின்றார்கள்?

நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் மெத்த ஆத்திரத்தோடு சட்டசபையிலே பேசுகின்றார், ‘உணர்ச்சி வயப்பட்டு அண்ணாதுரை பேசினால் போதாது: ஆதாரத்தோடு பேசவேண்டும். என்று – இதோ அந்தகனும் அறிந்துகொள்ளக் கூடிய ஆதாரம். அமைச்சர் இதற்கு என்ன பதிலளிக்கிறார்? இத்தனை பெரிய அரசியல் தலைவர்களும், இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் – கோயிலிலிருக்கிற நவக்கிரகமாவது ஒன்றையொன்று பார்க்கும். இதிலேயுள்ளவர்கள் ஒருவரையொருவர் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் — அப்படிப்பட்ட அத்தனை பேரும் இந்த ஒரு விஷயத்திலே ஒன்றாகக்கூடி, இந்தி வேண்டாமென்று உனக்கு அனுப்பினால், அதற்கு அளிக்கப்பட்ட பதில் என்ன? மதிப்பு என்ன என்றால், அந்த அறிக்கையிலே இதைப் பற்றி ஒரு குறிப்புமில்லை. குறிப்பு இல்லாதது மட்டுமல்ல: இந்தியை யாருமே எதிர்க்கவில்லை என்று கேர் அவர்களே ஒரு கூட்டத்திலே சொன்னார்.

‘அவர் அந்தக் கூட்டத்திலே சொன்னதை இந்த இயக்கக்காரர்கள் — இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் உடனே மறுத்து, அவருக்குக் கடிதமெழுதினார்கள். கடிதமெழுதியதற்கு அவர் என்ன சொன்னாரென்றால், பொதுவாக மக்கள் எதிர்க்கவில்லை’ என்றார்.

இவர்களுக்குப் பின்னாலிருப்பவர்களெல்லாம் யார்?

‘இராசகோபாலாச்சாரி பின்னாலே சாதாரணமாக வரிப்புலிகளும், ஈ. வெ. ராமசாமி பெரியார் பின்னாலே கரடிகளும், பி. டி. இராசன் பின்னாலே ஓநாய்களும், இராஜா சர். முத்தைய செட்டியார் பின்னாலே பிணந்தின்னி கழுகுகளும், என் பின்னாலே அப்பாவிகளும், சுற்றிக் கொண்டிருப்பதாகவா கேர் கருதுகின்றார். இவர்களுக்கெல்லாம் மக்கள் சுட்டுப்படவில்லை என்றால், மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தியைக் காட்டு. காட்டுவதற்கு வக்கு எங்கேயிருக்கின்றது; வழி எங்கேயிருக்கின்றது?

“இவையத்தனையையும் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டுவிட்டுதான், கேர் கமிட்டியிலே இன்றையத்தினம் அறிக்கையிலே இந்தியைத் திணிக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

“இனி நாம் தீர்மானிக்க வேண்டுவதெல்லாம் தமிழ்மொழி சிலாக்கியமானதா? அல்லவா? அதைப் பற்றிய ஆராய்ச்சி உரைகள் கூட நமக்கு அதிகம் தேவையில்லை. யார் இந்தி மொழியைத் திணிக்க விரும்புகின்றார்கள்? என்பதும், யார் பேரிலே திணிக்கவிரும்புகிறார்கள் என்பதும், எந்த நேரத்திலே திணிக்க விரும்புகிறார்கள் என்பதும், என்ன காரணத்தைச் சொல்லி திணிக்கவிரும்புகிறார்கள் என்பதும், நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.

நள்ளிரவிலே, 12-1 மணிக்கு திடீரென்று தெருக்கதவை யாராவது தட்டினால் திடீரென்றா திறந்துவிடுவோம்? கதவைத் திறக்காமலே உள்பக்கத்திலே இருந்துகொண்டு ‘யார் கதவைத் தட்டுவது’, நான் தான், கதவைத்திற, – ‘நான்தான் என்றால் கதவைத் திறக்கமாட்டேன், யார்? சொல்லு’ – தெரியவில்லை? நான் தான்? – தெரியவில்லை. யார்? சொல்லு’ குரலைப் பார்த்தால் தெரியவில்லையா? ‘தெரியவில்லை சொல்லு’ ‘அட, நான் தான் ஆறுமுகம்! – உடனேயே திறக்கமாட்டார்கள் யூகமுள்ள பெண்கள். கொஞ்சம் கதவைத் திறந்து, ஓரத்திலே எட்டிப்பார்த்து, ‘ஆறுமுகம்தானா என்று பார்த்துத் தான் உள்ளேவிடுவார்களே தவிர கதவு தட்டிய உடனே கதவைத் திறப்பார்களா? சில வீடுகள் திறக்கப்படும். நல்ல வீடுகள் திறக்கப்படாது!

“ஆகையினாலேதான் ஒரு மொழி இந்த நாட்டுக்குள்ளே வருகிறதென்றால், அது எந்த நாட்டுக்குள்ளே வருகின்றது: எந்த நாட்டிலேயிருந்து வருகின்றது? எந்த நேரத்திலே வருகின்றது, என்ன சொல்லிக் கொண்டு வருகின்றது? – இவைகள் நமக்கு விளக்கப்பட வேண்டும். இவைகள் விளக்கப்படுவதற்கு நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ் அமைச்சர்கள், இன்றையத் தினம் சொல்லுகின்ற பதிலெல்லாம் ‘இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமே! இந்தியாவை ஒன்றுபடுத்த ஒரு மொழி வேண்டாமா?’ என்று சொல்லுகின்றார்கள்.

“நாம் அடிப்படையையே சந்தேகிக்கின்றோம். ‘நீ போடுகின்ற வீசைக் குண்டிலே 40 பலம் இல்லை என்று’ நான் சொல்லியான பிறகு, 2 குண்டு போட்டு ‘80 பலம்’ என்று வாதாடி என்ன பயன்? நான் ‘நீ போடுகின்ற குண்டிலே 40 பலம் இல்லை’ அது தேய்ந்து போய் 22 பலம்தான் இருக்கின்றது’ என்கிறேன். ‘இது வீசைக்குண்டு என்று பெயர்’ ஆகையினால், ‘ஒரு வீசைதான் இருக்கும்’ என்று என்னிடத்திலே வாதாடினால் என்ன பயன்? அதைப்போல ‘இந்தியா ஒரு நாடல்ல’ என்று நாங்கள் வாதாடுகின்றோம். இந்தியா ஒரு நாடாக இருக்கத் தேவையில்லை என்பதற்கு ஆதாரம் காட்டுகின்றோம். இவைகளை மறுத்துப் பேசுவதற்கு முடியாமலும் பிரச்சினையைத் தீர்க்காமலும், இந்தப் பிரச்சினை அப்படியே விவாதத்திலேயிருக்கின்ற பொழுது எதற்காக இந்தியைப் புகுத்துவது.

“இந்த வீடும் உன்னுடையது தான் என்று தீர்மானித்தால் பிறகு ‘நீ அதற்கு என்ன வாசற்படி வைக்கலாம்’ என்று தீர்மானித்துக்கொள், வீடு உன்னுடையதா, என்னுடையதா என்பது வழக்கு மன்றத்திலே இருக்கிறது. உன்னுடைய வழக்கறிஞரும் பேசுகின்றார், என்னுடைய வழக்கறிஞரும் பேசுகின்றார். நீதிபதிக்கு மயக்கமிருக்கின்ற காரணத்தினால் தீர்ப்பு இன்னும் சரியாகக் கொடுக்கவில்லை. வழக்கறிஞரின் வாதத்திலே ஒன்றும் தப்பு இல்லை. அந்தத் தீர்ப்புக் கிடைத்து, வீடு உன்னுடையதா? என்னுடையதா ? என்று ஏற்பட்டப் பிறகல்லவா உன்னுடைய விருப்பப்படி வாசற்படி இருப்பதா? என்னுடைய விருப்பப்படி வாசற்படி இருப்பதா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அதைப்போல இந்தியா ஒன்றாக இருப்பதா? அல்லது இந்தியா என்பது கற்பனையிலே உதித்தது. வெள்ளைக்காரன் ஈட்டி முனையினாலே கட்டிக் காப்பாற்றப்பட்டது; அதைக் கதர் நூலினாலே கட்டி வைத்தால் நீண்ட காலத்துக்கு நிலைக்காது: ஆகையினால் இந்தியா என்பது இனவழி பிரிந்துதான் தீருமென்ற எங்களுடைய இலட்சியம் வெல்கிறதா? இல்லையா என்பதற்கு அவகாசம் தர வேண்டும். அது முடிந்த பிறகு நாங்கள் தோற்றோமென்றால் ‘திராவிட நாடு கிடைக்காது’ என்று நாங்களே சொல்லிவிட்டால், ‘இந்தியா ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நாங்களும் சேர்ந்து சொன்னால், ஒன்றாக இருக்கிற இந்தியாவுக்கு ஏதாவது மொழி வேண்டாமா? அப்பொழுது கூட இந்தி அல்ல: ஏதாவது ஒரு மொழி வேண்டாமா என்பதுதான் அப்பொழுது பிரச்சினை.

“ஓட்டலுக்குப் போகின்ற நேரத்தில் ‘சாப்பாடு ஆகிவிட்டதா?’ என்று கேட்ட பிறகுதான் ‘என்ன சமையல்? என்று கேட்பார்களே தவிர, ‘என்ன சமையல் இன்றையத்தினம்? – கத்தரிக்காய் கூட்டு; முருங்கைக்காய் சாம்பார்’ – ‘சரி போடு’ ‘இன்னும் ஆகவில்லை’ என்று சொல்லுவதைப்போல் திராவிட நாடு பிரிவினை தீராமலிருக்கின்ற பொழுது உனக்கென்ன அத்தனை அவகாசம்? திராவிட நாடு பிரிவினைக் கிளர்ச்சி வலுக்கின்றது. அந்த வலுக்கின்ற கிளர்ச்சியை ஒழிக்கின்ற, நீ செய்கின்ற சதித் திட்டங்களிலே இது ஒன்று என்பது தவிர, இது மொழித் திட்டம் அல்ல என்பதை நான் பகிரங்கமாகக் குற்றம்காட்ட விரும்புகின்றேன்.

“வடநாட்டிலே உள்ளவர்கள், தென்னகத்தாரை – தமிழகத்தாரை, சிறப்பாகவும் குறிப்பாகவும் திராவிட இயக்கத்தாரை தலையெடுக்க விடாமல் தட்ட வேண்டுமானால் தமிழ்மொழியிலே இருக்கின்ற ஆர்வத்தைக் குலைக்கவேண்டும்: தமிழ்மொழிக்கு இருக்கின்ற இடத்தைப் பறிக்க வேண்டும்: தமிழ்மொழியினாலே சாதிக்க முடியாத காரியத்தை இந்தியினாலே சாதிக்க முடியும் என்று இளிச்சவாயர்களை நம்பவைக்கச் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அவர்கள் தலையைத் தடவலாம் என்ற சதித்திட்டம் தவிர, இதற்கென்ன காரணம் காட்டுகின்றார்கள்.

“நாட்டிலே இன்றையத்தினம் இந்தி 1960லே வருவதா? 70லே வருவதா என்பதா மிக அவசரமான பிரச்சினை? மூன்று வேளை சோறு போடுவதற்கு உன்னுடைய ஆட்சியிலே வக்கு இல்லை ஏறியிருக்கிற விலைவாசியை இறக்குவதற்கு உனக்குத் தெரியவில்லை; உன்னுடைய நாட்டிலே நிதியமைச்சர் கையிலே பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து, ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு மாதம் துரத்துகிறாய் வெட்கமின்றி!

“காலம் சென்ற லியாகத் அலிகான் சொன்னார் – ‘எந்த நாடு கையிலே பிச்சைப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு கடனுக்காக வெளி நாட்டுக்குப் போகின்றதோ அந்த நாடு சுதந்திரமாக வாழமுடியாது’ என்று சொன்னார். உன்னுடைய நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை, (நான் நண்பர்கள் மூலமாகக் கேள்விப்படுகிறேன், அவருக்குச் சாதாரணமாக குடல் கோளாறு என்று – வயிற்றுக்கோளாறு என்று, அப்படிப்பட்டவரை) நீ பிச்சைப் பாத்திரத்தைக் கையிலே கொடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறாய். ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேறுமா – நிறைவேறாதா என்று ஆரூடம் பார்க்க வேண்டிய நிலைமை நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது. இவ்வளவு அவசரமான காரியங்கள் இருக்கின்ற பொழுது, இவைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இந்தியைப் புகுத்த அவசர அவசரமாகத் துணிகின்ற காரியம் என்ன?

‘தமிழ் மொழி ஒன்று தான், தமிழ்த் தோழர்களும் – திராவிடத் தோழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் – விடுதலை வேட்கையை – விடுதலை உணர்ச்சியை தமிழ் நாட்டு மக்கள் மட்டும்தான் இன்றையத் தினம் முழு அளவிலே பெற்றிருக்கின்றார்கள். என்னுடைய நண்பர்களிலே பல பேர் வங்காளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்; மராட்டியத்தைப் பற்றி எடுத்துப் பேசினார்கள்; பாஞ்சாலத்தை எடுத்துச் சொன்னார்கள். அங்கேயெல்லாம் வீர உணர்ச்சியுள்ள மக்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்; மறுக்கவில்லை. அங்கே அறிவாளிகள் நம்மைவிட அதிகம் பேர் இருக்கக்கூடும்; அதைப் பற்றி நான் ஐயப்படவில்லை. ஆனால் தமிழ் மொழி நமக்கு அளிக்கின்ற விடுதலை வேட்கையை வங்காள மொழியும் வங்காளிக்கு அளித்திருக்காது, பஞ்சாபி மொழியும் பஞ்சாபிகளுக்கு அளித்திருக்காது. அப்படிப்பட்ட விடுதலை வேட்கையை தமிழ்மொழி தமிழர்களுக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் மொழியை அழித்தால், விடுதலை வேட்கை அழிந்துவிடும். விடுதலை வேட்கை அழிந்துபட்டால் வடநாட்டு ஆதிக்கம் தமிழகத்திலே பூரணமாகிவிடும். அதற்குப் பிறகு திராவிடநாடு பிரிவினை என்ற பேச்சுக்கெல்லாம் இடமிருக்காது! – என்ற சதித் திட்டத்திலே இது விளைந்ததே தவிர வேறு இதற்குக் காரணம் இருப்பதாக என்னாலே யூகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு ஏதாவது தகுந்த காரணங்கள் இருக்குமானால், எனக்குப் பதிலளிக்க காங்கிரஸ் அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கடமைப்பட்டிருக்கின்றார்கள்: அவர்கள் சொல்லுகின்ற பதிலைக் கேட்பதற்கு நாங்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றோம்.

“இந்தி மொழியிலே வளமில்லையென்பதை நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சொன்ன நேரத்தில் – தமிழ்மொழியினுடை வல்லமைகளையெல்லாம் நம்முடைய நண்பர்கள் எடுத்துச் சொன்ன நேரத்தில் – ஆங்கிலத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்: ஆங்கிலம் இருந்தால் உலகத் தொடர்புக்குப் போதுமென்று, ‘இந்தி மொழியினாலே உலகத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளலாம் மாநிலங்களுக்குள்ளே தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என்று வாதாடுகின்ற பண்டித நேருவினுடைய பேரப்பிள்ளைகள் ‘எங்கே படிக்கிறார்கள்?’ என்று கேட்கிறேன். இன்றையத் தினம், இந்திப் பள்ளிக்கூடத்திலா படிக்கின்றார்கள்?.... இல்லை. சுவிட்சர்லாந்து நாட்டிலே படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் நியாயப்படி பணம் கிடைத்தால் இங்கே படிக்க வைக்கின்றார்கள். அநியாயத்திலே பணம் கிடைத்தால் உடனே பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்புகின்றார்களே தவிர, இந்தி ‘ராஷ்ட்ர பாஷா’ பள்ளிக்கூடத்திலா படிக்க வைக்கின்றார்கள் – அவரவர் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு எந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதற்கு உலகமெல்லாம் சுற்றி அலைகின்றார்கள். நம்முடைய நாட்டு மக்களுடைய தலையிலே தான் இந்தியைத் திணிக்க வைக்கின்றார்களே தவிர, அவர்கள் ஒன்றும் இந்தியிடத்திலே அவ்வளவு அக்கறை எடுத்திருக்கின்றார்கள் என்று அர்த்தமல்ல. ஆகையினாலே இந்த மாநாட்டிலே நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டியதும், நாம் திட்டம் தீட்டிக்கொள்ள வேண்டியதும் இந்தி மொழி அந்த முறையிலே புகுத்தப்பட்டால் — திணிக்கப்பட்டால் எந்த முறையிலே அதை எதிர்க்க வேண்டும்? எந்த முறையிலே அந்த இக்கட்டிலேயிருந்து விடுபடவேண்டும்? அப்படி விடுபடுகின்ற கிளர்ச்சி நடைபெறுகின்ற நேரத்தில் உங்களிலே எத்தனை பேர் ஈடுபாடு கொள்ள இருக்கிறீர்கள்? இன்றையத்தினம் சித்தமாக இருக்கின்றீர்கள் என்பதுதான்.

“மாநாட்டிலே உட்காருகின்ற நேரத்தில் ஆயிரம்பேர் சித்தமாயிருக்கலாம். – மாநாடு கலைந்து வெளியே செல்லுகின்ற நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடன் ஆயிரம் பேரிலே ஐநூறு பேர் கலைந்து போகலாம்: இருநூறு பேரிலே போராட்டம் என்று வருகின்ற நேரத்தில் இருபதுபேர் மிஞ்சலாம்: மற்றவர் போய்விடக்கூடும் – அந்தக் கணக்கை நான் அறியாதவனல்ல.

“ஆகையினாலே அவசரப்பட்டு நீங்கள் முடிவெடுக்காதீர்கள்; ஆர அமர சிந்தித்துப்பாருங்கள் இந்திமொழியினுடைய ஆதிக்கத்தைத் தடுத்துத் தீர வேண்டுமென்றால் எடுக்கக்கூடிய அறப்போராட்டம் எந்த அளவுக்கெல்லாம் செல்லக்கூடுமென்பதை நாட்டிலே இன்றையத் தினம் நடைபெறுகின்ற நானாவிதமான காரியங்களைப் படித்துப் பாருங்கள்.

“ஜாதிச் சண்டை நடக்கின்றது. தெற்கே ஒரு மாவட்டத்தில் – இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்காராலே அந்த ஜாதிச் சண்டையைத் தடுக்க முடியவில்லை தேசீய கீதம்பாடி இந்த சாதாரணச் சாதிச் சண்டையிலே இதுவரையிலே பத்திரிகைக் கணக்குபடி 40 பேருக்கு ஏறக்குறைய செத்திருக்கின்றார்கள்; கலகம் தொடர்ந்து நடைபெறுகிறதென்று படிக்கின்றோம், ஏன் இதை நான் சொல்லுகின்றேனென்றால், அப்படிப்பட்ட சில வேலைகளில் வெறித்தனத்தோடு தாக்கக் கூடியதான ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு முறை நாட்டிலே அமுலிலே இன்றையத்தினம் இருந்து வருகின்றது. இவர்களை எதிர்த்து ஒரு நல்ல அறப்போராட்டக் கிளர்ச்சியை நடத்துவதென்றால் எல்லாவிதமான தியாகங்களுக்கும் நாம் உட்பட்டிருக்க வேண்டும்.

“என்னுடைய நண்பர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாடிய பாட்டில், கடைசி அடியை மறுபடியும் உங்களுக்கு நான் கவனப்படுத்துவேன். “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – நம்மை மாட்டநினைக்கும் சிறைச்சாலை” என்று அவர்கள் பாடினார்களே, 1937-ல் ஒவ்வொரு சிறைச்சாலையிலும், ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலேயும் ஒவ்வொரு வார்டர்கள் காதிலேயும், ஒவ்வொரு சாதாரணக் கைதியினுடைய காதிலேயும் கேட்டுக் கொண்டிருந்த எழுச்சி மிக்கப் பாடல்தான் அது. அப்படிப்பட்ட விதத்திலே ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – நம்மை மாட்ட நினைக்கின்ற சிறைச்சாலை’யைப் பற்றி எண்ணத்தக்க உள்ளம் படைத்தால் மட்டும் போதாது. அப்பொழுதிருந்த ஆட்சியைவிட இப்பொழுதிருக்கிற ஆட்சியாளர்கள் அடிப்பதற்கு அஞ்சமாட்டார்கள்; சுட்டுக்கொல்வதற்குத் தயங்கமாட்டார்கள்.

“நீங்கள் பத்திரிகை பார்த்தால் தெரியும் – துப்பாக்கிக் குண்டுபட்டு இறந்துவிட்டவர்களின் விசாரணையில், ஒரு அதிகாரி விசாரிக்கிறார், போலீஸ் அதிகாரியை, ‘ஆகாயத்தை நோக்கி சுடவில்லையா?’ என்று அதற்கு அந்த போலீஸ் அதிகாரி பதில் சொன்னது பத்திரிகையிலே இருக்கின்றது.

“இல்லை, நாங்கள் ஆகாயத்தை நோக்கிச் சுட வில்லை!”

“ஏன்”?

“எங்களுக்கு அப்படி உத்தரவு இல்லை”.

“உங்களுக்கு என்ன உத்தரவு”?

“சாகடிப்பதற்காகச் சுடு”" (Shoot to Kill)

“வெள்ளைக்காரன் காலத்தில் மிரட்டுவதற்காகச் சுடு” (Shoot to Care)

மேலே சுட்டால் வெற்றுத்தோட்டா வெடிக்கும், மக்கள் மிரண்டு ஓடுவார்கள், இவர்கள் காலத்திலே (Shoot to Kill) ‘கொல்வதற்காகச் சுடு’ என்பதுதான் எங்களுக்கு உத்தரவு என்றதாக பத்திரிகையிலே படித்தேன். போலீஸ் அதிகாரி சாட்சியமளித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற நிலைமை நாட்டிலே இருக்கிற காரணத்தால், இந்தி எதிர்ப்பு இயக்கத்தை திறம்பட நடத்துகின்ற அறப்போராட்டம் உருவாகின்ற நேரத்தில் அருணகிரி அடிகள் அவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து பேசி ஒரு நல்ல திட்டத்தைத் தீட்டுகின்ற நேரத்தில், நீங்கள் எதற்கும் தயாராக இருக்கக்கூடிய நல்ல உள்ளத்தைத் தாங்கி, ஒரு துளியும் பலாத்காரத்திலே நம்பிக்கை வைக்காமல், ஒரு துளியும் கடமையுணர்ச்சியிலே இருந்து தவறாமல், ஒரு துளியும் கண்ணியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் – கட்டுப்பாட்டை மீறாமல் இந்தப் போராட்டத்திலே ஈடுபடமுடியும் என்ற துணிவு இருக்கின்றவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இடத்திலே நாளையத்தினம் முதற்கொண்டே பெயர்களைக் கொடுங்கள்.

“பட்டியல் வளரட்டும்; திட்டங்கள் வளரும். பட்டியல் வளர வளர வடநாட்டான் அந்தப்பட்டியலைப் படித்துப் பார்க்க பார்க்க ‘தி. மு. கழகம் இந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தலைமைதாங்கி நடத்தப்போகின்றது’ என்ற செய்தி கேள்விப்பட கேள்விப்பட, இந்தி எதிர்ப்பு இயக்கம் இதற்கு முன்னாலே என்னென்ன போராட்டம் நடத்திற்று என்பதையெல்லாம் படித்துப் பார்த்து ‘ஒரு நாள் ரயில் நிற்க வேண்டும்’ என்று சொன்னவுடனே, 5,000 தோழர்களுக்கு மேல் சிறைச்சாலைக்குச் சென்றார்கள்! என்ற நம்முடைய வீர வரலாற்றை – துப்பாக்கிக் குண்டைக்காட்டி அதோ போகிறான் கருணாநிதி, சுடு! – இதோ பார் கண்ணதாசன் அடி! என்று சொன்ன நேரத்திலேயும் கலங்காமல் நின்றவர்கள் நம்முடைய இயக்கத்திலே ‘ஏராளமாக’ இருக்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை அறிந்திருக்கின்றவர்கள் இந்தப் பட்டியல் வளர்ந்தால், நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுவேன் – எவ்வளவு தான் வீரதீரமாக அவர்கள் பேசினாலும் கீழே இறங்கி வரத்தான் செய்வார்கள்.

“ஆகையினாலே நமக்குள்ளே அந்தக் கட்டுப்பாட்டுணர்ச்சி வளருவதற்கும், வீர உணர்ச்சியை நாம் பெறுவதற்கும் இன்றைய மாநாடு பயன்பட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தி எதிர்ப்பு மாநாட்டை இங்கே நண்பர்கள் கூட்டியிருக்கின்றார்கள்.

“மாநில மாநாட்டில் எடுத்த பல முடிவுகள், தொடர்ச்சியாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றேம். அதிலேயும் இந்தியைப் பற்றி நாம் தீர்மானங்கள் நிறைவேற்றியிருககின்றோம். அந்த நேரத்திலே ஏற்படாத ஓர் சூழ்நிலை இன்றையத்தினம் ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன சூழ்நிலையென்றால், கேர் என்ற ஒரு காங்கிரஸ் தலைவரை வைத்து வேறு பல காங்கிரஸ் தலைவர்களையும் அவருக்குத் துணையாக வைத்து இந்தி வேண்டுமா? வேண்டாமா? இந்தியை எப்படிப் புகுத்துவது? 1960-க்குள்ளே இந்தியை எப்படித் திணிப்பதென்பதற்கு வழிவகை கண்டுபிடித்தார்கள். அந்த வழிவகை கண்டுபிடித்த – அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையை அந்தக் கமிட்டியிலேயே உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள், ‘எனக்கு அது பிடித்தமில்லை’ என்று அவர்களே அந்த அறிக்கையில் குறிப்புத் தந்திருக்கின்றார்கள்; அவர் சொன்ன இரண்டு வாசகங்களை மட்டும் படிக்கின்றேன். டாக்டர் சுப்பராயன் என்பதற்காக மட்டுமல்ல; டாக்டர் சுப்பராயன் பெருத்த அறிவாளி – நல்ல அனுபவசாலி அவைகளுக்காக மட்டும் நான் படிக்கவில்லை. அவர் இன்றையத் தினமும் காங்கிரஸ் உறுப்பினராகத்தான் டில்லிப் பாராளுமன்றத்திலே இருக்கிறார்; அவர் கேர் கமிட்டி அறிக்கையைப் பற்றி தருகின்ற வாக்கியம்.

I fear that the entire report there is
very little evidence of understanding,
imagination and sympathy for the non-
Hindi speaking people of India.

“நான் கேர் அறிக்கையைப் படித்துப் பார்த்தேன், இந்தி பேசாத மக்களுடைய மனப்பான்மையை அறிந்துகொள்வதற்கு அவர்களுடைய நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு – அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்வதற்கில்லை” –என்று அதிலே குறிப்பிட்டிருக்கின்றார். இப்பொழுது நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தி மொழியை இங்கே புகுத்த வேண்டுமென்றால், இந்தி மொழி யார் யார் பேசுகிறார்களோ அவர்களைக்கேட்டுப் பயனில்லை.

“பேரீச்சம்பழக் கடைக்காரனிடம் சென்று, ‘பேரீச்சம் பழம் உடலுக்கு நல்லதா? என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவான்? ‘ஆப்பிள் பழத்திற்கு இல்லாத சில தனித் தன்மைகள் இதற்கு உண்டு. மலைவாழைப்பழம் 10 சாப்பிடுவதும் சரி, 1 துண்டு பேரீச்சம்பழம் சாப்பிடுவதும் சரி என்று தன்னுடைய சரக்கு விற்பனையாவதற்காகப் பேரீச்சம்பழம் கடைக்காரன் அவ்வாறெல்லாம் சொல்லுவான். அதைப்போல, ‘இந்தி நன்மையானதா – கேடு பயப்பதா? அல்லது இந்தி வேண்டுமா – வேண்டாமா? என்பதை, இந்தி பேசுபவர்களைக் கேட்டுப் பயன் என்ன?

“நான் நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ் சர்க்காரைக் கேட்கிறேன் – உங்களுக்கு உண்மையிலேயே ஆற்றலிருந்தால் – நம்பிக்கையிருந்தால் – தைரியம் இருந்தால், இந்தி வேண்டுமா – வேண்டாமா என்பதை, இந்தி பேசாத மக்களிடத்திலே ஓட்டெடுத்துக் காட்டுங்கள், வங்காளத்திலேயும் ஓட்டெடுங்கள் – மராட்டி நாட்டிலே ஓட்டெடுங்கள் – தமிழகத்திலே ஒட்டெடுங்கள் – கேரளத்திலேயும் வாக்கெடுங்கள் – ஆந்திரத்திலேயும் வாக்கு எடுங்கள்!

இந்தியை புகுத்த வேண்டுமென்பதற்கான திட்டம் தீட்டிய நேரத்தில் – எந்த நேரத்திலே தீட்டினார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், தெரியும் – வெள்ளைக்காரன், இந்திய சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்களிடத்திலே கொடுத்து விட்டு, ‘நீங்கள் எக்கேடோ கெட்டுப்போங்கள்? நான் கப்பலேறிச் சீமைக்குச் செல்லுகின்றேன்’ என்று சென்றுவிட்ட நேரத்தில் – இவர்கள் உட்கார்ந்து ஒரு அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தினார்கள்.

இங்கே நாம் ஒரு மாநாட்டுக்காகக் கூடியிருக்கின்றோம், நம்மிலே 10 பேர் இங்கே உட்கார்ந்து, திருவண்ணாமலையில் இன்னின்ன தெருக்கள் இப்படியிருக்க வேண்டும் – இன்னின்ன வீடுகள் இடித்துத் தள்ளப்பட வேண்டும் – இன்னின்ன வீட்டுக்கு 3 அடுக்கு மாடி கட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்தால் என்ன பொருள்?

திருவண்ணாமலையில் உள்ளவர்களல்லவா அவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? ஆனால் நாம் தீர்மானித்து திருவண்ணாமலைக்காரர்களைப் பார்த்து, ‘நாங்கள் இந்த மாநாட்டில் கூடிப்பேசினோம். வடக்கு வீதியை நீங்கள் தெற்குப் பக்கத்தில் திருப்புங்கள்’ தெற்கு வீதியிலே இருக்கின்ற குளத்தைத் தூர்த்துவிடுங்கள்; கிழக்குப் பக்கத்திலே இருக்கின்ற மாடி வீட்டுக் கட்டிடத்தை மண் குடிசையாக மாற்றுங்கள், இன்னொரு பக்கத்திலிருக்கின்ற மண் குடிசையை மாடி வீடாகக் கட்டுங்கள்’ என்று உத்தரவு போட்டால், என்னபொருள்? நாம் இங்கே இருக்கத்தக்கவர்கள் அல்ல; ‘சென்னையிலே கீழ்ப்பாக்கத்திலே இருக்கத்தக்கவர்கள்’ என்று பொருள்?

“அதே முறையிலே இந்தியாவுக்குச் சுதந்திரம் என்பதைப் பற்றிச் சட்டம் தீட்டப் போனவர்கள், ‘இந்தியாவுக்கு இந்திதான் தேசீய மொழி” என்று, அந்த இடத்திலே தீர்மானிப்பானேன்?

“வீட்டுக்குள்ளே களவாட வந்த கள்ளன், படுத்துத் தூங்குகின்ற பெண்ணைப் பார்த்து, ‘இந்தப் பெண்ணுக்கேற்ற புருஷன் அந்தத் தெருவிலே இருக்கிறான்; பார்த்து முடிப்போம்’ என்றா பேசுவான்? அவன் வந்தது திருட,” திருடிக் கொண்டுப் போவானா? படுத்துத் தூங்கிறப் பெண்ணைப் பார்த்து, ‘இவளுடைய முகம் செந்தாமரையைப் போலிருக்கிறது, இவளுக்கேற்ற மணவாளன் எங்கள் தெருவிலே இருக்கின்றான்; நான் பெண் பார்த்து வைக்கிறேன்’ என்றா சொல்லுவான்?

“அதைப்போல், உன்னிடத்திலே வெள்ளைக்காரன் கொடுத்த அந்த ஆட்சிப் பொறுப்பை ஒப்புக்கொண்டு, ‘நீ யார் யார் தலையைத் தடவலாம்; எந்தெந்த மக்களை மட்டந்தட்டலாம்: எந்தெந்த வியாபாரத்தை அழுத்திப் பிடிக்கலாம்; எவ்வளவு கோடிக்கணக்கிலே பணம் சேர்க்கலாம்’ என்பதைக் கணக்கிடுவதற்குக் கூட்டப்பட்டது அரசியல் நிர்ணயசபை; அதிலேபோய், எங்களுடைய வீட்டுப் பெண்ணுக்குப் பிள்ளை பார்ப்பதுபோல எங்களுடைய நாட்டுக்கு இந்தி மொழியைத் திணிப்பதென தீர்மானம் போடுவானேன்?

“மைனர் சொத்தை, கார்டியனாக இருப்பவர் விற்றால் மைனர் மேஜரானதும் வழக்குத் தொடுக்கிறான் அதைப்போலத் தமிழர்கள், 1947-ல் மைனர் சொத்தைப் போல் – மைனர்களைப் போல – இருந்த நேரம் அது; அந்த நேரத்தில் அரசியல் நிர்ணய சபைக்கு யார் யார் போனார்கள்? மக்களிடத்தில் ஓட்டு வாங்கிக் கொண்டு யாரும் போகவில்லை. அரசியல் நிர்ணய சபைக்கு – காங்கிரஸ் ஆதிக்கமிருந்த காரணத்தினாலே ‘கந்தா வா, முருகா வா, கடம்பா வா, கச்சி ஏகம்பா வா, நீங்கள் அத்தனைப் பேரும் வாருங்கள்; பேசத் தெரிந்தவர்கள் 2 பேர் வாருங்கள்; பேசத் தெரியாதவர்கள் 7 பேர் வாருங்கள்; எதிர்க்கக்கூடியவர்கள் ஒருவர் இருவர் போதும்; எதிர்க்கத் தெரியாதவர்கள் 20 பேர் வாருங்கள்; உங்களுக்கேற்ற கட்டணம் தரப்படும்’ என்று அழைத்துச் செல்லப்பட்டு கூட்டப்பட்ட – ஒரு அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையிலே, நீ ஒரு நாட்டினுடைய மானத்தை – ஒரு இனத்தினுடைய நல்வாழ்வை – ஒரு மொழியினுடைய வளத்தை – ஒரு மக்களுடைய விடுதலை உணர்ச்சியை – இவைகளையெல்லாம் பாதிக்கக்கூடிய மொழிப்பிரச்சினையிலே நீ எப்படித் தீர்ப்பளிக்கலாம்? அளித்தத் தீர்ப்புக்கும் – என்னுடைய நண்பர்கள் எனக்குக் காட்டுகிறார்கள் – ஒரே ஒரு ஓட்டு தான் மெஜாரிட்டி கிடைத்தது. இந்தியை தேசீய மொழியாக வைக்கலாமா, வேண்டாமா என்றால், 40 பேர் வேண்டும் என்றால், 39 பேர் வேண்டாம் என்றார்கள். 40-39: அது அல்ல கணக்கு.

“உதாரணத்துக்குச் சொல்லுகின்றேன் – ஒரே ஒரு மெஜாரிட்டியிலேதான், நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதுவா, நம்முடைய எண்ணங்களையும், நம்முடைய எதிர்க்காலத்தையும் பாதிக்கத்தக்க அளவுக்கு அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்? அவசரக்கோலத்திலே அள்ளித்தெளிக்கப் பட்டதிலேயும் ஒரே ஒரு ஓட்டுதானே வித்தியாசம். அந்த நேரத்திலே, இந்திமொழி திணிக்கப்படவேண்டும்; அதுதான் ‘தேசீயமொழி’ என்று போட்டார்களே, அதற்குப் பிறகு மக்களைப் பார்த்துக் கேட்டார்களா – ஒரு வார்த்தை கேட்டார்களா – இந்திமொழி இருக்கலாமா என்று கேட்டார்களா என்றால் இல்லை.

“இப்பொழுது தமிழர்கள் மைனர் திசையிலிருந்து நீங்கி மேஜரடைந்ததைப் போல, இன்றையத்தினம் ஓரளவுக்கு எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

“இன்றையத் தினம் நான் சொல்வதை ஆணவம் என்று வடநாட்டுக்காரன் கருதிக்கொண்டாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களுடைய உரிமை என்ன என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு எங்களுக்குப் போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும் அந்த ஆற்றல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்தக் காலத்திலே நீ பழைய காலத்தில் மிரட்டியதைப்போல், இந்தியைப் புகுத்தி விடலாம் என்று கருதினால் அது பகற்கனவாக முடியுமே தவிர நிச்சயமாக அது நடைபெறாது.

“டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தித் திணிப்புக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தி பேசாத மக்களின் மனப்பான்மையை அறிந்துக்கொள்வதற்குத் துளியும் முயற்சிக்கவில்லை.

“வைதீகக் கல்யாணம்போல் அல்லவா அவர்கள் நடவடிக்கைகள் இருக்கின்றன? பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், விடியற்காலையில் கணவனைக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கும் நேரத்தில், அவன் ஒரு கால் நொண்டியாக இருந்து சாய்ந்து சாய்ந்து வந்தால், மணப்பெண் கண்கலங்கி, ‘என்ன, ஒரு கால் இழுத்திருக்கும்போல் இருக்கிறதே’ என்று தோழியிடத்திலே சொன்னால், ‘இல்லை வாழைப்பழத்தோலை மிதித்தார்’ என்று பொய் பேசி, கழுத்திலே தாலி கட்டியதைப்போல, நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் – தமிழர்கள் ஏமாந்திருந்த நேரத்தில் – உலகமெல்லாம் உன்னைக் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் – சனநாயகம் வளராத நேரத்தில் – எங்கள் தம்பி சம்பத் பார்லிமெண்டில் இல்லாத நேரத்தில் – நாங்களெல்லாம் சட்ட சபையிலே இல்லாத நேரத்தில் – தூங்குகின்ற நேரத்தில் உள்ளே நுழைந்த கள்வனைப் போல் நீ இந்தியைப் புகுத்தியிருக்கிறாய்; இப்பொழுது ஆண்மையிருந்தால் ஓட்டு எடு – இந்தி திணிக்கப்பட வேண்டுமென்று இந்தி பேசாத மக்கள் பகுதியிலே உனக்கு வக்கு இருந்தால் – வல்லமையிருந்தால் ஓட்டு எடு’.

“காமராசருக்கு நல்ல வேளையாக பிள்ளை இல்லை. ஆகையால், அந்த வீட்டில் எனக்கு ஓட்டு கிடைக்காது. பக்தவச்சலம் வீட்டிலேயே எனக்கு ஓட்டு உண்டு. அவர் வீட்டுப் பிள்ளைகள் எனக்குத்தான் ஓட்டுப் போடுவார்களே தவிர, பக்தவச்சலத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்; அந்த அளவுக்கு இந்தி வெறியைப் பற்றியும், இந்தி வெறியோடு தொடர்புகொண்ட வடநாட்டு ஆதிக்கவெறியைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்கள் மிகத் தெளிவாக இன்றையத்தினம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

“மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே அவர்கள் இவ்வளவு துணிச்சலோடு வருகிறார்கள் என்றால்? தூங்குகின்ற நேரத்தில் நுழைகின்ற கள்ளன் தந்திரக்காரன் என்று பொருள்; விழித்துக் கொண்டிருக்கிற நேரத்திலே கள்ளன் வருகிறான் என்றால், அவனுடைய மடியிலே கூரான கத்தி இருக்கிறது என்று பொருள். அந்தக் கூரானக் கத்தி என்ன — தமிழர்களைப் பிளவுபடுத்துகின்ற கத்தி! அந்தக் கூரானக் கத்தி என்ன, ‘150 - பேர் அவர்கள் சட்ட சபையில்: 15 பேர் எதிர்க்கட்சியினர் என்ற நிலைமை.’ அந்தக் கூரான கத்தி என்ன – ‘மாட்டுப் பெட்டிக்கு நம்முடைய நாட்டு மக்கள், நிலைமைகள் இப்படியெல்லாம் வளருமென்பது பற்றி எண்ணிப் பார்க்காமல் கருத்தறியாமல் போட்டுவிட்ட ஒட்டு’. இவைகளெல்லாம் இன்றையத்தினம் கூரிய அந்த வாளைப்போல வடிவெடுத்து தமிழர்களுடைய எதிர்காலத்தைத் துண்டிக்கவும், துளைக்கவும் வந்து கொண்டிருக்கின்றன.

இவைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆற்றலையும் இன்றையத்தினம் பயன்படுத்த விரும்புகின்றது. அதற்கு நாட்டு மக்களுடைய பேராதரவைக் கேட்டுக் கொள்வதற்கும், திரட்டித் தருவதற்கும் இந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை இங்கு கூட்டியிருக்கிறார்கள். இதிலே நாம் நிறைவேற்ற இருக்கின்ற தீர்மானத்தை உங்களிடையே நான் படிக்கின்றேன்.

இந்தி அல்லாத மொழியினர் மீது – குறிப்பாகத் தென்னாட்டின் மீது தபால் – தந்தி, இரயில்வே, புதிய நாணய முறை, வானொலிச் செய்தி போன்றவைகளில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இந்தியைத் திணித்து அரசியல் ஆதிக்கம் பெற எடுத்துக்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளோடுகூட, பிற மொழியினர் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்த இந்தி ஏகாதி பத்தியத்தை உருவாக்குவதற்காகக் கேர் கமிட்டி மூலம் மத்திய அரசாங்கமும், அதனை நடத்தும் காங்கிரசுக் கட்சியும் பயங்கர திட்டம் தீட்டியிருப்பது, தென்னாட்டுக்கு வரவிருக்கும் பேராபத்து என்பதை எடுத்துக்காட்டுவதுடன், அந்த பேராபத்தினின்றும் நம்நாடு தப்பி விடுதலைப் பெற எத்தகைய நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவும், எல்லாவிதமான தியாகங்கள் புரியவும், தமிழர்கள் இன்று முதலே தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானத்தின் கடைசி வாசகத்தைப் படித்து முடித்ததும் கர ஒலிகள் கிளம்பின.

உடனே அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசியதாவது:

நான் உங்களைத் “தயார்” என்று கூறச் சொல்லவில்லை தயாராயிருப்பவர்கள் யார் என்பதை என்னால் உண்மையிலேயே பார்த்துக்கொள்ள முடியும், நான் மக்கள் முகத்தை 20 ஆண்டு காலமாகப் பார்த்துக்கொண்டு வருகின்றேன். ‘பாவனை’ வீரமும் எனக்குத் தெரியும் – கொட்டகை உள்வரையிலே இருக்கின்ற வீரமும் எனக்குத் தெரியும் வெட்ட வெளியிலும் தங்கக் கூடிய வீரமும் எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நான், என்னுடைய மனதுக்குள்ளாகவே கணக்கெடுத்துக் கொள்கின்றேன். அந்தக் கணக்கு என்னைச் சோர்வடையச் செய்யவில்லை: உண்மையிலேயே மகிழ்ச்சியடையச் செய்கின்றது. தமிழ் நாட்டு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் அறிகுறியாக நீங்கள் இந்தத் தீர்மானத்தைக் கரகோஷத்தின் மூலம் நிறை வேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.”

(கைதட்டல்)


இதோ இன்னொரு தீர்மானம் படிக்கிறேன்.

மக்களின் கவனம் வேறு பக்கங்களில் ஈர்க்கப்பட்டிருந்த நேரத்தில் மக்களின் குறிக்கோளை எடுத்துக்காட்டத் தக்க முறையில் அல்லாமல், மக்களின் நேரடி வாக்குகளைப் பெறாமல், ஒரு கட்சியின் எதேச்சாதிகார முறையுடன் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் ஆதரவில் ஒரே ஒரு ஓட்டு மெஜாரிட்டியில், அவசர அவசரமாகவும், பொறுப்பற்ற முறையிலும் நிறைவேற்றப்பட்ட மொழி சம்பந்தமான விதி, மக்களின் உண்மையான குறிக்கோளைக் காட்டுவதாகாது என்பதாலும், அந்த விதி,

இந்தியல்லாத பிறமொழியாளர்களை அடிமைப்படுத்தப் பயன்படும் ஆதிக்கக் கருவியாக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டபடியாலும், உடனடியாக அரசியல் சட்டத்திலிருந்து மொழி சம்பந்தப்பட்ட அந்த விதி அகற்றப்பட வேண்டுமென்று இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம் படித்தவுடன் பேசியதாவது:

“இன்றையத் தினம் காங்கிரஸ்காரர்கள் மெத்த சாதுக்களைப்போல நம்மிடத்திலே பேசும்பொழுது சொல்கிறார்கள் — ‘இந்தியை நாங்களா புகுத்துகிறோம்? அரசியல் சட்டத்திலேயே அது இருக்கிறது; அரசியல் சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமே: அதற்காகத்தான் செய்கின்றோம்’ என்கிறார்கள்.

“அரசியல் சட்டத்தை எழுதிய நேரத்தில் நாம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது. நாம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல அதிலே பேசுவதற்குச் சென்றவர்கள், மக்களிடத்திலே ஓட்டு வாங்கிக் கொண்டு சென்றவர்கள் அல்ல: அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சென்றார். எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்றார் அவர், அவருடைய அறிவு, அவருடைய செல்வாக்கு இவைகள் கலந்த தொகுதியியே தவிர, நீங்களும் நானும் இருக்கின்ற தொகுதியல்ல.

இப்படி, அவரவர் தாட்சண்யப்பட்டவர்கள் – அறிவினாலே தாட்சண்யப்பட்டவர்கள் — செல்வாக்கினாலே தாட்சண்யப்பட்டவர்கள் – நெடுங்காலமாகக் காங்கிரசுக்குப் பணம் கொடுத்ததனாலே தாட்சண்யப்பட்டவர்கள் – இப்படிப்பட்டவர்கள் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்பது இந்தத் தீர்மானத்தினுடைய வாசகம்.

“திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால் திரௌபதைக்கு என்றையத்தினம் துணி கிடைக்கும்? அதைப்போல, தமிழனுக்கு இந்தி வேண்டுமா வேண்டாமா என்பதை வட நாட்டுக்காரன் தீர்மானிப்பதென்றால் நம்முடைய தமிழ்மொழி எப்படித் தப்பும்? திரௌபதிக்கு எந்தத் துகில் தேவை என்பதை தருமன் சொன்னால் ஏதோ கொஞ்சம் நாட்டுச் சேலையையாவது வாங்கித் தந்திருப்பான்; அர்ச்சுனன் சொன்னால் கொஞ்சம் அலங்கார சேலை வாங்கிக் கொடுத்திருப்பான். துரியோதனனோ, துச்சாதனனே சொன்னால் எந்தச் சேலை கிடைத்திருக்கும்? இருக்கிற சேலையையும், உருவினவர்களல்லவா அவர்கள்? “அதுபோன்று, இருக்கின்ற அரசியலைப் பறித்துக்கொள்ளும் வடநாட்டுக்காரன், ‘உங்களுக்கு எந்த மொழி தேவை’ என்று கேட்பது, துச்சாதனனைப் பார்த்து, திரௌபதைக்கு எந்தச் சேலை வாங்கலாம்” என்று கேட்கின்ற அத்தகைய வெட்கங்கெட்ட கதையைப் போன்றதுதான். ஆகவேதான், அப்படிப்பட்ட விதி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற இந்தத் தீர்மானத்தை நான் உங்களிடத்திலே எடுத்துச்சொன்னேன்.

மற்றொன்று:—இந்தி மொழியைப் பற்றி மட்டும் சொல்லுகின்ற நேரத்தில் தாய்மொழிக்கு நம்முடைய மதிப்பு என்ன? தாய்மொழிக்கு நாம் தருகின்ற மரியாதை என்ன என்பதை நாம் தெரிவிக்கின்ற வகையில் (இன்னொரு தீர்மானம் படிக்கப்பட்டது)

தாய் மொழியில் ஆட்சித் துறை, நீதிமன்றத்துறை அலுவல்களை வெற்றிகரமாக்குவதுடன், பிறமாநிலங்களுடனும், உலகுடனும் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தை இப்போதுபோலப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தை நீடிப்பது என்றக் கருத்தினையும், இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறது.

“ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசீய தோழர்கள் தங்களுடைய தேசீயம் முற்றிவிட்ட காரணத்தினாலே என்று நான் கருதுகிறேன் — சொல்லுகின்றார்கள் — ‘ஆங்கிலம் அன்னிய மொழி, ஆகவே ஆங்கிலம் ஆகாது’ என்று “அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான்: கார்டு –கவர்களை அன்னியன் காலத்திலே தான் பார்த்தோம்: தபால் தந்தி அன்னியன் காலத்தில்தான் கிடைத்தது; ஆபரேஷன் இஞ்செக்ஷன் அன்னியன் காலத்தில் வந்தவைதான். இவைகளெல்லாம் இருக்கலாம் — ஆனால், அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக்கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.

“ஆகையினாலே தான், ஆங்கிலத்தை அன்னியமொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற மொழி, அன்னியர்கள் என்றால் உலகத்திலிருக்கின்ற அத்தனை அன்னியர்களோடும் தொடர்புபடுத்துவதற்கு ஆங்கிலம் ஒன்று இருந்தால் போதும் என்ற காரணத்தினாலே, ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும், தாய்மொழியை நம்முடைய ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், அற மன்றத்திலே இருக்கத்தக்க மொழியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; சர்க்கார் ஏற்றுக் கொண்டிருக்கின்றதென்றாலும், அதை வெற்றிகரமாக்க வேண்டுமென்ற தீர்மானம் இங்கே எழுதப்பட்டிருக்கிறது.

“நாமெல்லாம் ஒரு ஜனநாயக அம்சத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்; நானோ, அருணகிரி அடிகள் அவர்களோ, அல்லது மற்றவர்களோ, இங்கே எவ்வளவு தான் எடுத்துச்சொன்னாலும், நம்முடைய தி. மு. கழகம் எப்படியெப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல அருகதை பெற்றவரும், அதிகாரம் பெற்றவரும் நம்முடைய நாவலர் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் அவர்கள்தான் என்ற காரணத்தினால், அவருக்கு ஒரு வேண்டுகோளையும் ஒரு தீர்மான ரூபத்தில் இதில் போடப்பட்டுள்ளது.

இந்தி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகத் தக்க திட்டம் தீட்டி, நடவடிக்கைகளை வகுத்திட பொதுச் செயலாளரை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(தீர்மானம் படிக்கப்பட்டது.)

“நான் உங்களிடத்திலே பிரச்சினையை விளக்கிவிட்டேன்; நாட்டு நிலைமையை எடுத்துச் சொல்லிவிட்டேன்; போராட்டத்தின் அவசியத்தையும் சொல்லிவிட்டேன். அந்தப் போராட்டத்துக்குத் தக்க திட்டத்தைத் தீட்டித் தரக்கூடியவரை நீங்கள் இங்கே பார்க்கின்றீர்கள். அந்த நெடிய உருவம் தமிழ்ப் பண்பினுடைய உறைவிடம், தக்க திட்டத்தை நமக்குத் தீட்டித் தரும் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்; வணக்கம்.”


“உள்ள உயிர் ஒன்றுதான்: அது போகப் போவதும் ஒரு முறைதான். இருமி, ஈளைக் கட்டிச் சாவதைவிட் இந்தியை எதிர்த்து அந்த உயிர்போகிறது என்றால் அதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”

—அறிஞர் அண்ணா